Jump to content

கூத்'தாடி' ரஜினியும் முழுத்தாடி துரோணாச்சாரியும்: ஆன்மீகஅரசியல்


Recommended Posts

கூத்'தாடி' ரஜினியும் முழுத்தாடி துரோணாச்சாரியும்: ஆன்மீகஅரசியல்

கோடைமழையில் தொப்பலாக நனைந்த நண்பர் ஓட்டமாக ஓடிக் குளித்துவிட்டு 'அப்பாடா' என்று அமர்ந்தார்.

'ஏனப்பா! மழைலதான் நல்லா நனைஞ்சுட்டியே! தலைய தொவட்டினா போதாதா!" என்றேன் நான்.

'அட நீ வேற கடுப்பக் கேளப்பாதே! நனைஞ்ச பனியன்லேர்ந்து டிடெர்ஜென்ட் சோப்புப் பவுடர் நொரவந்து ஒடம்பெல்லாம் ஒரே ஊறல்! ஒனக்கென்ன தெரியும்!' என்றார் கடுப்புடன்.

'ஏம்பா! வாஷிங் மிசின்லதானே தொவைக்கிறே!', என்று கேட்டுவைத்தேன்.

'பிரச்னையே வாஷிங் மிஷின்தாம்பா! ஏதோ 'Fuzzy Artificial Intelligence'னு பீத்தறேளே! அது பண்ற வேலதான் இம்புட்டும்! அந்த Intelligent கருமாந்தரம் கொறச்சலாத்தான் தண்ணி எடுக்குது. சோப்பு சரியாப் போகாமே, துணில தங்குரதால தோல்நோய் வந்துரும்போல! வாங்கி ஆறே மாசத்துல மத்த ஆப்ஷன்லாம் புட்டுக்கிச்சு! புது மிஷின்தான் வாங்கணும்போல' என்றார் வெறுப்புடன்.

'இதான் ஒம்பிரச்னையா! மிஷின்ல போடுற சோப்புப் பவுடரை அரைவாளி தண்ணியில போடு! துணிய முக்கி சட்டைக் காலரை தேச்சபொறவு நனைஞ்ச துணியவும், மிச்ச சோப்புப் தண்ணியவும் வாஷிங் மிசின்ல போடு. full-லோடு தண்ணி எடுத்து வாஷ் பண்ணும் பாரு!' என்றேன் நான்.

'நெசமாவா! இதோ வர்றேன்' என்று உடனே அதைச் செய்து பார்த்துவிட்டு 'அபாரம்! எப்பிடிப்பா!' என்றார் நண்பர்!

'நீ போடுற மொத்தத்துணியோட எடைய வச்சுத்தான் எம்புட்டுத் தண்ணி வேணும்னு மிஷின் தீர்மானிக்கி! துணிய சோப்புப்பவுடர் தண்ணில நனச்சுட்டம்! துணியோட மொத்த எடை கூடிருதுல்ல! நனைஞ்சு சொமக்கற முட்டாள் மிஷின், full-லோடு துணி இருக்குன்னு நெனச்சுட்டு நிறையத் தண்ணிய விட்டு வாஷ் பண்ணுது! அவ்வளவுதான்!' என்றேன் நான்.

'Fuzzy Artificial Intelligence' பாத்துட்டு சூப்பர் ஸ்டார் மிஷின்னு நெனச்சேன்! அது இவ்வளவு முட்டாளா இருக்கும்னு தெரியாமப் போச்சே!' என்றார் சிரிப்புடன்.

'மிஷினோட 'நனைஞ்சு சொமக்குற முட்டாள்தனம்' ஒனக்குத் தெரியாதவரைக்கும் மிஷின் சூப்பர்ஸ்டார்! நீ முட்டாள்! தெரிஞ்சுட்டா நீ சூப்பர்ஸ்டார்! அது முட்டாள்!', என்றே நான்.

'ஓங் குசும்பு மட்டும் போவே மாட்டுக்கு! சுத்தி சுத்தி என்தலைவனக் குத்தாம இருக்கமாட்ட போல!' என்றார் சலிப்புடன்.

'நா எங்கப்பா ஒன்தலைவன சொன்னேன்! ஒன்தலைவன தூத்துக்குடி சந்தோஷ் நனைச்சுத் தொவச்சதை நீயா கற்பனை பண்ணுனா நா ஒண்ணும் செய்ய முடியாது!' என்றேன் உர்ர்ரென்று இருந்த நண்பரிடம்.

'இதவிடு! வாஷிங்மிஷின் முட்டாள மாதிரி, 'சொமந்து நனஞ்ச முட்டாள்' கத ஒண்ணு மகாபாரதத்ல வருது! சொல்லட்டா!' என்றேன் நான்.

'என்தலைவன விட்டா சரி!' என்று உற்சாகமானார் நண்பர்.

பாரதப்போரின் பதிமூன்றாம்நாள் கௌரவப் படைகளின் தளபதி வெண்தாடி வீரர் துரோணாச்சாரியார்(பிரதமர் அல்லர்) அமைத்த பத்ம(பிஜேபி தாமரை அல்ல) வியூகத்தை உடைத்து உள்ளே நுழைந்தான் மாவீரன் அபிமன்யு; பீமன் உள்ளிட்ட ஏனைய பாண்டவர்கள் அபிமன்யுவின் பின்னால் உள்ளே வரவிடாமல், தன் சேனையைக்கொண்டு அடைத்துவிட்டான் சிந்துராஜன் ஜயத்ரதன். தன்னந்தனியாகப் பலரிடம் போரிட்டு வீரமரணம் அடைந்தான் அபிமன்யு.

தன் வீரமகன் அபிமன்யுவின்  சாவுக்குக் காரணமாயிருந்த ஜயத்ரதனை அடுத்தநாள் போரின்  சூரிய அஸ்தமனத்துக்குள்ள கொல்லுவேன்! முடியவில்லை என்றால் தற்கொலை செய்வேன் என்று சபதம் எடுத்தான் அர்ச்சுனன். நூறு கௌரவர்களின் ஒரே தங்கையின் கணவன் சிந்துதேச அரசன் ஜயத்ரதன். அர்ச்சுனனின் சபதத்தைக் கேட்டுக் கலக்கமுற்று, நாடு திரும்ப முடிவுசெய்தான்.

'உன்னை நாங்கள் அனைவரும் சேர்ந்து பாதுகாப்போம்! போர்முனையின் கடைசியில் நீ இருப்பாய்! சூரிய அஸ்தமனத்துக்குள் மாவீரன் கர்ணன், துரோணாச்சாரியார் உள்ளிட்ட எங்கள் அனைவரையும் வென்று, உன்னை அடைய இயலாமல்போன அர்ச்சுனன் நாளைத் தற்கொலை செய்துகொள்வான். போர் முடிவுக்குவந்துவிடும். கலங்காமல் இங்கிரு!' என்று தங்கை கணவனுக்குத் தைரியம் சொன்னான் துரியோதனன்.

மறுநாள் யுத்தத்தில் அனைவரையும் சிதறடித்து புயலைப்போல் முன்னேறிய அர்ச்சுனனை தடுத்தார் துரோணாச்சாரியார். அம்புமழையால் குருவணக்கம் செலுத்திய அர்ச்சுனன், வேகமாக அவரைக் கடந்துசென்றான். பதைபதைப்புடன் துரோணாச்சாரியாரிடம் சென்ற துரியோதனன் அருச்சுனனைப் பின்தொடர்ந்து தடுக்குமாறு கேட்கிறான்.

'அர்ச்சுனன் இல்லாமல் தனியாக இருக்கும் தருமனை உயிருடன் பிடிக்க இதுவே சமயம்! நீ சென்று அர்ச்சுனனைத் தடுத்து நிறுத்து!', என்றார் துரோணர்.

'உங்களால் நிறுத்த இயலாத அர்ச்சுனனை என்னால் எப்படி நிறுத்த இயலும்?' என்றான் துரியோதனன்.

'நான் தரும் கவசத்தை அணிந்துகொள்; அர்ச்சுனனின் அம்புகள் உன்னை ஒன்றும் செய்யாது!' என்ற துரோணாச்சாரியார், தாம் மட்டுமே அறிந்த திவ்வியக் கவசத்தை துரியோதனனுக்கு அணிவித்தார்.

'நில் அர்ச்சுனா! என்னை ஜெயிக்காமல் இங்கிருந்து போகஇயலாது!' என்ற துரியோதனின் அறைகூவலைக் கேட்டுக் கோபத்துடன் அம்புமழை பொழிந்தான் அர்ச்சுனன். அவை அனைத்தும் பெருமழையில் அணைந்த நெருப்பெனப் பயனற்று விழுந்தன. சிரித்துக்கொண்டே துரியோதனன் தொடுத்த அம்புகள் அர்ச்சுனனையும், கிருஷ்ணனையும் துளைத்தன.

'அர்ச்சுனா! உன் அம்புகள் பயனற்றுப் போவதை நான் இதுவரை கண்டதில்லை! உன் காண்டீப வில் சக்தியிழந்து போயிற்றா!' என்றார் கிருஷ்ண பரமாத்மா.

'கிருஷ்ணா! குரு துரோணாச்சாரியார் மட்டுமே அறிந்த திவ்யகவசத்தை துரியோதனன் அணிந்திருக்கிறான் என்று சந்தேகிக்கிறேன்! நான் சிறுவனாக இருந்தபோது, இக்கவசத்தைக் குறித்து ஆச்சாரியார் ஒருமுறை கூறியுள்ளது நினைவுக்கு வருகின்றது. கழுதை பொதி சுமப்பதைப் போல், பயன்பாடு தெரியாமல் இக்கவசத்தைச் சுமந்து வந்துள்ள துரியோதனனுக்கு, இக்கவசத்தைக் கொண்டு தன்னைக் காப்பாற்றத் தெரியாது! இப்போது பார் என் திறமையை!' என்ற அர்ச்சுனன் நன்றாகக் குறிவைத்து, அக்கவசம் மறைக்காத நகக்கண்களைத் தன் அம்புகளால் துளைத்தான். வலிதாங்க இயலாமல் யுத்தகளத்தை விட்டு ஓடினான் துரியோதனன். பின் ஜயத்ரதனைக் கொன்று தன் சபதத்தை நிறைவேற்றினான் அர்ச்சுனன் என்று கதையைச் சுருக்கமாக முடித்தேன்.

'யாருக்குமே தெரியாத நகக்கண் ரகசியம் அர்ச்சுனனுக்கு மட்டும் எப்படித் தெரியும்?' என்றார் நண்பர்.

'திறமையான மாணவனுக்கு, அவரறியாமல் அனைத்தையும் கற்றுக்கொடுத்திருப்பார் ஆச்சாரியார்! தலைசிறந்த மாணவன் கற்றதை ஒருபோதும் மறக்கமாட்டான்! 'கோளாளன் என்பான் மறவாதான்' என்று தலைசிறந்த மாணவனுக்கான இலக்கணத்தைத் தமிழ் திரிகடுகம் சொல்கிறதல்லவா! அதுதான்' என்றேன் நான்.

['தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன்,
வேளாளன் என்பான் விருந்துஇருக்க உண்ணாதான்,
கோளாளன் என்பான் மறவாதா ன், இம்மூவர்
கேளாக வாழ்தல் இனிது!' - திரிகடுகம் (நல்லாதனார்)

'தாளாளன்' என்றால், ஊக்கமுள்ளவன் என்று பொருள். அப்படிப்பட்டவர்கள் யாரிடமும் கடன் வாங்காமல் வாழ்வார்கள்.

அடுத்து, 'வேளாளன்', என்ற சொல் உழவன், உழுவித்து உண்பவன், அருள் செய்பவன், உதவி செய்பவன் ஆகிய அனைவரையும் குறிக்கும்; இவர்கள் அனைவருக்கும் உள்ள பொதுப்பண்பு, வீட்டில் விருந்தினர் இருக்கும்போது அவர்களை விட்டுவிட்டுத் தாம் உண்ணமாட்டார்கள்.

மூன்றாவது, கோளாளன், அதாவது, பல விஷயங்களை மனத்தில் கொண்டு சிந்திக்கிறவன் மனித வாழ்வு என்னும் பள்ளியின் தலைசிறந்த மாணவன்; தான் கேட்டவற்றை ஒருபோதும் மறக்கமாட்டான். இந்த மூவருக்கும் உறவாக இருப்பது இனியது என்கிறது இப்பாடல்.]

'உண்மைதான்! இதற்கும் வாஷிங் மிசினுக்கும் என்ன சம்பந்தம்?' என்றார் நண்பர் விடாப்பிடியாக.

'நாம வெச்சிருக்கிற வாஷிங் மிஷின் மாதிரி துரியோதனன்! கால் லோடுத் துணிய, சோப்புத் தண்ணீருல நனச்சுப் போட்டு முழு லோடுத் துணின்னு மிஷின் intelligence- ஏமாத்தி, full capacity லோடு தண்ணீருல அலம்பவைக்கிற நாம்ப அர்ச்சுனர்கள்', என்றேன் நான்.

'மெனக்கெட்டு தூத்துக்குடி வரப் போயி, கைக்காசையும் கொட்டிக்கொடுத்தவரு, போராடுனவகள சமூக விரோதிகள்னு மட்டும் சொல்லாமப் போயிருந்தா சூப்பர் ஸ்டாரும் அர்ச்சுனர்தான்! பாவம்! தானுண்டு! தன் வேலையுண்டுன்னுட்டு இமய மலைக்கெல்லாம் போயி தியானம் பண்ற நல்லவரு! அவர் நேரம்! பத்திரிக்கைக்காரனுட்டயும் நீ நான்னு ஏக வசனத்துல குதிச்சுட்டாரு! கொட்டில்லாமலேயே கூத்தாடுற சாமிங்க மீடியாக்காரனுவ! தலவரு செண்ட மோளம் வேறக் கொட்டிட்டாரு! கேக்கவா வேணும்!' என்றார் நண்பர்.

'எப்பா! 'நாய் வால நிமுத்த முடியாது! தாடி வச்சவன்லாந் தன்னத் துரோணாச்சாரின்னு நெனக்கிறான்! அர்ச்சுனனுக்கே தண்ணி காட்டுவானுக தமிழனுக!  பன்னாட்டுப் பன்னாடை ஆரியனுக்காக, 13 தமிழர்களைக் (அபிமன்யுக்கள்) கொன்னுட்டு, மிச்சத் தமிழனுகளக் கவர் பண்றதுக்காக, கவசமாத் தூத்துக்குடிக்கு டிக்கெட் எடுத்துக்குடுத்து, கோடிகோடியா துட்டும் குடுத்து அனுப்புனாரு தாடி துரோணாச்சாரியாரு'ன்னு சோசியல் மீடியாவுல கலாய்க்கிராங்கப்பா! 'அருச்சுனன அனுப்புறதா நெனச்சுதான் சூப்பர் ஸ்டாரை அனுப்புனதாவும், அவரு, துரியோதனங் கணக்கா, வாசிங் மிஷின் சோப்பார் ஸ்டாரா மாறி நாறிட்டாரு'ன்னும் பேசிக்கிறாங்கப்பா!' என்றேன் நான்.

'ஒழுங்கா கதைய முடிச்ச ஒன்ட்ட, தேவையில்லாம தலைவரு கதயச் சொல்லி கேட்டு வாங்குனம்பாரு! எம் புத்திய ... ' என்று நடையைக் கட்டினார் நண்பர்.

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோப்பார் ஸ்டாரை வாஷிங் மெஷினில் போட்டு பாரதத்துக்குள் இழுத்து வந்து கழுவி ஊத்தி ஒரு வழி பண்ணி விட்டிர்கள். இனி உங்கள் நண்பர் மழையில் நனைந்தாலும் உங்களின் வீட்டு வீதிக்கே வரமாட்டார்.....!  tw_blush: 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.