Recommended Posts

குறள் கூறும் 'அறவாழி அந்தணன்' ஆரியப்பிராமணரா? - குறள் ஆய்வு-3.

பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி.

"பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!"
- பாவேந்தர் பாரதிதாசன்

"TIRUKKURAL - An Abridgement of Sastras" என்னும் தமது நூலின் எட்டாவது பக்கத்தின் இறுதியில் திரு.நாகசாமி அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்:

"There is a Kural which -

அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
பிறவாழி நீந்தல் அரிது (குறள் 8.)

It means that unless one takes refuge in the feet of the Antanan, who wields the chakra, it is difficult to get over the birth. Here, it may be interpreted that the lotus feet of Vishnu who wields the protective Chakra, it may also be interpreted as unless one takes refuge in the feet of the Brahmana men who holds the chakra of dharma, it is difficult to cross the world, as the word, Antanan stands for a Brahmin."

திரு நாகசாமி ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் பின்வருமாறு:

"மேற்கண்ட குறளின் பொருள், அறச்சக்கரத்தைக் கொண்டு விளங்கும் அந்தணனின் பாதங்களைச் சரணடைந்தால் ஒழிய, பிறவியைக் கடப்பது கடினம். இங்கு, 'அறவாழி அந்தணன் தாள்' என்பதற்கு, 'காக்கும் சக்கராயுதத்தைக் கைக்கொண்டு திகழும் விஷ்ணுவின் தாமரைத் திருவடிகள்' என்றும் பொருள் கொள்ளலாம்; 'தர்மச்சக்கரத்தை உடைமையாகக் கொண்டுள்ள  பிராமண ஆண்களின் கால்களில் சரணடைந்தாலொழிய, இவ்வுலகைக் கடப்பது கடினம்' என்றும் பொருள் கொள்ளலாம்; ஏனெனில், அந்தணன் என்னும் சொல் பிராமணனையே குறித்து நிற்கின்றது."

 "பிராமண ஆண்களின் கால்களில் சரணடைந்தாலொழிய, இவ்வுலகைக் கடப்பது கடினம்" என்று தரும் விளக்கத்தினால், திரு.நாகசாமி அவர்கள் வெளிப்படுத்துவது ஆரியப் பிராமணத் திமிரின் உச்சம். இப்படி ஒரு விளக்கத்தை எழுதினால் மறுப்புத் தெரிவிக்க பாவாணர் இபூவுலகில் இல்லை; பெருந்தமிழறிஞர் பேராசிரியர் தொ.பரமசிவம் அவர்கள் செயல்பாட்டில் இல்லை என்ற அசட்டுத் துணிச்சல் இந்த ஆரியப் பிராமணருக்கு வந்துவிட்டது. அவர்களின் எழுத்துக்கள் எம்போன்ற சாமானியரையும் மீட்டுருவாக்கம் செய்து போரிட வைக்கும் என்று அறியாமல் போனார் இந்த ஆரியப் பிராமணர் திரு.நாகசாமி.

 திருவள்ளுவர் காலத்தில் ஆரியப் பிராமணர்கள் தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டார்கள் என்பது சங்க இலக்கியங்கள் கூறும் சான்றுகளால் நன்கு அறியலாம். எனவே, திருவள்ளுவர் 'பிராமணர்' என்ற வார்த்தையை நன்றாக அறிந்தே இருப்பார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

அந்தணர் என்னும் சொல் ஆரியப்பிராமணரைக் குறிக்காது!

 ஆனால், திருக்குறள் முழுவதும் 'பிராமணர்' என்ற வார்த்தையைத் திருவள்ளுவர் எங்குமே பயன்படுத்தவில்லை என்பதிலிருந்து 'அந்தணன்' என்னும் சொல் பிராமணரைக் குறிக்கவில்லை என்பதும், ஆரிய மனுதரும சாத்திரங்களின் கருத்துக்களையும் திருவள்ளுவர் திருக்குறளில் குறிக்கவில்லை என்பதும் தானே விளங்கும்.

பார்ப்பார் என்னும் தமிழர்!

 'அந்தணன்' என்ற சொல் தவிர, திருவள்ளுவர் 'பார்ப்பார்' என்னும் சொல்லை மட்டுமே திருக்குறளில் குறிப்பிட்டுள்ளார். இதுவும் ஆரியப் பிராமணரைக் குறிக்கும் சொல் அன்று. தமிழ்நாட்டின் பூர்வகுடிகளான திருக்கோயில் பூசகர்களையே 'பார்ப்பார்' என்னும் சொல்லால் குறித்தார் வள்ளுவர். (தற்காலத்தில் இவர்கள் சிவாச்சாரியார்கள் / பட்டாச்சாரியார்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.)

 தமிழ்ப் பார்ப்பார்கள் வீடுகளில் சிவபெருமானை(திருமாலை)த் உலகநலன் வேண்டி தமதளவிலும், சிவன்(திருமால்) திருக்கோயிகளில் ஏனையோர்களுக்காக அவர்பொருட்டும் வழிபாடும், பூசனையும் செய்யும் திருத்தொண்டு புரிபவர்கள்.

 'பார்ப்பு' என்ற சொல்லுக்குப் 'பறவையின் குஞ்சு' என்று பொருள். இதற்கான இலக்கியச் சான்றை "அள்ளற் பழனத்து அரக்காம்பல் வாயவிழ வெள்ளம் தீப்பட்டதென வெரீஇப் - புள்ளினந்தம் கைச்சிறகாற் பார்ப்பொடுக்கும் கவ்வை......." எனவரும் முத்தொள்ளாயிரப் பாடல் தருகின்றது. இங்கு, 'பார்ப்பு' என்னும் சொல்லை பறவையின் குஞ்சு என்னும் பொருள் கொண்டே உரைக்கின்றது முத்தொள்ளாயிரம்.

 முதல் பிறப்பாக, தாய்ப்பறவையின் வயிற்றிலிருந்து முட்டையாகவும், பின் இரண்டாவது பிறப்பாக, முட்டையிலிருந்து பொரிந்து குஞ்சாகவும், இரு-பிறப்பு நிகழ்வதால் இப்பெயர் வந்தது. அதனைப் போலவே, உபநயனம் (பூணூல் அணிதல்) முடிந்தவுடன் அவர்கள் அடுத்த பிறப்பை எடுத்து விடுகின்றனர். அதனால்தான் அவர்களுக்கு இருபிறப்பாளர்கள்(துவிஜர்) என்று பெயர். அந்த அடிப்படையில்தான் பார்ப்பனர் என்று பெயர் வந்தது. இருபிறப்பாளன் என்ற காரணத்தால், பார்ப்பார் என்று திருக்கோயில் பூசகர்கள் அழைக்கப்பட்டனர்.

 [மேலும், பார்ப்பார் என்பவர்கள் தமிழர் சமய வேத, ஆகம நூல்களைக் கோயில் வழிபாட்டுக்கு அடிப்படையாகக் கொண்டு பார்ப்பதும், அவற்றின்படி, கோயில் கடவுளர்க்கு தமிழ்வழித் திருப்பூசை,திருப்பலி முதலியன செய்ததாலும், பார்ப்பார் எனவும், குருக்கள் எனவும், அந்தணர் எனவும் அழைக்கப்பட்டனர். இவர்கள் சுத்தத் தமிழர்களே!

ஆரியப் பிராமணர்கள் தமிழ்நாட்டிற்கு வந்தபிறகு, அரசர்களுக்குத் தமிழ்ப் பார்ப்பனர்கள் செய்துவந்த மதக் கருமங்களையும், திருக்கோயில் சடங்குகளையும் ஆரியப் பிராமணர்களைக் கொண்டு செய்விக்க சில தமிழ் அரசர்கள் முனைந்தனர். இவ்வாறு, ஆரியப்பிராமணர்களும் பார்ப்பனர், அந்தணர் பட்டம் பெற்றதால் ஆகம விதிகள் காற்றில் பறக்க விடப்படுவதைத் தடுக்கவே, தமிழாகமம் திருமந்திரம் எழுதிய திருமூலதேவர் நாயனார் இப்போக்கைக் கண்டித்து 519வது திருமந்திரம்  அருளினார்.

தமிழ்நாட்டுக்கு வந்தேறிய ஆரியப்பிராமணர்கள் தம்மையும் பார்ப்பனர்கள் என்று பொய்மொழி கூறிக்கொண்டு, திருக்கோயில் பூசனை செய்ய முற்பட்டனர் என்பதையும், அத்தகைய ஆரியப் போலிப் பார்ப்பனர்களை "பேர்கொண்ட பார்ப்பான்" என்று தமிழர்களுக்கு அடையாளம் காட்டுகின்றார் பத்தாம் திருமுறை ஆசிரியர் திருமூலதேவ நாயனார்:

பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தால்
போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்
பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமு மாம்என்றே
சீர்க்கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே. - திருமந்திரம் 519

தம்மைப் பார்ப்பனர் என்று பொய்யுரைக்கும் 'பேர்கொண்ட பார்ப்பான்' என்னும் ஆரியப் பிராமணன் திருக்கோயிலில் சிவபிரானின் திருமேனியைத் தொட்டு அருச்சனை செய்தால், போர்த்தொழில் செய்து நாடுகாக்கும் வேந்தர்களுக்குப் பொல்லாத வியாதிகள் வரும்; நாட்டில் பஞ்சம் வரும் என்று தெரிந்து சீர் கொண்ட நந்தி எமக்கு உபதேசம் செய்தார் என்று இத்திருமந்திரம் வழியாக தமிழ்நாட்டு மக்களையும், நாடாளும் மன்னனையும் எச்சரிக்கை செய்கின்றார் நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமூலர். அறம்,பொருள்,இன்பம்,வீடு என்னும் தமிழ் நான்மறையும், வடவேதப் பயிற்சியும் ஒருங்கே கைக்கொள்ளும் தமிழ் பார்ப்பார் வேறு, வட ஆரியவேதம் மட்டுமே ஓதும் ஆரியப் பிராமணர் வேறு என்பதைத் தமிழ் ஆய்வாளர்கள் அறிதல்வேண்டும்.]

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். - திருக்குறள்:134

(பொருள் கொள்ளும் முறை: ஓத்து மறப்பினும் (பின்)கொளலாகும்; ஒழுக்கம் குன்ற, பார்ப்பான் பிறப்பு கெடும்.)

தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம்; ஆனால்,  ஒழுக்கம் தவறிக் குன்றினால், பார்ப்பான்  பிறப்பு கெடும். அதாவது, ஒழுக்கம் குன்றினால், பார்ப்பான் இருபிறப்பாளன் என்னும் தகுதியை, இரண்டாவது பிறப்பு என்னும் பிறவிப் பயனை இழந்து, உடனே இழிவை அடைவான் என்பதே பொருள்.

திருக்குறள் நெறியின்படி, ஒழுக்கம் குன்றியவன் 'பார்ப்பான்' என்னும் தகுதியை உடனே இழக்கிறான்.

 மனுசாஸ்திரம்: ஒழுங்கீனராக இருந்தாலும் ஆரியப் பிராமணரே உயர்ந்தவர்!

 ஆரியர்களின் மனுதர்ம சாத்திர முறைப்படி,  பிராமணன் ஒழுக்கம் தவறி, இழிந்த காரியத்தைச் செய்தாலும் பிராமணனே; பிறப்பே பிராமண குலத்தைத் தீர்மானிக்கும் என்று தீர்க்கமாகப் பிறப்பின் மேன்மையைத் தூக்கிப் பிடிக்கும் மனு சாஸ்திரம் இங்கு தரப்பட்டுள்ளது.

Manu Dharma Sastra: Chapter-IX Suthra 319. Thus, though Brahmanas involve themselves in all (sorts of) indicipline or mean deeds, they must be honoured in every way; for (each of) them is a very great deity.

 திருக்குறள்: ஒழுக்கம் கெட்டால் தமிழ்ப் பார்ப்பார் பிறப்பே கெடும்!

 'ஒழுங்கீனமாக நடப்பதால்  பிராமணனுக்கு குலக்கேடு நிகழாது' என்னும் ஆரியசாதிப் பிறவி மேன்மை பாராட்டும் மனுதர்ம சாத்திரத்துக்கு முற்றிலும் எதிரான நிலைப்பாடு கொண்டது திருக்குறள் என்பது : 'ஓத்து மறப்பினும் (பின்)கொளலாகும்; ஒழுக்கம் குன்ற, பார்ப்பான் பிறப்பு கெடும்' எனும் இக்குறளால் நிறுவப்படுகின்றது. எனவே, பார்ப்பான் என்பவன் ஒழுக்கத்தைப் போற்றும் தமிழன் என்பதும், பிராமணன் என்பவன் ஒழுங்கீனமாகத் திரியும் 'பிராமண வடஆரியன்' என்பதும் தெளிவாகின்றது.

 ஆரியப்பிராமணர் ஒருபோதும் அந்தணனாக மாட்டார்!

 யார் அந்தணன் என்னும் வரையறையை 'நீத்தார் பெருமை' என்னும் மூன்றாவது அதிகாரத்தின் முப்பதாவது பாடலில் நிறுவுகின்றார் வள்ளுவர். நீத்தார் என்போர் உலக நலனுக்காக முற்றிலும் சுயநலம் தவிர்த்துப் பொதுப்பணிக்காவே தம்மை அர்ப்பணித்துக்கொண்டவர்கள். தன்னைப் பிறப்பின் வழியாக உயர்ந்தவனாகவும், மற்றவரைத் தங்களிலும் தாழ்ந்த இழிமகன்களாகக் கருதும் ஆரியப் பிராமணர்கள், திருக்குறள் கூறும் உயிர் சமத்துவத்தின் அடிப்படையில், "மனிதர்கள் மட்டுமல்லர், அனைத்து உயிர்களும் பிறப்பால் சமமே" என்னும் உயிர் சமத்துவக் கொள்கைக்கு எதிரானவர்கள் என்பதால்,  பிராமணர்கள் ஒருக்காலும் அந்தணனாக இருக்க இயலாது என்பது தெளிவு.
 அந்தணர் என்போர் அறவோர்; மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான். - திருக்குறள்:30

அந்தண்மை என்பது செவ்விய குளிர்ந்த தன்மை ஆகும். எவரிடத்திலும், எப்பொழுதும், எந்த நிலையிலும் மன வெறுப்பு, அறிவு வேறுபாடு, செயல் வெறுப்பு ஆகிய காரணங்களால் முகச்சுழிப்பும், கடுகடுப்பும் இல்லாமல், அன்புடன் நடந்துகொள்ளும் குளிர்ந்த நீர்மைத் தன்மை இங்கு 'அந்தண்மை' என்ற சொல்லால் சுட்டப்படுவது. அந்தண்மைப் பண்பு உடையவர்கள் அந்தணர்கள் ஆவர்.

யார் அந்தணர்?

 ஆறறிவுடைய மனிதர்களுக்கு மட்டுமல்லாமல், ஓரறிவு முதல் ஐந்தறிவு கொண்ட அனைத்து உயிர்களுக்கும் இச்செவ்விய குளிர்ந்த தன்மை கொண்ட உள்ளத்தோடு பணியாற்றும் பண்புகொண்ட அறவாழ்க்கை வாழும் அறவோர்களே 'அந்தணர்கள்' என்னும் சொல்லுக்குரிய தகுதி உடையவர்கள்.

 திருவள்ளுவர் காலத்திலேயே, 'அந்தணர்' என்னும் இச்சொல், பிறப்பின் வழியாக ஒரு மக்கட் பிரிவினருக்கு ஆகிவரத் தொடங்கியபோது , 'அவ்வாறு ஒரு பிறவி இல்லை' என்று  மறுத்துச் சொல்லவே இக்குறளை வள்ளுவர் இயற்றினார் என்பது தெளிவு.

 குறிப்பாக, தாம் பிரமனின் தலையில் பிறந்தோம் என்னும் கட்டுக்கதைகளைக் கூறும் பிறவிச் செருக்கால் தமக்கு உயர்வுகூறிப் பிற மக்களை விலங்கினும் கீழாக மதிக்கின்ற கீழ்மை உணர்வு கொண்ட ஆரியப் பிராமணர் 'அந்தணர்' ஆக மாட்டார். எனவே, பிராமணர் என்னும் சொல் அந்தணர் என்னும் சொல்லுக்கு எதிர்ச் சொல் என்பதை ஆணித்தரமாகச் சொல்லவே இக்குறள் வள்ளுவப்பெருந்தகையால் இயற்றப்பட்டது.

 தன்னைப் பிராமணன் என்பவன் அந்தணனாகும் தகுதியை இழக்கிறான்!

 ஒருவன் தன்னைப் பிராமணன் என்று சொல்லிவிட்டாலே அவன் அந்தணனாக இருக்கும் தகுதியை இழந்து விடுகின்றான் என்பதால் பிராமணர் அல்லாதோர்களில் இருந்தே அந்தணர்கள் தோன்ற முடியும் என்பது தானே விளங்கும்.

 'அந்தணர்' என்பதற்குத் இலக்கணம் சொல்லும் அவசியம் திருவள்ளுவர் காலத்தில் ஏற்பட்டதாலேயே சொல்லியிருக்கிறார். எனவே,

அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
பிறவாழி நீந்தல் அரிது (குறள் 8.)

என்ற குறளுக்கு திரு. நாகசாமியின் விளக்கம் ஒரு மநுவாதி மனித விரோத ஆரியப் பிராமணரின் வெற்றுக் கூச்சலே என்பதும், அவர் விளக்கம் திருக்குறள் ஆசிரியரின் கருத்துக்கு முற்றிலும் எதிர்மறையான விளக்கம் என்பதும் இங்கு நிறுவப்பட்டது. எனவே, இக்குறளுக்கான திரு.நாகசாமியின் விளக்கம் அறிஞர் பெருமக்களால் ஒருக்காலமும் ஏற்றுக்கொள்ள இயலாத விளக்கமாகும்.

வெள்ளம் போல் தமிழர் கூட்டம்! வீரங்கொள் கூட்டம்!  அன்னார்
உள்ளத்தால் ஒருவரே! மற் றுடலினால் பலராய்க் காண்பார்!
கள்ளத்தால் நெருங்கொணாதே எனவையம் கலங்கக் கண்டு
துள்ளும் நாள் எந்நாளோ! - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்!

குறளறம் தொடர்ந்து பேசுவோம்!

  • Like 3

Share this post


Link to post
Share on other sites

மிக அருமையான, தெளிவான ஆய்வு விளக்கம். தமிழின் தொன்மையையும் சிறப்பையும் தாங்க இயலாது 'தேவபாடை'யைத் தூக்கித் திரிகின்ற ஆரிய அடிவருடிகளுக்கான சவுக்கடி.

Share this post


Link to post
Share on other sites

திருவள்ளுவர் தமிழ் மரபில் வேதங்களை போற்றி அந்தணர் வேதங்களை காப்பதே மன்னவர் வேலை என்கிறார்.

திருக்குறள் – அந்தணர் யார்?

 
திருக்குறளில் அந்தணன்/அந்தணர் என்ற சொல் மூன்று இடங்களில் வருகின்றது.
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது. (8-கடவுள் வாழ்த்து)
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான். (30-நீத்தார் பெருமை)
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல். (543-செங்கோன்மை)
நாம் மேலே கண்ட குறட்பாக்களில் முதலாவது கடவுளையும் இரண்டாவ்து ஆசையை துறந்த முனிவர்களையும் வள்ளுவர் அழைகின்றார். எனவே நாம் நேரடி அந்தணர் என்பது அன்றி பிற பெயர்களாலும் அந்தணர் – வேள்வி தொடர்பான விஷயங்களிலும் வள்ளுவர் கூறியுள்ள குறட்பாக்களைப் பார்ப்போம். இறுதியில் மேலே உள்ள இரு குறட்பாக்களையும் காண்போம்.
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். (134ஒழுக்கமுடைமை)
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று. ( 259 புலான்மறுத்தல்) ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின். (560 கொடுங்கோன்மை)
பாரத நாட்டின் புகுந்த அன்னியர்கள் பிரித்தாளும் சூட்சியில் பல ஊகக் கோட்பாடுகளைப் பரப்பினர், அந்த மூடநம்பிக்கை புரளிகளுக்கு ஆதாரம் என முறையற்ற வகையில் மேலும் புரளிகளும் திரிபான விளக்கங்களும் கொண்ட ஆய்வுகள் என அடுக்கடுக்கான புத்தகங்கள் பரவியது. உண்மையரிந்த புலவர்கள் தங்கள் சுயநலத்திற்காக இவற்றை தீவீரமாக கண்டிக்கவில்லை. அடிமைப் படுத்த அன்னியர்கள் மததினையும் சாதியையும் தூண்டலாட, வெகுஜன அறிஞர்களும் உண்மையைக் கூற தயங்கினர். முக்கியமான ஊகக் கோட்பாடுகள் ஆரியர்- திராவிடர் என்னும் அன்னியர்கள் படையெடுப்பு, குமரிக்கண்டம் என்பவை முழுமையாக விஞ்ஞானம் மறுத்துள்ளது.
மேலும் வள்ளுவரே குறளின் உள்ளேயே வேறு குறளில் தொடர்புடைய அதிகாரத்தில் பயன்படுத்தும் போது அதெ பொருள்பட்டு விளக்கம் கொண்டபடியாக இயற்றியும் உள்ளார்.
திருக்குறள் எழுதப்படும் காலத்தில் அந்தணர் என்ற சொல்-தமிழரின் பழமையான இலக்கியங்கள் சங்க இலக்கியங்கள் எனப்படும் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும், இதன் பின் தொல்கப்பியம், திருக்குறள் உள்ளிட்ட பதினெண்கீழ்கணக்கு நூல்கள், இதன் பின்னரான இரட்டை காப்பியங்கள் சிலப்பதிகாரம் மனிமேகலையும், பின் திருமந்திரம் தொடங்கி பக்தி இலக்கியங்கள் என அறிஞர்கள் குறித்துள்ளனர். இலக்கியங்களில் பயன்பட்ட அதே பொருளில் தான் வள்ளுவரும் பயன்படுத்தியுள்ளார்.
நூறுக்கும் அதிகமான ஆதாரங்கள் உள்ளன, உதாரணத்திற்கு சில தரப்பட்டுள்ளது. உண்மைகளை அனுபவிப்போம்.
ஆசிரியர் நல்லுவந்தனார் பரிபாடல் 11ம் பாடலில் வையை என வைகை ஆற்றின் சிறப்பைக் கூறுகையில்
பரிபாடல்2:
கனைக்கும் அதிகுரல் கார் வானம் நீங்க,
பனிப் படு பைதல் விதலைப் பருவத்து, 75
ஞாயிறு காயா நளி மாரிப் பின் குளத்து,
மா ஆருந் திங்கள் மறு நிறை ஆதிரை
விரிநூல் அந்தணர் விழவு தொடங்க,
புரி நூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப,
‘வெம்பாதாக, வியல் நில வரைப்பு!‘ என 80
அம்பா ஆடலின் ஆய் தொடிக் கன்னியர்,
முனித் துறை முதல்வியர் முறைமை காட்ட,
பனிப் புலர்பு ஆடி, பரு மணல் அருவியின்
ஊதை ஊர்தர, உறை சிறை வேதியர்
நெறி நிமிர் நுடங்கு அழல் பேணிய சிறப்பின், 85
தையல் மகளிர் ஈர் அணி புலர்த்தர,
வையை! நினக்கு மடை வாய்த்தன்று.
மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்து,
பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவர், அவர்
தீ எரிப் பாலும் செறி தவம் முன் பற்றியோ, 90
தாய் அருகா நின்று தவத் தைந் நீராடுதல்?
நீ உரைத்தி, வையை நதி!
மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரம் அன்று வேதமோதும் அந்தணர்கள் சிவபெருமானிற்கு திருவிழா செய்யத் தொடங்கினர். முப்புரி நூல் அணிந்த அந்தணர் பொன்கலத்தை ஏந்தி சென்றனர். அம்பா ஆடல் செய்யும் கன்னிப் பெண்கள்- முதிய அந்தணப் பெண்கள் வழிகாட்ட அதிகாலையில் நீராடினர்.
அதிகாலையில் நீராடிய இளம்பெண்கள், மார்கழியின் குளிர் வாட்ட, கரையில் வேதமந்திரங்கள் கூறி வளர்த்த வேள்வி அக்னியின் அருகில் சென்று தங்கள் ஈர ஆடையை காயச் செய்தனர். அந்தணர் வேத வேள்விகளால் மழை தொடர வைகை நீ பெருகுகிறாய்.
இவை மார்கழி மாதத்தின் பாவை நோன்பின் தொன்மையையும் திருவாதிரை பண்டிகை கொண்டாடுதலின் வழமையையும் மெய்பிக்கின்றது.
பரிபாடல்-திரட்டு 2ம் பாடல் வையை என்ற தலைப்பில்
தலைவன் கூற்று
மணி அணிந்த தம் உரிமை மைந்தரோடு ஆடித்
தணிவின்று, வையைப் புனல். 50
தலைவன் கூற்று
‘புனலூடு போவது ஓர் பூ மாலை கொண்டை,
எனலூழ் வகை எய்திற்று’ என்று ஏற்றுக்கொண்ட
புனலூடு நாடு அறியப் பூ மாலை அப்பி,
நினைவாரை நெஞ்சு இடுக்கண் செய்யும் கனல்புடன்,
கூடாமுன், ஊடல் கொடிய திறம் கூடினால், 55
ஊடாளோ? ஊர்த்து அலர் வந்து ஊர்ந்து.
என ஆங்கு-
பார்ப்பார் நீராடாது கரையில் நின்ற காரணம்
‘ஈப் பாய் அடு நறாக் கொண்டது, இவ் யாறு’ எனப்
பார்ப்பார் ஒழிந்தார், படிவு.
‘மைந்தர் மகளிர் மண விரை தூவிற்று’ என்று, 60
அந்தணர் தோயலர், ஆறு.
‘வையை தேம் மேவ வழுவழுப்பு உற்றென’
ஐயர், வாய்பூசுறார், ஆறு.
-பா¢பாடல்-திரட்டு 2:50-63
அந்தணர்கள் எல்லா மக்களும் சேர்ந்து கொண்டாடும் புதுநீர் விழாவின் போது, கேளிக்கைகளில் கலந்துகொள்ளாது ஒதுங்எயே வாழ்ந்தனர். கள் குடித்தவர்கள் உமிழ்கையில் கள்ளும்; பெண்களும் சிறுவர்கள் பயன்படுத்தும் நறுமணப் பொருட்கள், வழுவழுப்பான தேன் முதலியவை வைகை ஆற்றின் புதுப் புனலில் கலந்து வந்தது ஆகையால் ஒழுக்க நெறிப்பட்ட பார்ப்பனர்கள் புதுப் புனலின் போது வைகையில் குளிப்பதோ- வாய் கொப்பளிப்பதோ இல்லை. இங்கே பார்ப்பனர்- அந்தணர்-ஐயர் என்ற மூன்று பதங்களும் பிராமணர்களைக் குறிக்க சங்க காலத்திலே இருந்தது எனத் தெளிவாகிறது.
மேலும் சங்க காலத்தில் தமிழகத்தின் பக்திநிலை பற்றியும் உறுதி செய்கிறது.
மதுரைக் காஞ்சி
பூவினர் புகையினர் தொழுவனர் பழிச்சிச்
சிறந்து புறங்காக்குங் கடவுட் பள்ளியுஞ்
சிறந்த வேதம் விளங்கப் பாடி
விழுச்சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து
நிலமமர் வையத் தொருதா மாகி . . .470
உயர்நிலை யுலக மிவணின் றெய்தும்
அறநெறி பிழையா அன்புடை நெஞ்சிற்
பெரியோர் மேஎ யினிதி னுறையுங்
குன்றுகுயின் றன்ன அந்தணர் பள்ளியும்
வண்டுபடப் பழுநிய தேனார் தோற்றத்துப்
பூவும் புகையுஞ் சாவகர் பழிச்சச்
சென்ற காலமும் வரூஉ மமயமும்
இன்றிவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்குணர்ந்து
வானமு நிலனுந் தாமுழு துணருஞ்
சான்ற கொள்கைச் சாயா யாக்கை . . .480
“தாதுண் தும்பி போது முரன்றாங்கு
ஓதல் அந்தணர் வேதம் பா” – மதுரை காஞ்சி 655, 656
திருமுருகாற்றுப்படை
2. திருச்சீர் அலைவாய்
மந்திர விதியின் மரபுளி வழாஅ
அந்தணர் வேள்விஓர்க் கும்மே;ஒருமுகம்,
4. திரு ஏரகம்
அந்தணர்:
இருமூன்று எய்திய இயல்பினின் வழாஅது
இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி
அறுநான்கு இரட்டி இளமை நல்லியாண்டு
ஆறினிற் கழிப்பிய அறன்நவில் கொள்கை . . .180
மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து
இருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல,
ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்
புலராக் காழகம் புலர உடீஇ,
உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து
ஆறெழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி
நாஇயல் மருங்கில் நவிலப் பாடி
விரையுறு நறுமலர் ஏந்திப் பெரிந்துஉவந்து
ஏரகத்து உறைதலும் உரியன்: அதான்று,
பெரும்பாணாற்றுப்படை
செந்தீப் பேணிய முனிவர் வெண்கோட்டுக்
களிறுதரு விறகின் வேட்கு 499
பெருநாள ளமையத்துப் பிணையினிர் கழிமின்
செழுங்கன் றியாத்த சிறுதாட் பந்தர்ப்
பைஞ்சேறு மெழுகிய படிவ நன்னகர்
மனையுறை கோழியடு ஞமலி துன்னாது
வளைவாய்க் கிள்ளை மறைவிளி பயிற்றும் . . . .300
மறைகாப் பாள ருறைபதிச் சேப்பிற்
பெருநல் வானத்து வடவயின் விளங்குஞ்
அந்தணர்கள் அவர்கள் வீடுகளில் ஓதும் மறையைக் கேட்டு கேட்டு அவர்கள் இல்லங்களில் வாழும் கிளிகளும் வேத ஒலிகளை எழுப்புகின்றனவாம்.
பதிற்றுப்பத்து
பிராமணர்கள் ஆறு தொழிலை உடையவர்கள்.
“ஓதல் வேட்டல் அவை பிறர்ச் செய்தல்
ஈதல் ஏற்றல் என்று ஆறு புரிந்தொழுகும்
அறம் புரி அந்தணர்” – 24)
பாட்டு – 74
கேள்வி கேட்டுப் படிவம் ஒடியாது
வேள்வி வேட்டனை உயர்ந்தோர் உவப்பச்
அந்தணன், பார்ப்பான், நான்மறையாளன், முனிவன் என்று குறிப்பிடப்படுகின்றனர். வேதம் அறிந்தவர்கள். அதனைத் தினந்தோறும் ஓதுபவர்கள் என்று குறிப்பிடப்படுகிறது.
அந்தணர் – பார்ப்பான் அறுதொழிலார் என நேரடியாக குறளில் வள்ளுவர் பன்படுத்தியுள்ளார்.
நாம் மேலே சங்க இலக்கியத்தில் காட்டியதில் வேள்விகள் சிறப்பித்து கூறப்படுவதயும் காண்கிறோம்.
அனால் திருவள்ளுவரோ
குறள் 259: துறவறவியல் – புலான்மறுத்தல்
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று.
நாமக்கல் கவிஞர் உரை மு.வ உரை:
நெய் முதலியப் பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலை விட ஒன்றன் உயிரைக்கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது.
நாம் இந்தக் குறளோடு இதன் முந்தைய அடுத்த குறள்களையும் காண்போம்.
குறள் 258:
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.
மு.வ உரை:
குற்றத்திலிருந்து நீங்கிய அறிவை உடையவர், ஒர் உயிரினிடத்திலிருந்து பிரிந்து வந்த ஊனை உண்ணமாட்டார்.
குறள் 260:
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.
மு.வ உரை:
ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.
குற்றத்திலிருந்து நீங்கிய அறிவை உடையவர்- முனிவர்களை தான் வள்ளுவர் ஊணுண்வு மறுத்தலில் முக்கிய்ம் கொடுக்கிறார். ஆனாலும் அனவருக்கும் அவர் வற்புரித்தினார் என்று கொண்டாலும் ஒருவன் தெய்வமாக தொழப்படும் நிலைக்கு ஈடாகும் நிலைக்கு முன்னர் இறைவனிடம் அடையும்வழி வேள்விகள் செய்தல். ஒருவன் வேல்விகள் செய்து கொண்டு, இறைவனை அடைய முயன்று ஊன் உண்தல் தவிற்க வேள்விகளை சிறப்பித்து போற்றித் தான் வள்ளுவர் கூறுகிர்றார்.
வேள்விகள் பற்றி வள்ளுவர் கூறியுள்ளது
விருந்தோம்பல்
இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.
பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்வருந்து வானத் தவர்க்கு.
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.
விருந்தினரை உபசரித்தல் அதிதி யக்ஞம் எனப்படும் இது வேள்விக்கும் ஒப்பாகும், இவ்வேள்வி செய்வோர் வீட்டில் ல்க்ஷ்மி தேவீ வாசம் செய்வாள் என்கிறார்.
குறள் 413: கேள்வி
செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து.
கேள்வி என சத்சங்கங்கள் செய்வது தேவர்கள் உண்ணும் அவி உணவிற்கு ஈடானது
வள்ளுவர் வேள்விகளை மிகவும் உயர்வாகவே கருதியதைக் கண்டோம்.
வேத முறைப்படி மூன்று அக்னிகள் வளர்க்கப்படுகின்றன. அவை ஆகவனீயம், காருகபத்தியம், தட்சினாக்கினி என்பவை. இவை ரிக் வேதத்திலேயே கூறப்பட்டுள்ளன. முத்தீ பண்டைத் தமிழர் வாழ்வில் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது. சேரமான் மாவெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப்பெருவழுதியும் சோழன் பெருநற்கிள்ளியும் ஒற்றுமையாக இருப்பதை காண்கிறார் புறநானூற்று ஔவையார். பாடுகிறார்:
பார்ப்பு என்றால் பறவைக் குஞ்சு. பிரக்கும் போது முட்டை உடலில் வந்தது பின் முட்டை உடைய புது பிறப்பு எடுப்பது போலே பூனல் எனப்படும் உபநயந்துக்குப்பின் வேதம் படிக்க ஆசிரியரிடம் செல்கிறான், எனவே பார்ப்பான் என்றால் இருபிறப்பாளன். தாயின் வயிற்றினின்று பிறந்து வருவது ஒரு பிறவி. தன்னுடைய வாழ்க்கையை மேலான வாழ்க்கையாகத் திருத்தி அமைக்க ஆரம்பிக்கின்ற பொழுது மனிதன் ஆன்மிகத் துறையில் இன்னொரு பிறப்பெடுத்தவன் ஆகின்றான். ஆகையினால் அவன் துவிஜன் – இருபிறப்பாளன் என்று சொல்லப் படுகிறான்.
அந்தணர்- அந்தம் + அணர். உலகின் உறுதிப் பொருளான வேதங்களினை கொண்டு வழி காட்டுபவர் எனப் பொருள் படும்.
வேதங்களின் உறுப்புகளான ஆயுர்வேதம், பஞ்சாங்கங்கள் துணை கொண்டு, சிறு மருத்துவம், வரும் ஆண்டில் காலநிலையை முன்னரே கணித்து பார்த்து யாது பயிரிடலாம், பயணங்கள் செய்ய உகந்த நாளா என நிமித்தம் பார்த்து சொல்வதாலும் பார்ப்பான்.
இறைவனை அந்தணர் என்றும் பார்ப்பான் என்றும் அழைப்பது சங்க இலக்கிய நடைமுறையே.
ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ,
வேத மா பூண் வையத் தேர் ஊர்ந்து,
நாகம் நாணா, மலை வில்லாக,
மூவகை ர் எயில் ஓர் அழல்-அம்பின் முளிய, – 25
மாதிரம் அழல, எய்து அமரர் வேள்விப்
பாகம் உண்ட பைங் கட் பார்ப்பான்
உமையொடு புணர்ந்து, காம வதுவையுள்,
அமையாப் புணர்ச்சி அமைய, நெற்றி
இமையா நாட்டத்து ஒரு வரம் கொண்டு – 30
(Paaaripādal, Chapter 5)
மண்மிசை—அவிழ்துழாய் மலர்தரு செல்வத்துப்
புள்மிசைக் கொடியோனும், புங்கவம் ஊர்வோனும்,
மலர்மிசை முதல்வனும், மற்று அவனிடைத் தோன்றி
உலகு இருள் அகற்றிய பதின்மரும், இருவரும்,
மருந்து உரை இருவரும், திருந்து நூல் எண்மரும் (Paripādal 8:1-5)
தொல்காப்பியம்-செய்யுளியல்480
நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளக்கும்1
மறைமொழி தானே 2மந்திரம் என்ப.
என் – னின். மந்திரம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.
நிறைந்த மொழியையுடைய மாந்தர் தமதாணையாற் சொல்லப்பட்ட மறைந்தசொல் மந்திரமாவ தென்றவாறு.
திருமுருகாற்றுப்படை2. திருச்சீர் அலைவாய்
மந்திர விதியின் மரபுளி வழாஅ
அந்தணர் வேள்விஓர்க் கும்மே;ஒருமுகம்,
உலகமே இருளில் முழ்கி கிடந்த போது ஆன்ம ஒளியில் திளைத்தது நம் நாடு.ரிஷிகள் சிந்தனையில் அனுபூதியில் கண்ட உண்மைகளின் தொகுப்பே வேதங்கள்.எப்போது இவை தோன்றியது என யாருக்கும் தெரியாது.”புவி ஈர்ப்பு விதிகள் நமக்கு முன்னும், நமக்கு பின்னும் எப்போதும் இருக்கும்.அது போல்தான் ஆன்மிக உலகின் விதிகளும் மாறாமல் இருக்கும்”அவ்வாறு ரிஷிகள் வெளிப் படுத்திய அந்த உண்மைகள், பின்னாளில் வியாசரால் நான்காகப் தொகுக்கப் பட்டன.ரிக்,யாகூர்,சாம மற்றும் அதர்வணம்.ஒவ்வொரு வேதமும் முக்கிய மூன்று பிரிவாக ,சம்ஹிதை(பல்வேறு தேவர்களின் பிரார்த்தனைகள்),பிராம்மணம்(யாக விவரங்கள்)ஆரண்யகம்(அறுதி உண்மை பற்றிய ஆராய்ச்சிகள்) பிரிக்கப் பட்டன.
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.
தவவலிமை உள்ளவர்கள் பெருமையைக வேதங்கள் இந்நிலத்து வேதங்கள் காட்டுகின்றன.
சங்க காலத்தில் பலவகைகளிலும் மேன்மையுற்றிருந்த தமிழகம் 3ம் நூற்றாண்டு முதல் 6. வரை களப்பிரர் காலத்தில் பல இடர்பாடுகளுக்கு உள்ளானது. அக்காலத்தில் சமணம் தழைத்தோங்க ஆரம்பித்தது. காதல், களவு, கற்பு, வீரம் போன்றவற்றைப் பற்றி எழுதப்பட்ட இலக்கியங்கள் மறைந்தன. நீதிக்கருத்துக்களை எடுத்துக்கூறும் நூல்கள் இயற்றப்பட்டன. அவ்வாறு எழுதப்பட்டவையே பதினென் கீழ்கணக்கு நூல்களாகும்
திருக்குறள் இக்காலத்தில் இயற்றப்பட்டதே- எனவே திருவள்ளுவர் தன் நூலை ஒரு பொது நூல் தோற்றம் தரும் வகையில் கடவுள் வாழ்த்தின் பத்து குறட்பாக்களில் ஒரு பெயர்சொல் கூட பயன்படுத்தவில்லை. இதை வெவெவேறு மதத்தினரும் தன் வகையில் பொருத்த முயற்சித்தல் இயல்பே. ஆனால் வள்ளுவர் மனதை அறிய நாம் மேலே கண்ட முறையில் அவர் சங்க கால நடைமுறையில் தான் எழுதியுள்ளார் என்பதை தெளிவாக உணறலாம்
சாங்கிய தரிசனத்தி ருந்து எழுந்த ஒரு தத்துவம் பின் பௌத்த சமண மதங்களாக மாறியது. இவ்விரு மதங்களும் பல வைதிக மதக் கோட்பாடுகளை சற்றே மாற்றி பயன்படுத்தியது மட்டுமின்றி இதிகாசங்கள் இரண்டையும் திரித்து தங்கள் மத நம்பிக்கைகேற்ப பிற்காலத்தில் புனைந்தனர். என்வே வள்ளுவர் காலத்திற்கு முன்பே இருந்த ஆதாரங்கள் வள்ளுவர் வைதீக நடைமுறையையெ கூறினார் எனத் தெளிவாக உண்மைகளை தெளிவாக்கும்.
Jainistm is a kind of religion based upon the acceptance of the Samkhya system, but venerating a limited group of noble selves, who have achieved perfection and bliss. ( p-10 Coparative Religion ; A.C.Bouquet)
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல். (543-செங்கோன்மை)
நாமக்கல் கவிஞர் உரை
அந்தணர்கள் ஓதும் வேதம் முதலிய ஞான நூல்களின் அறிவு மக்களிடையே பரவுவதற்கும், அதனால் நாட்டில் அறங்கள் சரியாக நடப்பதற்கும் ஆதரவாக இருப்பது அரசாட்சியின் செங்கோண்மை.
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். (134ஒழுக்கமுடைமை)
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று. ( 259 புலான்மறுத்தல்)
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின். (560 கொடுங்கோன்மை)
Translation:
Where guardian guardeth not, udder of kine grows dry,
And Brahmans’ sacred lore will all forgotten lie.
Explanation:
If the guardian (of the country) neglects to guard it, the produce of the cows will fail, and the men of six duties viz., the Brahmins will forget the vedas.
மு.வ உரை:
நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும், அந்தணரும் அறநூல்களை மறப்பர்.
குறள் 1066:
ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்த தில்.
மு.வ உரை:
பசுவிற்கு நீர் வேண்டும் என்று அறம் நோக்கி இரந்து கேட்டாலும், இர த்தலை விட நாவிற்கு இழிவானது மற்றொன்று இல்லை.
“பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, ‘பசுக்களும், பசுவின் இயல்பை ஒத்த அந்தணரும், பெண்களும், நோயுடையவர்களும், முன்னோர்களுக்கு விருப்பத்துடன் ஈமச் செயல்களைச் செய்வதற்குரிய பொன்னையொத்த ஆண் மக்களைப் பெறாதவர்களும் பாதுகாப்பான இடத்துக்குச் செல்லுங்கள்!
நாங்கள் எங்கள் அம்புகளை விரைவாகச் செலுத்தப்போகிறோம்’ என்று அறநெறியோடு அறிவுறுத்திப் பிறகே போர் செய்யத் தொடங்கும் வலிமையும் மறமும் கொண்டவன். கொல்லுகின்ற யானை மீது எடுக்கப்பட்ட கொடிகள் ஆகாயத்தை மறைக்கும்; அத்தகைய சிறப்புடையவன் எம்முடைய வேந்தன். புலவர் நெட்டிமையார், முதுகுடுமியின் அறப்போர் நெறியாக யார்யார் காப்பாற்றப்படுவதற்கு உரியவர் எனப் பட்டியலிடுதல் நோக்கத் தக்கது.
ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
எம்அம்பு கடிவிடுதும் நும்மரண் சேர்மின்…… என்ற அடிகள் அக்காலத் தமிழர் போர் நெறி காட்டுவன.
இப்புறநானுறு பாடல்படியான மரபில் தானே வள்ளுவர் இகுறளும் கூறுகின்றது.
பசுக்கள் தரும் பால்- அதன் உப பொருட்கள் தயிர், வெண்ணெய் நெய்- இவை அனைத்துமே கர்ப்பிணி பெண்கட்கும், சிறு குழந்தைகட்கும் அவசியம். வேள்விகளிலும் அவசியம். நாட்டின் பலத்திற்கு வருங்காலத் தலைமுறையும் கடவுள் ஆசியும் அவசியம் என்பதையே கூறியுள்ளார்.
திருவள்ளுவர் சங்ககாலத் தமிழர் மரபுப்படிதான் திருக்குறளைத் தந்துள்ளார். அதில் அந்தணர் என்பது தொழில் வழியில் அந்தணர்களைத் தான்.

Share this post


Link to post
Share on other sites

சிறப்பான ஆய்வுகள்......தொடரட்டும்.....!  tw_blush:

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.