Jump to content

கங்கம்மா


Recommended Posts

கங்கம்மா

 

 
k9

"பெத்த புள்ளையத் தொலைச்சிட்டு... பேதையா நிக்கிறேனே.... ஒத்தப் புள்ளைய காணாம.... ஒறக்கமத்துப் போனேனே....'' 
காலங்காத்தால பிலாக்கணத்தை ஆரம்பிச்ச கங்கம்மாளப் பாத்த தங்கவேலுவுக்கும் வவுத்தெரிச்சலாதானிருக்கு. புள்ளைய நெனைச்சி கங்கம்மா அறுத்துப் போட்டக் கதுரா தொவண்டு போய்ட்டா. 
"இந்தா புள்ள, ஒரு வாயாவது குடி கொவளையில கஞ்சிய வைச்சிக்கிட்டு கெஞ்சறாரு தங்கவேலு.''
மூச்ச வுடலையே அவ. பின்னயென்ன கோவம்னா கோவம் அப்பிடியொரு கோவம் புருசங்காரருமேல. "சேத்து வைச்சிருக்க சொத்தே நாலு தலமொறைக்குத் தாங்கும். அந்நிய தேசத்துல எம்புள்ள போய் செரமப்படணும்னு தலையெளுத்தா என்ன?'' சீலத்தலப்பு நனைஞ்சது.
"இந்த மனுசனோட கொடச்சல தாங்கமுடியாமதேன் சீமைக்குப் போனான் தவமா தவமிருந்து பெத்த புள்ள. எம்புள்ளையக் கரிச்சிக் கொட்டலன்னா இந்த மனுசனுக்கு ஒறக்கம் புடிக்காதே. ஆளு, அம்பு, தோட்டந்தொறவுன்னு அம்புட்டுயிருந்து என்னா புண்ணியம்? ஒத்தப்புள்ளையத் தவிக்க வுட்டுட்டு ஒருகவளஞ் சோறு உள்ள எறங்கமாட்டுதே.' கண்ண முந்தானைல தொடைச்சிக்கிட்டு மூக்கைச் சிந்தி செவுத்தில தடவுனா. பொங்கலுக்கு வெள்ளையடிச்ச செவுரு பூரா சளிக் கோலமாயிருக்கு.
"இப்பிடியே பச்சத் தண்ணி பல்லுல படாம கெடந்தா அந்த ஒடம்புதா என்னத்துக்காவும் புள்ள?''
"எம்புள்ளைய பாக்காம எனக்கொண்ணும் ஆவாது தலக்காணி ஊறிப்போய்க் கெடக்கு''
ஆலமரம் அரசமரமுன்னுட்டு கண்ணுல கண்ட மரத்தல்லாம் வுடாம சுத்தியதுல பொறந்த புள்ளன்னு துளியூண்டு செல்லங்கொடுத்து வளத்தது தப்பாப்போச்சி. நெதமும் பள்ளிக்கோடம் போறச்ச அவனுக்குன்னு ஒரு நோவு வந்துடும். வைத்தியக்காரரத் தேடிப் போறதே கங்கம்மாவோட பொளப்பாப் போச்சி. அந்தத் தொல்லைய அவளுக்கேந் தரணும்னு காலங்காத்தால வைத்தியக்காரரே அவ வூட்டாண்ட வந்துடுவாரு. 
பாவம் அந்த வாத்தியுந்தேன் எம்புட்டுக் காலம் பொறுத்துக்குவாரு. கடுப்புல ஒருநா மேல கையவைச்சிட்டாரு. தாங்கிக்குவாளா கங்கம்மா, பஞ்சாயத்தையே கூட்டிட்டாளே. ஏதோ அந்த நேரத்துல டவுனுக்குப் போயிருந்த தங்கவேலு வரவும் வாத்தியாரு தல தப்பிச்சது 
ஒவ்வொரு வருசமும் அவனை வேற கிளாசுக்கு அனுப்ப அரிசி, கம்பு, கேவுரு, ஆடு, கோழி, காய்கறின்னு வாத்தியாருங்களுக்கு கங்கம்மா குடுத்தத வச்சே வாத்தியாரு குடும்பம் கடத் தெரு பக்கமே போவாம காலந் தள்ளுனாங்க. 
அப்பிடியும் இப்பிடியுமா பத்தாங் கிளாசு மட்டும் இளுத்துக்கிட்டு வந்துட்டா கங்கம்மா. அதுக்கப்புறம் எந்த வாத்திக்குக் கொண்டுபோய்க் குடுக்கணும்னு அவளுக்குந் தெரியல. அவனும் அதான் சாக்குன்னு ஊர சுத்தறதையே பொழப்பா வைச்சுக்கிட்டான். பெறவென்ன அவன் சுத்தறதுக்கு கங்கம்மாவோட செறுவாட்டுக் காசெல்லாங் காணாமப் போச்சி. பெத்த புள்ளதானன்னு கண்டுங்காணாம இருந்துட்டா கங்கம்மா. காத்தாயிக்கு கண்டுக்காமயிருக்க தலையெழுத்தா என்ன? அவ ஒறங்கையில முந்தானையில முடிஞ்சிருந்ததுல கைவைச்சிட்டான். அந்த சேதி தெரிஞ்ச மனுசன் புள்ளைன்னுகூடப் பாக்காம உண்டுயில்லன்னு பண்ணிட்டாரு. அன்னையிலேருந்து காத்தாயி ஏன் வேலைக்கு வரலன்னு கங்கம்மாவுக்கு மட்டுந்தான தெரியும்.
அப்பிடியிருந்த வந்தேன் ஒருநா சிங்கப்பூரு நாட்டுக்குப் போறேன்னான். சீமைக்கெல்லாம் வேணா ராசான்னு கங்கம்மாவும் கெஞ்சி கூத்தாடிப் பாத்துட்டா. பாவிமவன் ஆத்தாகாரி பேச்சைக் கேக்கலையே. இங்க சுத்தனது பத்தாதுன்னு அங்க வேற போய் சுத்தணுமான்னு அவங்கய்யன் கேட்டாக. பணங்கொடுக்கலன்னா பாசானத்தக் குடிச்சிடுவேன்னு ஆத்தாகாரிகிட்ட மல்லுக்கு நின்னான். அவளுந்தா என்ன பண்ணுவா? அளுதளுது மாய்ஞ்சதுல வூடே வெள்ளக்காடா ஆச்சி. தொலையுதுன்னு அந்த மனுசனும் பேங்குல காலுகடுக்க நின்னு ரெண்டு லச்சத்த எடுத்துக் குடுத்தாரு, கொஞ்ச நாளாவது நிம்மதியா இருப்போமுன்னுட்டு. போன ரெண்டுநா களிச்சி ஒருக்கா போனுல பேசினான், அத்தோட சரி.
நல்ல இரும்பு ஒலக்க மாதிரி கிண்ணுன்னு இருந்த கங்கம்மா நஞ்சத்துணியா படுக்கையில கெடக்குறத கண்கொண்டு பாக்க சகிக்கல தங்கவேலுக்கு. உள்ளூரு வைத்தியரு வந்து பாத்து குடுத்த மருந்தை கங்கம்மா பொறங்கையாலத் தள்ளிட்டா. டவுனு டாக்டருவ வண்டிவச்சி கூட்டியாந்து காட்டுனாரு புருசங்காரரு. அதுக்கும் மசியலையே கங்கம்மா. அவளோட புடிவாதந்தேன் தெரியுமே, புடிச்சா உடும்புப் புடிதாங்கிறது. இருந்தும் அவருந்தேன் என்னா பண்ண முடியும். அந்த சீமயென்ன கூப்புடற தூரத்துலயா இருக்கு?

 

"ஆராங்கானும் அது? கேட்டுக்கிட்டே வந்த மருது, "ஐயா நீங்களா... வாங்க....வாங்க...உக்காருங்கன்னு அவசரமா சொல்லி, கொடில கெடந்த துண்டால நாக்காலியத் தொடச்சிட்டு, "ஏ பொன்னாத்தா'ன்னு உள்ளப் பாத்துக் கூப்புட்டான். கைவேலையா இருந்த பொன்னாத்தா முந்தானையில களுத்தத் தொடைச்சிக்கிட்டே ஆரு வந்துருக்காவோ?ன்னு கேட்டுக்கிட்டே வந்தவ பாத்து, "ஐயாமாருங்களா'' ன்னு கையெடுத்துக் கும்புட்டா.
"ஐயா ஒங்க புண்ணியத்துல என்ற மவன் நல்லா இருக்கான்யா. நீங்க தப்பா எடுத்துக்கக்கூடாது. தம்பியக் காணோம்னுட்டு அம்மா படுறபாட்டக் காண முடியல. அதனாலதான் ஒங்ககிட்டக்கூட ஒரு வார்த்தக் கேக்காம இந்தப் பயகிட்ட சொல்லி, தம்பியப் பாத்து பேசச் சொல்லியிருக்கேன்யா'' தப்பு செஞ்சவனப்போல தலயக் குனிஞ்சுக்கிட்டு பேசற மருதமுத்த பாத்து தங்கவேலுக்கு வாய்ப் பேச்சுக் கௌம்பல. தோள்ல கெடந்த துண்ட எடுத்து மூஞ்சத் தொடைக்கிறாப்ல கண்ண தொடச்சிக்கிட்டு "நானும் அதுக்குத்தான் வந்தேன்'' ன்னு சொல்லி கையெடுத்து கும்பிட்டாக.
பதறிப்போயிட்டான் மருது. பொன்னாத்தா மட்டுமென்ன ஓடியாந்து, "நாங் கும்புடுற சாமியே''ன்னு கதறிட்டாளே. பின்னே என்ன, தங்கவேலு வூட்ல வேல செஞ்சவந்தேன் இந்த மருது. அவன் புள்ளைக்கி படிப்புல என்னா தெறமையோ தெரியல. வாத்திமாருங்களே மூக்குமேல வெரல வைக்கிறாப்ல படிச்சான். பத்தாம்புல நெறையா அதென்னவோ மார்க்குன்னு சொல்றாகளே அத வாங்குனான்னு சொல்லி என்னமோ சட்டிபேட்டாமே அதெல்லாம் கொடுத்தாகளே. கலக்டரு குடுத்த அதுக்கு கண்ணாடிபோட்டு அதோ அந்த அலமாரி மேலதான் மாட்டிவச்சிருக்கான். மனுசாள போட்டோ புடிச்சி மாட்டுறதுதான் தெரியும். வெறுந்தாள எதுக்கு மாட்டணும்னு பொன்னாத்தாவுக்கு ஒண்ணும் வெளங்கல. அப்பால டவுனுக்குப் போய்ப் படிக்கணும்னான். கூடமாட ஒத்தாசையா வேலைக்கி வாடான்னு மருது சொல்ல, "நான் படிக்கோணும் எப்பிடியாவது பள்ளிக்கோடம் அனுப்பு''ன்னு சொல்லிக் கரஞ்சான். வெவரந் தெரிஞ்ச தங்கவேலு ஐயாதேன், "நீ படிடா, நா ஒன்ன படிக்க வைக்கிறேன்னாரு. பெறவென்ன அதையும் நல்லாதேன் படிச்சான். தோ செவுத்துக்கு இந்தாண்ட பக்கம் மாட்டியிருக்கே அதுக்குக் குடுத்த சட்டிபேட்டு''. 
அதுக்கப்புறம் காலேசுக்குப் போவோணும்னான். அதுக்கெல்லாம் நெறையா பணம் ஆவும் ராசான்னு புருசன் பொஞ்சாதி ரெண்டுபேரும் மாத்திமாத்தி வேப்பல அடிச்சாக. அவனப் புடிச்ச அந்தப் பூடதான் ஒளியலயே. அந்த நேரம் பாத்து தங்கவேலு ஐயா ஆளனுப்பி கூட்டியாரச் சொன்னாரு. என்னுமோ ஏதோன்னு ஓடுனா, "மேக்கொண்டு என்னா படிக்கப்போறே?''ங்கிறாரு மனுசன். அன்னைக்கி மருது முடிவு பண்ணான் இனி கல்லுலவுள்ள சாமியக் கும்புடறதுல்லன்னு.
நாலு வருசம் அவம் படிச்சி முடிக்கிறதுக்குள்ள அவனுக்கு வேலையுங் கெடச்சுது. வேல கெடச்ச சந்தோசத்த வந்து சொன்ன மவன மருது பாத்த பார்வையிருக்கே இன்னிக்கி நெனைச்சாலும் பொன்னாத்தாவுக்கு குளுரு சொரமே வந்துரும். வெளங்காம முளிச்சப் புள்ளையாண்ட, "இங்கிட்டு ஏண்டா வந்து சொல்ற? வாளவச்ச சாமியாண்ட போய்ச் சொல்லுடா''ன்னு வெரட்டில்ல வுட்டுட்டாக.
அந்தக் கெலியிலதேன் பொறவு அவன் வேல செஞ்ச எடத்துலேருந்து அவுகளே சீமைக்கு அவனை அனுப்புறாகன்னு மவன் மொதல்ல தங்கவேலு ஐயாவாண்டதான போய் சொன்னான். தங்கவேலு ஐயாவுக்குப் பெரும தாங்கல. அன்னைக்கிக் கோளியடிச்சி கொளம்பு வைக்கல்ல சொன்னாக சம்சாரத்துகிட்ட. அந்தப் புண்ணியவதி மட்டும் என்ன சும்மாவா? தங்கம்னா தங்கம் அப்பிடியொரு தங்கம். வூட்டுல வேல செய்றவகதானேன்னு யாரையும் அதுந்து பேசமாட்டாகளே. அன்னிக்கி காத்தாயிகிட்ட அப்பிடி பேசினாகன்னா, புருசங்காரரு அடிச்ச அடியில புள்ளைக்கி ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிட்டா என்னாவுங்கிற வெசனத்துலதேன். என்னயிருந்தாலும் பெத்தமனசில்லையா பின்ன?
பொன்னாத்தா கலக்கி குடுத்த மோர குடிச்சிட்டு தங்கவேலு ஏதும் பேசாம ஒக்காந்திருந்தாரு. அந்த நேரம் பாத்து மருதோட போனு அடிச்சது. அதப் பாத்த மருது "இந்தப் பயதேன் பேசுதேன்''ன்னு சொல்லி, "ஐயாவாண்ட போனக் குடுக்க, நீ பேசிட்டுக் குடு'' ன்னு ஐயா சொன்னாக. 
"நீங்களே பேசுங்கையா''ன்னுட்டு குடுத்துட்டான் மருது.
தங்கவேலு போன எடுத்தாரு. "அப்பா, நான் ஐயா மகன் வேலைக்கி வந்த கம்பனிக்குப் போயி விசாரிச்சேம்பா. அவுரு அங்க ஒரு வாரந்தேன் வேலைக்கி வந்தாராம். அதுக்கப்புறம் வரவேயில்லையாம். எங்க போனார்னு தெரியலப்பா, இதெல்லாம் நீங்க அவசரப்பட்டு ஐயாவாண்ட சொல்லிடாதீங்க, நான் இன்னும் நல்லா வெசாரிக்கிறேன்''னு வெசனத்தோட சொன்னான் மருது மவன். அதைக் கேட்ட தங்கவேலு பதறிப் போயிட்டாரு, "என்னப்பா சொல்றே''ன்னு கேக்கிறதுக்குள்ள கண்ணு தண்ணிய வுட்டுட்டாரு.
கொரல்லயிருந்த வித்யாசம் அவனுக்குத் தெரிஞ்சிடுச்சிபோல, "ஐயாவா அது?''ன்னு கேட்டான். அவசரப்பட்டு வாய வுட்டுட்டமேன்னு அவனுக்கு என்ன சொல்லுறதுன்னே தெரியல. மலங்க மலங்க முளிச்சாங்கிறதுதான் இந்தாண்ட கேக்கிறவுகளுக்கேத் தெரியுதே.
"ஐயா கவலைப் படாதீங்கைய்யா, நம்ம தம்பி நல்லாயிருக்குங்கைய்யா''ன்னு மருது சொன்னான். ஐயாகிட்டயிருந்து போன வாங்கி, "என்னடா சொன்ன?''ன்னு மெரட்டில்ல வுட்டுட்டான் மருது.
"ஐயான்னு தெரியாம சொல்லிட்டேம்பா''ன்னு கலங்கிப்போய் சொன்னான் மருதுமவன்.
"நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ தெரியாது. அந்த தேசத்துல நம்ம தம்பியத் தேடிக் கண்டுபிடிச்சிட்டுதான் எங்களாண்ட பேசணும்''ன்னுட்டு போன வச்சிட்டான் மருது.
"நீயேன் புள்ளைய கடிஞ்சுக்கிற?''ன்னு தங்கவேலு ஐயா சத்தம்போட்டாரு.
காலுபோன போக்குல போன மனுசன் ஒரு முடிவுக்கு வந்து வூடு திரும்பினாரு. "ஏ புள்ள டவுனுக்கு கௌம்பு''ன்னாரு. மனுசனுக்குக் கிறுக்குப் புடுச்சிடுச்சோன்னு பாத்தா கங்கம்மா. தலையுமில்லாமே வாலுமில்லாமே சொன்னா அவதேன் என்னா நெனைப்பா?
"டவுனுக்கு என்னாத்துக்கு?'' கூரையப் பாத்து கேட்டா.
"போட்டா புடிக்கணும். அதுக்குதேன்''
"புள்ளயக் காங்கலன்னு ஒருத்தி கெடந்து தவிக்கேன் கூறுகெட்டு பேசறியளே''
"அட... புத்திகெட்டவளே, இங்க ஒக்காந்துகிட்டு புள்ளையக் காணோம்னு ஒப்பாரி வைச்சிக்கிட்டிருந்தா என்னாவறது? அதேன் அந்த சீமைக்கே போயி தேடலாமுன்னு சொல்லுதேன்'' அன்னந்தண்ணி ஆகாரம்னு இல்லாம அப்பிடியேக் கெடக்குற பொஞ்சாதிக்கு வேற எதனா ஆயிட்டா என்ன பண்றதுங்குற வெசனம் அவருக்கு.
"நெசமாதேன் சொல்லுறீயளா?''
"ஆமா கௌம்பு''
அவயம் வச்சக் கோழி மாதிரி ஒறங்கிக் கெடந்த பொம்பளைக்கி அம்புட்டுத் தெம்பு எங்கிட்டிருந்து வந்துச்சோ, அது அந்த ஈசனுக்குதேன் வெளிச்சம். அவுரு தோட்டத்துப் பக்கம்போயி மூஞ்சி மோர கழுவிட்டு வர்றதுக்குள்ள இவ கௌம்பி நிக்கா. பாத்த மனுசன் ஒத்த வாத்த பேசலையே. டவுனுக்குப் போய் போட்டா புடிச்ச பெறவு எப்ப போவுணும்?ங்கிறா.
இந்தப் போட்டாவக் குடுத்து "பாசுபோட்டு எடுக்கோணும், அப்பாலதேன் ஏரோபிளேனுக்கு டிக்கட்டு வாங்கமுடியும்''ன்னாரு.
கங்கம்மா மூஞ்சி வெளக்கு அணஞ்சிபோன வூடு மாதிரி ஆயிப்போச்சி. இருந்தாலும் மனசத் தேத்திக்கிட்டு, மவன் கெடச்சதோட அந்த சீம மண்ணுலேயே சாமிக்கு முடி கொடுக்குறேன்னு வேண்டிக்கிட்டா. அவ புள்ளையக் காணாத இந்த நாளுக்குள்ள அவ வேண்டாத சாமியுமில்லே. செய்யணும்னு சொல்லாத பரிகாரமுமில்லே. புள்ளைக்கி பொசுக்குன்னு ஒரு சொரம் வந்தாலே மகமாயிக்கி நேந்துகிட்டு நெருப்புசட்டி தூக்கி அங்க பெரதச்சன பண்றவளாச்சே. இப்ப எப்பிடி சும்மாயிருப்பா. பெறவுதேன் அவ தொண்டக்குளியில கஞ்சி எறங்குச்சி. டவுனு ஆசுபத்திரிக்குக் கூட்டியாந்து, என்னுமோ சத்து தண்ணியாமே குளுக்கோசுன்னு அத கொளாயில மாட்டி ஊசி குத்தி ஏத்துனாக. வாயத் தெறக்கலையே கங்கம்மா. இதுவே வேற சமயன்னா ஊசியப் பாத்ததும் கத்தி ஊரயே ஒண்ணா கூட்டியிருப்பாளே.

 

ஒருநா வூட்டாண்ட போலீசுக்காரவ வரவும் என்னுமோ ஏதோன்னு பதறிப்போயிட்டா கங்கம்மா. என்ற புள்ளைக்கி என்னாச்சின்னு ஒப்பாரி வச்சிட்டா. வந்திருந்தவகளுக்கு ஏதும் வெளங்கல. பாசுபோட்டுக்காக வெசாரிக்க வந்ததா சொன்னாக. அத அவ எங்க காது குடுத்துக் கேட்டா? பெறவு புருசன்காரரு சத்தம் போட்ட பிந்திதான அடங்குனா. அப்பாலதான அவளுக்கு வெவரமே தெரிஞ்சது.
ஒரு வாரத்துல பாசுபோட்டு வரவும் புருசன்காரரு டிக்கட்ட போட்டுட்டு வந்துட்டாக. ரெண்டுபேரும் பட்டணத்துக்கு போனாக. பிளேனு போற டேசனுக்கு போனாக்கா அங்கிட்டிருந்த படிக்கட்டப் பாத்துட்டு கால வைக்கமாட்டேன்னுட்டா. "இதென்ன அதிசயமாயிருக்கு, படிக்கட்டு நவுருது''ன்னு. "அட இதுக்கேயிப்பிடி சொன்னா எப்பிடி புள்ள, சிங்கப்பூருல எல்லா எடத்திலயும் இந்தப் படிக்கட்டுதானாம்''னு சொன்னவரு கையப் புடிச்சில்ல படியில நிக்க வச்சாரு. வெடவெடத்துப் போயில்ல வந்தா கங்கம்மா. ஒருவழியா ஏரோபிளேன்ல ஏறி ஒக்காந்ததும், பக்கத்துல இருந்த பையனாண்ட "என்ற புள்ளைய காணோம் சாமி, அவனைத் தேடித்தான் போறோம்''னா. 
"அப்படியா'ன்னவன் போன்லயிருந்த பொண்ணையே பாத்துக்கிட்டிருந்தான். 
"சீமைக்குப் போயி ஆயி அப்பனுக்குப் போனப்போட்டு பேசு ராசா''ன்னா அவனாண்ட. அத்தோட அவன் காதுல ஒயர மாட்டிக்கிட்டு கண்ண மூடிட்டான்ல. ஏரோபிளேன்ல தவிச்ச வாய்க்குத் தண்ணி தருமே அந்தப் புள்ளையாண்ட, "தாயி என்ற புள்ளைய காணோம்மா, அதுக்குதேன் அந்த நாட்டுக்குப் போறேன்''னா. அந்த திமிரு புடிச்ச பொண்ணு தலைய மட்டும் ஆட்டிட்டுப்போச்சி.
ஒருவழியா வந்து சேர்ந்தாக. கண்ணாடிக்கு அப்பால நிக்கிறது ஆரு? அதோ கையக்காட்டறது மருது மவனா, அட ஆமாம். அவந்தேன் காருல கூட்டிக்கிட்டு போனான் அவன் ரூமுக்கு. ரெண்டுவேரையும் குளிச்சிட்டு சாப்பிட சொன்ன பிறகு அந்தக் கம்பனிக்கு அழைச்சிக்கிட்டுப் போனான். நல்லவேளையா அங்க வாசல்ல நெத்தியில விபூதியோட ஒரு மவராசன் ஒக்காந்திருந்தாரு. அவருகிட்டப் போயி மவன காங்கலன்னு சொன்னா கங்கம்மா. அவுரு உள்ளபோயி கேளுங்கன்னாரு. அங்கிருந்தவுக பேசுறது ஆருக்கு வெளங்குது? மருது மவன்தேன் அவுக சொன்னதக் கேட்டு, அவுக போலீசுல சொல்லியிருக்காங்களாம், சீக்கிரம் கண்டு புடிச்சிடுவாங்களாம். "நாட்டவுட்டு வெளிய எங்கியும் போகலங்கிறாங்க'னான்.
ரூமுக்கு வந்த பொறவு மருதுமவன், "ஐயா எனக்கு ஒரு யோசனையிருக்கு, நீங்க தப்பா எடுத்துக்கக்கூடாது''ன்னான்.
"நீ சொன்னா சரியாத்தேன் இருக்கும் சொல்லுயா''
"பேசுபுக்குன்னு ஒண்ணு இருக்குய்யா, நாம அதுல ஒரு சேதியப் போட்டா எல்லாருமே பாப்பாங்க. அப்ப ஒருத்தர் கண்ணுல படாட்டியும் ஒருத்தர் கண்ணுல படலாமுல்ல''ன்னான்.
நல்ல யோசனைதான். இவ்ளோ நாளா இதையேன் பண்ணல?
"ஒங்களுக்குத்தான் தெரியுமே ஐயா, அவருக்கு என்னக்கண்டாலே பிடிக்காதுன்னு. அதுக்கு பயந்துதான்யா அப்பிடி பண்ணல''
"அவன் கெடக்கான், நீ பண்ணு''
அவனும் அப்படியே செஞ்சான். பேசுபுக்குல போட்டு ரெண்டு நாளாச்சி தகவல் ஒண்ணுமில்லே. 
"ஏனுங்க என்ற புள்ளைய எங்கனா பாத்தியேளா?'' கங்கம்மாவும் போறவ வர்றவககிட்டல்லாம் கேட்டுக் கேட்டு ஓய்ஞ்சி போயிட்டா.
"இந்த பொம்பளப் புள்ளைவோ கூட கொஞ்சம் துணிய போடக்கூடாதோ?'' அதுக்குவேற வெசனப்
படறா கங்கம்மா.
"சைனீஸ்தான் அப்படி உடுத்துவாங்கம்மா'' மருது மவன்தேன் சமாதானம் சொல்லுவான்.
"ஆராயிருந்தா என்னங்காணும் பாக்குறதுக்கு நல்லாவாயிருக்கு'' அலுத்துக்குவா கங்கம்மா.
மூணாவது நாள் பன்னண்டு மணிவாக்குல மருது மவன் அரக்கபறக்க ஓடியாந்தான். ஒரு கடையில சாப்பாடு வாங்குறதுக்காக வந்திருக்கிறவரு அவுரு மாதிரி இருக்குன்னு போனு வந்ததுன்னான். அவ்ளோதான் போட்டது போட்டபடி வண்டி புடிச்சி அந்த எடத்துக்கு ஓடுனாக. 
அட, ஆமா அவனேதேன்.
"என்ற ராசா'' ன்னு அவனப் புடிச்சிக்கிட்டா கங்கம்மா. 
அத்தோட அவன் "ஆத்தா' ன்னு கதறிக்கிட்டு கட்டிப்புடிச்சி அழுதான். அப்புறந்தேன் பக்கத்துலயிருந்த வர பாத்தான். அப்பான்னு அவரு கையப்புடிச்சிக்கிட்டு கலங்கிட்டான். தங்கவேலுவுக்கு ஒண்ணும் புரியல. மவன்காரன் தன்ன அப்பான்னு கூப்புட்டு எம்புட்டுக்காலம் ஆவுதுன்னு ரோசன பண்ணாரு.
"என்ன மன்னிச்சிக்கோங்க, வேல கஸ்டமா இருந்திச்சி. அதான் செய்ய பயந்துகிட்டு ஓடிட்டேன். அப்புறம் என்ன பண்றதுன்னும் தெரியல. எங்கியும் போகவும் வழியில்லே. போலீசு புடிச்சுக்குமேன்னு பயந்து பயந்து ஒளிஞ்சிக்கிட்டிருந்தேன்''
"நீங்க ஏதும் தப்பு செய்யலையே, அப்புறம் ஏன் பயப்படுறீங்க?'' கேட்டான் மருது மவன்.
"இந்த மாதிரி ஓடிட்டா ஜெயில்லப் போட்டு, பெரம்பால அடிப்பாங்களாமே''
"அதெல்லாம் தப்பு செஞ்சாதான், உங்கள ஒண்ணும் பண்ணமாட்டாங்க''ன்னு தெகிரியம் கொடுத்தான் மருது மவன். நேரா அவன கம்பெனிக்கு கூட்டிக்கிட்டுப் போனா, அங்க போனதோட அவங்ககிட்ட அங்கேயே ஒழுங்கா வேல செய்யறேன்னு சொன்னான். 
"நீதானே வேலையிலேருந்து போயிட்டேன்னு கேட்டாக. அது தெரியாம செஞ்சிட்டேன், இனி அப்பிடில்லாம் செய்யமாட்டேன் மன்னிச்சிடுங்க''ன்னு கால்ல வுளுவாக் கொறையா கேட்டுக்கிட்டான். மொதத்தடவையா இருக்கிறதால மன்னிக்கிறோமுன்னு சொல்லி ஏத்துக்கிட்டாங்க மொதலாளி.
புருஷன் பொஞ்சாதிக்கு ஏதும் வெளங்கல. மருது மவந்தேன் வெசயத்த சொன்னான். " " " நெசமாவா ராசா''ன்னா கங்கம்மா. அவங்கய்யன் மூஞ்சிய பாக்கணுமே. சந்தோசம்னா சந்தோசம் அம்புட்டு சந்தோசம்.
"ஆமா, இந்த ஒரு மாசமா இருக்க எடம், சாப்பாடு எல்லாத்துக்கும் அப்பிடியொரு கஷ்டப்பட்டுட்டேன். நான் ஒழுங்கா ஒளைச்சிருந்தா எனக்கு இப்பிடியொரு நெலம வந்திருக்காதுல்ல''
தங்கவேலுக்கு மனசு குளுந்து போவ, கங்கம்மாவப்பத்தி கேக்கணுமா? என்ற மவனுக்கு கண்ணுப்பட்டுப்போகுமேன்னு சொல்லி சுத்திப்போட மண்ண பாக்குறா, எங்கிட்டும் மண்ணையே காங்கல.
பெறவு என்ன சிங்கப்பூர சுத்திக் காமிச்சாக. நேந்துக்கிட்டேன்னு சொல்லி தைப்பூசத்தன்னைக்கி அவ முடி குடுத்தது மட்டுமில்லாம, அந்த மனுசனையும் குடுக்க வச்சிட்டால்ல. பாலுகொடம், காவடி, அலகு குத்துறதுன்னு ஒண்ணையும் உடலையே கங்கம்மா. இருக்காதா பின்னே. அவ இத்தன வருஷம் கும்புட்ட சாமியில இந்த சிங்கப்பூரு சாமிதான கண்ண தொறந்து பாத்துச்சி.
சிங்கப்பூரு மண்ணோட பெருமையதான் கங்கம்மா வாய் ஓயாம பேசிக்கிட்டிருக்கா." ரயிலு வண்டியாயிருந்தா என்ன? பஸ்ஸô இருந்தா என்ன? அந்நிய சனங்களா இருந்தாலும் நம்ம பாத்ததோட ஒக்காந்திருக்குறவக எழுந்தி குந்த எடம் குடுக்குதுகளே. இதுவே நம்மூருன்னா நடக்குமா? சேப்பா ஒருபுள்ள வந்தா அதுகளுக்குதானே எடம் குடுக்குதுக எளவட்டப் பயலுக''
"எம்மாங் கூட்டமாயிருந்தா என்ன? எங்கியாயிருந்தா என்ன? கீவரிசையில நின்னுதான போகுதுக. நா முந்தி நீ முந்திங்கிற பளக்கமேயில்லியே''
"இம்மா ஒசர செருப்பப் போட்டுக்கிட்டு எப்பிடி நடக்குதுவோ'' ஆன்னு அவ பாத்துக்கிட்டு நிக்கையிலே வூட்டுக்காரரும் ரெண்டு பயலுவளும் அம்புட்டுத் தூரம் போயிருப்பாக. இப்பல்லாம் நவுர்ற படிக்கட்டப் பாத்து பயப்படறதில்லையே அவ.
"ஏனுங்க ஊருக்குப் போறச்சே இந்த பேசுபுக்கோ பேசாதபுக்கோ அத்த ஒண்ணு வாங்கிட்டுப் போலாமுங்களா?''
"அதெதுக்கு ஒனக்கு?''
"சுத்த வெவரெங் கெட்ட மனுசனா இருக்கீய? நம்மூட்ட வெடக்கோளி ஒண்ணு மூணுமாசம் முந்தி காணாவ போச்சில்லே...'' 


மணிமாலா மதியழகன்

 

http://www.dinamani.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெடக்கோழி காணாமல் போனதையும் பேஸ்புக்கில போட்டு கண்டு பிடிக்க போறாவாம் கங்கம்மா..... tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.