யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
கிருபன்

நில மீட்புக்கான மக்கள் போராட்டங்கள் - அடைவுகளும் நிலைமைகளும்

Recommended Posts

நில மீட்புக்கான மக்கள் போராட்டங்கள் - அடைவுகளும் நிலைமைகளும்

கிரிசாந்த்

FB_IMG_1528633745809.jpg

 

 

முதலில், ஒரு வெற்றி பெற்ற போராட்டத்தின் கதையிலிருந்து தொடங்குவோம், ஒரு ஜனநாயகப் போராட்டத்தின் எல்லா வசீகரங்களுடனும் நிகழ்ந்து முடிந்திருக்கின்ற "பிலக்குடியிருப்பு" மக்களின் போராட்டத்தை உங்களில் பெரும்பாலோனோர் அறிந்திருப்பீர்கள். ஒரு மாசி மாத ஆரம்பத்தில் தொடங்கி பங்குனி பிறப்பதற்குள், அரசை அழுத்தத்திற்குள்ளாக்கியும், வெகுசனத்தையும் குறிப்பாக இளைஞர்களையும் தெற்கு மக்களையும்  கூட தனது போராட்டத்தின் நியாயத்தினை உணர்வுபூர்வமாகவும் தர்க்க பூர்வமாகவும் நிறுவி தங்களது காணிகளுக்குள் உள் நுழைந்த மக்களின் கதை அது. பனி கொட்டும் மாசியின் இருளிலும் கொதிக்கும் அதன் பகலில் தார் வீதியிலும் அந்த மக்கள் தங்களின் மொத்த பலத்தையும் திரட்டி ஒன்றுபட்டு நின்றார்கள். அவர்களின் பலம் என்பது அவர்கள் தான், தான் மட்டுமில்லாது தன் மொத்தக் குடும்பத்தையும் முன்னிறுத்தி அது தான் தங்கள் வாழ்வின் அறுதிப் போர் போல  மூண்டிருந்தனர். அவர்கள் கேள்விகளுக்கு எடையிருந்தது. அவர்கள் குரலில் சுரத்திருந்தது. அது அரசியல்வாதிகள் நிலத்தை விடுவியுங்கள் என்று அரசிடம் கேட்கும் இறைஞ்சும் மொழியல்ல. தன்னுடைய நியாயத்தை தன் அடிவயிற்றிலிருந்து கேட்கும் சாமானியரின் மொழி. 

 

புதுக்குடியிருப்பிலிருந்து அண்ணளவாக ஏழு கிலோமீட்டர் உள்ளே போனால், பெரும் வயல்களும் ஒருபுறம் நந்திக்கடலும் அணைத்துக்கிடக்கும் நிலம் தான், பிலக்குடியிருப்பு, பிரமாண்டமான இராணுவ முகாமொன்று, அதற்கு எதிரே சிறிய பூச்சியளவு பந்தலில் ஐம்பத்து நான்கு குடும்பங்கள். ஒரு இராணுவத்தின் படைக்கெதிரே கவண் வைத்திருக்கும் கோலியாத் போல. இரவு வெளிச்சமில்லை, விறகுகளைக் குவித்து எரித்தார்கள், இராணுவம் திடீரென்று பீல்ட் பைக்கில் வந்து மோதுமாற் போல்  நிற்கும், குடிநீரை நிறுத்தும். ஆரம்ப நாட்களில், கிட்டத் தட்ட பத்து நாட்கள் இது தான் நிலைமை. பின் அந்த மக்களிற்குக் கிடைத்த ஆதரவின் பின் அனைத்தும் வழமைக்குத் திரும்பின. தினம் தோறும்  அரசியல்வாதிகள், பொது அமைப்புகள், மாணவர்கள், இளைஞர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் என்று பேரேடுப்பில் மக்கள் குவிந்தனர். தினமும் பத்திரிகைகளும் இணையமும் போராட்டத்தின் செய்தியுடன் வரும். அங்கிருக்கும் சிறுவர்களுக்கு மாலை நேரத்தில் அந்த ஊரின் இளைஞர்களும் ஆசிரியர்களும் சமூக ஆர்வலர்களும் படிப்பித்தனர். சென்ற இளைஞர்கள் அந்தச் சிறுவர்களிடமிருந்து போராடும் ஓர்மத்தை கற்றுக்கொண்டனர். உரிமை என்பது சலுகை இல்லை என்பது அவர்கள் குரலின் ஆழ லயம்.  

 

பிரதானமாக, இரவும் பகலும் ஏராளமான ஊடகவியலாளர்கள் குழுமியபடியே இருந்தனர். அதில் இரண்டு மூன்று பேர் போராட்டம் வெற்றி காணும் வரை அந்த மக்களுடனையே வாழ்ந்தனர். இரவிலும் ஊடாகவியலாளர்கள் இருப்பதால் தான் இராணுவம் சேட்டைகள் விடுவதில்லை. மக்கள் ஏதாவது செய்ய ஆரம்பித்தால் உடனே பத்துப் பன்னிரண்டு இராணுவத்தினர் வாசலுக்கு ஓடி வருவார்கள், ஊடகவியலாளர்கள் காமெராவைத் தூக்கினால், வந்த வழியே திரும்பிப் பார்க்காமல் போவார்கள். 

 

பிறகு, பல்வேறு சமரசப் பேச்சு வார்த்தைகள் நடந்தன. வாற மாதம் விடுவோம், இப்பொழுது போராட்டத்தைக் கைவிடுங்கள்  என்று யாரவது வருவார்கள். எங்களுக்கு அவசரம் ஒன்றுமில்லை. நீங்கள் வாற மாதமே விடுங்கள் நாங்கள் அதுவரை இதில் தான் இருப்போம் என்றே பதிலளிப்பார்கள். அது அவர்கள் எல்லோரும் ஏற்றுக் கொண்ட பதில், செய்து கொண்ட உறுதி. 

 

இராணுவம் மெல்ல மெல்லத் தங்கள் தூண்களை அகற்றத் தொடங்கினர். தளபாடங்களை அகற்றினர். வாசல்களைப் பிடுங்கியெறிந்தனர், அந்த நாளில் தம் நிலத்தில் கால்பதித்து கதவுகளைத் தகர்த்தெறிந்து  மக்கள் நடந்தனர். தம் கோயில் முற்றத்தில் கற்பூரம் கொளுத்தி அழுதனர். இது தான் எங்கள் வளவு இங்க தான் இன்ன மரம் நின்றது என்று காட்டிக்கொண்டு சென்றனர். அங்கு வீடுகளின் சில இடிந்த கட்டடங்களையும்  பற்றைச் செடிகளையுமே பார்த்தோம். இப்படி சுருக்கமாக இந்தக் கதையின் சுருக்கத்தை மீளவும் ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள். இனி, இந்தப் போராட்டத்தை எவை வெகுசன ஈர்ப்பாக மாற்றின. ஒரு போராட்டத்தில் கலையும் இலக்கியமும் என்ன பங்கினை ஆற்றியிருக்கிறது என்று பார்ப்போம். 

 

வெகுசன ஈர்ப்பின் காரணங்கள் மற்றும் கலையும் இலக்கியமும் 

 

* இந்தப் போராட்டம் ஆரம்பிப்பதற்கு சில நாட்கள் முதல் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போராட்டம் ஒரு வெகுசன எழுச்சியாகக் கிளர்ந்ததது. அதனைத் தொடர்ந்து, சமூகவலைத்தளங்கள் போர்க்கோலம் பூண்டன. ஒவ்வோர் படமும் ஒவ்வோர் காணொளியும் ஈழத்திலிருக்கும் இளையோரை ஒருவகையில் கிளர்ச்சியடையச் செய்தது எனலாம். தமிழ் நாட்டினை தமது கலாசார வலயமாக கொண்டியங்கும் மனம் நவீன தமிழ் இளம் மனம். ஆகவே, இங்கும் அந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்கள் பல்வேறு மாவட்டங்களிலும் ஒன்று கூடினர். இங்கிருந்து கொண்டே பீட்டாவுக்கு பாட்டா (Bata ) காட்டினர். இந்த நேரத்தில் இதற்காக குரல் கொடுப்போம் போராடுவோம் என்று சொன்ன இளைஞர்கள் மீது கடுமையான விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் எழுந்தன. அதில் வைக்கப்பட்ட பிரதான கேள்வி, "இங்கிருக்கும் எந்தப் போராட்டத்திலும் பங்கு பற்றாத, போராடாத இளைஞர்கள், தமிழ்நாட்டுக்காக ஏன் போராடுகிறார்கள்?"

இந்தக் கேள்வி ஒரு வகையில் மிகப்பொருத்தமான நேரத்தில் கேட்கப்பட்ட கேள்வி. இந்தக் கேள்வி இளைஞர்களை ஒரு வகை தார்மீக நெருக்கடிக்குள் உள்ளாக்கியது. "நாம் இனிப் போராடுவோம்" என்பதைத் தவிர அவர்களால் சொல்லக்கூடிய வேறு பதில்களெதுவும் அவர்களிடமிருக்கவில்லை. 

 

சரியாக ஜல்லிக்கட்டுப் போராட்டம் முடிந்து, சில நாட்களில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரினை மீளக் கேட்டு நீரும் அருந்தாத சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டம்  வவுனியாவில், துவங்கியது. இப்பொழுது கேள்வியெழுந்தது, "ஜல்லிக்கட்டுக்குப் போராடிய இளைஞர்கள் எங்கே?" இளைஞர்கள் தெருவுக்கு வந்தார்கள். யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் நிகழ்ந்தன. போராட்டப் பந்தலுக்கு இலங்கையின் பல திசைகளிலுமிருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக இளைஞர்கள் வரத் தொடங்கினர். போராட்டம், வெகுசனமயப்பட்டு, தங்களின் கைகளை மீறிச் செல்வதை விரும்பாத ஒருங்கிணைப்பிலிருந்த அரசியல் சத்திகள் சில போராட்டத்தைக் கைவிட்டது. இன்னும் ஒரு நாள்ப் போயிருந்தால், பெரியளவிலான வெகுசன ஈர்ப்பும், நெருக்கடி நிலையும் தோன்றியிருக்கும். ஆனால் அப்படி நிகழ முன் போராட்டம் முடிந்தது. இதை இளைஞர்கள் தோல்வியாகப் பார்த்தனர். அரசியல் சக்திகளின் இந்த சதிகளை மீறி நாம் என்ன செய்ய முடியும் என்று விட்டு நகரத் தொடங்கிய, அடுத்தடுத்த நாளில் பிலக்குடியிருப்பில் போராட்டம். இது தனக்கேயான வசீகரத்தாலும், தனக்கு முன் நிகழ்ந்த சமூக நிலவரங்களாலும் தனது வலிமையைப்  பெருக்கிக்கொண்டது.                    

 

* சமூக நிலவரம் இப்படியிருக்க, அந்தப் போராட்டம், தன்னெழுச்சியான மக்கள் போராட்டம் என்பதை விரைவிலேயே உணர்ந்து கொண்டனர் இளைஞர்களும் பொதுமக்களும். நேரடியாக அந்தப் போராட்த்திற்கு வரும் இளைஞர்களுடன் இயல்பாகவே ஒட்டிக்கொள்ளும் குழந்தைகளும் சிறுவர்களும், அவர்களின் முகங்களும் பலரையும் மறுபடியும் மறுபடியும் போராட்டப் பந்தலை நோக்கி வர வைத்தன. அங்குள்ள சிறுவர்கள் செய்த சில வெளிப்பாடுகள் சமூக வலைத்தளங்களில் பரவலான கவனத்தைப் பெற்றன. உதாரணத்திற்கு, "ஆமிக்காரனே, எயார்போசே காணியை விட்டு வெளிய போவன்ரா " என்றொரு பாடல் சிறுவர்களால் பாடப்பட்டு வைரலாகியது. பிறகு, பொழுதுபோக்கிற்கு ஓவியம் வரையக் கொடுத்த போது, "இது இராணுவத்தின் பூமி" என்று இராணுவம் எழுதிய வாசகத்தை மாற்றி நீல வானத்திற்கும் மண்ணிற்கும் நடுவே பெரிதாய் எழுந்து நிற்கும் ஒரு பலகையில் "இது இராணுவத்தின் பூமி அல்ல" என்ற வாசகத்துடன் ஒரு ஓவியத்தை பத்து வயதுச் சிறுவன் வரைந்தான். இன்னும் பலரும் தங்களது காணிகளைப் பற்றி படம் கீறினர். அவற்றை, போராட்டப் பந்தலின் முன் பகுதியில் போராட்டம் முடியும் வரை காட்சிப்படுத்தியிருந்தனர். தினமும், ஊடகவியலாளர்கள், புகைப்படவியலாளர்கள் வெளியிடும் புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களிலும், பத்திரிகைகளிலும் மிக முக்கியமான இடத்தைப் பெற்றது. அத்தோடு, இதுவொரு பெண்கள் தலைமை தாங்கிய போராட்டம். எந்த ஒரு மாற்றீடும், விட்டுக்கொடுப்புமின்றி இறுதி வரை, சோராத அந்தப் பெண்களின் தலைமைத்துவம் இன்னொரு பெரும் ஈர்ப்பாக இருந்தது.  

 

* பலரும் உள்ளூர்ப் பத்திரிகைகளிலும், சமூக வலைத்தளங்களிலும் தொடர்ந்து இந்தப் போராட்டம் பற்றி எழுதியிருந்தனர், இவை, குறித்த போராட்டம் பற்றிய இடைவிடாத உரையாடலை உருவாக்கியபடியிருந்தன. யாரும் மறப்பதற்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. பண்பாட்டு மலர்ச்சிக் கூடத்தைச் சேர்ந்தவர்கள்   "எங்கள் நிலம் எமக்கு வேண்டும், எங்கள் நிலமே எமக்கு வேண்டும்" என்ற பாடலை ஒரு பகலின் கடும் வெயில் நேரம் உரத்த குரலின் பாடிய அந்த வீடியோவும், சமூக வலைத்தளங்களில் பரவியது, போராடிக்கொண்டிருந்த மக்களுக்கும் எழுச்சியூட்டியது. 

 

பின்னர், போராட்டத்தின் இருபது நாட்களில் நிகழ்ந்த நிகழ்வுகளையும், இந்தப் போராட்டத்தின் முக்கியத்துவத்தினையும், அந்த மக்களின் ஞாபங்களை கதைகளாகத் தொகுத்தும், விதை குழுமம், " கேப்பாபுலவு, நில மீட்ப்புக்கான மக்கள் போராட்டத்தின் கதை" என்ற பிரசுரத்தை வெளியிட்டது. அது உடனடியாகவே, இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிகள் அச்சடிக்கப்பட்டு, முல்லைத்தீவில் பரவலாக மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டது. மேலும் அதன் பின்னரான நாட்களில், போராட்டத்திற்கு வரும் பொதுமக்களிடம், தங்களின் கதை என்று அந்தப் பிரசுரத்தினை போராட்டக்காரர்கள் வழங்கினர். 

 

* இந்தப் போராட்டங்களின் போது சமூக வலைத்தளங்களிலும் சரி, பிற வெளியீடுகளில் சரி, தரமான வடிவமைப்புக்கள் வெளிவந்திருந்தன, போராட்டம் பற்றிய " நோட்டீஸ்" தொடக்கம், ஆவணப்படம் வரை, தர ரீதியில் மிகக் கனதியானவை. ஸ்டீபன் சன்சிகனின் " 27 " என்ற ஆவணப்படம், இந்தப் போராட்டத்தின் சில பகுதிகளையும், அதன் காட்சிகளையும், சாட்சிகளையும் அழகியல் பூர்வமாக  ஆவணப்படுத்தியிருக்கிறது.     

 

இப்படி, வெகுசன அலையை ஏற்படுத்த கலை, இலக்கியம் சார்ந்தவர்களும், அந்த மக்களும், நுட்பமாக இந்தப் போராட்டத்தை, பதிவு செய்து வெளிப்படுத்தியிருந்தனர். 

 

நிற்க. 

 

இப்படி, வெகுசன அலை ஒன்றும், போராட்ட வெற்றி ஒன்றும் கிடைத்து ஒருவருடம் கடந்து விட்ட நிலையில் இன்று நாம் மீண்டும், காணி விவகாரம் தொடர்பில் பேசிக்கொண்டிருக்கிறோம். கேப்பாபுலவு பகுதியிலிருக்கும், சிறு பரப்புத் தான் பிலக் குடியிருப்பு. மிகுதி கேப்பாபுலவு மக்கள் இன்றும் பல்வேறு இழு பறி நிலைகளுடன் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் பல்வேறு இடங்களில் காணி விடுவிப்புக் கோரி மக்கள் அவ்வப்போது போராடுகிறார்கள். அண்மையில் இரணைதீவு மக்கள் பல நாள் போராட்டத்தின் பின் தமது தீவுக்குத் திரும்பியிருக்கிறார்கள். இன்னும் உள்ளூர் அகதி முகாம்களில் தங்கியிருக்கும் மக்கள் தமது நிலங்களுக்குத் திரும்ப முடியாமல், தமது தாய் தந்தையரின் பூர்வீக நிலத்தைப் பார்க்காமலே ஒரு தலைமுறை புதிதாக வந்துவிட்டது. இப்படி விடுவிக்கப்படாத காணிகள் பலதரப்பட்ட  மக்களிடமும் உண்டு.

 

இந்தப் பகுதிகளை அல்லது மேலே உள்ள போராட்டம் பற்றிய சித்திரத்தைப் பார்த்தால், உணர்வு பூர்வமான (Sentimental ) போராட்டங்கள் மட்டுமே வெகுசன ஈர்ப்பை ஏற்படுத்தும் என்பது போன்ற தோற்றம் வரலாம். துரதிருஷ்ட வசமாக அது தான் உண்மை. நாம் ஒரு அரசியல் நீக்கம் செய்யப்பட்ட அல்லது உணர்ச்சி அரசியலை மட்டுமே செய்துகொண்டிருக்கும் சமூகமாகவே இன்னமும் இருந்து கொண்டிருக்கிறோம். அமைப்பு ரீதியான செயற்பாடுகள், இளைஞர் இயக்கங்கள், உயிர்ப்பு நிலை அறிவுஜீவிகள் போன்ற தரப்புகள், கருத்தியலுக்கும் நடைமுறைக்குமான அறிவுழைப்புடன் வலுவாக உருவாகாத நிலையில், உணர்ச்சியை நம்பியே இது போன்ற போராட்டங்கள் நகர்கின்றன. அதுவே இயங்கு விசையாக இருக்கிறது. ஆகவே தான், உணர்ச்சிவயப்படுத்தக் கூடிய புள்ளிகள் இல்லாத போராட்டங்கள், இன்னமும் வெகுசன அலையை உருவாக்க முடியாத போராட்டங்களாக நீண்டுகொண்டிருக்கின்றன. நாம் கலை, இலக்கிய, சமூக செயல்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்களாக உங்களை நீங்கள் கருதினால், புலம்பெயர் நாடுகளிலிருந்து, நிதி சேர்ப்பது மட்டுமே பிரதான வேலையாக இருக்க முடியாது. எல்லோரும் கொடுப்பதையே கொடுப்பதற்கு இலக்கியமும் கலையும் எதற்கு. இந்தத் துறைகளில் ஈடுபடுபவர்கள், இந்தப் போராட்டங்களில் அக்கறையுள்ளவர்கள் உண்மையில் கவனத்தைக் குவிக்க வேண்டியது பிரதானமாக ,அறிவுழைப்பில். 

 

* இந்த இடத்தில் நாம் கவனிக்கவேண்டிய புள்ளி, தன்னெழுச்சியான போராட்டங்கள் மீது பெருமளவு இளம் தலைமுறை ஒரு விருப்பைக் கொண்டுள்ளது. இது ஒரு வகையில் தலைமைகள் மீதும் ஒருங்கிணைக்கும் குழுக்கள் மீதும் கொண்ட அதிருப்தி அல்லது நம்பிக்கையின்மை என்று சொல்லலாம். அதே நேரம், இது ஒரு தொடரும் உழைப்பைக் கோரும் நிலவரமும் அல்ல. ஆகவே இலகுவான எதிர்ப்பு, இலகுவான ஒன்றுகூடல், கலைவு, பின் வேறு ஒரு நேரம் ஒரு எரியும் பிரச்சினை சமூக வலைத்தளங்களில் பரவினால் அதன் பின் அதற்கென ஒரு தன்னெழுச்சி. இதன் பின்னாலுள்ள உளவியல் பிரச்சினையையும் அரசியல்மயப்படுத்தலுக்கு எதிரான போக்கையும் நாம் கவனத்திலெடுக்க வேண்டும். அரசியல்மயப்படுத்தல் என்று நான் குறிப்பிடுவது, இங்கிருக்கும் ஏராளம் பொதுப்பினச்சினைகளை, அரசியல் உரிமைகளை, வரலாற்றை தொகுத்து விளங்கி அதனை நடைமுறையுடனும் கருத்தியலுடனும் இணைத்து செயலாற்றக் கூடிய அமைப்பு ரீதியான செயல்பாடுகளைத் தான். ஒன்றிணைந்த  அடித்தளங்களைக் கொண்ட, உரையாடலைக் கொண்ட, அறிவார்ந்த போராட்ட வெளிப்பாடுகளை நோக்கி நகரும் காலமிது. செயலும் அறிவும் இணைவதை எதிர்க்கும் பெரும்பான்மை மனநிலை நம்மிடமுண்டு. குதர்க்கத்தை அறிவென்று நம்பும் தரப்புகளும் உண்டு, பிரக்ஞ்சையற்ற கலகக்காரர்களுக்கும் பஞ்சமில்லை, இதே போல் பல தொகுப்பான குழுக்கள் உள்ள சமூகப் பரப்பில் அறிவியக்கம் ஒன்றோ அல்லது அறிவியக்கங்களை உரையாடி வலுப்படுத்தி செயலுக்குப் போகும் நம்பிக்கைகளோ இன்னும் பெரிதளவில் வளரவில்லை. அப்படியொரு நிலையில் தான், போராட்டங்களின் தன்மையும் சமூகத்தின் அக இயக்கமும் மாறும். 

 

இங்கு உரையாடல் என்று குறிப்பிடும் பொழுது உரையாடலின் எல்லைகள் தொடர்பிலும் அதன் தீவிரம் தொடர்பிலும் அதிக கவனத்தை செலுத்த வேண்டும். வீண் விவாதங்களும், சரியான தகவல்களை இனங்கண்டு அவற்றை வரலாற்றோடு பொருத்தி நகரும் தன்மையையும் தான் சொல்கிறேன். உரையாடல்களுக்கென்று மதிப்பிருக்கிறது, பெருமளவில் எஞ்சுவது அகங்கார மோதல்கள்,  

 

சகட்டு மேனிக்கு வரும் வதந்திகளையும் தகவல்களின் குவியல்களையும் நம்பி வம்பிழுத்துக் கொண்டு நகராமல், ஒவ்வொரு பிரச்சினையையும் அணுகுவதற்கான பல்வேறு ஆக்கபூர்வமான உரையாடல்களை முன்நகர்த்த முடியும். புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம், பின்போர்க்காலத்தில்  இன்னமும் தனது பாத்திரத்தை கட்டியெழுப்பவில்லை. அதன் உரையாடல்கள் இங்குள்ள நிலமையைப் போன்றே இருப்பது தான் உண்மை. ஒவ்வொருவரும் தங்களின் கருத்துக்களை உருவாக்கிக்கொள்ளும் போது ஒவ்வொரு பிரச்சினை தொடர்பிலும் ஆழமான கரிசனையுடனும், பிரச்சினைகளை தீர்க்கும் நோக்குடனும் பொறுமையுடனும் உள்வாங்கிக் கொள்ளவது, பயனளிக்கக் கூடியது. ஆனால் பெரும்பாலும் நிலைமை தலைகீழ்தான்.      

 

என்னுடைய அவதானங்களின் அடிப்படையிலேயே இவற்றை முன்வைக்கிறேன். இதன் குறைபாடுகளை நானும் அறிவேன். ஆனால் இது என் தரப்பு மட்டுமே. பலரும் தமது அனுபவங்களையும் அவதானங்களையும் முன்வைத்தே இந்த உரையாடலை வளர்க்க முடியும். காணிப் பிரச்சினையை ஒரு உதாரணமாகக் கொண்டு, இங்கிருக்கும் போராட்டங்களின் விசையையும், அது எந்தத் திசையை நோக்கி நகர்ந்தால், ஈழத்தின் சமகாலப் பிரச்சினைகளையும் நீண்டகாலப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியும் என்பதற்கான எனது கருத்துக்களையும் தொகுத்திருக்கிறேன்.      

 

காணிப் பிரச்சினை என்று வரும் போது ஏற்கனவே கையகப்படுத்தியிருக்கிற காணிகளை விடுவிக்கும் ஒரு போராட்டமாக, மக்கள் மீளக் குடியேறுவதற்கான  ஒரு போராட்டமாக, மட்டும் நாம் சுருக்கி விட முடியாது, காணிப் போராட்டம், ஒரு வகையில் இராணுவமயமாக்கலின் பிரதேச எல்லைகளுடன் தொடர்புபட்டது. காணி விடுவிக்க விடுவிக்க இராணுவத்தின் எல்லை சுருங்கும். இராணுவம் நகர்ந்து நகர்ந்து செல்லும். 

 

மேலும், பவுத்தமயமாக்கலும் நிலத்துடன் தொடர்புபட்டது. நிலத்திலிருக்கும் வரலாற்றுச் சுவடுகளை இராணுவம் நீக்கியபடி, தன்னுடைய பூமியாக இதனை மாற்றுகிறது. இராணுவம் வெறும் கூலியாள். அரசே முதலாளி. 

 

காணிப் பிரச்சினை என்பதை தனியே மக்களின் தனிப்பட்ட பிரச்சினையாக நாம் பார்க்க முடியாது. ஒட்டு மொத்த கடந்தகாலப் போராட்டம் என்பது நிலத்தின் மீதான போராட்டமே. நிலம் என்பது போராட்டத்தின் உடல். மக்கள் அதன் ஆன்மா.    

 

(49 வது இலக்கியசந்திப்பில் வாசிக்கப்பட்ட கட்டுரை.)

 

http://kirisanthworks.blogspot.com/2018/06/blog-post.html?m=1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


 • Topics

 • Posts

  • கோஷானின் கருத்தோடு ஒத்துப்போகின்றேன். ஏற்கனவே, பொலிஸ்வரை போயும் பெண்பிள்ளை காதலில் தீவிரமாக இருப்பதால் அவர்கள் சேர்ந்து வாழ எதைச் செய்யமுடியுமோ அதைத்தான் இருபகுதி பெற்றோரும் செய்வது நல்லது. சில விடயங்களில் தெளிவு இல்லை. பெண்ணுக்கு 18 ஆகவில்லை என்றால் புரியாத வயதுப்பெண்ணை கடத்திக்கொண்டு போனதாக செயற்பட சட்டம் இல்லையா? பொலிஸ் ஒன்றும் செய்யாமல் விட்டது அப்படி எதுவும் இல்லை என்றுதான் சொல்கின்றது. பையனின் பெற்றோர், உறவினர்கள் இந்த காதல் பிரச்சினையை எவ்வாறு பார்க்கின்றார்கள் என்றும் தெரியவில்லை.   மேலும், இளவயதுத் திருமணம்  ஒரு பொறுப்பை இருவருக்கும் கொடுக்குமானால் வாழ்வில் நன்றாக வருவார்கள். ஆனால் பொறுப்பில்லாமல் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வில்லாமல் போகும்போது, குடும்பம் என்பதன் சுமை பாரமாக உணரும்போது, அதற்கேற்ப பொருளாதாரம் இல்லாதபோது வாழ்வு கசக்கும். இதை என் கண்ணால் ஊரிலும் புலம்பெயர்ந்த நாட்டிலும் பார்த்திருக்கின்றேன்.
  • அரசியல் கைதிகளை ஒருபோதும் விடுவிக்க முடியாது – ஜனாதிபதி உறுதி நாட்டில் மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ள நிலையில் தமிழ் அரசியல் கைதிகளை எந்தக் காரணம் கொண்டும் விடுவிக்க முடியாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அத்தோடு, ஞானசார தேரரையும் தமிழ் அரசியல் கைதிகளையும் ஒப்பிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டுக்காகக் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு வெலிக்கடைச் சிறைச்சாலையிலிருந்த பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ளார். ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்ய முடியுமாயின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்களை ஏன் விடுதலை செய்யமுடியாது? என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, சபையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஞானசார தேரர் பயங்கரவாதி அல்லர். அவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவரும் அல்லர். நீதிமன்றத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டே அவர் மீது முன்வைக்கப்பட்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தது. நான் எனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அவரைப் பொதுமன்னிப்பில் விடுதலை செய்ததில் தவறேதும் இல்லை. ஆனால், சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மற்றும் தண்டனை அனுபவித்துவரும் அரசியல் கைதிகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்கள். அவர்களுக்குத் தற்போதைய நிலைமையில் பொதுமன்னிப்பு வழங்குவது கடினம். ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பளித்து அவரை விடுவிக்குமாறு பௌத்த மத பீடங்கள், சிவில் அமைப்புகள் உட்பட பல்வேறு தரப்புக்களும் என்னிடம் கோரி வந்தன. அதற்கமைய அவருக்கு நான் பொதுமன்னிப்பு வழங்கினேன். ஞானசார தேரருடன் அரசியல் கைதிகளை ஒப்பிட வேண்டாம். இவர் செய்த குற்றம் வேறு. அவர்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றம் வேறு. இரண்டையும் ஒப்பிட வேண்டாம். தற்போது 200 இற்கு உட்பட்ட அரசியல் கைதிகள்தான் நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் உள்ளனர். ஏனையோர் படிப்படியாக விடுவிக்கப்பட்டுள்ளனர். சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளில் குற்றவாளிகளும் உள்ளனர் சந்தேகநபர்களும் உள்ளனர். குற்றவாளிகள் தண்டனையை அனுபவிக்கின்றார்கள். சந்தேகநபர்கள் நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இவர்கள் அனைவரினதும் விடுதலை விவகாரம் தொடர்பில் நாம் உயர்மட்ட பேச்சுக்களைத் தொடர்ந்தும் நடத்தி வருகின்றோம். அவர்களை வைத்து எவரும் அரசியல் செய்ய வேண்டாம்” என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். http://athavannews.com/அரசியல்-கைதிகளை-ஒருபோதும/
  • இளவரசி டயானாவின் மரணம் வாகன விபத்தால் ஏற்பட்டதல்ல? இளவரசி டயானாவின் மரணம் வாகன விபத்தால் ஏற்பட்டதல்ல என வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1997ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி பரிஸில் அமைந்துள்ள பாண்ட் டி லா அல்மா சுரங்கத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் இளவரசி டயானா (36), அவரது காதலர் டோட்டி ஃபேயட் (42) மற்றும் அவர்களது சாரதி ஹென்றி பால் (41) ஆகியோர் உயிரிழந்தனர். விபத்து இடம்பெற்ற பகுதியில் மர்மமான கார் ஒன்று காணப்பட்டதாகவும், பின்னர் அது மாயமானதாகவும் பரிஸ் நகர பொலிஸார் அப்போது குறிப்பிட்டிருந்தனர். இந்தநிலையில் இளவரசி டயானாவின் மரணம் வாகன விபத்தால் ஏற்பட்டதல்ல என விபத்தை நேரில் பார்த்த ராபின் மற்றும் ஜாக் ஃபயர்ஸ்டோன் தம்பதியினர் குறிப்பிட்டுள்ளனர். சம்பவத்தின் சில நிமிடங்கள் பின்னரே தங்கள் காரில் ஹொட்டலுக்கு சுரங்கம் வழியாக சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு காணப்பட்ட மர்ம கார் தொடர்பாக முறைப்பாடு செய்யச் சென்ற ராபினிடம், போதுமான ஆதாரங்கள் தங்களிடம் தற்போது சிக்கியுள்ளதாகவும், அந்த கார் தொடர்பாக கவலை கொள்ள தேவையில்லை என அப்போது பரிஸ் நகர பொலிஸார் குறிப்பிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உலக அளவில் பிரபலமான ஒரு பெண்மணி விபத்தில் இறந்துள்ளார், ஆனால் பொலிஸார் சாட்சியங்களை விசாரிக்க மறுத்திருப்பது தங்களுக்கு அப்போது வேடிக்கையாக இருந்தது எனவும் ராபின் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், லண்டனில் 2007ஆம் ஆண்டு, இளவரசி டயானா மரணம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதும் ராபின் தம்பதிகளை அழைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. ஆனால் சில மாதங்களுக்கு பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க, டயானாவுடன் கொல்லப்பட்ட அவரது காதலனின் தந்தை முகமது ஃபெய்ட் தொடர்பு கொண்டதாகவும் ராபின் தெரிவித்துள்ளார். http://athavannews.com/இளவரசி-டயானாவின்-மரணம்-வ/
  • மயானத்தில்.... புத்தர் வந்து இருக்க சம்மதிப்பாரா.... 
  • அறுவை சிகிச்சை  மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட பெண்களுக்கு,  அவர்களுக்கு தெரியாமலேயே...  கருத்தடை சத்திர சிகிச்சையை, செய்திருக்கலாம் என நினைக்கின்றேன்.