Jump to content

மூலிகையே மருந்து!


Recommended Posts

மூலிகையே மருந்து!

01: பாடாத நாவும் பாடும்!

 

 
Adathoda%20leaves
 
 
 

‘ஆடாதோடையைக் கண்டால் பாடாத நாவும் பாடுமே’ என்ற மருத்துவப் பழமொழி, ஆடாதோடையின் மூலம் குரல் ஒலி கரகரப்பின்றி இனிமையாகும் என்பதை அழுத்தமாகச் சொல்கிறது. கூடவே குரல்வளைப் பகுதியில் மையமிடும் நுண்கிருமிகளை அழிக்கும் என்ற அறிவியல் உண்மையை மறைமுகமாக எடுத்துரைக்கிறது. சளி, இருமல் போன்ற கபம் சார்ந்த நோய்களுக்கு ஆடாதோடை முக்கியமான எதிரி. ‘இருமல் போக்கும் ஆடாதோடை’ என்ற வாய்மொழியின் நீட்சியாக, கிராமங்களில் இதன் பயன்பாடு இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

 

கைப்பு சுவையைக் கொண்டிருந்தாலும் இதனால் கிடைக்கும் பயன்களோ மிகவும் இனிமையானவை. கப நோய்களைப் போக்குவதற்கு இயற்கை வழங்கிய கசப்பான பிரசாதமாக ஆடாதோடையைப் பார்க்கலாம்.

பெயர்க் காரணம்: இவற்றின் இலைகளை ஆடுகள் சாப்பிடாது என்பதால் உருவான ‘ஆடு தொடா’ என்ற காரணப் பெயர், ஆடாதோடையாக மருவியிருக்கலாம். ‘Adhatoda vasica’ என்பது தாவரவியல் பெயர்.

அடையாளம்: பசுமைமாறா புதர்ச்செடி வகையான ஆடாதோடையை, வேலியோரங்களில் காண முடியும். கரும்பைப் போலவே ஆடாதோடையும் முக்கியமான வேலிப் பயிராக இருக்கிறது. மாவிலை, நுணாவிலையைப் போன்று ஈட்டி வடிவத்தில் நீண்ட பெரிய இலைகளோடு செழுமையாய் வளர்ந்திருக்கும். வெள்ளை நிறப் பூக்கள் இதன் அடையாளம்.

அலோபதியிலும்: வாசிசின் (Vasicine), வாசிசினால் (Vasicinol), டானின்ஸ் (Tannins), சப்போனின்ஸ் (Saponins) போன்றவை ஆடாதோடையில் இருக்கும் வேதிப்பொருட்கள். நவீன மருத்துவத்தில் சளி, இருமலைக் கட்டுப்படுத்த வழங்கப்படும் சிரப்களில் உள்ள மூலப்பொருள் ‘புரோம்ஹெக்சின்’ (Bromhexine). கோழையகற்றி செய்கையுடைய இது, எதிலிருந்து பிரிதெடுக்கப்படுகிறது தெரியுமா? ஆடாதோடை இலைகளில் மறைந்திருக்கும் ‘வாசிசின்’ எனும் வேதிப்பொருளிலிருந்துதான்! காசநோய் சார்ந்த மருத்துவ ஆய்வில், ஆடாதோடையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட வேதிப்பொருட்கள் சிறப்பாக வேலை செய்வதாகத் தெரியவந்துள்ளது.

Adathoda%20tree
 

மருந்தாக: கசப்புத் தன்மை மிகுந்திருப்பதால் ஆடாதோடை இலைகளை மணப்பாகு, குடிநீர் போன்ற வடிவங்களில் எடுத்துக்கொள்ளலாம். சித்த மருத்துவத்தில் காய்ச்சல் நோய்களுக்காகச் செய்யப்படும் குடிநீர் வகைகளில் ஆடாதோடை தவறாமல் சேர்க்கப்படுகிறது. விஷ முறிவு மருந்துகளிலும் இதன் பங்கு உள்ளது.

வீட்டு மருத்துவம்: ஆடாதோடை இலைகளில் இருக்கும் ‘வாசிசின்’ (Vasicine) எனும் வேதிப்பொருளுக்கு, நுரையீரல் பாதையை விரிவடையச் செய்யும் தன்மை உண்டு. நறுக்கிய ஆடாதோடை இலைகள் இரண்டு, மிளகுத் தூள் ஐந்து சிட்டிகை, கடுக்காய்த் தூள் ஐந்து சிட்டிகை ஆகியவற்றை நீரிலிட்டு நன்றாகக் கொதிக்க வைத்து குடிநீராகப் பயன்படுத்தினால், ஆஸ்துமா பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி பலன் கிடைக்கும். குளிர் காலத்தில் நோய்த் தடுப்பு உபாயமாகவும் இதைப் பயன்படுத்தலாம். ஆடாதோடை, அதிமதுரம், சீந்தில், ஏலம், மிளகு சேர்ந்த கலவையைத் தண்ணீரிலிட்டு நன்றாகக் காய்ச்சிப் பருகினால் மூக்கில் நீர்வடிதல், தலைபாரம், சளி, வறட்டு இருமல் போன்றவை குணமாகும்.

வளர்ப்பும் பயன்பாடும்: ஆடாதோடையின் சிறு தண்டுகளை மண்ணில் சரிவாகப் புதைத்து, பசுஞ்சாணத்தை முனையில் வைத்துத் தொடர்ந்து நீர் ஊற்றினாலே பெருஞ்செடியாக விரைவில் வளர்ந்துவிடும். செடியிலிருந்து நேரடியாக இலைகளைப் பறித்துப் பயன்படுத்தலாம். இல்லையெனில் இலைகளை உலரவைத்து, பொடித்து வைத்துக்கொண்டு அவசியம் ஏற்படும்போது பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஆடாதோடை கபநோய்களைத் தடுத்து, குரலுக்கு வலிமையைக் கொடுக்கும். ‘கர கர’ இருமலைத் தடுத்து, ‘கணீர்’ குரல் வளத்தைக் கொடுக்கும் ஆடாதோடை, பசுமை குன்றாத ‘இயற்கையின் பாடகி!’

கட்டுரையாளர்,

அரசு சித்த மருத்துவர்

தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com

டாக்டர் வி.விக்ரம் குமார், வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் அரசு சித்த மருத்துவர். ‘நலம் வாழ’ இணைப்பிதழில் ஏற்கெனவே அவர் எழுதிய கட்டுரைகள் ‘தி இந்து’ வெளியீடாக ‘மரபு மருத்துவம்’ என்ற நூலாக வெளியாகி வரவேற்பைப் பெற்றது. சித்த மருத்துவம் மட்டுமில்லாமல் மரபுப் பழக்கவழக்கங்கள், பாரம்பரிய மருத்துவ முறைகளையும் இணைத்து எழுதுவது

இவரது சிறப்பு.

http://tamil.thehindu.com/general/health/article23535581.ece

Link to comment
Share on other sites

மூலிகையே மருந்து 02: நோய்களைப் பதறவைக்கும் ‘குப்பை!

 

 

21chnvkkuppai3jpg
21chnvkkuppai1jpg
21chnvkkuppai2jpg
21chnvkkuppai3jpg
21chnvkkuppai1jpg

குப்பை என்றாலே யாருக்கும் பயன்படாது என்பதை மையமாக வைத்து, ‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலே’, ‘நீ செல்லாத காசு. உன்னைக் குப்பையிலதான் போடணும்’ என்பன போன்ற சொலவடைகள் நமக்குப் பரிச்சயமானவை. அந்த வகையில் அதிகம் கண்டுக்கொள்ளப்படாத ‘குப்பைமேனி’ எனும் தாவரம், பல்வேறு நோய்களை விரட்டும் வல்லமை படைத்தது.

 

மழைக் காலத்தில் சர்வ சாதாரணமாக குப்பைமேனியைப் பார்க்க முடியும். பல மருத்துவக் குணங்கள் கொண்ட குப்பைமேனி, அனைத்து இடங்களிலும் சாதாரணமாக வளரக்கூடியது! இதைக் கீரையாகச் சமைத்துச் சாப்பிடும் வழக்கம் ஆப்பிரிக்க நாடுகளில் உண்டு.

 

பெயர்க் காரணம்:

குப்பைமேனியின் தாவரவியல் பெயர் Acalypha indica. குப்பைமேனி Euphorbiaceae குடும்பத்தைச் சார்ந்தது. மேனியில் உண்டாகும் நோய்களை விரட்டுவதாலேயே, ‘மேனி’ என்ற பெயரும் உண்டு!

அது மட்டுமல்லாமல் அரிமஞ்சரி, பூனைவணங்கி, குப்பி, மார்ஜலமோகினி என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியா மட்டுமன்றி பெரும்பாலான தென்கிழக்கு நாடுகளின் பாரம்பரிய மருத்துவத்திலும் குப்பைமேனி மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. ‘தந்தமூலப்பிணிதீத் தந்திடுபுண்… குன்மம்… வாதம்… தினவு சுவாசம்…’ என நீளும் சித்த மருத்துவப் பாடல், பல்நோய்கள், மூலம், வாத நோய்கள், கப நோய்கள் போன்றவைற்றுக்கு குப்பைமேனி எப்படிப் பயன்படுகிறது என்பதைக் குறித்து விளக்குகிறது.

 

மருந்தாக:

Acalyphine, Clitorin, Acalyphamide, Aurantiamide, Succinimide போன்ற வேதிப்பொருட்கள் குப்பைமேனியின் மருத்துவக் குணங்களுக்குக் காரணமாகின்றன.

குப்பைமேனி இலைச் சாறு, ஆடுதீண்டாப்பாளை இலைச்சாறு, நல்லெண்ணெய் ஆகியவற்றைக்கொண்டு தயாரிக்கப்படும் எண்ணெயை, தலைக்குத் தேய்த்துக் குளித்துவர ‘சைனஸைடிஸ்’ பிரச்சினைகள் குறையும். Bacillus subtilis, Escherichia coli, Pseudomonas aeruginosa போன்ற பாக்டீரியா வகைகளை எதிர்த்து, குப்பைமேனியின் உட்பொருட்கள் செயல்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதன் இலைச் சாறு 200 மி.லி.யோடு, 100 மி.லி. தேங்காய் எண்ணெய் சேர்த்து, நீர் வற்றும்வரை கொதிக்க வைத்து, கண்ணுக்குத் தெரியாத பூச்சிகளால் உடலில் ஏற்படும் அரிப்பு, தடிப்புகளுக்கு (Urticaria) தடவலாம். மூட்டு வலிகளுக்கும் துயரடக்கி செய்கையுடைய இந்த எண்ணெய்யைப் பூசி ஒத்தடம் கொடுக்கலாம்.

 

வீட்டு மருத்துவம்:

விரல் இடுக்குகளில் ஏற்படும் சொறி, சிரங்கு, தொடை இடுக்குகளில் ஏற்படும் படர்தாமரை போன்றவற்றுக்கு குப்பைமேனி இலையை அரைத்துப் போட விரைவில் குணமாகும்.

கோழையை இளக்கி வெளியேற்றும் செய்கைகொண்ட குப்பைமேனி இலைகளைக் காயவைத்துப் பொடி செய்துகொண்டு, ஒரு கிராம் அளவு வெந்நீரில் கலந்து கொடுக்க இருமல் குணமாகும். இலையை அரைத்து நீரேற்றத்தால் ஏற்பட்ட தலைபாரத்துக்கு நெற்றியில் பற்றுப்போட, பாரம் இறங்கும். குழந்தைகளுக்கு உண்டாகும் சளி, இருமலைக் கட்டுப்படுத்த இதன் இலைச்சாறு ஐந்து துளியும் துளசி இலைச்சாறு ஐந்து துளியும் கலந்து கொடுக்கலாம்.

மலக்கட்டுப் பிரச்சினை தீர, குப்பைமேனி இலைச்சாறு அரை ஸ்பூன் எடுத்து அரை டம்ளர் வெந்நீரில் கலந்து கொடுக்க, மலத்தை நன்றாக இளக்குவதோடு, வயிற்றில் உள்ள புழுக்களையும் அழித்து வெளியேற்றும்.

உடல் முழுவதும் வலி ஏற்பட்டு அவதிப்படுபவர்களுக்கு குப்பைமேனி இலைச் சாற்றை, நல்லெண்ணெய்யோடு சேர்த்துக் காய்ச்சி வெளிப்பிரயோகமாகப் பயன்படுத்தலாம். வயதானவர்களுக்குக் கால் மூட்டுக்களில் ஏற்படும் வலியுடன் கூடிய வீக்கங்களுக்கு, குப்பைமேனி இலையைச் சுண்ணாம்புடன் கலந்து பூசலாம்.

குப்பைமேனி இலைகளை விளக்கெண்ணெய்யில் வதக்கி சிறுநெல்லிக்காய் அளவு மூன்று நாட்கள் சாப்பிட, உடலில் தோன்றும் வாயுக்கோளாறுகள் நீங்கி உடல் புத்துணர்ச்சி அடையும். பத்து குப்பைமேனி இலைகள், இரண்டு சின்ன வெங்காயம், சிறிது வாழைப்பூ சேர்த்து அரைத்து, சிறுநெல்லி அளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட, மூல நோயில் வடியும் குருதி நிற்கும்.

குப்பைமேனியை மருந்தாக மேற்சொன்ன அளவுகளில் பயன்படுத்தலாம். அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால் வாந்தி, கழிச்சல் உண்டாகும் ஆபத்து உண்டு.

கட்டுரையாளர்,

அரசு சித்த மருத்துவர்

http://tamil.thehindu.com/general/health/article23616123.ece

Link to comment
Share on other sites

மூலிகையே மருந்து 03: குளிர்ச்சி தரும் கொடிப்பசலை!

 

 
28chnvkkodi1JPG

விரல்களுக்கு நிறத்தைக் கொடுக்க மருதாணி… முகத்தைப் பொலிவாக்க கற்றாழை… தோலில் உள்ள நுண்கிருமிகளை அழிக்க மஞ்சள்… அந்த வகையில் உதட்டுக்கு நிறத்தைக் கொடுக்க கொடிப்பசலை! கூடவே குளிர்ச்சிக்குப் பெயர்போன கொடிப்பசலை தாவரத்தின் அருமை பெருமைகளை எடுத்துரைப்பது, தற்போதைய சுட்டெரிக்கும் வெயிலுக்கு உகந்ததாக இருக்கும்.

 

கனிந்த கொடிப்பசலைப் பழங்களை விரல் நுனியில் சிதைத்து, ‘லிப்-ஸ்டிக்’ போல உதடுகளில் பூசிக்கொள்ள சிவந்த நிறத்தைக் கொடுக்கும். இப்போதிருக்கும் லிப்-ஸ்டிக் வகையறாக்களுக்குப் பசலைப் பழங்களே முன்னோடி எனலாம். இதன் பழங்களை வைத்து உதட்டில் சாயம் பூசி மகிழ்ந்த சிறுவயது கிராமத்து நினைவுகள் பலருக்கும் பசுமை மாறாக் கவிதை!

 

பெயர்க் காரணம்:

கொடிப்பசலையின் தாவரவியல் பெயர் Basella alba. இதில் பச்சை, சிவந்த நிறமுடைய தண்டுகளைக் கொண்ட வகைகள் உள்ளன. சிவந்த தண்டுடைய வகைக்கான தாவரவியல் பெயர் Basella rubra. Basellaceae குடும்பத்தைச் சார்ந்தது. கொடிலை, கொடிப்பயலை, கொடிவசலை, பசளை, கொடியலை என்பன கொடிப்பசலைக்கு இருக்கும் பல்வேறு பெயர்கள்.

 

மருந்தாக:

பசலையின் நிறத்துக்கு அதிலுள்ள ‘ஆந்தோசயனின்கள்’ காரணமாகின்றன. உணவுப் பொருட்களில் சேர்க்கப்படும் இயற்கை சாயத்துக்கு இதன் பழங்கள் பயன்படுத்தப்படுகின்றன. சுண்ணச்சத்து, வைட்டமின் ஏ, இரும்புச்சத்து, ஆக்சாலிக் அமிலம், ஃபெருலிக் அமிலம், அமினோ அமிலங்கள் போன்றவை பசலையில் இருப்பதால், உணவு வகைகளில் சேர்த்து வர, ஊட்டத்தைப் பரிசளிக்கும். இரும்புச் சத்து நிறைந்திருப்பதால் ரத்த விருத்திக்கு உதவும். குறைந்த கலோரிகளுடன் நிறைவான நுண் ஊட்டங்களை வழங்குதால் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்குப் பசலை சிறந்த ஆயுதம்.

 

28chnvkkodi2jpg
வீட்டு மருத்துவம்:

குளிர்ச்சித் தன்மையுடையதால், மழைக் காலத்தில் பசலைக் கீரையின் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்வது நல்லது. கார்காலம் அல்லாத மற்ற காலங்களில், இதன் இலைகளைப் பருப்பு சேர்த்துக் கடைந்து, மிளகு, சீரகம் சேர்த்து ருசித்துச் சாப்பிடலாம். வெப்ப நோய்களை உடனடியாக வேரறுக்கும் தன்மை பசலைக்கு இருக்கிறது.

பசலைக் கீரையைப் புளி நீக்கிச் சமைத்து நெய் சேர்த்துச் சாப்பிட்டு வரலாம். ஆண்மையை அதிகரிப்பதற்கான இயற்கை ஊட்டப்பொருள் இது. ஆய்வுகளின் முடிவில் ‘டெஸ்டோஸ்டீரோன்’ ஹார்மோனின் அளவை பசலை அதிகரிப்பதாகத் (Basal Testosterone) தெரியவந்திருகிறது. முறையற்ற மாதவிடாயை ஒழுங்குப்படுத்த, பசலையின் வேரை அரைத்து அரிசி களைந்த நீரில் கலந்து பருகுவது ஒடிசா மக்களின் வழக்கம்.

ஏப்ரல், மே மாதங்களில் ஏற்படும் வேனல்கட்டிகளுக்கு இதன் இலையை நசுக்கிக் கட்ட விரைவில் பலன் கிடைக்கும். வயிற்றுப் புண்ணைக் குணமாக்கும் தன்மையைக்கொண்டிருப்பதால், இதன் இலைச்சாறு ஒரு ஸ்பூனோடு, சிறிதளவு வெண்ணெய் சேர்த்து உட்கொள்ளலாம்.

வெயிலில் சென்று வந்தவுடன் ஏற்படும் தலைவலிக்கு, இதன் இலைகளை அரைத்து நெற்றியில் பற்றுப்போடலாம். கசகசாவோடு பசலை இலைகள், அதன் தண்டுகளைச் சேர்த்து அரைத்து, நெற்றியில் பூச நல்ல உறக்கத்தைக் கொடுக்கும். பசலை இலைச் சாற்றை முகத்தில் பூசிவர முகம் பளபளப்படையும்.

 

உணவாக:

இதன் இலைகளையும் தண்டுகளையும் தண்ணீரிலிட்டுத் துழாவ, நீருக்குக் குழகுழப்புத் தன்மை கிடைக்கும். குழகுழப்புத் தன்மையுடன் சூப் தயாரிக்க ஆசைப்படுபவர்கள், கடைகளில் கிடைக்கும் இன்ஸ்டண்ட் சூப் பவுடருக்குப் பதிலாக, பசலை ஊறிய நீரைக் கொண்டு சூப் வகைகளைத் தயாரிக்கலாம்.

28chnvkkodi4jpg

மிளகு, பூண்டு, சில காய்களைக் கொண்டு சமைக்கப்படும் சத்துமிக்க ‘உதான்’ எனப்படும் பிலிப்பைன்ஸ் நாட்டின் பாரம்பரிய சூப் வகையில் பசலை சேர்க்கப்படுகிறது. பலாக்கொட்டையோடு பசலையைச் சேர்த்துத் தயாரிக்கப்படும் குழம்பு வகை, கர்நாடக மாநிலத்தின் சில பகுதிகளில் பிரபலம்.

பெரும்பாலான வீட்டு வேலிகளிலும் வீட்டுக்கு முன்பும் கொடியேறிக்கொண்டிருக்கும் ‘மணி-பிளாண்ட்’ எனும் அழகுத் தாவரத்துக்குப் பதிலாக, பசலைக்கொடிக்கு வாய்ப்பு கொடுக்கலாம். அழகான - பசுமையான இந்தக் கொடி, கண்களுக்கு விருந்து படைப்பதுடன் ஆரோக்கியத்துக்கும் ஊட்டம் கொடுக்கும்.

கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்

http://tamil.thehindu.com/general/health/article23707252.ece

Link to comment
Share on other sites

மூலிகையே மருந்து 04: ‘மண’ (மகிழ்ச்சிக்கு) தக்காளி!

 

 
05chnvkmanathakkali1JPG
 
 

அயராது உழைக்கும் உடலின் உள்ளுறுப்புகளைச் சாந்தப்படுத்துவதால், ‘இயற்கையின் கூலிங் ஏஜென்ட்’ என மணத்தக்காளிச் செடிக்குச் செல்லப்பெயர் சூட்டலாம். வாய் முதல் ஆசனவாய்வரை, வெப்பம் காரணமாக எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படாத வகையில் மணத்தக்காளி பார்த்துக்கொள்ளும்.

 

பயனும் பெயரும் அறியாமலேயே, கிராமத்துச் சிறுவர்கள் ருசி பார்க்கும் மணத்தக்காளிப் பழம், பசி தீர்க்கும். உடல் வெப்பத்தைக் குறைக்கும். பலன்கள் நிறைந்த மணத்தக்காளிப் பழத்தை ‘கருப்பு முத்து’ என்றும் அழைக்கலாம்.

 

பெயர்க்காரணம்:

தக்காளிக் குடும்பத்தைச் சார்ந்து, தக்காளிபோல சிறிய உருவ அமைப்புடன், வாசனை நிறைந்த பழங்களைக் கொண்டிருப்பதால், ‘மணத்தக்காளி’ என்ற பெயர் உருவானது. சிறுசிறு மணிகள்போல இதன் பழங்கள் உருண்டிருப்பதால் ‘மணித்தக்காளி’ என்றும், மிளகளவு பழங்களைக் கொண்டிருப்பதால் ‘மிளகுத்தக்காளி’ என்றும் அழைக்கப்படுகிறது. இவை தவிர்த்து உலகமாதா, விடைக்கந்தம், வாயசம், காகமாசீ போன்ற பெயர்களும் உண்டு.

 

அடையாளம்:

சற்று அடர்ந்த பச்சை நிற இலைகளைக்கொண்ட செடி வகையைச் சார்ந்தது. மெல்லிய தண்டு அமைப்புடன், சிறுசிறு வெள்ளை நிறப் பூக்களைப் பூக்கும். கறுப்பு நிறத்தில் உருண்டையான சிறு பழங்களைக் கொண்டது. இதன் பழுக்காத காய்களை உட்கொள்வது நல்லதல்ல.

‘சொலானம் நிக்ரம்’ (Solanum nigrum) எனும் தாவரவியல் பெயர்கொண்ட மணத்தக்காளியின் குடும்பம் ‘சொலனாசியே’ (Solanaceae). மணத்தக்காளியில் ‘சொலாமார்கின்’ (Solamargine), ‘சொலாசொடின்’ (Solasodine), ‘கூமரின்ஸ்’ (Coumarins), ‘பைட்டோஸ்டெரால்ஸ்’ (Phytosterols) என தாவரவேதிப் பொருட்கள் அதிகம்.

 

உணவாக:

‘மலமிளகுந் தானே மகாகபமும் போகும் பலமிகுந்த வாதம்போம்’ எனும் அகத்தியரின் பாடல் வரி, மணத்தக்காளியின் ஆற்றலை விளக்குகிறது. இலைகளைப் பருப்புச் சேர்த்துக் கடைந்து, மணத்தக்காளி வற்றலைத் தூவி, கூடவே சீரகத்தையும், சின்ன வெங்காயத்தையும் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட வயிற்றுப் புண், ரத்தக் குறைவு, உடற்சோர்வு போன்றவை நீங்கும்.

மணத்தக்காளி கீரை மிகவும் சுவையானதும்கூட! குழந்தைகளுக்கு மணத்தக்காளிக் கீரையைக் கொடுக்க உடல் ஊட்டம் பெறும். மணத்தாக்காளிக் கீரையுடன் பசலைக் கீரையைச் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடுவது வேனிற்கால நோய்களைத் தடுப்பதற்கான சிறந்த உணவு!

மணத்தக்காளிப் பழங்களை உலர வைத்து வற்றலாகப் பயன்படுத்தலாம். நாக் கசப்பு, வாந்தியை நிறுத்தும். நுரையீரல் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்கும். சிறுநீரை அதிகரித்து, சிறுநீர்ப் பாதை தொடர்பான நோய்களையும் குணமாக்கும். வற்றலை நெய்யில் லேசாக வதக்கிய பின்பு பயன்படுத்தலாம்.

 

மருந்தாக:

செரிமானப் பாதையில் உண்டாகும் புற்றுநோய் சார்ந்த ஆய்வில் மணத்தக்காளி சிறந்த முடிவுகளைக் கொடுத்திருக்கிறது. ஈரல் பாதிப்புகளைத் தடுக்கும் ஆற்றல் மணத்தக்காளிக்கு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதாகவும் (Anti-proliferative activity) சமீபத்திய ஆய்வு உறுதிப்படுத்துகிறது.

05chnvkmanathakkali2jpg
 

 

வீட்டு மருத்துவமாக:

வயிற்றிலும் குடல் பகுதியிலும் உண்டாகும் புண்களைக் குணப்படுத்தும் தன்மை மணத்தக்காளிக்கு உண்டு. வாய்ப்புண் ஏற்பட்ட உடன் தேடப்படும் முதல் மூலிகை மணத்தக்காளிதான். மணத்தக்காளிக் கீரையைச் சாப்பிட்டாலோ அதன் பழங்களைச் சாப்பிட்டாலோ வாய்ப்புண் குணமடையும்.

மணத்தக்காளியைக் கீரையாகப் பயன்படுத்தினால் சளி, இருமல் போன்ற கப நோய்களும் விலகும் என்கிறது சித்த மருத்துவம். மணத்தக்காளிச் செடியை அரைத்து நீரிலிட்டுக் காய்ச்சி, அந்த நீரைக்கொண்டு பிறப்புறுப்பைக் கழுவ வெள்ளைப்படுதல் குறையும்.

 

வளர்ப்பு:

பழங்களைப் பிசைந்து விதைகளைத் தூவி தொட்டிகளில்கூட வளர்த்துக்கொள்ளலாம். ஒரு மழை பெய்தால் போதும், விதைப் பரவல் மூலம் ஏற்கெனவே மண்ணில் புதைந்து கிடக்கும் மணத்தக்காளி விதைகள் முளைக்கத் தொடங்கிவிடும். மணத்தாக்காளியைப் போன்றே உருவ அமைப்புடைய சில செடிகள் சாப்பிட உகந்தவையல்ல. தாவரத்தை உண்பதற்குமுன் மணத்தக்காளிதானா என்று உறுதிப்படுத்திக்கொள்ளவும்.

மணத்தக்காளியை முறைப்படி சாப்பிட்டு வந்தால், ‘திருமணத்தால் உண்டாகும் மகிழ்ச்சி’ ஏற்பட்டு உடல்நலம் பெறும் என்கிறது சித்த மருத்துவம். மண் பானை மணக்கும் மணத்தக்காளி வற்றல் தூவப்பட்ட காரக்குழம்பின் ருசி, அன்று மட்டுமல்ல இன்றும் பலரது நாவைச் சப்புக்கொட்ட வைப்பதில் கில்லாடி. தூரத்துலிருந்து மண்சட்டியைப் பார்க்கும்போதே, நாவில் செரிமானச் சுரப்புகள் படர்ந்து, ஆரோக்கியத்துக்கு அஸ்திவாரம் அமைக்கத் தொடங்கிவிடும்!

கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்

http://tamil.thehindu.com/general/health/article23775035.ece

Link to comment
Share on other sites

மூலிகையே மருந்து 05: ஆ(ஹா)வாரை..!

 

 

 
11CHVANAvarampoojpg
 
 
 

‘ஆவாரைக் கண்டோர் சாவோரைக் கண்டதுண்டோ’ எனும் வரி, ஆவாரையால் கிடைக்கும் நித்தியத்தன்மையைப் பறைசாற்றுகிறது. இலை, பட்டை, பூ, வேர், பிசின் எனத் தனது முழு உடலையும் மருத்துவ தானமாக அளிக்கும் ஆவாரை இருக்கும்போது, நோய்களைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை.

 

வெயிலின் தாக்கம் பாடாய்ப்படுத்தும் பொட்டல்களில் வாழும் மனிதர்களின் வெப்பத்தைக் குறைக்கும் தலைக்கவசமாக ஆவாரை இலைகள் பயன்படுவதை இன்றும் பார்க்கலாம். தலைக்கு மட்டுமல்லாமல் உள்மருந்தாக எடுத்துக்கொள்ளும்போது, உள்ளுறுப்புகளுக்கும் கவசமாக ஆவாரை பயன்படும்.

 

பெயர்க் காரணம்:

ஏமபுட்பி, ஆவரை, மேகாரி, ஆகுலி, தலபோடம் எனப் பல பெயர்கள் ஆவாரைக்கு உண்டு. தங்க மஞ்சள் நிறத்தில் மலர்வதால் ‘ஏமபுட்பி’ என்று பெயர் (ஏமம் - பொன்). மேகநோய்களை விரட்டி அடிப்பதால் ‘மேகாரி’ என அழைக்கப்படுகிறது.

 

அடையாளம்:

‘காஸியா ஆரிகுலட்டா’ (Cassia auriculata) என்ற தாவரவியல் பெயர் கொண்ட ஆவாரை ‘சீஸால்பினியோய்டே’ (Caesalpinioideae) குடும்பத்தைச் சேர்ந்தது. வறண்ட நிலத்திலும் குதூகலத்துடன் மஞ்சள் நிறப் பூக்களுடன் வளரும் குறுஞ்செடி வகையான ஆவாரை, மண்ணிலிருந்து முளைத்தெழும் சொக்கத் தங்கம்!

 

மருந்தாக:

பிளேவனாய்டுகள், டானின்கள், அவாரோஸைடு (Avaroside), அவரால் (Avarol) எனத் தாவர வேதிப்பொருட்கள் ஆவாரையில் நிறைய இருக்கின்றன. ஆய்வுகளின் முடிவில் ஆவாரைக்கு இருக்கும் ‘ஆண்டி – ஹைப்பர்கிளைசெமிக்’ (Anti-hyperglycemic) செயல்பாடு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆவாரையின் எதிர்-ஆக்ஸிகரணத் தன்மை (ஆன்ட்டி ஆக்சிடண்ட்) குறித்தும் நிறைய ஆய்வுகள் நடைபெற்றிருக்கின்றன.

ஆவாரை இலைகளுக்கு கல்லீரலைப் பாதுகாக்கும் தன்மை (Hepato-protective activity) இருப்பதாகவும் தெரியவருகிறது. சித்த மருத்துவத்தில் நீரிழிவு நோய்க்குப் பயன்படுத்தப்படும் ஆகச் சிறந்த மூலிகை ஆவாரை. ‘நீர்க்கோவைக்குத் தும்பை… நீரிழிவுக்கு ஆவாரை’ என்ற மூலிகை மொழியும் உண்டு. ‘ஆவாரைப் பஞ்சாங்கம்’ என்று சொல்லப்படும் இதன் வேர், இலை, பூ, காய், பட்டை ஆகியவற்றை உலர வைத்துத் தயாரித்த சூரணத்தை, மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்துவர, நீரிழிவு நோயின் தீவிரம் குறையும். நீரிழிவு நோயால் ஏற்படும் அதிதாகம் (Polydipsia), அதிகமாகச் சிறுநீர் கழிதல் (Polyuria), நாவறட்சி, உடல் சோர்வு முதலியன கட்டுக்குள் வரும்.

 

உணவாக:

உலர்ந்த / பசுமையான ஆவாரம் பூக்களை மூன்று தேக்கரண்டி எடுத்து, நீரிலிட்டு நன்றாகக் கொதிக்க வைத்து, சுவைக்குச் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து, வாரத்தில் மூன்று நாட்கள் குடிக்கலாம். துவர்ப்பு - இனிப்புச் சுவையுடன் கூடிய இந்த பானம், கைகால்களில் உண்டாகும் எரிச்சலைக் குறைக்க உதவும். உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுத்துச் சிறுநீர் எரிச்சலைக் குறைக்கும்.

உடலுக்குப் பலத்தைக் கொடுக்க, ஆவாரம் பூக்களைப் பாசிப்பயறு சேர்த்துச் சமைத்து, நெய் கூட்டி சாதத்தில் பிசைந்து அவ்வப்போது சாப்பிட்டு வரலாம்.

 

வீட்டு மருத்துவமாக:

சித்த மருத்துவத்தின் ‘கூட்டு மருந்துவக்கூறு தத்துவத்துக்கு’ (Synergistic effect) ஆவாரைக் குடிநீர் சிறந்த எடுத்துக்காட்டு. ஆவாரை இலைகள், மருதம் பட்டை, கொன்றை வேர் ஆகியவற்றை அரைத்து, மோரில் கலந்து குடிப்பது நீரிழிவுக்கான மருந்து.

இதன் பூவை துவையலாகவோ குடிநீராகவோ பயன்படுத்த உடலில் தோன்றும் வியர்வை நாற்றம், உடலில் தங்கிய அதிவெப்பம் மறையும். ஆவாரம் பூ, அதன் பட்டையை நீரிலிட்டுக் காய்ச்சி வாய் கொப்பளித்துவந்தால், வாய்ப்புண் குணமாகும்.

துவர்ப்புச் சுவையுடைய ஆவாரைப் பூக்கள், மாதவிடாய் காலத்தில் உண்டாகும் அதிக ரத்தப்போக்குக்கு மருந்தாகிறது. மாதவிடாய்க் காலத்தில் உண்டாகும் அடிவயிற்று வலிக்கு, ஆவாரை மலர் மொட்டுக்களைக் குடிநீரிலிட்டுப் பயன்படுத்தும் வழக்கம் குஜராத் மக்களிடையே உள்ளது. ஆவாரம் பூக்களைக் காய வைத்துச் செய்த பொடியைக் குளிப்பதற்குப் பயன்படுத்த, தோல் பொலிவைப் பெறும்.

உளுந்து மாவோடு, உலர்ந்த ஆவாரை இலைகளைச் சேர்த்து மூட்டுகளில் பற்றுப்போட வீக்கமும் வலியும் விரைவில் குறையும். ஆவாரம் பூவோடு, மாங்கொழுந்து சேர்த்துத் தயாரிக்கப்படும் குடிநீர், மூல நோயின் தீவிரத்தைக் குறைக்கும்.

கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்

http://tamil.thehindu.com/general/health/article23857680.ece

Link to comment
Share on other sites

மூலிகையே மருந்து 06: கற்றாழை தரும் குளுமை

 

 
19CHVANaloe-vera-plantsjpg
 
 
 

முதல் பார்வையிலேயே மனதை மயக்கி காதல் வசப்பட வைக்கும் அழகான தாவரம் கற்றாழை. தோற்றத்தில் மட்டுமல்ல, மருத்துவக் குணத்திலும் கற்றாழையின் செயல்பாடுகள் அழகானவைதான்! வேனிற் காலத்துக்கென இயற்கையில் பிரத்யேகமாகப் படைக்கப்பட்ட ‘குளுகுளு மூலிகை’ கற்றாழை. இந்திய, கிரேக்க, எகிப்திய, சீனப் பாரம்பரிய மருத்துவத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வரும் ‘அற்புதத் தாவரம்’ கற்றாழை.

 

பெயர்க் காரணம்: பெண்களுக்கு உண்டாகும் கருப்பை சார்ந்த கோளாறுகளை நீக்குவதால் கன்னி, குமரி ஆகிய பெயர்கள் கற்றாழைக்கு நயமாகப் பொருந்துகின்றன. செங்கற்றாழை, ரயில்வே கற்றாழை, மலைக் கற்றாழை, வெண் கற்றாழை, வரிக் கற்றாழை தவிர, மேலும் பல கற்றாழை வகைகள் உள்ளன. பயன்பாட்டில் அதிகமிருப்பது சோற்றுக் கற்றாழை.

அடையாளம்: வறண்ட சூழலிலும் பல ஆண்டுகள் வாழும் சிறு செடி இது. சதைப்பற்றுள்ள மடல்களை அழுத்திப் பிழிந்தால் கசப்புச் சுவை கொண்ட திரவம் வெளியாகும். இதன் உட்பகுதியில் இருக்கும் கூழ் போன்ற பகுதியே ‘கற்றாழைச் சோறு’ எனப்படுகிறது. Aloe barbadensis எனும் தாவரவியல் பெயர் கொண்ட கற்றாழை லிலியேசி (Liliaceae) குடும்பத்தைச் சேர்ந்தது. அலோசின் (Aloesin), அலோ-எமோடின் (Aloe-emodin), Aloin, Isobarbaloin, லிக்னின்ஸ், அமினோ அமிலங்கள் ஆகிய தாவர வேதிப்பொருட்கள் கற்றாழையின் உள்ளன.

உணவாக: தோல் சீவிய பின், உள்ளிருக்கும் பனிக்கூழ் போன்ற பகுதியை ஆறேழு முறை நீரிலிட்டுச் சுத்தம்செய்து, பின் மோருடன் கலந்து, உப்பும் சீரகத்தூளும் சேர்த்து மத்து கொண்டு நன்றாகக் கடைந்து எடுத்தால், குளுகுளு கற்றாழைப் பானம் தயார். பனிக்கட்டி இல்லாமலே குளிர்ச்சியைத் தரக்கூடிய இந்தப் பானத்தை வேனிற்காலத்தில் குடித்துவர, உடல் வெப்பத்தைக் குறைக்கும்.

வயிற்றுப் புண்களைக் குறைப்பதற்கான சிறந்த பானம் இது. கற்றாழைக் கூழுடன் சிறிது கடுக்காய்ப் பொடி தூவி, ஒரு பாத்திரத்தில் வைக்க சில மணி நேரத்தில் வடியும் சாற்றைப் பானமாகவும் மருந்தாகவும் பயன்படுத்தலாம். விந்தின் தரத்தை அதிகரிக்க, பாலில் ஊறவைத்த காற்றாழைச் சோற்றைச் சாப்பிட்டும் வரலாம்.

மருந்தாக: கற்றாழையில் உள்ள கொலாஜென், எலாஸ்டின் போன்றவை புரதங்களின் உற்பத்தியை அதிகரித்து, தேகத்தில் உண்டாகும் வயோதிக மாற்றத்தைத் தள்ளிப்போடுவதாக ஆய்வுகள் நிரூபிக்கின்றன. வீக்கமுறுக்கி செய்கையுடைய Cglycosyl chromone எனும் பொருள் கற்றாழையிலிருந்து சமீபத்தில் பிரித்தெடுக்கப்பட்டது. வலி உண்டாக்கும் பிராடிகைனினுடைய (Bradykinin) செயல்பாட்டைத் தடுத்து, உடனடி வலிநிவாரணியாக இது செயல்படுவதையும் ஆய்வு உறுதிப்படுத்துகிறது.

மார்பகப் புற்றுநோய் வராமல் பாதுகாக்கும் தன்மை கற்றாழைக்கு இருப்பதாக ஆய்விதழ் கட்டுரை ஒன்று தெரிவிக்கிறது. கற்றாழையை நன்றாக உலரவைத்து வற்றலாகவோ பொடியாகவோ உணவில் சேர்த்துவந்தால், ‘முதுமையிலும் இளமை காணலாம்’ எனும் காயகல்ப முறையைப் பற்றி சித்தர் தேரையர் வலியுறுத்துகிறார்.

வீட்டு மருந்தாக: கற்றாழையோடு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சித் தயாரிக்கப்படும் எண்ணெய்யைத் தேய்த்துத் தலை முழுக, நல்ல உறக்கத்தைக் கொடுக்கும். தலைமுடி வளர்ச்சிக்கும் நல்லது. வாரம் ஒருமுறை கற்றாழைக் கூழோடு சிறிது உப்பு சேர்த்து வாய்க் கொப்பளித்து வர பற்கள் பலமாகும்.

ஈறுகளிலிருந்து வடியும் குருதியும் நிற்கும். நெருப்பு சுட்ட புண்களுக்கு வாழை இலையோடு சேர்த்து, கற்றாழையைப் பயன்படுத்தலாம். கை, கால் எரிச்சல், சிறுநீர் எரிச்சலைக் குறைப்பதிலும் கற்றாழையைக்கொண்டு தயாரிக்கும் மருந்துகள் பலன் தரக்கூடியவை.

அழகு தர: முகப் பொலிவை மெருகேற்ற வேதியியல் கலவைகள் நிறைந்த செயற்கை கிரீம்களுக்கான சிறந்த மாற்று கற்றாழை. மேல்தோலைச் சீவிவிட்டு உள்ளிருக்கும் பனிக்கூழ் போன்ற பகுதியை முகத்தில் நாள்தோறும் தடவிவர, கற்றாழையைப் போல விரைவில் முகமும் பொலிவடையும். கிரீம்கள், சோப்பு போன்ற செயற்கை அழகுசாதனப் பொருட்கள், கற்றாழையின் சத்து இல்லாமல் முழுமையடையாது.

நேரடியாக சூரிய ஒளியின் தாக்கத்திலிருந்து தப்பிக்க (Sun screen) காற்றாழைக் கூழைப் பூசிக்கொள்ளலாம். உடலில் தேய்த்துக் குளிக்கவும் கற்றாழையைப் பயன்படுத்தலாம். வறண்ட சருமம் கொண்டவர்கள் கற்றாழையைப் பூசிவர, தோல் நீர்த்தன்மை பெற்று தேகம் புத்துணர்ச்சி பெறும். தோலில் சுருக்கங்கள் உருவாவதைத் தடுக்கும்.

கருப்பையில் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கொடுப்பதால், கற்றாழை ‘பெண்களுக்கான வரப்பிரசாதம்!’. மாதவிடாய் காலத்தில் உண்டாகும் அடிவயிற்று வலியைக் குறைக்க, கற்றாழைச் சாற்றில் சிறிது பனங்கற்கண்டு சேர்த்துக் கொடுப்பது வழக்கம்.

கர்ப்பிணிகளின் உடற்சூட்டைத் தணிக்க, சுகப்பிரசவத்தைத் தூண்ட உதவும் ‘பாவனபஞ்சாங்குல தைல’த்தில் கற்றாழை சேர்க்கப்படுகிறது. கற்றாழையைக் கொண்டு தயாரிக்கப்படும் பெண்களுக்கான சித்த மருந்துகளின் எண்ணிக்கையோ அதிகம்.

 

ஆசனவாய் சார்ந்த நோய்களைத் தடுக்க உதவும் ‘குமரி எண்ணெய்’, கருப்பைக்கு வலுவூட்டும் ‘குமரி லேகியம்’ என சித்த மருந்துகளில் கற்றாழையின் பங்கு அதிகம். அதிவெப்பம் காரணமாகக் கண்களில் உண்டாகும் எரிச்சலைக் குறைக்க, சிறுதுண்டு கற்றாழையைக் கண்களின் மீது வைத்துக் கட்டலாம்.

கற்றாழை மடல்களுக்கு இடையில் இரவு முழுவதும் வைத்து முளைகட்டிய வெந்தயத்தைச் சாப்பிட்டுவர வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும். கற்றாழையின் உலர்ந்த பாலுக்குக் கரியபோளம், மூசாம்பரம் போன்ற பெயர்கள் உள்ளன. கருப்பையில் உண்டாகும் தொந்தரவுகளுக்கு முக்கிய மருந்தாக கரியபோளம் பயன்படுகிறது.

ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயமாக இருக்க வேண்டிய மூலிகைப் பட்டியலில் கற்றாழையும் ஒன்று. வளமான மண்ணும் சிறிது நீர் வளமும் இருந்தால், கற்றாழைகள் செழிப்பான வளர்ச்சியைக் கொடுக்கும். விரைவில் தாய்க் கற்றாழையைச் சுற்றி உருவெடுக்கும் பல அழகான ‘கற்றாழைக் குழந்தை’களை ரசிக்க இருகண்கள் போதாது.

கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்

http://tamil.thehindu.com/general/health/article23933993.ece

Link to comment
Share on other sites

மூலிகையே மருந்து 07: அறுகம் புல் = ஆரோக்கியம்

 

 

 
shutterstock78735061

மழை லேசாகப் பெய்ததும், மறுநாள் எங்கு பார்த்தாலும் ‘தளதளவென’ அறுகம் புல் முளைத்து, பசுமையாய் தனி அழகுடன் காட்சிதரும்! வழிபாட்டில் அறுகம் புல்லுக்கும் இடமுண்டு. அதையும் தாண்டி, மூலிகை மரபையும் மருத்துவ குணத்தையும் நம் மரபில் அறுகம் புல் பெற்றிருக்கிறது.

பெயர்க்காரணம்: அறுகு, மூதண்டம், தூர்வை, மேகாரி, பதம், அறுகை போன்றவை அறுகம்புல்லின் வேறு பெயர்கள். நோய்களை அறுப்பதால், இதற்கு ‘அறுகு’ என்ற பெயர் வந்திருக்கலாம்.

 

அடையாளம்: பல்லாண்டு வாழும் புல் வகையினம். கூர்மை மழுங்கிய இலை நுனியைக் கொண்டிருக்கும். குறுகலான இலையின் மேல் ரோமவளரிகள் தென்படும். அறுகம் புல்லின் தாவரவியல் பெயர் Cynodon dactylon. Poaceae குடும்பத்தை சார்ந்தது. இதில் சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், சிடோஸ்டீரால், கரோட்டீன், அபிஜெனின், டிரைடெர்பீனாய்ட்ஸ் போன்ற வேதிப்பொருட்கள் இருக்கின்றன.

உணவாக: ’கண்ணோயொடு தலைநோய் கண்புகைச்சல் இரத்தபித்தம்…’ எனும் சித்த மருத்துவப் பாடல், அறுகம்புல்லின் நோய் போக்கும் தன்மை குறித்து தெளிவுப்படுத்துகிறது. அறுகம் புல்லானது உடலில் தங்கிய நச்சுக்களை நீக்குவது, தோல் நோய்களை அழிப்பது, குடல் இயக்கங்களை முறைப்படுத்துவது என பல மருத்துவ குணங்களை கொண்டது. அறுகம்புல் ஊறிய நீரில், சம அளவு பால் சேர்த்துப் பருக கண்ணெரிச்சல், உடல் எரிச்சல் குறையும். அறுகம் புல்லை காயவைத்துப் பொடி செய்து, தோசை, இட்லி, அடை போன்ற உணவு வகைகளில் கலந்தும் சாப்பிடலாம்.

மருந்தாக: இதிலுள்ள ஒருவகையான புரதக்கூறு, நம் உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிப்பதாக ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது. மூட்டுகளில் ஏற்படும் வீக்கம், அழற்சி (Anti-arthritic activity) ஆகியவற்றை அறுகம்புல் சாறு குறைப்பதாகவும் ஆய்வு சொல்கிறது. சமீபத்திய ஆய்வில், விந்தணுக்களின் எண்ணிகை, விந்தின் இயக்கத்துக்குத் (Sperm motility) தேவையான ஃபிரக்டோஸ் அளவை அதிகரிப்பதற்கும் அறுகன்சாறு பயன்படுவது தெரியவருகிறது.

வீட்டு மருத்துவம்: அறுகம் புல்லை இடித்துச் சாறு பிழிந்து, நீர் சேர்த்து, சுவைக்கு சிறிது பனங்கற்கண்டு கூட்டி தினமும் அரை டம்ளர் குடித்துவர, உடம்பில் தங்கிய கெட்ட நச்சுப் பொருட்களை வெளியேற்றும். உடலில் இருக்கும் அசுத்தங்களை சுத்திகரிக்கும் அறுகம் புல் சாறை ‘பச்சை ரத்தம்’ என்று சொல்வது சாலப்பொருந்தும். தோலில் ஏற்படும் சொறி, சிரங்கு போன்ற நோய்களும் குணமாகும்.

அறுகம் புல்லை மஞ்சளோடு சேர்த்து அரைத்து நோய் உள்ள இடங்களில் தொடர்ந்து பூசிவர, சொறியும் சிரங்கும் நம் கண்ணுக்குத் தெரியாமல் மறையும்! அறுகம் புல்லோடு, கடுக்காய்த் தோல், இந்துப்பு, சீமை அகத்தி இலை சேர்த்து மோர்விட்டு நன்றாக அரைத்து, படர்தாமரை உள்ள பகுதிகளில் பூசலாம். அறுகம் புல்லுக்கு ரத்தப்பெருக்கை தடுக்கும் தன்மை (Styptic) இருப்பதால், அடிபட்டு ரத்தம் வடியும்போது, உடனடியாக அறுகம் புல்லைக் கசக்கித் தேய்க்கும் வழக்கம் கிராமங்களில் உண்டு.

அறுகன் குடிநீர்: ஒரு கைப்பிடி அறுகம்புல், ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை ஆகியவற்றை நீரில் இட்டுக் கொதிக்க வைத்து, குடிநீராக காய்ச்சி வடிகட்டி அருந்த, நச்சுகளின் தாக்கத்தைக் குறைப்பதோடு, ரத்தத்தையும் சுத்திகரிக்கும். மலைப் பகுதியில் வசிக்கும் சில பழங்குடி மக்கள் பூச்சி, தேள் போன்ற நச்சு உயிரினங்கள் கடிக்கும்போது, மேற்சொன்ன அறுகன் குடிநீரையே அதிகம் பயன்படுத்துகின்றனர். அறுகன் குடிநீரோடு சிறிது வெண்ணெய் சேர்த்துக் குடித்துவர, மருந்துகளால் உண்டான வெப்பமும் சிறுநீர் எரிச்சலும் குறையும்.

அருகன் தைலம்: அறுகம்புல் சாறு அரை லிட்டர், தேங்காய் எண்ணெய் கால் லிட்டர், அதிமதுரப் பொடி அல்லது மிளகு 15 கிராம் சேர்த்து சிறுதீயில் காய்ச்சி கரகரப்பு பதத்தில் இறக்கி வைத்துக்கொள்ளலாம். இந்த ‘அருகன் தைலம்’ அனைவரது வீட்டிலும் இருக்க வேண்டிய முக்கியமான மருந்து. தோலில் தடிப்பு, அரிப்பு, பொடுகுத் தொல்லைக்குத் தடவிவரப் பலன் கிடைக்கும்.

அம்மை நோய் வந்து குணமான பின்பு, அறுகம் புல்லையும் வேப்ப இலைகளையும் இட்டுக் காய்ச்சி தலைக்கு நீர் ஊற்றும் பழக்கத்தை கிராமங்களில் பார்க்க முடியும். அறுகம்புல் சாறை அருந்துவதால், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தலாம். உடல் எடையையும் சீராகப் பராமரிக்கலாம் என்பது கூடுதல் சிறப்பு. அசோகமரப்பட்டை, அறுகம்புல் கொண்டு தயாரிக்கப்படும் குடிநீர், மாதவிடாய் காலத்தில் உண்டாகும் அதிக ரத்தப் போக்கை குறைக்க உதவும்.

வெள்ளை நோயைக் கட்டுப்படுத்த, அறுகம் புல்லை தயிரில் அரைத்துச் சாப்பிடலாம். புல் மட்டுமன்றி, இதன் சிறிய கிழங்கை பொடி செய்து, சம அளவு நாட்டுச் சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டுவர, தோல் நோய்கள் குணமாகும். விலங்கினங்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படாவண்ணம் பார்த்துக்கொள்வதில் அறுகம் புல்லுக்கு முக்கிய பங்குண்டு.

இலக்கியங்களில்: ’பழங்கன்றுகறித்த பயம்பு அமல் அறுகை (அறுகன்)…’ என்று அறுகம் புல்லைப் பற்றி அகநானூறு குறிப்பிடுகிறது. கன்றுகளுக்கான உணவாகவும், மழை பெய்ததும் உயிர்ப்பெறும் புல்லின் தன்மை குறித்தும், சர்வ சாதாரணமாக அனைத்து இடங்களிலும் முளைத்துக் கிடக்கும் அதன் வளரியல்பு குறித்தும் சங்க இலக்கியப் பாடல்கள் பதிவுசெய்துள்ளன. ’ஆல்போல் தழைத்து… அருகு போல் வேரூன்றி…’ எனும் வாய்மொழி வழக்கைப் போலவே, அறுகம்புல்லின் ஆரோக்கிய குணங்களும் நம் மண்ணில் ஆழ வேரூன்றியவை.

கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்

http://tamil.thehindu.com/general/health/article23997517.ece

Link to comment
Share on other sites

மூலிகையே மருந்து 08: இது பால் மருந்து

 

 
02CHVANEuphorbiahirtaNPJPG
 
 
 

‘அம்மான் பச்சரிசி' என்றதும் ’அரிசியில் இதுவும் ஒரு வகையா?’ என நினைத்துவிட வேண்டாம். மருத்துவத்துக்குப் பயன்படும் சிறுமூலிகைதான் அம்மான் பச்சரிசி. அனைவரது கண்களிலும் அடிக்கடி தென்படும் மூலிகை இது. இதன் அருமைப்பெருமைகளைப் பற்றி தெரியாமல் கடந்து சென்றிருப்போம். திறந்தவெளிகளில் சாதாரணமாகக் காணப்படும் அம்மான் பச்சரிசியினுள் இயற்கை பொதிந்து வைத்திருக்கும் மருத்துவக் குணங்கள் அளப்பரியவை.

 

பெயர்க் காரணம்: இதன் விதைகள் தோற்றத்திலும் சுவையிலும் சிறுசிறு அரிசிக் குருணைகள் போலிருப்பதால் ‘பச்சரிசி’ என்றும், தாய்ப்பால் பெருக்கும் உணவு என்பதால் அடைமொழியும் சேர்ந்து ‘அம்மான் பச்சரிசி’ என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம். சித்திரவல்லாதி, சித்திரப்பாலாவி, சித்திரப்பாலாடை ஆகிய பெயர்களும் இதற்கு உண்டு. மழைக்காலத்தில் அனைத்து இடங்களிலும் செழிப்பாக வளரும் தன்மையுடையது. நீர்நிலைகளின் ஓரத்தில் அதிகளவில் முளைத்திருக்கும். பஞ்ச காலங்களில் இதன் இலைகள் உணவாகப் பயன்பட்டிருக்கின்றன. இந்தியா போன்ற ஆசிய நாடுகளிலும் ஆஸ்திரேலியா, அமெரிக்க நாடுகளிலும் அம்மான் பச்சரிசி காணப்படுகிறது.

அடையாளம்: Euphorbiaceae குடும்பத்தை சார்ந்த அம்மான் பச்சரிசியின் தாவரவியல் பெயர் Euphorbia hirta. இலைகள் கூர்மையான அமைப்புடையவை. மெல்லிய தண்டை உடைய சிறிய செடியாக வளரும் அம்மான் பச்சரிசியை உடைத்தால், பால் வடியும். தரையோடு படர்வதும், சிறு செடியாக வளர்வதும், நிறங்களின் அடிப்படையிலும் அம்மான் பச்சரிசியில் பிரிவுகள் உண்டு. பெடுலின், ஆல்ஃபா-அமைரின் (Alpha-amyrin), கேம்ஃபால் (Camphol), குவர்சிடின் (Quercitin), பைட்டோஸ்டீரால்ஸ் (Phytosterols), யூபோர்பின் ஏ (Euphorbin – A) போன்றவை இதிலுள்ள வேதிப்பொருட்கள்.

உணவாக: அம்மான் பச்சரிசி இலைகள், கரிசலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி, மணத்தக்காளி போன்ற கீரை வகைகளின் துணையோடு செய்யப்படும் ’கலவைக் கீரை சமையல்’, ஆர்க்காடு மாவட்ட கிராமங்களின் முதன்மை உணவு. முழுத் தாவரத்தையும் பருப்பு, மஞ்சள், சீரகம், தக்காளி சேர்த்து கீரையாகக் கடைந்து சாப்பிட உடலுக்குத் தேவையான சத்துக்களை வாரி வழங்கும். இதன் காயை அவ்வப்போது துவையல் செய்து சாப்பிட, மலம் நன்றாக வெளியேறும்.

சிவப்பு நிற அம்மான் பச்சரிசியை உலர்த்திப் பொடிசெய்து, ஐந்து கிராம் அளவு பசும்பாலில் கலந்து அருந்த விந்தணுக்கள் அதிகரிக்கும் என்கிறது சித்த மருத்துவம். அம்மான் பச்சரிசியை அரைத்துத் தயிரில் கலந்து சாப்பிட, பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் நோய் கட்டுப்படும். அம்மான் பச்சரிசியைக் காயவைத்து, பொடியை வெந்நீரில் கலந்து அருந்த சளி, இருமல் குணமாகும். இளைப்பு நோயின் தீவிரத்தைக் குறைக்கவும் இது பயன்படுகிறது. இதைச் சமைத்து சாப்பிடுவதால் வயிற்றுப் புண்களும் குணமாகும்.

02CHVANEuphhirt-photo3jpg
 

'அவுரி அழவனம் அவரை அம்மான் பச்சரிசி அறுகு தோல் காக்கும்' என்று தோல் நோய்களுக்கு பயன்படும் பட்டியல் அடங்கிய ’மூலிகைக் குறளில்’ அம்மான் பச்சரிசியும் ஒன்று. ‘விரணமலக் கட்டுமே கந்தடிப்புச் சேர்ந்த தினவிவைகள் தேகம்விட்டு போம்…’ என்ற பாடல், புண், மலக்கட்டு, தோல் நோய்கள், வெள்ளைப்படுதல் போன்றவை அம்மான் பச்சரிசியால் குணமாகும் என்பதை சுட்டிக்காட்டுகிறது.

மருந்தாக: வலி நிவாரணி, வீக்கத்தைக் கரைக்கும் செய்கை அம்மான் பச்சரிசிக்கு இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. கிருமிநாசினி செய்கையைக் கொண்டிருப்பதால் தொற்றுக்களை அழிக்கும். விலங்கினங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், அம்மான் பச்சரிசி பால் சுரப்பை தூண்டுவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இ கோலி, ஷிகெல்லா டிசென்ட்ரியே (Shigella dysentriae) பாக்டீரியா வகைகளை தலைதூக்க விடாமல் அம்மான் பச்சரிசி தடுப்பதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. இதற்கு இருக்கும் சிறுநீர்ப்பெருக்கி (Diuretic) செய்கை குறித்தும் ஆய்வுகள் நடைபெற்று இருக்கின்றன. சிறு அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள், பசும்பாலின் குணத்துக்கு ஒப்புமையாக கூறப்படும் மருத்துவக் குறிப்பு சார்ந்த ஆய்வு, பல உண்மைகளை வெளிப்படுத்தலாம்.

 

வீட்டு மருந்தாக:

வெளிமருந்தாக சிறந்த பலன் அளிக்கக்கூடியது. வைரஸ்களால் உடலில் தோன்றும் மரு (Warts), பாலுண்ணிகளின் (Molluscum contagiosum) மீது, இந்த செடியை உடைக்கும்போது வெளிவரும் பாலைத் தொடர்ந்து தடவிவந்தால், விரைவில் அவை மறையும். தினமும் சிறிது பாலை மருவின் மீது வைத்துவர சிறிது சிறிதாக மருக்கள் உதிர்வதைப் பார்க்க முடியும். பாதங்களில் உண்டாகும் கால்ஆணிக்கும், உதட்டில் தோன்றும் வெடிப்புகளுக்கும், நாவில் உண்டாகும் சிறு புண்களுக்கும் அம்மான் பச்சரிசிப் பாலை தடவலாம்.

சிறிய கட்டிகள், வீக்கங்களுக்கு பற்றுப் போடலாம். பாதங்களில் உண்டாகும் எரிச்சல், அரிப்புக்கு, அம்மான் பச்சரிசியை மஞ்சளோடு சேர்த்து அரைத்து, தேங்காய் எண்ணெய் கலந்து பாதங்களில் தடவினால், விரைவாக நிவாரணம் கிடைக்கும்.

துவர்ப்புச் சுவையுடைய செடியை அரைத்து, அதன் சாற்றோடு நீர் சேர்த்து வாய் கொப்பளிக்க, வாய்ப்புண்கள் மறையும். புண்களைக் கழுவும் நீராகவும் அம்மான் பச்சரிசி சேர்த்துக் கொதிக்க வைத்த நீரைப் பயன்படுத்தலாம் . தூதுவளை இலையுடன் இதன் சமூலத்தை (Note: என்றால் என்ன?) துவையல் செய்து சாப்பிட, உடல் சோர்வைப் போக்கும்.

தாய்ப்பாலைப் பெருக்குவதற்காக, இதன் சமூலத்தை அரைத்துப் பாலுடனும் வெண்ணெயுடனும் கலந்து கொடுக்கும் வழிமுறை பரவலாகப் புழக்கத்தில் இருக்கிறது. குளிர்ச்சியை உண்டாக்கும் செய்கையுடைய அம்மான் பச்சரிசியை அரைத்து மோரில் கலந்து குடிக்க, வெப்பம் தொடர்பான நோய்கள் அண்டாது. வித்தியாசமான பெயரைக் கொண்ட அம்மான் பச்சரிசி, மருத்துவ குணங்களிலும் வித்தியாசமானதுதான்!

கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்

https://tamil.thehindu.com/general/health/article24056827.ece

Link to comment
Share on other sites

மூலிகையே மருந்து 09: சிறுபீளையின் பெரும்பயன்!

 

 
09chnvksiru2jpg
 
 

பொங்கல் பண்டிகையின்போது ‘காப்புக்கட்டும்’ மூலிகைகளுள் சிறுபீளை முக்கியமானது. நமது ஆரோக்கியத்துக்கு சிறந்த காப்பாக அமையும் என்பதை உணர்த்துவதற்காகத்தான் ‘பண்டிகை காப்புக்கட்’டில் சிறுபீளைக்கு இடம் கொடுத்தது தமிழ்ச் சமுதாயம்.

 
 

‘கடுமையான காற்றுக்கும் உதிராமல் இருக்கும் பூ’ (வளிமுனைப் பூளை) என்று வலிமைக்கு எடுத்துக்காட்டாக சிறுபீளையை அகநானூறு குறிப்பிடுகிறது. ‘வரகரசி சோறுபோல பூளைப் பூ காட்சியளிக்கும்’ என பெரும்பாணாற்றுப்படை பதிவுசெய்துள்ளது.

பெயர்க் காரணம்: பொங்கப்பூ, பூளாப்பூ, சிறுகண்பீளை, பீளைசாறி, கற்பேதி, பாஷாணபேதி, கண்பீளை என சிறுபீளைக்கு நிறைய பெயர்கள் உண்டு. கற்களைக் கரைக்கும் வன்மையுடையதால் ‘கற்பேதி’ என்றும், கண்களிலிருந்து வெளியாகும் பீளைபோல இதன் பூக்கள் இருப்பதால் ‘கண்பீளை’ என்றும் பெயர் உருவானது.

அடையாளம்: சில அடிகள் உயரம்வரை நிமிர்ந்து வளரக்கூடிய சிறுசெடி வகை இது. இலைகளுக்கு இடையில் சிறுசிறு வெள்ளை நிறப் பூக்களைக் கொண்டிருக்கும். இலை, தண்டில் வெள்ளை நிற ரோம வளரிகள் காணப்படும். ‘ஏர்வா லானாட்டா’ (Aerva lanata) என்ற தாவரவியல் பெயர்கொண்ட சிறுபீளை ‘அமரந்தஸியே’ (Amaranthaceae) குடும்பத்துக்குள் அடங்கும். டானின் (Tannins), டிரைடெர்பீன் (Triterpenes), ஏர்வோஸைடு (Aervoside), ஏர்வைன் (Aervine), சுண்ணாம்புச்சத்து (Calcium), இரும்பு (Iron), வனிலிக் அமிலம் (Vanillic acid) போன்ற தாவர வேதிப்பொருட்கள் சிறுபீளையில் இருக்கின்றன.

உணவாக: சிறுபீளையோடு பனைவெல்லம் சம அளவு சேர்த்தரைத்து, நெல்லிக்காய் அளவு எடுத்து பாலில் கலந்து குடித்துவர, சிறுநீர் எரிச்சல் உடனடியாகக் குறையும். சிறுபீளை, நெருஞ்சில், மாவிலங்கப்பட்டை, வெள்ளரி விதை ஆகியவற்றை சேர்த்துத் தயாரிக்கப்படும் குடிநீரை அருந்த, சிறுநீர் நன்றாகப் பிரியும். சிறுநீர்ப்பெருக்கி செய்கை மட்டுமின்றி சிறுநீரகக் கற்களை கரைக்கும் (Lithotriptic) வன்மையும், சிறுநீரகப் பாதையில் உருவாகும் கிருமித் தொற்றுக்களை அழிக்கும் தன்மையும் சிறுபீளைக்கு உண்டு.

09chnvksiru1jpg
 

மருந்தாக: ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் சிறுபீளையானது பேஸில்லஸ் சப்டிலிஸ் (Bacillus subtilis), ஸ்டஃபிலோகாக்கஸ் ஆரெஸ் (Staphylococcus aureus) போன்ற பாக்டீரியாவுக்கு எதிராகச் செயல்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஈரல் தேற்றியாகவும் ஒவ்வாமையைத் தூண்டும் காரணிகளை அழிக்கும் சக்தியாகவும் சிறுபீளை செயல்படுகிறது. ரத்தத்தில் அதிகரித்திருக்கும் யூரியா, கிரியாடினின் அளவைக் குறைக்கும் தன்மை இதற்கு உண்டு என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடலில் நடைபெறும் வளர்சிதை மாற்றத்தைத் துரிதப்படுத்தி, உடலில் தேங்கும் கழிவை உடனடியாக வெளியேற்றும்.

‘அறுகு சிறுபீளை நெல்லோடு தூஉய்ச் சென்று…’ எனும் சங்கப்பாடல் வரி, சிறுபீளை, அறுகம்புல் பொடியைச் சாதத்தில் கலந்து சாப்பிட, இடுமருந்தால் ஏற்பட்ட பாதிப்புகள் முறியும் என்பதை பதிவிடுகிறது. நஞ்சுமுறிவு செய்கை குறித்தும், சிறுநீரகங்களில் அதன் செயல்பாடு குறித்தும் ஆழமான ஆய்வு, பாடலின் உண்மையை விளக்கும்.

வீட்டு மருந்தாக: அரிசிக் கஞ்சியில் சிறுபீளையைச் சேர்த்து கொதிக்க வைத்து ‘சூப்’ போல குடித்துவர உடலுக்கு வலிமையைக் கொடுக்கும். பிரசவ காலத்தை நெருங்கும் கர்ப்பிணிகளின் உடல் பலத்தைக் கூட்டுவதற்காக சிறுபீளைக் கஞ்சி வழங்கப்படுகிறது.

குழந்தைகளைக் குளிப்பாட்டும் நீரில் சிறுபீளை சமூலத்தை (முழு தாவரம்) போட்டுக் கொதிக்க வைத்துப் பயன்படுத்தினால், குழந்தைகளுக்குச் சுரம் தாக்காது என்பது கிராமங்களில் நிலவும் நம்பிக்கை. சிறுபீளையை உலரவைத்து தலைபாரம் உள்ளவர்கள் புகை போடவும் செய்கின்றனர்.

பாம்புக்கடிக்கான மருத்துவத்தில், சிறுபீளைச் சாறு அனுபானங்களில் ஒன்றாகப் பயன்படுத்தப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறுபீளைக் குடிநீரை இருமலைக் குறைக்கவும் தொண்டைப் புண்களைக் குணப்படுத்தவும் பயன்படுத்துகின்றனர். இதன் வேர்க் கஷாயத்தை கல்லீரல் சார்ந்த தொந்தரவுகளுக்கு ராஜஸ்தானிய பழங்குடிகள் பயன்படுத்துகின்றனர்.

பீளை வகைகளில் சிறுபீளை தவிர, பெரும்பீளை என்றொரு வகையும் உண்டு. வீக்கத்தைக் குறைப்பதற்கு பெரும்பீளையை குடிநீரிட்டுப் பருகலாம். மருத்துவரின் ஆலோசனைப்படி சிறுபீளையை அருந்தும் நாள் கணக்கு, அளவை அமைத்துக்கொள்வது நல்லது.

இத்தகைய சிறப்புடைய சிறுபீளையை சிறுபிள்ளைத்தனமாக ஒதுக்கலாமா?

கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்

https://tamil.thehindu.com/general/health/article24115320.ece

Link to comment
Share on other sites

மூலிகையே மருந்து 10: வைரம் பாயச் செய்யும் பிரண்டை

 

 
16chnvkpirandai1jpg

‘பார்ப்பதற்குப் பச்சை நிற ரயில்பெட்டிகளைப் போலத் தொடர்ச்சியாகக் காணப்படும். பற்றுக்கம்பிகளின் உதவியோடு தொற்றித் தொற்றி உயரமாக வளர்ந்துகொண்டே போகும். சதைப் பற்றுள்ள இந்த மூலிகை, எலும்புகளுக்கு உற்ற தோழன். அது என்ன?’ - இந்த மூலிகை விடுகதைக்கான பதில் ‘பிரண்டை!’. கிராம வேலிகளில் காட்சியளித்த பிரண்டை, இப்போது அனைத்து காய்கறிச் சந்தைகளின் வாயிலிலும் நமது நலம் காக்க காத்துக் கிடக்கிறது.

பெயர்க் காரணம்: வைரத்தைப் போல எலும்புகளுக்கு வலிமை அளிப்பதால் பிரண்டைக்கு ‘வஜ்ஜிரவல்லி’ என்றொரு பெயரும் உண்டு (வஜ்ஜிரம் – வைரம்). பொதுவாக நான்கு கோணங்களை உடைய சதுரப் பிரண்டை அனைத்து இடங்களிலும் காணப்படும். ஓலைப் பிரண்டை, உருட் பிரண்டை, இனிப்புப் பிரண்டை, புளிப்புப் பிரண்டை, முப்பிரண்டை எனப் பல வகைகள் உண்டு.

 
 

அடையாளம்: பற்றுக் கம்பிகளின் உதவியுடன் கொடியேறும் வகையைச் சார்ந்தது. சதைப்பற்றுள்ள தண்டுகள், பசுமையாகக் காட்சி தரும். வகைக்கு ஏற்ப பல்வேறு கோணங்களை உடைய தண்டுகளை உடையது. இதய வடிவ இலைகளோடு, சிவந்த நிறத்தில் உருண்டையான சிறுசிறு பழங்களைக் கொண்டிருக்கும். ‘சிஸ்ஸஸ் குவாட்ராங்குலாரிஸ்’ (Cissus quadrangularis) எனும் தாவரவியல் பெயர்கொண்ட பிரண்டை, ‘விடாஸியே’ (Vitaceae) குடும்பத்தைச் சார்ந்தது. கால்சியம், சைடோஸ்டீரால் (Sitosterol), இரிடாய்ட்ஸ் (Iridoids), குவர்சிடின் (Quercitin), கரோட்டின் (Carotene), குவாட்ராங்குலாரின் – ஏ (Quadrangularin – A) போன்றவை இதிலிருக்கும் தாவர வேதிப்பொருட்கள்.

உணவாக: பசியெடுக்காமல் தினமும் அவதிப்படுபவர்கள் பிரண்டைத் துவையலைச் சாப்பிடலாம். இளம் பிரண்டைத் தண்டிலிருக்கும் நாரை நீக்கிவிட்டு, நெய் விட்டு வதக்கி உப்பு, புளி, பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து துவையல்போலச் செய்து, நல்லெண்ணெய் சிறிது கலந்து சாப்பிட, செரிமானத் திறன் அதிகரித்து நல்ல பசி உண்டாகும். தண்டு மட்டுமன்றி, இலைகளைப் பயன்படுத்தியும் துவையல் செய்யலாம். முதிர்ந்த வயதில் தோன்றும் சுவையின்மை நோய்க்கும் பிரண்டைத் துவையல் பலன் கொடுக்கும்.

நெய் விட்டு அரைத்து வதக்கிய பிரண்டையைச் சிறுநெல்லி அளவு சாப்பிட்டுவர, மூல நோயில் உண்டாகும் ஆசனவாய் எரிச்சல், வலி, ரத்தம் வடிதல் விரைவாக மறையும். குடலில் இருக்கும் பூச்சிகளையும் அழிக்கும் தன்மை கொண்டது. பெண்களுக்கு மாதவிடாய்க் காலத்தில் உண்டாகும் உடல் சோர்வுக்கும் பிரண்டையை உணவில் சேர்த்து வரலாம்.

மருந்தாக: பிரண்டையின் சத்துக்கள், ரத்தத்தில் அளவுக்கு மீறி உலாவும் கொழுப்பு வகைகளைக் குறைப்பதற்குப் பயன்படுவதாக சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. உடற்பருமன், அது சார்ந்த பிரச்சினைகளுக்கு பிரண்டையின் செயல்பாடுகள் பலன் அளிக்குமா என்பது குறித்தும் நிறைய ஆய்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. உடலில் உண்டாகும் வீக்கங்களைப் போக்கும் தன்மை பிரண்டைக்கு இருக்கிறது. எலும்பு முறிவு ஏற்பட்ட பிறகு உண்டாகும் வலி, வீக்கத்தை இது விரைவாகக் குறைக்கும். முறிந்த எலும்புகள் ஒன்றுகூடும் செயல்பாடுகளை பிரண்டை துரிதப்படுத்துகிறது. இதிலிருந்து தயாரிக்கப்படும் ‘பிரண்டை உப்பு’ எனும் சித்த மருந்து, குடல் சார்ந்த நோய்களுக்குச் சிறந்த மருந்து.

வீட்டு மருந்தாக: பிரண்டைத் தண்டுகளை நறுக்கி, மோரில் உப்பு சேர்த்து வெயிலில் காய வைத்து, வடகமாகக் குளிர் காலத்தில் பயன்படுத்தி வர, கப நோய்கள் அவ்வளவு எளிதாக அணுகாது என்கிறது ‘தேரையர் காப்பியம்’ நூல். உடல் சோர்வு ஏற்பட்டாலே சுண்ணச் சத்துக் குறைபாடு என்று நினைத்து, தாமாகச் சென்று மருந்தகங்களில் கிடைக்கும் ‘கால்சியம்’ குளிகைகளை வாங்கிச் சுவைக்கும் போக்கு ஆபத்தானது. ரத்தத்தில் சுண்ணச் சத்தின் அளவை முறைப்படுத்த, உணவில் அவ்வப்போது பிரண்டையைச் சேர்த்து வருவதோடு, சிறிது சூரிய ஒளியும் போதும்.

16chnvkpirandai2jpg
 

பிரண்டையைத் தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் ‘எலும்பு அடர்த்திக் குறைவு’ நோயின் (Osteoporosis) வருகையைத் தள்ளிப்போடலாம். பற்களின் பலத்தையும் பிரண்டை அதிகரிக்கும் என்பதை மறக்க வேண்டாம். சிறுதுண்டு பிரண்டையின் மீது உப்புத் தடவி, நெருப்பில் காட்டி லேசாகப் பொரித்து, அதை நீரில் ஊறவைக்க வேண்டும். குழந்தைகளுக்கு உண்டாகும் வயிற்று உப்புசத்துக்கு, இந்த நீரைச் சிறிதளவு கொடுக்க உடனடி நிவாரணம் கிடைக்கும்.

சுளுக்கு, தசைப்பிடிப்பு உள்ள பகுதிகளில், பிரண்டையை அரைத்து, உப்பும் புளியும் சேர்த்து தண்ணீரில் இட்டுக் காய்ச்சி மிதமான சூட்டில் பற்றுபோடலாம். உடலின் நீர்ச்சத்தை அதிகரிப்பதற்காக, பிரண்டையின் இலைகள், தண்டுகளை முக்கிய மருந்தாக கேமரூன் நாட்டில் பயன்படுத்துகின்றனர். பிரண்டையின் தண்டு, இலைகளை உலரவைத்துப் பொடி செய்து, மிளகும் சுக்கும் சேர்த்து சாதப் பொடியாகப் பயன்படுத்த, செரிமானத்தை முறைப்படுத்தும்.

‘ஆறுசெல் மாக்கள் அறுத்த பிரண்டை…’ எனும் அகநானூற்றுப் பாடல், பிரண்டை பற்றிப் பதிவிடுகிறது. நெடுங்காலமாக நம்முடைய உணவு முறையில் முக்கியப் பங்கு வகித்த பிரண்டை, பல்வேறு சடங்குகளிலும் விழாக்களிலும் இடம்பிடித்திருக்கிறது. கணுப்பகுதியுடன் கூடிய பிரண்டைத் தண்டை மண்ணுக்குள் புதைத்து வைக்க, விரைவாக நமது ‘தோளைத் தாண்டி வளரும் பிள்ளையாக’ அது உருவெடுக்கும்.

கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்

https://tamil.thehindu.com/general/health/article24179273.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

மூலிகையே மருந்து 11: ‘தலை’ காக்கும் பொடு‘தலை!’

 

 
23chnvkmooligai1jpg

வேதி களைக்கொல்லிகள், பூச்சிக்கொல்லிகளின் ஆதிக்கத்துக்கு முன்பு, வயல் வரப்புகளில் நிறைய சிறுசிறு மூலிகைகள் நிரம்பியிருந்தன. தற்போது அவற்றில் பெரும்பாலானவை காணாமல் போய்விட்டன. வேதிப்பொருட்களின் வீரியத்தைத் தாண்டி சில மூலிகைகள் வளர்ந்தாலும், அவற்றைக் களைச் செடிகள் என்று மக்கள் பிடுங்கி எறிந்துவிடுகின்றனர். அவ்வாறு பலராலும் தவறாகக் கருதப்படக்கூடிய மூலிகைதான் ‘பொடுதலை’.

     
 

நோய்க்கான தீர்வைத் தனது பெயரிலேயே பொதிந்து வைத்திருக்கும் மூலிகை இது. தலையில் அரிப்புடன், வெள்ளை நிறப் பொக்கு உதிரும் பொடுகுத் தொல்லைக்கான அற்புதமான மருந்து பொடுதலை தாவரத்தில் இருக்கிறது.

பெயர்க் காரணம்: பொடுகுத் தொந்தரவுக்கு இதிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் பயன்படுவதால், ‘பொடுதலை’ எனும் பெயர் உருவானது. பொடுதிலை, பூற்சாதம், பூஞ்சாதம் ஆகிய வேறு பெயர்களும் பொடுதலைக்கு உண்டு. நீர் நிறைந்த பகுதிகளிலும் மழைக்காலத்திலும் தாராளமாக வளர்ந்து கிடக்கும் தரைபடர் பூண்டு வகை பொடுதலை.

23chnvkmooligai2jpg
 

அடையாளம்: தண்டு முழுவதும் சிறிய ரோம வளரிகள் காணப்படும். விளிம்புகளில் வெட்டுகள் கொண்ட சிறிய இலைகளை உடையது. காயானது திப்பிலிபோல இருந்தாலும், அளவில் சிறியதாக இருக்கும். கணுப்பகுதியில் வேர் உருவாகி தரையைப் பற்றிக்கொள்ளும். கருஞ்சிவப்புடன் வெண்ணிறம் கலந்த அழகான மலர்களை உடையது. ‘வெர்பினாசியே’ (Verbenaceae) குடும்பத்தைச் சார்ந்த பொடுதலையின் தாவரவியல் பெயர் ‘ஃபைலா நோடிஃபுளோரா’ (Phyla nodiflora). டிரைடெர்பினாய்ட்ஸ் (Triterpenoids), நோடிஃபுளோரிடின் (Nodifloridin), லிப்பிஃபுளோரின் (Lippiflorin), ரூடின் (Rutin) போன்ற வேதிப்பொருட்களும் இருக்கின்றன.

உணவாக: மூல நோய்க்கு இதன் இலையை நெய்யில் வதக்கி, உளுத்தம் பருப்பு சேர்த்துத் துவையலாகச் சாப்பிடலாம். மலமும் சிரமமின்றி வெளியேறும். இதன் இலைகளோடு சீரகம் சேர்த்து அரைத்து சாப்பிட, சிறுநீர் எரிச்சல் குறையும். பழைய அரிசியுடன், இதன் காயைச் சேர்த்து ஒரு கொதி மட்டும் வேகவைத்து, பின் வெந்த அரிசியைக் காயவைத்து நொய்யாக்கி, வயிறு மந்தத்துடன் அவதிப்படும் குழந்தைகளுக்குக் கஞ்சியாக்கிக் கொடுக்க பலன் கிடைக்கும். பொடுதலை இலைகளுடன் புதினா, கறிவேப்பிலை, இஞ்சி சேர்த்துத் துவையல்போலச் செய்து, சோற்றுடன் பிசைந்து சாப்பிட சுவாசக் கோளாறுகள் மறையும்.

23chnvkmooligai3jpg
 

மருந்தாக: தோலில் ஏற்படும் கருநிறத் திட்டுகளை (Hyper pigmentation) குறைப்பதற்குப் பொடுதலை பயன்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மெலனின் உற்பத்தியைத் தேவையான அளவுக்கு பொடுதலை முறைப்படுத்தும், பதற்றத்தைச் சாந்தப்படுத்தும் தன்மையைக் கொண்டிருப்பது (Anxiolytic), கொசுப்புழுக்களை அழிக்கும் தன்மை போன்ற திறன்களும் பொடுதலைக்கு இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

வீட்டு மருந்தாக: வறுத்த ஓமத்துடன் பொடுதலையைச் சேர்த்தரைத்து, நீர்விட்டு நன்றாகக் கொதிக்க வைத்து, ஒரு சங்கு அளவு கொடுக்க, குழந்தைகளுக்கு ஏற்படும் கழிச்சல், வயிற்றுவலி ஆகியவை கட்டுப்படும். பொடுதலைக் காயோடு மஞ்சள் சேர்த்து மையாக அரைத்து, அடிப்பட்ட புண்கள், கட்டிகள் மீது தடவலாம். சிறு கட்டிகளுக்கு, பொடுதலையைச் சிறிது நீர்விட்டு மசித்துக் கட்டலாம்.

23chnvkmooligai4JPG
 

பொடுதலையின் காய், இலையை இடித்துச் சாறு பிழிந்து, சம அளவு நல்லெண்ணெய் கூட்டி, சிறிது மிளகுத் தூள் சேர்த்து வெயிலில் வைத்து நன்றாக சுண்டச் செய்து, சாறு முழுவதும் வற்றியபின் எண்ணெயை எடுத்துக்கொள்ள வேண்டும். பொடுகுத் தொந்தரவு இருப்பவர்கள் இந்தத் தைலத்தைத் தலைக்குத் தேய்த்துக் குளித்துவர பொடுகு, தடமின்றி மறையும். மேலும் முழுத் தாவரத்திலிருந்து சாறு எடுத்துபின், நல்லெண்ணெய் கூட்டி அடுப்பில் வைத்துக் காய்ச்சி, இறுதியில் மிளகுத் தூள் சேர்த்தும் கூந்தல் தைலமாகப் பயன்படுத்தலாம். பூஞ்சைத் தொற்றுக்களை எதிர்க்கும் ஆற்றல் பொடுதலைக்கு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

‘தலை’க்கு வந்த நோயை விரட்டுவதால், மூலிகைக் குழுவுக்கு ‘தலை’மையேற்கும் பொறுப்பை பொடு‘தலை’க்கு வழங்கியுள்ளது இயற்கை எனச் சொல்லலாம்!

கட்டுரையாளர்,

அரசு சித்த மருத்துவர்

https://tamil.thehindu.com/general/health/article24231959.ece

Link to comment
Share on other sites

மூலிகையே மருந்து 12: செரிமானச் சிகரம் சுண்டைக்காய்!

 

 
30chnvksundai2JPG

‘சுண்டக்கா மாதிரி இருந்துக்கிட்டு என்ன வேலை பண்றான் பாரு’ எனும் சொலவடையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். சிறிதாக இருந்தாலும் நோய்களைப் போக்கும் மிகப் பெரிய வேலையைச் சுண்டைக்காய் செய்கிறது.

 

சுண்டைக்காயின் கசப்புத் தன்மை காரணமாக, அதன் பெயரைக் கேட்டவுடனே, காய்ந்த சுண்டை வற்றலைப் போல் பெரும்பாலோரின் முகமும் சுண்டிவிடுகிறது. கசக்கும் சுண்டைக்கு முகம் சுளிக்காமல் உணவில் இடமளிக்க, இனிக்கும் வாழ்வு நிச்சயம்!

பெயர்க் காரணம்: காய்கள் சுண்டிவிடும் தன்மை கொண்டவை என்பதால், ‘சுண்டை’ என்ற பெயர் உருவாகியிருக்கலாம். மலைச்சுண்டை, கடுகி, அமரக்காய் ஆகிய வேறு பெயர்களைக் கொண்டது சுண்டை. சுண்டையின் வகைகளில், மலைச்சுண்டை அதிகக் கசப்புச் சுவை கொண்டது, வீட்டுத் தோட்டங்களில் வளரும் பால் சுண்டைக்குக் கசப்புத் தன்மை சிறிது குறைவு. காட்டுச் சுண்டை, நஞ்சுச் சுண்டை, குத்துச் சுண்டை போன்ற வகைகளும் உண்டு.

அடையாளம்: ஓரளவு வளரும் பெருஞ்செடி வகை. அகன்று விரிந்த இலைகளில் சிறிய பிளவுகள் தென்படும். வெள்ளை நிறப் பூக்களைக் கொண்டிருக்கும். காய்கள் கொத்துக் கொத்தாகக் காய்க்கும். முட்கள் கொண்ட தாவரம். சுண்டையின் தாவரவியல் பெயர் ‘சொலானம் டார்வம்’ (Solanum torvum). இதன் குடும்பம் ‘சொலானேசியே’ (Solanaceae). ரூடின் (Rutin), கேம்ஃபெரால் (Kaempferol), குவர்செடின் (Quercetin), சொலாஜெனின் (Solagenin) போன்றவை இதிலுள்ள வேதிப் பொருட்கள்.

உணவாக: வற்றல் வகைகளில் சுண்டை வற்றலுக்கு என்றுமே தனி மரியாதை உண்டு. வயிற்றுவலி, உப்புசம், ஏப்பம், சுவையின்மை போன்ற செரியாமை சார்ந்த அறிகுறிகளைக் குணப்படுத்த, சுண்டை வற்றல் மட்டுமே போதும் என்கிறது சித்த மருத்துவம். உலர்ந்த சுண்டைக் காய்களைப் பிளந்து, உப்பு சேர்த்து தயிரில் கலந்து வெயிலில் காய வைத்து, நன்கு உலர்த்தி வற்றலாகச் செய்துகொள்ளலாம்.

குடல் பகுதிகளில் இருக்கும் கிருமிகளை அழித்து, செரிமானப் பாதையைப் பாதுகாக்கும் ‘மூலிகைக் காவலன்’ தான் சுண்டை. கழிச்சல் நோயைக் கட்டுக்குள் வைக்க சுண்டை வற்றலைப் பொடியாக்கி, மோரில் கலந்து சாப்பிடலாம். மந்தமான வயிற்றின் செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் இது உதவுகிறது. சுண்டையின் கசப்புச் சுவையை ஈடுகட்ட, பனைவெல்லம் சேர்த்துச் சாப்பிட்டலாம்.

30chnvksundai1JPG
 

மருந்தாக: இதன் காய்களுக்கு நுண்ணுயிர்க்கொல்லி செய்கை (Anti-microbial) இருப்பது ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுண்டையிலுள்ள டார்வனால் (Torvanol), டார்வோசைட் (Torvoside) போன்ற தாவர வேதிப்பொருட்கள், சில வகையான வைரஸ்களுக்கு எதிராகச் செயல்பட உதவுகின்றன. அதிக அளவு அமிலச் சுரப்புகளிலிருந்து வயிற்றுத் தசைகளுக்குப் பாதுகாப்பளிக்கும் சளி திரவத்தை (Mucus) சுரக்கச் செய்து, வயிற்றுப் புண்கள் ஏற்படாமல் (Anti-ulcerogenic) இதன் இலைச் சாறு தடுப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வீட்டு மருத்துவம்: முதிர்ந்த சுண்டையின் பழங்களை அரைத்து நெற்றியில் பற்றுப் போட, தலைவலி குறையும். முதிராத சுண்டையைச் சமைத்துச் சாப்பிட சளி, இருமல் மறையும். பசியைத் தூண்டுவதற்கான சித்த மருந்துகளில் சுண்டைக்காய் சேர்க்கப்படுகிறது. ‘சுண்டை வற்றல் சூரணம்’ எனும் சித்த மருந்து, குடல் சார்ந்த நோய்களைக் குணப்படுத்த உதவும். சுண்டை வற்றல், நெல்லி வற்றல், வெந்தயம், மாதுளை ஓடு, சீரகம், கறிவேப்பிலை… இவற்றை லேசாக வறுத்துப் பொடிசெய்து வைத்துக்கொண்டு, ஐந்து சிட்டிகை அளவு மோரில் கலந்து அருந்தினால் கழிச்சலும் ஆசனவாய் எரிச்சலும் குறையும். நார்ச்சத்து, புரதம், இரும்புச் சத்து, பொட்டாசியம், மாங்கனீஸ் போன்ற தனிமங்களும் சுண்டையில் அதிகம்.

‘என்ன சாப்பிட்டாலும் பிள்ளையின் உடம்புல ஒட்ட மாட்டேங்குதே’ என்று அங்கலாய்க்கும் பெற்றோர்கள், சுண்டைக்கு அவ்வப்போது உணவில் இடம் அளிக்கலாம். உணவின் சாரம் முறையாக உறிஞ்சப்பட்டு, உடலில் சதைப் பிடிக்க ஆரம்பித்துவிடும். சுண்டை இலைகளை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி வீக்கங்களில் வைத்துக் கட்டலாம். உடலின் வெப்பத்தைக் குறைக்க, இதன் இலைச் சாற்றைப் பருகலாம்.

தயிரோடு சேர்ந்து உலர்ந்துகொண்டிருந்த சுண்டை வற்றலை வீடுகளில் பார்ப்பது இப்போது அரிதாகிவிட்டது. சுண்டைக்காய் புளிக் குழம்பின் ருசியில் மயங்கிய கடந்த தலைமுறைக்கு, செரிமான நோய்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. வயிற்றுக்குள் குறுகுறுவென நடனமாடும் புழுக்களை அழித்து, செரிமானப் பகுதியைச் சுத்தம் செய்ய, சுண்டையைவிடச் சிறந்த உணவு இல்லை என்பதை இந்தத் தலைமுறையும் புரிந்துகொண்டால் செரிமான நோய்கள் தலை காட்டாது. சாப்பிட்டுப் பாருங்கள்… ‘சுண்டைக்காய் சூப்பர் காய்!’ என்பீர்கள்.

கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்

https://tamil.thehindu.com/general/health/article24298296.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

மூலிகையே மருந்து 13: நோய்களை மூக்கறுக்கும் முடக்கறுத்தான்

 

 
07chnvkm1jpg

முடக்கறுத்தான் இட்லி, முடக்கறுத்தான் தோசை, முடக்கறுத்தான் பிரியாணி என நவீன சமையல் உலகத்தில் நீக்கமற இடம்பிடிக்கத் தொடங்கியிருக்கும் மூலிகை முடக்கறுத்தான். ஏன் இவ்வளவு மவுசு இந்த மூலிகைக்கு? நோய்களைத் தகர்த்தெறியும் தன்மை முடக்கறுத்தானுக்கு அதிகம் எனும் உண்மை தீயாய்ப் பரவத் தொடங்கியிருப்பதே காரணம்.

 

பலூன் போன்ற அமைப்பிலிருக்கும் இதன் காய்களை, கைகளுக்கு இடையில் வைத்துத் தட்டும்போது பட்டாசு வெடிப்பதைப் போன்ற ஒலி உண்டாக்கும். இதன் காரணமாக சிறுவர்கள் மத்தியில் இதன் காய்களுக்கு, ‘பட்டாசுக் காய்’ என்றும் ‘டப்பாசுக் காய்’ என்றும் பெயருண்டு.

பெயர்க் காரணம்: உடலில் ஏற்படும் முடக்குகளை வேரறுக்கும் தன்மை இருப்பதால், முடக்கறுத்தான் (முடக்கு+அறுத்தான்) எனப் பெயர். கொற்றான், முடர்குற்றான், முடக்கற்றான், முடக்கொற்றான், முடக்குத் தீர்த்தான், உழிஞை போன்றவை இதன் வேறுபெயர்கள். வாத நோய்களுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழும் மூலிகை.

‘உழிஞை’ என்ற பெயரில் முடக்கறுத்தானின் வளரியல்பு பற்றி ‘நுண்கொடி உழிஞை’ என பதிற்றுப்பத்தும், ‘நெடுங்கொடி உழிஞை’ என புறநானூறும் விவரிக்கின்றன. போர்களின் போது, அரணை முற்றுகையிடும் அறிகுறியாக இதன் மலர்களை வீரர்கள் சூடிக்கொள்வார்களாம். உழிஞையின் பெயரில் ஒரு திணையே (உழிஞைத் திணை) அமைந்திருப்பது முடக்கறுத்தானின் பெருமைக்குச் சான்று.

அடையாளம்: பிளவுபட்ட இலைகளைக் கொண்டதாய் மெல்லிய தண்டு உடைய ஏறுகொடிவகையைச் சார்ந்தது. மணம் கொண்ட இலைகளையும், சிறுசிறு வெண்ணிற மலர்களையும் உடையது. இறகமைப்புக்குள் விதைகள் காணப்படும். ‘கார்டியோஸ்பெர்மம் ஹெலிகாகேபம்’ (Cardiospermum helicacabum) என்பது முடக்கறுத்தானுக்கு உரிய தாவரவியல் பெயர். ‘சாபின்டேசியே’ (Sapindaceae) குடும்பத்தைச் சார்ந்தது. முடக்கறுத்தான் தாவரத்தில் காலிகோஸின் (Calycosin), குவர்செடின் (Quercetin), அபிஜெனின் (Apigenin), ப்ரோடோகேடிகுயிக் அமிலம் (Protocatechuic acid) ஆகிய வேதிப்பொருட்கள் உள்ளன.

07chnvkm2jpg
 

உணவாக: சிறுவர்களுக்கு ‘பட்டாசுக் காய்’ கொடியாகப் பரவசப்படுத்தும் முடக்கறுத்தான், முதியவர்களுக்கோ வலிநிவாரணி மூலிகையாக உருமாறி ஆச்சர்யப்படுத்தும். வயோதிகத்தின் காரணமாக உண்டாகும் மூட்டு வலியைக் கட்டுப்படுத்துவதால், முதியவர்களின் மெனுவில் கட்டாயம் இடம்பெற வேண்டிய மூலிகை இது. முடக்கறுத்தான் இலைகளை சட்னி, துவையலாகச் செய்து சாப்பிடலாம். தோசைக்கு மாவு அரைக்கும் போதே கொஞ்சம் முடக்கறுத்தான் இலைகளையும் சேர்த்து அரைத்து, நோய் போக்கும் முடக்கறுத்தான் தோசைகளாகச் சுவைக்கலாம்.

முடக்கறுத்தான் இலைகளை நீரில் போட்டு நன்றாகக் கொதிக்க வைத்து, ‘கிரீன் – டீ’ சாயலில் உடல் சோர்வடைந்திருக்கும் போது பருக, உடனடியாக உற்சாகம் பிறக்கும். இதன் இலைகள், சீரகம், மிளகு, பூண்டு, வெங்காயம் கொண்டு செய்யப்படும் நறுமணம் மிகுந்த முடக்கறுத்தான் ரசம், மலக்கட்டு முதல் மூட்டுவலி வரை நீக்கும் செலவில்லா மருந்து. இதன் இலைகளைக் காயவைத்துப் பொடி செய்து வைத்துக்கொண்டு லேசான உடல் வலி, சோம்பல் இருக்கும்போது உபயோகப்படுத்தலாம். இதன் இலைப் பொடியை வெந்நீரில் கலந்து குடிக்க இருமல் விரைவில் நீங்கும்.

மருந்தாக: சுரமகற்றி செய்கையும் வலிநிவாரணி குணமும் இதற்கு உண்டு. ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகரிப்பதால் உண்டாகும் ‘கவுட்’ நோய்க்கான சிறந்த தீர்வினை முடக்கறுத்தான் வழங்கும். எலிகளில் நடைப்பெற்ற ஆய்வில், இதன் இலைச் சாறு ‘டெஸ்டோஸ்டிரான்’ அளவுகளை அதிகரிப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ‘சூலைப்பிடிப்பு… சொறி சிரங்கு… காலைத் தொடுவாய்வு…’ எனத் தொடங்கும் முடக்கறுத்தானைப் பற்றிய அகத்தியரின் பாடல், வாத நோய்கள் மற்றும் தோல் நோய்களுக்குச் சிறந்தது என்பதை விளக்குகிறது.

வீட்டு மருத்துவம்: நல்லெண்ணெயில் இதன் இலைகளைப் போட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயை அடிபட்ட இடங்களில் தடவ வலி குறையும். முடக்கறுத்தான் முழுத் தாவரம், வாத நாராயணன் இலைகள், நொச்சி வேர், பேய்மிரட்டி இலைகள் ஆகியவற்றைச் சேர்த்தரைத்து, நல்லெண்ணெயோடு சேர்த்துக் காய்ச்சித் தயாரிக்கப்படும் எண்ணெயை உடல் பிடிப்பு தைலமாகப் பயன்படுத்த வலி, சுளுக்குப் பிடிப்புகள் மறையும். கருப்பையில் உள்ள அழுக்குகளை முழுமையாக வெளியேற்ற, பிரசிவித்த பெண்களின் அடிவயிற்றுப் பகுதியில் முடக்கறுத்தான் இலைகளை அரைத்துப் பற்றுப் போடும் வழக்கம் அநேக இடங்களில் உண்டு.

ஈரப்பசை நிறைந்த மண்ணில் முடக்கறுத்தான் விதைகளை விதைக்க, சில வாரங்களிலேயே கொடியாகப் படர்ந்து தோட்டத்தையே ஒரு சுற்று சுற்றி வந்து, மேலும் படர்வதற்கு இடம் இருக்கிறதா என்று செல்லமாக விசாரிக்கும். அந்த முடக்கறுத்தான் கொடிக்கு, நாம் தேர் எல்லாம் கொடுக்க வேண்டாம்… பற்றி வளர வேலி அமைத்து கொடுத்தால் போதும். ஆரோக்கியத்தை வாரி வழங்கும் வள்ளல் ஆகும்!

கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்

https://tamil.thehindu.com/general/health/article24352695.ece

Link to comment
Share on other sites

மூலிகையே மருந்து 14: கோவை ‘குணம்’ காண்!

 

 
14chnvkkovai1jpg

 ‘இதழுக்கு உவமை… சுவையில் தனிமை… கொடி நளினத்தில் பதுமை… நோய்களுக்கு எதிராகக் கடுமை…’ இந்த மூலிகைப் புதிருக்கான விடை கோவைப் பழம். மருத்துவக் குணங்களோடு சேர்த்து, கண்களைக் கவரும் சில தாவர உறுப்புகளையும் பல காரணங்களுக்காக இயற்கை படைத்திருக்கிறது. அந்த வகையில் ‘கோவை’ எனப்படும் தாவரத்தின் பழம் செக்கச் சிவப்பாக அமைந்திருப்பது கண்களுக்கு விருந்து.

சங்க இலக்கியப் புலவர்களுக்கும் சரி, நவீனக் கவிஞர்களுக்கும் சரி… உதட்டுக்கும் சிவப்பு நிறத்துக்கும் உவமையாக அதிகம் பயன்பட்டது கோவைப் பழம்தான்! இதன் இலைகளையும் கரியையும் ஒன்றாக அரைத்து வகுப்பறையின் கரும்பலகையை மெருகேற்றிய வித்தை, முந்தைய தலைமுறை மாணவர்களுக்குச் சொந்தம்.

 

பெயர்க் காரணம்: ‘கொவ்வை’ என்ற வேறு பெயரும் கோவைக்கு உண்டு. இலக்கியங்களில் பெரும்பாலும் கொவ்வை என்ற பெயரே அதிகம் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்…’ எனும் வரி சிறந்த எடுத்துக்காட்டு. கொவ்வை என்பது மருவி, கோவையாக பெயர் பெற்றது. கோவை என்றால் ‘தொகுப்பு’ என்று பொருள்.

அடையாளம்: பற்றுக்கம்பிகளின் உதவியுடன் ஏறும் மெல்லிய தண்டு கொண்ட கொடி வகை. நீண்ட இலைக்காம்பு கொண்டது. பச்சை நிறக் காய்களில் வரிகள் ஓடியிருக்கும். பழங்களாக உருமாறும்போது செக்கச் சிவந்த நிறத்தை அடையும். பூமிக்கடியில் கிழங்கு இருக்கும். ‘காக்சினியா கிராண்டிஸ்’ (Coccinia grandis) என்பது கோவையின் தாவரவியல் பெயர். ‘குகர்பிடேசியே’ (Cucurbitaceae) குடும்பத்தைச் சேர்ந்தது. சாபோனின்ஸ் (Saponins), ஃபிளேவனாய்ட்ஸ் (Flavonoids), ஸ்டீரால்கள் (Sterols) போன்ற வேதிப்பொருட்கள் இதில் உள்ளன. மூவிரல் கோவை, ஐவிரல் கோவை, நல்லக் கோவை, பெருங் கோவை, கார்க் கோவை, கருடக் கோவை, இனிப்புக் கோவை, மணற் கோவை, அப்பக் கோவை போன்ற வகைகளும் உண்டு.

உணவாக: இதன் காயைப் பச்சையாகச் சமையலில் சேர்த்தும் வற்றலாக உலரவைத்தும் பயன்படுத்தலாம். காய்களை வெயிலில் உலர வைத்து, எண்ணெயிலிட்டு லேசாகப் பொறித்த வற்றலுக்கு, சளியை வெளியேற்றும் குணம் உண்டு. சுவையின்மைக்கு கோவைக் காய் வற்றல் சிறந்த தொடு உணவு. கோவைக் காயில் செய்யப்படும் ஊறுகாய் நெடுங்காலமாக வழக்கத்தில் இருக்கிறது. கோவைக் கிழங்கை உணவில் சேர்த்து வர, கப நோய்களின் வீரியம் குறையும். கோவைக்காயைக் கொண்டு செய்யப்படும் அவியல், துவையல் போன்றவை பழங்காலம் முதலே பிரசித்தம்.

14chnvkkovai2jpg
 

மருந்தாக: இதன் பழங்களுக்கு இருக்கும் எதிர்-ஆக்ஸிகரணி தன்மை குறித்து ஆய்வுகள் நடைப்பெற்றிருக்கின்றன. குளுக்கோஸ் வளர்சிதை சுழற்சியில் இருக்கக்கூடிய சில நொதிகளைக் கட்டுப்படுத்தி, ரத்தச் சர்க்கரை அளவைக் குறைக்க உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ‘இனிப்பு நீர்… கூட்டோடு அகற்றும்… கோவைக் கிழங்கு காண்…’ எனும் பாடலில் சுட்டப்பட்டுள்ள இனிப்பு நீர், நீரிழிவு நோயில் முக்கிய குறிகுணமான அதிகமாகச் சிறுநீர்க் கழிதல், சிறுநீரில் சர்க்கரை கலந்து வெளியேறுவதைக் குறிப்பதாக இருக்கலாம்.

கோழையகற்றி, இசிவகற்றி, வியர்வைப் பெருக்கி போன்ற செய்கைகளை உடையது கோவை. ‘கொவ்வை சிவப்புக் கொடியின்… மூலமிவை செம்பு’ எனும் தேரையர் அந்தாதி பாடல், செம்புச் சத்து நிறைந்த மூலிகைகளைப் பட்டியலிடுகிறது. அதில் ‘கோவை’ இடம்பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டு மருந்தாக: வியர்வை வெளியேறாமல் அவதிப்படுபவர்கள், இதன் இலைச் சாற்றை உடலில் பூசலாம். வேனிற் காலத்தில் உடலில் கொப்புளங்கள் உருவாகும்போது, நுங்குச் சாற்றுடன் கோவை இலைச் சாற்றையும் அரைத்து உடல் முழுவதும் தடவலாம். இதன் இலையை குடிநீரிலிட்டோ இலையை உலர வைத்துப் பொடி செய்தோ சிறிதளவு தண்ணீரில் கலந்து வழங்க, கண்களுக்குக் குளிர்ச்சி கிடைக்கும். சிறுநீர் அடைப்பு குணமாகும். கோவைக்காயை வாயிலிட்டு நன்றாகச் சவைத்த பின் துப்ப, நாக்கு - உதடுகளில் உண்டாகும் புண்கள் குணமாகும். சிறுநீர் எரிச்சலை குணமாக்க, கோவைக் கொடியை இடித்துச் சாறெடுத்து, வெள்ளரி விதைகள் கலந்து கொடுப்பது சில கிராமங்களில் முதலுதவி மருந்து. இதன் இலைச் சாற்றை வெண்ணெயோடு சேர்த்தரைத்து சொறி, சிரங்குகளுக்குப் பூசும் உத்தியை காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் பின்பற்றுகின்றனர்.

உதட்டைச் சிவப்புக்கு உதாரணமான கோவை, உடலைச் சிறப்பாக்கும்!

கட்டுரையாளர்,

அரசு சித்த மருத்துவர்

https://tamil.thehindu.com/general/health/article24418226.ece

Link to comment
Share on other sites

மூலிகையே மருந்து 15: நலம் தரும் நெருஞ்சில்!

 

 
mooligaijpg

கண்கவரும் கிராமத்துப் பசுமையையும் ஆங்காங்கே துள்ளியோடும் ஓடை நீரின் சலனத்தையும் ரசித்துக்கொண்டு, வயல் வரப்புகளில் காலணி அணியாமல் மெய்மறந்து நடந்துகொண்டிருந்தபோது, ‘நறுக்கென்று’ நமது பாதங்களைச் சில முட்கள் பதம் பார்த்திருக்கும். ஆழமான நமது ரசனைக்குத் தடைபோட்ட அந்த முட்கள், நெருஞ்சில் தாவரத்துக்குச் சொந்தமானவை!

வாழ்வின் சிறு பகுதியாவது கிராமத்தில் கழித்தவர்களுக்கு, மூலிகை சார்ந்த நினைவுகள், பல இயற்கைக் கதைகள் பேசும். இன்று கதை பேசவிருக்கும் கிராமத்து மூலிகை நெருஞ்சில்!

 

பெயர்க் காரணம்: திரிகண்டம், நெருஞ்சிப்புதும், சுவதட்டம், கோகண்டம், காமரசி, கிட்டிரம், சுதம் போன்ற வேறு பெயர்களும் நெருஞ்சிலுக்கு உண்டு. யானையின் கொழுப்புப் படிமம் நிறைந்த பாதங்களைத் துளைத்து, யானையைத் தலை வணங்கச் செய்வதால் ‘யானை வணங்கி’ என்ற பெயரும், காமத்தைப் பெருக்கும் தன்மை இருப்பதால், ‘காமரசி’ எனும் பெயரும் இதற்கு உள்ளன.

அடையாளம்: மண் தரையில் பசுமையாகப் படரும் முட்கள் கொண்ட தரைபடர் செடி. தாவரம் முழுவதும் வெண்ணிற ரோம வளரிகள் காணப்படும். மலர்கள் மஞ்சள் நிறத்தில் தோற்றமளிக்கும். இதன் தாவரவியல் பெயர் ‘டிரிபுலஸ் டெரஸ்ட்ரிஸ் (Tribulus terrestris)’. ஜைகோபில்லேசியே (Zygophyllaceae) குடும்பத்தைச் சேர்ந்தது. ஹெகோஜெனின் (Hecogenin), ஸாந்தோசைன் (Xanthosine), பீட்டா சைடோஸ்டீரால் (Beta – sitosterol), டையோசின் (Dioscin), டையோஸ்ஜெனின் (Diosgenin) ஆகிய தாவர வேதிப்பொருட்களைக் கொண்டிருக்கிறது.

உணவாக: நெருஞ்சில் செடியை அரிசியோடு சேர்த்து வேக வைத்து, வடித்த கஞ்சியோடு நாட்டுச் சர்க்கரை கலந்து கொடுக்க, சிறுநீர் எரிச்சல், வெள்ளைப்படுதல் நோய் குணமாகும். குளிர்ச்சித் தன்மை கொண்ட நெருஞ்சில், சிறுநீர்ப் பெருக்கியாகச் செயல்பட்டு, உடலின் வெப்பத்தை முறைப்படுத்தும்.

சிறுநீரகக் கற்களை உடைத்து வெளியேற்றப் பயன்படும் தாவரங்களுள் நெருஞ்சில் முக்கியமானது. ‘நீர்க்கட்டு துன்மாமிசம் கல்லடைப்பு… நெருஞ்சிநறும் வித்தை நினை’ எனும் அகத்தியரின் பாடல், நீரடைப்பு, சதையடைப்பு, கல்லடைப்பு சார்ந்த அறிகுறிகளைக் குறைப்பதில் நெருஞ்சில் சிறந்தது என்பதை வலியுறுத்துகிறது.

மருந்தாக: டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனின் அளவை நெருஞ்சில் விதைகள் அதிகரிப்பதாக ஆய்வுகள் அறுதியிட்டுக் கூறுகின்றன. செர்டொலி செல்களைத் தூண்டி, விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் தன்மை நெருஞ்சிலுக்கு இருக்கிறது. ஆண்மைப் பெருக்கி மருந்துகளில் நெருஞ்சில் விதைகளுக்கு நீங்கா இடம் உண்டு. கல்லீரலைப் பலப்படுத்தும் மூலிகையாக சீன மருத்துவம் நெருஞ்சிலைப் பார்க்கிறது.

வீட்டு மருந்தாக: நெருஞ்சில் செடியை அரைத்து வெள்ளாட்டுப் பாலில் ஊற வைத்து வடிகட்டி, தேனில் கலந்து கொடுக்க ஆண்மை அதிகரிக்கும் என்கிறது சித்த மருத்துவம். நெருஞ்சில் விதைப் பொடி, நீர்முள்ளி விதைப் பொடி, வெள்ளரி விதைப் பொடி ஆகியவற்றை ஒன்றுசேர்த்து பாலில் கலந்து குடித்துவர, விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

நல்ல உறக்கத்தை வரவழைக்க, நெருஞ்சில் பொடியைப் பாலில் கலந்து இரவில் குடித்து வரலாம். நெருஞ்சில் விதைகளையும் கொத்துமல்லி விதைகளையும் சம அளவு எடுத்து, கஷாயமாக்கிப் பருக, வேனிற் கால நோய்கள் கட்டுப்படும். நெருஞ்சில் பொடி கொண்டு தயாரிக்கப்படும் நெருஞ்சில் பானத்தை, சுரத்தைக் குறைப்பதற்காக காஷ்மீர் பகுதி மக்கள் பயன்படுத்துகின்றனர்.

நெருஞ்சில் குடிநீர்: நெருஞ்சில் தாவரத்தைக் காய வைத்துக் குடிநீராகக் காய்ச்சி வெயில் காலத்தில் குடிக்க உடல் வெப்பத்தைக் குறைத்துக் குளிர்ச்சியை உண்டாக்கும். கல்லடைப்பு நோயால் உண்டாகும் குறிகுணங் களைக் குறைக்கவும், சுரத்தைத் தணிக்கவும் உதவும். உடலில் உண்டாகும் வீக்கங்களைக் குறைக்க இன்றும் கிராம மக்கள் பயன்படுத்தும் மருந்து நெருஞ்சில் குடிநீர்தான்.

இரண்டு கைப்பிடி அளவு யானை நெருஞ்சில் இலைகளை 200 மி.லி. நீரில் ஊறவைத்து மூன்று தேக்கரண்டி சர்க்கரை கலந்து, சிறிது நேரம் கலக்க, நீர் வெண்ணெய் போல் குழகுழப்பாகும். அந்த நீரைப் பருக உடல் மிகுந்த குளிர்ச்சி அடையும். வெண்புள்ளி நோய்க்கு, இந்தக் கலவையை மருந்தாகப் பாரம்பரிய வைத்தியர்கள் பயன்படுத்துகின்றனர்.

இனி, உங்கள் பாதங்களில் முள் குத்தும்போது, அந்த முள்ளை எடுத்துக் கவனித்துப் பாருங்கள். ‘உங்கள் பாதங்களுக்கு வலியைக் கொடுத்த நான், பல நோய்களின் வலியை நீக்குவேன்’ என்ற உண்மையை ஆவலுடன் தெரிவிக்கும். நெருஞ்சி நெருக்கமாகும்!

கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்

https://tamil.thehindu.com/general/health/article24480837.ece

Link to comment
Share on other sites

மூலிகையே மருந்து 16: ஆரோக்கியத்துக்கு வேராகும் வெட்டிவேர்

 

 
vettiverjpg

‘வெட்டிவேரு வாசம்… வெடலப்புள்ள நேசம்…’ பாடல் மட்டுமல்ல, அந்தப் பாடல் உருவாக அடிப்படையாக இருந்த ‘வெட்டிவேர்’ எனும் வாசனைமிக்க மூலிகையும் மனதுக்கு இதமளிக்கக்கூடியதுதான். தாவர உறுப்புகளில் மலர்கள், இலைகள் ஆகியவை நறுமணம் பரப்புவதைப் போல, வெட்டிவேர் தாவரத்தில் அதனுடைய வேர்களும் மணம் பரப்பும் சிறப்புடையவை. ‘சப்தவர்க்கம்’ என்ற தாவரக் குழுவில் வெட்டிவேர் இடம்பிடித்திருக்கிறது.

தண்ணீரை இயற்கையாகக் குளிரூட்ட மற்றும் சுத்திகரிக்கப் பயன்படும் மூலிகைகளுள் வெட்டிவேர் முக்கியமானது. முற்காலத்தில் வாசனைக்காகக் கூந்தலில் வெட்டிவேரைச் சூடிக்கொள்ளும் வழக்கம் பெண்களுக்கு இருந்திருக்கிறது. வெப்ப நோய்களைக் குணமாக்க, நெடுங்காலமாகப் பயன்பட்டு வரும் மூலிகை வெட்டிவேர். நீர் மேலாண்மை, அழகியல், மருத்துவம் என அன்றாட வாழ்க்கையோடு கலந்து, நமது இல்லங்களில் மணம் பரப்பும் மூலிகை, வெட்டிவேர். ஆனால் இப்போது அதன் பயன்பாடு வெகுவாகக் குறைந்துவிட்டது. புதைந்திருக்கும் வெட்டிவேரின் பெருமைகளை மீண்டும் வெட்டி எடுப்போமா?

 

பெயர்க்காரணம்: விழல்வேர், விரணம், இருவேலி, குருவேர் போன்ற வேறு பெயர்களை உடையது வெட்டிவேர். புல்லுக்கும் வேருக்கும் இடைப்பட்ட பகுதியை வெட்டி எடுத்து பயிரிடப் பயன்படுவதால் ‘வெட்டிவேர்’ எனப் பெயர். ஆற்றங்கரைகளின் இருபுறங்களிலும் வேலியாக அமைந்து மண் அரிப்பைத் தடுப்பதற்காகப் பயன்பட்டதால் ‘இருவேலி’ எனும் பெயர் ஏற்பட்டிருக்கலாம். 

அடையாளம்: புல் இனத்தைச் சார்ந்த வெட்டிவேர், நீர்ப் படுகைகளில் செழிப்பாக வளரும் தன்மை கொண்டது. நீளமான இதன் இலைகள், ஐந்தடி வரை தாராளமாக வளரும். வெட்டிவினின் (Vetivenene) வெட்டிவோன் (Vetivone), குஷிமோன் (Kushimone) ஆகிய தாவர வேதிப்பொருட்களை உள்ளடக்கியது. இதன் இலைகளிலிருக்கும் சைசனால் (Zizanal) மற்றும் எபிசைசனால் (Epizizanal) போன்ற ஆல்டிஹைட்கள், இயற்கை பூச்சிவிரட்டியாகச் செயல்படக்கூடியவை. வெட்டிவேரின் தாவரவியல் பெயர் ‘வெட்டிவேரியா சைசானியோய்ட்ஸ்’ (Vetiveria zizanioides). இதன் குடும்பம் ‘பொவாசியே’ (Poaceae).

உணவாக: பனைவெல்லம் மற்றும் தண்ணீர் கலந்து தயாரிக்கப்படும் வெட்டிவேர் பானத்தை, மண்பானையில் வைத்துப் பருக, இரைக்குழலில் இறங்கும்போதே குளிர்ச்சியை உணர வைக்கும். வெட்டிவேரை நீரில் நன்றாக ஊறவைத்துத் தயாரிக்கப்படும் சர்பத், சுவையிலும் மருத்துவக் குணத்திலும் சளைத்ததல்ல. செரிமானத்தை எளிமையாக்க, வெட்டிவேர் மற்றும் சீரகம் சேர்த்துக் கொதிக்க வைத்த நீரை அருந்தலாம். இதன் வேரைக் கொண்டு தயாரிக்கப்படும் கஷாயத்தை உடலுக்குப் பலம் கொடுக்கும் டானிக்காக உபயோகிக்கலாம்.

மருந்தாக: இதிலிருந்து பிரித்தெடுக்கப்படும் நறுமண எண்ணெய்க்கு, தோலில் ஏற்படும் கருந்திட்டுக்களைக் குறைக்கும் தன்மை இருப்பதாக ஆய்வுகள் நிரூபிக்கின்றன. Cedr-8-en-13-ol எனும் பொருள் இதற்குக் காரணமாகிறது. வாகனப் புகை, தொழிற்சாலைப் புகை என பல்வேறு மாசுகளிருந்து வெளியேறி அழியாமல் நமது சூழலோடு கலந்திருக்கும் ‘பென்சோ-பைரீன்’ (Benzo-pyrene) எனப்படும் புற்று விளைவிக்கும் பொருளின் வேதி-இணைப்பை உடைக்கும் தன்மை வெட்டிவேருக்கு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் சுற்றுச் சூழலுக்கும் உடலுக்கும் மிகுந்த நன்மை செய்கிறது. நிலவேம்புக் குடிநீரில், பித்தத்தைத் தணிக்கும் தத்துவார்த்த அடிப்படையில் வெட்டிவேர் சேர்க்கப்படுகிறது.

வீட்டு மருத்துவம்: மண்பானை தண்ணீரில் சிறிது வெட்டிவேரைச் சேர்த்து ஊறவைக்க, நீருக்குச் சுவையும் பலன்களும் பலமடங்கு கூடும். செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயில், வெட்டிவேர், ஆவாரம் பூ, சடாமஞ்சி போன்ற மூலிகைகளைச் சேர்த்து ஊறவைத்து, முடித் தைலமாக உபயோகிக்க, தலைமுடிக்குக் கூடுதல் ஆரோக்கியம் கிடைக்கும். வெட்டிவேர், ஆவாரம் பூ, ரோஜா இதழ்கள், செம்பருத்தி இதழ்கள் ஆகியவற்றை நன்றாக உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு தண்ணீரில் குழைத்து  ‘ஃபேஸ்-பேக்’ போல முகத்துக்குப் பயன்படுத்த, முகம் பொலிவடையும். வியர்வை நாற்றத்தைத் தடுக்க, குளிக்கும் நீரில் வெட்டிவேரை ஊறவைத்துக் குளிக்கலாம். வெட்டிவேர் நாரினை ஸ்கரப்பராகவும் குளிக்கும்போது பயன்படுத்தலாம்.

‘வாச வெட்டிவேர் விசிறி வன்பித்த கோபமோடு…’ எனத் தொடங்கும் பாடல், வெட்டிவேரால் செய்யப்பட்ட விசிறியால், உடலில் உண்டாகும் எரிச்சல், அதிதாகம் மற்றும் வெப்பம் காரணமாக உண்டாகும் நோய்கள் குறையும் என்பதைப் பதிவிடுகிறது. சாளரங்களில் வெட்டிவேரால் செய்யப்பட்ட தட்டிகளைத் தொங்கவிட்டு, லேசாக நீர்த் தெளிக்க, நறுமணம் கமழும் இயற்கைக் காற்று இலவசமாகக் கிடைக்கும். வெட்டிவேரால் செய்யப்பட்ட பாய்களும் இப்போது பிரபலமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

ஆக, வெட்டிவேர்… வெட்டியான வேர் அல்ல!

https://tamil.thehindu.com/general/health/article24538964.ece

Link to comment
Share on other sites

மூலிகையே மருந்து 17: நாடி வரும் நலம்… நன்னாரி!

 

 
mooligaijpg

பச்சை நிற இலைகளில், வெண்ணிறத்தில் வரிகள் கொண்டிருக்கும் பேரழகான மூலிகை நன்னாரி. ‘அட்ட வகை’ எனும் மூலிகைத் தொகுப்பில் நன்னாரியும் ஒன்று.

அந்தக் காலத்தில் திருவிழாக்கள் தொடங்கி திருமண நிகழ்வுகள் வரை மக்களின் விருப்ப பானமாக இருந்த நன்னாரி சர்பத், பாரபட்சமின்றி ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுத்தது. பன்னாட்டுக் குளிர்பானங்களின் வருகையால் சரிந்த நன்னாரி பானத்தின் மகத்துவத்தை மீட்டெடுப்பது இனி நோயில்லாமல் வாழ்வதற்குக் கட்டாயம். சில்லென்ற குளிர்ச்சியை உடல் உறுப்புகளுக்கு வழங்க, குளிரூட்டும் இயந்திரங்கள் தேவையில்லை, ஐஸ்கட்டிகள் அவசியமில்லை… நன்னாரி பானம் போதும்.

 

பெயர்க்காரணம்: அங்காரிமூலி, நறுநெட்டி, பாதாளமூலி, பாற்கொடி, வாசனைக் கொடி, சாரிபம், கோபாகு, சுகந்தி, கிருஷ்ணவல்லி, நீருண்டி போன்றவை நன்னாரியின் வேறு பெயர்கள். இந்தத் தாவரத்தில் பால் இருக்கும் என்பதால் ‘பாற்கொடி’ என்றும், வாசனையைக் கொடுப்பதால் ‘சுகந்தி’ என்றும் பூமிக்குள் வளரும் இதன் வேர்த்தொகுப்பைக் கருத்தில்கொண்டு ‘பாதாளமூலி’ என்ற பெயரும் இதற்கு அமைந்தது. நாட்டு நன்னாரி மற்றும் சீமை நன்னாரி போன்ற வகைகளும் உள்ளன.

உணவாக: குளிர்காலத்துக்கு தூதுவளைத் துவையல் போல, வெயில் காலத்துக்கு நன்னாரித் துவையல், காலத்துக்கேற்ற நோய் நீக்கும் உணவு. நன்னாரித் தாவரம் முழுவதையும் எடுத்து, நெய்யிட்டு வதக்கி, மிளகு, இந்துப்பு, சிறிது புளி சேர்த்து, துவையலாகச் செய்து கொள்ளலாம். அதிகரித்திருக்கும் பித்தத்தைக் குறைக்க, நன்னாரித் துவையல் உதவும். பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதலைக் குணப்படுத்துவதோடு, அதன் காரணமாக உடலில் தோன்றும் நாற்றத்தையும் நீக்கும்.

அவ்வப்போது நன்னாரியைச் சமையலில் சேர்த்துவர, உடலின் வெப்பச் சமநிலை முறைப்படுத்தப்படும். நன்னாரி, பனைவெல்லம், எலுமிச்சைச் சாறு, தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்துத் தயாரிக்கப்படும் ‘நன்னாரி சர்பத்’ அனைவரது வீட்டிலும் புழங்க வேண்டிய மூலிகை பானம். நன்னாரி சர்பத் என்ற பெயரில் சாலையோரக் கடைகளில் கிடைக்கும் கலர் கலரான சாயங்கள் தரமானவை அல்ல. இயற்கையாகத் தயாரிக்கப்படும் நன்னாரி சர்பத்தின் நிறம் இளஞ்சிவப்பு.

மருந்தாக: புற்றுநோய் செல்களுக்கு எதிராகச் செயல்படும் தன்மையும் (Anti-tumour activity), பாக்டீரியா வளர்ச்சியைத் தடுக்கும் ஆற்றலும் நன்னாரிக்கு இருப்பதாக உறுதிப்படுத்துகின்றன ஆய்வுகள். ‘ஹெலிகோபாக்டர் பைலோரி’ பாக்டீரியாவை அழித்து, வயிற்றுப் புண்கள் ஏற்படாதவாறு நன்னாரி சேர்ந்த மருந்துகள் பாதுகாக்கும்.

பல்வேறு காரணங்களால் கல்லீரலுக்கு உண்டாகும் பாதிப்புகளைத் தடுக்கும் வன்மையும் நன்னாரிக்கு இருக்கிறது. காயம் ஏற்பட்ட இடத்தில், புது செல்களின் உருவாக்கத்தை (Increases epithelisation) நன்னாரி தூண்டுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வீட்டு மருந்தாக: நன்னாரி வேரை ஒன்றிரண்டாக இடித்து, தண்ணீரில் ஊறவிட்டு, சிறிது கருப்பட்டி சேர்த்துப் பருக, செரிமானம் சீராகும். சுவைமிக்க இந்தப் பானத்தை, வளரும் குழந்தைகளுக்கு வழங்க, பசி அதிகரித்து உணவின் சாரம் முழுமையாக உட்கிரகிக்கப்படும். சிறுநீரகப் பாதை தொற்று காரணமாக ஏற்படும் சிறுநீர் எரிச்சல், சிறுநீர் அடைப்பு போன்ற அறிகுறிகளுக்கு, நன்னாரி வேரை உலர்த்திப் பொடித்து, பாலில் கலந்து அருந்த உடனடிக் குணம் கிடைக்கும்.

இதன் வேர்ப்பொடியைத் தேனில் குழைத்துச் சாப்பிட ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். நன்னாரி வேரை நன்றாக இடித்து, பாக்கு அளவு பாலில் கலந்து தொடர்ந்து சாப்பிட்டுவர, தேகத்தில் சுருக்கங்கள் அவ்வளவு சீக்கிரத்தில் உண்டாகாது என்கிறது ‘மூலிகை கற்பமுறை’. தண்ணீரைச் சுத்திகரிக்கப் பயன்படுவதோடு, ரத்தத்தையும் தூய்மையாக்க உதவும் சுத்திகரிப்பான், இந்த நன்னாரி.

ஒவ்வொரு முறை உணவருந்திய பிறகும், நன்னாரி வேர் ஊறிய நீரைக்கொண்டு வாய்க் கொப்பளிக்க, பற்களும் ஈறுகளும் பலமடையும்.

பூமிக்கு மேல் அழகிய கொடி… பூமிக்கு அடியில் மணம் வீசும் வேர் என நன்னாரி… நம் நலம் நாடி நிற்கிறது!

கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்

https://tamil.thehindu.com/general/health/article24600278.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

மூலிகையே மருந்து 18: நோயைத் துரத்தும் துத்தி

 

 
mooligaijpg

‘துத்தி’ என்ற பெயரைக் கேட்டவுடன், ஏதோ குழந்தையின் மழலை மொழி போல் காதில் கேட்கிறதா? இல்லை… அழகான பெயருடன் இயற்கை மொழி பேசும் அற்புதத் தாவரம்தான் துத்தி. குழந்தையின் மழலை மொழி தரும் இனிமையைப் போலவே, துத்தியின் உறுப்புகளும் தனது மருத்துவக் குணங்களின் மூலம் நமக்கு இனிமையை அள்ளிக்கொடுக்கும்.

கீரையாக, கிராமங்களில் அதிக அளவில் பயன்பாட்டிலிருக்கிறது. சாலையோரங்களில் சுமார் மூன்று அடிவரை வளர்ந்து, மஞ்சள் நிறப்பூக்களை ஏந்திக்கொண்டிருக்கும் நிறைய துத்திகளை இந்தப் பருவத்தில் தாராளமாகப் பார்க்க முடியும்.

 

பெயர்க்காரணம்: துத்தித் தாவரத்துக்கு கக்கடி, கிக்கசி, அதிபலா ஆகிய வேறுபெயர்கள் உள்ளன. ‘துத்தி’ என்றால் சாப்பிடக்கூடியது என்ற பொருளில் அகராதி பதிவுசெய்கிறது. சிறுதுத்தி, மலைத்துத்தி, பெருந்துத்தி, வாசனைத்துத்தி, அரசிலைத்துத்தி, கருந்துத்தி, பணியாரத்துத்தி, பொட்டகத் துத்தி எனப் பல வகைகள் உள்ளன.

அடையாளம்: அகன்ற இதய வடிவமுடைய இலைகளில், ரம்பங்கள் போன்ற விளிம்பு காணப் படும். புதர்ச் செடி வகை. பூக்கள் மஞ்சள் நிறத்தில் காட்சி தரும். தாவரத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ரோம வளரிகள் உள்ளன. சிறுபிளவுகள் கொண்ட பெரிய ‘தோடு’ போன்ற இதன் காய்கள் வித்தியாசமான தோற்றத்துடன் காட்சியளிக்கும்.

துத்தியின் தாவரவியல் பெயர் ‘அபுடிலன் இண்டிக்கம்’ (Abutilon indicum). இதன் குடும்பம் ‘மால்வாசியே’ (Malvaceae). அபுடிலின் - A (Abutilin-A), அடினைன் (Adenine), ஸ்கோபோலெடின் (Scopoletin), ஸ்கோபரோன் (Scoparone) ஆகிய தாவர வேதிப்பொருட்களைக் கொண்டுள்ளது.

உணவாக: ஆரம்ப நிலை மூலநோயைக் குணப்படுத்தக்கூடிய மூலிகைகளில், இனிப்புச் சுவையுடைய துத்திக்கு உயர்ந்த இடம் வழங்கலாம். துத்தி இலைகளோடு பொன்னாங்கண்ணி, மணத்தக்காளி, பாசிப்பருப்பு சேர்த்துச் சமைக்கப்படும் ‘கீரைக் கடையல்’ மூல நோயை ஆரம்பத்திலேயே வேரறுக்கும் மாமருந்து.

மூலநோயில் உண்டாகும் ரத்தக் கசிவு, ஆசனவாய் எரிச்சல், வலி முதலியன குணமாகும். தீய்ந்து கடினமாகி வெளியேறாமல் இருக்கும் மலத்தையும் இளக்கும். சிறுநீரையும் சிரமமின்றி வெளியேற்றும்.

‘கணீர் கணீர்’ என்ற ஒலியுடன் இருமல் துன்பப்படுத்தும்போது, இதன் பூக்களை நெய்விட்டு வதக்கிச் சாப்பிட விரைவில் நிவாரணம் கிடைக்கும். உணவு முறைக்குள் இதன் பூக்களைச் சேர்த்து வர, விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதை ‘துத்திமலரை நிதந்துய்க்கின்ற பேர்களுக்கு மெத்த விந்துவும் பெருகும்…’ எனும் பாடல் வரியின் மூலம் அறியலாம்.

குருதிப் பெருக்கை அடக்கும் செய்கை இருப்பதால் வாந்தியில் வரும் குருதியையும் ஆசனவாயில் வடியும் குருதியையும் நிறுத்தும். உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுத்து, பலத்தை உண்டாக்கும்.

மருந்தாக: நீரிழிவு நோய் உண்டாக்கப்பட்ட ஆய்வு விலங்குகளில், இன்சுலின் சுரப்பைத் துத்தி இலைச்சத்து அதிகரித்திருக்கிறது. துத்தியிலிருந்து பிரித்தெடுக்கப்படும் சத்துக்கள், மூளையில் ஏற்படும் புற்றுநோய் செல்கள் (Glioblastoma cells) மற்றும் பெருங்குடல் புற்று செல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தியதை ஆராய்ச்சிப் பதிவு செய்கிறது.

மனப் பதற்றத்தைக் குறைக்கும் தன்மையும் (Anxiolytic) துத்தி இலைகளுக்கு இருக்கிறது. ஆய்வகங்களில் கொசு இனங்களை அழிப்பதற்காக நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், துத்தி இலைகள் சிறந்த பலனைக் கொடுத்திருக்கின்றன. ஒவ்வாமை ஏற்படுத்தும் காரணிகளைக் கட்டுப்படுத்துவதால் (Mast cell stabilization), ஆஸ்துமா நோயின் குறிகுணங்களைக் குறைக்கப் பயன்படும்.

வீட்டு மருந்தாக: கட்டிகள், வீக்கங்களுக்கு இதன் இலைகளை விளக்கெண்ணெய் விட்டு வதக்கிக் கட்டலாம். சிறுநீரடைப்பு ஏற்படும் போது, துத்தி இலை மற்றும் சின்ன வெங்காயத்தை நீரிலிட்டுக் கொதிக்கவைத்து, அடிவயிற்றுப் பகுதியில் ஒத்தடம் இடலாம். வீக்கமுறுக்கி செய்கை இருப்பதால் வாத நோய்களுக்கும் சிறந்த மருந்தாகிறது.

குளிக்கும் நீரிலும் இதன் இலைகளைப் போட்டுக் கொதிக்க வைத்துப் பயன்படுத்த உடல் சுறுசுறுப்படையும். இலைகளை நீர்விட்டுக் கொதிக்கவைத்து, அதில் சிறிது உப்பு சேர்த்து வாய் கொப்புளிக்க, பல் ஈறுகளில் ரத்தம் வடிதல், ஈறுகளில் வீக்கம் முதலியவை மறையும். வெள்ளைப்படுதல் நோயைக் குணமாக்க இதன் விதைகளைக் குடிநீரிலிட்டுப் பயன்படுத்துகின்றனர். தோல் நோய்களைப் போக்கவும் இதன் விதை உள்ளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.

நோய்களைத் துரத்தி அடிக்கும் துத்தி, அனைவரது வீட்டிலும் இருக்க வேண்டிய அத்தியாவசிய மூலிகை!

கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்

https://tamil.thehindu.com/general/health/article24663620.ece

Link to comment
Share on other sites

மூலிகையே மருந்து 19: ஆரோக்கியத்தின் பூஞ்சோலை… வெட்பாலை!

 

 
mooligaijpg

‘முல்லையுங் குறிஞ்சியும் முறைமையிற் றிரிந்து… பாலை என்பதோர் படிவங் கொள்ளும்’ என்று சிலப்பதிகாரத்தில் சுட்டப்படும் பாலைத் திணைக்கு உரித்தான மரம் வெட்பாலை. பாலைத் திணைக்குரிய ஒழுக்கங்களை வெளிப்படுத்தும் சங்க இலக்கிய பாடல்களில், வெட்பாலை பற்றிய பதிவுகள் காணப்படுகின்றன. ‘தில்லை பாலை கல்லிவர் முல்லை’ என்று குறிஞ்சிப் பாட்டில் வெட்பாலைப் பூக்களைப் பற்றி கபிலர் குறிப்பிடுகின்றார்.

பெயர்க் காரணம்: பாலை, நிலமாலை, வெப்பாலை, வற்சம், குடசம் ஆகிய வேறு பெயர்களைக்கொண்டது. வறண்ட நிலத்தில் வளரும் மரம் என்பதாலும், பாலைத் திணைக்குரிய மரம் என்பதாலும் வெட்‘பாலை’ என்ற பெயர் உருவானது. சாலை ஓரங்களில் வெண்ணிற மரப்பட்டைகளுடன் நிறைய வெட்பாலை மரங்கள் இருப்பதைப் பார்க்க முடியும்.

 

அடையாளம்: இலைக் காம்பை உடைத்தால் பால் வெளியாகும். மலர்கள் வெண்மை நிறத்தில் மலரும். இதன் காய்கள், தலைகீழாகத் திருப்பிய ஆங்கில ‘V’ வடிவத்தில், கருமையான குச்சிகளாகக் காட்சி அளிக்கும். ‘குறடு’ போல இருக்கும் இதன் காய்களைப் பற்றி நற்றிணையில் பேசப்பட்டுள்ளது.

காய்க்குள் இருக்கும் அரிசிக்கு வெட்பாலை அரிசி என்று பெயர். மர வகையைச் சார்ந்த இதன் தாவரவியல் பெயர் ‘ரைடியா டிங்டோரியா’ (Wrightia tinctoria). ‘அபோசைனேசியே’ (Apocynaceae) குடும்பத்தைச் சார்ந்தது. ஃப்ளேவனாய்ட்கள் (Flavonoids), டானின்கள் (Tannins), பீனால்கள் (Phenols), ஸ்டிக்மாஸ்டிரால் (Stigmasterol), லுபியால் (Lupeol), ரைடியால் (Wrightial) போன்ற தாவர வேதிப் பொருட்களை உள்ளடக்கியது.

உணவாக: இது சுரத்தைக் குறைக்கும். சுரத்தால் உண்டாகும் உடல் களைப்பைப் போக்கவும், சோர்ந்திருக்கும் செரிமான உறுப்புகளைத் தூண்டிவிடவும் இதன் மரப்பட்டைக் குடிநீர் பயன்படும். வயிற்றுப் போக்கைக் குணப்படுத்த இதன் மரப்பட்டைகளோடு சீரகம் சேர்த்துக் குடிநீரிட்டு கொடுக்கலாம். வெட்பாலைக் காய்களுக்குள் இருக்கும் இனிப்புச் சுவைகொண்ட ‘வெட்பாலை அரிசிக்கு’ செரிமானத் தொந்தரவுகளைப் போக்கும் திறன் உண்டு.

துவர்ப்புச் சுவைமிக்க இதன் பட்டைக்கு, புழுக்களை அழிக்கும் சக்தியும், நஞ்சு முறிவு மற்றும் காமம் பெருக்கிச் செய்கையும் உண்டு. செதில் செதிலாகத் தோல் உதிரும் காளாஞ்சகப்படை (சோரியாஸிஸ்) நோயின் அறிகுறிகளைக் கட்டுப்படுத்தும் முதன்மையான மருந்து வெட்பாலை.

மருந்தாக: விலங்குகளில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று, வெட்பாலை அரிசி அதிக ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதாகவும், நல்ல கொழுப்பின் (HDL) அளவை அதிகரிப்பதாகவும் தெரிவிக்கிறது. ‘கால்சியம் சேனல் ப்ளாக்கராக’ செயல்பட்டு, ரத்தக் குழாயை விரிவடையச் செய்து அதிகுருதி அழுத்தத்தைக் குறைக்கிறது. இதன் இலைகளிலிருந்து பிரித்தெடுக்கப்படும் ‘இன்டிரூபின்’ (Indirubin) எனும் வேதிப்பொருளுக்குப் பூஞ்சைத் தொற்றுகளை அழிக்கும் செயல்பாடு இருப்பதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இலைகளிலிருக்கும் ‘ரைடியாடையோன்’ (Wrightiadione) எனும் பொருள், புற்று செல்களுக்கு எதிராகச் செயல்படுகிறது.

வீட்டு மருந்தாக: இதன் இலைகளை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து, புண்களைக் கழுவும் நீராகவும் பயன்படுத்தலாம். இதன் இலைக் காம்பை உடைத்தால் வெளிவரும் பாலை, காயங்களுக்குத் தடவ விரைவில் குணம் கிடைக்கும். காயங்கள் மட்டுமன்றி தோல் வறட்சிக்கும் இதன் பாலை வெளிப்பிரயோகமாகத் தடவும் வழக்கம் தொடர்கிறது.

ஆரம்ப நிலை பல் வலியைப் போக்க கிராமங்களில் இதன் இலையை அப்படியே மென்று சாப்பிடுகிறார்கள். கிராம்பு மற்றும் வெட்பாலை இலைகளைச் சேர்த்து மென்று சாப்பிடப் பல்வலி, பல்கூச்சம் மறையும். இலைகளை உலர வைத்து தேங்காய் என்ணெய்யுடன் குழப்பி, புண்களின் மேல் களிம்பாகப் பயன்படுத்தலாம். தோல் நோய் போக்கும் சோப்புகளில் வெட்பாலையின் சத்துகள் சேர்ந்திருப்பதைப் பார்க்கலாம். கூந்தலைக் கருமையாக்க, செயற்கைச் சாயங்களுக்கு மாற்றாக இதன் இலைகளை முடிச்சாயமாகப் பயன்படுத்தலாம்.

வெட்பாலை எண்ணெய்: வெட்பாலை இலைகளைச் சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு பெரிய பாத்திரத்தில் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் ஊற்றி, அதில் தேவையான அளவு நறுக்கி வைத்த வெட்பாலை இலைகளைப் போட்டு, ஏழு நாட்கள் காலை முதல் மாலை வரை வெயிலில் வைக்க வேண்டும். விரைவில் கருநீல நிறத்துடன் மருத்துவக் குணம் நிறைந்த வெட்பாலை எண்ணெய்யாக உருவெடுக்கும். நிறமற்றிருந்த எண்ணெய், எந்த வேதியல் கலவையின் உதவியுமின்றி கருநீல நிறத்துடன் மாறிய அதிசயத்தைப் பார்க்கலாம்.

வெட்பாலை நம் வாழ்வை ஆக்கும் பூஞ்சோலை!

கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்

https://tamil.thehindu.com/general/health/article24777908.ece

Link to comment
Share on other sites

மூலிகையே மருந்து 20: நலம் கூட்டும் ‘பொன்!’

 

 

 
mooligaijpg

பெயரிலேயே தங்கத்தை வைத்திருக்கும் ‘பொன்’னாங்காணி, நலத்தை வாரி வழங்கும் வகையில், தங்கத்தைவிட மதிப்புமிக்கது. நீர்ப்பாங்கான இடங்களில் கொட்டிக்கிடக்கும் ‘மூலிகைத் தங்கம்’ இது. கண்களின் ஆரோக்கியத்துக்கு நல்லது.

பெயர்க் காரணம்: கொடுப்பை, சீதை, சீதேவி, பொன்னாங்கண்ணி ஆகிய வேறு பெயர்களைக் கொண்டது பொன்னாங்காணி. இதை உணவாகத் தொடர்ந்து பயன்படுத்த பொன் போன்ற தேகத்தைக் காணலாம் என்ற பொருளில், பொன்னாங்காணி (பொன்+ஆம்+காண்+நீ) என்ற பெயர் உருவானது.

 

‘தங்கச் சத்து’ மிக்க மூலிகையாக அறியப்பட்டதால் பொன்னாங்காணி என அழைக்கப்படுகிறது. மீனுக்கு நிகராக இதன் இலைகளை உருவகப்படுத்தி, ‘கொடுப்பை’ (ஒரு வகை மீன்) எனும் பெயர் ஏற்பட்டிருக்கலாம். பொன்னாங்காணியில் நிறைய சிற்றின வகைகளும் உள்ளன.

அடையாளம்: சிறிது நீண்ட இலைகளைக் கொண்டதாக, தரையோடு படரும் தாவரம் இது. மலர்கள் வெண்ணிறத்தில் காணப்படும். ஈரப்பாங்கான இடங்களில் அதிக அளவில் பார்க்கலாம். ‘ஆல்டர்னான்திரா ஸெஸ்ஸைலிஸ்’ (Alternanthera sessilis) என்பது இதன் தாவரவியல் பெயர். அமரந்தேசியே (Amaranthaceae) குடும்பத்தைச் சார்ந்தது. லூபியோல் (Lupeol), காம்பஸ்டீரால் (Campesterol), ஸ்டிக்மாஸ்டீரால் (Stigmasterol) ஆகிய வேதிப்பொருட்களைக் கொண்டுள்ளது.

உணவாக: பொன்னாங்காணி இலைகளோடு, பாசிப்பயறு, வெங்காயம், பூண்டு, மிளகு, கொத்துமல்லித் தூள், தேங்காய் மற்றும் புளி சேர்த்துச் சமைக்கலாம். இது கேழ்வரகுக் களிக்குச் சிறந்த இணையாக கர்நாடகாவின் சில பகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது. பொன்னாங்காணி இலைகளை நெய்யில் வதக்கியபின், மிளகு, உப்பு சேர்த்து, புளிப்பு நீக்கி தொடர்ந்து சாப்பிட்டுவர, பார்வை அதிகரிப்பதோடு, வாழ்நாளும் அதிகரிக்கும் என்கிறது சித்த மருத்துவம்.

இரும்புச் சத்து, சுண்ணச் சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் – சி, வைட்டமின் – பி எனப் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் இருப்பதால், கர்ப்பிணிகளுக்கான உணவுப் பட்டியலில் பொன்னாங்காணியைச் சேர்க்கப் பரிந்துரைக்கலாம். முகப்பூச்சுகளின் ஆதரவின்றிப் பளபளப்பான தேகம் பெற, இந்தக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். வேக வைத்து வெண்ணெய்யில் குழைத்துச் சாப்பிட, மலத்தை இளக்கும். உடலுக்குப் பலத்தைக் கொடுக்க, துவரையோடு பொன்னாங்காணி சேர்த்துக் கடைந்து நெய்விட்டுச் சாப்பிடலாம்.

பொதுவாக, எதிர்-ஆக்ஸிகரணி (ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ்) கூறுகள் நிறைந்த தாவரங்களைக் கற்ப மூலிகைகளாக வகைப்படுத்தியுள்ளது சித்த மருத்துவம். அதில் பொன்னாங்காணியும் ஒன்று.

மருந்தாக: கிருமிநாசினி செய்கையுடைய இதன் இலைகள், வயிற்றுப் புண்களை விரைவாகக் குணப்படுத்துவதாக ‘இண்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் பார்மகக்னோஸி அண்ட் ஃபைட்டோ கெமிக்கல் ரிசர்ச்’ எனும் ஆய்விதழில் வெளியான கட்டுரை தெரிவிக்கிறது. ரத்தத்தில் உயர்ந்த சர்க்கரை அளவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றையும் பொன்னாங்காணி குறைக்கிறது.

வீட்டு மருந்தாக: ரத்தக் குறைவு, தலைமுடி வளர்ச்சி, மூலம், கண் பார்வை, நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்த எனப் பல வகைகளில் பொன்னாங்காணியைச் சோளகர் பழங்குடிகள் மருந்தாகப் பயன்படுத்துகின்றனர். முற்காலத்தில் தென்னிந்தியாவின் பெரும்பாலான இடங்களில் கர்ப்பிணிகளின் உடல் வலிமையை அதிகரிக்க, பொன்னாங்காணிக் கீரையை அன்பளிப்பாக வழங்கும் பழக்கம் இருந்திருக்கிறது.

கண்கள் சிவந்து எரிச்சல் ஏற்படும்போது, இதன் இலைகளை அரைத்துக் கண்களில் வைத்துக் கட்டலாம். இலைகளை அரைத்து அடைபோல் செய்து அடிபட்ட வீக்கங்களுக்குப் பற்றுப் போடலாம்.

பொன்னாங்காணி இலைச் சாறோடு பல மூலிகைகள் சேர்த்துத் தயாரிக்கப்படும் ‘பொன்னாங்காணித் தைலத்தை’ தலைக்குத் தேய்த்துக் குளிக்க கை, கால் எரிச்சல், உடற்சூடு, ஆரம்பநிலை மூலம், வெள்ளைப்படுதல் போன்ற வெப்பம் சார்ந்த நோய்கள் கட்டுப்படும். வேனிற்கால அதிவெப்பத்திலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள இந்தத் தைலம் சிறந்தது.

நம் நாட்டில் நிலவும் ஊட்டச்சத்துக் குறைப்பாட்டை நீக்க விலையுர்ந்த உணவுப் பொருட்கள் தேவையில்லை. பொன்னாங்காணி போன்ற  கீரை வகைகளே போதும். இதன் தண்டுகளை மண்ணில் புதைத்து வைத்தால், பசுமையான கீரையாக உருப்பெற்றுப் பலன்களை அள்ளிக்கொடுக்கும்.

மொத்தத்தில் செய்கூலி, சேதாரம் இல்லாத தங்கம்… இந்தப் பொன்னாங்காணி!

கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்

https://tamil.thehindu.com/general/health/article24839096.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எதிர்த்தும் பெற தெரியாது. சேர்ந்தும் பெற தெரியாது.  இரண்டையும் விட சுலபமான வழி என்ன என்பதை நீங்கள் கூறலாமே!    அல்லது நீங்கள்  கூறலாமே!   
    • "வாலிபத்தில் தவற விட்டவைகளை  ... " ஏன் அனுபவித்ததாக இருக்கக் கூடாது?      
    • டிசம்பர் 2014 இல், ஓக்லாண்ட் இன்ஸ்டிடியூட் [Oakland Institute] ஒரு கள ஆய்வு இலங்கையின் வடக்கு கிழக்கில் நடத்தியது. போரின் பின் அதன் நிழலும், போருக்குப் பிந்தைய இலங்கையில் நீதிக்கான போராட்டம் பற்றியது அது [The Long Shadow of War: the Struggle for Justice in Postwar Sri Lanka,] பருந்து போல நிறைந்த இராணுவ சூழலில் மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் மற்றும் துயரங்கள் பற்றியது அது. அத்துடன் பல வழிகளில்  அரசாங்க நிறுவனங்கள், அரசின் ஆசீர்வாதத்துடனும் பாதுகாப்புடனும்  செயல்படுத்தப்பட்ட தீவிரமான நில அபகரிப்பு மீது முக்கிய கவனம் செலுத்தியது.  வடக்கு மற்றும் கிழக்கில் பல்வேறு உத்திகள் மூலம் அரசாங்கம் கையாளும் தந்திரங்களையும் அடக்குமுறைகளையும்  2015 ஆண்டு தங்கள் அறிக்கை மூலம் அம்பலப்படுத்தியது அதில் நில அபகரிப்பு மற்றும் இராணுவமயமாக்கல் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு மற்றும் அதன் தொடர்ச்சியான பயன்பாட்டை வெளிப்படுத்தியது.  நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் வன்முறை போன்ற நில அபகரிப்புக்கான பழைய உத்திகளுடன் புதிதாக  புத்த கோவில்கள் அமைத்தல், தொல்பொருள் உருவாக்கம் உள்ளிட்ட புதிய முறைகள், பாதுகாப்புகள், உயர் பாதுகாப்பு வலயங்கள் மற்றும் சிங்களமயமாக்க சிறப்பு பொருளாதார வலயங்கள் என பல வழிகளில்  வடக்கு மற்றும் கிழக்கு - தமிழர்களின் பாரம்பரிய தாயகம் - கட்டாயத்தால் பறிப்பட்டுக்கொண்டு இருப்பதை எடுத்துக்காட்டியது. கொழும்பில் எந்த தமிழரும் நிலத்தை அபகரித்து குடியேறவில்லை. அது சிங்களவரின் பாரம்பரிய நிலமும் அல்ல. இலங்கையின் மன்னர் ஆட்சியை எடுத்துக்கொண்டால்,       Anuradhapura period (377 BCE–1017) Polonnaruwa period (1056–1232) Transitional period (1232–1505) இங்கு Jaffna Kingdom , Kingdom of Gampola , Kingdom of Kotte , Kingdom of Sitawaka , & Vanni Nadu என் நாம் அறிகிறோம்  The Kingdom of Kandy was a monarchy on the island of Sri Lanka, located in the central and eastern portion of the island. It was founded in the late 15th century and endured until the early 19th century. Initially a client kingdom of the Kingdom of Kotte, Kandy gradually established itself as an independent force during the tumultuous 16th and 17th centuries, allying at various times with the Jaffna Kingdom, the Madurai Nayak dynasty of South India, Sitawaka Kingdom, and the Dutch colonizers to ensure its survival. / கண்டி இராச்சியம் சேனாசம்பந்தவிக்கிரமபாகு என்பவனால் உருவாக்கப்பட்டது (1467- 1815)  கொழும்பு வை எடுத்துக்கொண்டால்  பதினாறாம் நூற்றாண்டுக்கு முந்திய காலப்பகுதியில் கோட்டை அரசின் ஒரு பகுதியாகவும், இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் ஒரு தளமாகவும் விளங்கிய இவ்விடம், பொ.ஊ. பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின்னர், போர்த்துக்கேயரின் வரவுக்குப் பின்னரே முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. அதாவது இங்கு சிங்களவர் பெரிதாக இருக்கவில்லை . இது உங்களுக்கு ஆச்சரியமாகக் கூட இருக்கலாம் , ஆனால் அதுவே உண்மை . இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் பேச்சு மொழி அதிகமாக தமிழே! 2001 சனத்தொகை கணக்கெடுப்பின்படி கொழும்பு நகர மக்கள் தொகையியல் இன அடிப்படையில் பின்வருமாறு காணப்படுகிறது. இல    இனம்    சனத்தொகை    மொத்த % 1    சிங்களவர்    265,657    41.36 2    இலங்கைத் தமிழர்    185,672    28.91 3    இலங்கைச் சோனகர்    153,299    23.87 4    இலங்கையின் இந்தியத் தமிழர்    13,968    2.17 5    இலங்கை மலேயர்    11,149    1.73 6    பறங்கியர்    5,273    0.82 7    கொழும்புச் செட்டி    740    0.11 8    பரதர்    471    0.07 9    மற்றவர்கள்    5,934    0.96 10    மொத்தம்    642,163    100 இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது 2001 இல் கூட சிங்களவரை விட [41.36] மற்றவர்களின் கூட்டுத்தொகையே கூட! Traveller Ibn Battuta who visited the island in the 14th century, referred to it as Kalanpu. Arabs, whose prime interests were trade, began to settle in Colombo around the eighth century AD mostly because the port helped their business by the way of controlling much of the trade between the Sinhalese kingdoms and the outside world. It was popularly believed that their descendants comprised the local Sri Lankan Moor community, but their genetics are predominantly South Indian [தென் இந்தியர் - ஆகவே தமிழே அங்கு கூடுதலாக பேசப்பட்டுள்ளது]  இதை ஒருக்கா முழுமையாக பாருங்கள். அதைத்தான், இலங்கை அரசு இன்று பின்பற்றுகிறது போல புரிகிறது. Israel’s Occupation: 50 Years of Dispossession  [amnesty international அறிக்கை]   Since the occupation first began in June 1967, Israel’s ruthless policies of land confiscation, illegal settlement and dispossession, coupled with rampant discrimination, have inflicted immense suffering on Palestinians, depriving them of their basic rights.    THE WORST THING IS THE SENSE OF BEING A STRANGER IN YOUR OWN LAND AND FEELING THAT NOT A SINGLE PART OF IT IS YOURS. Raja Shehadeh, Palestinian lawyer and writer     நன்றி 
    • துணிவான தமிழ் அரசியல்வாதிகளான கருணா, பிள்ளையான், டக்கிளஸ், வியாழேந்திரன் போன்று இனிவரும் இளைய தலைமுறையைச் சேர்ந்த துணிவான இளைஞர்கள் பின்வருவனவற்றை செய்வதன் மூலம் அரசுடன் இணைந்துகொள்ளலாம், 1. உரிமை பற்றிப் பேசுவதை முற்றாக நிறுத்துதல். 2. தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்கள் குறித்தோ, மேய்ச்சல் நில அபகரிப்புக் குறித்தோ பேசுவதை நிறுத்துதல். 3. தமிழர் தாயகத்தில் நடைபெற்றுவரும் பெளத்த மயமாக்கல் குறித்த எதிருப்புப் போராட்டங்களை நிறுத்துதல். 4. தமிழர் தாயகத்தின் இருப்புக் குறித்துப் பேசுவதை நிறுத்துதல். 5. போர்க்குற்ற விசாரணை, அரசியல்த் தீர்வு குறித்துப் பேசுவதை நிறுத்துதல். ஆகிய விடயங்களைச் செய்துவிட்டு அரசுடன் இணைந்தால், யாழ்ப்பாணத்தைக் காத்தான்குடியாக மாற்றலாம், மட்டக்களப்பில் ஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு நிகரான பல்கலைக்கழகம் ஒன்றைக் கட்டலாம். தமது தம்பி, அண்ணா, சகோதரிகளுக்கு பணம் பார்க்கும் வியாபாரங்களை எடுத்துக் கொடுக்கலாம். லாண்ட்ரோவரோ அல்லது லாண்ட்குறூசரோ எடுத்து ஓடலாம். இப்படிப் பல விடயங்களைச் செய்யலாம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.