Jump to content

ஜெயமோகனின் முடிவின்மையின் விளிம்பில்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயமோகனின் முடிவின்மையின் விளிம்பில்

சுயாந்தன்

அண்மையில் அரச பணிக்கான பயிற்சியின் போது எங்களைப் பற்றிய சுய அறிமுகம் ஒன்று செய்யவேண்டி ஏற்பட்டது. அதில் ஒவ்வொருவரும் தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். எனது கட்டம் வந்ததும் எனது வாழ்வில் பெற்றோருக்குப் பிறகு இரண்டு பேர் முக்கியமானவர்கள், ஒருவர் எனது பழைய காதலி. மற்றவர் ஜெயமோகன் என்று கூறினேன். பழைய காதலி மூலம் பெண்களைப் புரிந்து கொள்ளவும் ஜெயமோகன் மூலம் இலக்கியத்தையும், வாழ்க்கையையும், வெறுமையையும் அனுபவங்களுடன் இணைத்துப் பார்ப்பது எப்படி என்று அறிந்து கொண்டுள்ளேன் என்றும் கூறினேன். பலருக்கு ஜெயமோகன் என்பவர் யார் என்று விளக்கம் கூறவேண்டிய துரதிஷ்டம் அப்போது உருவானது. அவரை ஒரு படைப்பாளி என்றும் விமர்சகர் என்றும் தெளிவுபடுத்திய போது ஏற்படாத தெளிவு, ஜெயமோகன் தமிழ்-மலையாள சினிமாவின் கதையாசிரியர் என்ற பிறகே அவரைப் பற்றித் தேடிப் பார்க்கும் ஆவல் பலருக்கு ஏற்பட்டது. இங்கு குறிப்பிட வேண்டிய முரண் யாதெனில், ஜெயமோகன் தான் சினிமாவில் இயங்குவது வெறுமனே நல்ல தொழில் என்றும் இலக்கியமே தனது வாழ்க்கை இலட்சியம் என்றும் அடிக்கடி கூறி வருகிறார். நம்மில் பலர் ஒருவரது தொழிலை வைத்தே ஒருவரை எடைபோடுகிறோம். அவர்களது வாழ்க்கையின் இலட்சியப் பயணங்களைச் சட்டை செய்வதில்லை என்றே படுகிறது. இதனை ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் சொந்த அனுபவங்களிலிருந்து கண்டடைந்திருப்போம். ஜெயமோகனின் எழுத்துக்களை எனது வாழ்க்கையில் வெற்றிக்கான வெற்றிடம் ஏற்பட்ட காலகட்டத்தில் இருந்த போது வாசிக்கத் தொடங்கினேன். அவநம்பிக்கைகள் சூழ்ந்திருந்த போது ஜெயமோகன் எழுத்துக்களைக் கொண்டு என் சிந்தனைகளை நம்பிக்கையாக்கிக் கொண்டேன். அதனால் அவரை எனது வாழ்க்கையின் தவிர்க்க முடியாதவர் என்று கூறுவதில் எந்தவிதத் தயக்கமும் இருந்ததில்லை. ஜெமோ ஒரு வெகுஜன எழுத்தாளர் அல்ல. கவர்ச்சியான சந்தங்களால் நம்பிக்கை வாசகங்கள் விதைக்கும் கவிஞனுமல்ல. ஆனால் நமக்குள் புதைந்து கிடக்கும் ஆழ்மனச் சிந்தனைகளை உயிரோட்டமாக மீள்கட்டுமானம் செய்ய முற்படுபவர். படைப்பூக்கம் உள்ளவர்கள் வைத்திருக்கவேண்டிய அடிப்படை அறங்களைக் காட்டித்தந்தவர்.  ஜெயமோகன் பற்றி உணர்ச்சிவயப்படாமல் எழுதுவதும் ஜெயமோகன் காட்டிய ஒரு வழிதான் என்றும் கூறலாம்.

எப்போதோ வாசித்த பல கதைகளை திரும்பவும் வாசிப்பதுண்டு. ஜெ எழுதிய படுகை, நதி, போதி போன்ற கதைகளை  இதுவரையிலும் எத்தனை தடவைகள் திரும்பத் திரும்ப வாசித்திருப்பேன் என்று தெரியாது. அப்படி ஒரு கதையைத் திரும்பவும் வாசிக்க நேர்ந்தது. "முடிவின்மையின் விளிம்பில்" என்று 2002 ஆம் ஆண்டு காலம் இதழில் வெளியான ஜெயமோகனின் சிறுகதை முக்கியமான ஒன்று என்றே கூறவேண்டும்.  தொடக்கத்தில் நான் கூறிய சம்பவத்தைப் போல இக்கதையில் பின்வரும் வாசகம் ஒன்றும் இடம்பெறுகிறது. "தமிழில் நான் இரு பெரும் நாவல்களை எழுதியிருக்கிறேன் என்பது ஃபிரெடியை வியப்பிலாழ்த்தியது. ஆனால் வாழ்க்கைச் செலவுக்கு குமாஸ்தா வேலை செய்கிறேன் என்பதைக் கேட்டு அவர் குழம்பிப்போனார்" இது தமிழில் எழுதுபவர்களுக்கு நிகழும் ஒரு துன்பியல் சம்பவம். அதனால்தான் எழுத்தாளர் ஜெயமோகனைத் தெரியாது என்பவர்கள், சினிமா கதையாசிரியர் ஜெயமோகனைத் தெரியும் என்கிறார்கள்.

IMG_20180617_203514.jpg


00

இணையம் மூலம் நட்பான ஒரு அய்ரோப்பிய எழுத்தாளர் ஜெயமோகன் என்ற இன்னொரு எழுத்தாளரிடம் தனது நாவலை வாசிக்க அனுப்புகிறார். அந்த நாவலின் வாசக அனுபவத்தையும் விமர்சனத்தையும் "முடிவின்மையின் விளிம்பில்" என்று புனைகதையாக ஜெயமோகன் எழுதியுள்ளார்.  நாவலை ஒருபோதும் முடிக்க முடியாது. எங்காவது நிறுத்திக்கொள்ள வேண்டியதுதான் என்று கதையின் தொடக்கத்தில் ஜெ எழுதியது இச் சிறுகதையின் நிறைவுக்குப் பொருத்தமாக அமைகின்றது. கதைக்குள் ஒரு உபகதை. அந்த உபகதைக்குள் நகரும்  அய்ரோப்பிய நாவலாசிரியரின் திருப்திதராத பிரதி.  இதற்குள் வெளிப்படுத்தப்படும் அழிவுற்ற அய்ரோப்பியக் குலங்களின் தோற்றுவாய். மற்றும் அதற்குள் காணப்பட்ட முறைதவறிய உறவுகள்.

காதல், பெண்கள், காமம், அய்ரோப்பியப் பௌராணிக மரபு என்று ஒருங்கிணைந்த பகுதியின் அம்சங்களை இந்தக் கதையில் நாம் காணலாம். விஷ்ணுபுரம் பற்றிய அறிமுகமும், மனிதனின் காமம் மூளையில் இருக்கிறது என்று தீவிரமாகக் கூறும் பிறிதொரு ஆக்கத்தைத் தான் இதுவரை வாசித்ததில்லை என்று ஜெ குறிப்பிடுவதும் இங்கு நோக்கத்தக்கது.

அதீனா என்ற பேபியன் குலத்துப் பெண் எழுதிய புராதன காலத்துக் கடிதத்தை, சமகாலத்தில் இருந்து தப்பித்துச் செல்ல எண்ணியுள்ள கிளாரிண்டா என்ற வரலாற்று ஆய்வுப் பெண் ஒருத்தி வாசிக்கிறாள். அந்தக் கடிதத்திற்குள் இடம்பெற்ற காமம் சம்பந்தப்பட்ட விடயங்களால் கிளர்ச்சியடைந்த கிளாரிண்டா நேரடியான காமம் சாத்தியமின்மையால் கற்பனையில் மிதக்கிறாள். நனவிற்கு மீளமுடியாமல் காமத்தில் மூழ்குகிறாள். ஆண்களையும் நெருங்க முடியாமல், பெண்களின் ஓரினப்புணர்ச்சி தொடுகைகளைத் தாங்கவும் முடியாமல், இறுதியில் பெண்களின் கூட்டுப் புணர்ச்சி நிகழ்வுகளைக் கற்பனை செய்தபடி சுய இன்பம் காண்கிறாள் கிளாரிண்டா.  இத்துடன் ப்ரெடி வில்லியம்சன் எழுதிய நாவல் நிறைவு பெறுகிறது. இங்கு ரோமாபுரி புராதனத்துடன் இணைத்துக் குறிப்பிடவேண்டிய விடயம் ஒன்றுள்ளது. சாப்போ என்றொரு ஓரினக்காதலைப் பாடிய கிரேக்கப் பெண் கவிஞர் ஒருவர் இருந்துள்ளார். இவரை மேற்கத்தைய பெண் கவிஞர்களின் முன்னோடி என்று அழைப்பர். இவர் பிறந்த லெஸ்போஸ் என்ற தீவின் பெயரை வைத்துத்தான் லெஸ்பியனிஸம் என்ற சொல் தோன்றியுள்ளது.

இக் கதையின் முதற் தளம் நாவல் பற்றிய வாசக அனுபவமாகவும், அடுத்துவரும்  தளம் ஒரு நாவலாசிரியனின் விமர்சனமாகவும் அமைகிறது.  எடுத்துக்காட்டாக சங்ககாலத்தில் கவிதை பாடும் வழக்கம் இருந்ததே ஒழிய தத்துவ தரிசனங்களின் தீவிர வளர்ச்சி இருக்கவில்லை. அல்லது பிரதிபலிக்கவில்லை. தமிழகத்தில் பௌத்தமும் சமணமும் பரவத் தொடங்கிய பின்பே சங்கமருவியகாலத்தில் தத்துவம் வளர்ச்சி கண்டது. அதுபோலத்தான் இக்கதையில்  அதீனா என்ற பெண் எழுதிய இக்கடிதம் கிறிஸ்த்தவத் துறவியர் மடாலயத்தில் இருந்ததாகவும் அதனைத் தொடர்ந்து வாசித்தவர்கள்
காமம் நீக்கப்பட்டவர்கள் என்றும் பிரெடி கேட்ட கேள்விக்கு ஜெயமோகன் பதிலளிக்கிறார். இங்கு காமம் நீக்கப்பட்டவர்களை தத்துவம் வளராத சங்ககாலத்தவர்கள் என்றும் அதனைக் காமத்தின் இணைப்புடனும் கற்பனையுடனும் வாசித்த கிளாரிண்டாவை சங்கமருவிய காலத்தவர்களுடனும் ஒப்பிடலாம். இது இக்கதையின் தத்துவத்தைப் புரிந்து கொள்வதற்கான  ஒரு எளிய உதாரணம். காமத்தைப் புரிந்து கொள்வதாக இருந்தால் இந்தக் காலகட்டங்களை மாற்றித்தான் பார்க்கவேண்டும். குறிப்பாக 'காமம் அணக்கும் பிணியும் அன்றே' என்று சொன்னவர்களல்லவா சங்ககாலத்தவர்கள்?.

கதையின் இறுதியில் இந்நூலை எழுதியது ஆணா பெண்ணா என்ற விவாதம் முன்வைக்கப்படுகிறது. ஒரு கட்டத்தில் இந்தக் கேள்விக்கான பதிலை ஜெயமோகன் இப்படிச் சொல்கிறார்.

''இது ஆணின் பகற்கனவின் எல்லை மீறல்தான். எல்லைகளை மீறப்போகும்போது அதன் பொறுப்பை ஏற்றுக்கொள்ள நாம் தயாராவதில்லை. காரணம் குற்றவுணர்வு அந்த உத்வேகத்தின் ருசியை இல்லாமலாக்கிவிடும். ஆகவே ஒரு ‘தவிர்க்க முடியாத’ சூழலை ஆண்மனம் கற்பனை செய்கிறது. அந்த எல்லைவரை தன்னைத் துரத்தும் பயங்கரப் பெண்களை அவன் உருவாக்கிக் கொள்கிறான். எல்லா ஆண்களுக்கும் அவர்கள் கனவுகளில் ரத்தம் குடிக்கும் மோகினிகளும், தாகமே அடங்காத பிடாரிகளும் உண்டு. யோசித்துப் பாருங்கள், இந்த நாவல்கூட நாம் பரிமாறிக்கொள்ளும் பகற்கனவு மட்டும்தானே?''

இப்படிக்கூறித் தனது கருத்துக்களை பிரெடிக்கு அனுப்பி வைக்கின்றார் ஜெ. அதற்கான பதிலாகச் சில நாட்களில் பிரெடி "நான் ஒரு ஆண் என்பதை எதை வைத்து முடிவு செய்தாய்?" என்று கேட்கிறார். காமத்தைப் பற்றி ஆண்கள் மட்டும்தான் எழுத வேண்டுமா. அதனைப் பகிர்ந்து கொள்ள பெண்களுக்கு அனுமதி இல்லையா. என்பது போன்ற அழுத்தமான ஒரு வினா முன்வைக்கப்படுகிறது. அதீனா, கிளாரிண்டா போன்ற கதாபாத்திரங்களைக் காமத்தின் குறியீடுகளாகவே நாம் இக்கதையில் காணமுடிகிறது. நேரடியான வெளிப்பாட்டுத் தன்மைக்கு பிரெடி எழுதிய நாவல்தான் அந்தக் குறியீட்டின் புதிரை உடைக்கின்றது. இவையனைத்தையும் ஒன்று திரட்டியதாக ஜெயமோகனின் வாசக அனுபவ வடிவிலான இக்கதை அமைகிறது.

9788184935011_b-500x500_0-1.jpg

முடிவின்மையின் விளிம்பில் என்ற இக்கதை அடிப்படையில் விஷ்ணுபுரம் என்று ஜெயமோகன் எழுதிய பௌராணிக நெடும்மரபுக் கதைக்கான உலக உதாரணம்தான். சிறுகதையில் வருய் ரோமாபுரியின் குலத்தொடக்கமும் சடங்குகள் அனுஷ்டானம் பெறுவது பற்றிய குறிப்புக்களும் அதையே ஞாபகமூட்டுகிறது. டைட்டஸ் என்ற ஊனமுற்ற பையன் பிற்காலத்தில் கடவுளாகிறான். அந்தப் பையன் தன் சகோதரிகளுடன் உறவுகொண்டு உருவான ரோமாபுரி தலைமுறை பற்றியும் கூறப்படுகிறது. அத்துடன் இதையொட்டி பல புராணக் கதைகளும் உருவாகின்றன. இது உலகம் முழுமைக்கும் பழங்குடி மரபின் வழி உருவான ஒவ்வொரு சமூகத்துக்குமான உதாரணக் கதை. ஆரம்பத்தில் காமம் என்பது முழு நிர்வாணத்துடன் வெளிப்பட்டு நின்றது. அதனையே இக்கதையில் திரும்பத் திரும்பக் கூறியுள்ளார். இதில் அநேகமானவை அய்ரோப்பிய மரபில் உண்மையாக நிகழ்ந்த சம்பவங்கள்.

இந்தியாவில் நாத்திகவாதச் சிந்தனை மரபு வேரூன்றியதும் பல கண்ணியமான புராண மரபுகள் இங்கே கொச்சைப்படுத்தப்பட்டன. குறிப்பாக இந்து புராணக் கதைகளும் தொன்மங்களும் எள்ளி நகையாடப்பட்டன. இவை ஒரு வகையான மனப்பிறழ்வு என்றுதான் கூறவேண்டும். ஜெயமோகனின் "முடிவின்மையின் விளிம்பில்" என்ற இக்கதை என்னைப் பொறுத்த வரையில் இந்தியப் பௌராணிக மரபின் வரலாற்றை மீள வாசித்து அதன் கண்ணியங்களை அய்ரோப்பிய  மரபுகளுடனும் காமம் சார்ந்த பின்னணியுடனும் வாசித்து எது அதன் தளத்தில் உயரிய சிந்தனையை வழங்கியுள்ளது என்று அறிவதற்கான ஒரு திறவுகோல் என்று கூறலாம்.

00

 

https://suyaanthan.blogspot.com/2018/06/blog-post_27.html?m=1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.