Jump to content

தாய்மையே வெல்லும்!


Recommended Posts

தாய்மையே வெல்லும்!

 

 
k5

"அவன் வந்துவிடுவானோ எனும் அச்சத்துடன் தேவகியும் கோமதியும் ரயில்நிலைய இருக்கையில் நிலை கொள்ளாமல் அமர்ந்திருந்தார்கள்.
"நான் பொறந்தப்பவே கழுத்தை நெறிச்சோ வாயில நெல்லைப் போட்டோ என் கதைய முடிச்சிருந்தா இப்ப இந்தக் கஷ்டம் வந்திருக்காதில்லம்மா'' என்ற தேவகி வானத்தை நோக்கினாள்.
வானம் இருண்டு கிடந்தது. இடி முழக்கங்களும் மின்னல் வீச்சுக்களும் பூமியை துவம்சம் செய்யப்போவது போல் தொடர் தாக்குதல் நடத்தத்தொடங்கி இருந்தன.. மெல்ல மெல்ல மழையும் இறங்கிற்று, பயணிகள் ஆங்காங்கே ஒதுங்கி, ஒண்டிக் கொண்டு நின்றார்கள்.
"ரயில் எப்ப வரும்?''
"வருமோ வராதோ.. வந்தாதான் தெரியும்''
இத்தகைய வினாக்களுக்கு பதில் சொல்லுவதுபோல் ரயில் நிலைய ஒலிபெருக்கி அலறியது... 
"பயணிகள் கவனத்திற்கு: இரவு ஒன்பது மணிக்கு வரவேண்டிய ரயில் தண்டவாளத்தில் விரிசல் காரணமாக மூன்று மணி நேரம் தாமதமாக வந்து சேரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது' 
"மூன்று மணி நேரம் லேட்டா.. அப்ப விடிஞ்சிடும்''
"மழை எப்ப ஓயும்ன்னு தெரியலையே.''
கோமதி மகளின் கையைப் பற்றிக் கொண்டாள்.
"அவன் வந்திருவானோன்னு பயமாக இருக்கு தேவகி. பக்கத்தில எங்கேயாவது ராத்திரிக்கு தங்கியிருந்திட்டு காலையிலப் போகலாமா?''
"வேணாம்,வேணாம்'' என்றாள், தேவகி அவசரமாக.
"வந்தா வரட்டும். அதுக்காக இனியும் ஓடி ஒளிய முடியாதும்மா''
"நாம ரெண்டுபேர் மட்டும்ன்னா சரி... ஆனா உன் வயித்திலே இன்னொரு உயிர் வளருதே... அதுக்கு ஊறு வந்திரக் கூடாதே'' 
"ஆமா - தவமிருந்து வரம் வாங்கி வந்த கர்ப்பம். அதுதான் என் வாழ்க்கையை மாத்தி அமைக்கப்போகுதா! அன்பிலேயும் பாசத்திலேயும் உருக் கொண்டதா அது! தினசரி வசை, வதை, உதை, பட்டினின்னு எத்தனை இம்சை. அதைப் பெத்து பாலூட்டி சீராட்டி வேறே வளர்க்கணுமாக்கும்''
கோமதி அந்தப் பேச்சைத் தொடராமலிருக்க மௌனம் காத்தாள். நேரம் நகர்ந்து கொண்டே இருந்தது. சால்வையை எடுத்து மகளுக்குப் போர்த்திவிட்டாள். இடியும் மின்னலும் மழையும் கொட்டித் தீர்த்துவிட்டு ஓயத்தொடங்கின.
ஒரு வழியாக ரயில் வந்து சேர்ந்தபோது எத்தனை மணியென்று தெரியவில்லை. தூங்கிக் கொண்டிருந்தவர்களை தட்டி எழுப்பிக் கொண்டு ரயிலை நோக்கி ஓடினார்கள்.
ரயில் பெட்டிகளில் அதிக கூட்டமில்லை. சில பெட்டிகள் காலியாகக் கிடந்தன. தேவகியும் கோமதியும் அமர்ந்த இருக்கைக்கு எதிரே ஒரு மூதாட்டி ஒருக்களித்துப் படுத்திருந்தாள். ஓரத்தில் இளம் பெண்ஒருத்தி அமர்ந்திருக்க, இருவருக்கும் நடுவில் அந்த இரவில் ஒரு குழந்தை தானாக சிரித்து விளையாடிக் கொண்டிருந்தது. தூக்கி வைத்துக் கொஞ்சத் தோன்றும் துருதுருப்பு.
அரைகுறையாக கண்களை மூடிக் கொண்டிருந்த மூதாட்டி சடக்கென எழுந்து உட்கார்ந்தாள்.
"ஊரு வந்துரிச்சா?''
"இல்லத்தே'' என்று பதிலளித்தாள் இளம் பெண்
ரயில் புறப்பட்டது. மூதாட்டி கோமதியிடம் பேச்சுக் கொடுத்தாள்.
"நீங்க தாயும் மகளுமா?''
"ம்''
"எந்த ஊரு?''
குழந்தை இரு கைகளையும் கோமதியை நோக்கி விரித்து "ம்மா... ம்மா'' என்றது. கோமதி சட்டென எழுந்து குழந்தையை ஏந்திக் கொள்ள அது வாய்விட்டுச் சிரித்தது.
"வயசு ஒண்ணு ஆவுது. பேபின்னு பேரு, பொறந்த மூணாம் மாசமே அப்பனை முழுங்கிடுச்சு'' என்றாள் மூதாட்டி
"அப்படி சொல்லாதிய'' என்றாள் குழந்தையின் தாய் அவள் கண்களில் நீர்த்திரையிட்டது.
"இந்தப் பிஞ்சு என்ன செய்யும்?'' என்ற கோமதி குழந்தையை அணைத்துக் கொள்ள, அது இவளிடம் ஒட்டிக் கொண்டது.
முன்னும் பின்னும் தொடர்பு இல்லாமல் இவர்கள் பேசிக் கொண்டிருக்க, குழந்தை கோமதியின் மடியிலேயே தூங்கிவிட்டது.
தேவகி கண்டும் காணாததுபோன்று பின்னோக்கிச் செல்லும் மரங்களையும் வீடுகளையும் இருளினூடே பார்த்துக் கொண்டிருந்தாள்.
பிறந்த ஆறுமாதப் பருவத்திலேயே, விபத்து ஒன்றில், தந்தையை இழந்தவள் தேவகி. "ஆறுமாசத்திலே அப்பனை முங்கிட்டா'' என்று அவளது பாட்டி சாகும்வரை திட்டிக் கொண்டுதானிருந்தாள்.
கோமதியின் அழுகையும் சிரிப்பும் இன்பமும் துன்பமும் மகள் தேவகியே என்றானாது. சமூக ஏளனங்களை சகித்துக் கொள்ளப் பழகிவிட்டாள். தையல் தொழில் அவளது வருமானத்துக்குக் கை கொடுத்தது. மகளை செல்லமாக வளர்த்தாள்.
தேவகி சுறுசுறுப்பும் பிடிவாதமும் நிரம்பியவளாக வளர்ந்தாள். படிப்பிலும் கெட்டிகாரியாய்த் திகழ்ந்தாள்.
கல்லூரியில் படித்தபோது, அவளைத் துரத்தி காதலித்தான் அவளுடன் படித்தவன். அவள் நெஞ்சில் கற்பனைகளைக் கிளர்த்தினான். படிப்பு முடிந்ததும் கல்யாணம் என்று உத்தரவாதமளித்தான். ஆயினும் கைகளைத் தொடுவதற்குக் கூட நிபந்தனை விதித்தாள் தேவகி.
கல்லூரிப் படிப்பு முடிந்தபின் அவனை நேரில் சந்திப்பது அபூர்வமாயிற்று, காலப்போக்கில் கைப்பேசி உரையாடலும் மெல்ல மெல்லக் குறைந்து போயிற்று.
ஒருநாள் கைப்பேசி அழைப்பொலி கேட்டது. எடுத்தாள்.
"தேவகி''
"சொல்லு''
"என்னை மன்னிச்சிரு தேவகி''
"எதுக்கு?''
"எங்க தாய் தகப்பன் எனக்குப் பெண் பார்த்து முடிவு பண்ணிட்டாங்க, மறுத்தா தற்கொலை செய்வோம்ன்னு மிரட்டுறாங்க. எனக்கு வேறே வழி தெரியலே''
"எனக்கு என் வழி தெரியும்''
அதுதான் அவனுடனான கடைசி உரையாடல். கைப்பேசியைத் தூர எறிந்தாள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நினைவாகத் தூக்கி எறிந்தாள்.
அம்மாவுக்கு உதவியாக சமையல், தையல் தொழிலில் உதவி பிறவேளைகளில் வாசிப்பு என்று நாட்கள் உருண்டோடின.
ஒருநாள் மகளின் தலையைக் கோதியபடி, "எனக்கு வயசாகிக்கிட்டேபோகுது. வரவர ஒடம்புக்கும் முடியலே தேவகி'' என்றாள் கோமதி
"அதுக்கு நான் என்ன செய்யணும்?''
"என் காலம் வரைக்கும் எல்லாம் சரி, அதுக்கப்புறம்...''
"என்னதான் சொல்ல வர்றேம்மா''
"ஒனக்கு ஒரு கல்யாணம் பண்ணிப் பார்க்கணும் தேவகி''.
"முதல்லே நான் ஒரு வேலைத் தேடிக்கிறேன்'' என்றாள் தேவகி
மகள் மாறுவாள் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தாள் கோமதி. ஒரு கணிப்பொறி பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றதேவகி அங்கேயே ஒரு கணிசமான ஊதியத்தில் பணியில் அமர்ந்தாள். அங்கு பணி செய்த இளைஞன் "தேவகி... தேவகி...' என்று இவள் பின்னால் ஓடி ஓடி வந்தான். இவள் ஒதுங்கி ஒதுங்கிப் போனாள். அவ்வேளையில் கல்யாணத் தரகர் ஒருவர் கோமதியை தினமும் நச்சரித்துக் கொண்டிருந்தார்.
"பையன் நல்ல பையன், குமரன்னு பேரு, சொந்தமா தொழில் செஞ்சு வளர்ற பையன். தேவகிக்கு பொருத்தமான பையன்''
"தேவகிகிட்ட பேசுறேன்''
"காலந்தள்ளிப் போடாதே. வரன் கை நழுவிப்போயிரும். தேவகிக்கும் வயசாகிட்டே போகுது''
ஒரு வழியாக இருவரையும் சம்மதிக்க வைத்துவிட்டார் தரகர். திருமணத்தின்போது நகை நட்டு, சீர்வரிசை என்று குறைவைக்காமல் செய்து புருசனுடன் அவனது ஊருக்கு அனுப்பிவைத்தாள் கோமதி. தொலைதூர ஊருக்கு மகளைக் கட்டிக் கொடுத்துவிட்டோமே என்று கவலை இருந்தாலும் "அவ நல்லா இருப்பாள்' என்ற மனசைத் தேற்றிக் கொண்டாள்.
ஆனாலும் நிஜம் வேறாக இருந்தது.
தேவகியின் முதல் இரவே வதையோடுதான் தொடங்கிற்று. " நீ யாரையோ லவ் பண்ணுனியாமே... அவன் ஒன்னைக் கழட்டிவிட்டானா... இல்ல... நீ அவனைக் கை கழுவிவிட்டியா?''
ஒவ்வொரு இரவும் விதம் விதமான வசை, வதை...
"சில மாதங்களிலேயே இவளது நகைகள் அடகுக் கடைக்குப் போயின. "தொழில் டெவலப் ஆனதும் திருப்பிக்கலாம்'' என்றான்.
ஆனால் தொழில் வளரவில்லை. ஆடம்பரச் செலவு, மது என்று அவனது நண்பர்களின் வளையத்துள் சிக்கிக் கொண்டுவிட்டான், அவன்.
ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடிக்கும் கதையாகி மாமியாரின் வீடு, நகைகள் மீது கவனம் திரும்பிற்று, ஏற்கெனவே ஒரு கல்யாணம் நடந்து அவளைத் துரத்திவிட்டவன் என்ற தகவல் தேவகிக்கு கிடைத்தபோது, அதிர்ந்துதான் போய்விட்டாள். அம்மாவுக்குத் தெரியாமல் எதை மறைப்பது?
எத்தனை காலம்தான் மறைப்பது?
இந்தச் சூழலில்தான் வாந்தியும் தலைவலியும் தாங்காமல் பெண் மருத்தவரிடம் போனாள். "உன் வயித்துல குழந்தை உண்டாகி இருக்கும்மா.. நல்லா ரெஸ்ட் எடு, கீரைகள், பழங்கள் சாப்பிடு, நிறைய தண்ணீர்க்குடி. அடுத்த மாசம் வந்து செக்கப் பண்ணிக்க'' என்றார் டாக்டர்.
கவலையுடன் வீடு திரும்பிய தேவகி குழம்பிப் போயிருந்தாள், இப்போதைக்கு குழந்தை தேவையா என்ற கேள்விதான் அவளுக்குள் மேலோங்கியிருந்தது. எனினும் ஒரு சிறுநம்பிக்கை. தந்தையாகப் போகும் செய்தி அவனை மாற்றாதா?
அவனுக்காக சாப்பிடாமல் காத்திருந்தாள். அவன் வழக்கத்தைவிட அதிகமான போதையுடன் வீட்டுக்குள் நுழைந்தான். கீழே விழுந்துவிடாதபடி பற்றிச் சென்று படுக்கையில் கிடத்தினாள்.
"டாக்டரம்மாவைப் பார்த்தேன், நான் கர்ப்பமாக இருக்கிறதா சொன்னாங்க.'' 
"வேணாம்'' என்றான் அவன்.
"என்ன வேணாம்?''
"உனக்கு இப்ப கொழந்தை வேணாம்''
"ஏன் வேணாம்''
"வேணாம்ன்னா வேணாம்! நான் சொல்றதைத்தான் நீ கேக்கணும். கலைச்சிடு''
"சரி கலைச்சிடலாம். சாப்பிடவாங்க''
"நான் வயிறுபுல்லா சாப்பிட்டுட்டேன்''
அலங்கோல நிலையில் அவன் உறங்கத் தொடங்கினான். விடியும்வரை அவள் அழுது கொண்டிருந்தாள்.
முதல் நாளிரவு எதுவும் நடவாதது போன்று காலையில் எழுந்தவன் நடந்து கொண்டான். "தேவகி... தேவகி'' என்று குழைந்தான். அவளது கைகளைப் பற்றி கொண்டான்.
"என்ன இன்னைக்கு புதுசா இருக்கு?''
"என் தொழிலுக்கு ரெண்டு பிரண்ட்ஸ் உதவி செய்றதா உறுதி சொல்லி இருக்காங்க தேவகி''
"ம்''
"என்ன வெறுமே "ம்' கொட்டுறே? அவங்க ரெண்டு பேரும் நாளைக்கு இரவுக்கு நம்ப வீட்டுக்கு வர்றாங்க''
"பிரண்ட்ஸ்ங்களை வெளியிலேயே வச்சுக்கோங்க. வீட்டுக்கெல்லாம் வேணாம்''
"என்ன அப்படி சொல்லிட்டே, அவங்களை நீ அனுசரிச்சுப்போனா... நிறையப் பணம் கிடைக்கும். என் தொழில் வளர்ச்சி உன் கையில்தான் இருக்கு தேவகி. நான் சாயந்திரம் போன்ல பேசிறேன்''
அவனது கால்களை வாரி நிலத்தில் அடித்துக் கொல்ல வேண்டும் என்று எழுந்த வெறியை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டாள், "நான் ஒன்னைக் கொல்றதுக்குள்ளே இங்கேயிருந்து ஓடிப்போயிடு'' என்றெழுந்த கோபக்கனலை திசை மாற்றி, "யோசிச்சு சொல்றேன்'' என்றாள். அவள் கன்னத்தில் செல்லமாகத் தட்டிவிட்டு வெளியேறினான், அவன்.
அவன் போய்விட்டதை உறுதி செய்து கொண்ட தேவகி, தாய் கோமதியை கைப்பேசியில் அழைத்தாள்.
"எப்படி தேவகி இருக்கே?'' என்றாள் அம்மா.
"நீ ஒடனே பொறப்பட்டுவா''
"என்னம்மா விசேஷம்''
"இங்க ரெண்டு மூணு கொலை விழுகிற மாதிரி இருக்கு. நீ ஒடனே பொறப்புட்டு வா'' அலறியடித்துக் கொண்டு வந்து சேர்ந்தாள் கோமதி. நடந்தது அறிந்து "பாழும் கிணற்றிலே உன்னைத் தள்ளிட்டேனடி'' என்று குமுறி அழுதவள் ஒரு முடிவுக்கு வந்தாள்.
"நீ இவனோட வாழவும் வேணாம், இந்தப் பாவியைக் கொல்லவும் வேணாம், நம் ஊருக்குப் போயிரலாம். இப்பவே பொறப்படு. அவன் ஊருக்கு வந்தா வெட்டரிவாள் இருக்கு. நான் பாத்துக்கிறேன்'' என்று துரிதப்படுத்தினாள்.
இருளில் யாருக்கும் தெரியாமல் கிளம்பினார்கள் இருவரும்.

இடி , மின்னல், மழை ஓய்ந்து வானம் வெளி வாங்கியபோது, அவர்கள் இறங்க வேண்டிய ரயில் நிலையம் வந்துவிட்டது. பொழுது புலர்வதற்கு இன்னும் சற்று நேரமே இருந்தது.
கோமதி தன் மடியில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையைப் பிரிய மனமில்லாதவளாக அதன் தாயிடம் ஒப்படைக்கையில் அது இவள் சேலையைக் கையில் இறுகப்படித்துக் கொண்டிருந்தது. மெல்ல அதன் பிஞ்சுக்கரங்களிலிருந்து சேலையை விடுவித்துக் கொண்டு இறங்குவதற்கு முன் சொன்னாள்.
"குழந்தை ரொம்ப சூட்டிகையா இருக்கும்மா, திட்டாதீங்க, நல்லபடியா வளர்த்து விடுங்க. உங்களைக் காப்பாத்தும்''
"புள்ளைய எழந்திட்டோமோங்கிற வேதனையில் ஏதாச்சும் சொல்லிர்றதுதான், ஆனா அதானே எங்க ரெண்டு பேருக்கும் உயிரு. அது இல்லேன்னா நாங்க இருந்து என்ன பிரயோசனம்?'' என்றாள் முதியவள் தழுதழுத்த குரலில். 
ஊருக்குள் இறங்கி நடந்துச் சென்ற தாயையும் மகளையும் விநோதமாகப் பார்த்தனர் சிலர். 
"என்ன வீட்டுக்காரர் வரலையா?''
"அவுகளுக்கு கம்பெனியில முக்கிய வேலை'' என்று பதிலளித்தாள் கோமதி
மறுநாள் மகளை பெண் மருத்துவரிடம் அழைத்துச் சென்றாள் கோமதி. பரி சோதித்த மருத்துவரிடம், " இவ இப்போதைக்கு குழந்தை வேணாம்ங்கிறாம்மா'' என்றாள் 
"ஏம்மா குழந்தை வேண்டாம்ங்கிறே?''
கணவனின் சித்தரவதைகளையும், துரோகத்தையும் தேவகி சொல்லுகையில் கண்ணீர் திரண்டது.
"நான் இனி அந்தக் கயவனோட வாழ முடியாது டாக்டர். அவன் ஒரு வேளை தேடி வந்தாலும் இந்தக் குழந்தை யாருக்குப் பிறந்ததுன்னு கேட்டு அவமானப்படுத்தக் கூடியவன். இங்கே ஊரிலே ஒவ்வொருவருக்கும் பதில் சொல்லி மாளாது. கலைச்சிருங்க டாக்டர்''
"இதபாரும்மா, நான் சட்டத்துக்கும், சமூகத்துக்கும் கட்டுப்பட்டு சேவை செய்யிறவ. நீ கல்யாணமான பொண்ணு, எதுக்கு பயப்படணும்? குழந்தை வரம் கேட்டு கோயில் கோயிலா அலையிறங்க எத்தனையோ பேரு எந்தக் க ருவும் பாவம் நிரம்பியதல்ல. ஒவ்வொரு குழந்தைக்கும் பூமியிலே பிறக்கிற உரிமை உண்டு. அதைக் கொல்வது குற்றம். பாவம் கோமதியம்மா... உங்க மகளுக்கு எடுத்துச் சொல்லுங்க... ரெண்டுபேரும் டயம் எடுத்துக்கிட்டு நல்லா யோசிச்சு முடிவு பண்ணிட்டு வாங்க''
இருவரும் வெளியில் வந்தார்கள்.
"டாக்டர் சொன்னதை கேட்டியா தேவகி? நல்லா யோசி... முடிவு எடுக்க வேண்டியவ நீ தான்''
" ஒரு அயோக்கியனோட மனைவிங்கிறதே எனக்கு மகா கேவலம். இதிலே அவனோட குழந்தையைவேறே வயித்திலே சுமந்து காலம்பூராவும் அவமானமும் வேதனையும் சுமக்கச் சொல்றியா?''
எனக்கு ஒண்ணு தோணுது, சொன்னா காது குடுத்துக் கேட்பியா தேவகி?
"புதுசா என்ன சொல்லப்போறே?''
"குழந்தை நல்லபடியா பொறக்கட்டுமே, அது வரைக்கும் பொறுக்கமாட்டியா? ஒரு எட்டு மாசமோ, ஒன்பது மாசமோ''
"அப்புறமா?''
"குழந்தை பொறந்ததும் ஒரே ஒரு வாரம் தாய்ப்பால் குடு, போதும் அதை எங்கேயாவது இல்லத்திலே விட்டுரலாம். இல்லேன்னா யாருக்காவது தத்துக் குடுத்திரலாம். இந்த பூமியிலே அது எங்கேயாவது வாழ்ந்திட்டு போகட்டுமே''
"ஒரேடியா சாகிறத்துக்குப் பதிலா ஆயுள் பூராவும் தினம் தினம் சாகலாம்ங்கிறியா?
"வார்த்தையாலே என்னைக் கொல்லாதடீ என்னோட ஆசையெல்லாம் ஒண்ணெ ஒண்ணுதான். என் பொண்ணு ஒரு கொலைகாரியாவோ குற்றவாளியாகவோ ஆயிரக்கூடாது.''
வீட்டுக்கு வந்து சேர்ந்ததும், தரையிலமர்ந்து குலுங்கிக் குலுங்கி அழுத தாயின் தோள்களில் கரங்களைப் பதித்தாள் தேவகி.
"உன் பேச்சுக்கு சம்மதிக்கிறேன். ஆனா ஒரு கண்டிசன்''
"என்ன கண்டிசன்னாலும் கேட்கிறேன், சொல்லு''
"நான் குழந்தைக்குப் பால் குடுக்கமாட்டேன். அது பொறந்ததும், எங்கேயாவது இல்லத்திலே விட்டுரணும், இல்லே யாருக்காச்சும் தத்துக் குடுத்திரணும், நான் மறுபடி குழந்தையைப் பார்க்கமாட்டேன்.''
"சரிம்மா, சரிம்மா'' என்றாள் கோமதி. 
தேவகியை மறுபடியும் அழைத்துக் கொள்ள குமரன் போட்ட நாடகம் எடுபடவில்லை. நீதிமன்றத்துக்குப் போய்விட்டாள், அவள்....
விவாகரத்துக்காக காத்திருந்தபோது, பிரசவத்திற்கான காலம் நெருங்கிவிட்டது.
கோமதி இரவு பகல் பாராது மகளின் அருகிலேயே இருந்தாள். பிரசவ வலி எடுத்ததும், மருத்துவமனையில் சேர்த்தாள். அறுவை சிகிச்சை இல்லாத சுகப்பிரசவம், அழகான ஆண் குழந்தை.
தேவகி தனது முடிவிலிருந்து மாறவில்லை. கோமதியும் அவளை மாற்றவில்லை.
வெளியில் பால் வாங்கி வைத்திருந்து சங்கின் மூலம் புகட்டினாள். அன்றைய பொழுது முழுவதும் அப்படியே கழிந்தது. 
மறுநாள் யாரோ ஒரு பெண்மணி வந்து ரகசியமாக கோமதியை வெளியில் அழைத்துச் சென்றாள்.
சோர்வும் மயக்கமும் முற்றிலும் விடுபடாத நிலையில் படுத்திருந்த தேவகி குழந்தையின் அழுகுரல் கேட்டு கண்களைத் திறந்தாள். கட்டிலுக்கு அருகே போடப்பட்டிருந்த தொட்டிலில் கிடந்த அவளது குழந்தையின் அழுகுரல்தான்.
"ஏம்மா குழந்தை அழுவுதே... காதிலே விழலையா? தூக்கிப்பால் குடும்மா'' என்றாள் பக்கத்துக் கட்டிலுக்குப் புதிதாக வந்திருந்த கர்ப்பிணி ஒருத்தி.
இவள் திரும்பிப்படுத்துக் கொண்டாள். குழந்தை வீரிட்டு அழத்தொடங்கியது. அதன் குரல் தேவகியின் மார்பை ஊடுருவிச் செல்வதுபோல் உரக்க எழுந்தது. மார்புக்குள்ளே எரிமலை கனன்றெரிவது போலிருக்க, இரு கைகளையும் நெஞ்சின் குறுக்கே வைத்து அழுத்திக் கொண்டாள். குழந்தை மீண்டும் வீரிட்டது.
வெளியே போயிருந்த கோமதி அவசரமாக உள்ளே வந்தாள். அவளுக்குப் பின்னே ஓர் ஆணும் பெண்ணும்.
"தேவகி உன் குழந்தையை தத்தெடுக்க சரியான ஆள் கிடைச்சிட்டாங்க. சொத்து சுகம் வீடுன்னு வசதியானவங்க, மொதத் தவணையா ஒரு லட்சம் ரூவா தர வந்திருக்காங்க''
தேவகி மெல்லத் திரும்பினாள், மார்பில் பால் குடிக்கும் குழந்தை... நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள். வார்த்தைகள் அழுகைக் கலந்து வெளிப்பட்டன.
"வேணாம் பணமும் வேணாம், சொத்தும் வேணாம் இது என்னோட குழந்தை. யாருக்கும் தரமாட்டேன். யாருக்கும் தரமாட்டேன். போயிடுங்க.''

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.