Sign in to follow this  
நவீனன்

தமிழ்ப்படம் பத்தி சொல்லணும்னா..!’ வெண்ணிற ஆடை மூர்த்தி - 80

Recommended Posts

தமிழ்ப்படம் பத்தி சொல்லணும்னா..!’ வெண்ணிற ஆடை மூர்த்தி - 80


 

 

vennira-aadai-murthi-80-1

 

பூக்கடைக்கு விலாசம் எதற்கு என்பார்கள். பூக்களுக்கு மட்டும் அல்ல... நிறங்களுக்கும் முன்னுரையோ முகவரியோ தேவையில்லை. எப்போதும் பளீர் முகமும் ஜிலீர்ச் சிரிப்புமாக இருக்கும் வெண்ணிற ஆடை மூர்த்தி, எல்லோருக்கும் தெரிந்தவர்; எல்லோருக்கும் பிடித்தவர்.

மிக எளிமையாகவும் இனிமையாகவும் சமீபத்தில் இவருக்கு நடந்தது சதாபிஷேகம் எனும் எண்பதாம் கல்யாண வைபவம். ஆனால் மனிதர் அப்போது போலவேதான் இப்போதும் இருக்கிறார். அதுசரி... வயசுக்கும் மனசுக்கும்தானே தொடர்பு உண்டு.

 

இந்த வேளையில்... வெண்ணிற ஆடை மூர்த்தியிடம் கேட்டதும் அவரிடம் இருந்து பதிலாகப் பெற்றதும் எண்பது. ஆமாம்... எண்பது கேள்விகள்... எண்பது பதில்கள்!

எட்டு எட்டாகவும் பிரித்துக்கொள்ளலாம். நாம் பத்துப்பத்தாகப் பிரித்துக்கொண்டு ரசிப்போம்.

1. உதவி இயக்குநர்கள் தொடங்கி சினிமாக்காரர்கள் பலரிடம் பேசும்போது, ‘மூர்த்தி சார் ரொம்ப ஜாலி டைப்’ என்கிறார்களே... இதென்ன மாயம்?

மாயமும் இல்ல, மந்திரமும் இல்ல, தந்திரமும் இல்ல. நாம நாமளா இருந்துட்டா, அடுத்தவங்க நம்மளை நல்லாவே ரசிப்பாங்க. இதுவரை 800க்கும் மேலே படங்கள் பண்ணிருக்கேன். வேலைன்னு வந்துட்டா அதுல இன்வால்மெண்ட், தேவைப்படும் போது பேசும் போது, யார்கிட்டயா இருந்தாலும் உண்மையா, அக்கறையா, மரியாதையா பேசுறது, மத்த நேரத்துல அமைதியோ அமைதி. இப்படி இருந்துட்டா, எல்லாருக்கும் நம்மளைப் பிடிக்கும். முக்கியமா, நம்மளை நமக்கேப் புடிச்சிப் போயிரும்! இதானே முக்கியம்.

 

2. சோ டைரக்ட் பண்ணினார். நாகேஷ் படம் இயக்கினார். நீங்க ஏன் படம் டைரக்ட் பண்ணலை?

அந்த அளவுக்கு நான் புத்திசாலின்னா பாத்துக்கோங்களேன். டைரக்ட் பண்றது ரொம்பக் கஷ்டமான வேலை. நடிக்கறது பார்ட்டைம் வேலை. நம்ம பார்ட்டை சரியாச் செஞ்சிட்டு, அடுத்த படத்துக்கு தடக்குன்னு ஓடிடலாம். ஆனா டைரக்‌ஷன்ங்கறது ஃபுல்டைம் ஜாப். ஷூட்டிங் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடிலேருந்தும் பின்னாடிலேருந்தும் டிஸ்கஷன், ஸ்கிரிப்ட், ரைட்டிங், லொகேஷன், ஷூட்டிங், எடிட்டிங், டப்பிங்னு ஓடிக்கிட்டே இருக்கணும். ஆனா நடிப்புன்னா, அதுக்குள்ளே அஞ்சு படங்கள் பண்ணிடலாம். இன்னொரு விஷயம்... எனக்கு நடிப்பு மட்டும்தான் தெரியும்.

ஆனாலும் ஒரு நப்பாசை இருந்துச்சு. கேரி ஆன் கிட்டுன்னு ஒரு டிராமா, களவுக்கலைன்னு டிடிக்காக ஒரு டிராமா. இன்னொரு டிராமாவை இந்து பத்திரிகைலதான் எடுத்தோம். அவங்கதான் அந்த சீரியல் பண்ணினாங்க.

3. தமிழ்ப்படம் பார்ட்1ல நடிச்சது பத்தி? இப்போ தமிழ்ப்படம் 2 ரிலிசாகியிருக்கே?

எத்தனையோ படங்கள், எத்தனையோ கேரக்டர்கள். அந்தந்தப் படத்துல, அப்படி அப்படியான கேரக்டர்களை உள்வாங்கி நடிச்சிக்கொடுத்துட்டு போயிகிட்டே இருப்போம். தமிழ்ப்படமும் அப்படியான நல்ல அனுபவங்களைக் கொடுத்துச்சு. நல்ல டைரக்டர், அற்புதமான டீம்.

அதேசமயம் ஒண்ணு சொல்லிக்க ஆசைப்படுறேன். எந்தத் தொழில்ல இருந்தாலும், அந்தத் தொழிலை கேலி பண்ணக்கூடாது. கிண்டல் செய்யக்கூடாது. இது என்னோட கருத்து.

4.  ஒருபேச்சுக்கு... ஒருவேளை இயக்குநர் ஸ்ரீதர் உங்களை ஹீரோவாக்கியிருந்தால்?

ஃபெயிலியராகியிருப்பேன். ஒரு உண்மை சொல்லட்டுங்களா? ஸ்ரீதர் சாரோட உதவியாளர் என்.சி.சக்ரவர்த்தி மூலமா ஸ்ரீதருக்கு முன்னாடி போய் நின்னேன். என்ன மாதிரி நடிக்கணும்னு ஆசைப்படுறேனு கேட்டார். காமெடின்னு சொன்னேன். அவர் சிரிச்சிட்டார். அவர் சிரிச்சது இருக்கட்டும்... உண்மையைச் சொன்னா நீங்களே சிரிப்பீங்க.

‘என்னப்பா மூக்கும் முழியுமா லட்சணமா இருக்கே. ஹீரோவா, செகண்ட் ஹீரோவா போடுறேம்பான்னாரு. வேணாம்னுட்டேன். உன் மூஞ்சி, நல்லாப் படிச்ச முகமா இருக்கு. காமெடி செட்டாகாதுய்யான்னார் ஸ்ரீதர் சார்.

நான் வரேன் சார்னு கிளம்பி, அவர் ரூம் கதவுக்கிட்ட போனேன். ஒருத்தனுக்கு அவனோட நல்ல முகம்தான் அதிர்ஷ்டம்னு சொல்லுவாங்க. ஆனா எனக்கு என் நல்ல முகமே துரதிருஷ்டம் சார். பரவாயில்ல சார்னு சொன்னேன். இந்த வார்த்தைதான், எனக்கு வாய்ப்பு கொடுக்க, அதுவும் காமெடியனாவே வாய்ப்பு கொடுக்க, ஸ்ரீதர் சாரைத் தூண்டுச்சு.

5. டபுள் மீனிங் காமெடி?

தமிழ் செழிப்பான மொழி. ஒரு சொல்லுக்கு பல மாதிரியான அர்த்தங்கள் இருக்கு. சொல்லப்போனா ஒரு சொல்லுக்கு எட்டுவிதமான அர்த்தம் இருக்குன்னு சொல்லுவாங்க. ‘40 வருஷமா இந்த வேலைக்காரியை வைச்சிருக்கேன்னு ஒருத்தர் சொல்றார். இதை எப்படி வேணும்னாலும் எடுத்துக்கலாம். சென்சார் போர்டுல இருந்த லேடி ஒருத்தங்க, ‘சார், உங்க படத்துக்கு பத்து கட் கொடுத்திருக்குன்னு சொன்னாங்க. சரின்னேன். நீங்க ஒரு வக்கீலும் கூட. ஏன் சார் இதுமாதிரிலாம் பேசுறீங்கன்னு கேட்டாங்க. ஜன்னல்லேருந்து தெருவைப் பாக்கும் போது, நீங்க பாக்கறது ஒண்ணு; நான் பாக்கறது இன்னொண்ணு. ஒவ்வொருத்தரும் ஒவ்வொண்ணைப் பாப்பாங்க. இது ஜன்னல் கோளாறு இல்ல. நம்ம பார்வையோட சிக்கல்னு சொன்னேன்.

அதேசமயத்துல, நம்ம வாழ்க்கைல இதுமாதிரி போறபோக்குல நிறைய டபுள், டிரிபிள் மீனிங்லாம் பேசிக்கிட்டுதானே இருக்கோம்.

6. மனம் சோர்வடையும்போது என்ன செய்வீங்க?

தாங்க முடியாத சோகம், மீள முடியாத துக்கம்னெல்லாம் வந்ததில்ல. அப்படியொரு சோகமும் துக்கமும் யாருக்கும் எப்பவுமே நிரந்தரமும் இல்ல. இதை நான் முழுசா நம்பறேன்.

என்னடா இது சோகமா இருக்குன்னு இசை கேக்கறது, கடுமையா விறுவிறுன்னு வாக் போறது... இப்படிலாம் எதுவுமே பண்றதில்ல. இந்த மாதிரி தருணங்கள்ல, கொஞ்சம் அமைதியா இருந்தா... ஒரு அமானுஷ்யம் நடக்கும். உங்களைக் காப்பாத்தும். அது தெய்வ அனுக்கிரகம், அதிர்ஷ்டம், ஜாதக பலன் எப்படி வேணா வைச்சுக்கலாம். இந்த மாதிரி வரும்போது, நான் கடவுள்கிட்ட ஒப்படைச்சிருவேன். அவ்ளோதான்!

7. சினிமா உலகில், வாடா போடா நண்பர்கள்?

முதல்ல ஒரு விஷயம் சொல்லணும். இந்த வாடாபோடான்னு கூப்பிடுறதே எனக்குப் பிடிக்காது. ஏன்னா, எங்க அப்பா எங்களை அப்படிலாம் கூப்பிட்டதே இல்ல. அதேபோல, நானும் என் மகனை வாடா, என்னடா பண்றேன்னெல்லாம் பேசினதே கிடையாது.

எங்க அப்பாகிட்டருந்து கத்துக்கிட்டேன். அடுத்தாப்ல, சிலோன், சிங்கப்பூர்னு போயிருந்தப்ப, அங்கெல்லாம் குழந்தைகளை வாங்க போங்கன்னு மரியாதையோட பேசினதைப் பாத்தேன். குழந்தைங்களை தெய்வம்னு சொல்லிட்டு, நாம நாயேபேயேன்னு திட்டுறோம். ஆனா அங்கே அப்படியில்ல. இது என்னை ரொம்பவே இம்ப்ரஸ் பண்ணுச்சு.

இன்னொரு உண்மை சொல்றேன். இப்பதான் சதாபிஷேகம் நடந்துருக்கு. என் மனைவியை இதுவரை வாடிபோடின்னெல்லாம் சொன்னதே இல்ல. இத்தனைக்கும் எங்க சமூகத்துல அப்படிப் பேசுறதெல்லாம் ரொம்பவே சகஜம். இன்னிக்கி, பசங்களும் பொண்ணும் சர்வ சாதாரணமா அப்படிலாம் இஷ்டத்துக்குக் கூப்பிடுறாங்க. கலாச்சாரம், மாற்றம், புடலங்கா... என்னத்தச் சொல்றது.

நான், செட்ல இருக்கும்போது, யாரையும் மரியாதைக் குறைவா பேசினதே இல்ல. சின்னப்பையனா இருந்தாக்கூட, வாங்க தம்பின்னு சொல்லுவேன்.

சரி... அப்படி டா போட்டு பேசுற ரெண்டு நண்பர்கள் உண்டு. ‘என்னடா வாங்கபோங்கன்னு. அசிங்கமா இருக்கு. இனிமே டா போட்டுதான் பேசணும்னு முடிவுபண்ணினோம். அந்த நண்பர்கள், தேங்காய் சீனிவாசனும் சுருளிராஜனும்! அப்படியொரு ஆத்ம நண்பர்கள் எனக்கு.

8. டூயட் பாடிய அனுபவம்?

 எனக்கு எந்த அனுபவமும் இல்ல. டைரக்டருக்கும் டான்ஸ் மாஸ்டருக்கும்தான் மிகப்பெரிய அனுபவம். வாழ்க்கைல அப்படியொரு டான்ஸை அவங்க பாத்துருக்கவே மாட்டாங்க. ஒருதடவை, சுந்தரம் மாஸ்டர் கத்துக்கொடுக்கறாரு. மலைப்பகுதில, குளிர்காலத்துல ஷூட்டிங். காலெல்லாம் உறைஞ்சு போச்சு. எனக்கு டான்ஸே வரல. வேறவேற மாதிரி ஆடினேன். கோபமானவர், ஸ்ரீதர் சார்கிட்ட போய் புகார் வாசிச்சார். ‘என்னய்யா நீ. உன் அளவுக்கு டான்ஸ் பண்ணுவாரா அவரு. சின்னப்பையன், முத படம். அப்படித்தான் கூடக்குறைச்சி இருக்கும். அட்ஜஸ்ட் பண்ணு. டென்ஷனாகாதேன்னு சொன்னாரு. அதான் ஸ்ரீதர் சார்!

9. ஏன் மீசை வளர்க்கலை?

வளர்க்கணும், மீசை வைச்சுக்கணும்னெல்லாம் தோணலை. ஆம்பளைக்கு அழகு மீசைன்னு சொல்லுவாங்க. மீசை இல்லாட்டி அழகு இல்லையா, ஆம்பளைதான் கிடையாதா? மழமழன்னு மூஞ்சியை வைச்சிருந்தாத்தான், படத்துக்குப் படம் இஷ்டத்துக்கு மீசையை ஒட்டிக்கலாம். மீசை இல்லேன்னாத்தான் மீசையை ஒட்டிக்கறது ஈஸி. அதனால மீசையும் இல்ல; மீசை மேல ஆசையும் இல்ல!

10. உங்க 100வது படம்?

 சத்தியமா ஞாபகமே இல்ல சார். நீங்க கேக்கும்போதுதான், ஆமால்ல... நம்ம நூறாவது படம் என்னன்னு யோசனை போவுது. அப்படியே நடிச்சிட்டிருந்தாச்சு. தவிர, ஹீரோ, ஹீரோயின்னா, நூறாவது படம் முக்கியமா சொல்லுவாங்க. நாம காமெடியன் தானேன்னு அதையெல்லாம் புத்தில ஏத்திக்கலை.

https://www.kamadenu.in/news/cinema/4003-vennira-aadai-murthi-80-1.html?utm_source=site&utm_medium=TTH_slider_banner&utm_campaign=TTH_slider_banner

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

அந்த ‘தம்ப்ப்ப்ப்ரீ...’ எங்கே புடிச்சீங்க? - வெண்ணிற ஆடை மூர்த்தி - 80 (2)


 

 

vennira-aadai-murthi-80-2

 

அதே உற்சாகம், அதே நகைச்சுவை உணர்வு என அப்படியே இருப்பதுதான் வெண்ணிற ஆடை மூர்த்தியின் ஸ்பெஷல். மனிதரும் குரலும் குரலுக்குள்ளே இருந்து வெளிப்படுகிற குசும்பும் எல்லாவற்றுக்கும் மேலாக இருக்கிற உண்மையும் இன்னும் கவர்ந்துவிடுகிறது நம்மை!

இதோ... வெண்ணிற ஆடை மூர்த்தி தொடர்கிறார்...

 

11. விஸ்வநாதன் ராமமூர்த்தி, காத்தாடி ராமமூர்த்தி, வெண்ணிற ஆடை மூர்த்தி...?

மூணுபேருக்கும் ஒற்றுமையா இருக்கறது ரெண்டு. ஒண்ணு... மூர்த்திங்கற பேரு. அடுத்த ஒற்றுமை... மூணு பேருமே சினிமாக்காரங்க. ஆனாலும் முதலாமவர் இசை சம்பந்தப்பட்டவர். அடுத்தவர் நாடகங்கள்ல கொடிகட்டிப் பறந்தவர். மூணாவதா இருக்கறவர் சினிமால நடிகரா அறிமுகமாகி, நாடகங்கள்லயும் நடிச்சவர். கமலோட மாலைசூடவா, மோகனோட ருசின்னு மட்டுமில்லாம, 300 படங்களுக்கும் மேல காமெடி டிராக் எழுதினவர். மீண்டும் மீண்டும் சிரிப்பு மூலமா உங்க வீட்டுக்கே வந்து, ஹால்ல உக்கார்ந்தவர்.

12. வெண்ணிற ஆடை மூர்த்திக்குப் பிடித்த நிறம்?

வயலெட் கலர் ரொம்பப் பிடிக்கும். அதேபோல வெளிர்நீலமும் பிடிக்கும். ப்ளூ கலர் சட்டை கிடைச்சிருது. ஆனா வயலெட் கலர்ல சட்டையை விட, டிஷர்ட்தான் நிறைய்ய கிடைக்குது. அதனால, டிஷர்ட் போட்டுக்கறதுல ஒரு ஆர்வம் வந்துச்சு.

13. அந்த தம்ப்ப்ப்ரீ... எப்படி, எங்கே பிடிச்சீங்க சார்?

அது விளையாட்டாச் செஞ்ச விஷயம். மகேந்திரன் சாரோட நெஞ்சத்தைக் கிள்ளாதே படத்துலதான் அப்படிச் சொல்ல ஆரம்பிச்சேன். டைரக்டர் கூட வேணாமே மூர்த்தி சார்னு சொன்னார். ‘சார், இதாவது இருக்கட்டும் சார். உங்க படத்துல எனக்கு காமெடி ரோல் தராம, சீரியஸ் ரோலே தர்றீங்க. இதுமட்டுமாவது இருந்துட்டுப் போகட்டும் சார்’னு கேட்டுக்கிட்டேன். அவரும் வைச்சார். ஆனா இந்த அளவுக்கு ஹிட்டாகும்னு நினைக்கவே இல்ல.

அப்புறம் என்னாச்சுன்னா... என்னை படத்துக்கு புக் பண்ண வரும்போதே, டைரக்டர்கள், ‘மானே தேனேன்னு போட்டுக்கங்க’ன்னு சொல்ற மாதிரி, சார், அங்கங்கே உங்க ஸ்டைல்ல இதையெல்லாம் சொல்லிருங்க சார்னு சொல்லிருவாங்க. எப்படியும் 25 படங்களுக்கு மேல இதைப் பண்ணிருப்பேன். எனக்கே போரடிக்குதுன்னு சொன்னாலும் விடமாட்டாங்க.

இப்படித்தான், குதிரை கனைக்கிற மாதிரி ஒரு பொண்ணைக் கூப்பிடுற சீன். இதைப் பாத்துட்டு கமல் சார், ‘உலகத்துல எவனும் ஒரு பொண்ணை இப்படிக் கூப்பிட்டிருக்கமாட்டான் சார்’னு கிண்டல் பண்ணினார்.

14. நீங்கள் ரொம்பவே மிஸ் பண்ணும் நபர்?

அப்பா. ரொம்ப ரொம்ப நல்ல அப்பா. அவர் பேரு நடராஜ சாஸ்திரி. அந்தக் காலத்து தென்னாற்காடு மாவட்டத்துல மிகப்பெரிய கிரிமினல் வக்கீல். ஸ்ட்ரிக்கானவர்தான். ஆனா அப்படியொரு பாசமும் பிரியமும் காட்டுவார். சிதம்பரம்தான் சொந்த ஊரு. ரொம்ப ஒழுக்கமா, ஒழுங்கா இருப்பார். நம்மையும் அப்படி எதிர்பார்ப்பார். அவரோட உதவி செய்ற குணம் பார்த்து வியந்திருக்கேன்.

வீட்டுக்குப் பக்கத்துல புதுசா டாக்டர் ஒருத்தர் குடிவந்தார். என்ன சார் எல்லாம் செளகரியமா இருக்கானு அப்பா கேட்டார். எல்லாம் சரி,. நல்ல பால்தான் கிடைக்கலைன்னு டாக்டர் சொன்னார். உடனே அப்பா என்ன பண்ணினார் தெரியுமா? வீட்ல இருந்த ஒரு பசுமாட்டை அவர் வீட்டுக்குக் கொடுத்துட்டார். எங்க வீட்ல நிறைய பசுமாடுங்க இருந்துச்சு. பசுமாடு, ஐஸ்வரியம், வீட்டு லக்ஷ்மி, செல்வம்னு என்னென்னவோ சொன்னாங்க. ஆனா இது எதையுமே அப்பா பாக்கலை; எப்பவும் பாக்கவும் மாட்டார்.

எனக்கு என்னன்னா, எங்க அப்பா என்னை தூக்கிவைச்சுக்கிட்ட மாதிரியோ மடில உக்கார வைச்சிக்கிட்ட மாதிரியோ ஞாபகமே இல்ல எனக்கு. அவரோட கண்டிப்பும் நேர்மையும் சுத்தமும் நேரந்தவறாமையும்தான் என்னையும் அப்படியே வைச்சிருக்குன்னு நினைக்கிறேன்.

15. சொந்த ஊர்?

அப்பாவுக்கு சிதம்பரம். அம்மாவுக்கு திருவிடைமருதூர்ப் பக்கம் திருவிசநல்லூர். வேதம், சாஸ்திரம்னு நிறைஞ்ச ஊரு. அப்பா பேரு கே.ஆர்.நடராஜ சாஸ்திரி, அம்மா பேரு சிவகாமி. சிதம்பரத்துல எப்படி நடராஜரும் சிவகாமியுமோ, அப்படித்தான் சிதம்பரத்துல இந்தத் தம்பதியும். பேருப்பொருத்தம் அமைஞ்சது ஆச்சரியம்தான். ஆனா ஒருவிஷயம் சொன்னா நம்புவீங்களா?

 எனக்குத் தெரிஞ்சு, அப்பாவோ அம்மாவோ, சிதம்பரம் கோயிலுக்குப் போய் பாத்ததே இல்ல. அபிஷேகத்துக்குச் சொல்லுவார். பூஜைக்குச் சொல்லுவார். எல்லாம் செய்வார். ஆனா போறதில்ல. யாராவது சொந்தக்காரங்க வந்து, அவங்களைக் கூட்டிட்டுப் போகணுமேன்னாத்தான் உண்டு. எனக்கு... சிதம்பரத்தை மறக்கவே முடியாது. ரயில்வே ஸ்டேஷன், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், கடைவீதி எதையும் மறக்கமுடியாது.

16. சாப்பாட்டு ராமனா நீங்க?

அளவாத்தான் சாப்பிடுவேன். டாக்டர் எதுஎதெல்லாம் நல்லதுன்னு சொல்றாரோ, அது எதையும் நான் சாப்பிடுறதில்ல. பருப்பு, சாம்பார், ரசம், கூட்டு, பொரியல் அவ்ளோதானே உணவு? இப்ப என்னடான்னா, ஆர்கானிக் ஆப்பிள்ங்கறான். என்னென்னவோ மாறிருச்சு உணவுல!

நான் சின்னப்பையனா இருக்கும் போதெல்லாம் கேன்ஸர்னு காதாலக் கேட்டது கூட இல்ல. ஆனா இன்னிக்கி எத்தனை பேருக்கு கேன்ஸர் வந்துட்டிருக்கு, பாருங்க! உணவு சுத்தமாவே அசுத்தமாயிருச்சு.

நடுவுல போண்டா, பஜ்ஜின்னு உள்ளே லபக்குன்னு இறக்குறதெல்லாம் கிடையாது. இப்பதான் நைட் சப்பாத்திக்கு மாறிருக்கேன்.

டெட்டால், ஏஸி ரூம், ஜாக்கிங், வாக்கிங்னு ஆரோக்கியமான பேக்கேஜ் லைஃப்ல புதுசுபுதுசா நோய்கள். நூறு வயது வாழ்வது எப்படி?ன்னு புக் போடுறான். ஆனா அவனே நூறு வயசு வாழ்றது இல்லியே! சரி... நூறு வயசு வரை ஏன் வாழணும்? அதுவும் தெரியல நமக்கு. அதுவொரு சுமைதானே! இருக்கிற வரைக்கும் ஆக்டீவா, நிம்மதியா, சுமைன்னு இல்லாத அளவுக்கு வாழ்ந்துட்டுப் போயிடணும். அதுக்கு உணவெல்லாம்தான் சிக்கல். அப்படியிருக்கும்போது சாப்பாட்டு ராமனா இருக்கறதெல்லாம் சான்ஸே இல்ல எனக்கு!

17. தியேட்டரில், ஒரு ரசிகராக ஒரே படத்தை எத்தனை முறை பார்த்தீர்கள்?

ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி. ஒன்பது தடவை பார்த்தேன். சிதம்பரத்துல நடராஜான்னு ஒரு தியேட்டர். நாலணாதான் டிக்கெட். நாலுமணி நேரம் ஓடும் படம். அந்தத் தியேட்டர்ல ஒரு இடம்... என் உசரத்துக்கு மறைக்கவே மறைக்காதுங்கற மாதிரியான இடம். டிக்கெட் கிழிக்கிற அண்ணன்கிட்ட அந்த இடத்துல யாரும் உக்காராமப் பாத்துக்கச் சொல்லிருவேன்.

அந்தத் தியேட்டர்ல, ரீல் கட் பண்ணி அடிக்கடி பிலிம்கள் தூக்கிப் போடுவாங்க. அதையெல்லாம் கேட்டு வாங்கி, லென்ஸ் வைச்சுக்கிட்டு, ஒவ்வொரு ஃபிலிமா வைச்சு, என் நண்பர்களுக்கு ‘பிலிம்’ காட்டினதெல்லாம் ஞாபகம் இருக்கு. அந்தப் பிலிம்ல இருக்கிறதைக் காட்டும்போது, பின்னணில... ‘இதோ... மன்னன் கானகம் சென்றுவிட்டான். அங்கே அவன் நடந்துகொண்டிருந்தபோது...’ அப்படின்னு நான் வாய்ஸ் கொடுப்பேன். செம கலாட்டா நாட்கள் அதெல்லாம்!

18. உங்க காமெடியால, மத்த நடிகருங்க அதிக டேக் எடுக்கும் நிலை வந்திருக்கிறதா?

அப்படிலாம் சொல்லமுடியாது. பொதுவா, அந்தக் காட்சியை பேசிப்பேசிப் பாத்துக்கும்போதே, சிரிப்பு மொத்தமும் சிரிச்சிட்டுதான் நிப்போம்; நிப்பாங்க. அதனால அப்படிலாம் டேக் வாங்கற நிலை வந்தது இல்ல. நடிச்சிட்டிருக்கும் போதே தடக்குன்னு எதுனா சேர்த்துச் சொல்லும்படி ஆகும். அப்பவும் சிரிப்பு வந்துரும் கூட நடிக்கிறவங்களுக்கு! ஆனா, அதை டேக் எடுத்து முடியறவரைக்கும் காட்டிக்காம, வெடிச்சுச் சிரிச்ச அனுபவங்கள் நிறையவே நடந்திருக்கு.

19. மூர்த்தி சிறிது கீர்த்தி பெரிது- இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இப்படி அடுக்குமொழியாகட்டும். கீர்த்தியாகட்டும்... இதெல்லாம் எனக்கு ஒத்துவராது. பொருந்தவும் செய்யாது. இதுல என்ன அல்ப சந்தோஷம்னா... யாராவது கிண்டலாச் சொல்லும்போது கூட, மூர்த்திகீர்த்தின்னுதானே சொல்லியாகணும்!

20. உங்கள் சினிமா வாழ்வில், டர்னிங் பாயிண்ட்..?

  யோசிச்சுப் பாத்தா, அப்படி டர்னிங்பாயிண்ட் மாதிரியான படங்கள்னு எதுவும் அமையலன்னுதான் சொல்லணும். காசேதான் கடவுளடா படம் அப்படிப்பட்ட படம்தான். ஆனா, அந்தப் படம் தேங்காய் சீனிவாசனுக்கு மிகப்பெரிய டர்னிங் பாயிண்டா அமைஞ்சிச்சு. எனக்கு அப்படிலாம் நடக்கல. ஒரு அஞ்சாறு படம் கைல இருக்கும். நடிச்சுக்கிட்டே வருவேன். திரும்பவும் அஞ்சாறு படம் வந்துரும். இப்படித்தான் 800 படங்கள் வரை பண்ணிருக்கேன். என்ன ஒண்ணு... எந்தப் படமா இருந்தாலும் அதுல ஏதோ ஒருவகைல, மக்கள் மனசுல நின்னுருவேன். கடவுளுக்கும் டைரக்டர்களுக்கும் நன்றி.

- இதோட பத்தும்பத்தும் இருபது. இன்னும் அறுபது பதில்கள் இருக்கு!

https://www.kamadenu.in/news/cinema/4029-vennira-aadai-murthi-80-2.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category

Share this post


Link to post
Share on other sites

’வெண்ணிற ஆடை’ ஜெயலலிதான்னு ஏன் பேர் வரலை?


 

 

vennira-aadai-murthi-80-3

 

 

 

வெண்ணிற ஆடை மூர்த்தி 80 (3)

‘ஆரம்பிக்கலாமா?’ என்று சொல்லிவிட்டு, தனக்கே உரிய பாணியில் குரல் செருமித் தயாராகிறார். ’பதில் என்ன சொல்வேன்னு வாசகர்கள் எதிர்ப்பார்ப்பாங்க. கேள்வி என்னன்னு நான் எதிர்பார்ப்போட இருக்கேன்’ என்று வார்த்தைகளுக்குள் விளையாடுகிறார்.

 

வெண்ணிற ஆடை மூர்த்தி தொடர்கிறார்...

21. அப்பா கண்டிப்பானவர். உங்கள் காதல் - கல்யாண அனுபவம்?

முதல்ல மனைவியைச் சொல்லிடுறேன். அவங்க பேர் மணிமாலா. அவங்களும் நடிகைதான். பாத்தோம். பேச வாய்ப்புக் கிடைச்சது. அந்தப் பேச்சு பரஸ்பரம் புரியவும் உணரவும் வைச்சுச்சு. அது காதலா மாறுச்சு. கல்யாணத்துக்கு ஏங்க வைச்சுச்சு. உறுதியா இருந்தோம்.

அப்ப, அப்பா இல்லை. இறந்துட்டாங்க. அம்மாதான். அம்மா, அண்ணாக்கள், அக்காக்கள்னு எல்லார்கிட்டயும் சொன்னேன். அவங்க சம்மதமும் தெரிவிக்கலை; எதிர்க்கவும் செய்யலை. அப்ப அம்மாவால முடியலை. கொஞ்சம் உடம்பு சரியில்ல. சிம்பிளாப் பண்ணிப்போம்னு முடிவாகி, திருநீர்மலைலதான் கல்யாணமாச்சு. 1970ல கல்யாணம். இப்ப சதாபிஷேகமும் நடந்தாச்சு. நிம்மதியா, நிறைவா, உண்மையா, ஒழுக்கமாப் போயிட்டிருக்கு லைஃப். இந்த லைஃப் டிராவலிங்தான் ஸ்மூத்தா இருக்கணும். ஓகே. பரமதிருப்தி.

22. காமெடி நடிகனாக இருப்பதால் உள்ள சிக்கல்கள்?

காமெடி நடிகனான்னு இல்ல... காமெடி சென்ஸோடு இருக்கறதுதான் மிகப்பெரிய சந்தோஷமே! எந்த விஷயத்துலயும் எப்படிப்பட்ட தருணத்துலயும் கொஞ்சம் ஈஸியாவே எல்லாத்தையும் ஹேண்டில் பண்றது வந்துரும்.

இப்பக்கூட, சதாபிஷேகம் நடந்தப்பக் கூட, ஏகத்துக்கும் கலாட்டா. எல்லாரும் குடம்குடமா தண்ணியெடுத்து ஊத்திக்கிட்டே இருக்காங்க. ‘இந்த வயசான காலத்துல என்னப்பா இதெல்லாம்? ஒரு இங்க் ஃபில்லர்ல தண்ணியெடுத்து ஆளுக்குக் கொஞ்சம் நடுகபாலத்துல ஊத்துங்க போதும்னு சொன்னேன். புரோகிதர் சிரிக்கிறார். அவர் மட்டுமா? எல்லாரும் சிரிச்சிட்டாங்க.

கல்யாணத்தப்பவும் சஷ்டியப்த பூர்த்தியப்பவுமா நடந்து, இப்ப சதாபிஷேகத்துலயும் தாலி கட்றேன். ஒரே பொண்ணுக்கு மூணு தடவை... செம போர். ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு பொண்ணு இருந்தாதானே லைஃப் ஜாலியா இருக்கும்னேன்.

அதேசமயத்தில, நாம ஏதாவது சீரியஸாப் பேசினாக் கூட, போங்க சார், ஜோக்கடிக்காதீங்கன்னு சொல்லிருவாங்க. நமக்கும் சீரியஸ்னெஸ் உண்டுன்னே புரிஞ்சுக்கமட்டாங்க. ஆனா, காமெடி சென்ஸ், அதுவொரு கலை.

23. வெண்ணிற ஆடை ஜெயலலிதா?

  இதுல ஒரு சுவாரஸ்யம் பாருங்க. படத்துல மூணு பேரை அறிமுகப்படுத்தறாரு ஸ்ரீதர் சார். எனக்கும், நிர்மலாவுக்கும் வெண்ணிற ஆடைங்கற பேர் முன்னால ஒட்டிக்கிச்சு. ஆனா அவங்களுக்கு அப்படி இல்ல. அதுவொரு சுவாரஸ்ய ஆச்சரியம். அருமையான மனுஷி. அலட்டலே இல்லாமப் பழகறவங்க ஜெயலலிதா. பலமுறை அவங்களைச் சந்திச்சிருக்கேன். வீட்டுக்குக் கூப்பிட்டுப் பேசிருக்காங்க. அவங்களுக்கு ஜோஸியம் பாத்தும் சொல்லிருக்கேன். அதெல்லாம் அவங்களோட பர்சனல். என்னைப் பத்திச் சொல்லலாம். அவங்களைப் பத்தி வேணாமே!

24. தலைமுறை கடந்தும் நிற்கிறீர்கள். எப்படி உணர்கிறீர்கள்?

ரொம்ப ரொம்பப் பெருமையா இருக்கு. சிவாஜி, எஸ்.வி.ரங்காராவ், டி.ஆர்.ராமச்சந்திரன், ஏ.கருணாநிதி, ராமாராவ், டிகேஎஸ் சகோதரர்கள், எஸ்.வி.சுப்பையான்னு அந்தக் காலம் தொட்டு, இப்ப வரைக்கும் பலபேரோட நடிச்சிருக்கேன். எப்படியும் 800 படங்களாகியிருக்கும். இதுல கூடுதல் சந்தோஷம் என்னன்னா... யார்கிட்டயும் போய் சான்ஸ் கேட்டு நிக்கலை. அதுவா வரும். நடிப்பேன். திரும்ப வரும். நடிச்சிகிட்டே இருந்தேன். உண்மையிலேயே பெருமையா இருக்கு!

25. முதல்படம் வெண்ணிற ஆடை சரி. எந்தப் படத்தில் இருந்து வெண்ணிற ஆடை மூர்த்தின்னு டைட்டில் போட்டாங்க?

டக்குன்னு ஞாபகத்துக்கு வரல. அநேகமா, காதல் படுத்தும் பாடு படமா இருக்கணும். இல்லேன்னா தேன்மழை படமா இருக்கணும். முக்தா பிலிம்ஸ் தயாரிச்ச படம்னுதான் ஞாபகம். இன்னும் நம்மளை கைதூக்கிவிடலாமேன்னு அப்படிப் போட்டாங்கன்னுதான் நினைக்கிறேன். ஏன்னா... அப்ப மூர்த்தின்னு வேற யாரும் இல்ல. ஆனாலும் வெண்ணிற ஆடையை சேர்த்து, க்ரீன் சிக்னல் போட்டிருக்காங்க!

26.சிரிக்க வைப்பது கஷ்டமா? சிந்திக்க வைப்பது கஷ்டமா?

ஒரு ஜோக் சொல்லி சிரிக்கவைச்சிடலாம். அவ்வளவு ஏன்... கிச்சுக்கிச்சு மூட்டி கூட சிரிக்கவைச்சிடலாம். அதேபோல சிரிக்க வைக்கிறதை விட ஒருத்தரை அழவைக்கிறது ரொம்பவே ஈஸி. வலிக்கிற மாதிரி காயப்படுத்திடுறது மனித இயல்பாவே போயிருச்சு. அதனால அழ வைக்கறது ஈஸி. வெங்காயம் கூட அழவைச்சிருது. ஆனா ஒருத்தரை நாம எப்படி சிந்திக்கவைக்கமுடியும்? சிந்திச்சுப் பாரு, யோசிச்சுப் பாரு, ரியலைஸ் பண்ணிப்பாரு, உக்கார்ந்து யோசி, மல்லாந்து படுத்து யோசின்னு ஆயிரம் விதமா யோசிக்கச் சொல்லலாம். சிந்திக்கத் தூண்டலாம். ஆனா சிந்திக்கிறது அவங்கவங்களோட வேலை; புத்திசாலித்தனம்; உணர்வு! ‘இவன் என்ன சொல்றது, நாம என்ன யோசிக்கிறதுன்னும் இருக்காங்கதானே!’

27. சிவாஜி கணேசன்?

எப்பேர்ப்பட்ட நடிகர். நடிப்புக்கான டிக்‌ஷனரி அவர்தான். அவ்ளோ உயரத்துல இருக்கற நடிகர்தான். ஆனாலும் இறங்கி வந்து எல்லோர்க்கிட்டயும் சிரிக்கச் சிரிக்கப் பேசுவார். தப்பா நடிக்கும் போது, கூப்பிட்டு திருத்துவார். ரொம்ப நல்லவர். அவர் வேலை முடிஞ்சிருச்சுன்னு ஓய்வெடுக்கப் போகாம, மத்தவங்க நடிக்கிறதைப் பாத்துக்கிட்டே இருப்பார். நல்லா பண்ணிருந்தா, எல்லாருக்கு முன்னாடியும் பாராட்டுவார். சொல்லப்போனா, நடுவுல நடுவுல, அவர் அடிக்கிற ஜோக்கைக் கேட்டு, மொத்த ஏரியாவும் அப்படிச் சிரிக்கும்.

28. நெஞ்சில் நிற்கும் பாராட்டு?

 நிறைய பேர் பாராட்டுவாங்க. அதெல்லாம் அவங்க நெஞ்சிலிருந்தே வந்ததான்னு தெரியாது. ஆனா வார்த்தையைக் கொண்டே பாராட்டுக்கு பவர் அதிகமாயிரும். அப்படி நிறைய பேர் பாராட்டிருக்காங்க. ஒரு ரசிகர், போன் பண்ணிப் பாராட்டினார். ரொம்ப நேரம் என் நடிப்பை, காமெடியை பாராட்டிட்டே இருந்தார். கடைசியாப் பேசி முடிக்கும் போது, ‘நீங்க மனிதநேயமிக்க மனிதர் சார்’னார். அந்த கடைசி வார்த்தைதான் எனக்குக் கிடைச்ச, என் நெஞ்சுல அப்படியே நின்ன பாராட்டு! அந்த ரசிகருக்கு நன்றி.

29. இப்போது உள்ள இயக்குநர்கள் உங்களிடம் எப்படிப் பழகுகிறார்கள்?

ரொம்ப நல்லாப் பழகறாங்க. மரியாதையா பேசுறாங்க. ரொம்ப பண்பா நடத்துறாங்க. சுதந்திரமா, நம்ம உணர்வுகளைப் புரிஞ்சுக்கிட்டு பண்ணச் சொல்றாங்க. ஒருசிலர், மரியாதை உணர்வோட தள்ளி நிப்பாங்க. தலைமுறை இடவெளிங்கறது கலைஞர்கள்கிட்டயும் கலைகள்லயும் இல்லன்னு நினைக்கிறேன். ஆனாலும் ஜெனரேஷன் கேப்... ஏத்துக்கத்தான் வேணும்

30. உங்களுக்குப் பிடிச்ச டைரக்டர்?

நிறைய சொல்லலாம். ஏகப்பட்ட டைரக்டரோட ஒர்க் பண்ணிருக்கேன். ஆனாலும் அந்த டைரக்டரைப் பாத்து ரொம்பவே ஆச்சரியப்பட்டேன். எரிஞ்சு விழலை. யார்கிட்டயும் சுள்ளுன்னு பேசலை. ஆர்ட்டிஸ்ட் லேட்டா? கவலைப் படுறது இல்ல. செட் ரெடியாகலையா? டென்ஷனாகறதே கிடையாது. எல்லார்கிட்டயும், எல்லா விஷயத்துலயும் டேக் இட் ஈஸியா ஒர்க் பண்ணிட்டிருந்தார். அவர்... டி.ஆர்.ராமண்ணா. அப்படியொரு மனிதர் அவர்!

 

இதோட முப்பது ஆச்சு. இன்னும் இருக்கு! 

https://www.kamadenu.in/news/cinema/4071-vennira-aadai-murthi-80-3.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category

Share this post


Link to post
Share on other sites

’மகேந்திரனுக்கு எம் மேல ஒரு நம்பிக்கை!’


 

 

vennira-aadai-murthi-80-4

ஜெய்சங்கர், வெண்ணிற ஆடை மூர்த்தி, ரஜினிகாந்த்

வெண்ணிற ஆடை மூர்த்தி - 80 (4)

’கேக்கலாமா சார்?’ என்றதும் ‘நான் எப்பவோ ரெடி’ - சிரித்துக்கொண்டே சொல்கிறார் வெண்ணிற ஆடை மூர்த்தி. ‘ஷூட்டிங்கலயும் இப்படித்தான். டைரக்டர் சொல்றதுக்கு முன்னாடியே ரெடியா இருப்பேன். என்னால யாருக்கும் டென்ஷனோ டைம் வேஸ்ட்டோ வந்துடக்கூடாது, பாருங்க’ என்று பொறுப்புடன் சொல்கிறார்.

 

31. அதென்ன... மகேந்திரன் படங்களில் நீங்கள் ஸ்பெஷல். எல்லாப் படத்திலும் இருக்கிறீர்கள். கேரக்டர் ரோல் வேறு. என்ன காரணம்?

எம் மேல ஒரு நம்பிக்கையோ என்னவோ... அவரோட முள்ளும்மலரும் படத்துலேருந்தே தொடர்ந்து வாய்ப்புகள் கொடுத்துடுவாரு. அதுவும் என்னை காமெடியனாவே அவர் பாக்கமாட்டார். கேரக்டர் ரோல்தான். மிகச்சிறந்த இயக்குநர் அவர்.

இப்படித்தான்... ஒருமுறை அவர் படத்து ஷூட்டிங். மத்தியானம் கால்ஷீட் கொடுத்திருந்தேன். வீட்ல சாப்பிட்டெல்லாம் முடிச்சிட்டு, போய் நின்னேன். ‘என்ன சார்’னு கேட்டாரு. ‘இன்னிக்கி என் போர்ஷன் இருக்கே சார்’னு சொன்னேன். ‘அடடா... அடுத்த வாரம்தான் சார் இருக்கு’ன்னார். ‘சரி சார்... ஸாரி சார். வந்ததுக்கு ஒரு போட்டோவாவது எடுக்கச் சொல்லுங்க. அந்த திருப்தியோட கிளம்பறேன்’னு சொன்னேன். ரெண்டே நிமிஷம்... மெளனமா இருந்தார்.

‘நீங்க ரெடியாகுங்க சார். இன்னிக்கே எடுத்துடலாம்’னு சொல்லிட்டு அடுத்த அரைமணி நேரத்துல, என் கேரக்டருக்கான வசனத்தையெல்லாம் எழுதி, கையில கொடுத்தார். அந்தப் படம் ‘மெட்டி’. அதுல நான் புரோக்கர். எல்லாத்துக்குமே புரோக்கர். கல்யாணப் பொண்ணைப் பத்தி வாடகை வீடு கேக்கறவங்ககிட்டயும், வீடு விஷயமா கேக்கறவங்ககிட்ட மாப்பிள்ளை பத்தியும்னு மாத்தி மாத்திச் சொல்லுவேன். அதுவொரு காமெடியா, ஜாலியா இருக்கும். அத்தனை அற்புதமான இயக்குநர் மகேந்திரன் சார்.

32. ஆச்சி?

அருமையான மனுஷி. அற்புதமான நடிகை. யார் யாருக்கெல்லாமோ சாய்ஸ் உண்டு. மனோரமாவுக்கு சாய்ஸே இல்ல. அவங்களோட 40 படங்களுக்கும் மேல பண்ணிருப்பேன். காமெடி பண்ணிக்கிட்டே இருப்பாங்க. சீரியஸாவும் பிரமாதப்படுத்திருவாங்க. காமெடியும் இல்லாம, சீரியஸாவும் இல்லாம, குணச்சித்திரமா நடுவுல நின்னும் அசத்திருவாங்க. எல்லார்கிட்டயும் மரியாதையா நடந்துக்கற அந்த குணம், ரொம்பப் பிடிக்கும் எனக்கு. தமிழ் சினிமாவில், காமெடி, கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்னு மனோரமா அடைந்த உயரம், வேற யாரும் தொட முடியாத இடம் அது!

33. காமெடி நடிகைகள் குறைவு. ஏன்?

இங்கே ஒரு விஷயம், தப்பாவே யோசிக்கப்படுதுங்கறது என் அபிப்ராயம். சினிமால காமெடி நடிகையா நடிக்கிறாங்கன்னா, நாம  அழகு இல்லைன்னு அவங்களே முடிவு பண்ணிடுறாங்க. அழகுக்கும் நடிப்புக்கும் ஹீரோயினுக்கும் சம்பந்தம் இருக்கிற மாதிரி தெரியல எனக்கு! ‘ஹீரோயின் சான்ஸ் கிடைக்கல. காமெடி ரோலாவது பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டேன்’னு சொன்னவங்களைப் பாத்திருக்கேன். சச்சு அழகுதானே! ஸ்ரீதர் சார் கூப்பிட்டு, காமெடி ரோல் கொடுக்காம இருந்தா, இவ்ளோ வருஷம் நின்னுருக்கமுடியாது அவங்க. எப்படிப்பட்ட மூஞ்சியா இருந்தாலும் சரி, நம்மளைப் பிடிச்சிருச்சுன்னா, நம்ம மூஞ்சியும் பிடிச்சிப்போயிரும். என் மூஞ்சிய ஆடியன்ஸ் ஏத்துக்கலையா, சொல்லுங்க!

 34. டி.வி. மீடியாவை எப்படி பாக்கறீங்க?

கண்ணாலதான்னு கடிக்கலாம். இப்ப இருக்கிற ஆடியன்ஸ், செம ஷார்ப். டி.வி. அசுரத்தனமான வளர்ச்சிகொண்டது. இப்படி வளர்ச்சியடையும்னு நல்லாவே தெரிஞ்சுது. அந்த சமயத்துல கூப்பிட்டு, பண்றீங்களான்னு கேட்டாங்க. மீண்டும் மீண்டும் சிரிப்பு பண்ணினேன். திரை வேணும்னா சின்னதா இருக்கலாம். ஆனா ரீச் ரொம்பவே அதிகம். என் மீண்டும் மீண்டும் சிரிப்புக்கு அப்படியொரு ரெஸ்பான்ஸ்.

அதுக்குப் பிறகு கே. பாலசந்தர் சார், பாலுமகேந்திரா, லட்சுமின்னு நிறைய பேர் வந்தாங்க. ஜெயிச்சாங்க. இதனோட வளர்ச்சியும் தாக்கமும் வீரியமும் இன்னும் இன்னும் அதிகமாயிட்டுதான் போகும்.

35. ஓய்வு நேரங்களில் என்ன பண்ணுவீங்க?

ஒழுங்கு ரொம்ப முக்கியம்னு நினைக்கிறவன் நான். வீட்ல ஷெல்ஃப்பை க்ளீன் பண்ண ஆரம்பிச்சிருவேன். அழகா துடைச்சு, பேப்பர் போட்டு அடுக்கி வைப்பேன். துண்டு, டிரஸ்னு பீரோல நல்லா அடுக்கிவைப்பேன். ஒரு நாற்காலி கோணலா இருந்தாக்கூட பிடிக்காது எனக்கு. அதை ஒரு இஞ்ச் சரிபண்ணாப் போதும். இதையெல்லாம் மெனக்கெட்டு சரிபண்ணுவீங்களான்னு மனைவி கேப்பாங்க.

அப்புறம், நிறைய படிப்பேன். ஆங்கிலப் புத்தகங்கள் படிப்பேன். அதேபோல நிறைய எழுதுவேன். இதுவரைக்கும் பல புத்தகங்கள் எழுதி வெளியாகியிருக்கு. இப்ப கூட எழுதிட்டிருக்கேன். புத்தகத்துக்கு ‘குட்லக்’னு தலைப்பு வைச்சிருக்கேன்.

36. ஜெய்சங்கர்?

என்னவோ தெரியல. என்னை அவருக்கு ரொம்பப் பிடிக்கும். இரவும்பகலும் அவருக்கு முதல்படம். அது முடிஞ்சதும் காதல்படுத்தும்பாடு சேர்ந்து நடிச்சோம். நான் லாயர். அவரும் லாயருக்குப் படிச்சு பாதிலயே நின்னுட்டார். என்னை ரொம்பவே பிடிச்சிருக்கு அவருக்கு. அப்படியொரு ஜெண்டில்மேன் அவர். ஷூட்டிங்ல எல்லார்கிட்டயும் பேசுவார். கலகலப்பா இருப்பார். மரியாதையா நடத்துவார். நான் அவர் வீட்டுக்கு ஒரேயொரு தடவைதான் போயிருக்கேன். ஆனா அவர் பத்துப்பதினஞ்சு தடவை வந்துருக்கார்.

திடீர்னு புரொடக்‌ஷன் மேனேஜர், தயாரிப்பாளர், டைரக்டர்னு யாராவது போன் பண்ணுவாங்க. ‘ஜெய்சங்கர் சார் நடிக்கிறாரு. அவர் உங்க பேர் சொன்னாரு. எந்த தேதில கால்ஷீட் கொடுக்கிறீங்களோ கொடுங்க’ன்னு கேப்பாங்க. இப்படி நானும் அவரும் 55 படங்கள் சேர்ந்து பண்ணிருக்கோம். அற்புதமான மனிதர்.

37. பிறமொழிப் படங்கள்ல நடிச்சிருக்கீங்களா?

தெலுங்குல நாலு படம் பண்ணினேன். மலையாளத்துல ஒரேயொரு படம் பண்ணினேன். தெலுங்குல ஒருபடம் மட்டும் நானே டப்பிங் பேசினேன். பேசவேண்டிய வசனங்களை, சம்ஸ்கிருதத்துல எழுதிக்கிட்டு அதன்படியே உச்சரிச்சேன். லிப் மூவ்மெண்ட் சரியா வந்துச்சு. எல்லாரும் பாராட்டினாங்க. பி.ஏ. வரைக்கும் சம்ஸ்கிருதமும் படிச்சேன். அதனால ஓரளவு படிச்சிருவேன். அர்த்தம் சொல்லிருவேன். எழுதலாம் வராது. அவ்வளவுதான் நமக்கு சம்ஸ்கிருத ஞானம்.

38. உங்களுக்கு கோபம் வருமா?

காலைல 8 மணிக்கு ஷூட்டிங்னு சொன்னாங்க. 7 மணிக்கெல்லாம் வந்து மேக்கப்லாம் போட்டுக்கிட்டு, மேக்கப் ரூம்ல ரெடியா இருக்கேன். எட்டு, ஒன்பது, பத்து ஆச்சு. கூப்பிடலை. 11 ஆச்சு. 12 ஆச்சு. கூப்பிடவே இல்லை. விறுவிறுன்னு வெளியே வந்தேன். அங்கே ஷூட்டிங் நடந்துட்டிருந்துச்சு. ‘என்ன சார் இது. எட்டுமணிக்கு ஷூட்டிங்னு சொன்னீங்க. ஏழு மணிலேருந்து ரெடியா இருக்கேன். மணி இப்போ 12. என்னைக் கூப்பிடவே இல்ல. பன்னெண்டரை வரைக்கும் பாப்பேன். அப்படி இல்லேன்னு வையுங்க...’ என்று சொல்லி நிறுத்தியதும் டைரக்டர் சொர்ணம் உட்பட எல்லாருமே திக்குன்னு ஆகிட்டாங்க. பன்னெண்டரை வரைக்கும் பாப்பேன். அப்படி இல்லேன்னு வையுங்க... மேக்கப் ரூம்லதான் இருப்பேன். எப்ப வேணுமோ கூப்பிடுங்க. காத்துக்கிட்டிருக்கேன்’னு சொன்னதும் எல்லாரும் அப்படிச் சிரிச்சாங்க.

எனக்காவது... கோபமாவது... வர்றதாவது? இப்படிலாம் கேட்டு கோபப்படுத்தாதீங்க சார் என்னை!

39. முதல் சினிமா... முதல் சம்பளம். என்ன செஞ்சீங்க?

 வெண்ணிற ஆடை படத்துக்கு எனக்கு ஆயிரம் ரூபா சம்பளம். அந்த சம்பளம் கிடைச்சதும் திருப்பதிக்குப் போய் சுவாமி தரிசனம் பண்ணிட்டு, அந்த முதல் சம்பளத்தை பெருமாளுக்குன்னு சொல்லி உண்டியல்ல போட்டேன். திருப்பதி பெருமாள்தான் எங்களுக்கு குலதெய்வம்!

40. கஷ்டப்பட்டு நடித்த காட்சி?

 கஷ்டப்பட்டு நான் நடிச்சதும் இல்ல. மக்களை கஷ்டப்படுத்தினதும் கிடையாது. இதுவரைக்கும் டைரக்டரையோ மக்களையோ படுத்தி எடுத்ததும் இல்ல. சண்டைக்காட்சிகள்தான் கஷ்டமா இருக்கும். நம்ம எங்கே சண்டை போட்டோம்? அப்படியே இருந்தாலும் இப்படி அப்படின்னு க்ளோஸப் ஷாட் எடுத்துக்குவாங்க. அப்படிலாம் எடுக்காம சண்டைக்காட்சில நடிச்சிருந்தா, ஒண்ணு என் உடம்பு டேமேஜாகியிருக்கும். இல்லியா... ஸ்டண்ட் நடிகர் உடம்பு டேமேஜாகியிருக்கும்.

வசனம் பொருத்தவரை மறக்கவே மறக்காது. ஒருவேளை மறந்துட்டாலும் அந்த இடத்துக்குத் தகுந்தது மாதிரி பேசி சமாளிச்சிருவேன்.

இதோட நாப்பது ஆச்சு. இன்னும் நாப்பது இருக்கு.

https://www.kamadenu.in/news/cinema/4090-vennira-aadai-murthi-80-4.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category

Share this post


Link to post
Share on other sites

அப்போ நாகேஷ்... இப்போ வடிவேலு!


 

 

vennira-aadai-murthi-80-5

நாகேஷ் - வடிவேலு

 

 

வெண்ணிற ஆடை மூர்த்தி 80 (5)

சிரிக்க வைப்பது கலை. தான் சிரிக்காமல் எதிரில் இருப்பவர்களைச் சிரிக்கவைப்பது கூடுதல் கலை. அது வெண்ணிற ஆடை மூர்த்திக்கு, கைவந்த கலை. மனிதர் சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு, காமெடி ரகளை பண்ணுகிறார்.

 

தொடர்கிறார் பதில்களை..!

41. உங்களுக்குப் பிடித்த காமெடி நடிகர்... அப்போது, இப்போது?

அப்போது நாகேஷ். இப்போது வடிவேலு. எப்போதும் என்று ஒரு வரி சேர்த்துக் கேட்டால் என் பதில்... எப்போதும் வடிவேலு.

அடேங்கப்பா... எத்தனைவிதமான கேரக்டர்கள். இன்னொருவிஷயம்... ஒரு காமெடி நடிகன் இவ்வளவு ஹோம் ஒர்க் செய்து, தன்னை ஒவ்வொரு நாளும் வளர்த்துக்கொண்டதை நான் பார்த்ததே இல்லை.

காமெடி நடிகருக்கு என்றில்லை. ஒரு நடிகருக்கு பாடிலாங்வேஜ் முக்கியம். மனிதர், அதில் தனக்கென ஒரு ஸ்டைல் வைத்திருக்கிறார். டயலாக் டெலிவரி ரொம்ப ரொம்ப முக்கியம். படத்துக்குத் தகுந்தது மாதிரி, கேரக்டருக்குத் தகுந்த மாதிரி இவரின் வசனமும் வசன உச்சரிப்பும் இருக்கும். போதாக்குறைக்கு அவரே அற்புதமாகப் பாடுவார். வசனங்களைச் செம்மையாக்கிவிடுவார். அசுரத்தனமான வளர்ச்சி என்கிறோமே. அப்படியொரு அசுரத்தனமானவருக்கு அப்படியான வளர்ச்சிதான் அமையும். மிகப்பெரிய கலைஞன் வடிவேலு.

நாகேஷின் பாடி லாங்வேஜ், எக்ஸ்பிரஷன், டயலாக் டெலிவரி அவ்வளவு பிரமாதமா, பிரமிப்பா இருக்கும். நம்மளை சிரிச்சு சிரிச்சே அழவைச்சிருவாரு. அவ்வளவு ஏன்... சட்டுன்னு ஒரு குணச்சித்திர நடிகரா மாறி, நம்மள அழவும் வைக்கமுடியும் நாகேஷால! அதான் நாகேஷ்!

42. நீங்க நிறைய பொய் சொல்லுவீங்கதானே?

உங்ககிட்ட யாரோ பொய் சொல்லிருக்காங்கன்னு நினைக்கிறேன். உண்மையைச் சொல்லணும்னா, பொய்யே சொன்னதில்லைன்னு சொல்லமாட்டேன். அதேசமயம் நிறைய தருணங்கள்ல, உண்மை சொல்லாமலும் இருந்திருக்கேன்.

நான் சொன்ன பொய்யெல்லாம் காமெடிக்காக, அந்தக் காட்சிக்காக இருக்கும். அவ்ளோதான். மத்தபடி, ஒருத்தரை ஏமாத்தறதுக்காகவோ, நாம லாபம் சம்பாதிக்கணும்னோ, அடுத்தவங்களை நோகடிக்கணுங்கறதுக்காகவோ பொய் சொன்னதே இல்ல.

நான் நடிச்ச படங்களுக்கு காமெடி டிராக் எழுதணும்னு கேட்டா எழுதித்தருவேன். என்னை அவங்க வேணும்னு நினைக்கறதுக்கு முன்னாடி, சொல்றதுக்கு முன்னாடி, வேற யாராவது எழுதறதுக்கு ரெடியா இருக்காங்களா, அந்த வாய்ப்பை நாம தட்டிப் பறிச்சிட்டோமா அப்படீன்னெல்லாம் பாத்துட்டுதான் ஒத்துக்குவேன். சினிமாவோ... வாழ்க்கையோ... ஹானஸ்ட் ரொம்ப முக்கியம்னு நினைக்கறவன் நான்!

43. மணிரத்னம், கெளதம்வாசுதேவ் மேனன், கார்த்திக் சுப்பராஜ் என இயக்குநர்களின் படங்களைப் பார்ப்பீர்களா?

இதுக்கும் உண்மையைத்தான் பதிலாச் சொல்லணும். நான் படமே பாக்கறது இல்ல. நான் நடிச்ச படங்களைக் கூட அப்போ தியேட்டருக்குப் போய் பாக்கறதெல்லாம் இல்லவே இல்ல. காலேஜ் நாட்கள்ல, மெட்ராஸ் கிறிஸ்டின் காலேஜ்ல படிச்சதாலோ என்னவோ... நாமளும் வெள்ளைக்காரன்னு நெனைப்பு. அதனால இங்கிலீஷ் படங்களுக்குத்தான் போயிட்டிருந்தேன். இது ஒருவகைல மேதாவித்தனமா இருந்துச்சு. அதேசமயம், தமிழ்ப்படம் பாக்காததால எனக்குக் கிடைச்ச லாபம்... எந்த நடிகரோட இமிடேட்டிங், பாதிப்புன்னு இல்லாமலே வளர்ந்தேன். இதுவொரு செளகரியம்.

முன்னாடி, டிவில படம் பாத்துக்கிட்டிருந்தேன். அதுவும் ஏழெட்டுப் படங்கள்தான் பாத்துருப்பேன். இப்ப அதுவும் இல்ல.

44. சரி... உங்க முதல் படத்தைத் தியேட்டர்ல பாத்தீங்களா? எங்கே? என்ன அனுபவம்?

சென்னை ஆனந்த் தியேட்டர்ல முதல்நாள் பாத்தேன். படத்துக்கு வரவேற்பு. அதேசமயம் எதிர்ப்பும் கூட! ஏன் எதிர்ப்புன்னா... அப்ப எம்.ஜி.ஆரை வைச்சு ஸ்ரீதர் டைரக்ட் பண்றதா முடிவாகி, அறிவிப்பெல்லாம் வந்துச்சு. ஆனா அதை அப்படியே நிப்பாட்டிட்டு, பலரை அறிமுகங்களா வைச்சு வெண்ணிற ஆடை எடுத்து ரிலீஸ் பண்ணினப்ப, எம்.ஜி.ஆர். ரசிகர்கள் கோபமாயிட்டாங்க. என்னை யாருக்குத் தெரியப்போவுதுன்னு ஸ்டால்ல ஒண்டிக்கிட்டு நின்னேன். ஒரு கூட்டம் என்னைப் பாத்துட்டு, ‘ஓய்... இவன் தப்பிச்சிட்டாண்டா’னு சொல்லிட்டே ஓடிட்டாங்க. ஆக என் முதல்பட ரிலீஸ்... மறக்கவே முடியாது!

45. வெண்ணிற ஆடை படத்தைச் சுத்தியே நிறைய விஷயங்கள் சுவாரஸ்யங்கள் இருக்கும் போல?

அதை ஏன் கேக்கறீங்க? ஷூட்டிங்லாம் முடிஞ்சுது. டப்பிங் ஒர்க். ரிக்கார்டிங் தியேட்டர்ல ரெடியா இருக்கேன். ஸ்கிரீன்ல சீன்ஸ் ஓடுது. நான் வர்ற காட்சியும் வந்துருச்சு. ஆனா பேசாமலேயே இருக்கேன். டக்குன்னு நிப்பாட்டிட்டு, என்னாச்சு மூர்த்தி... டயலாக் சொல்லுங்கன்னாங்க. என்ன பிரச்சினைன்னா, விக்கெல்லாம் வைச்சிட்டு, மீசைலாம் வைச்சிட்டு இருக்கிற என்னை, நானே நம்பலை. யாரோ ஒருத்தர்தானேன்னு டப்பிங் பேசாம அமைதியா இருந்தேன். விஷயத்தைச் சொன்னதும், எல்லாரும் சிரிச்சு முடிக்க, கால்மணி நேரமாயிருச்சு.

46. பிடித்த உடை வேஷ்டி - சட்டையா? பேண்ட்  - டிஷர்ட்டா?

 அப்பலேருந்தே வேஷ்டின்னா ஒரு பயம். எங்கே அவிழ்ந்து, விழுந்து, மானம் போயிருமோனு ஒரு பயம். சினிமால நடிக்கும்போது, பெல்ட்டெல்லாம் போட்டுக்கிட்டு நடிப்பேன். மத்தபடி, பேண்ட், டிஷர்ட் ரொம்ப கம்ஃபர்டபிளா இருக்கு. அதனால பல வருஷமாவே டிஷர்ட், பேண்ட்தான் பிடித்த டிரஸ்னு ஆயிருச்சு.

47. உங்க குடும்பம் பத்தி?

 அப்பாவுக்கு சிதம்பரம். அம்மாவுக்கு திருவிசநல்லூர். அப்பா பெரிய கிரிமினல் வக்கீல். ரொம்ப ஆச்சாரமான குடும்பம். மூணு அண்ணா, ரெண்டு அக்கா. கடைசிதான் நான். அப்பா ரொம்பக் கண்டிப்பு. அவருக்கு முன்னே உக்கார்ந்தது கூட கிடையாது. அம்மாதான் செல்லம். அம்மாவுக்கு நான் ரொம்பவே செல்லம். என் முழுப்பேரு கிருஷ்ணமூர்த்தி. அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மெட்ராஸ் கிறிஸ்டின் காலேஜ், லா படிப்புன்னு ஓடுச்சு. அப்புறம் ரெமிங்டன்ல வேலை. ஆனா என்னவோ பிடிக்கல. என்னோட துரதிருஷ்டம்... நான் நினைச்சபடி வேலை கிடைக்கல. மக்களோட துரதிருஷ்டம்... சினிமால சான்ஸ் கிடைச்சிச்சு. இதுல ஒரு சுவாரஸ்யத்தைச் சொல்லவிட்டுட்டேன். அப்பா ஊரு சிதம்பரம். பேரு நடராஜன். கே.ஆர்.நடராஜ சாஸ்திரிகள். அம்மா பேரு சிவகாமி. சிதம்பரம் கோயில் சிவன், அம்பாள் பேரோடயே அம்மையும் அப்பனுமா கிடைச்சதை என்னன்னு சொல்றது?

இப்ப சொல்லப்போறது சோகம்... அப்பா இறந்தப்ப, அவரோட இறுதிக்காரியத்துக்காக பணம் மொத்தத்தையும் வைச்சிருந்தார் பீரோல! பத்து ரூபா கூட எங்களை செலவு செய்யவைக்கல. அதேபோல, அடுத்து 28 வருஷம் கழிச்சு அம்மா இறந்துபோனாங்க. அம்மாவும் இறுதிக்காரியத்துக்கான பணத்தை வைச்சிட்டுப் போனாங்க.

இப்போ... எங்களுக்கு ஒரு பையன். பேரு மனோ. பேரன் பேரு மானஸ் மனோ. மூர்த்தி, மணிமாலா, மனோ, மானஸ்னு எல்லாருக்குமே இங்கிலீஷ் 'M' - ல ஆரம்பிக்கற மாதிரி அமைஞ்சிருச்சு. அமைச்சாச்சு.

அப்படி இப்படின்னு எண்பது தொட்டாச்சு. அழுதுக்கிட்டேதான் பொறக்கிறோம். அட்லீஸ்ட்... சிரிச்சுக்கிட்டே சாவோமேனு ஒரு யோசனை. அப்படி சிரிச்சுக்கிட்டே செத்துப் போனா... எமன் பாசக்கயிறெல்லாம் கொண்டு வரமாட்டான். தேர் கொண்டு வந்து நம்மளை ஏத்திட்டுக் கூட்டிட்டுப் போவான்.

48. வெண்ணிற ஆடை மூர்த்தி, யாருக்கெல்லாம் நன்றி சொல்ல நினைக்கிறார்?

எல்லாருக்கும்தான். அப்பா, அம்மா, அண்ணா, மன்னி, அக்கா, அத்திம்பேர், அத்தை பையன், சித்தி பொண்ணு, நண்பர்கள், ஸ்ரீதர் சார், எனக்கு வாய்ப்புக் கொடுத்தவங்க, நல்ல இயக்குநர்கள், அன்பான நடிகர்கள் எல்லாருக்கும் நன்றி. முக்கியமா, வெண்ணிற ஆடை மூர்த்திக்கும் நன்றி. அவன் இல்லேன்னா... எதுவுமே இல்ல. இப்ப நன்றி சொல்ற வாய்ப்பும் கிடையாது.

49. நீங்க யாரை ரொம்பவே மிஸ் பண்றீங்க?

 அப்பா. அப்படியொரு அப்பா வரம்.

50. தமிழில் பிடித்த வார்த்தை, பிடிக்காத வார்த்தை?

பிடித்த வார்த்தை... அம்மா. அதாவது எங்க அம்மா. அப்பாவும்! பிடிக்காத வார்த்தைன்னா, அது துரோகம். துரோகம் செய்றதும் பிடிக்காது. துரோகம் பண்றவங்களையும் பிடிக்காது. துரோகம்ங்கற வார்த்தையே கூட பிடிக்காது.

இதொட ஐம்பது ஆச்சு... இன்னும் இருக்கு முப்பது...

https://www.kamadenu.in/news/cinema/4109-vennira-aadai-murthi-80-5.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category

Share this post


Link to post
Share on other sites

'லார்ட் கிருஷ்ணா பேங்க் தெரியுமா?’- வெண்ணிற ஆடை மூர்த்தி 80 (6) :


 

 

vennira-aadai-murthi-80-6

 

 

’’இதுவரைக்கும் அம்பது கேள்விக்கு பதில் சொல்லிட்டேன்.  இன்னும் முப்பது கேள்விக்கும் பதில் சொன்னாத்தான் பாஸ் மார்க் போடுவீங்களா?’ என்று லா பாயிண்ட் பிடித்து, கேட்கிறார் நடிகரும் வக்கீலுமான வெண்ணிற ஆடை மூர்த்தி.

51. ஜோஸியம்லாம் பாப்பீங்களாமே?

 

அப்ப. ஒய்.எம்.சி.ஏ.ஹாஸ்டல்ல தங்கிருந்தேன். வேலைக்குப் போயிட்டிருந்தேன். சினிமால நடிக்கல. அதுக்கான முயற்சிலயும் இறங்கலை. அப்பதான் புஸ்தகக்கடைல ஒரு ஜோஸியப் புக் வாங்கினேன். ஒரு வாசகர், ‘எனக்கு திருமணம் எப்போ நடக்கும்?’னு கேட்டிருந்தார். அதுக்கு அந்த ஜோஸியர், வர்ற இந்த மாசம்... இத்தனாம் தேதி கல்யாணம் நடக்கும்னு போட்டிருந்தார். எனக்கு அதிர்ச்சி; ஆச்சர்யம். கல்யாணம் நடக்கும்னு சொல்லலாம். தேதி முதற்கொண்டு சொல்லமுடியுமா? நான் ஜோஸியருக்கு போன் போட்டேன். நாளைக்கி வரலாமான்னு கேட்டேன். வரச்சொன்னார். ஆனா அடுத்தநாள் போகல. மூணாம்நாள்தான் போனேன். ’நேத்திக்கி நீ வந்திருக்கமாட்டே. உன் ஜாதகம் அப்படின்னு என் ராசி, லக்னம் எல்லாத்தையும் உள்ளே நுழைஞ்சதுமே சொன்னார். ‘நீ ஆபீஸ் வேலைலாம் பாக்கமாட்டே. நடிப்பேன்னு சொன்னார். ’உனக்கு லா இல்ல. வெறும் அம்பர்லாதான்னார். இந்த மாசம் இத்தனாம்தேதிக்குள்ளே நீ நடிக்க ஆரம்பிச்சிருவேன்னு சொன்னார். ஜோஸியத்தின் மேல ஆர்வம் வந்ததுக்கு இதான் காரணம்.

52. அந்த ஜோஸியர் சொன்னபடி நடந்துச்சா?

அவர் சொன்ன தேதிக்குள்ளேயே வெண்ணிற ஆடை படம் புக் ஆச்சு. ஷூட்டிங் ஆரம்பமாச்சு. அந்த ஜோஸியர் மூணு விஷயம் சொன்னார். அந்த மூணுமே சரியா நடந்துச்சு. ஜோஸியம்கறது மேஜிக் இல்ல; மேத்தமேடிக்ஸ்னு நான் முழுசாப் புரிஞ்சுக்கிட்டேன். அதுவொரு கணக்கு. இன்ன தேதில, இன்ன நேரத்துல பொறந்தவனுக்கான கணக்கு. அந்தக் கணக்கு ஒருபோதும் தப்பாது.

53. ஜோதிடர் சொன்ன மூணு விஷயங்கள்... சொல்லலாமா?

தாராளமா சொல்லலாம். இதுல ஒளிவுமறைவுக்கே வேலையில்லை.

முதலாவது : குச்சி ஊனி நடக்கற வயசுலயும் நீ நடிச்சிக்கிட்டுதான் இருப்பே!

அடுத்தது : உங்கூட நடிக்க வந்தவங்களையெல்லாம் தாண்டி, நீ மட்டும் நடிச்சிக்கிட்டே இருப்பே!

மூணாவது : உன் ஜாதகப்படி, நீ ஜோஸியக் கலையைக் கத்துக்குவே. அதுக்கு உண்டான காலமும் வயசும் வந்துருச்சுன்னு ஜாதகம் சொல்லுதுன்னு மூணு விஷயங்கள் சொன்னாரு. அந்த மூணும் அப்படியே நடந்திருக்கு. அன்னிலேருந்து எனக்கு ஜோஸியத்துல அவர்தான் குரு.

54. உங்க குருவோட பேரைச் சொல்லலாமா?

அவர் பேரு கிருஷ்ணமூர்த்தி. சைதாபேட்டை கிருஷ்ணமூர்த்தி. ஜோதிஷ மார்த்தாண்டர் கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தி. இதுல ஒரு ஆச்சரியம் பாருங்க. சிதம்பரம் கோயில்ல இருக்கற ஸ்வாமி பேரு நடராஜர். அம்பாள் பேரு சிவகாமி. சிதம்பரத்தை சொந்த ஊராக் கொண்ட எனக்கு, என் அப்பா அம்மா பேரும் நடராஜன், சிவகாமின்னே அமைஞ்சிச்சு.

அதேபோல என்னோட முழுப்பேரு கிருஷ்ணமூர்த்தி. என் குருநாதர் பேரும் கிருஷ்ணமூர்த்திதான். ‘உனக்கு எப்பலாம் ஜோஸியத்துல சந்தேகம் வருதோ.. அப்பலாம் எந்தத் தயக்கமும் இல்லாம வா. உனக்குக் கத்துக்கொடுக்கறேன்’னு சொன்னார். அதன்படியே அவர்கிட்ட ஜோஸியம் கத்துக்கிட்ட மாணவன் நான்.

55. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஜோஸியம் பாத்திருக்கீங்களாமே?

ஆமாம். பாத்திருக்கேன். அவங்களே கூப்பிட்டு விட்டிருக்காங்க. ‘நல்லா ஜோஸியம் பாப்பீங்களாமே. எல்லாரும் சொல்றாங்கன்னு கேட்டாங்க. நானும் அவங்களுக்கு, என்னெல்லாம் நடக்கும்னு சொல்லிருக்கேன். அதுல பலதும் அப்படியேதான் நடந்துச்சு. ஒருத்தங்க உயிரோட இல்லாதப்ப, அவங்களைப் பத்தி பேசுறது தப்புன்னு நினைக்கிறவன் நான். அதனால, அவங்ககிட்ட சொன்ன விஷயங்கள், இப்ப வேணாம். பேசாம இருக்கறதுதான் நட்புக்கு மரியாதை. ஜோஸியத்துக்கும் கெளரவம்.

56. ஜோஸியம்... வேற ஏதாவது அனுபவம்?

வெளிநாட்ல, ஆஸ்திரேலியாவுல ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி. கேள்விகளுக்கு பதில் சொல்ற நிகழ்ச்சி அது. அப்போ ஒருத்தர், ஜோஸியம் பொய்ன்னு சொன்னார். வெறும் மேஜிக்குன்னு சொன்னார். அவர் பேசிட்டிருக்கும்போதே, அவரோட ராசியை எழுதி, என் பக்கத்துல இருக்கறவர்கிட்ட கொடுத்தேன். அவர் என்ன ராசின்னு பக்கத்துல உக்கார்ந்திருந்தவரை மைக்ல கேக்கச் சொன்னேன். கேட்டாரு. கொடுத்த பேப்பரைப் பிரிச்சுப் பாக்கச் சொன்னேன். பாத்தவர் ஷாக்காயிட்டார். அவர் சொன்ன ராசியை முன்னாடியே எழுதிக்கொடுத்திருந்தேன்.

வேற ஏதாவது சொல்லுங்கன்னு கேட்டாரு. நான் நாளைக்கி காலைல குடும்பத்தோட ஊருக்குக் கிளம்பறேன். போவேனா கேன்ஸல் பண்ணிருவேனான்னு சொல்லமுடியுமான்னு கேட்டாரு. ‘ஊருக்குப் போவீங்க. ஆனா, மதியானம்தான் கிளம்புவீங்க’ன்னு சொன்னேன். ‘நாளைக்குக் காலைல ஷார்ப்பா ஆறுமணிக்கெல்லாம் கிளம்புறேன். அதான் ப்ளான்’னு அவர் சொன்னாரு.

ஆனா, எல்லாரும் கிளம்பியாச்சு. பெட்ரோல் நிரப்பி கார் ரெடியா இருக்கு. பேக் பண்ணி கார்ல ஏத்தியாச்சு. ஆனா, அவங்க ஊருக்குக் கிளம்பல. அவரோட குழந்தைக்கு திடீர்னு வாந்தியான வாந்தி. மயங்கிச் சரிஞ்சிருச்சு. உடனே ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போய், டாக்டரைப் பாத்து, டிரீட்மெண்ட் எடுத்து, வீட்டுக்கு வந்து, குழந்தை பழையபடி உற்சாகமானதும் மத்தியானத்துக்கு மேல கிளம்பிப் போனாங்க. ஆக, ஜோஸியம் மேஜிக் இல்ல; மேத்ஸ். அந்த மனிதர், அதுக்குப் பிறகு என்னையும் நம்பினாரு. ஜோஸியத்தையும் நம்ப ஆரம்பிச்சிட்டாரு.

57. ஜோஸியம் பாக்கணும்னு கேட்டா பாப்பீங்களா?

தெரிஞ்சதை, கத்துக்கிட்டதை சொல்லத்தானே வேணும். சிவாஜி, ஜெயலலிதா, ஓ.பி.எஸ்.னு நிறைய பேருக்கு பாத்துருக்கேன்.

காமெடியன்கிட்டயும் ஜோஸியக்காரன்கிட்டயும்தான் மக்கள் எப்பவுமே விளையாடுவாங்க. ‘எங்கே ஒரு காமெடி சொல்லுங்கன்னு கேப்பாங்க. ‘என் ராசி இதுதான். எப்படி இருக்கும்?’னு கேப்பாங்க. ஒரு டாக்டரைப் பாத்ததும் ‘நீங்க டாக்டர்தானே. ஒரு ஊசி போட்டுக் காட்டுங்க’ன்னு யாரும் கேக்கறது இல்ல. சினிமா, ஜோஸியம் எல்லாமே கலை. அப்படியா கலைங்கறதாலயே மக்களுக்கு உடனடியா ஒரு ஆர்வம். அவ்வளவுதான்.

58. உங்களைப் போலவே ஜோஸிய எக்ஸ்பர்ட், சினிமால யாராவது இருக்காங்களா?

இயக்குநர் டி.என்.பாலு. சட்டம் என் கையில், சங்கர்லால்னு நிறைய படங்கள் எடுத்திருக்கார். அஞ்சல் பெட்டி 520 படத்தின்போது, பேசிக்கிட்டிருந்தப்ப, ‘மூர்த்தி கைய நீட்டுங்க’னார். என் ரேகையைப் பாத்துட்டு, ‘யோவ்... நீங்க நடிகரா மட்டுமில்ல... ரைட்டராவும் இருப்பீங்கன்னு சொன்னார். அவர் சொல்லி பல வருடங்களுக்குப் பிறகு, சினிமால, மாலைசூட வா, ருசி மாதிரி படங்களுக்கு வசனம் எழுதினேன். 200 படங்களுக்கும் மேல காமெடி டிராக் டயலாக் எழுதினேன். டிராமா, சீரியல், மீண்டும் மீண்டும் சிரிப்புன்னு நிறைய எழுதினேன். அவ்ளோ துல்லியமாச் சொல்லுவாரு டி.என்.பாலு.

58. ஜாதகம், ஜோதிடம் சரி என்றால்... கர்மா என்பது என்ன?

 கர்மாவின் அமைப்பு அப்படின்னா, பொறப்பும் அந்த நேரத்துலதான் இருக்கும். கர்மா இப்படி இப்படிலாம் இருக்குன்னுதான் மனுஷப் பொறப்பே வருது, ஒருத்தருக்கு. முன்னாடி, நல்லது பண்ணிருந்தா அந்த மூட்டை லோடுலோடா இங்கேயும் வரும். பாவம் பண்ணிருந்தா, அதுவும் மூட்டைமூட்டையா, லோடுலோடா வந்து இறங்கும்.

இன்னொரு விஷயம். கர்மாதான் காரணம். அதான் கரெக்ட். சென்னைல ஒரு குழந்தை சாயந்திரம் 5.03 மணிக்குப் பொறக்குதுன்னா, அதைச் சுத்தியுள்ள 50 கி.மீ.ல வேற எந்தக் குழந்தையும் அந்த டைமுக்குப் பொறக்காது. 5.05க்குப் பொறக்கலாம். அதே ஊர்... அதே டைம்... ரெண்டு குழந்தைங்க பொறக்க வாய்ப்பே இல்ல.

59. மகான்கள்?

காஞ்சி மகாபெரியவாளோட பரம பக்தன் நான். ஒருமுறை அவரை தரிசனம் பண்ணப் போனேன். மனசுல வீடு வாங்கணும், பணம் இல்லியேங்கற நெனைப்பு ஓடிக்கிட்டே இருந்துச்சு. ஆனா கேக்கல. அப்ப மகாபெரியவா, ’சம்ஸ்கிருதம் தெரியுமா?’னு கேட்டார். ஓரளவுன்னு சொன்னேன். ’தினமும் கீதையைச் சொல்லு’ன்னார். அதன்படி நானும் தினமும் பகவத் கீதை பாராயணம் பண்ணினேன்.

ஏழாம்நாள். ‘சார்... உங்க பேர் மூர்த்திதானே. எம் பேரும் மூர்த்திதான்’னு ஒருத்தர் வந்தார். வீடு வாங்க, கட்ட லோன் வேணுமா சார்னாரு. ஆமாம்னேன். நான் பேங்க்ல மேனேஜர்தான். எல்லா ஹெல்ப்பும் பண்றேன்னு சொன்னார். நாலே நாள்ல, லோன் கிடைச்சுது. சென்னைல, மெளண்ட்ரோட்ல அப்போ அந்த பேங்க் இருந்துச்சு. இப்ப எந்த இடம்னு கூட சொல்லமுடியல. லோன் வாங்கி, வீடு வாங்கி, குடிபோய், அப்புறம் ரொம்ப சீக்கிரமே அந்த லோனையும் அடைச்சிட்டேன்.

அப்புறம் ஒருவிஷயம்... அந்த பேங்க் பேருதான் சுவாரஸ்யம். அந்த பேங்க் பேரு... லார்ட் கிருஷ்ணா பேங்க். மகாபெரியவா, பகவத்கீதை பாராயணம் பண்ணச் சொன்னது, அப்பதான் புரிஞ்சுது எனக்கு!

60. கெட்டபழக்கம் இருக்கா? இல்லேன்னா... ஏன் இல்ல?

முன்னாடிலாம் எப்பவாவது ஆல்கஹால், எப்பவும் வாசனைப்பாக்குன்னு பழக்கம் இருந்துச்சு. முக்கியமான கெட்டபழக்கம்னு பாத்தா, ஒருநாளைக்கு 16 தடவை காபி குடிப்பேன். ‘கொஞ்சம் காபி கொடுங்களேன்,கொஞ்சம் காபி கொடுங்களேன்’னு கேட்டுக்கேட்டு, குடிச்சிக்கிட்டே இருப்பேன். இப்ப, சுத்தமா விட்டாச்சு. காலைல எழுந்ததும் ப்ளாக் காபி. அப்புறம் அடுத்தநாள்தான்.

நல்லபழக்கத்துல கெட்டபழக்கம். இது தெரியுமா உங்களுக்கு? பழ வகைகளை பழங்களாவே சாப்பிடமாட்டேன். ஜூஸாப் போட்டுக்கொடுத்தா, சள்ளுன்னு குடிச்சிருவேன். ஜூஸை விட நேரடியா பழம் சாப்பிடுறதுதான் நல்லதுன்னு, என் மனைவி சொல்லிச் சொல்லி, இத்தனை வயசுல, கொஞ்சமே கொஞ்சமா பழம் சாப்பிட ஆரம்பிச்சிருக்கேன்.

முன்னாடிலாம், நைட்ல சாதம்தான். இப்ப ரெண்டுமூணு வருஷமா, சப்பாத்திக்கு மாறியிருக்கேன்.

கெட்டபழக்கத்துல நல்ல பழக்கத்தையும் சொல்லிடுறேன். ‘நீங்க இந்த வயசுலயும் ஆரோக்கியமா, உற்சாகமா, நோய் எதிர்ப்பு சக்தியோட இருக்கீங்கன்னா, அதுக்கு முதல், முழு காரணம்... நீங்க அஞ்சு வயசு வரைக்கும் தாய்ப்பால் குடிச்சதுதான்னு சொன்னார். ஆமாம், அஞ்சு வயசு வரைக்கும் தாய்ப்பால் குடிச்சவன் நான். இப்ப பெண்கள், குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கறதே குறைஞ்சிருச்சு. அழகு, புடலங்கானு ஆயிரம் காரணத்தைக் கண்டுபிடிச்சு கண்டுபிடிச்சு சொல்றாங்க.

தாய்ப்பால் போல, நோய் எதிர்ப்பு சக்தி தர்ற ஊட்டச்சத்து எதுவுமே இல்ல. இப்ப 15 வயசுல, 18 வயசுல கேன்ஸர் வந்துருது. யோசிச்சுப் பாருங்க. தாய்ப்பால் கொடுக்கணும். இது அட்வைஸ்; கோரிக்கை எல்லாமே!

இதோட அறுபது ஆச்சு. இன்னும் இருபது இருக்கு.

https://www.kamadenu.in/news/cinema/4146-vennira-aadai-murthi-80-6.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category

Share this post


Link to post
Share on other sites

'சுருளிராஜனை மாட்டிவிடலாம்னு பாத்தேன்!’ வெண்ணிற ஆடை மூர்த்தி 80 (7)


 

 

vennira-aadai-murthi-80-7

சுருளிராஜன் - வெண்ணிற ஆடை மூர்த்தி

 
 

’’அறுபதாம் கல்யாணம் முடிஞ்சது இப்பவும் பசுமையா ஞாபகம் இருக்கு. அதுக்குள்ளே, எண்பதாம் கல்யாணம்னு சொல்லப்படுற சதாபிஷேகமும் வந்துருச்சு. ஆனா கேள்விகள் அப்படி தடதடன்னு ஓடிடாதுன்னு நினைக்கிறேன். நின்னு நிதானிச்சு, கேள்விகளுக்குள்ளே போனாத்தானே பதில் கிடைக்கும்’’  - தத்துவார்த்தமாகவும் இயல்பாகவும் வாழ்க்கையைப் பகுத்துப் பிரித்துச் சொல்கிறார் வெண்ணிற ஆடை மூர்த்தி.

இதோ... பதில் சொல்லத் தொடங்குகிறார்.

 

61. சினிமாவில் ஜெயிக்க டைம் முக்கியமா? டைமிங் முக்கியமா?

டைம்... டைம்... டைம்... டைம்தான் முக்கியம். ‘டைம்’ அப்படீங்கறதை, அதிர்ஷ்டம்னும் எடுத்துக்கலாம். நேரம்தவறாமைன்னு எடுத்துக்கலாம். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கரெக்ட்டான டயத்துக்கு வந்துடணும். மழை, வெயில், வவுத்துவலின்னெல்லாம் காரணம் சொல்லக்கூடாது. அப்புறம் காரணமே சொல்லாம, சினிமா நம்மளைப் புறக்கணிச்சிரும். ஓரங்கட்டிரும். பேக் பண்ணி அனுப்பிச்சிரும்.

இன்னொன்னும் சொல்றேன். டைமும் முக்கியம். டைமிங்... ரொம்ப ரொம்ப முக்கியம். டயலாக் டெலிவரில கவனமா, டைமிங் பாத்து சொல்லிடணும். ‘குப்புசாமியை ராமசாமி கொன்னுட்டான்’னு ஒருத்தர் வசனம் சொன்னதும், எதிராளிக்கு ஒரு க்ளோஸப். சொன்னவருக்கு ஒரு க்ளோஸப். அப்புறம் அவர் முதுகுலேருந்து ஒரு ஷாட். இவர் முதுகுலேருந்து ஒரு ஷாட். அப்புறம் ரவுண்ட் டிராலி ஷாட். டாப் ஆங்கிள் ஷாட்னு ஒரு கால்மணி நேரம் வைச்சு முடிச்சது,ம், ‘என்னட சொல்றே. குப்புசாமியை ராமசாமி கொன்னுட்டானா?’ன்னு எதிராளி திரும்பக் கேட்டா எவ்ளோ அபத்தம் அது? இப்ப டிவி சீரியல்களெல்லாம் இப்படித்தான் இருக்கு. ஆனா, எல்லாத்துக்கும் ஒரு டைமிங் வேணும். அந்த டைமிங்க்தான் ஒரு டெட் எண்ட். முக்கியமா, காமெடி நடிகர்களுக்கு டைம், டைமிங்னு இருந்து வசனம், எக்ஸ்பிரஷன்ஸ்னு இருந்தாத்தான் ஆடியன்ஸ் ரசிப்பாங்க!

62. இப்போ டைமிங்கோட இருக்கிற காமெடியன் யாருன்னு சொல்லமுடியுமா?

நான்தான் சொன்னேனே... சினிமா பாத்தே பல வருஷங்களாச்சு. அதனால இப்ப உள்ள காமெடி நடிகர்கள் யாருன்னே எனக்குத் தெரியாது. நாகேஷும் வடிவேலுவும் டைமிங் சென்ஸ்லயும் தூள் கிளப்புனாங்க. அப்படி விரல் சொடுக்குற நேரத்துக்குள்ளே சொல்றதுதான் டைமிங். இதை ரொம்ப நல்லாப் பண்ணி அசத்தினாங்க.

63. நீங்க விரும்பி பண்ற பழக்கவழக்கம்னு எதையாவது சொல்லமுடியுமா?

காலைலயே எந்திருச்சிருவேன். ஆனா வாக்கிங்லாம் கிடையாது. நண்பர்கள் சொன்னாங்களேன்னு வாக்கிங் போனேன். அப்படிப் போகும்போது தெருநாய் ஒண்ணு, என்னை முறைச்சிக்கிட்டே இருந்துச்சு. எங்கே, வாக்கிங், ஜாக்கிங் ஆயிருமோனு பயந்துட்டேன். தவிர, சதையைக் குறைக்கறதுக்குத்தான் வாக்கிங்னு சொல்றாங்க. நாய் பாக்கற பார்வையைப் பாத்தா, வேற விதமா உடம்புலேருந்து சதை குறைஞ்சிருமோனு கலவரமாயிட்டேன். ‘நான் பாவம்னு நாய் நினைக்கிதோ இல்லியோ... நாய் பாவம்’னு முடிவு பண்ணி, வாக்கிங் கட் பண்ணினேன்.

ஆனா ஒருவிஷயம். வீட்ல அங்கேயும் இங்கேயும், இங்கேயும் அங்கேயும்னு எப்படியும் ஒருநாளைக்கு மூணு கிலோமீட்டர் தூரம் அளவுக்கு வீட்லயே நடந்துடுறேன். எல்லாமே அழகா, வரிசையா, தூசுதும்பட்டை இல்லாம, ஒழுங்கா இருக்கணும். இதைச் செய், அதைக் கிளீன் பண்ணுன்னு மனைவிக்கிட்ட சொல்லமாட்டேன். நானே போய் சுத்தம் பண்ணிருவேன். சாப்பாடு விஷயம்... முன்னயே சொன்ன மாதிரி, பெருசாக் கட்டுப்பாடுகள் கிடையாது. அதேசமயம், ரைஸ்மில் மாதிரி எப்பவும் அரைச்சுக்கிட்டே இருக்கறதும் கிடையாது.

64. சினிமாவுக்கு வசனம் எழுதுறது ஈஸியா?

ஆத்மார்த்தமா செஞ்சா, டப்பால கடுகு எவ்வளவு இருக்குன்னு கூட எண்ணிடமுடியும். சினிமா பிடிச்ச வேலை. நடிக்கிறது பிடிச்ச வேலை. வசனம் எழுதுறது ரொம்ப ரொம்பப் பிடிச்சவேலை. அப்ப அதெல்லாம் நமக்கு எப்படி கஷ்டம் கொடுக்கும்.

டி.ஆர்.ராமண்ணா சார் படம். மிகமிகப் பிரபலமானவர்தான் படத்துக்கு வசனம். ஏதோ காரணங்களால, வசனம் கைக்கு வரலை. அப்ப என்னைக் கூப்பிட்டு, ‘மூர்த்தி, இந்த சீன்களுக்கான வசனம் அர்ஜெண்ட். இன்னும் வரலை. நீங்க எழுதிருங்க’ என்றார். ‘சார்... அவ்ளோ பெரிய மனிதர். அவருக்கு பதிலா நான் எழுதி... அவர் கோபமாயிட்டார்னா...’ன்னு யோசிச்சேன். ‘அதெல்லாம் நான் பாத்துக்கறேன். சட்டுன்னு எழுதுங்க’ன்னு சொல்லிட்டார். நானும் எழுதிக் கொடுத்தேன். நல்லாருக்குன்னு சொல்லி, ராமண்ணாவும் எடுத்துட்டார். அடுத்தநாள் அவர் வசனம் தரும்போது, விஷயம்லாம் சொன்னாரு. ‘அப்படியா... யார் எழுதினது’ன்னு கேட்டார். என் பேரைச் சொன்னாங்க. டயலாக் பேப்பர்ஸ் வாங்கிப் பாத்தாரு. படிச்சி முடிச்சதும், ‘அட... நல்லாத்தான் இருக்கு. நல்லா எழுதிருக்கீங்க தம்பீ’ன்னு கூப்பிட்டுப் பாராட்டினார். இதைவிட வேற என்ன வேணும்? எல்லாம் கடவுள் கிருபை.

65. எப்போதும் கடவுள், மகான் என்று சிந்தனை உண்டா?

அப்படியெல்லாம் இல்ல. ஆனா, அப்பப்ப நினைச்சுக்கறதும் நன்றி சொல்லிக்கிறதும் உண்டு. இறையருள் மனித வாழ்க்கைக்கு ரொம்பவே அவசியம். இன்னும் சொல்லணும்னா, குருவருள் இருந்தாத்தான் இறையருளே கிடைக்கும்னு சொல்லுவாங்க. அதை உறுதியா நம்பறவன் நான்!

66. ரஜினியுடன் நடித்த அனுபவம்?

அருமையான மனிதர். தேவைப்படும் போது கலகலப்பாகவும் மற்ற சமயங்களில் அமைதியும் இறுக்கமாகவும் இருப்பார். முள்ளும்மலரும் படத்தின் போது, எங்க ரெண்டுபேருக்கும் ஒரே ரூம் ஒதுக்கப்பட்டிருந்துச்சு. அப்ப நிறைய பேசிக்கிட்டோம். அவர், ஜபம், பூஜை, தியானம்னு இருந்தார். என்ன ஜபம், யாரை நினைச்சு தியானம்னு கேட்டேன். ‘என் குரு ராகவேந்திரரை நினைச்சு பூஜையும் தியானம் பண்றேன். நான் நல்லாருக்கேன்னா, அதுக்கு ராகவேந்திரரின் அருள்தான் காரணம்னு அந்த மகான் பத்தி நிறைய்ய சொன்னார்.

அப்புறமா, ரஜினியோட 100வது படமான ராகவேந்திரர் படத்துல நானும் நடிச்சிருந்தேன். அந்தப் படத்துக்குக் கொடுத்த சம்பளத்தை, மந்த்ராலயம் போய், ராகவேந்திரர் மடத்துக்குக் கொடுத்துட்டேன். இதுல ஒரு நிறைவு; ஒரு நிம்மதி.

67. இவ்ளோ படம் பண்ணிட்டோமேனு... கிட்டத்தட்ட 800 படங்கள் பண்ணிட்டோம்னு ஒரு கர்வம் எட்டிப்பார்த்தது உண்டா?

காஞ்சி மகாபெரியவாகிட்ட ஒருத்தர், ‘உங்களை எல்லாரும் ஜகத்குருன்னு சொல்றாங்களே சுவாமி. அதைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?’ன்னு கேட்டாங்க. அதுக்கு மகாபெரியவர், ‘ஜகத்ங்கறது உலகம். இந்த உலகமே எனக்கு குரு. அதாவது ஜகத்குரு. உலகமே குரு. அந்த அர்த்தத்துல அப்படிச் சொல்லிருப்பாங்க’ன்னு விளக்கம் கொடுத்தார். இதை படிச்சப்ப, அரைமணி நேரம் அப்படியே பிரக்ஞ்சையே இல்லாம உக்கார்ந்துட்டேன்.

எவ்ளோ பெரிய மகான். அவருக்கு எவ்ளோ தன்னடக்கம். இதுல நானெல்லாம் வெறும் தூசு. ஒண்ணுமே இல்ல. இதான் தோணுச்சு. கொஞ்சம் நஞ்சம் எட்டிப்பாத்து, உள்ளே வரலாமான்னு கேட்ட கர்வத்தையும் வாசலோடயே திருப்பி அனுப்பிச்சாச்சு.

68. ஒரே டைரக்டரோட பல படங்கள்ல நீங்க ரெகுலர் நடிகர். எப்படி இது?

ஆமாம். பிரச்சினைகிரச்சினை பண்ணாத ஆசாமின்னு போட்டுக்கறாங்களோ என்னவோ? டி.ராஜேந்தர் படங்கள்ல, எனக்கு அவர் தொடர்ந்து ஏதாவது கேரக்டர் கொடுத்துக்கிட்டே இருப்பார். முதன்முதல்ல, அவர் படத்துல நடிச்சப்ப, அவர் கொடுத்த வசனத்தோட கொஞ்சம் சேர்த்து, சொன்னேன். ‘பேப்பர்ல இதெல்லாம் இருக்கா? எழுதிக்கொடுத்தேனா வக்கீல்னு கேட்டார். என்னை அவர் வக்கீல்னுதான் கூப்பிடுவார். இல்ல... நானே சேர்த்து சொன்னதுதான். பிடிக்கலேன்னா கட் பண்ணிக்கங்கன்னு சொன்னேன். திரும்பவும் வேறொரு சீன். அதுலயும் கொஞ்சம் சேர்த்து சொன்னேன். திரும்பவும் கேட்டார். பிடிக்கலைன்னா கட் பண்ணிக்கங்க சார்னு அதே பதிலைச் சொன்னேன். அப்புறம் பாத்தார்... சரி நல்லாருக்குன்னு விட்டுட்டார் டி.ஆர்..

டபுள் மீனிங்கா எதுனாப் பேசினா... பதறிப்போய் கட் சொல்லுவார். ‘வக்கீல் சார். டைட்டில்ல வசனம்னு எம்பேருதான் வரும். எனக்குத்தான் கெட்டபேர் கிடைக்கும்’னு சிரிச்சிக்கிட்டே சொல்லுவார். இவரை மாதிரி அற்புதமான, ஒழுக்கமான, நல்ல, அன்புள்ளம் கொண்ட மனிதரை சினிமாவுக்குள்ளே பாக்கறது ரொம்பவே அபூர்வம். சினிமான்னு இல்ல... பொதுவாவே அபூர்வம். எல்லாரும் சிவகுமார் மாதிரி ஒழுக்கமா இருக்கணும்னு சொல்லுவாங்க. டி.ராஜேந்தர் மாதிரி ஒழுக்கமானவர் இல்லேன்னு சொல்லுவேன்.

 69. நிறைய வெளிநாடுகள் போயிருக்கிறீர்கள்தானே?

இதுவரை 76க்கும் மேலான வெளிநாடுகளுக்குப் போயிருக்கேன். உல்லாசபறவைகள் ஷூட்டிங். நான், சுருளிராஜன்லாம் போனோம். இங்கேருந்து மும்பை. அங்கேருந்து லண்டனுக்கு ஃப்ளைட். அங்கே கொஞ்ச நேரம் தங்கணும். நாங்க நல்லா அலைஞ்சிட்டு, அவசரம் அவசரமா ப்ளைட் பிடிக்க ஓடிவந்து ஏறினோம். செம டயர்டு. ஏறினதும் தெரியாது. தூங்கினதும் தெரியாது.

எந்திரிச்சு சுருளிராஜன் சொன்னான்... லண்டன்ல நம்மாளுங்கதான் எங்கே பாத்தாலும் இருக்காங்கனு! நானும் பாத்துட்டு ஆமாம்டான்னேன். ‘அதான் வந்தாச்சே... இறங்கலாம்ல’ன்னு கேட்டோம். ‘எங்கே இறங்கப்போறீங்க? இன்னும் மும்பைலேருந்தே கிளம்பலை. ஒரு சின்ன பிராப்ளம். விடியவிடிய மும்பைலதான் இருக்கு. இனிமேதான் கிளம்பும்’னாங்க. நானும் அவனும் ஒருத்தருக்கொருத்தர் பாத்துக்கிட்டு, அசடு வழிஞ்சோம்.

70.  லண்டன்ல இறங்கினீங்களா?

அதை ஏன் கேக்கறீங்க? ஏர்போர்ட்ல இருந்த லேடி ஆயிரத்தெட்டு கேள்வி கேக்கறா. ஆக்டர்ஸ், காமெடியன்ஸ், ஷூட்டிங்னு சொன்னோம். ‘ஓகே. அப்படீன்னா எதுனா காமெடி பண்ணிக் காட்டு. வுடுறேன்’னு ஜாலியாச் சொன்னா. சுருளிராஜனை மாட்டிவிடலாம்னு, டேய், நீதான் காமெடி நல்லாப் பண்ணுவியே’ன்னு சொன்னேன். ‘ஆனா இங்கிலீஷ் தெரியாதுடா. எதாவது வம்புல மாட்டிவிட்றாத. நீயே பண்ணு’ன்னான். டக்குன்னு சட்டையைக் கழட்டினேன். பனியனைக் கழட்டினேன். பேண்ட்டைக் கழட்டப் போனேன். அப்ப அந்த லேடியைப் பாத்தேன். ஷாக்காகி, என்ன பண்றீங்கன்னு கத்திட்டா. ‘ஸாரி மேடம். உங்க நாட்ல மறைக்கறதுக்கு இந்தியால எதுவும் இல்ல’ன்னு சொல்லிச் சிரிச்சேன். புரிஞ்சும் புரியாமலும் சுருளி பகபகன்னு சிரிச்சான். அந்த லேடியும் கலகலன்னு சிரிச்சா. நல்லவேளை... பேண்ட்டை மெதுவாக் கழட்டினேன். அவளையும் பாத்தேன். அவளும் கேள்விகேட்டா. அமைதியா இருந்திருந்தா... என் கதி என்னாகியிருக்கும்? யோசிச்சுப் பாருங்க!

இதோட 70 ஆச்சு. இன்னும் முத்தேமுத்து... அதாவது பத்தேபத்து!

https://www.kamadenu.in/news/cinema/4182-vennira-aadai-murthi-80-7.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category

Share this post


Link to post
Share on other sites

’பிக்பாஸ் வீட்ல ஒரேநாள்ல துரத்திவிட்ருவாங்க!’- வெண்ணிற ஆடை மூர்த்தி 80 (8)


 

 

vennira-aadai-murthi-80-8

வெண்ணிற ஆடை மூர்த்தி - இயக்குநர் ஸ்ரீதர்

 

 

’ஹையா... இன்னும் பத்துதான் இருக்குன்னு சந்தோஷப்படத் தோணலை. இன்னும் பத்துக்கும் முத்துமுத்தா பதில் சொல்ற மனசாத்தான் இருக்கு எனக்கு’ என்று சென்னை கிறிஸ்டின் காலேஜ் ஸ்டூடண்டாகவே லா காலேஜ் மாணவனாகவே பாயிண்ட் பிடித்து பதட்டம் காட்டி, சகஜ நிலைக்கு வந்து... என ரெடியானார் வெண்ணிற ஆடை மூர்த்தி.

71. மனசு நிறைஞ்சு போச்சுங்கற மாதிரியான உணர்வு?

 

அது அப்படித்தான். அப்பப்ப, நெகிழும். மகிழும். உருகும். கனக்கும். ஆனா, நாமதான் நம்மளோட மனசைக் கவனிக்கறதே இல்ல. அடுத்தவன் மனசைப் பத்தியெல்லாம் நினைக்கிறோம். அவன் என்ன நினைக்கிறான் இப்பன்னு அதுபின்னாடி ஓடிட்டிருக்கோம்.

மனிதன்... அதுல வர்ற மன்... மனசைத்தான் சொல்லிருக்காங்க. ஆனா, நாம மனிதன்ல வர்ற மனி...யை, 'MONEY'ன்னு நினைச்சு, அல்லாடிட்டிருக்கோம்.

இன்னும் சொல்லணும்னா, மனசுதான் நாம! அதான் நம்மளோட உண்மையான முகம். அதை சரியா வைச்சுக்கிட்டா, அதை சரியா வைச்சுக்கிட்டு, அதன்படியே நடக்க ஆரம்பிச்சிட்டோம்னா... அவன்தான் மனுஷன். நல்ல மனுஷன்! இப்படி வாழ்ந்துட்டாலே, மனசு எப்பவும் நிறைஞ்சிருக்கும்!

72. பதட்டமில்லாத மனசை வைச்சுக்க டிப்ஸ் கொடுங்களேன்?

நான் இன்னொருத்தருக்கு டிப்ஸ் கொடுக்கறதா? வேணும்னா, ஆளுக்கொரு கை சிப்ஸ் வேணாக் கொடுக்கலாம். அவங்க மனசு... அவங்க லகான்... அவங்க உறுதி. இதுல நான் எப்படி உள்ளே தொபுக்கடீர்னு புகுந்துக்கமுடியும்?

இருந்தாலும் சொல்றேன்...

1. யாருக்கும் துரோகம் செய்யவேணாம்.

2. எவரையும் காயப்படுத்திடாதீங்க!

3. எந்தப் பொருளுக்கும் ஆசைப்படாதீங்க.

4. நீங்களே உங்களை ஏமாத்திடாதீங்க!

5. எதையும் ஒழுங்காச் செய்யணும்; ஒரு ஒழுங்கோட செய்யணும்.

அவ்ளோதான்!

73. விருதுகள்... பாராட்டுகள்..?

 அப்படியெல்லாம் எந்த எதிர்பார்ப்பும் இல்ல. அதேசமயம், முதல்வரா ஜெயலலிதா இருந்தப்ப, எனக்கு கலைமாமணி விருது கொடுத்தாங்க. அந்த விருதைக் கொடுக்கும் போது, ‘நல்லாருக்கீங்களா’ன்னு கேட்டாங்க. நானும் அவங்களைப் பதிலுக்குக் கேட்டேன். ‘எதுவா இருந்தாலும் கேளுங்க’ன்னு சொன்னாங்க. ‘உங்க பேர்ல ஏதோ விருது கொடுக்கிறீங்களாமே... அந்த விருதையும் ஒண்ணை எனக்கு தாங்க மேடம்’னு சொன்னேன். மேடைலயே ஒரு குழந்தையை மாதிரி சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க.

இதெல்லாம் விட பெரிய விருது... ஸ்கிரீன்ல நம்மளைப் பாத்துட்டு, ‘இவன் இன்னுமாடா வந்துட்டிருக்கான்’னு கத்தாம, கைத்தட்டி சந்தோஷப்படுறாங்களே... அதான் சூப்பர் விருது!

74. பேப்பர் படிக்கிற பழக்கம்?

அது இருக்கும். இருந்துக்கிட்டுதான் இருக்கும். என் நண்பர் ஒருத்தர், ‘என்னங்க நீங்க, இன்னும் பேப்பர்லாம் படிச்சிக்கிட்டிருக்கீங்களே... அதான் டிவிலாம் வந்துருச்சே’ அப்படீன்னார். ‘பேப்பர்லாம் சேந்துச்சுன்னா, பேப்பர்காரனுக்குப் போடலாம். டிவியை என்ன பண்ணுவீங்க?ன்னு கேட்டேன். படிக்கிறது ஒரு சுகம். யாராவது சுகத்தை, சந்தோஷத்தை வேணாம்னு ஒதுக்குவாங்களா?

75. அதெப்படி? இத்தனை வருஷமா சினிமால இருந்துட்டு, அரசியலுக்கு வராமலேயே இருக்கீங்களே? கமல், ரஜினி அரசியல்?

இதென்ன தஞ்சாவூர் வந்துருச்சு, அடுத்தது திருச்சி ஸ்டேஷன்லதான் வண்டி நிக்கும்ங்கற மாதிரி! நமக்கு அரசியலெல்லாம் சரிப்பட்டு வராது. பாத்துப்பாத்து, குருவி சேக்கற மாதிரி, கடனைஉடனை வாங்கி வீடு கட்டி, குடியிருக்கோம். நாம் எதாவது பேசி, அது பிடிக்காம, வீட்டு வாசல் வரைக்கும் வருவானுங்க. சர்ருசர்ருன்னு கல்லு வுடுவானுங்க. கண்ணாடிஜன்னல் உடையும். அப்புறம் நம்ம மண்டைக்கும் எப்பவேணா என்ன சேதாரம் வேணா நடக்கலாம். இப்படி கல்லு வுட்டு கண்ணாடி உடைக்கிறதுக்கா வீட்டைக் கட்டினோம்? நமக்கெல்லாம் அரசியல் சரிப்பட்டு வராதுங்க!

கமல், ரஜினி ரெண்டுபேருமே நல்லவங்கதான். மனிதாபிமானம் உள்ளவங்கதான். இரக்க சிந்தனை கொண்டவங்கதான். இதெல்லாம் நேர்ல நான் பாத்து வியந்த விஷயங்கள். ஆனா கட்சி நடத்துறதுக்கும் அரசியலுக்குள்ளே நுழையறதுக்கும் இதுவே போதுமானதான்னு எனக்குத் தெரியல. ஆனா ஒண்ணு... ரெண்டுபேருமே நல்லது செய்யணும்னுதான் வர்றாங்க. ஏன்னா, சம்பாதிக்கவேண்டியதையெல்லாம் சம்பாதிச்சிட்டாங்க. அதனால, நல்லது செய்வாங்கன்னு நம்புறேன். பாப்புலாரிட்டி மட்டுமே வெற்றியைத் தந்துடாது. பாப்போம்.

76. ஜெய்சங்கர் மாதிரி அதே பாசம், நேசம், நெருக்கம்... யார் சார்?

அர்ஜூன். அது என்னமோ தெரியல. அப்படியொரு பிணைப்பு எங்களுக்குள்ளே! இப்ப சதாபிஷேகத்துக்கு, சினிமாலேருந்து யாரையும் கூப்பிடலை. சச்சுவையும் அர்ஜுனையும்தான் கூப்பிட்டேன். அவரும் குடும்பத்தோட வந்து கலந்துக்கிட்டாரு.

அவர் தயாரிச்ச, டைரக்ட் பண்ணின எல்லாப் படங்கள்லயும் மேக்ஸிமம் நான் இருப்பேன். அதுவே நமக்கு சந்தோஷம். படத்துக்கு ஒரு பேமெண்ட் பேசியிருப்பாரு. அதுல ஒரு தொகை அட்வான்ஸ் கொடுத்திருப்பாரு. ஷூட்டிங் முடிஞ்சதும் பேலன்ஸ் தொகை கொடுப்பாரு. பாத்தா... பேசின தொகையோட டபுள் மடங்கு இருக்கும். ‘சார், பேசின பேமெண்ட் மறந்துட்டீங்களா. இந்தாங்க’ன்னு அதிகமா இருக்கிற தொகையைக் கொடுப்பேன். ‘சார் தெரியும் சார். உங்களுக்கெல்லாம் இன்னும் கொடுக்கணும் சார்’ என்று வாங்க மறுத்துவிடுவார்.

அர்ஜுனுக்கு எம்மேல மரியாதை. என் பையன் மேல அப்படியொரு பிரியம். அவங்க ரெண்டுபேரும் பேசிக்கறதுதான் ஜாஸ்தி.

 77. எதை ரொம்பவே நம்புறீங்க சார்?

ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு. மிஸ்டர் நியூட்டனை நம்புறேனோ இல்லியோ... அவர் எனக்கு அவ்வளவாப் பழக்கமில்ல. ஆனா அவர் சொன்ன இந்த தியரியை ரொம்பவே நம்புறேன்.

78. அழுகை..?

சொன்னா நம்புவீங்களான்னு தெரியல சார். தெரிஞ்சோ தெரியாமலோ ஒரு எறும்பு என்னால செத்துப்போயிருச்சுன்னா, ஒரு அரைமணி நேரம் என்னால எந்த வேலையுமே செய்யமுடியாது. எங்க அப்பா, அம்மா இறந்தப்ப அழுத மாதிரி ஒரு அழுகை, அப்படியொரு துக்கம், பெரிய பாவம் செஞ்சிட்டது போல மனசு கனமாகி அழுத்தியெடுக்கும். வலியவர்கள், எளியவர்களை நசுக்குதல்னு என்னென்னவோ தோணும்.

வீட்டைப் பூட்டிட்டு வெளியூர் கிளம்பும் போது, பூஜை ரூம்ல சுவாமிக்கிட்ட வேண்டிக்குவேன். அதை வேண்டுதலாவும் மிரட்டலாவும் எடுத்துக்கலாம். ‘இங்கே பாரு. தினம் உனக்கு பூ போட்டேன். பழம்லாம் கொடுத்தேன். இதோ வெளியூர் போறேன். என்னால எந்த உயிருக்கும் எதுவும் நடக்கக்கூடாது. யாரையும் கோபப்பட்டு பேசி, வார்த்தைகளால காயப்படுத்திடக்கூடாது. எங்களையும் இந்த வீட்டையும் பத்திரமாப் பாத்துக்கோ. இல்ல... ஊர்லேருந்து வந்த கையோட, உன்னை தூக்கிட்டுப் போய், கோயில்ல கொடுத்துருவேன்’னு மிரட்டி வேண்டிக்குவேன். கடவுளை, தோழனாட்டம் பாக்கறது முக்கால்வாசி தப்புத்தண்டாவைக் குறைச்சிடும் சார்!

79. பிக்பாஸ் பாக்கறீங்களா? பிக்பாஸ் வீட்ல தங்குவீங்களா? பிக்பாஸ் கமல் எப்படி?

(புரியுது. 80வது கேள்வி நெருங்கிட்டதால, ஒரேகேள்விக்குள்ளே மூணு கேள்விகள்... நல்லாப் புரியுது என்றார் சிரித்துக்கொண்டே!) ஆமாம். பிக்பாஸ் பாக்கறேன். தினமும் பாத்துக்கிட்டிருக்கேன். அடுத்தாப்ல என்ன கேட்டீங்க? பிக்பாஸ் வீட்ல தங்குவேனா? ஒரேநாள்தான்... என்னை வீட்டுக்குத் துரத்தி விட்ருவாங்க. உண்மையா இருந்தா, அவ்ளோதான் அங்கே! பொய்யும்புரட்டுமாவே ஒரு ஆக்ட் கொடுக்கறாங்க. அது நமக்கு செட்டாகாது.

அப்புறம் அடுத்த கேள்விக்கு பதில்... கமல்ஹாசனை ஒரு நல்ல நடிகரா எல்லாருக்கும் தெரியும். சிறந்த டெக்னீஷியன்னும் எல்லாரும் தெரிஞ்சு வைச்சிருப்பாங்க. தயாரிப்பாளர், பாடகர், வசனகர்த்தா, உலக சினிமாவே அத்துபடிங்கறதெல்லாம் தெரியும்தானே! இந்த பிக்பாஸ் மூலமா, அவர் எப்பேர்ப்பட்ட இண்டெலிஜெண்ட்னு தெரியுது. ஒருவிஷயத்தை எப்படிப் பாக்கறார், எப்படிலாம் அனலைஸ் பண்றார், அதை தன்னோட எப்படிப் பொருத்திப் பாத்துக்கறார். கமலைத் தவிர வேற யாரும் பிக்பாஸ் மாதிரியான சைக்கலாஜிக்கல் நிகழ்ச்சியைப் பண்ணமுடியாது. இது என் அபிப்ராயம்.

80. திரும்பவும் முதல்லேருந்து... அப்படீன்னாலோ, இல்லே அடுத்த ஜென்மத்துலயாவது அப்படீன்னாலோ... எப்படி சார்? என்ன நினைக்கிறீங்க?

இந்த மனுஷ ஜென்மம் போதுமே! அடேங்ங்ங்ங்ங்ங்ங்கப்பா... மனுஷ ஜென்மத்துலதான் எத்தனை அல்லாட்டம், பேயாட்டம்லாம்! தெனம் தெனம் செத்துப் பொழைக்கிற பொழைப்புலேருந்து விடுபடுறதுதான் சந்தோஷம். பசி, தாகம், காமம்... இதெல்லாம் தாண்டி, காசு, பணம், வீடு, காரு, பேரு, புகழ், அந்தஸ்து, ஈகோ, அலட்டல்னு எவ்ளோ ஆட்டங்கள், இங்கே?

பர்த் டேட்டையும் டெத் டேட்டையும் முடிவு பண்ணிதான் அனுப்புறான் கடவுள். அதாவது மேனுஃபேச்சரிங் டேட் போட்ட கடவுள் எக்ஸ்பயரி டேட்டை எழுதி, அவனே வைச்சிக்கிறான். சரி, வைச்சிக்கட்டும். அது அவனோட வேலை. நம்ம வேலை... ஹானஸ்ட்டா இருந்து எல்லாத்தையும் முடிச்சுட்டு, கிருஷ்ணாராமான்னு கிளம்புறதுதானே!

ஓகே. அடுத்த ஜென்மம், பிறவி... அப்படி இருந்துச்சுன்னா, மான் அல்லது முயலாப் பிறந்தா நல்லாருக்கும். ஏன்னா, இது ரெண்டுமே வெஜிடேரியன். இன்னொன்னு... முயல் கேரட் அதிகமா சாப்பிடும். அதனால, மூக்குக்கண்ணாடி போடவேண்டிய அவசியம் வராது பாருங்க!’’ என்று மூக்குக்கண்ணாடியைக் கடந்தும் அவரின் குறும்புக்கண்கள் சகிதமாக சிரித்தார் வெண்ணிற ஆடை மூர்த்தி.

https://www.kamadenu.in/news/cinema/4244-vennira-aadai-murthi-80-8.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category

Share this post


Link to post
Share on other sites

அழகான எளிமையான அருமையான பேட்டி ....... சோ ஸ்வீட்.......!  ? 

Share this post


Link to post
Share on other sites

இன்று வெண்ணிற ஆடை மூர்த்தி பிறந்தநாள்


 

 

v-a-murthi-birthday

 

சிதம்பரம் கிருஷ்ணமூர்த்தி, மிகப்பெரிய வக்கீலாக வருவார் என்றுதான் அவர் வீட்டார் நினைத்தார்கள். ஏன்... அவரே கூட அப்படித்தான் நினைத்திருந்தார். ஆனால், காலமும் சூழலும் பின்னாளில் அவரை நடிகராக்கியது. கிருஷ்ணமூர்த்தி, மூர்த்தியானார். அவர் நடித்த அறிமுகப்படமே அவருடன் இன்று வரை ஒட்டிக்கொண்டிருக்கிறது.

ஆகவே மூர்த்தி... வெண்ணிற ஆடை மூர்த்தியானார்.

 

பிறகு வந்த காசேதான் கடவுளடா, தேன்மழை, உத்தரவின்றி உள்ளே வா என்று மளமளவென படங்கள் வந்தன. கிடைத்த கதாபாத்திரங்களிலெல்லாம் தனது தனித்த முத்திரையைப் பதித்துக் கொண்டே வந்தார்.

‘பெரிய ஏற்றமோ தடாலடி திருப்பங்களோ எதுவும் நிகழவில்லை. பட வாய்ப்புகள், ஸ்மூத்தாகக் கிடைத்துக்கொண்டே இருந்தன. பெரிய ஆசைகளோ தேவைகளோ வளர்த்துக்கொள்ளவும் இல்லை. கூப்பிட்டால் நடிக்கவேண்டும். பேர் சொல்லும்படி நடிக்கவேண்டும். அவ்வளவுதான் என்கிறார் வெண்ணிற ஆடை மூர்த்தி.

ஒருகட்டத்தில், இவர் டயலாக் டெலிவரி தனி ரகமாயிற்று. தம்ப்ப்ப்ப்ரீ... என்பதும் குதிரை கனைப்பது போல் ஒருவித குரலை எழுப்புவதும் என இவரின் சேஷ்டைகளுக்கு ஆடியன்ஸ் ரசித்துக் கைத்தட்டினார்கள்.

ஜெய்சங்கருடன் 55 படங்கள் நடித்திருக்கிறார். வெண்ணிற ஆடை மூர்த்தியின் புறம் பேசாத குணமும் குறித்த நேரத்துக்கு வந்து நடித்துக் கொடுப்பதும் ஜெய்சங்கருக்குப் பிடித்துவிடவே, தன் படங்களிலெல்லாம் இவருக்கும் கேரக்டர் கொடுக்கச் சொன்னார். இவர்களின் நட்பில், மரியாதையும் அன்பும் கலந்திருந்தது.

அதேபோல், மகேந்திரன் இயக்கிய படங்களிலெல்லாம் இவருக்கு கேரக்டர் ரோல் கொடுக்கப்பட்டன. தொடர்ந்து வெண்ணிற ஆடை மூர்த்தியைப் பயன்படுத்தி வந்தார் மகேந்திரன்.

அதேபோல், அர்ஜூன் தான் தயாரித்த, இயக்கிய படங்களில் இவருக்கு ஏதேனும் ஒரு வாய்ப்பைத் தந்துவிடுவார். திரையுலகில் இத்தனை ஆண்டுகள் இருந்தாலும் சுமார் 800க்கும் மேற்பட்ட படங்கள் பண்ணியிருந்தாலும் ஒட்டுமொத்த சினிமா உலகில், தேங்காய் சீனிவாசனும் சுருளிராஜனும்தான் இவருக்கு வாடாபோடா நண்பர்களாம்!

இவரின் மனைவி மணிமாலாவும் நடிகைதான். வல்லவனுக்கு வல்லவன் படத்தில், ஓராயிரம் பார்வையிலே முதலான பாடல்களுக்கெல்லாம் வருவார். சிந்துபைரவியில் சுஹாசினியின் அம்மாவாக நடித்திருப்பார்.

‘ஹானஸ்ட்டாவும் ஒழுங்கோடவும் இருந்துட்டா, நிம்மதியா, நிறைவா வாழலாம்’ என்பது வெ.ஆ.மூர்த்தியின் இலக்கணம். அதன்படியே வாழ்ந்தும் வரும் இவருக்கு, ஒரேயொரு மகன். ஆஸ்திரேலியாவில் இருக்கிறார்.

தேதிப்படி இன்று வெண்ணிற ஆடை மூர்த்திக்குப் பிறந்தநாள் (25.7.18). 80வது பிறந்தநாள். இதையொட்டி நட்சத்திரப்படி கணக்கில் கொண்டு, சமீபத்தில் அவருக்கு சதாபிஷேக வைபவம் விமரிசையாக நடைபெற்றது. அதை ஓர் குடும்ப விழாவாகவே நடத்தினார் வெண்ணிற ஆடை மூர்த்தி.

அவரின் பிறந்தநாளையொட்டி, அவரிடம் எண்பது கேள்விகள் கேட்டோம். அதற்கு, நேர்மையாகவும் குறும்புடனும் உற்சாகமாகவும் வெளிப்படையாகவும் யதார்த்தமாகவும் உண்மையாகவும் பதில் சொன்னார். அத்தனை பதில்களிலும் அவரின் முகமூடியற்ற முகம், வெளிப்பட்டது; பளிச்சிட்டது.

சினிமா, சீரியல், ஜோஸியம், வாழ்க்கை என்று நாலாதிசையிலும் நல்லவிதமாகப் பயணிக்கும் வெண்ணிற ஆடை மூர்த்தி, இன்னும் இன்னும் ஆரோக்கியத்துடனும் அமைதியுடனும் நீடுழி வாழ வாழ்த்துவோம்.

வெண்ணிற ஆடை மூர்த்தி வாழ்க!

அவரின் பிறந்தநாள் வேளையில், காமதேனு ஆன்லைனுக்காக வெண்ணிற ஆடை மூர்த்தி தந்த எண்பது பதில்களையும் இங்கே கொடுத்திருக்கிறோம்... உங்களுக்காக! படித்து ரசியுங்கள்... ரசித்து மகிழுங்கள்... மகிழ்வுடன் இன்னும் வாழ்த்துங்கள்!

https://www.kamadenu.in/news/cinema/4292-v-a-murthi-birthday.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this