Jump to content

Recommended Posts

வேட்டை - வா.மு.கோமு

 

ச்சி வெய்யில் ஏறியிருந்தது. தலைக்குச் சூடு தெரியாமலிருக்க, தோளில் கிடந்த துண்டை உதறி உருமாலைக் கட்டுக் கட்டியிருந்தார் ஆரப்பன். தரையைத் தொட்டுவிடுமோ என்கிற மாதிரி, அடிக்கடி தொங்கி வரும் நாக்கை வாய்க்குள் இழுத்துக்கொண்டு டைகர் அவருக்கும் முன்னால் வேலியோரமாக அவரைப் பத்திரமாகக் கூட்டிப் போவதுபோல் நடந்தது. இருவருமே சங்கித்தான் போயிருந்தார்கள். போக, இருவருக்கும் வயதும்வேறு ஆகிவிட்டது.

p98a_1530095201.jpg

‘‘ஏப்ரல்லயே வெய்யொ இந்தப் போடு போட்டா, இன்னமும் மே மாசமுன்னு ஒண்ணு முழுசாக் கிடக்கே டைவரே! ஒடம்புல இருக்குற எல்லா மசுருகளும் கருகிப்போயிரும். கருகல் வாசம் நம்ம மூக்குக்கே அடிக்கும் பாரு, வடைச் சட்டி தீயுற வாசமாட்டொ” டைகரிடம் சொல்லிக்கொண்டே பின்னால் சென்றார்.

ஊர் இன்னமும் ஐந்து மைல் தூரத்தில் இருக்கிறது. கொரங்காட்டுக்குள் நுழைந்தால் சிகாமணி தோட்டத்துக்குப் போய்விடலாம். சிகாமணி மோட்டார் போட்டிருந்தானென்றால், தொட்டியில் தண்ணீர் கிடக்கும். இருக்கும் தாகத்திற்குத் தொட்டித் தண்ணீர் முழுவதையும் குடித்துக் காலி செய்துவிடலாம். தண்ணீரால் நிரம்பிய வயிறு சொளப் சொளப்பென ஆடும். அப்படியே தென்னை மர நிழலில் சாய்ந்தால், பொழுது விழுவதுகூடத் தெரியாமல் கிடக்கலாம். தென்னை மட்டை, காற்றுக்குக் கழன்று தலையில் விழாமல் இருந்தால் சரி.p98b_1530095216.jpg

இப்போதெல்லாம் வேட்டைக்கு என்று கிளம்பி ஒரு மணி நேரத்துக்குள் சோம்பலாகிவிடுகிறது. டைகருக்கும் வயசு ஆகிவிட்டது. ஏறக்குறைய பனிரெண்டு வயசு இருக்கலாம். முன்பாக அதனிடமிருந்த துள்ளல் எதுவுமில்லை இப்போது. இந்த வாழ்க்கை கிழவனோடே போகப்போகிறது என்று அதற்குத் தெரியுமோ என்னவோ! ஆனால், இன்று வரை டைகர் ஒரு நாளில்கூட ஆரப்பனிடம் கோபித்துக் கொண்டதில்லை.

ஆரப்பனுக்கும் ஆயிற்று வயது அறுபது. தலையில் வெள்ளை முடிகள்தான் அதிகம். கோவிலுக்கு மொட்டை போடுவதற்கு நேர்ந்துவிட்டதுபோல சடையாய் வளர்த்தி, பொறவுக்குக் குடுமை போட்டிருந்தார். ஊருக்குள்ளிருக்கும் பெண்களில் பலர் சவுரி முடிதான் வைத்திருக்கிறார்கள். அந்த சவுரி முடி அழகாய் கருமை நிறத்தில் வீட்டினுள் ஆணியில் தொங்கிக்கொண்டிருக்கும். வெளியில் கிளம்புவது என்றால், அது அவர்களின் தலையில் ஏறிக்கொள்ளும். அவர்களுக்கெல்லாம் ஆரப்ப கிழவரின் தலைமுடிமீது பொறாமை. ‘கெழவனுக்குப் பாரு தலையில!’ என்றே சொல்லிச் சலிப்பார்கள்.

ஆரப்பனின் வீடு ஊருக்குள் கிழக்குப் புறமாகக் கடைசியில் இருந்தது. அதை வீடு என்று சொல்லலாமா என்று தெரியவில்லை. அது குடிசைக்கும் சேராமல் வீட்டுக்கும் சேராமல் காட்சியளிக்கும். களிமண் சுவர் ஆரப்பனின் நெஞ்சு உயரம் மேலெழும்பி இருக்க... அப்படியே மேலே பனையோலை வேய்ந்திருந்தார். வாசலில் ஒரு மண் மேடை இருந்தது. பொழுது போகாத இவர் வயதையொத்தவர்கள் வந்து சேர்ந்தால், அமர்ந்துகொண்டு கதையடிக்க வாசலில் அந்த மேடை. வீட்டினுள் நாற்காலி வைப்பதெற்கெல்லாம் ஏது இடம்?

வீட்டினுள் சமையல் சாமான்கள் சிலவும் அடுப்பும் மட்டும்தான். வெங்காயம், மிளகாய், தக்காளி என்று போட்டுவைக்க ஒரு பெரிய தட்டுக்கூடை. ஒரு பெரிய அரிக்கேன் விளக்கு. அதுவும் சீமெண்ணெய் இல்லாமல் இந்த ஆறு மாதமாக வீட்டின் மூலையில் கிடந்தது. போக ரேசன் கார்டை இவரிடமிருந்து வாங்கிக்கொண்டு ஸ்மார்ட் கார்டு கொடுத்திருந்தார்கள். அதை மடியில் முடிந்து வைத்திருந்தவர், வேட்டையில் எந்தக் காட்டில் போட்டுவிட்டாரோ! கார்டு இல்லாமல் ரேசன்கடைப் பக்கமாய் ஆறு மாதமாக அரிசிக்கும் இவர் போவதில்லை. அரிசி வாங்கி வந்து கோழிகளுக்கும், ஆடுகளுக்கும் தீனிக்குப் போடும் உள்ளூர் குடும்பத்தார்களிடம் போய், கையிலிருக்கும் காசைக் கொடுத்து பையில் வாங்கிக்கொண்டு வருவார். அதுவும்கூட டைகருக்காகத்தான்.

p98c_1530095247.jpg

டைகருக்கு ரேசன் அரிசி என்றால், அப்படி ஒரு பிரியம். அப்படித்தான் ஒருமுறை ரேசனில் பச்சரிசி போட்டார்கள். ஆக்கி வட்டலில் போட்டு ‘வாடா வாடா வாடா!’ என்று இவர் என்ன கத்திக் கூப்பிட்டும் வட்டல் பக்கமே அது வரவில்லை. கிடைக்கும்போது வயிற்றை நப்பிக்கொள்ளும் வழக்கம் டைகருக்கு சிறுவயதிலிருந்தே இருந்துவந்தது. ஒரு வட்டல் சோறு, சாப்பிட்டு முடிக்க அரைமணி நேரம். அதுதான் கணக்கு. கறித் துண்டுகளும் எலும்புத்துண்டுகளும் சாப்பாட்டோடு இருந்தால், முதலாக மூக்கை வட்டலில் நுழைத்துத் துண்டுகளைக் கவ்வி நிதானமாக மென்றுவிட்டு எல்லாத் துண்டுகளும் முடிந்தால்தான் சோற்றிலேயே வாய் வைக்கும்.

“ஆனாலும் உனக்குத் தெனாவட்டு சாஸ்திடோய்... கறியோட போட்டா ஒரு மணி நேரம் பண்டாமெ வட்டலை உட்டு அக்கட்டால வருவியா நீயி!” திண்டிலிருந்தபடி ஆரப்பன் பேச்சுக்கொடுத்தால், வாலை மட்டும் ஆட்டுவதோடு சரி. ‘நீ என்ன வேணாலும் சொல்லிக்கோ! சோத்துக்குத்தான் இத்தனை பறப்பு. அதையும் போயி உன்னியாட்டம் அவுதி அவுதியா அள்ளிப் போட்டுட்டுப் படுத்துக்க என்னால முடியாது!’ வாய் மட்டும் இருந்திருந்தால், அப்படித்தான் அது சொல்லியிருக்கும் என அவராக நினைத்துக்கொண்டு ஒரு பத்தாம் நெம்பர் பீடி பற்றவைத்து புகை ஊதுவார் படுத்தபடி. லொக்கு லொக்கென அவ்வப்போது சின்ன இறுமல் வேறு. இந்த பீடிக்குடியை விட்டுத் தொலைத்து விடலாமென இவரது சின்ன வயதிலிருந்தே நினைத்துக்கொள்வார், ஒவ்வொரு பீடி பற்ற வைக்கையிலும். ஆனால், அது முடிவேனா என்கிறது அவருக்கு. இப்போதெல்லாம் பீடி குடிக்காமலேயே ரெண்டு காடு நடந்து செல்லும்போதே புஸ் புஸ்சென மூச்சு அடைக்கிறது. இந்த லட்சணத்தில் வேட்டையை வெற்றிகரமாக இப்போதெல்லாம் அவரால் முடிக்க முடிவதில்லை.

போக, வேட்டையில் சிக்கும் உடும்புகள் வளையிலிருந்து தப்பி ஓடுகையில் பார்த்தால், மூணு கிலோ தேறும் போலவும், மூணு நாளைக்கு வேட்டைக்கே வர வேண்டியதில்லை போலவும்தான் தெரிகிறது. டைகர் போய் அழுத்திக் கிடக்கையில் தூக்கிப் பார்த்தால்,  ‘வற்றிய வயிற்றுடன் ஒரு கிலோ தேறுமா? இந்தப் பாவத்தையா பிடித்தோம்’ என இருக்கும் இவருக்கு. வீட்டின் அருகில் நிழலுக்கு இருக்கும் கிளுவை மரத்தில் தூக்கிக் கட்டி, தோலை உரித்துக் குடலைக் கிழிக்கையில் உள்ளே கட்டெறும்புக் கூட்டமும், கருவண்டுகளும் உணவுப் பையில் சேகரமாய் இருக்கும். ‘தீனிக்கி எனத்தையெல்லாம் முழுங்குதுங்கனு பாருடா டைவரே! அட நல்லதா நாலு பொருளு திங்கப்புடாது?’ என்பார் ஆரப்பன்.

இந்தப் பத்து வருடங்களாகவே வேட்டை ஒன்றுதான் அவரது வேலையாகிப் போய்விட்டது. ஊருக்குள் ‘சரவாங்கிக்கி சாரைப் பாம்பு கிடைச்சா கொண்டாந்து தாருங்கொ அப்பாரு!’ ‘உடும்பு கெடச்சா கொணாந்து தாருங்கொ அப்பாரு’ என்பார்கள். எல்லாமே இவருக்கும் டைகருக்கும் போகத்தான். பணமே அவர்கள் தருவதாக இருந்தாலும் இவர்கள் வயிற்றுப் பாட்டுக்குத்தான் வேட்டையே என்பதுபோல நடந்துகொள்வார். இன்னது தேவை என்று ஒரு வாரம் முன்பாகவே சொல்லிவிட வேண்டும் இவரிடம். அப்போதுதான் வாரத்துக்குள் அவர்களுக்குக் கிடைக்கும்.

p98d_1530095277.jpg

இருந்த ஒரு பையன் பழனானும் சீட்டாட்டமே பெருசு என்று ஊர் ஊராக ஆடப்போவான். இவரது சைக்கிளோடு பத்து வருடம் முன்பாக ஒரு வியாழக்கிழமை ஊரை விட்டுப் போனவன்தான். இன்னமும் ஆள் உயிரோடு இருக்கிறானா, இல்லையா என்பது ஊராருக்கே தெரியவில்லை. ஆரப்பனிடம் கேட்டால், ரெண்டு சொட்டுக் கண்ணீர் மட்டுமே விடுவார். அந்த வருடத்தில்தான் அம்மிணியம்மாளும் காய்ச்சல் என்று விழுந்து செத்துப்போனது. இருவருமே இல்லை என்கிறபோது குட்டியாய் இருந்த டைகர் மட்டுமே இவருக்குத் துணை என்றாகிப்போனது.

முதல் முதலாக வேட்டைக்குப் பழக்க டைகரை இவர் காட்டுச்சேரிக்குக் கூட்டிச் சென்றபோது, உலகம் இவ்வளவு பறந்து விரிந்து கிடக்கிறதாவென காடு மேடெங்கிலும் ஓட்டமாய் ஓடியது டைகர். இவர் என்னதான் பெயர் சொல்லிக் கூப்பிட்டாலும் அது நிற்கவில்லை. ஒரு கட்டத்தில் ஓட்டம் சலித்து சங்கிப்போய் இவரைத் தேடி அலைந்து இரண்டு மணிநேரம் கழித்து வந்து சேர்கையில், சுண்டெலி வங்கை இவர் மம்பட்டியால் நடுக்காட்டில் வெட்டிக்கொண்டிருந்தார். முந்தைய நாள் இரவில்தான் இடியுடன் மழை தட்டி லேப்பியிருந்தது. இடிச் சத்தத்திற்கு எலிகள் பயந்துபோய் ஏதாவது ஒரு வங்கில் கூட்டமாய்க் கூடியிருக்கும். அவரது கணக்கு தப்பாது எப்போதும்.p98e_1530095301.jpg

தன் முதலாளி காட்டினுள் என்னவோ துளை போடுகிறான் என்றே உணர்ந்த டைகர், அவரிடம் வாலை ஆட்டிக்கொண்டு வந்து கெஸ் கெஸ்சென மூச்சு வாங்கிக்கொண்டு நின்றது. “அட இன்னஞ்சித்த நேரம்தான் ஓடீட்டு மெதுவா வர்றது! ஆளும் மொகரையும்... இப்பிடி பைத்தியாரப் பயலாட்டம் ஓடிட்டு இருந்தீன்னா புவ்வாவுக்கு என்ன சாமி பண்டுவே?” பேசிக்கொண்டே ஒடித்து வைத்திருந்த நீண்ட விளாரை வளைத் துவாரத்தில் விட்டு “புர் புர்ர்ர் த்தாய்ய்ய் பூஊஊர்ர்ர்ர்!” என்று சப்தமிட்டபடி இழுத்து இழுத்து உள்ளே விட்டார். டைகர் காதுகளை விடைத்துக்கொண்டு வாலை வேகமாக ஆட்டிக்கொண்டு சுற்றிலும் வளைந்து வளைந்து ஓடித் தவித்தது! எதற்காக முதலாளி இப்படிச் சத்தமிடுகிறார்? இவருக்கு என்னவாயிற்று?

திடுதிப்பெனப் பொடத்தியைப் பொத்துக் கொண்டு உருண்டை உருண்டையாகத் தலைதெறிக்க ஓடும் எலிகளைக் கண்ட டைகர், அவற்றில் ஒன்றன் பின்னால் வேலி வரை ஓடிக் கவ்வியது. ஆரப்பன் வளைந்த கம்பி சுற்றிய தடியை இரண்டு எலிகளைத் துரத்தியோடி வாகாய் விசிறினார். வீசிய தடி இரண்டு எலிகளின் மீதும் பட்டுச் சுருண்டு விழுந்தன. இரண்டையும் தூக்கி இடுப்பில் செருகிக்கொண்டார்.

“பிடிச்சுட்டியா நீயும் ஒன்னை... கொண்டா கொண்டா என்கிட்ட! கொண்டாடா சாமி... கொண்டாடா சாமி” என்றவரிடம் வாயில் கவ்விக்கொண்டு வாலை ஆட்டியபடி டைகர் வந்து சேர்ந்தது. “கையில எலியக் குடு” என்று வலது கையை நீட்டினார். டைகரோ இதில் என்னவோ ஏமாற்று வேலை இருக்கிறதெனத் திரும்ப வேலிக்குச் செல்ல ஓட்டமாய் ஓடியது. பின்பாக முன்னங்கால்களை நீட்டி மரத்தடி நிழலில் அமர்ந்து கவ்வியிருந்த எலியை வாயினுள் தள்ளி நறுக் மொறுக்கென மெல்லவும்தான் இவருக்குக் கோபம் தலைக்கு ஏறிற்று. கம்பி சுற்றிய வளைந்த தடியை நாயை நோக்கி வீசினார். சரியாக அதன் உடம்பில் சென்று தொப்பென விழுந்தது தடி!  வயிற்றில் அடிபட்டிருந்தாலும் தன் காலில்தான் பயங்கர அடி விழுந்ததுபோல ‘கைக்கைக் கைக்கைக்’ எனக் கத்திக்கொண்டே காலை நொண்டிக் கொண்டு ஊரை நோக்கி ஓடிப்போனது.

அன்று இரவு எலிக்கறிக் குழம்புடன் தன் வட்டலில் விழுந்த சாப்பாட்டைச் சுத்தமாக நாவால் துடைத்துக் காலிசெய்த பின், டைகர் வாசல் திண்டில் கிடந்த முதலாளியின் அருகில் வந்து நீட்டி காவல் காக்கும் பாவனையில் படுத்துக்கொண்டது. இடுப்பிலிருந்து செத்த எலி ஒன்றை வாலைப் பிடித்து உயர்த்தி டைகரின் முன்னால் ஆட்டினார் ஆரப்பன். தாவிக் குதித்து அது கவ்வ முயல்கையில் கையால் அதன் வாயில் சட்டென ஒன்று வைத்தார். இப்படி நான்கு முறை தாவாங்கட்டையில் அடி விழுகவும் எலியே வேண்டாமென்ற முடிவுக்கு டைகர் வந்து சேர்ந்து படுத்துக்கொண்டது. எலியை அதன் முன்பாகப் போட்டார். விடிந்து இவர் எழுந்து பார்க்கையில் எலி போட்ட இடத்திலேயே விறைத்துக் கிடந்தது.

டைகரை அவர் வேட்டைக்குத் தயார் செய்வதற்கு ஒரு வாரத்திற்கும் மேலாகிவிட்டது. முதலாகப் பைத்தியம் பிடித்ததுபோலக் காட்டினுள் சும்மாவுக்கேனும் ஓடுவதை அதுவாகவே நிறுத்திக் கொள்வதற்கே ஐந்து நாள்களாகிவிட்டன. பின்பாக வேட்டையின்போது பக்கத்து வேலியிலிருந்து குழிக்குள் கிடந்த முயல் ஒன்று திடுதிப்பென அரவம் கேட்டு பயந்து தாவிக் குதித்து ஓட, அதனைத் துரத்திக்கொண்டு ஓடிய டைகர் போன திசை தெரியாமல், வெகு நேரம் கூப்பாடு போட்டுப் பார்த்தபடி அங்கேயே நின்று சலித்தார். பின்பாகத் தனி வேட்டையாடும் விருப்பமில்லாமல் வீட்டுக்கு இவர் வந்து நீட்டிக் கிடந்தபோது, வாயில் முயலைக் கவ்விக்கொண்டு நிதானமாக வீடு வந்து சேர்ந்தது டைகர். ‘சபாஷ் சபாஷ்’ என டைகரைப் பாராட்டிக்கொண்டே இருந்தார் ஆரப்பன், வடைச்சட்டியில் கறி வேகும் வரை.

ன்னைக்கென்னவோ கைக்குச் சிக்கினது வாயிக்கிச் சிக்கலங்கற மாதிரி, கண்ணுக்குச் சிக்குனதும் கைக்குச் சிக்குவனான்னு போக்குக் காட்டிட்டே ஓடுதுங்களே! டைவரச் சொல்லியுங் குத்தமில்லெ! முன்னெல்லாம் ஒரு வட்டச் சோறு தின்னுட்டு வகுத்தை டிம்முனு வச்சுட்டு ஒரே கெடையில் விழுந்து நெளிச்சுட்டுக் கிடப்பான்! பத்துப் பாஞ்சு தாவுல மொசலா இருந்தாலுஞ் செரி, கீரியா இருந்தாலுஞ் செரி எட்டிப் பிடிச்சுடுவான்! கெளுத்தியா இருக்குற ஒரு எலியக்கூட ஓடிப் பிடிக்க முடியல இப்ப இவனால! அவட்டைச் செத்த எலிங்களையும் அணில்களையும்தான் எதோ பிடிக்க முடியுது! இதுல முயலுக்கு எங்க போக? முயல் கறினு வடைச்சட்டியில வேக வச்சு வருசமாச்சி! உடும்பை வங்குலயே தோண்டீட்டுப் போயி பிடிச்சா பிடிச்சதுதான். தப்புறு குப்புறுனு கிளம்பிடுச்சுன்னா போச்சு! டைவரால என்ன உசுப்பேத்துனாலும் ஓடிப் பிடிக்க முடியறதில்லே! கறிதின்னே பழகிப்போச்சு இந்த வாயி! கெடச்சிரும் கெடச்சிரும்னு ரொம்ப நம்பிக்கையா காடு காடா வெய்யில்ல சுத்துறது மட்டும் மிச்சம். டைவருக்கும்தான் தெரியுது... வேட்டை கிடைச்சாத்தான் நாலு எலும்பைக் கடிச்சுட்டாவது கிடக்கலாம்னு! ‘இந்தா என்னெப் பிடிச்சுக்கோ!’ என்று எந்த உயிரினமும் டைகரின் முன்னால் வந்து இந்த நாள் வரை நின்றதில்லை. அது சாத்தியமுமில்லை.

“டைவரே, அந்த வேலியில சந்து இருக்குதானு பாரு... நாம கொரங்காட்டுக்குள்ளார போவோம்!” ஆரப்பன் தொய்ந்துபோன குரலில் சொன்னார். அப்படித்தான் அவர் சொல்ல வேண்டுமென டைகரும் எதிர்பார்த்திருந்ததைப்போல வேலிச் சந்தில் நுழைந்தது. அதற்கும் சலப்புத் தண்ணீர் தேவையென்றே இருந்தது. வேலியில் குனிந்து காய்ந்து கிடந்த கிளுவை மரத்தைத் தாண்டி இந்தப் பக்கமாக ஆரப்பன் காட்டுக்குள் காலை வைக்கையில் லப்பர் செருப்பு காது அந்து திருகிச் சென்றது! கையால் அதை எடுத்துத் துளைக்குள் பட்டனை மமட்டைக் கடித்துக்கொண்டு திணித்து காலுக்குப் போட்டுத் தொட்டுக்கொண்டு நடந்தார்.

தூரத்தே சிகாமணி தோட்டத்தில் பத்துப் பாஞ்சு தென்னை மரங்கள் கூட்டமாய் நின்றிருந்தன. தண்ணீர் கிடைக்குமெனத் தெரிந்ததும் ஆரப்பனுக்குத் தெம்பு கூடிக்கொண்டது. இப்போது ஒரு கீரிப்பிள்ளை ஓடினால்கூட இவரே துரத்தியோடிப் போய் அதை அமுக்கிவிடுவார்போல. ஆனால், வேலியில் ஓணான் ஒன்று, “நெனப்பெல்லாம் நல்லாத்தான் இருக்குதுடியோ!” என்பது போல இவரைப் பார்த்துத் தலையை மேலும் கீழும் ஆட்டிக் காண்பித்தது. அது டைகருக்கு பயந்து வேலியின் மீது அப்போதுதான் மேலேறியிருந்தது.

டைகர் முன்னால் போக ஆரப்பன் நிதானமாய்த் தோட்டத்தினுள் நுழைந்தார். தண்ணீர் போகும் வரப்பில் நேராகத் தண்ணீர்த்தொட்டி நோக்கித்தான் டைகர் சென்றது. இவர் கொய்யா மரத்தில் பழமிருக்கிறதா என்று பார்த்தார். இரண்டு கிளிகள் கீச்பூச்செனக் கத்திக்கொண்டு பறந்து சென்றன. மரத்தில் எல்லாமும் பச்சைக் காய்களாகவே தொங்கின. அவற்றை இவரால் மெல்ல முடியாது. மனுசன் திங்கறதுக்கு மரம் வளர்த்துனா, இதுங்க எப்பிடித்தாம் கண்டுபிடிச்சு பறந்து வந்துடுதுங்களோ! பழம் ஆகுறதுக்கும் முன்னாடியே கொத்துற பதத்துலயே சொரண்டித் தின்னுபோடுதுங்க!

டைகர் குரைக்கும் சப்தமும் எதிர்க் குரலாக இன்னுமொரு நாய் குரைக்கும் சப்தமும் கேட்டது இவருக்கு. சிகாமணியின் நாய்தான் அந்த இன்னொரு குரல். அதை சிகாமணி சங்கிலியில் கட்டிவைத்திருப்பான். எப்போதுமே அப்படித்தான். ‘அவுத்து வுட்டா நேரா ஊட்டுக்கு வந்துடுது பெருசு... அங்க ஏற்கெனவே ஒன்னு இருக்குது’ என்பான். மறுபடியும் சப்தமெதுவும் வரவில்லை. ‘உனக்கு வாழ்வு... உம் முதலாளியோட காடு காடா சுத்துறே! இங்க பாரு என்னைய... சங்கிலி போட்டு ஒரே கெடையில கெடன்னு போட்டுட்டான் என் முதலாளி’ என்று சிகாமணி நாயும், ‘இங்க எனக்கென்ன வாழ்வு? காடு காடா சுத்திப் பாரு அப்போ தெரியும் என்னோட நெலமை’ என்று டைவரும் பேசி முடித்திருக்கலாமென நினைத்துக்கொண்டே தண்ணீர்த்தொட்டிக்கு வந்துசேர்ந்தார் ஆரப்பன்.

டைகர் தொட்டிக்கு அருகில் ஈர மண்ணில் நீட்டிப் படுத்துவிட்டது. ஆரப்பன் கிடைக்கல்லின் மீதேறி நின்று தொட்டியினுள் இரு கைகளையும் சேர்த்துவிட்டு அள்ளி அள்ளிக் குடித்தார். குடிக்கக் குடிக்க தாகம் அடங்கினதுபோலவே இல்லை. கடைசியாகத் துண்டைத் தலையிலிருந்து உருவி கிடைக்கல்லில் போட்டார். மீண்டும் தண்ணீரை அள்ளித் தலையிலும் முகத்திலும் அடித்துக்கொண்டார். ஒடுக்கு விழுந்த ஈயப்போசி கிளுவை மரத்தின் கிளையில் இருந்தது. அதை எடுத்து வந்து தண்ணீர் மோந்து டைகருக்கு வைத்தார். டைகர் ‘தண்ணியா?’ என்று சங்கடப்பட்டு எழுந்து வந்து நாக்கை நீட்டி நீட்டிக் குடித்தது.

சிகாமணியின் நாய் வேப்ப மரத்தடியில் கட்டப்பட்டுப் படுத்தபடி இவரையே பார்த்தது. ‘உனக்குத் தண்ணி வேணுமா?’ என்றார் சப்தமாக. அந்த நாயின் அருகில் சோத்து வட்டில் குப்புறக் கிடந்தது. இவர் போசியில் தண்ணீர் கொண்டுபோய் குப்புறக் கிடந்த வட்டிலைத் திருப்பினார். நேற்று இரவு வைத்த சோறோ என்னவோ... ஒரு துளி வாய் வைக்காமல் குப்புறத் தள்ளிவிட்டு ரோசமாகப் படுத்திருப்பதாய் நினைத்தார். வட்டிலில் தண்ணீர் ஊற்றிக் கழுவிவிட்டு வட்டில் ரொம்பத் தண்ணீர் ஊற்றினார். அந்த நாய் எழுந்து வாலை ஆட்டிக்கொண்டே தண்ணீரைக் குடித்தது. ‘நாயி வளத்துறானுங்க பாரு கேனப்பயலுவ’ என்று முனகிக்கொண்டே போசியைக் கிளுவை மரத்தில் பழையபடி வைத்துவிட்டு மீண்டும் தொட்டிக்கே வந்தார். கீழே நனைந்து கிடந்த துண்டை எடுத்து மீண்டும் உருமாலை கட்டிக்கொண்டார். டைகர், இன்னிக்கி வேட்டை அவ்ளோதான் என்பதுபோலக் கால் நீட்டிக் கிடந்ததைப் பார்க்க சங்கடமாகவும் இருந்தது இவருக்கு.

இவருக்கும் களைப்பில் நீட்டிவிடலாம் என்றுதான் இருந்தது. மூட்டு மூட்டாய் வலித்தது. அப்படிச் செய்ய முடியாது. இருந்தும் நாயின் அருகே போய்க் கால்நீட்டி அமர்ந்தார். நாயின் தலையைக் கைகளால் தூக்கி மடியில் வைத்துக்கொண்டார். அதன் நெற்றியை நீவிக் கொடுத்தபடி, “நம்ம ரெண்டு பேருக்கும் இப்பெல்லாம் ரெம்ப முடியலடா டைவரே! நாம கறியா நெறையத் தின்னம்னா மட்டும்தான் இனிமேல் வேட்டைக்கினு காட்டுக்குள்ள சங்காமச் சுத்த முடியும். ஆமா பாத்துக்க! என்ன திங்கோணும்?” கண்களைச் சொகுசாய் மூடி முதலாளி மடியில் கிடந்த டைகர், கண்களைத் துளி விரித்துப் பார்த்தது. “கறி திங்கோணும்! வெதுப்பு வெதுப்புனு இடிஞ்ச செவுத்துல மண்ணைப் பூசுறாப்புல வட்டல்ல இருந்து எடுத்து வாயிக்குள்ளார பூசணும்... ஆமா... சரி போவமா?” ஆத்தா மாவாளியாத்தா நமக்குன்னு வேட்டையைப் போற வழியில கண்டிப்பா வச்சிருப்பா! அந்த வேட்டை நம்ம ரெண்டு பேருக்கு மட்லும்தான். ஆமா யாருக்கும் பங்கு கிடையாது!’ மடியிலிருந்து டைகரின் தலையைத் தூக்கிக் கீழே வைத்துவிட்டு எழுந்தார்.

சிகாமணி தோட்டத்தில் தக்காளிப் பாத்தி மூன்றும், மிளகாய்ப் பாத்தி மூன்றும் போட்டிருந்தான். முதலாகத் தக்காளிப் பாத்திக்குள் நுழைந்தவர், வேட்டியில் சிவந்த பழங்களாகப் பறித்துப் போட்டுக்கொண்டார். அடுத்து மிளகாய்ப் பாத்திக்குள் நுழைந்தார். சிவந்த பழங்களாகப் பறித்து, வேட்டிக்குள் போட்டுக்கொண்டு, டைகர் கிளம்பினானா என்று பார்த்தார். டைகர் இன்னும் அதே இடத்தில் நீட்டிக் கிடப்பது தெரியவே, தெற்கே காட்டினுள் கையில் பிடித்திருந்த வளைந்த தடியை ஆட்டிக்கொண்டே மெதுவாக நடந்தார். அவருக்கு வீடு செல்வதற்குள் ஒரு வேட்டையாச்சும் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை இருந்தது. அந்த வேட்டை எது என்றுதான் தெரியவில்லை. கொரங்காட்டு வேலியைத் தாண்டி தெற்கேயே நடந்தார். பத்து வருடங்களில் அவர் வேட்டையாடாத இடமே இல்லை இந்தச் சுற்று வட்டாரத்தில். இதோ இந்த இட்டேறியில் கூடசேர நான்கு அணில்களை ஒண்டி வில்லில் சட்டுச் சட்டெனக் கல்விட்டு அடித்தெடுத்து அரணாக் கயிற்றில் கோத்து நடையிட்டிருக்கிறார். ஒண்டிவில்லை இப்போது அவரால் பயன்படுத்த முடிவதில்லை. இவர் ஒரு பக்கம் குறி பார்க்க, கல் ஒரு பக்கம் செல்கிறது விர்ர்ர்ரென.

பெரிய புளியாமரத்தடிக்கு வந்து சேர்ந்தார் ஆரப்பன். கருத்த நிழல் ‘படுத்துக்கோ ஆரப்பா! படுத்துக்கோ ஆரப்பா!’ என்று சொன்னது. இந்த இடத்தில்தான் நான்கு வருடத்துக்கு முன்பு முத்துச்சாமி பையன் சின்னு பாப்பாவுடன் அமர்ந்து கதை பேசிக்கொண்டிருந்தான். பாப்பாவை சின்னு கட்டிக் கொள்வதாய்க்கூட அன்று இவரிடம் சொன்னான். பாப்பா ஒரு வருடத்தில் அரளிக்கொட்டை சாப்பிட்டு நாய்க்கழிசலை ஊற்றியும் தப்பிக்காமல் செத்துப்போனாள். அப்போது அவள் வயிற்றில் மூன்று மாதம் என்றார்கள். யார் காரணம் இதற்கு என்று ஊருக்கே தெரியவில்லை. சின்னு இப்போதுதான் கல்யாணம் கட்டி வந்திருக்கிறான் ஊருக்குள். ஆரப்பன் வழக்கமாக வருகையிலெல்லாம் பெரிய புளியாமரத்தடிக்கு வருவதே இல்லை. சுற்றாக வேறு திசையில் சென்றுவிடுவார். இன்று அவரையறியாமல் வந்துசேர்ந்துவிட்டார் இந்த இடத்திற்கு. இப்போதும் கையைப் பிசைந்துகொண்டு பாப்பா நிற்பதாக அவருக்குத் தோன்றி மறைந்தது ஒரு கணம். ‘பாவம் பாப்பா’ என்று முனகிக்கொண்டே மரத்தடியைத் தாண்டினார் ஆரப்பன்.

பின்னால் டைகர் வருகிறானா என்று அடிக்கடி திரும்பிப் பார்த்துக்கொண்டார். டைகர் ராசி பார்ப்பதாக எண்ணிக் கொண்டார். ரெண்டு பேரும் சேர்ந்து வேட்டையாடினால் இன்று ஒரு சுண்டெலிகூடக் கிடைக்காது என்பதை உணர்ந்து தனியே வேட்டைக்குச் சென்றுவிட்டானோ என்னவோ. தூரத்தே ஆடுகளின் சப்தம் ‘மே... மே’ என்று இவர் காதுகளுக்குக் கேட்டது. முருங்கம் பாளையத்துக்காரர்கள் யாரேனும் ஆடுகளை ஓட்டிவந்து மேய விட்டிருக்கலாம் என நினைத்துக்கொண்டே வரக்கிணறு தாண்டினார். இன்னமும் இரண்டு காடுகள் தாண்டினால் போதும், ஊருக்கான தார் ரோட்டைப் பிடித்துவிடலாம். மயில்களின் சப்தம் கேட்டுக்கொண்டேயிருந்தது.

மர நிழல்களுக்கு இடையே நடந்து கொண்டிருந்தவருக்கு ஏனோ தலை தனியே சுழலுவது போன்று திடீர் திடீரெனத் தோன்றியது. காலையில் பழைய சோற்றுத் தண்ணீரை ஒரு குண்டான் குடித்துவிட்டு கிளம்பியதுதான். வீடு போய்க் கஞ்சி ஆக்கிக் குடிக்க வேண்டும். அதுதான் வழி இப்போதைக்கி. டைகர் ஏன் படுத்த கிடையை விட்டு எழுந்து வரவில்லை என இப்போதுதான் இவருக்கே பட்டது. ஒரு மணி நேரமாச்சும் இங்கே நிழலில் கிடக்க வேண்டியதுதான். வாகான இடம் தேடி நகர்ந்தார். வேப்ப மரங்கள் பூத்துக் குலுங்கி நின்றன. ‘மழையே இல்லன்னாலும் இதுக கெளுத்திக்கிக் கொறச்சலே இல்ல’ என்று நினைத்தபடி கால் நீட்டி அக்கடாவென சாய்ந்தார். பீடி ஒன்று பற்றவைக்கலாம்தான். ஆனால், புகை ஊதி முடித்ததும் தண்ணீர் கேட்கும் வாய். அதற்கு இங்கே வழியில்லை. பீடி நினைப்பை உதறித் தள்ளிவிட்டுக் கண்களை மூடினார். விசு விசுவென மெலிதாகக் காற்று வீசியது. சீக்கிரத்திலேயே அசந்து குறட்டைபோட ஆரம்பித்துவிட்டார் ஆரப்பன்.

எவ்வளவு நேரமிருக்குமென அவர் அறியவில்லை. தன் காதை யாரோ நக்கிவிடுவதைப்போல் உணர்ந்தவர் தூக்கக் கலக்கத்திலேயே... ‘த்தேய் கம்முனு போ!’ என்று வாய்விட்டே சொன்னார். ‘ங்கூ ங்கூ ங்க்கூஊஊவ்’ என்று காதுக்கருகில் குரல் கேட்கவே, சிரமப்பட்டு எழுந்து அமர்ந்தார் ஆரப்பன். அவர் முன் குந்தவைத்து டைகர் அமர்ந்திருந்தது. சற்றுத் தள்ளி நான்கு மாதமேயான ஆட்டுக்குட்டி ஒன்று கழுத்தில் கடிபட்டு செத்துக்கிடந்தது. திடீரென இவரின் இதயம் வேகமாய்த் துடிக்க ஆரம்பித்துவிட்டது. என்ன கொடுமை இது?

“டேய் டேய் டேய்! என்னடா காரியம் பண்ணிட்டு வந்து நிக்குறே? இந்தப் பாவத்தையும் பண்ணிட்டியாடா! பச்செ மண்ணுடா இது...” கோபத்தில் கைக்கு அருகில் கிடந்த வேட்டைத் தடியை எடுத்து ஓங்கி டைகரின் மீது எறிந்தார். ‘கைக் கைக் கைக்’கென மண்டையில் அடி விழுந்திருந்தாலும் முன்னங்காலை நொண்டிக்கொண்டே அங்கிருந்து ஓட்டமெடுத்தது டைகர்.

ஆரப்பன் எழுந்து ஆட்டுக் குட்டியின் அருகில் வந்தார். அதைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. கண்களில் கண்ணீர் தளும்பிக்கொண்டு வந்துவிட்டது. ஆட்டுக்காரருக்கு ‘இப்படி ஆயிப் போச்சுங்கோ’னு சொல்லிப் பணம் கொடுத்து விடலாமென்றால், கையில் நயாப் பைசா கிடையாது. குட்டியைத் தூக்கிச் சுள்ளிமுள் புதர் ஒன்றுக்குள் வீசியெறிந்தார். சீக்கிரமாக இடத்தைக் காலிசெய்துவிட வேண்டும் என நினைத்து வெக்குடு வெக்குடென ஊர் நோக்கி நடையிட்டார் ஆரப்பன். அவருக்கு இன்னமும் படபடப்பு தீரவேயில்லை நெஞ்சில். என்ன ஒரு அக்குரமம்! பசி என்ன வேணாலும் பண்ணச் சொல்லிடுமா? டைகரைக் கையோடு கொரங்காட்டிலிருந்து கூட்டி வந்திருந்தால், இந்தச் சம்பவம் நடந்தேயிருக்காது. சரி சித்த நேரம் கிடந்து வரட்டுமென வந்தது தப்பாப் போயிடுச்சே!

ஆரப்பன் வீடு வந்துசேருகையில் மாலையாகிவிட்டிருந்தது. சூரியன் இதோ மேற்கில் சாயப்போகிறேன் என்றிருந்தான். கஞ்சி ஆக்கிக் குடித்துவிட்டு, சாப்பாட்டை டைகரின் தட்டில் போட்டு முடித்து வாசல் மண்மேடையில் கால் நீட்டி விழுந்தவருக்கு, அப்போதுதான் டைகர் இன்னும் வீடு வந்து சேரவில்லையே என்ற ஞாபகமே வந்தது. அடித்துவிட்டதற்காகக் கோபித்துக்கொண்டு வீட்டின் பொறக்கடையில் போய்ப் படுத்துவிட்டதா? இல்லை, கிழக்கு வேலியோரம் போய்ப் படுத்துக்கொண்டதா? எழுந்து தடுமாறியபடி வீட்டின் பின் புறத்துக்கு வந்தார். “டைவரே! டைவரே!” காணவில்லை என்றதும் மீண்டும் மண்மேடைக்கே வந்தவர் கிழக்கே பார்த்து “டைவரே! உனக்கு அந்தளவுக்கு ஆயிப்போச்சா?” என்று சப்தமாகவே குரல் கொடுத்தார். இவரின் ஒரு சப்தத்திற்கு எங்கிருந்தாலும் ஓடி வந்துவிடும் டைகரைக் காணாதது அவருக்குள் மீண்டும் பதைபதைப்பை உருவாக்கிவிட்டது.

அப்படியே மேடையில் சாய்ந்தவர் வானத்து நட்சத்திரங்களைப் பார்த்தபடி, “உன்னிய நான் கோபத்துல ஒரு சாத்து சாத்திட்டண்டா... மனசுல அதப் போயி வச்சுட்டு ஊட்டுக்கு வராமெ போயிருவியா? எங்க சாமி போனே? உனக்குக் காட்டைத் தவுத்து எந்த ஊடு தெரியும்? வெளியூருக்கு ஓடுனீன்னா மச நாயின்னு கல்லெறிஞ்சு கொன்னுபோடுவாங்க சாமி! எங்கதாம் போனே?” புலம்பியவருக்கு, நாயில்லீன்னா நாம எனத்துக்கு ஆவோம்? என்று நினைத்ததும் அழுகை முட்டிக்கொண்டு வந்துவிட்டது. அழுது ஓய்ந்ததும் நாயின் ஞாபகமாவே இருந்தவர், காடு காடாய்ச் சுற்றிய அசதியில் சீக்கிரமே தூங்கியும் போனார். “ங்கூ ங்கூ’ என்று தன்னைச் சுற்றிலும் சப்தம் வந்துகொண்டே யிருப்பதாகவும் அவருக்கு ஒரு ஞாபகம் இருந்துகொண்டே இருந்தது தூக்கத்திலும்.

நடுச்சாமம் இருக்கையில் புரண்டு படுத்தவரின் கைகளில் மொரமொரப்பாய் ஒரு பொருள் படவே திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தவர், கண்களைக் கசக்கிக்கொண்டு சுற்றிலும் பார்த்தார். நிலா வெளிச்சம் கண்ணுக்குப் பழக்கப்பட நிமிடங்களாயிற்று. தன் அருகே நீட்ட வாக்கில் மூன்று கிலோ தேறும் என்கிற மாதிரி உடும்பு ஒன்று கிடந்தது. எப்போதும் இவர் அருகிலேயே படுத்திருக்கும் டைகர், சற்றுத் தள்ளி மேடையின் தெற்குக் கடைசியில் வீட்டைப் பார்த்துப் படுத்திருந்தது.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.