யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
நவீனன்

'ஒரே நேரத்தில் தேர்தல்' நடத்துவதற்குத் தேவை என்ன? அது எப்படி நடக்கும்?

Recommended Posts

'ஒரே நேரத்தில் தேர்தல்' நடத்துவதற்குத் தேவை என்ன? அது எப்படி நடக்கும்?: அலசல் கட்டுரை-1

 
 

ஒரே நேரத்தில் சட்டமன்றத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் தேர்தலை நடத்த விரும்பும் மத்திய அரசு இது குறித்து பல்வேறு தரப்பினரின் கருத்துக்களைப் பெற்றுவருகிறது. ஆனால், இது கூடுதல் செலவுபிடிக்கும் காரியம் என்பதோடு, வேறு பல குழப்பங்களையும் ஏற்படுத்தக்கூடும். பல அரசியல் கட்சிகள் இதை எதிர்க்கின்றன.

இத்திட்டத்தின் வரலாறு, நன்மை, தீமைகள், பல தரப்பின் கருத்துகளைக் குறித்து அலசி இரண்டு பாகங்கள் கொண்ட கட்டுரைத் தொடராக வெளியிடுகிறது பிபிசி தமிழ். இத்தொடரின் முதல் பாகம் இது. இதில், இத்திட்டத்தின் பின்னணி, வழிமுறைகள் குறித்து பேசப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் சாத்தியமா?படத்தின் காப்புரிமைVIKRAMRAGHUVANSHI

ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடத்தும் யோசனை என்பது பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டுவரும் ஒரு விவகாரம். 1983ல் இந்தியத் தேர்தல் ஆணையம் தனது முதல் ஆண்டறிக்கையை சமர்ப்பித்தபோதே, இந்த விவகாரம் அதில் விவாதிக்கப்பட்டது. 1999ஆம் ஆண்டின் சட்ட ஆணையத்தின் அறிக்கையிலும் இந்த விவகாரம் பேசப்பட்டது. ஆனால், அதைத்தாண்டி இந்த திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை.

ஆனால், தற்போதைய மத்திய அரசு இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து தீவிரமாக ஆலோசித்துவருகிறது. இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட பல்வேறு தரப்பினரிடமும் இந்திய சட்ட ஆணையம் கருத்துக்களைக் கேட்டுவருகிறது. இம்மாத துவக்கத்தில் இந்தியா முழுவதுமுள்ள பல்வேறு அரசியல் கட்சிகள், சட்ட ஆணையத்திடம் தங்கள் கருத்துக்களை எழுத்து மூலம் தாக்கல்செய்துள்ளன.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சிகளில் சிரோண்மனி அகாலி தளம், அ.தி.மு.க., சமாஜ்வாதி கட்சி, தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி ஆகியவை ஆதரவு தெரிவித்தன. தி.மு.க., திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, தெலுங்கு தேசம், சி.பி.ஐ., சி.பி.எம்., ஃபார்வர்ட் ப்ளாக், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் இதனை எதிர்த்திருக்கின்றன.

'ஒரே நேரத்தில் தேர்தல்' என்பது புதிய யோசனையா?

இந்தியாவில் 1967ஆம் ஆண்டுவரையில் பெரும்பாலும் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டப்பேரவைகளுக்கும் (கேரளா விதிவிலக்கு) ஒரே நேரத்தில்தான் தேர்தல்கள் நடைபெற்றுவந்தன. ஆனால், 1967, 1968ஆம் ஆண்டுகளில் சில மாநில சட்டப்பேரவைகள் கலைக்கப்பட்டதாலும் 1970ல் நாடாளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்டதாலும் தேர்தல்கள் மாநிலங்களிலும் நாடாளுமன்றங்களிலும் மாறிமாறி நடைபெற ஆரம்பித்தன.

இந்தியாவில் முதல் மூன்று மக்களவையும் முழு காலமும் பதவியில் இருந்தன. நான்காவது மக்களவை முன்கூட்டியே கலைக்கப்பட்டது. ஐந்தாவது மக்களவையின் காலம் ஓர் ஆண்டு நீட்டிக்கப்பட்டது. அதன் பிறகு, எட்டாவது, பத்தாவது, பதினான்காவது, பதினைந்தாவது மக்களவைகள் முழு பதவிக் காலமும் நீடித்தன. ஆறு, ஏழு, ஒன்பது, பதினொன்று, பன்னிரண்டு, பதிமூன்றாவது மக்களவைகள் முன்கூட்டியே கலைக்கப்பட்டன. இப்படி நிகழ்ந்ததால், 'ஒரே நேரத்தில் தேர்தல்' என்ற நோக்கம் முழுக்கவுமே குலைந்துபோனது.

தற்போது இந்தியாவில், ஒரு சில ஆண்டுகளைத் தவிர, பிற ஆண்டுகளில் எல்லாம் 5-7 மாநிலங்களுக்குக்கான சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடக்கின்றன. 2014ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், ஒரிசா ஆகிய மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்பட்டது.

அதற்குப் பிறகு, அதே ஆண்டு செப்டம்பரிலிருந்து டிசம்பருக்குள் மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட், ஜம்மு - காஷ்மீர் ஆகிய மாநிலங்களுக்குத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. 2015ல் தில்லி, பிஹார் மாநிலங்களுக்குத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. 2016ல் தமிழ்நாடு, அசாம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கத்திற்குத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. இதைத் தவிர்த்து, உள்ளூராட்சித் தேர்தல்கள், இடைத்தேர்தல்களைக் கணக்கில் கொண்டால் ஒரே வருடத்தில் இந்தியாவில் பல முறை தேர்தல்கள் நடந்துகொண்டேயிருக்கின்றன.

தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவதற்கு சொல்லப்படும் காரணம் என்ன?

எப்போதெல்லாம் தேர்தல் அறிவிக்கப்படுகிறதோ, அப்போதெல்லாம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும் என்பாதல், வளர்ச்சி, நிர்வாகப் பணிகளை தொடர்ச்சியாக செய்ய முடியவில்லையென மத்திய அரசு கருதுகிறது.

தவிர, இந்தத் தேர்தல்களை நடத்த அரசுகளுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் பெரும் பணம் செலவாகிறது. தேர்தல்கள் தனித்தனியாக நடக்கும்போது மக்களவைத் தேர்தல்களுக்கான முழுச் செலவையும் மத்திய அரசு ஏற்கிறது (ஆனால், பாதுகாப்புச் செலவுகளை மாநில அரசுகள்தான் செய்கின்றன). மாநிலங்களுக்கான தேர்தல் செலவை, அந்தந்த மாநிலங்கள் செய்கின்றன. தேர்தலை ஒன்றாக நடத்தினால், செலவுகளைப் பகிர்ந்துகொள்ள முடியும் என்கிறது மத்திய அரசு.

நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் சாத்தியமா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

சமீப ஆண்டுகளாக தேர்தலை நடத்தும் செலவுகள் கணிசமாக அதிகரித்திருக்கின்றன. 2009ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த 1,115 கோடி ரூபாய் செலவானது. ஆனால், 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை நடத்த ரூ. 3,870 கோடி செலவாகியுள்ளதாக நிதி ஆயோகின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மாநில அரசுகள் இந்தத் தேர்தலை நடத்த செய்த செலவுகள் இதில் சேர்க்கப்படவில்லை.

அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை, மக்களவைத் தேர்தல்கள், சட்டமன்றத் தேர்தல்கள், உள்ளாட்சித் தேர்தல்களுக்குத் தனித்தனியாக செலவழிக்கின்றன. ஆகவே இந்தத் தேர்தல்களுக்குச் செலவழிக்க, பெருந்தொகையை அவை ஊழல் செய்து சேர்ப்பதாக நிதி ஆயோகின் அறிக்கை ஒன்று கூறுகிறது.

தற்போதைய சூழலில் மக்களவைக்கும் சட்டமன்றங்களுக்கும் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்தினால், ஒட்டுமொத்தமாக 4,500 கோடி ரூபாய் செலவாகுமென இந்தியத் தேர்தல் ஆணையம் கருதுகிறது.

தவிர, ஒவ்வொரு தேர்தலுக்கும் பெருமளவில் மனித சக்தியைப் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. 16வது மக்களவைக்கான தேர்தலில் சுமார் 1 கோடி தேர்தல் அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பாதுகாப்புப் படையினரைப் பொருத்தவரை, இந்தியாவில் எங்காவது அவ்வப்போது தேர்தல் நடந்துகொண்டேயிருப்பதால், வருடம் முழுவதும் மத்திய ரிசர்வ் காவல் படையின் ஒரு பகுதியினர் தேர்தல் பணியில் இருந்துகொண்டேயிருக்கின்றனர்.

 

 

தவிர, வேறு சில சம்பவங்களும் தேர்தலையொட்டி நடக்கின்றன. தேர்தல் பிரச்சாரங்களையொட்டி எழுப்பப்படும் சத்தம், மாசுபாடு ஆகியவையும் குறிப்பிடத்தக்கவை. தவிர, தேர்தலையொட்டி ஜாதி, மத ரீதியான உணர்வுகளும் அரசியல் கட்சிகளால் உசுப்பப்படுகின்றன.

கடந்த முப்பது ஆண்டுகளில், இந்தியாவில் ஏதேனும் ஒரு பகுதியில் தேர்தல் நடக்காமல் கழிந்ததேயில்லை என்கிறது நிதி ஆயோக்.

ஆனால், இந்த வாதத்தைப் பலர் ஏற்பதாக இல்லை. "ஜனநாயக முறையில் தேர்தல் நடத்துவது என்று முடிவுசெய்துவிட்டால், அதற்கான செலவைச் செய்துதான் ஆகவேண்டும். தேர்தலே நடத்தவில்லையென்றால், செலவே இருக்காதே. அதற்காக அப்படி ஒரு யோசனையைச் சொல்ல முடியுமா?" என்று கேள்வி எழுப்புகிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் து. ரவிக்குமார்.

ஒரே நேரத்தில் தேர்தல் என்றால் என்ன?

தற்போது இந்தியாவில் நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளூராட்சி அமைப்புகள் என மூன்று மட்டங்களில் தேர்தல்கள் நடைபெறுகின்றன. ஆனால், உள்ளூராட்சி அமைப்புத் தேர்தல்களை மாநிலங்கள்தான் நடத்துகின்றன என்பதாலும் உள்ளூராட்சி அமைப்புகளின் எண்ணிக்கை மிகப் பெரிய அளவில் இருப்பதாலும் 'ஒரே நேரத்தில் தேர்தல்' என்ற திட்டத்திற்குள் உள்ளூராட்சி அமைப்புகள் கொண்டுவரப்படவில்லை.

நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் சாத்தியமா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஆகவே, . "ஒரே நேரத்தில் தேர்தல்" முறையின் மூலம், ஒரு வாக்காளர் ஒரே நாளில் நாடாளுமன்றத்திற்கான உறுப்பினரையும் சட்டமன்ற உறுப்பினரையும் தேர்வுசெய்வார். தமிழகத்தில் இதற்கு முன்பாக கடந்த 1996ஆம் ஆண்டில் இப்படி ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் வாக்குப் பதிவு நடைபெற்றது.

அதேபோல, ஒரே நேரத்தில் தேர்தல் என்றால், இந்தியா முழுவதும் வாக்குப் பதிவு ஒரே நாளில் நடக்கும் என்றும் அர்த்தமல்ல. அவை இப்போது நடப்பதைப் போல பல கட்டங்களாகவே நடத்தப்படும்.

https://www.bbc.com/tamil/india-44856032

Edited by நவீனன்

Share this post


Link to post
Share on other sites

இந்திய அரசிலமைப்பு சட்டத்தின்படி ஒரு சட்டத்தை அல்லது சட்ட திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு மக்களவை மற்றும் மாநிலங்கள் அவையின் ஒப்புதல் அவசியம். மக்களவை உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப் படுபவர்கள். மாநிலங்கள் அவை உறுப்பினர்கள் மாநில சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்போது பல்வேறு காரணங்கள் காரணமாக மக்களைவை தேதலும் மாநில சட்டசபை தேர்தல்களும் வெவ்வேறு நேரங்களில் நடத்தப்படுகின்றன. இதன் காரணமாக மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் வெவ்வேறு கட்சிகளின் பிரதிநிதித்துவம் உள்ளது. இதன் காரணமாக சட்டங்களை நிறைவெற்றுவதில் பல தடைகளை தாண்டவேண்டியது உள்ளது. இது ஓரளவுக்கு ஜனநாயக தன்மையை நிலைநாட்ட உதவுகிறது.

மாறாக, ஒரே நேரத்தில் மாநில மற்றும் மக்களவை தேர்தலை நடத்தும்போது, ஒரே மாநிலத்தில் பல கட்சிகளின் பிரதிநிதித்துவம் குறையும். ஒரு உதாரணத்துக்கு 2014 மக்களவை தேர்தலோடு மாநில சட்டசபை தேர்தலையும் நடத்தியிருந்தால், தமிழகத்தின் பிரதிநிதிகளாக அதிமுகவே டில்லியில் அமர்ந்திருக்கும். அதிமுகவை வளைப்பது சுலபமாகிவிடும். இதுபோல ஒவ்வொரு மாநிலத்திலும் ஓரிரு கட்சிகளை சமாளித்தாலே போதும். சட்டங்களை நிறைவேற்றிக்கொள்ள முடியும். இது ஜனநாயகத்துக்கு உகந்தது அல்ல.

Share this post


Link to post
Share on other sites

'ஒரே நேரத்தில் தேர்தல்' வந்தால் என்ன கூத்தெல்லாம் நடக்கும்?: அலசல் கட்டுரை-2

 
நாடு முழுதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதில் என்ன பிரச்சனைகள்?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ற முழக்கத்தின் கீழ் முன்மொழியப்படும் திட்டம் குறித்தும், அதன் தேவை, பின்னணி குறித்தும் இந்தக் கட்டுரைத் தொடரின் முதல் பாகத்தில் விவாதித்தோம். இந்த திட்டத்தில் உள்ள பிரச்சினைகள் குறித்தும், இதனை ஏன் அரசியல் கட்சிகள் எதிர்க்கின்றன என்பது குறித்தும், இந்த இரண்டாவது பாகத்தில் பார்ப்போம்.

'ஒரே நேரத்தில் தேர்தல்' முறையில் உருவாகக்கூடிய பல சிக்கல்கள் குறித்து, இந்திய தேசிய காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், தி.மு.க., சி.பி.ஐ., தேசியவாத காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தங்கள் கருத்துக்களை தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்துள்ளன.

தேசியக் கட்சிகளுக்கு சாதகமா?

இந்த ஒரே நேரத்தில் தேர்தல் முறையில் உள்ள மிகப் பெரிய பிரச்சனையாக பிராந்தியக் கட்சிகள் சுட்டிக்காட்டுவது, இம்மாதிரி தேர்தல் நடத்தப்படும்போது ஒரு வாக்காளர் தேசியப் பிரச்சனைகளை மனதில் கொண்டு, தேசியக் கட்சிகளுக்கு ஆதரவாக வாக்களிக்கக்கூடும் என்பதைத்தான்.

1999, 2004, 2009, 2019 ஆகிய நான்கு மக்களவைத் தேர்தல்களோடு சேர்த்து சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட்ட மாநிலங்களின் முடிவுகளை ஆராய்ந்தபோது, அங்குள்ள வாக்காளர்களில் 77 சதவீதம் பேர், நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கு வாக்களித்தார்களோ, அதே கட்சிக்கே சட்டமன்றத் தேர்தலிலும் வாக்களித்துள்ளனர். தனித்தனியாக நடத்தும்போது இந்த விகிதம் வெகுவாகக் குறைந்திருக்கிறது. இது பிராந்தியக் கட்சிகளை வெகுவாக அச்சுறுத்துகிறது.

அதேபோல, முதல்முறையாக இந்தத் தேர்தலை நடத்தும்போது, வெவ்வேறு ஆண்டுகளில் நிறைவடையக்கூடிய பதவிக்காலங்களைக் கொண்ட சட்டமன்றங்களையும் நாடாளுமன்றங்களையும் ஒன்றாக இணைத்து தேர்தலை நடத்துவது எப்படி என்ற கேள்வியும் எழுகிறது.

சில மாநில சட்டமன்றங்களை நீட்டித்தும், சில மாநில சட்டமன்றங்களின் ஆயுளைக் குறைத்தும் ஒன்றாக நடத்திவிட முடியுமா? தேர்தல் நடத்திய பிறகு நாடாளுமன்றத்திலோ, சில மாநில சட்டமன்றங்களிலோ யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் என்ன செய்வது?

தமிழக அரசை முன்கூட்டியே கலைக்கவேண்டுமா?

தவிர, 2019ஆம் ஆண்டில் ஒரே நேரத்தில் தேர்தலை அமல்படுத்த வேண்டுமென்றால், அசாம், கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் சட்டமன்றங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே கலைக்கப்பட வேண்டியிருக்கும். சில மாநிலங்களுக்கு நீட்டிக்கப்பட வேண்டியிருக்கும்.

ஆனால், இதில் மற்றொரு பிரச்சனை இருக்கிறது. ஒரே மாதிரி தேர்தல் நடந்தால் மட்டும் போதுமா? நடுவில் நாடாளுமன்றத்திலோ, சட்டமன்றங்களிலோ ஆட்சி கவிழாதா? புதிதாக அரசமைக்க முடியாமல் தேர்தல் நடத்த வேண்டிய சூழல் ஏற்படாதா? என்னதான், ஒரு நேரத்தில் தேர்தல் நடத்தினாலும் 1967க்குப் பிறகு ஏற்பட்ட சூழல் வெகு விரைவிலேயே ஏற்பட்டுவிடும் என்பதுதான் உண்மை.

நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவது கடினம்

இதற்கு சில யோசனைகள் முன்வைக்கப்படுகின்றன. முதலாவதாக, மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருபவர்கள், வேறொருவரை பிரதமராக முன்னிறுத்தி, நம்பிக்கை கோரும் தீர்மானம் ஒன்றையும் கொண்டுவர வேண்டும்.

தவிர்க்கவே முடியாத சூழலில் மத்திய அரசு கவிழுமானால், ஐந்தாண்டுகளில் மீதமிருப்பது குறுகிய காலமாக இருந்தால், அந்தக் குறுகிய காலத்திற்கு அமைச்சர்களாக சிலரை நியமித்து, குடியரசுத் தலைவரே நிர்வாகத்தைக் கவனிக்கலாம். நீண்ட காலமாக இருந்தால் மத்திய அரசை மட்டும் தேர்வுசெய்ய ஒரு இடைத் தேர்தலை நடத்த வேண்டும். அந்த நாடாளுமன்றம், மீதமிருக்கும் காலத்திற்கு மட்டுமே நீடிக்கும். பிறகு, பிற மாநில சட்டமன்றங்களுடன் சேர்ந்து தேர்தலைச் சந்திக்கும்.

நாடு முழுதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதில் என்ன பிரச்சனைகள்?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

மாநில சட்டமன்றங்களுக்கும் இதேபோல செய்யலாம். தனித் தனித் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலைப் பொறுத்தவரை ஒவ்வொரு வருடமும் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் இந்த இடைத்தேர்தல்களை நடத்திவிட வேண்டும்.

இப்படிச் சிக்கல்கள் ஏற்படாமல் தடுக்க, ஒவ்வொரு நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டுவிட்டால், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அதே நாடாளுமன்றமும் சட்டமன்றமுமே நீடிக்கும் என்ற வகையில் ஒரு அரசமைப்புச் சட்டத்தை திருத்த வேண்டும். காரணம் இந்திய அரசமைப்புச் சட்டம் நாடாளுமன்றங்களுக்கோ, சட்டமன்றங்களுக்கோ நிலையான கால அளவைக் கொடுக்கவில்லை. அவை ஐந்தாண்டுகளுக்கு நீடிக்கலாமே தவிர, அதற்கு முன்பாக கலைக்கப்படலாம், அல்லது கலையலாம்.

நாடு முழுதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதில் என்ன பிரச்சனைகள்?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

"இவையெல்லாம் மிகப் பெரிய சிக்கல்கள். இப்படி நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் நிலையான கால அளவை (Fixed Term) கொண்டுவருவதன் மூலம், அதிபர் முறைக்கு நாட்டை மாற்றுவதற்கான முதல் அடியை எடுத்துவைக்கிறது மத்திய அரசு. அமெரிக்காவில்தான் இதுபோன்ற நிலையான கால அளவு கொண்ட அமைப்புகள் உண்டு. நம்முடைய அரசியல் சாஸனம் இதற்கு முற்றிலும் நேர் எதிரானது" என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் ரவிக்குமார்.

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் மாறுபட்ட கருத்து

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டாக்டர் எஸ்.ஒய். குரேஷி இந்த விவகாரம் தொடர்பாக சில கருத்துக்களை ஊடகங்களிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

அதாவது, ஒரு கட்சி நாடாளுமன்றத்திலோ, சட்டமன்றத்திலோ ஆட்சிக்கு வந்த பிறகு, அடுத்த ஐந்தாண்டுகளில் உள்ளாட்சித் தேர்தலையோ அல்லது மீண்டும் சட்டமன்றத் தேர்தல்களையோ சந்திக்கும் வாய்ப்பு இருந்தால், அவை பொறுப்போடு நடந்துகொள்ளும் என்கிறார் அவர். மேலும் தேர்தல்களின் மூலம், அடிமட்ட அளவில் பல வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன; அவை பொருளாதாரத்திற்கு உந்து சக்தியாக அமைகின்றன என்கிறார் அவர்.

அடிக்கடி தேர்தல் நடத்துவதன் மூலம் பல நாட்கள் வீணாகின்றன. நிர்வாகம் பாதிக்கப்படுகிறது. கோபால்சாமி, முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்

ஆனால், முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையரான கோபால்சாமி இந்தக் கருத்திலிருந்து மாறுபடுகிறார்.

"அடிக்கடி தேர்தல் நடத்துவதன் மூலம் பல நாட்கள் வீணாகின்றன. நிர்வாகம் பாதிக்கப்படுகிறது. நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும். இடையில் காலியாகும் தொகுதிகள் அனைத்துக்கும் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை இடைத் தேர்தல் நடத்தலாம். பல நாடுகளில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களையெல்லாம்கூட சேர்த்து நடத்துகிறார்கள்" என பிபிசியிடம் கூறினார் கோபால்சாமி.

அதிமுக என்ன நினைக்கிறது?

இம்மாதத் துவக்கத்தில் 'ஒரே நேரத்தில் தேர்தல்' குறித்த ஆலோசனைக் கூட்டம் சட்ட ஆணையத்தால் நடத்தப்பட்டபோது, அ.தி.மு.க. சார்பில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர், 'ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சிறந்ததுதான். ஆனால், அப்படிச் செய்வதாக இருந்தால் அதனை 2024ல்தான் நடத்த வேண்டும்; அதற்கு முன்பாக நடத்தக்கூடாது' என்று குறிப்பிட்டார்.

இதைப் போன்ற நிலைப்பாட்டையே 2015ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா எடுத்தார் என்கிறார் ரவிக்குமார். அவர் அப்போது இந்த நிலைப்பாட்டை எடுத்ததற்குக் காரணம், 2016ல் தாம் திரும்பவும் ஆட்சிக்கு வருவோம் எனக் கருதவில்லை. அதனால், தி.மு.க. ஆட்சிக்கு வரும்பட்சத்தில் 2019 ஒரே நேரத்தில் தேர்தல் என்ற பெயரில் அந்த ஆட்சி கலைக்கப்படும் என்பதற்காக அந்த சமயத்தில் அவர் ஆதரித்தார். அதேபோன்ற நிலைப்பாட்டைத்தான் இப்போதும் அ.தி.மு.க. எடுக்கிறது என்கிறார் ரவிக்குமார்.

திமுக கடுமையாக எதி்ப்பது ஏன்?

ஒரே நேரத்தில் தேர்தல் என்பதைத் தி.மு.க. கடுமையாக எதிர்த்திருக்கிறது. இது தொடர்பாக தி.மு.கவின் செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறார். அதில், மேலே குறிப்பிடப்பட்ட பல சிக்கல்களைச் சுட்டிக்காட்டியிருக்கும் மு.க. ஸ்டாலின், இது இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு முரணானது என்று கூறியிருக்கிறார்.

"ஒரு முறை தேர்வுசெய்யப்பட்டுவிட்டால், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஆட்சி கவிழக்கூடாது என்பதற்காக, கட்சித் தாவல் தடைச் சட்டம் நீர்த்துப்போகச் செய்யப்படக்கூடும். இதை ஏற்கவே முடியாது. பிறகு, குதிரைபேரம் தொடர்ந்து நடக்கும்" என்கிறார் தி.மு.கவின் சார்பில் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினரான திருச்சி சிவா.

இந்தியாவில் அடிக்கடி தேர்தல் நடக்கிறது என்றால், அப்படித்தான் நடக்கும். தேர்தல்கள் ஜனநாயகத்தை துடிப்புடன் வைத்திருக்கின்றன. திருச்சி சிவா, திமுக எம்.பி.

இந்தியாவில் அடிக்கடி தேர்தல் நடக்கிறது என்றால், அப்படித்தான் நடக்கும். தேர்தல்கள் ஜனநாயகத்தை துடிப்புடன் வைத்திருக்கின்றன. இந்தியாவைப் போல பல கட்சிகளை அனுமதிக்கும் ஜனநாயகத்தில் இவை தவிர்க்க முடியாதவை என்கிறார் சிவா. மேலும், ஒரே நேரத்தில் தேர்தல் என்ற முறையை நீட்டிக்கச் செய்வதற்காக கட்சித் தாவல் தடைச் சட்டத்தையே இல்லாமல் செய்ய முயற்சிக்கிறார்கள். இது பல குழப்பங்களுக்கு வழிவகுக்கும் என்கிறார் சிவா.

நாடு முழுதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதில் என்ன பிரச்சனைகள்?படத்தின் காப்புரிமைVIKRAMRAGHUVANSHI

உதாரணமாக, ஒரு அரசு கவிழ்ந்து இன்னொரு அரசைத் தேர்வுசெய்யும் சூழலில் ஒரு குறிப்பிட்ட கூட்டணிக்குப் பெரும்பான்மை கிடைக்கும் வகையில் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக வைத்துக்கொள்வோம். வாக்கெடுப்பு நடக்கும்போது உறுப்பினர்கள் அந்தக் கொறடா உத்தரவை ஏற்காமல் வாக்களித்தால், கட்சித் தாவல் தடைச் சட்டம் இல்லாத நிலையில், என்ன நடவடிக்கை எடுக்க முடியும் என்ற கேள்வியும் இருக்கிறது.

அரசியல் நிர்ணய அவை என்ன நினைத்தது?

''இந்திய அரசமைப்புச் சட்டத்தை அங்கீகரித்த அரசியல் நிர்ணய அவையில் இது தொடர்பான விவாதம் நடந்திருக்கிறது. அமெரிக்காவில் உள்ள நாடாளுமன்றம், நிலையான கால அளவைக் கொண்டது. ஸ்திரத்தன்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பது.

ஆனால், பிரிட்டன் நாடாளுமன்றம் ஸ்திரத்தன்மையைவிட பொறுப்புடைமைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. அரசியல் அமைப்பு சட்ட அவையில் இதை விவாதித்தவர்கள், 'இரண்டும் இணைந்து இருந்தால் நல்லது. அப்படி இருப்பதில்லை. அதனால், பொறுப்புடைமைக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம்' என்று முடிவுசெய்தார்கள். இதை மாற்றக்கூடாது'' என்கிறார் ரவிக்குமார்.

தற்போதுள்ள முறையில், ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் ஒரு ஆட்சியை மதிப்பிடுகிறார்கள். பிறகு, நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் தொடர்ந்து எதிர்க்கட்சிகளால் அந்த ஆட்சி மதிப்பிடப்படுகிறது.

ஐந்தாண்டுகளுக்கு எதுவும் செய்ய முடியாது என்ற தைரியத்தில் ஆட்சியாளர்கள் என்ன வேண்டுமெனாலும் செய்வார்கள் ரவிக்குமார்,, விசிக பொதுச் செயலாளர்

பெரும்பான்மை உறுப்பினர்கள் நினைத்தால், ஒரு ஆட்சியை எப்போது வேண்டுமானாலும் மாற்ற முடியும். நிலையான கால அளவு கொண்டுவந்துவிட்டால், ஐந்தாண்டுகளுக்கு எதுவும் செய்ய முடியாது என்ற தைரியத்தில் ஆட்சியாளர்கள் என்ன வேண்டுமெனாலும் செய்வார்கள் என்கிறார் ரவிக்குமார்.

தென்னாப்பிரிக்கா, ஸ்வீடல், பெல்ஜியம் போன்ற நாடுகளில் ஒரே நேரத்தில்தான் தேர்தல் நடத்தப்படுகிறது என்பதை சட்ட ஆணையம் சுட்டிக்காட்டியிருக்கிறது. ஆனால், தி.மு.க. இதனை ஏற்கவில்லை. 'இந்த மூன்று நாடுகளின் மக்கள் தொகையை ஒன்றாகக் கூட்டினாலும் தமிழகத்தின் மக்கள்தொகையைவிட குறைவாக இருக்கும். ஆகவே, அந்த உதாரணங்கள் பொருந்தாது' என்கிறது தி.மு.க.

வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு கூடுதல் செலவாகும்

ஒரே நேரத்தில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தினால், முதன் முதலில் அப்படி நடத்தும் தேர்தலுக்கு கூடுதலாக 4,554 கோடி ரூபாய் செலவாகும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. காரணம், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தனியாக வாக்குப் பதிவு எந்திரங்களும் சட்டமன்றத் தேர்தலுக்கு தனியாக வாக்குப்பதிவு எந்திரங்களும் வைக்கப்பட வேண்டும்.

இவற்றை எடுத்துச் செல்லும் செலவும் இருமடங்காகும். தவிர ஒவ்வொரு பதினைந்தாண்டுகளுக்கு ஒரு முறையும் புதிதாக வாக்குப்பதிவு இயந்திரங்களை வாங்குவதற்கு, சுமார் பத்தாயிரம் கோடி ரூபாய் அளவுக்குச் செலவாகக்கூடும்.

நாடு முழுதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதில் என்ன பிரச்சனைகள்?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

தவிர, இப்படி தேர்தலை நடத்த முடிவுசெய்தால், 1951ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தை பெருமளவில் திருத்த வேண்டியிருக்கும். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அடிப்படையான பல மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும். இவையெல்லாம் எளிதில் நடக்கக்கூடியவை அல்ல.

இதற்கிடையில் மற்றொரு யோசனையும் முன்வைக்கப்படுகிறது. அதாவது 2019ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும்போது, பாதி மாநிலங்களுக்கு ஒன்றாகத் தேர்தலை நடத்திவிட்டு, இரண்டரை ஆண்டுகள் கழித்து மீதமிருக்கும் மாநிலங்களுக்குத் தேர்தலை ஒன்றாக நடத்துவது என்பதுதான் அந்த யோசனை. ஆனால், அதிலும் இதே போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

https://www.bbc.com/tamil/india-44860127

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு