Sign in to follow this  
நவீனன்

'எதுவும் தெரியாது!'

Recommended Posts

 
'எதுவும் தெரியாது!'
 
 
 
 
 
 
 
E_1531459048.jpeg
 
 
 

உள்ளே எட்டிப் பார்த்தார் ராகவன்.
சமையலில் மும்முரமாக இருந்தாள் ஜானகி.
அவர் கோபம் இன்னும் குறையவில்லை. இளைய தலைமுறை இப்போதெல்லாம் பெரியவங்களை மதிப்பதில்லை.
கம்ப்யூட்டர் யுகத்தில் வாழ்ந்து, விரல் நுனியில் எல்லா தகவல்களை வைத்திருந்தாலும், பெரியவர்களின் அனுபவத்திற்கு ஈடாகுமா?
மகனுக்கும், அப்பாவுக்குமான சின்ன பிரச்னை விஸ்வரூபம் எடுத்திருந்தது.
கையில் காபியுடன் வந்தாள் ஜானகி.
''எனக்கு வேண்டாம்; எடுத்துட்டு போ...''
''நீங்க என்ன சின்ன குழந்தையா... எதுக்கு தேவையில்லாமல் கோபப்படறீங்க?''
''ஆமாம்... எனக்கு எதுவும் தெரியாது. இந்த குடும்பத்தை கட்டிக் காத்தவன் நான். அதை முதலில் உன் பிள்ளையை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளச் சொல்லு, புரியுதா?''
குரல் தழைத்து சொன்னவள், ''சின்ன விஷயம்ங்க... எதுக்கு கோபம், பிள்ளை வளர்ந்து பெரியவனாகிட்டான். அவன் பொறுப்பில் செய்யறான். முன்னே, பின்னே இருந்தால் பொறுத்துப் போக வேண்டியது தான்.''
''எதுக்கு... இவ்வளவு பெரிய வீட்டைக் கட்டியது யார் தெரியுமா? நான் தான்... எல்லாம் என் சுய சம்பாத்தியம். பணத்தின் அருமை தெரிஞ்சு, ஒவ்வொரு அங்குலத்தையும் ஆள் வச்சு பார்த்து, பார்த்து கட்டினேன். யாராவது குறை சொல்ல முடியுமா? இப்ப என்னடான்னா... 'உங்க வேலையை பாருங்க, நான் தான் ஆள் வச்சு பார்த்துக்கிறேன்... அப்புறம் என்ன'ன்னு விட்டேத்தியா பேசறான். ஏதாவது சொன்னா, 'இதோடு நான் கழண்டுக்கிறேன். நீங்களே பாருங்கன்னு' கோபப்படறான்.''
கீழே பெரிய ஹால், மூன்று பெட்ரூம் என்று, ரிடையர்டு ஆவதற்கு முன்பே அந்த வீட்டை கட்டியிருந்தார், ராகவன்.
இப்போது, மொட்டை மாடியில் பாத்ரூம் அட்டாச்சுடு ரூம் போட்டு, வாடகை விட்டால், வருமானம் வரும் என்ற ஆசையில், மாடியில் ரூம் போடலாம் என்று சொன்னதும், ''அப்பா... என் ப்ரெண்டு கன்ஸ்ட்ரக் ஷன் கம்பெனி வச்சுருக்கான், அவன் மூலம் கட்டலாம்,'' என்று யோசனை சொன்னான், பிரதீப்.
''கொஞ்சம் அனுபவம் வாய்ந்தவர்களாக இருந்தால், வேலை சுலபமாக இருக்கும்.''
''நீங்க எந்த காலத்தில் இருக்கீங்க... எவ்வளவு எஸ்டிமேட்டுன்னு சொல்லுங்க. அதற்குள் அழகாக நீங்கள் சொன்ன நேரத்தில் கட்டித்தர சொல்றேன்.''
''அதானே... அவன் தான் சொல்றானே... பொறுப்பை அவன்கிட்ட கொடுங்க... நீங்க எதுக்கு அலையுறீங்க... உங்களுக்கும் வயசாயிருச்சு.''
ஜானகி சொல்ல, அரைகுறை மனதோடு, பொறுப்பை மகனிடம் ஒப்படைத்தார்.
ஒரே சிரிப்பும், பேச்சுமாக வேலை நடந்தது. மகன் ஈடுபட்டு இருப்பதாலும், மகனின் நண்பன் என்பதாலும் அவரால் எதுவும் சொல்ல முடியவில்லை. வேலை நடக்கும்போது, மெல்ல மாடி ஏறி போய் பார்த்தார்.
சிமென்ட் கலவை, அங்குமிங்கும் சிதறிக் கிடக்க, அலட்சியமாக வேலை நடப்பது போல தோன்றியது.
''ஏன்ப்பா... இவ்வளவு கலவை வீணாக்கலாமா... மணல், சிமென்ட் என்ன விலை விக்குது... வேலையில் கவனம் வேணும்பா... சித்தாளை விட்டு சாந்து சட்டியில் அள்ளச் சொல்லுங்க.''
சாரத்தில் உட்கார்ந்து பூசும் கொத்தனார் மட்டுமில்லை, சித்தாளும் அவரை ஒரு மாதிரியாக பார்த்தனர்.
சூப்பர்வைசராக நிற்கும் அந்த இளைஞன், ''அண்ணன் சொல்லிட்டு போயிருக்காரு... எல்லாம் நான் பார்த்துக்கிறேன்; நீங்க கீழே போங்க சார்!'' விரட்டாத குறையாக அனுப்பி வைத்தான்.
அன்று மாலையே பிரச்னை ஆரம்பித்தது.
''இவரால சும்மாவே இருக்க முடியாதா... எதுக்கு மாடி ஏறி போறாரு. வேலையெல்லாம் நல்லா தான் நடக்குது. நானும் காசை கணக்கு பண்ணி தான் கொடுக்கிறேன். ஒருத்தங்ககிட்டே பொறுப்பை கொடுத்தா, நடக்கும்ன்னு பேசாம இருக்கணும். வேலை செய்றவங்ககிட்டே போய் ஜல்லி என்ன விலை, மணல் என்ன விலைன்னு கேட்டுட்டு... இப்படி இவர் தலையீடு இருந்தா, நான் ஒதுங்கிக்கிறேன்... இவரையே பார்த்துக்க சொல்லு,'' கோபமாக சொன்னான் பிரதீப்.
இப்படி பிரச்னைகளோடு கட்டட வேலை நடக்க, யாருக்கு சப்போர்ட் செய்வது என்று தெரியாமல் தடுமாறினாள் ஜானகி.
அன்று, 'பைப்' பொருத்தும் வேலை நடக்க, அளவுக்கதிகமாகவே கட்டடத்தை இடித்திருந்தனர்.
வீட்டில் இருந்தால், மகன் வந்ததும் ஏதாவது பிரச்னை வரும் என்பதால், வாக்குவாதம் வேண்டாம், எப்படியோ போகட்டும், இனி, அவனை நம்பி எந்த பொறுப்பும் தரக்கூடாது என்று முடிவு செய்து, காலாற நடந்து வரலாம் என வெளியே கிளம்பினார்.
''என்னப்பா... எதிரில் வருபவனை பார்க்காமல் போறே, நல்லா இருக்கியா?''
குரல் கேட்டு நிமிர்ந்தவர், எதிரில் ஈஸ்வரன் நிற்பதை பார்த்து திகைத்தார்.
''சார்... நீங்களா... நீங்க எங்கே நடந்து வர்றீங்க... காரில் வரலையா?''
''உடம்பு ஆரோக்கியத்துக்காக நடக்கிறேன்பா... வாயேன் அந்த பூங்கா பக்கம் போய் நடப்போம்... உன்னை பார்த்தும் நாளாச்சு, நல்லா இருக்கியா?'' விசாரித்தபடி அவருடன் நடந்தார்.
ஈஸ்வரன், கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் பெரிய நிறுவனம் நடத்தி வந்தார். வேலையில் இருந்தபோது கலெக்டர் ஆபீஸ் வரப்போக இருக்கும்போது, அவருடன் நல்ல பழக்கம். பெரிய பணக்காரர் என்ற தோரணை இல்லாமல், நட்புடன் பழகுவார்.
''சார்... கேள்விப்பட்டேன், நீங்க இப்ப கம்பெனி பக்கமே போறதில்லையாமே.''
''ஆமாப்பா... வயசாயிடுச்சு... எவ்வளவு நாள் பொறுப்புகளை சுமக்கிறது. மகன் படிப்பை முடிச்சான், அவன்கிட்டே நிறுவன பொறுப்பை கொடுத்திருக்கேன்.''
''சார்... சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க... உங்க அனுபவ அறிவு என்ன... தொழில் திறமை என்ன? அந்த அளவு உங்க மகனால் நிர்வாகம் பண்ண முடியுமா... நீங்களும் கூட இருந்து கவனிக்கலாம் இல்லையா... நல்லா லாபகரமாக இயங்கும் நிறுவனம்... உங்க மகனால் சரிவை சந்தித்தால் நஷ்டம் தானே.''
புன்சிரிப்போடு அவரை பார்த்தார்.
''வாழ்க்கைங்கிறது ஒலிம்பிக் ஓட்டப்பந்தயம் மாதிரி... தீப்பந்தத்தை கையிலேந்தி, நாம ஓடறோம்... ஒரு கட்டத்தில் தீப்பந்தத்தை அடுத்தவங்ககிட்டே தருவோம்... நாம் ஓய்வெடுக்க, அவங்க ஓடுவாங்க; ஓட்டம் தொடரும். அது மாதிரிதான்பா வாழ்க்கை.
நமக்கு வயசாயிடுச்சு... பொறுப்பை இளைய தலைமுறைகிட்டே கொடுக்கிறோம். அதில் தவறுகளும், சங்கடங்களும் வரலாம்... நம்ப அனுபவம் அவங்ககிட்டே இல்லாமல் இருந்தாலும், அவங்களாகவே தவறை திருத்திப்பாங்க... ஒருமுறை அடிபட்டால், அடுத்த முறை அந்த தவறு வராமல் பார்த்துப்பாங்க.''
அவரையே பார்த்தார் ராகவன்.
''ஓடும்போது தடுமாறலாம்... கீழே விழலாம்... சமாளிக்க தெரியணும். நாம் வெறும் பார்வையாளர்களாக தான் இருக்கணும். ஏதாவது சந்தேகம் வந்து கேட்டால், நம் அனுபவத்தை சொல்றோம். அவ்வளவு தான். நமக்கு தான் எல்லாம் தெரியும்... அதனால், பொறுப்பை நானே சுமப்பேன்... உன்னை நம்பி தரமாட்டேன்னு சொல்றது சரியில்லைப்பா...''
வீடு அமைதியாய் இருந்தது.
உள்ளே வந்தார்.
''பிரதீப் வேலை முடிச்சு அப்பவே வந்துட்டான். சாப்பிட கூப்பிட்டா, அப்பாவும் வரட்டும்ன்னு சொன்னான். ஏன் இவ்வளவு லேட்டு, சாப்பிட வாங்க.''
டைனிங் டேபிளில் உட்கார்ந்தார்.
''இன்னைக்கு, 'பைப் லைன்' போட, அதிகமாகவே இடிச்சு போட்டுட்டாங்க... நான் சொல்லிட்டு போயிருக்கணும். போய் பார்த்தீங்களா... எதுவுமே கேட்கலை,'' என, பிரதீப் சொல்ல.
அடுத்த பிரச்னை ஆரம்பமாகப் போகிறது... கையில் குழம்பு பாத்திரத்துடன் இருவரையும் பார்த்தாள்.
''பரவாயில்லைப்பா... இப்பதானே பொறுப்பை எடுத்துகிட்டு, இத மாதிரி வேலையில் ஈடுபடறே... அப்படி இப்படி தான் இருக்கும். அடுத்த முறை நீ வீடு கட்டும்போது, இதைப் போல விஷயங்கள் வராமல் பார்த்துப்பே...''
சொன்னவர், ''என்ன ஜானகி... பார்த்துட்டே நிக்கிறே... பிரதீப் வெறும் சாதத்தை சாப்பிடறான். குழம்பை ஊற்றி, காய் வை. வளர்ற பிள்ளை, நல்லா சாப்பிடணும்.''
அவர் குரலில் கோபத்தின் சுவடே இல்லாமல், அன்பும், அக்கறையும் அதிகமாகி இருப்பது ஜானகிக்கு புரிய, மனம் சந்தோஷித்தது.

http://www.dinamalar.com

Share this post


Link to post
Share on other sites

 சிறுசுகள் சிந்தித்து நடப்பதற்கு பதிலா பெரிசுகள் ஒதுங்கி நடக்க வேண்டிக் கிடக்கு......!  tw_blush:

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this