யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
பேராசிரியர்.ந.கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம்

திருவள்ளுவர் 'அந்தணர்' என்றது தொழில் வழி 'அந்தணர்'களை இல்லை - குறள் ஆய்வு-3 -பகுதி2

Recommended Posts

திருவள்ளுவர் 'அந்தணர்' என்றது தொழில் வழி 'அந்தணர்'களை இல்லை - குறள் ஆய்வு-3 -பகுதி2

பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி.

 

"பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!"

- பாவேந்தர் பாரதிதாசன்

 

தொல்லியல் அறிஞர் முனைவர் நாகசாமி அவர்களின் "Thirukkural - An Abridgement of Sastras"  என்னும் நூலுக்கு முறையான பதில் விளக்க நூலின் பகுதிகளையே யாழ் இணையத்தில் கட்டுரைகளாக வெளியிட்டு வருகின்றேன். உலகத் தமிழர்களின் பின்னூட்டத்தைப் பெற்று, முழுமையான நூலாக மேம்படுத்தும் என் முயற்சிக்கு உறுதுணையாக விரிவான பின்னூட்டம் அளித்த தேவப்பிரியா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. விரிவான தங்கள் கருத்துக்கு நான் எழுதிய பதிலும் ஒரு கட்டுரை அளவில் வளர்ந்து விட்டதால், அதையும் கட்டுரையாகவே வெளியிடுகின்றேன். தொடர்ந்து பின்னூட்டக் கருத்துக்கள் எழுத தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் வேண்டுகின்றேன்.

திருக்குறள் தமிழர் அறநூல்; உலகப்பொதுமறை! ஆரிய தரும சாஸ்திரங்கள் ஆரியப்பிராமணர்களின் நலனை மையப்படுத்திய இனவாத நூற்கள்; இவை இரண்டும் வடதுருவம், தென்துருவம் போன்றவை.

திருக்குறளில் பிராமணர் என்ற சொல் இல்லை

திருவள்ளுவர் காலத்துக்கு பலநூற்றாண்டுகளுக்கு முன்பே ஆரியப் பிராமணர்கள் தென்தமிழகத்துக்கு வந்துவிட்டனர் என்பதைத் தொல்காப்பியத்திலேயே பயின்றுவரும் வடசொற்கள் அறிவிக்கின்றன. எனவே, திருவள்ளுவர் 'பிராமணர்' என்னும் சொல்லை அறிந்தேயிருப்பார் என்பதும், வேண்டுமென்றே 'பிராமணர்' என்ற சொல்லாடலைத் தவிர்க்கின்றார் என்பதும் உறுதி. வைதீக சமயத்தின் செயற்பாடுகள் வள்ளுவர் காலத்தில் பரவலாக இருந்திருக்கும் என்பதும் உறுதி; ஆனால், வள்ளுவர் இவற்றை ஏற்றுக்கொள்ளவோ அல்லது வைதீக முறைகள் குறித்து விளக்கவோ முற்படவில்லை என்பதே உண்மை.

ஆனால், கவிஞன் என்பவன் ஒரு காலக்கண்ணாடி என்ற முறையில், வள்ளுவர் காலத்தின் நடப்புகளை, நிகழ்வுகளை சிலவகைகளில் பதிவு செய்வதைத் தவிர்த்திருக்கவே முடியாது என்றவகையில்தான் தேவர், இந்திரன், வானோர், அகல் விசும்பினோர், கோமான், அவியுணவின் ஆன்றோர், புத்தேளிர் உலகு என்று வைதீக மரபோடு ஒட்டிய பெயர்களின் சொல்லாட்சி ஆங்காங்கே மிகக் குறைந்த அளவில் காணப்படுகின்றது.

திருக்குற/ள் ஆரியநூல் என்பது அபத்தம்

கிறித்துவர்களை 'வேதக்காரர்கள்' என்றும், பைபிளை 'வேதாகம நூல்' என்றும் தமிழில் அழைக்கும் தற்காலப் போக்கைப் போன்றதே வள்ளுவரின் இச்சொல்லாட்சிகள். இச்சொல்லாட்சிகளைக் கொண்டு, பைபிளும் ஆரிய வேதங்களும் ஒன்று என்று சொல்வது எவ்வளவு அபத்தமோ, அவ்வளவு அபத்தம் திருக்குறளையும், ஆரிய வேதமரபையும் ஒன்று என்று காட்ட முயலும் செயல். 

திருக்குறள் எங்கும் 'பிராமணர்' என்ற சொல்லாட்சியை ஒருமுறைகூடத் திருவள்ளுவர் பயன்படுத்தவில்லை என்பது கவனிக்கத்தக்கது. மேலும், அறவோர் அனைவரையும் குறிக்கும் அந்தணர் என்னும் தமிழ்ச்சொல், கோயில் பூசகர்களான தமிழ்ப்பார்ப்பனர் என்று பொருள் காணும் மயக்கம் திருவள்ளுவர் காலத்திலேயே ஏற்பட்டுவிட்டது. அத்தகைய மயக்கத்தைப் போக்கவே

அந்தணர் என்போர் அறவோர் மற்றெல்லாவுயிர்க்கும்

செந்தண்மை பூண்டு ஒழுகலான் - குறள்: 30.

என்ற குறட்பாவை "நீத்தார் பெருமை" என்னும் பகுதியில்  எழுதியதால், 'அந்தணர்' என்னும் சொல் தொழில்முறையில் கோயில் பூசகர்களான தமிழ்ப் பார்ப்பனரைக் குறிக்கும் சொல் அன்று என்று உரக்க அறிவித்துவிட்டார் திருவள்ளுவர்.

தொழில்முறை அந்தணர்கள் காசு பெற்றுக்கொண்டு, காரியம் செய்பவர்கள் என்பதால், அவர்களுக்கு 'நீத்தார் பெருமை' ஒருக்காலும் கிடையாது.

தமிழ்ப் பார்ப்பனர்களில் சிலர் அந்தணர்களாக இருக்கலாம்; ஆனால், எக்குலத்தில் பிறந்திருந்தாலும், செந்தண்மை பூண்டொழுகும் அறவோர் அனைவரும் அந்தணரே என்பதால், அந்தணர்கள் அனைவரும் தமிழ்ப் பார்ப்பனர்கள் இல்லை என்பதை 'நீத்தார் பெருமை'யில் பட்டியலிடப்பட்ட இக்குறள் பொட்டில் அடித்தாற்போல் தெறிக்கச் சொல்கின்றது.

ஆரியச் சார்புகொண்ட பரிமேலழகர்

இவ்வளவு இருந்தும், ஆரியச் சார்புகொண்ட பரிமேலழகர் போன்ற உரையாசிரியர்கள் பலரும், அந்தணர்களையே அறவோர்கள் என்று திருவள்ளுவர் குறிப்பிடுவதாகவும், செவ்விய அறங்களையும், நற்பண்புகளையும் கொண்டு ஒழுகுவதால் அவர்கள் அறவோர்களாக இருப்பதாகவும் வலிந்து எழுதினார்கள்.

ஒரு இனத்தின் பெயராகவும், பிறப்பினை அடிப்படையாகவும் கொண்ட 'பிராமணர்' (அந்தணர்) என்னும் ஆரிய மரபுச் சொல்லைத் திருக்குறள் எங்கும் கவனமாகத் தவிர்த்துவிட்ட திருவள்ளுவர், பிறப்பின் அடிப்படையில் 'பிராமண'ன்' ஆகும் மனுதரும சாத்திரத்தை பின்வரும் குறளில் வலிமையாக மறுக்கின்றார்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்  - திருக்குறள்: 972

என்னும் இத்திருக்குறள் பிறப்பின் அடிப்படையில் 'அந்தண'ராகும் ஆரிய மரபைத் தூக்கிப் போட்டுத் தூள் தூளாக உடைத்து எறிகின்றது.

இதற்கு அடுத்த குறள் திருவள்ளுவரின் இந்நிலைப்பாட்டை இன்னும் கெட்டிப்படுத்துகின்றது.

மேல்இருந்தும் மேல்அல்லார் மேல்அல்லர் கீழ்இருந்தும்

கீழ்அல்லார் கீழ் அல்லவர். - குறள்:973

'பிராமணன் பிறப்பில் மூடனாக இருந்தாலும் பூஜிக்கத்தக்கவன்' என்ற மனுதருமத்தின் பிரகடனத்தைக் கடலில் தூக்கி எறிகின்றது திருவள்ளுவரின் திருக்குறள் 973.

மேல்சாதி உச்சத்தில் உள்ள பிராமணன் ஒழுக்கமும் உயர்ந்த பண்பும் இல்லாதவனானால் அவன் மேலோன் அல்லன் என்னும் பொருளில் சொல்லப்பட்ட இக்குறள் பிறப்பின் அடிப்படையில் அந்தணன் பதவியைத் தர மறுக்கின்றது.

பார்ப்பான் என்பவன் இருபிறப்பாளன்; முதல் பிறப்பு மனிதனின் குழந்தை; அவன் தமிழ் அறநெறியைக் கைக்கொண்டு, கொலைவேள்வி தவிர்த்த ஆரிய வேதம் ஓதுவதால் இரண்டாம் பிறப்பு எடுக்கும் தமிழ்ப் பார்ப்பனன். அறநெறியைக் கைக்கொள்வதால் அந்தணன்; கைக்கொண்ட அறநெறி ஒழுக்கத்துக்குப் புறம்பாகச் செயல்படும்போது பார்ப்பான் என்னும் இரண்டாவது பிறப்பின் ஒழுக்கம் குன்றி, பார்ப்பான் என்னும் தகுதியை முற்றிலுமாக இழக்கிறான் என்பதையே, 'ஓத்து மறப்பினும் (பின்)கொளலாகும்; ஒழுக்கம் குன்ற, பார்ப்பான்(என்னும்) பிறப்பு கெடும்' என்னும்  பின்வரும் குறள் எடுத்துக் காட்டுகிறது.

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். (134.ஒழுக்கமுடைமை)

 

உயிர்க்கொலை வேள்வியை புனிதமான வள்ளுவர் ஏற்கவில்லை

ஆரியப் பிராமணர் மறையோதி வேள்விகள் செய்வர்; வேதகாலப் பிராமணர்கள் வேள்விகளில் உயிர்ப்பலி கொடுத்து, உயிரினங்களின் குருதிகளையும், கொழுப்புக்களையும் ஆகுதியாக இட்டு, வேள்வித்தீயின் நாக்குகளைத் தூண்டி உயர்த்துவர். இப்பலி தந்து உயிர்க்கொலை செய்வதைப் புனிதமான வள்ளுவர் ஏற்கவில்லை;  பின்வரும் குறளில் அதைத் துச்சமாகத் தூக்கி எறிகின்றார்.

அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர்செகுத்து உண்ணாமை நன்று  -  குறள்:259

மேலும், எல்லா உயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகாமல்,  "வேள்விக்கொலையைச் சமயக் கடமையாக்கி, பிறப்பினால் மனிதர்களை நான்கு வருணங்களாகப் பிரித்து, நாலாம் வருணத்தில் பிறந்த அனைவரையும் அடிமைகளாக நடத்தும் ஆரியப்பிராமணர் எவரும் திருக்குறள் அறநெறியின்படி மனிதர் என்னும் தகுதியையே பெறமாட்டார்; எனவே, ஆரியப்பிராமணர் அந்தணரா என்ற கேள்வியே பொருளற்றது.

'அறம்' என்ற சொல்லே பழந்தமிழர் மரபு

'அறம்' என்ற சொல்லையே தமிழ் மக்களின் நடத்தைகளிளிருந்தே வள்ளுவர் உருவாக்குகிறார்; அறவழி பொதுநெறியும், பொது அறங்களும் முன்னிலைப்படுத்தப்பட்ட தமிழ்ப்பண்பாட்டு மீட்டுருவாக்கம் என்பதே திருக்குறளின் அடிநாதம். இப்பின்புலத்தில், தமிழ் அந்தணர்களின் வைதீக சமயத்தை அன்றைய தமிழ்ச் சமூகம் எவ்வாறு எதிர்கொண்டது என்பதையே திருக்குறளில் சில இடங்களில் திருவள்ளுவர் பதிவு செய்கிறார்; அவ்வளவே.

அறம் வேறு; வேதம் வேறு; வேதம் சொல்லும் தர்மம் வேறு. வேற்றுமொழி  - வேற்று இன மரபிலிருந்து உருவாவது அன்று அறம் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். ரிக்வேதம் உள்ளிட்ட வேதங்கள் அறநெறி பற்றிப் பேசுவதில்லை; கடவுளர்களைப் போற்றியுரைத்து, வேண்டிய அளவு உயிர்ப்பலி அவிர்ப்பாகம் கொடுத்து, வேண்டுவதும், சடங்குகள் செய்வதைப் பற்றிப் பேசுவதும்தான் வேதங்களின் பொதுவான தன்மை. திருக்குறள் அறநூல்; வேதங்களோ வேள்விக்கொலைகளை சமய முறையில் விளக்கும் ஆரியர்கள் மரபியல் நூல்.

தமிழகப் பார்ப்பனர்களோடு  ஆரியப்பிராமணர்கள்  கலக்கவில்லை

ஆனால்,  தமிழகத்தில் கோயில் பூசனை வழிபாடுகளை சங்ககாலம் தொட்டு இன்றுவரை இயற்றிவரும் தமிழகப் பார்ப்பனர்களான சிவன் கோயில் பூசகர்கள் சிவாச்சாரியார்களுடன், தமிழகத்துக்கு வந்தேறிய அந்நிய ஆரியப்பிராமணர்கள் மணவுறவு கொள்வதில்லை என்பதே தமிழகப் பார்ப்பனர்களோடு  ஆரியப்பிராமணர்கள்  கலக்கவில்லை என்பதற்கான சான்று.  ஆங்கிலத்தில்  "Brahmin" என்னும் பொதுக்குறியீடு வழங்கிவருவதால் தமிழகத்துக்கு வெளியே உள்ளோருக்கு இவ்வேறுபாடு தெரியாமலேயே போய்விட்டது.

தமிழகத்தில் வந்தேறிய அந்நிய ஆரியப்பிராமணர்களின் வடவேதம், ஆச்சார அனுஷ்டானங்களால் கவரப்பட்ட தமிழகப் பார்ப்பனர்கள் வேதமுறைமைகளுக்கு மாறிக்கொண்டார்கள். கி.பி. ஐந்து-ஆறாம் நூற்றாண்டுகளில், ஆரியப் பிராமணர்கள் தங்களையும் பார்ப்பனர்கள் என்று அழைக்கத் தொடங்கியதோடு, கோயில் பூசங்களிலும் ஈடுபட முயன்றனர்.

ஆனால், தமிழில் திருமந்திரம் என்னும் ஆகமநூல்-யோகநூல் அருளிய திருமூலர் உள்ளிட்ட நாயன்மார்களின் எதிர்ப்பால் அவர்கள் முயற்சி தோல்வியிலேயே முடிந்தது. தங்களைப் பார்ப்பனர்கள் என்று அழைத்துக்கொள்ளும் ஆரியப்பிராமணர்களை 'பேர்கொண்ட பார்ப்பான்' என்ற அடைமொழி கொடுத்து தமிழர்களுக்கும், தமிழக மன்னர்களுக்கும் அடையாளம் காட்டியதோடு, பேர்கொண்ட பார்ப்பான் திருக்கோயிலில் வீற்றிருக்கும் சிவபிரானைத் தொட்டு, அர்ச்சித்து வழிபட்டால், பகைவர்களிடம் போர்செய்து நாட்டைக் காக்கும் வேந்தர்களுக்குப் பொல்லாத வியாதிவரும்; அவர் ஆளும் நாட்டில் பஞ்சம் ஏற்படும் என்று நந்தியம்பெருமான் உரைப்பதாக அறிவிக்கின்றார். இப்பொருள் கொண்ட திருமந்திரம் இங்கு தரப்படுள்ளது: (http://www.tamilvu.org/slet/l41A0/l4170uri.jsp?song_no=503&book_id=118&head_id=67&sub_id=2419)

பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தால்

போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்

பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமு மாம்என்றே

சீர்கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே - திருமந்திரம்:502.

திருமூலர் இத்துடன் முடிக்கவில்லை; இன்னும் தெளிவாக, 'பிராமணர்' என்ற சொல் கொண்டே தமிழகம் வந்தேறிய ஆரியப்பிராமணர்களின் உண்மை நிறத்தை இன்னும் தெளிவாகப் பின்வரும் திருமந்திரத்தில் உரித்துத் தொங்கவிடுகின்றார்: (http://www.tamilvu.org/slet/l41A0/l4170uri.jsp?song_no=82&book_id=118&head_id=67&sub_id=2375)

சத்தியம் இன்றித் தனிஞானந் தானின்றி

ஒத்த விடையம் விட்டோரும் உணர்வின்றிப்

பத்தியும் இன்றிப் பரன்உண்மை யின்றிப்

பித்தேறும் மூடர் பிராமணர் தாமன்றே - திருமந்திரம்:81.

தங்களையும் பார்ப்பனர்கள், அந்தணர்கள் என்று அழைத்துக்கொண்டு, பூணூலும், குடுமியும் வைத்துக்கொண்டால் பிரமத்தை அறிந்தவர்களாக ஆகிவிடமாட்டார்கள்; நூலை அறிந்த அந்தணர் என்பதை அறிவிப்பது அவர் வாய்ச்சொல்லே என்று அந்தணர் வேடமிடுவோரைப் பின்வரும் திருமந்திரத்தில் கடுமையாகச் சாடுகின்றார் திருமூலர்.

நூலும் சிகையும் நுவலிற் பிரமமோ

நூலது கார்ப்பாசம் நுண்சிகை கேசமாம்

நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்

நூலுடை அந்தணர் காணும் நுவலிலே.  திருமந்திரம் - 230

அலங்கரித்துக் கொள்வதால் அந்தணன் ஆகமுடியாது. அறிந்தவனே அந்தணன். பிராமணன் மூடனாக இருந்தாலும் வணங்கப்படவேண்டும் என்ற மனுதர்ம விதியைக் குப்பையில் கொட்டுகின்றார் திருமூலர்.

'முப்பொருள் நாட்டும் தமிழ்மறை முடிவாம் வேதாந்தம் கேட்க அயற்புல மாந்தராம் (ஆரிய) வேதியர் விரும்பினர். வேதாந்தத்தைக் கேட்டும் நெடுநாள் நிலையாகச் செய்துவரும் கொலைபுலை வேள்வியினை விட்டொழியார். உண்மை வேதாந்தமென்பது தன்னைச் சிவனுக்கு அடிமையெனக் கொண்டு அவன் அருள்வழி நிற்பதே வேட்கையாய்த் தனக்கென ஒரு சிறிதும் எவ்வகை வேட்கையும் இலனாயிருத்தல். வேட்கை அகன்ற இடமே வேதாந்தங் கேட்டுப் பயனடைதற்குரிய நயன்சேர் தகுதியிடமாகும். அந் நிலையில் வேதாந்தம் கேட்டவர் வேட்கைவிட்ட சிவநாட்டமுற்ற விழுமியோராவர். கொலைபுலை வேள்வியால் எய்தும் பயன் நிலையிலாச் சிறுபயனும் பாவ வாயிலுமாகும்.'

http://www.tamilvu.org/slet/l4100/l4100pd2.jsp?bookid=118&pno=33

வேதாந்தங் கேட்க விரும்பிய வேதியர்

வேதாந்தங் கேட்டுந்தம் வேட்கை ஒழிந்திலர்

வேதாந்த மாவது வேட்கை ஒழிந்திடம்

வேதாந்தங் கேட்டவர் வேட்கைவிட் டாரே. திருமந்திரம் - 79.

பாரத நாட்டின் புகுந்த மேலை ஆரிய அன்னியர்களான ஆங்கிலேயர்கள்  பிரித்தாளும் சூட்சியில் பல ஊகக் கோட்பாடுகளைப் பரப்பியதைப் போலவே, தமிழ்நாட்டில் பன்னெடுங்காலத்திற்கு முன் புகுந்த அந்நியர்களான ஆரியப் பிராமணர்கள், தமிழர்களைப் பிரித்தாளும் சூட்சியில் பரப்பிய பல ஊகக் கோட்பாடுகளில் மிகுந்த நச்சுத்தன்மை கொண்ட சாதி என்னும் கோட்பாடு வடஇந்தியாவில் நிலவும் வருணாசிரம நால் வருணத்தைப் போலவே கொடியதாகும்.

தமிழர்களின் வழிபாட்டுத் தெய்வங்களான சிவனியம், திருமாலியம் ஆகியவற்றுக்கு ஆரியர்கள் புனைந்த தலபுராணங்கள், புனைபுராணங்கள் பலவற்றிலும் தமிழர்தம் பண்பாட்டுக்கும், அறத்திற்கும் ஊறுவிளைவிக்கும் கதைகளே மிகுதி. ஆரியர்களின் அடிவருடிகளாக மாறிவிட்ட தமிழப் புலவர்கள் பலரும் மேலும் பல தீங்குகளையே விளைவித்தனர்.

அந்தணர் நூலும் மன்னவன் கோலும்

'அந்தணர் என்போர் அறவோர்' என்பதால் 'அறம்' என்னும் தகுதியே வள்ளுவரின் அளவுகோல்; பிறப்பு அன்று. வேள்வித் தொழிலில் 'உயிர் செகுத்தல்(கொல்லுதல்) இன்றி, எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகும் பண்பு இருப்பவரே அந்தணர்; வைதீக நெறியைத் திருவள்ளுவர் இவ்வாறே எதிர்கொள்ளுகிறார். அதனாலேயே திருக்குறளில் கடவுளும் 'அறவாழி அந்தணன்' ஆகின்றான்.

தமிழகத்தில் வந்தேறிய ஆரியப் பிராமணரின் 'உயிர்ப்பலி' வேதநூலைத் தமிழ்ப் பார்ப்பனர்கள், உயிர்ப்பலி நீக்கிக் கைக்கொண்டு விட்டார்கள்; ஆயினும், திருவள்ளுவர் வேதம், மறை என்பவற்றைப் பொதுவழக்காகக் குறிப்பிடவில்லை; தனிநிலையில், அந்தணர் நூல், அறுதொழிலோர் நூல், பார்ப்பனர் ஓத்து என்று குறிப்பிடுகின்றார். எனவே,  பார்ப்பன அந்தணர்களுக்கு நூல் இதுவன்றி வேறில்லை. பார்ப்பனர் அல்லாத தூய தமிழர்க்கு கொல்லாமையை முதன்மையாகக் கொண்ட அறமே உரியது.

தமிழ் பார்ப்பன அந்தணர்கள் 'உயிர் செகுப்பதை' நீக்கிவிட்டுக் கைக்கொண்ட ஆரிய வேத நூற்கள், இரத்தக் கரை படிந்தவை என்பதால், வைதீக அந்தணரின் வேத நூலையும்,  அறத்தையும் தனித்தனியாகவே, வேறு வேறாகவே வைத்தே பின்வரும் திருக்குறளைப் படைக்கிறார்:

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்

நின்றது மன்னவன் கோல். (543-செங்கோன்மை)

வள்ளுவத்தில் 'அறம்' என்னும் கருத்தியல் வாழ்வின் குறிக்கோள்; சமூக-அரசியலையும் அறம் சார்ந்தே கட்டமைக்கிறது திருக்குறள். தனிமனிதன் என்னும் நிலையில் 'மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்' என்று வரையறுக்கும் திருக்குறள், இல்லறவாழ்வை 'அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை' என்கின்றது. 'செய்க பொருளை' என்று கட்டளையிடும் பொருளியல் வாழ்க்கையை 'தீதின்று வந்த பொருள் அறன் ஈனும், இன்பமும் ஈனும்' என்று விளக்குகிறது.

ஆரிய வேதத்திற்கும் ஆதி தமிழ் மன்னவன் கோல்!

மன்னன் அமைக்கும் அரசு 'அறன்இழுக்காது அல்லவை நீக்கி, மானமுடையதாக' அமையவேண்டும் என்று கட்டளையிடுகிறது திருக்குறள். 'அறநெறி முதற்றே அரசின் கொற்றம்' என்று புறநானூறு முழங்குகின்றது. திருக்குறள் வலியுறுத்தும் 'அறம்' என்னும் சொல்லின் புனிதத்தைக் காக்கவே 'அந்தணர் நூலை'யும் 'அறத்தையும்' வேறு வேறாகவே காட்டுகின்றார் திருவள்ளுவர்.

மனுதரும ஆரிய மரபின்படி, வேத நூல் தானே தோன்றியது(சுயம்புவானது). மனிதனால் செய்யப்படாதது (அபௌருஷ்ய). ஆதியில் இருப்பது;சக்தி வாய்ந்தது.

"வேத சாஸ்திரமானது சுயம்புவேயல்லாது, ஒருவரால் செய்யப்பட்டதன்று... அநாதியான வேதசாஸ்திரமானது, ஜங்கம ஸ்தாவர ரூபமான சகல பூதங்களையும் காப்பாற்றுகிறது' - மனுசாஸ்திரம்:12வது அத்தியாயம்.

இதற்கு முற்றிலும் மாறாக, அந்தணர் நூலுக்கு மன்னவன் கோலே ஆதி என்று முழங்குகின்றது திருக்குறள். இதன் மூலம், வேதத்தையும், 'அது சுயம்புவானது, அதுவே சகலத்தையும் காப்பாற்றுகிறது' என்ற மனுதருமக் கருத்தியலைத் திருக்குறள் மறுக்கின்றது.

அரசு-அதிகாரம் என்னும் தமிழக சூழலுக்கு வந்துவிட்டால், அறவழிப்பட்ட மன்னவன் கோலே அந்தணர் நூலுக்கும், அறத்திற்கும் ஆதியாகிறது. மனுசாஸ்திரம் காலாவதியாகிறது. இந்நிலையை கெட்டியாக உறுதிசெய்யும் மற்றொரு குறள்:

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்

காவலன் காவான் எனின். (குறள்:560 கொடுங்கோன்மை)   

ஆரியர்கள் நாட்டில் மனுசாஸ்திரம் கோலோச்சட்டும். தமிழ்மண் என்று வந்துவிட்டால், இங்குள்ள அறவழிப்பட்ட அரசு என்னும் நிறுவனத்தின் அதிகார மேலாண்மையை ஆதியாகக் கொண்டே வேதநூல்  இயங்க முடியும். அப்படி, காவலனாம் மன்னவன் ஆதியாய் நின்று காவான் எனின், ஆபயன் குன்றும், அறுதொழிலோர் நூல்மறப்பர்' என்பதே திருக்குறளின் நிலைப்பாடு. தமிழ் மண்ணில், சகல பூதங்களையும் காப்பாற்றும் சக்தி வேதத்துக்கு வழங்கப்படவில்லை; அறவழிப்பட்ட மன்னவனின் கோலே அந்தணர் நூலான வேதத்தையும் காப்பாற்ற முடியும்; அறத்தையும் காப்பாற்ற முடியும் என்று உரக்கச் சொல்கின்றது திருக்குறள்.  

தமிழகம் என்று வந்துவிட்டால், அந்தணர்கள், ஆரிய வேதநூலில் குறிப்பிட்டபடி, உயிர்க்கொலை வேள்விகள் செய்ய மாட்டார்கள்; தமிழக அந்தணர்கள் மன்னவன் கோலை ஆதியாய்க் கொண்ட 'அறம் புரி அந்தணர்' ஆவார். இங்கு, உயிர்க்கொலை வேள்வி செய்யும் ஆரியப் பிராமணனுக்கு அநுமதி இல்லை என்கிறது பதிற்றுப் பத்து பாடல்.

“ஓதல் வேட்டல் அவை பிறர்ச் செய்தல்.

ஈதல் ஏற்றல் என்று ஆறு புரிந்தொழுகும்.

அறம் புரி அந்தணர்” – பதிற்றுப்பத்து 24.   

தேவப்பிரியா அவர்களின் மீதமுள்ள பின்னூட்டத்திற்கான பதில் மூன்றாம் பகுதியாக வெளியிடப்படும்.

 

வெள்ளம் போல் தமிழர் கூட்டம்! வீரங்கொள் கூட்டம்!  அன்னார்

உள்ளத்தால் ஒருவரே! மற் றுடலினால் பலராய்க் காண்பார்!

கள்ளத்தால் நெருங்கொணாதே எனவையம் கலங்கக் கண்டு

துள்ளும் நாள் எந்நாளோ! - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்!

 

குறளறம் தொடர்ந்து பேசுவோம்!

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


 • Topics

 • Posts

  • ப‌ச்சை த‌ண்ணீர‌ முக‌த்துக்கு ஊத்த‌னா தான் அவ‌ர் விழிப்ப‌டைவார் தாத்தா😁😉 / இனி தான் உல‌க‌மே எதிர் பார்த்து இருக்கும் பினேல் ம‌ச் ந‌ட‌க்க‌ போகுது /  பெரும் பாலும் இந்தியா தான் கோப்பையை தூக்கும் என்று கிரிக்கெட் விம‌ர்ச‌க‌ர்க‌ள் சொல்லுகிறார்க‌ள் 😁😉 /  இத்துட‌ன் காமெடி செய்தி முடிவ‌டைகிறேன் , ந‌ன்றி வ‌ண‌க்க‌ம் 😜 /
  • நோய்த்தடுப்பு மருந்துகளை குறிப்பிட்ட வெப்பநிலையில் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இல்லாவிட்டால் அதன் வீரியம் குறையும், சிகிச்சை பலனளிக்காமலும் போகும். எனவே, குளிர்சாதன வசதி என்பது சில மருந்துகளுக்கு தவிர்க்க முடியாத தேவையாக உள்ளது. இதற்கு மாற்றுவழியாக ஜெல் ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இது மக்கள் பயன்பாட்டுக்கு வர தயாராகவும் உள்ளது.குளிர்சாதன பெட்டி வசதியில்லாத இடங்களிலும், பயணங்களிலும் தடுப்பு மருந்துகளை பாதுகாப்பாக  வைத்திருக்கக்கூடிய புதிய ஜெல் ஒன்றினை தற்போது கண்டுபிடித்திருக்கிறது அமெரிக்காவின் மெக்மாஸ்டர் வேதி பொறியாளர்களின் குழு.மலைப்பிரதேசங்கள், காட்டுப்பகுதிகள், புறநகர் சிற்றூர்கள் போன்ற போக்குவரத்து வசதிகள் குறைவாக உள்ள பகுதிகளில் நோய் பரவினால், அந்த இடங்களுக்கு தடுப்பு மருந்துகளை குளிர்சாதன வசதியுடன் பாதுகாப்பாக கொண்டு சேர்ப்பது எப்போதும் சவால் நிறைந்த ஒன்றாகவே இருக்கிறது. குறிப்பாக பலவகை தடுப்பு மருந்துகள் 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பராமரிக்க வேண்டிய சூழல் இருப்பதே இதற்குக் காரணம். தற்போது இதற்கு சிறந்த மாற்று வசதியாக உள்ள ஒரு புதிய வகை ஜெல்லினை பழங்கள் மற்றும் காய்கறிகளிலிருந்து  உருவாக்கியிருக்கிறது இந்த பொறியாளர்கள் குழு. இந்த ஜெல் குளிர்சாதன பெட்டி இல்லாத சூழலிலும், 40 டிகிரி செல்சியஸ் (104 டிகிரி பாரன்ஹீட்) வெப்பம் நிலவும் இடங்களிலும் மருந்துகளுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்குகிறது. மேலும் இந்த கடும் வெப்பநிலையிலும் 8 வாரங்களுக்கு மருந்துகளை கிருமித் தொற்று ஏற்படாமலும், அதன் தரம் தாழ்ந்துவிடாமலும் காப்பாற்றுகிறது.   எபோலா, ஜிகா, இன்ஃபுளுயென்ஸா போன்ற கடுமையான நோய்களுக்கான மருந்துகளை பத்திரமாக எடுத்துச் சென்று கட்டுப்படுத்த இந்த தடுப்பு ஜெல் மிகவும் உதவியாக இருக்கப்போகிறது. இந்த புதிய ஜெல்லுக்கு அமெரிக்க உணவு மருந்து கட்டுப்பாட்டுக் கழகமும் அங்கீகாரம் வழங்கியுள்ளது. எனவே, இந்த ஜெல் விரைவில் பயன்பாட்டுக்கு வரவிருப்பது மகிழ்ச்சியான செய்தி.   http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=7257
  • சரவண பவன்’ ராஜகோபால் காலமானார் உலக அளவில் பல கிளைகளை கொண்ட சரவணபவன் ஹோட்டல் குழுமத்தின் அதிபர் ராஜகோபால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 71. உடல்நலக்குறைவுக்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவருக்கு ஒரு கொலைக்குற்றம் தொடர்பாக ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. 2009-ஆம் ஆண்டு இந்த வழக்கு தொடர்பாக அவருக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், சிறை செல்வதற்கு எதிராக அவர் கடுமையாக போராடி வந்தார். கடந்த ஜூலை 9-ஆம் தேதியன்று மருத்துவ காரணங்களை மேற்கோள்காட்டி சிறை செல்வதை தவிர்க்க அவர் நீதிமன்றத்தில் விண்ணப்பித்தார். ஆனால், அந்த மனு நிராகரிக்கப்பட்டது. சரவணபவன் ஹோட்டல் குழுமத்துக்கு உலகெங்கிலும் 80-க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளது. நியூ யார்க், லண்டன், சிட்னி போன்ற பெரு நகரங்களிலும் இந்த ஹோட்டலுக்கு கிளைகள் உள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் இந்த குழுமத்தில் பணிபுரிகின்றனர். ஜோதிடர் ஒருவரின் ஆலோசனை பேரில் தனது பணியாளர்களில் ஒருவரின் மனைவியை திருமணம் செய்துகொள்ள அவர் விரும்பியதாக கூறப்பட்டது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES கடந்த 2001-இல் இப்பெண்ணின் கணவர் காணாமல்போன நிலையில், அதுகுறித்து அப்பெண் போலீஸில் புகார் செய்தார். பின்னர் காட்டுப்பகுதி ஒன்றில் அந்த பெண்ணின் கணவர் உடல் கண்டெடுக்கப்பட்டது. 2003-ஆம் ஆண்டில் அந்த பெண் மற்றும் அவரது குடும்பத்தை அச்சுறுத்தியதாக ராஜகோபால் மீது குற்றம்சாட்டப்பட்டது. 2004-ஆம் ஆண்டில் ராஜகோபாலுக்கு உள்ளூர் நீதிமன்றம் ஒன்று 10 ஆண்டுகள் தண்டனை விதித்தது. இந்த தண்டனையை ஆயுள் தண்டனையாக 2009-இல் உயர் நீதிமன்றம் அதிகரித்தது. கடந்த மார்ச் மாதத்தில் இந்த தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. https://www.bbc.com/tamil/india-49027217
  • ஈழப்பிரியன் அண்ணா!  மேசையையும் ,லாச்சியையைம் வடிவா பாருங்கோ  .கட்டுக்கட்டாக  அனுப்பினால்தான்  கிடைக்கும். 
  • தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபா வழங்குவதில் இழுபறி தோட்டத்தொழிலாளர்களுக்கு 50ரூபா வழங்க திறைசேரியினால் தெரிவிக்கப்பட்ட 600 மில்லியன் ரூபாவை தருவதாக எழுத்து மூலம் அறிவித்தால் தேயிலை சபையினால் வாக்குறுதியளித்த  600 மில்லியனையும் விடுவிக்க தயார் என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். அத்துடன் இந்த அதிகரிப்பை தொழிலாளர்களின் சம்பளத்துடன் இணைப்பது பிரச்சினையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். இலங்கை தேயிலை சபையில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/60687