Sign in to follow this  
நவீனன்

காலமெல்லாம் கண்ணதாசன்

Recommended Posts

காலமெல்லாம் கண்ணதாசன்- ஆர்.சி.மதிராஜ்


 

 

திரைப்பாடல்களில் எப்போதும் பட்டொளி வீசிப் பறப்பது கவியரசு கண்ணதாசன் கொடி. அவரின் நிழலில் நாம் ஆறுதல் பெறலாம். அமைதியுறலாம். காதலிக்கலாம். கண்ணீர் உகுக்கலாம்.

கவிஞரின் ஒவ்வொரு பாடல் வரியிலும் ஒரு கதை இருக்கும். கதைக்குள் ஒரு வாழ்க்கை இருக்கும். வாழ்க்கைக்குள் நாம் இருப்போம். நமக்காக, நம்மைப் பற்றி எழுதப்பட்டவை கண்ணதாசனின் பாடல்கள்.

 

பிறப்பு, வளர்ப்பு, சடங்கு, சம்பிரதாயம், காதல், காமம், திருமணம், சிக்கல், பிரச்சினை, வாழ்க்கை, உறவு, பிரிவு, வெறுப்பு, அமைதி, தத்துவம், மரணம் என்று அவர் தொடாத எல்லை, இல்லை!

ஒரு படைப்பு, நம் ஆன்மாவைத் தொடவேண்டும். கவியரசு கண்ணதாசனின் பாடல்கள் நம் ஆன்மாவை வருடிவிடுபவை. நம் ஆன்மாவுக்குள் ஓயாது அடித்து அலைக்கழிக்கும் அலையும் அவரே. நம் ஆன்மாவுக்குள் அமைதியை நிலவச்செய்யும் ஆழ்கடலும் அவரே.

நான் ரசித்த, சிலிர்த்த  கவியரசரின் பாடல்களுக்குள், நான் அடைந்த ஆறுதலுக்குள், நான் பெற்ற அமைதிக்குள் உங்களையும் கூட்டிச்செல்லவேண்டும் என்று ஆசைப்பட்டதன் விளைவே இந்தப் பயணம். கண்ணதாசன் எனும் தேர், வலம் வந்த வீதிகளில்... எனது நடைவண்டிப் பயணம் இது.

வாருங்கள் கவியரசரின் சுண்டுவிரல் பிடித்து... அவருக்குள்ளேயே நுழைவோம். 

1520075029.jpg

பாடல்        : கண்ணே கலைமானே

படம்        : மூன்றாம் பிறை

இசை        : இளையராஜா

குரல்        : ஜேசுதாஸ்

இயக்கம்    : பாலுமகேந்திரா

 

கவிஞரின் கடைசிப்பாடலாக அமைந்த பெருமை பெற்றது `கண்ணே கலைமானே' பாடல். கவியரசரின் கடைசிக் காலடிச் சுவட்டில் பிஞ்சுப் பாதம் பதித்து, திரும்ப அவருக்குள் நடந்துபார்க்கும் சுகம் அலாதியானது.

------------------------------

பல்லவி

 

கண்ணே கலைமானே

கன்னி மயிலென

கண்டேன் உனை நானே

அந்தி பகல் உனை நான் பார்க்கிறேன்

ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்

 

ராரிரரோ...ஓ..ராரிரோ...

ராரிரரோ...ஓ..ராரிரோ...

 

சரணம் 1

 

ஊமை என்றால் ஒரு வகை அமைதி

ஏழை என்றால் அதிலொரு அமைதி

நீயோ கிளி பேடு - பண்பாடும்

ஆனந்தக் குயில் பேடு

 

ஏனோ தெய்வம் சதி செய்தது

பேதை போல விதி செய்தது

 

சரணம் 2

 

காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்

கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்

உனக்கே உயிரானேன்  - எந்நாளும்

எனை நீ மறவாதே

 

நீ இல்லாமல் எது நிம்மதி

நீதான் என்றும் என் சந்நிதி

 

------------------------------

 

நாயகனிடம் ஒரு பொம்மை கிடைக்கிறது. உயிருள்ள பொம்மை. குழந்தை மனதுடன் குமரிப்பெண் வடிவில் அவன் கைகளில் தஞ்சமடையும் பொம்மை.

 

யாருமற்ற அவனுக்கு, அவளே எல்லாமுமாக இருக்கிறாள். குழந்தையாக, குறும்பாக, காதலாக, கண்ணீராக... அவளைத் தன் சிறகுகளுக்குள் ஒரு பொக்கிஷம்போல பொத்தி வைத்துக்கொள்கிறான் நாயகன். இரவும் பகலுமாய் அவளைப் பார்த்துக்கொள்கிறான். இறைவனிடமும் இதையே வேண்டிக்கொள்கிறான். 

 

குழந்தைகளை, குறிப்பாகப் பெண் குழந்தைகளை, குழந்தைகளாகக்கூடப் பார்க்கத்தெரியாத நஞ்சு கலந்த இன்றைய சமூகத்திற்கு மிக மிக அவசியமான ஒரு பாடலை அள்ளித்தந்திருக்கிறார் கவியரசர். 

அந்தக் காட்சியில் ஒலிப்பது, தாலாட்டுப்பாடலா என்றால், ஆமாம், தாலாட்டுப்பாடல்தான். காதல் பாடலா என்றால் ஆமாம்...  காதல் பாடல்தான். அமைதி வேண்டும் நெஞ்சுக்கு ஆறுதல் சொல்லும் பாடலா என்றால்,  இதிலென்ன சந்தேகம்... அதுவேதான்.

காதலியாய் இருக்கும் குழந்தைக்காக பாடுவது போல முதல் சரணத்திலும் இரண்டாவது சரணத்தில் குழந்தை மனம் கொண்ட காதலியிடம் சொல்வது போலவும், அத்தனை நுட்பமாய் எழுதியிருக்கும் கவியரசரின் திறன் சொல்லுக்குள் அடங்காதது.

 

        ஊமை என்றால் ஒரு வகை அமைதி

        ஏழை என்றால் அதிலொரு அமைதி

        நீயோ கிளிப் பேடு - பண்பாடும்

        ஆனந்தக் குயில் பேடு

        ஏனோ தெய்வம் சதி செய்தது

        பேதை போல விதி செய்தது

 

ஊமை என்பதை ஊனத்தைச் சொல்வதாக அல்லாமல், சொல்லற்று, நினைவுகளற்று, உயரத்திலிருக்கும் ஒரு பறவை தன் சிறகசைப்பை நிறுத்தி சற்றே அந்தரத்தில் மிதக்குமே... அப்படி ஓர் அமைதி... அப்படிப்பட்ட ஒரு நிலையில்தான் நாயகனும் நாயகியும் இருக்கின்றனர்.

பேடு என்ற சொல்லுக்கு அர்த்தம், ஆணுமல்லாத பெண்ணுமல்லாத மூன்றாம் பாலினம் என்கிறது அகராதி. ஆனால் குழந்தையாகவும் இல்லாமல் குமரியாகவும் இல்லாமல் இரண்டுக்கும் இடையில் சிக்கித்தவிக்கும் நாயகியைக் குறிப்பிட கிளிப்பேடு, குயில்பேடு என்று அர்த்தம் கொள்ளலாம். அதிலும் சிறகுகள் முளைக்காத, பறக்கத் தெரியாத ஒரு கிளிக்குஞ்சுபோல் நாயகி இருக்கிறாள்.

1520074650.jpg

பெண்களின் ஏழு நிலைகளில் முதல் நிலை பேதை. கள்ளம் கபடமற்ற குழந்தைமை பொங்கும் முதல் நிலை.  இப்படி அவளைப்  பேதையாக்கி வைத்திருக்கும் தெய்வத்தின் சதி, ஏனென்று தெரியாமல் புலம்பும் நாயகனின் நிலை நம்மையும் உடைத்துப்போடுகிறது.

பார்த்துப் பார்த்து வளர்க்கும் குழந்தையிடமும், பார்த்துப் பார்த்து வளர்த்த காதலியிடமும் மனசு எதிர்பார்ப்பது ஒன்றைத்தான். அவர்கள் நம்முடனேயே இருக்கவேண்டும். எப்போதும் நம் அரவணைப்பில் நாம் அவர்களைப் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும். சிறகுகள் முளைத்தபின்னும் நம்மை விட்டுப் பறந்துவிடக்கூடாது. நாம் ஒருபோதும் பிரிந்துவிடக்கூடாது. வளர்த்த அன்பை மறந்துவிடக்கூடாது. அணைத்த கைகளை உதறிவிடக்கூடாது. எவரின் மனம்தான் பிரிவை விரும்பும்? அதுவும், பிடித்தவரின் பிரிவை?

குழந்தை மனம் கொண்ட நாயகி, ஐந்து வயது வரைக்குமான நினைவுகளிலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறாள். அதற்குப் பின்பான அவளது மனம் சுத்தமாக அழிக்கப்பட்ட சிலேட்டு போல் நினைவுகள் துடைக்கப்பட்டிருக்கிறது. எப்போதேனும் அவளுக்கு நினைவு திரும்பினாலும் இந்த என் நேசத்தை அவள் மறந்துவிடக்கூடாது என்பது நம்முடையதைப்போலவே நாயகனின் பிரார்த்தனையாகவும் இருக்கிறது.

 

        உனக்கே உயிரானேன்  - எந்நாளும்

        எனை நீ மறவாதே

        நீ இல்லாமல் எது நிம்மதி

        நீதான் என்றும் என் சந்நிதி

 

என்கிற நான்கு வரிகளுக்குள் நாயகனின் ஒட்டுமொத்தக் காதலையும் நம்மால் உணர்ந்துவிட முடிகிறது. 

கவிஞரின் வரிகளுக்கு வழிவிட்டும், நம்முன் வழியவிட்டும், பின்னணி இசையில் பாந்தமாய் உடன்வரும் இசைஞானியின் இசை, பாடலின் அடிநாதம். பாடல் முடிந்தபின்னும், ராரிராரோ.... ஓ.. ராரிராரோ...  என்று நம் செவிகளில் ஒலித்துக்கொண்டேயிருக்கும் ஜேசுதாஸின் குரல், பாடலின் உயிர்நாதம். இது காதலுக்கு மட்டுமின்றி அன்புக்கான வேதம். 

சமீபத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவி இந்தப் படத்தில் கதை நாயகியாகவே வாழ்ந்திருப்பார். `ஏனோ தெய்வம் சதி செய்தது, பேதை போல விதி செய்தது' என்ற வரிகள் அவரது அஞ்சலிக்காக பலராலும் எடுத்துக்காட்டப்பட்ட வரிகள். ஒரு தாலாட்டுப்பாடலே அப்படத்தின் நாயகிக்கு அஞ்சலிப்பாடலாகவும் அமைவதெல்லாம் வரமன்றி வேறென்ன?

 

- பயணிப்போம்

https://www.kamadenu.in/news/series/378-rc-mathiraj-new-series-kalamellam-kannadasan.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

காலமெல்லாம் கண்ணதாசன்! 2:


 

 

 

 

படம்         : சூரியகாந்தி

இசை         : எம்.எஸ்.விஸ்வநாதன்

 

பாடியவர்     : டி.எம்.சௌந்தர்ராஜன்

-------------------------------------------------------

பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது

கருடா சௌக்யமா

யாரும் இருக்குமிடத்தில் இருந்து கொண்டால்

எல்லாம் சௌக்யமே

கருடன் சொன்னது

அதில் அர்த்தம் உள்ளது

 

உயர்ந்த இடத்தில் இருக்கும்போது

உலகம் உன்னை மதிக்கும் - உன்

நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்

நிழலும்கூட மிதிக்கும்

மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று

மானமுள்ள மனிதனுக்கு ஒளவை சொன்னது

அது ஒளவை சொன்னது

அதில் அர்த்தம் உள்ளது

 

வண்டி ஓட சக்கரங்கள்

இரண்டு மட்டும் வேண்டும் - அந்த

இரண்டில் ஒன்று சிறியதென்றால்

எந்த வண்டி ஓடும்

உனைப் போலே அளவோடு உறவாட வேண்டும்

உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் உறவு கொள்வது

அது சிறுமை என்பது

அதில் அர்த்தம் உள்ளது

 

நீயும் நானும் சேர்ந்திருந்தோம்

நிலவு வானம் போலே - நான்

நிலவு போல தேய்ந்து வந்தேன்

நீ வளர்ந்ததாலே

என் உள்ளம் எனைப் பார்த்து கேலி செய்யும்போது

இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதி ஏது

இது கணவன் சொன்னது

இதில் அர்த்தம் உள்ளது

-------------------------------------------------------

கருடனுக்கும் பாம்புக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். ஒன்றுக்கொன்று ஆகாது. ஆனால் வாழ்க்கைதான் விசித்திரம் நிறைந்ததாயிற்றே. அது எப்போதும் கருடனையும் பாம்பையும் ஒரே வீட்டில் ஒன்றாக வாழச்சொல்லும். வாழச் செய்யும். ஒரே அலுவலகத்தில் ஒன்றாக வேலை பார்க்க வைக்கும். குறைந்த பட்சம் ஒரு நாளில் ஓரிரு முறையேனும் நேருக்கு நேர் சந்திக்க வைக்கும்.

ஒரு பாம்பு இன்னொரு பாம்பைப் பார்த்து ``என்னப்பா நல்லாருக்கியா?'' என்று கேட்பதற்கும், ஒரு பாம்பு கருடனைப் பார்த்து ``சௌக்யமா?'' என்று கேட்பதற்குமான ஒலிக்குறிப்பில்தான் எத்தனை வேறுபாடுகள் இருக்கின்றன.

யானை படுத்துவிட்டால் எலி ஏறி விளையாடும் என்பார்கள். நோய்மைப்பட்டு படுத்திருக்கும் யானையிடம்தான் எலிகளின் தைரியம் எடுபடும். அந்தத் தைரியத்தில் அது செய்யும் எள்ளல், நோய்மையைவிடக் கொடுமையானது.

1520576265.jpg

நம் ஒவ்வொருவருக்குள்ளும், நாம்தான் யானை என்கிற எண்ணம் எப்போதும் இருக்கும். ஆனால் யானைக்கும் அடி சறுக்குமாயிற்றே... எலிகளின் கொண்டாட்டத்திற்கு கேட்கவா வேண்டும்?

பெண்கள் உயர்வதை விரும்பும் ஆண்கள், அவள் தன் மேலதிகாரியாகவோ தன்னை விட உயர்ந்த அதிகாரத்திலிருப்பதையோ விரும்பமாட்டார்கள். யாரோ ஒரு பெண் அப்படி இருப்பதையே விரும்பாத ஆண், வீட்டில் தன் மனைவி தன்னைவிட அதிகம் சம்பாதிப்பதை எப்படி ஏற்றுக்கொள்வான். பெண் என்பவள் ஆணுக்கு அடங்கி நடப்பவள் என்பது வழிவழியாக போதிக்கப்பட்டுவருகிறது. இதற்கு ஆண்களை மட்டும் பொத்தாம்பொதுவாக குற்றம் சொல்லிவிடமுடியாது.

வீட்டில் ஆண், பெண் என்று இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக இருப்பவளும், இருவரையும் சமமாக வளர்ப்பதில்லை. பெண் குழந்தைகளை வீட்டு வேலைகளில் ஈடுபடுத்துவதைப்போல ஆண் குழந்தைகளை ஈடுபடுத்துவதில்லை.

* * *

அவள் பாசக்காரி. புகுந்தவீட்டைத் தன் வீடாக நினைத்து, அவர்களின் சுக துக்கங்களில் பங்கெடுத்து அவர்களையே தன் உறவுகளாக வாழத்துவங்குகிறாள். கணவனிடமும் அன்பும் காதலும் கொண்டவள். அதுமட்டில் அவனுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

கணவனை விட அவள் அதிகம் சம்பாதிப்பவள். கணவனின் வீடு அவளைத் தாங்குகிறது. கணவன்?

`ஈகோ' என்னும் அரக்கன் அவனைப் படாதபாடு படுத்துகிறான். கூடவே நண்பர்களும் தூபம் போட, அவள்மீது தீராத வெறுப்பைக் கொட்டுகிறான்.

ஓர் இசைக் கச்சேரிக்கு தனித்தனியே சென்று, ஒன்றாக அமர்ந்து கேட்க வேண்டிய சூழல். போதாதா கவியரசருக்கு?

// பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்யமா //

என்கிற முதல் வரியிலேயே அவர்களிருவருக்குமான பூசலையும் அவர்களுக்குள் இருக்கும் பிரச்சினையையும் தெளிவாக எடுத்து வைக்கிறார். நாயகனாகவும் நாயகியாகவும் நடித்திருக்கும் முத்துராமனும் ஜெயலலிதாவும் உணர்வுபூர்வமாக தங்கள் முக பாவனைகளை வெளிப்படுத்தியிருப்பார்கள். திரையில் கவியரசர் கண்ணதாசனே இப்பாடலைப் பாடுவதாக காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.

ஒரு திரைப்பாடலின் வெற்றி என்பது, அந்தப் பாடல் அந்தப் படத்தின் கதையின் மைய உணர்வை பார்ப்போருக்கு எளிதில் கடத்தவேண்டும். திரைப்படத்தைத் தாண்டி, தனியே கேட்கும்போது, கேட்பவரின் ஆன்மாவோடு அது உரையாடவேண்டும். இதனை மிகச்சிறப்பாக கையாண்டதால்தான் இன்னமும் ஆல்போல் தழைத்திருக்கிறது கவியரசரின் புகழ்.

    உயர்ந்த இடத்தில் இருக்கும்போது

    உலகம் உன்னை மதிக்கும் - உன்

    நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்

    நிழலும்கூட மிதிக்கும்

வாழ்ந்துகெட்ட வீடு என்று ஒரு பழமொழி சொல்வார்கள். சறுக்கலைச் சந்திக்காத மனிதர் எவரும் இருக்கமாட்டார்தானே? அப்படிச் சறுக்கும்போது இந்த உலகமும் மனிதர்களும் எப்படியெல்லாம் அவச்சொல்லை வீசும்; வீசுவர்? வீழ்ந்தவனை அடிக்கக் கிடைத்த வாய்ப்பாக கொண்டாடித் தீர்த்துவிடமாட்டார்களா? உன் நிலைமை கொஞ்சம் இறங்கினால் உன் நிழலே உன்னை மிதிக்கும் என்று ஒரு பெரிய பொருளை எவ்வளவு எளிய வரிகளில் அடக்கித் தந்திருக்கிறார்.

இந்தப்பாடல் ஒலிக்கக்கேட்கும்போது, சறுக்கியவர்களுக்கு எவ்வளவு ஆறுதலாக இருக்கும்? கவியரசர் வெற்றிபெற்ற இடம் இதுதான். இங்கேதான்!

1520576286.jpg

ஒரு வண்டி ஓட இரண்டு சக்கரங்களும் இணையாக இருக்கவேண்டும். அங்கு ஏற்றத்தாழ்வு இருந்தால், பயணம் ஓர் அடி கூட முன்னேறாது. திருமண பந்தத்திற்கு மட்டுமல்ல, வாழ்க்கைப் பயணம் முழுமைக்குமே இது பொருந்தும்.

ஒவ்வொன்றையும் தான் சொன்னதாகச் சொல்லாமல் `கருடன் சொன்னது, ஒளவை சொன்னது, கணவன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது என்று முடிப்பார்.

தன்னை மதிக்கிறார்களா? தன்னை விரும்புகிறார்களா? தன் இடம் எது?  தனக்கான முக்கியத்துவம் என்ன? என்பது தெரியாமல் இருப்பதுதான் நம் எல்லோருக்குமான பொதுவான பிரச்சினை.

``கருடா சௌக்கியமா?'' என்று கேட்ட பாம்பிடம், கருடன் சொன்ன பதிலை எப்போதும் நினைவில் வைத்திருந்தால் பெரும்பாலான சிக்கல்களில் மாட்டிக்கொள்ளாமல் நாம் தப்பித்துவிடலாம்.

தனக்கான இடம் எது என்பதையும் அடுத்தவருக்கான இடம் எது என்பதையும் தெளிவாக அறிந்துகொண்டால்.... எல்லாம் சௌக்யமே! எல்லோரும் செளக்யமே! எப்போதும் செளக்யமே!

- பயணிப்போம்

https://www.kamadenu.in

Share this post


Link to post
Share on other sites

காலமெல்லாம் கண்ணதாசன் 3: எங்கிருந்தாலும் வாழ்க!


 

 

kalamellam-kannadasan-by-mathi

 

படம்: நெஞ்சில் ஓர் ஆலயம்

இசை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி

 

பாடியவர்: ஏ.எல்.ராகவன்

--------------------------------------------

எங்கிருந்தாலும் வாழ்க

உன் இதயம் அமைதியில் வாழ்க

மஞ்சள் வளத்துடன் வாழ்க

உன் மங்கலக் குங்குமம் வாழ்க

வாழ்க வாழ்க

 

இங்கே ஒருவன் காத்திருந்தாலும்

இளமை அழகைப் பார்த்திருந்தாலும்

சென்ற நாளை நினத்திருந்தாலும்

திருமகளே நீ வாழ்க

வாழ்க வாழ்க

 

வருவாய் என நான் தனிமையில் நின்றேன்

வந்தது வந்தாய் துணையுடன் வந்தாய்

துணைவரைக் காக்கும் கடமையும் தந்தாய்

தூயவளே நீ வாழ்க

வாழ்க வாழ்க

 

ஏற்றிய தீபம் நிலை பெற வேண்டும்

இருண்ட வீட்டில் ஒளி தர வேண்டும்

போற்றும் கணவன் உயிர் பெற வேண்டும்

பொன்மகளே நீ வாழ்க

வாழ்க வாழ்க

--------------------------------------------

 

தமிழின் மிக அழகான சொல் `வாழ்க'.

வாழ்க என்ற சொல்லை கடைசியாக எப்போது சொன்னோம் நினைவிருக்கிறதா?  யாரை வாழ்கவென்று வாழ்த்தினோம்? ஞாபகமிருக்கிறதா?

நம்மைக் கடைசியாக யார் வாழ்த்தினார்கள்? `வாழ்க'வென்று அடுத்தவர் நம்மை வாழ்த்தும்போது நம் மனம் திளைத்த ஆனந்தத்தின் எல்லை அறிவோம்தானே? சொல்லப்போனால், இந்த ஆனந்தத்திற்கு எல்லையே இல்லைதானே!

இன்னாரைத்தான் வாழ்த்தவேண்டுமென்று எதுவும் இருக்கிறதா என்ன? யாரும் வாழ்த்தலாம். யாரையும் வாழ்த்தலாம். காரணம், வாழ்தல் இனிது. வாழ்தல் என்பது நம் வாழ்த்துகளிலும், நாம் பெற்ற வாழ்த்துகளிலும் இருக்கிறது.

நம்மைப் பிடித்தவரை, நம்முடன் சேர்ந்து பயணிப்பவரை, நம்மோடு காதல் கொண்டோரை, நமக்காக அக்கறைப்படுபவரை வாழ்த்துதல் மட்டும் வாழ்த்தல்ல.  நம்மைக் கைவிட்டவரை, நம்மோடு இணக்கமாக இருக்கமுடியாமல் தள்ளிஇருப்போரையும் வாழ்த்தமுடிந்தால் மனிதத்தை நாம் கைவிடாதோராய் இருப்போம்.

தான் பட்டினியாய் கிடந்தாலும் தன் பிள்ளைகள் பசியால் வாடிவிடக்கூடாது என்று அவர்களுக்காகத் துடிப்பது தாய்மை. தான் பட்ட துயரை தன் பிள்ளைகள் பட்டுவிடக்கூடாது என்று அவர்களின் வாழ்க்கை மேலோங்க தன் தோள்களைத் தருபவன் தந்தை. நிறைகுறைகள் சேர்த்தே நேசிக்குமாம் நட்பு. தான் நேசித்த இதயம் எங்கிருந்தாலும் மகிழ்ச்சியாய் இருக்க நினைக்குமாம் காதல்.

காதல் என்பது புரிதல். புரிதல் இல்லாத இதயத்திலிருந்து காதல் வெளியேறி, எதிர்பார்ப்பும் ஏமாற்றமும், கண்ணீரும் கூச்சலும், வன்மமும் குரோதமும் குடிபுகுந்துவிடும்.

* * *

நாயகனும் நாயகியும் காதலிக்கின்றனர். சேர முடியாத சூழல். நாயகன் மருத்துவனாகிறான். நாயகிக்குத் திருமணமாகி கணவன் புற்றுநோய்க்கு ஆட்பட்டு, நாயகனின் மருத்துவமனைக்கே வருகிறார்கள்.

தன் காதல் குறித்துக் கலங்கும் நாயகன், தன் காதலியின் வாழ்க்கை குறித்தும் கலங்குகிறான்.  இந்தச் சூழலில் வரும் பாட்டை `எங்கிருந்தாலும் வாழ்க' என்று துவங்குகிறார் கவியரசர்.

1521174714.jpg

உண்மையாகக் காதல் கொண்ட இதயம், அப்படித்தான் இருக்கும். அவளின் அமைதியை, அவளின் நிம்மதியைத்தான் விரும்பும். அவளின் நிலை குறித்து கவலை கொள்ளும். அவளுக்காகப் பிரார்த்திக்கும். மஞ்சள் குங்குமத்துடன் நீடுவாழ வேண்டிக்கொள்ளும்.

 

        வருவாய் என நான் தனிமையில் நின்றேன்

        வந்தது வந்தாய் துணையுடன் வந்தாய்

        துணைவரைக் காக்கும் கடமையும் தந்தாய்

 

எப்படியும் எனக்காக நீ வந்துவிடுவாய் என்று நான் தனிமையில் காத்திருக்க, நீயோ உன் துணையுடன் வந்திருக்கிறாய். வந்ததுமன்றி உன் துணையைக் காக்கும் கடமையையும் தந்திருக்கிறாய் என்று உருகுகிறான் நாயகன்.

காட்சியைத் துளியும் பிசிறின்றி, வரிகளில் காட்சிப்படுத்துவதில் கவியரசருக்கு நிகர் அவரே. சோகமான காட்சியில் வரும் பாடலில், `வாழ்க... வாழ்க...' என்று எழுதியதன்மூலம், எத்தனை சோகம் வந்தாலும் அதையும் கடந்துதானே ஆகவேண்டும் என்று பாசிடிவ் வரிகளுக்குள் பல தலைமுறைகளை வாழவைத்தவர் கவியரசர்.

இதோ, போன வாரம் அஸ்வினி என்ற இளம்பெண் கொலை செய்யப்பட்டிருக்கிறாள். அதற்கு முந்தைய வாரம் வேறு பெண். அதற்கும் முன் வேறு பெண். பெயர்கள்தான் மாறிக்கொண்டிருக்கின்றன. காதல் என்ற பெயரில் பெண்கள் துன்புறுத்தப்படுவதும் கொலையாவதும் தொடர்கதையாகின்றன.

1521174733.jpg

காதலில் தோல்வி அடைந்துவிட்டாலோ, காதலியோ காதலனோ பாதியில் பிடிக்காமல் சென்றுவிட்டாலோ, விரக்தியில் என்னசெய்வதென்று மறந்துவிடுமா மனம்? காதலை விட, அடைந்த ஏமாற்றம் பெரிதாகிவிடுகிறது. காதல்... வாழ்வின் ஒரு பகுதிதானே? காதலே வாழ்க்கையாகிவிடாதல்லவா? எனக்குக் கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்கக்கூடாது என்பது, இதுவரை கொண்ட அன்பையும் கொச்சைப்படுத்துவதாகாதா? அந்த வன்முறையால் ஆவது என்ன என்பதை யோசிக்கவேண்டாமா? காதலின் எல்லை வன்முறையா? காதலின் எல்லையும் காதல்தான் என்னும் அளவிற்கு எல்லையற்றதல்லவா காதல்?

எத்துணை துன்பம் என்றாலும் நான் தாங்கிக்கொள்வேன். உன்னைத் துயரம் சூழ விடமாட்டேன். என் அன்பும் காதலும் கடைசிவரை கவசம்போல் உன்னைக் காக்கும். அந்த அன்பே, காதல். காதலனையோ காதலியையோ இழக்கும்நிலை வந்தாலும் காதலை இழந்துவிடக்கூடாதல்லவா?

 

விரும்பிப் பிரிந்தாலும் சரி, சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிந்தாலும் சரி,  காதலியையோ காதலனையோ அவர்கள் சார்ந்தோரையும் சேர்த்து அன்பு செலுத்துவதே காதல். அன்போ, காதலோ, காமமோ அனைத்தும் வாழ்வதற்குத்தானே?

 

    ஏற்றிய தீபம் நிலை பெற வேண்டும்

    இருண்ட வீட்டில் ஒளி தர வேண்டும்

    போற்றும் கணவன் உயிர் பெற வேண்டும்

 

   திருமகளே, பொன்மகளே, தூயவளே நீ வாழ்க!

காதல் மனத்தோர் தலைமுறை தலைமுறையாகப் பின்பற்ற வேண்டிய வாசகத்தையல்லவா தந்து சென்றிருக்கிறார் கண்ணதாசன்.

வாருங்கள்... காதல் தழைக்க, கூடிநின்று உரக்கச் சொல்வோம் `எங்கிருந்தாலும் வாழ்க'வென்று!

- பயணிப்போம்

https://www.kamadenu.in

Share this post


Link to post
Share on other sites

காலமெல்லாம் கண்ணதாசன் 4: சிப்பி இருக்குது முத்தும் இருக்குது


 

 

sippi-irukkudhu-muthum-irukkudhu

 

படம் : வறுமையின் நிறம் சிவப்பு

இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

 

குரல் : எஸ்.பி.பாலசுப்ரமணியம் - எஸ்.ஜானகி

--------------------------------------------

சிப்பி இருக்குது முத்தும் இருக்குது

திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி

சிந்தை இருக்குது சந்தம் இருக்குது

கவிதை பாட நேரம் இல்லடி ராஜாத்தி

 

சந்தங்கள் நீயானால்

சங்கீதம் நானாவேன்

 

சிரிக்கும் சொர்க்கம்

தங்கத் தட்டு எனக்கு மட்டும்

தேவை பாவை பார்வை...

 

நினைக்க வைத்து

நெஞ்சில் நின்று நெருங்கி வந்து

மயக்கம் தந்தது யார் தமிழோ அமுதோ கவியோ

 

சந்தங்கள் நீயானால்

சங்கீதம் நானாவேன்

 

மழையும் வெயிலும் என்ன

உன்னைக் கண்டால் மலரும் முள்ளும் என்ன

ரதியும் நாடும் அழகில் ஆடும் கண்கள்

கவிதை உலகம் கெஞ்சும்

உன்னைக் கண்டால் கவிஞர் இதயம் கொஞ்சும்

கொடுத்த சந்தங்களில்

என் மனதை நீ அறிய நான் உரைத்தேன்

சிப்பி இருக்குது முத்தும் இருக்குது

திறந்து பார்க்க நேரம் வந்தது இப்போது

சிந்தை இருக்குது சந்தம் இருக்குது

கவிதை பாடி கலந்திருப்பது எப்போது

--------------------------------------------

சென்ற வாரம், கவியரசரின் `எங்கிருந்தாலும் வாழ்க' என்ற பாடலைப் பார்த்தோம். தத்துவத்தோடும் வாழ்க்கையோடும் அடங்கிவிடாமல், திரைப்பாடலின் பல பரீட்சார்த்த முயற்சிகளையும் கண்ணதாசனின் பாடல்கள் செய்து பார்த்தன. அதற்குப் பெரிதும் உறுதுணையாக இருந்தவர் எம்.எஸ்.வி. அவர்கள்.

இருவரும் இணைந்து திரைப்பாடல்களில் ஏராளமான சோதனை முயற்சிகளை மேற்கொண்டனர். அப்படி ஒரு வித்தியாசமான முயற்சியாக அமைந்தது, வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் வரும் `சிப்பி இருக்குது முத்தும் இருக்குது' பாடல்.

மிகக்குறைந்த நேரத்தில் எம்.எஸ்.வி. அவர்களால் கம்போஸ் செய்யப்பட்ட பாடல் இது. ஒரு பாடல் எப்படி உருவாகும் என்று அதுவரை அறியாமல் இருந்த சினிமா ரசிகர்களுக்கு, அது உருவாகும் விதத்தை எளிமையாகவும் சுவையாகவும் தெரிவித்த பாடல் என்று கூட சொல்லலாம். சந்தத்திற்குப் பாடல் எழுதுவது எப்படி என்பதை படம் பார்த்தவர்களுக்கு மட்டுமின்றி, பாடல் எழுத ஆசைப்பட்டோருக்கும் பாடம் சொல்லித்தருவதாய் அமைந்தது.

``என் இசை வாழ்க்கையில் கவிஞர் கண்ணதாசனைப்போல ஓர் அரிய கவிஞரை நான் பார்த்ததில்லை என்றே சொல்லலாம். அவரது பாடல்களினால் எனது இசையும் பாப்புலராகியது என்றால் அது நூற்றுக்கு நூறு உண்மை. கவிஞர் என் உயிரில் பாதியாக இருந்தார். அவர் மறைந்த பிறகு எனக்குப் பாதி உயிர்தான் இருந்தது'' என்று கவியரசரைப்பற்றி ஒரு பேட்டியில் சிலாகித்துச் சொல்லியிருக்கிறார் எம்.எஸ்.விஸ்வநாதன்.

திரைத்துறையில் அவர்கள் இருவரும் சேர்ந்து தொட்ட உயரங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. கவியரசருக்கும் எம்.எஸ்.வி. அவர்களுக்கும் அப்படி ஒரு நட்பு, அப்படி ஒரு காதல். இருவரும் ஒரு சேர வெற்றி பெற்ற பாடல்களில் இந்தப் பாடலுக்கு முதலிடம் தரலாம்.

திரைப்பாடல் என்பது ``சந்தத்துக்கு வார்த்தைகளை நிரப்புவதுதான்'' என்று எளிமையாகச் சொல்வார்கள். வெறும் வார்த்தைகள் பாடலாகிவிடாதல்லவா? வார்த்தைகளில் வாழ்க்கையைச் சொல்லவேண்டும். ஒரு படம் சொல்லவேண்டிய காதலை, நட்பை, வாழ்க்கையை, தத்துவத்தை, தன் பாடல்களில் சொன்னதால்தான் இன்றளவும் போற்றத்தக்கவராகத் திகழ்கிறார் கவியரசர்.

வேலையில்லாமல் அல்லல்படும் பட்டதாரி இளைஞனாக கமல்ஹாசனும், அவரது காதலியாக ஸ்ரீதேவியும் நடித்திருப்பார்கள். கமல் ஒருதலையாக ஸ்ரீதேவியைக் காதலித்துக்கொண்டிருப்பார். இருவருக்குமிடையில் நல்லதொரு நட்பு இருக்கும். அந்த நட்பை உடைத்து, உள்ளத்திலிருக்கும் காதலைச் சொல்ல தவித்துக்கொண்டிருப்பார் கமல்.

ஸ்ரீதேவி தத்தகாரம் சொல்ல அதற்கு ஏற்றாற்போல் கமல் கவிதை வரிகளைச் சொல்லவேண்டும். இருவரில் யார் வென்றார்கள் என்று போட்டி நடப்பதைப்போல, காட்சியைக் கவிதையாகப் படம்பிடித்திருப்பார் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்.

நாயகி சந்தத்தைச் சொல்லச்சொல்ல, நாயகன் வரிவரியாக கவிதையை சொல்லிக்கொண்டே வரவேண்டும். தான் சொல்லும் சந்தங்களுக்குப் போட்டியாக நாயகனால் வரிகளைச் சொல்லமுடிகிறதா பார்க்கலாம் என்கிற குறுகுறுப்பும், அற்புதமான சந்தங்கள் வரும்போது வியப்பதாகட்டும், சந்தங்களுக்குப் பிசிறின்றி கவிதைகள் சொல்லும்போதெல்லாம் விழிகளை உயர்த்தி சபாஷ் சொல்லுவதாகட்டும், ஸ்ரீதேவியும் கமலும் நடிப்பின் மிச்சசொச்ச உச்சங்களையெல்லாம் தொட்டிருப்பார்கள் இந்தப் பாடலில்.

எஸ்.பி.பி. - ஜானகியின் குரல் பாடலுக்குப் பெரிய பலம். குரலும், இசையும், வரிகளும், நடிப்பும், பார்ப்போரை காட்சியோடு ஒன்றச்செய்து, பாடலுக்கு நடனம் கிடையாது என்பதையே மறக்கச்செய்யும்  மாயத்தைச் செய்த பாடல்.

தன்னுடைய காதலை ஏற்றுக்கொள்ள வைப்பதிலும், காதலுக்காகக் காத்திருப்பதிலும்தான் இருக்கிறது காதலின் சுவாரஸ்யம். நிராகரிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே சொல்லப்படாத காதல்களும் நிறைய உண்டு. காதலைச் சொல்வதற்கான சூழலை அது எதிர்பார்த்துக்கொண்டே இருக்கும். எப்போதெல்லாம் வாய்க்குமோ அப்போதெல்லாம் தன்னை வெளிப்படுத்திவிட அது துடித்துக்கொண்டே இருக்கும்.

அப்படி தன் உள்ளத்துக் காதலை வெளிப்படுத்தக் கிடைத்த வாய்ப்பாக பாடலைப் பயன்படுத்தியிருப்பார் நாயகன்.

சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன், தேவை... பாவை... பார்வை... போன்ற வரிகளில் மெல்ல மெல்ல தன் மனதைத் திறக்கும் நாயகன், கடைசி வரிகளில்...

கொடுத்த சந்தங்களில்

என் மனதை நீ அறிய நான் உரைத்தேன்...

என்று காதலை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கும். பாடலின் முடிவில் இருவரும் கரம்கோர்த்து... நடந்து செல்லும்போது எழும் பின்னணி இசையை, ஒரு பூ மலர்வதைப்போல் ஒலிக்கவிட்டிருப்பார் எம்.எஸ்.வி.

சிப்பி இருக்குது முத்தும் இருக்குது

திறந்து பார்க்க நேரம் வந்தது இப்போது

சிந்தை இருக்குது சந்தம் இருக்குது

கவிதை பாடி கலந்திருப்பது எப்போது

என்று, நாயகனின் காதலை ஏற்றுக்கொண்டதை உணர்த்தும் விதமாக, பாடலின் கடைசி வரிகளை மாற்றி, நாயகி முடிப்பதாக அமைத்ததும் புதுமையான ஒன்று.

காதல் என்பது உணர்வு. அந்த உணர்வைப் பார்வையாளர்களுக்குக் கடத்துவது அவ்வளவு எளிதானது அல்ல. அபூர்வமாக சில படங்களிலும், சில பாடல்களிலும் அதைக் கையாண்டிருப்பார்கள். அதனைப் புதுமையாகவும் உணர்வுபூர்வமாகவும் வெளிப்படுத்திய பாடல் `சிப்பி இருக்குது'.

எப்போது இந்தப் பாடலைக் கேட்டாலும், புதிதாய் ஒரு காதல் நம் உள்ளத்தில் பூப்பதைப்போன்ற உணர்வைத் தருவதால்தான், காலம் கடந்தும் நம் நெஞ்சங்களில் நிற்கிறது இந்தப் பாடல். காலமெல்லாம் நெஞ்சில் வீற்றிருக்கிறார் கண்ணதாசன்.

- பயணிப்போம்

 

https://www.kamadenu.in/news/series/1009-sippi-irukkudhu-muthum-irukkudhu.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category

Share this post


Link to post
Share on other sites

காலமெல்லாம் கண்ணதாசன் 5: அடி என்னடி உலகம்...


 

 

adi-ennadi-ulagam-kannadasan

 

படம் : அவள் ஒரு தொடர்கதை

இசை : எம். எஸ். விஸ்வநாதன்

 

பாடியவர் : எல்.ஆர். ஈஸ்வரி

 

அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்

அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்

பந்தம் என்பது சிலந்தி வலை பாசம் என்பது பெரும் கவலை

சொந்தம் என்பது சந்தையடி இதில் சுற்றம் என்பது மந்தையடி

 

செக்கு மீது ஏறிக்கொண்டால் சிங்கப்பூரு போகுமா

சேர்ந்தவர்க்கே பாடுபட்டால் பெண்ணின் தேவை தீருமா

கொக்கைப் பார்த்து கற்றுக்கொள்ளு வாழ்க்கை என்ன என்பதை

கொத்தும் போது கொத்திக்கொண்டு போக வேண்டும் நல்லதை

படாபட்

 

கோடு போட்டு நிற்கச் சொன்னான் சீதை நிற்க வில்லையே

சீதை அங்கு நின்றிருந்தால் ராமன் கதை இல்லையே

கோடு வட்டம் என்பதெல்லாம் கடவுள் போட்டதல்லடி

கொள்ளும்போது கொள்ளு தாண்டிச் செல்லும்போது செல்லடி

படாபட்

 

காதல் போதை என்பதெல்லாம் காமதேவன் கட்டளை

காமதேவன் கட்டளைக்கு காதலர்கள் முத்திரை

பங்குனிக்கு பின்பு என்ன ஐயமென்று சித்திரை

பார்ப்பதெல்லாம் பார்க்க வேண்டும் பழமை ஒரு பனித்திரை

படாபட்

வேலைக்குச் செல்லும் பெண்ணின் பிரச்சினையை மையமாக வைத்து வெளிவந்த படம் அவள் ஒரு தொடர்கதை. குடும்பத்துக்காக திருமணம் செய்துகொள்ளாமல் வேலைக்குச் செல்லும் பெண்ணாக `கவிதா' என்னும் பாத்திரத்தில் சுஜாதா நடித்திருந்தார். ஜெய்கணேஷ், விஜயகுமார், கமல்ஹாசன், ஸ்ரீப்ரியா என்று நிறைய கதாபாத்திரங்கள். படத்தில் இடம்பெற்ற ஐந்து பாடல்களும் காலத்தால் அழியாத காவியங்கள்.  எம்.எஸ்.வி.யின் இசையில் 1974ம் ஆண்டு வெளியான படம்.

வானொலியில் பணியாற்றியவரும், எழுத்தாளர் சுகி சுப்பிரமணியத்தின் மகனுமான எம்.எஸ்.பெருமாள் எழுதிய `வாழ்க்கை அழைக்கிறது' என்ற குறுநாவல்தான் `அவள் ஒரு தொடர்கதை' என்ற பெயரில் படமானது. திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியவர் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்.

பெண்களின் பாத்திரங்களைப் பிரதானமாக வைத்து வெளிவரும் படங்கள் அபூர்வம். அதனை தகர்த்தெறிவதுபோல் பெரும்பாலான பாலசந்தர் படங்கள், பெண்களின் உணர்வுகளை, பெண்களின் பிரச்சினைகளைப் பெரிதும் பேசின. அவற்றுக்கு வலுசேர்க்கும் விதத்தில் அமைந்தவை கவியரசரின் பாடல்கள். பெரும்பாலும் மெட்டுக்குப் பாடல் எழுதுவதையே கவியரசர் விரும்புவார்.

பாடல் எழுதும் முன் படத்தின் கதையை முழுவதும் கேட்டு, கதையைப் பிரதிபலிப்பதாக, அவரது வாழ்க்கை அனுபவங்களிலிருந்தே வந்து விழும் வரிகள். கண்ணதாசனின் ஒவ்வொரு பாடலுக்குப் பின்னும் அவரது அனுபவம் ஒளிந்திருக்கிறது என்பர், அவரது நண்பர்களான காவியக் கவிஞர் வாலியும், எம்.எஸ்.வி.யும்.

சக மனிதர்கள் மீதோ, சக உறவுகளின் மீதோ நம்பிக்கை இழக்கும்போதெல்லாம் `என்ன உலகம்டா இது' என்று அலுத்துக்கொள்ளாதவர்கள் யார்? உலகம் என்பது தனியாக ஒன்றுமில்லை. ஒட்டுமொத்த உயிரினங்களும் சார்ந்தது. அதில் நாமும் அடக்கம்.

உலகம் இரண்டுவிதமாக இயங்குகிறது. ஒன்று சரி; ஒன்று தவறு. எது சரி, எது தவறு என்பது அவரவர் மனநிலையின்பால் இயங்குவது, அவரவர் விருப்பத்தின்பால் இயங்குவது. தனித்தனி மனங்கள், தனித்தனி பிரச்சினைகள், தனித்தனி தீர்வுகள். அதனால்தான் ஒவ்வொரு மனமும் தனித்தனி உலகமாக இயங்குகிறது.

நமக்குச் சரி என்று படுவதோ, தவறு என்று படுவதோ, அப்படியேதான் உலகத்துக்கும் பொருந்தவேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. அதனால் `என்ன உலகம் இது' என்று அலுத்துக்கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை. இந்த அர்த்தத்தை வலுப்படுத்தும் விதமாக கவியரசரால் எழுதப்பட்ட பாடல்தான் `அடி என்னடி உலகம்'.

ஒரு தவறு செய்பவன், `ஆமா... எவன் தவறு செய்யலை' என்று கேட்டு, தன் தவறுக்கு நியாயம் சொல்லிக்கொள்ளலாம். அதற்கு உலகைக் குறை கூறிக்கொள்ளலாம். ஆனால், எல்லாத் தவறுகளும் திருத்திக்கொள்ளத்தான் என்பதை மட்டும் மறந்துவிடுகிறோம். கவியரசரின் பாடல்கள் காயங்களுக்கு மருந்தாக இருக்கின்றனவே தவிர, மருந்துதான் இருக்கிறதே, காயப்படுத்து என்று சொல்லித்தரவில்லை.

 

குடும்பம்தான் ஆகப்பெரிய வரம். ஆணோ பெண்ணோ பெரும் பாரங்களைச் சுமப்பது குடும்பத்தின் பொருட்டுதான். ஆனால் தனியான தேவைகளும் இருக்கத்தானே செய்யும். பெரும்பாலும் குடும்பப் பாசத்தையோ, உறவுகளின் பந்தத்தையோ நினைத்து, தன் தேவைகளைக் குறைத்து குடும்பத்துக்கு உழைக்கும் மனிதர்களை நிறையவே பார்க்கிறோம். அதுவே ஒரு பெண் என்றால்? தன் அனைத்து ஆசாபாசங்களையும் குடும்பத்துக்காகத் துறந்து உழைத்துக்கொண்டிருக்கும் அவளை, அவள் குடும்பம் என்னவாகப் பார்க்கிறது? அதனால் ஏற்படும் சலிப்பை அவள் எவ்வாறு ஆற்றுப்படுத்துகிறாள்?

பந்தம் என்பது சிலந்தி வலை, பாசம் என்பது பெரும் கவலை என்று சுயநலமான உறவுகளின் பின்னலை, அதில் சிக்கி வெளிவர முடியாமல் தவித்து, மன உளைச்சலுக்கு ஆளாகி உழலும் நாயகிக்குச் சொல்வதாக நமக்குத்தான் ஆறுதல் சொல்கிறார் கவியரசர்.

கவியரசரின் பாடல்களில் எளிமையான உதாரணங்களும், உவமைகளும் கொட்டிக்கிடக்கும். வாழ்க்கை என்றால் என்னவென்று கொக்கைப்பார்த்துக் கற்றுக்கொள்ளவேண்டும் என்கிறார். எத்தனை நேரம் என்றாலும், மீனுக்காகக் காத்துக்கொண்டிருக்கும் கொக்கு. உணவு கிடைத்ததும் கொத்திக்கொண்டு பறந்துவிடும்.

கொக்கைப் பார்த்து கற்றுக்கொள்ளு வாழ்க்கை என்ன என்பதை

கொத்தும் போது கொத்திக்கொண்டு போக வேண்டும் நல்லதை

அதிலும், காத்திருந்து, கிடைத்ததையெல்லாம் கொண்டுபோகச் சொல்லவில்லை. நல்லதை மட்டும் எடுத்துக்கொள்ளச் சொல்வதில் இருக்கிறது கண்ணதாசனின் நேர்மறை சிந்தனை. முதல் வரிக்கும் அடுத்த வரிக்குமான ஓசை நயத்தை கவனமாகக் கேட்கும்போது, பாடல் புனைவதில் அவருக்குள்ள பேராற்றல் விளங்கும். `என்பதை' என்ற சொல்லுக்கு இணையாக `நல்லதை' என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். இதிகாசமான ராமாயணத்தின் கதையை, தன் பாடலின் இரண்டு வரிகளுள் அடக்கி,  பொருத்தமான இடத்தில் பயன்படுத்தியிருப்பார்.

கோடுகளையோ வட்டங்களையோ கடவுள் போடவில்லை. எல்லா சட்டங்களும் மனிதர்களுக்காக, மனிதர்கள் உருவாக்கியதுதான். தனி மனிதச் சட்டங்களும் அப்படியே.  ஒரு சிக்கலுக்குள் சிக்கி, அங்கேயே சுழன்றுகொண்டிருக்காமல் தாண்டிப்போய்க்கொண்டே இருக்கவேண்டும் என்னும் கவியரசரின் வரிகள், அன்றாடச் சிக்கல்களில் நாம் மாட்டிக்கொள்ளாமல் தப்பிச்செல்ல உதவுகின்றன என்று சொன்னால் மிகையில்லைதானே?

`விட்டுத் தள்ளு' என்பதைப்போல நம்பிக்கை அளிக்கும் வார்த்தை வேறு இருக்குமா என்று தெரியவில்லை. அந்த அர்த்தத்தில் ஒவ்வொரு சரணத்தின் முடிவிலும் `படாபட்' என்னும் வார்த்தையைப் பயன்படுத்தியிருப்பார். ஜெயலட்சுமி என்கிற நடிகையின் பெயர், அதற்குப்பின் `படாபட் ஜெயலட்சுமி' என்றே மாறிப்போனது.

எல்.ஆர்.ஈஸ்வரி அவர்களின் குரல் பாடலுக்கு ஆகப்பெரிய பலம். அலட்சியமான அந்தக் கதாபாத்திரத்தின் குரலாகவே அது ஒலிக்கும்.

எல்லாக் கவலைகளுக்கும், எல்லாத் துயரங்களுக்கும் ஒரே மருந்துதான்... அது, படாபட்!

- பயணிப்போம்

https://www.kamadenu.in/news/series/1302-adi-ennadi-ulagam-kannadasan.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category

Share this post


Link to post
Share on other sites

காலமெல்லாம் கண்ணதாசன் 6: ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா!


 

 

kaalamellam-kannadasna-by-mathiraj

 

 

படம் : அவன்தான் மனிதன்

இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

 

குரல் : டி.எம்.சௌந்தர்ராஜன்

* * *

ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா

ஆசையெனும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா

நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு

என் நிழலில்கூட அனுபவத்தில் சோகம் உண்டு

பகைவர்களை நானும் வெல்வேன் அறிவினாலே

ஆனால் நண்பனிடம் தோற்றுவிட்டேன் பாசத்தாலே

நண்பனிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே

பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள்

அந்த பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான்

நானிருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன்

இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்

நன்மைசெய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்

கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன்

அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்

உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா

இதை உணர்ந்து கொண்டேன் துன்பமெல்லாம் விலகும் கண்ணா

உணர்ந்து கொண்டேன் துன்பமெல்லாம் விலகும் கண்ணா

* * *

வாழ்ந்துகெட்ட மனிதன், வாழ்ந்துகெட்ட குடும்பம், வாழ்ந்து கெட்ட சமூகம் என்று தனிமனிதனில் தொடங்கி ஒரு சமூகம் வரை நன்றாக இருந்து, பின் என்ன காரணத்தினாலோ நொடிந்து போய்விடும். அதன் பின்னணியில் சாட்டையோடு ஒரு கை இருக்கும். அல்லது ஆசை எனும் தொட்டில் இருக்கும்.

ஒருவரை ஒருவர் சார்ந்து இருக்கவேண்டிய இடங்களில், ஒருவர் ஆட்டுவிக்கிறார், ஒருவர் ஆடுகிறார். ஆடுவதோ ஆட்டுவிப்பதோ முக்கியமின்றி, ஆட்டுவிப்பதற்கான காரணமே முக்கியமாகிறது. சாட்டை இருக்கிறது என்பதற்காக ஆட்டுவிப்பவர்களே பெருகிவிட்டனர் இன்று.

காவிரியில் தமிழகத்துக்கான பங்கைத் தரச்சொல்லி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு அதை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துகிறது. மாநில அரசு கைபிசைந்து வேடிக்கைமட்டுமே பார்க்கிறது. காரணம் சாட்டை மத்திய அரசிடம் இருக்கிறது. அது ஆடச்சொன்னபடியெல்லாம் ஆடிக்கொண்டிருக்கும் பம்பரமாக இப்போதைய மாநில அரசு இருக்கிறது.

காதல் குடும்பம் தொடங்கி, அரசியல் வரை இந்த ஆட்டம் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. பெரும்பாலும் எளியோரை வலியோர் ஆட்டுவித்தலே அதிகம். எனில் வலியோரை ஆட்டுவிக்க ஒருவரும் இல்லையா? இருக்கிறான் அவன் பேர் இறைவன் என்கிறார் கண்ணதாசன்.

``என் கையில் என்ன இருக்கு. அவன் சுற்றிவிடுறான். நான் ஆடிக்கொண்டிருக்கிறேன்'' என்று பலரும் கடவுளைக் கைகாட்டி விடுவார்கள். கண்ணதாசனின் தத்துவார்த்தப் பாடல்கள் பலவற்றிலும் அவர் கடவுளைக் கேள்வி கேட்கிறார். கடவுளிடம் இருந்து பதில் பெறுகிறார். எல்லாம் உன்னால்தான் என்று கடவுளிடம் கோபித்தும் கொள்கிறார்.

விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பம்பரம் என்றால் ஆடத்தானே வேண்டும். அதிலும், தானாக ஆடமுடியாது. ஆட்டுவித்தலுக்கேற்ப ஆடவேண்டும். அதுதான் விதி. சாட்டை சுழற்றிவிட்டால் ஆடவேண்டிய பம்பரம்தான் நாம் அனைவரும். சாட்டை சுழற்றும் கைகள் எவருடையவை என்பதைப் பொறுத்து ஆடல் சுகமாகவோ சுமையாகவோ இருக்கிறது.

ஆசையெனும் தொட்டிலில் ஆடாதோர் யார் என்கிறார் கண்ணதாசன். ஆசை என்பது எப்போதும் முன்னும் பின்னுமாக ஆடிக்கொண்டேயிருக்கும். ஆடிக்கொண்டிருப்பதால் அதனைத் தொட்டில் என்கிறார். உண்மையில், ஆசைதான் நம்மை இயக்குகிறது. ஆசைப்பட்டபடி வாழத் துடித்துதான் அதில் சிக்கிக்கொள்கிறோம். ஆகவேதான், ஆசையே அத்தனைக்கும் காரணம், ஆசையை அறுத்துவிடு என்றார் புத்தர்.

`ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே

அடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே'

என்று திருநாவுக்கரசரின் பாடல் ஒன்றுண்டு.

அதனை முதலடியாகக்கொண்டு தன் அனுபவப்பின்னலால் கவியரசர் வார்த்த பாடல் இது.

தன்னிடம் இருப்பதையெல்லாம் கொடுத்துவிட்டு நடுத்தெருவுக்கு வந்துவிட்ட நாயகனாய் சிவாஜிகணேசன் நடித்திருப்பார். டி.எம்.எஸ்ன் குரல் நம் ஆன்மாவைத் திறப்பதாய் அமைந்திருக்கும்.

பகைவர்களை நானும் வெல்வேன் அறிவினாலே

ஆனால் நண்பனிடம் தோற்றுவிட்டேன் பாசத்தாலே

நாம் விரும்பித் தோற்கும் இடங்களை நாமே நன்கறிவோம். குடும்பம், உறவு, காதல், நட்பு என்று வேறு வழியில்லாமல், பாசத்தின் பொருட்டு கிடைத்த தோல்வியை சுகமாக எடுத்துக்கொள்வோம். அவன் ஏமாற்றிவிட்டான் என்றுகூட சொல்லாமல்... நண்பன்தானே என்று அந்த வலியைக் கடந்து சென்றிருப்போம். அந்த வலிக்கு ஒத்தடம் தருவதாக அமைந்த வரிகள் என்று இதனைச் சொல்லலாம்.

1522985752.jpg

பாஞ்சாலி மானம் காக்க கடைசிப் புகலிடமாய் கண்ணனை நினைத்து சேலை கேட்கிறாள். என்னுடைய உறவினர்களையே எதிர்த்துப் போரிட்டு நான் எதைப் பெறப்போகிறேன். இந்தப்போர் அவசியம்தானா? எனக்கு விளங்கவில்லை. எனக்குப் புரியவை கண்ணா என்று பார்த்தன் என்னும் அர்ஜுனன் கீதை கேட்கிறான்.

எல்லாவற்றையும் இழந்த ஒருவன் மீண்டும் இறைவனிடம் என்ன கேட்பான்? இழந்தவற்றையெல்லாம் கொடு என்றுதானே? ஆனால் இன்னும் இன்னும் நன்மை செய்து துன்பத்தை வாங்கிக்கொள்ளும் உள்ளத்தைக் கொடு என்று கண்ணனிடம் கேட்கிறார் கவியரசர். இப்படிக்கூட கேட்கமுடியுமா என்று நாம் யோசிக்கும் வேளையில் அதற்கான விடையை அடுத்த சரணத்தில் அவரே அளிக்கிறார்.

கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன்

அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்

உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா

இதை உணர்ந்து கொண்டேன் துன்பமெல்லாம் விலகும் கண்ணா

உள்ளத்தில் உள்ள ஒளியே உலகம். அதுவே கடவுள். அதுவே எல்லாமும். அதனை உணர்ந்துகொண்ட நொடியில் துன்பங்கள் அனைத்தும் தானாய் விலகும்... என்று பாடலின் முடிவில் நம் துன்பங்களையும் துடைத்தெறிகின்றன கவியரசரின் கரங்கள்.

- பயணிப்போம்

https://www.kamadenu.in/news/series/1558-kaalamellam-kannadasna-by-mathiraj.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category

Share this post


Link to post
Share on other sites

காலமெல்லாம் கண்ணதாசன்  7:'யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே..’


 

 

kalamellam-kannadasan-bale-pandiya

 

 

படம்    : பலே பாண்டியா (1962)

இசை    : விஸ்வநாதன் ராமமூர்த்தி

 

குரல்    : டி.எம்.சௌந்தரராஜன்

* * *

யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே

அட அண்டங் காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியல்லே

பேரெடுத்து உண்மையைச் சொல்லி பிழைக்க முடியல்லே

இப்போ பீடிகளுக்கும் ஊதுபத்திக்கும் பேதம் தெரியல்லே

நான் இருக்கும் இடத்தினிலே அவன் இருக்கின்றான்

அவன் இருக்கும் இடத்தினிலே நான் இருக்கின்றேன்

நாளை எங்கே யாரிருப்பார் அதுவும் தெரியல்லே

இப்போ நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் பேதம் புரியல்லே

அட என்னத்தச் சொல்வேண்டா தம்பி என்னத்தச் சொல்வேண்டா

தம்பி ஒருவன் வெளியில் நின்று காசை எண்ணுகிறான்

நம்பி ஒருவன் சிறையில் வந்து கம்பி எண்ணுகிறான்

உண்மை இன்று கூட்டுக்குள்ளே கலங்கி நிற்குதடா

அட உருட்டும் பெரட்டும் சுருட்டிக் கொண்டு வெளியில் நிற்குதடா

அட என்னத்தச் சொல்வேண்டா தம்பி என்னத்தச் சொல்வேண்டா

மூடருக்கும் மனிதர்போல முகம் இருக்குதடா

மோசம் நாசம் வேஷம் எல்லாம் நிறைந்திருக்குதடா

காலம் மாறும் வேஷம் கலையும் உண்மை வெல்லுமடா

கதவு திறந்து பறவை பறந்து பாடிச் செல்லுமடா

அட என்னத்தச் சொல்வேண்டா தம்பியோ என்னத்தச் சொல்வேண்டா

* * *

ஒரு பாடலுக்கு பல்லவி மிகவும் முக்கியம். அதிலும் பாடல் துவங்கும் முதல் வரி அதிமுக்கியம். ஒவ்வொரு சரணத்தின் முடிவிலும் பல்லவியின் ஏதேனும் இரண்டு வரிகள் மீண்டும் ஒலிக்கும். கேட்கும்  முழு பாடலும் கேட்பவருக்கு மனப்பாடம் ஆகுமா என்று சொல்லமுடியாது. அதனால் பாடலின் துவக்க வரிகள் சட்டென்று மனதில் தங்குவதுபோல் இருக்கவேண்டும். எளிமையாகவும் சொல்லவருவதை சட்டென்று விளக்குவதுபோலவும் அமைவது சிறப்பு.

கவியரசரின் பாடல்களில் முதல் வரி அப்படியானதுதான். முதல் வரியைத் தொடர்ந்து அடுத்தடுத்த வரிகளைப் பின்னுவதில் கைதேர்ந்தவர் கவியரசர். பல பாடல்களுக்கு `ஓப்பனிங்' என்னும் முதல் வரி கிடைக்காமல் மிகவும் அவதியுறுவார் என்று சொல்வார்கள். ஆனால் முதல் வரியை முடிவு செய்துவிட்டால் பிறகு துளியும் மாற்றமின்றி எளிதில் பாட்டை எழுதிவிடுவார் என்று போற்றுவார்கள்.

பி.ஆர்.பந்துலு இயக்கத்தில் 1962ம் ஆண்டு வெளியான படம் பலே பாண்டியா. சிவாஜியும் எம்.ஆர்.ராதாவும் நடித்த பிரபலமான படம். சிவாஜி மூன்று வேடங்களில் முதன்முறையாக நடித்த படமும் இதுவே. குழந்தை முகமும் கொழுகொழு உருவமுமாக `இன்னொசன்ட்' சிவாஜி படம் முழுக்க கலக்கி எடுத்திருப்பார். எம்.ஆர்.ராதாவைச் சொல்லவே வேண்டாம். படம் முழுக்க நையாண்டியும் காமெடியுமாக அதகளம் செய்திருப்பார்.

நான் என்ன சொல்லிவிட்டேன் நீ ஏன் மயங்குகிறாய், வாழ நினைத்தால் வாழலாம், மாமா மாப்ளே, யாரை எங்கே வைப்பது, ஆதிமனிதன், அத்திக்காய் காய் காய்... முதலான படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட்டடித்தன.

அதிலும் படத்தை மையப்படுத்தி வரும் பாடலான `யாரை எங்கே' பாடலில் தத்துவத்தையும், இயலாமையையும், நையாண்டியையும் ஒருசேர கலந்து தந்திருப்பார் கவியரசர்.

1523592753.jpg

* * *

யாரை எங்கு வைப்பது என்பதுதான் நம் யாருக்கும் புரிவதேயில்லை. ``நான் அவனை எப்படியெல்லாம் நினைச்சிருந்தேன் தெரியுமா?'', ``அவன் போய் அப்படி செய்வான்னு நினைக்கவேயில்லை'' என்பது போன்ற வசனங்களைத்தான் வாழ்க்கையில் அதிகம் கேட்டிருப்போம். நாமும் சொல்லியிருப்போம்.

காரணம், சிலருக்கு தகுதிக்கு மீறிய இடம் தந்துவிடுவோம். அல்லது அப்படி அமைந்துவிடும். குடும்பத்தில் மட்டுமின்றி நிறுவனங்களுக்கும் அரசுக்கும் இது பொருந்தும். யாரை எங்கே வைப்பது என்கிற தெளிவு வந்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும். அப்படி வைக்கமுடியாமல் அவதியுறும் நேரமெல்லாம் கவியரசரின் இந்தப்பாடல் தானாக நினைவுக்கு வந்துவிடும். அது அந்நேர மனதிற்கு அத்தனை ஆறுதல் தரும்.

யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே என்னும் கவியரசரின் வரிகள் இன்றைய அரசியல் சூழலுக்கும் அப்படியே பொருந்துகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவை முதல்வராக்க மக்கள் ஓட்டுப்போட, அவரும் முதல்வரானார். நாடாளுமன்றத் தேர்தலில் `மோடியா, இந்த லேடியா' என்று வாக்காளர்களைக் கேட்டு நாடாளுமன்ற மொத்த இடங்களையும் அள்ளினார். ஆனால் மோடி இந்தியாவின் பிரதமரானார்.

ஜெயலலிதா உடல்நலம் குன்றி மறைந்துபோனார். அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களுக்குள் தேர்வு செய்து எடப்பாடி முதல்வரானார். இதில் நடந்த திரைமறைவு நாடகங்கள் ஒரு திரைப்படத்திற்கு சற்றும் குறைவில்லாதவை. இன்று தமிழகமே காவிரி பிரச்சினையில் கொந்தளிப்பாக உள்ள நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத பிரதமருக்குப் பச்சைக்கொடி காட்டுவோம் என்கிறார் ஜெயலலிதாவின் வழி வந்த (?) அவரது அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படி நடக்குமா என்று யோசிக்க வேண்டியிருக்கிறது.

படத்தில் நல்ல சிவாஜியை, கெட்ட சிவாஜி என்று எண்ணி சிறைக்குள் அடைத்துவிடுவார்கள். சிறைத் தோழர்களுக்கு மத்தியில் அவர் பாடுவதுபோல் அமைந்த பாடலில், நான் இருக்கும் இடத்தினிலே அவன் இருக்கின்றான். அவன் இருக்கும் இடத்தினிலே நான் இருக்கின்றேன் என்று எழுதிய கண்ணதாசன் அடுத்த வரியை `நாளை எங்கே யாரிருப்பார் அதுவும் தெரியல்லே' என்று எழுதுகிறார். அதனால்தான் அவர் கவியரசர். சின்னச் சின்ன வரிகளுக்குள் வாழ்க்கையைச் சொல்ல அவரால்தான் முடிந்திருக்கிறது. அந்த வரிகளை வாழ்க்கையின் அனைத்து இடங்களிலும் நம்மால் பொருத்திக்கொள்ள முடிகிறது.

அண்டங்காக்கை எது? குயில்கள் எது? பீடிகள் எவை? ஊதுபத்திகள் எவை? நல்லது எது? கெட்டது எது? அந்த பேதம் தெரியாமல்தான் அனைவரும் விழித்துக்கொண்டிருக்கிறோம். அதிகாரத்தை எதிர்த்து செய்யமுடிவது ஒன்றுதான். போராடுவது. எல்லா உரிமைகளும் போராடிப் பெறப்பட்டவையே.

சம உரிமை, சக மனிதம், ஒழுக்கம், கட்டுப்பாடுகள் எல்லாவற்றையும் தாண்டி, சுரண்டலும், வஞ்சகமும், ஏமாற்றுதலும் தினம்தினம் நிகழ்ந்துகொண்டேயிருக்கின்றன. இது ஒரு தொடர்ச்சி. உலகம் உள்ளவரை இரண்டும் இருக்கும். இந்த இரண்டுக்குமான போராட்டத்தை பாடல்வரிகளாக்கியதால்தான் காலமெல்லாம் கண்ணதாசனின் பாடல்கள் நிமிர்ந்து நிற்கின்றன.

``அட என்னத்தச் சொல்வேண்டா தம்பி என்னத்தச் சொல்வேண்டா'' என்று ஒவ்வொரு சரணத்தின் பின்பும் இரண்டு வரிகள் வரும். பாடல் முடியும் தருணத்தில் வரும் தம்பியை, தம்பியோ என்று ஒரு அழுத்தம் கொடுத்து டி.எம்.எஸ். பாடியிருப்பது க்ளாஸ். மீண்டும் ஒருமுறை அந்தப் பாடலைக் கேளுங்கள்.

மூடருக்கும் மனிதர்போல முகம் இருக்குதடா

மோசம் நாசம் வேஷம் எல்லாம் நிறைந்திருக்குதடா

காலம் மாறும் வேஷம் கலையும் உண்மை வெல்லுமடா

வாழ்க்கை முழுவதும் வஞ்சகத்தையும், கண்ணீரையும் சந்தித்துக்கொண்டே வந்தாலும், காலம் மாறும், வேஷம் கலையும், உண்மை வெல்லும் என்கிற நம்பிக்கைகளை நமக்குத் தந்துகொண்டே இருப்பவை கவியரசரின் பாடல்கள்.

- பயணிப்போம்

https://www.kamadenu.in/news/series/1804-kalamellam-kannadasan-bale-pandiya.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category

Share this post


Link to post
Share on other sites

காலமெல்லாம் கண்ணதாசன் 8: 'செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்’


 

 

sendhalam-poovil-kanandasan

 

படம்        : முள்ளும் மலரும்

இசை        : இளையராஜா

 

பாடியவர்    : கே.ஜே.ஏசுதாஸ்

 

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்

என்மீது மோதுதம்மா

பூவாசம் மேடை போடுதம்மா

பெண்போல ஜாடை பேசுதம்மா

அம்மம்மா... ஆனந்தம்...

 

வளைந்து நெளிந்து போகும் பாதை மங்கை மோகக் கூந்தலோ

மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ

ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளைத் தேடுது

ஆசைக்குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது

காடுகள் மலைகள் தேவன் கலைகள் (செந்)

 

அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாகப் போகிறாள்

ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூடப் பார்க்கிறாள்

பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்

பட்டம் தரத் தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்

மலையின் காட்சி இறைவன் ஆட்சி  (செந்)

 

இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை

இதழை வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை

ஓடை தரும் வாடை காற்று வான் உலகைக் காட்டுது

உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னைக் கூட்டுது

மறவேன் மறவேன் அற்புதக் காட்சி  (செந்)

* * *

பயணித்துக்கொண்டே இருப்பவன் மனிதன். உள்ளும் புறமுமாக அவனது பயணத்தில் உடன் வந்து, நேரத்தையும் தூரத்தையும் மறக்கச்செய்பவை பாடல்கள். அவை செய்யும் மாயம் அலாதியானது. தாலாட்டில், காதலில், கூடலில், துக்கத்தில், கண்ணீரில் என்று எல்லா நேரமும், எல்லாப் பொழுதுக்குமான ஆறுதல், பாடல்களே. பகலில் கேட்பதற்கென்று சில, இரவில் தாலாட்ட சில... என்று இசையாலும் பாடல்களாலும் பின்னப்பட்டது நம் வாழ்க்கை.

``அந்தப் பாட்டை எங்க கேட்டாலும் அங்கேயே நின்னுடுவேன்'', ``ரெண்டே வரியில கொன்னுட்டான்யா'' என்கிற வசனங்களை பிறர் சொல்லக் கேட்டிருப்போம். ஏன் பிடிக்கும் எதனால் பிடிக்கும் என்றெல்லாம் தெரியாமல் உள்ளத்தின் உள்ளுக்குள்ளேயே தங்கிவிடுபவை பல பாடல்கள். அப்படி நம் ஆன்மாவை அசைக்கும் பல பாடல்களைத் தந்தவர் கவியரசர் கண்ணதாசன்.

1978ல் வெளிவந்த படம் முள்ளும் மலரும். உமாசந்திரன் எழுதிய நாவலை அற்புதமாகப் பாடமாக்கியிருப்பார் மகேந்திரன். முள்ளும் மலரும் என்றால் முள் மலர் இரண்டும் என்று அர்த்தம் கொள்ளலாம். முள்ளும் நிச்சயம் ஒருநாள் மலரும் என்றும் அர்த்தம் கொள்ளலாம்.

அண்ணன் தங்கைப் பாசத்தை மிகையின்றி இயல்பாகச் சொன்ன படம். தலைப்பைக் கேட்டதும் தன் இயல்பான நடிப்பில் `காளி' என்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கும் ரஜினியும், அவரது தங்கையாக ஷோபாவின் நடிப்பும், மலைப்பயணத்தில் சரத்பாபு பாடுவதாக அமைந்திருக்கும் `செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்' பாடலும் நினைவுகளில் அலைமோதும்.

1524199656.jpg

மலைப்பாதையில் பயணிக்கும் ஜீப்பில் தன் தோழியரோடு ஏறி உட்கார்ந்து, நான்தான் டிரைவர், நீ கண்டக்டர், போலாமா என்று சிறுபிள்ளை வண்டியோட்டுவதுபோன்ற ஷோபாவின் பாவனைகள் ஒரு தனிக் கவிதை. அதனைப் பார்த்துக்கொண்டிருக்கும் சரத்பாபுவுக்கு அப்போதே ஷோபாவின் மீது காதல் மலர்ந்திருக்கும்.

இப்போது அவர்களை அழைத்துச்செல்லும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு ஜீப்பைக் கிளப்புகிறார். தான் விரும்பிய பெண்ணுடனான பயணம்... உள்ளம் எவ்வளவு துள்ளும்? அந்தத் துள்ளலிலிருந்து இயற்கையையும் பெண்ணையும் காதலையும் ஒன்றாய்க் கலந்து தரும் பாடல்தான் `செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்'...

பாடலின் துவக்கத்தில் ஜேசுதாசின் குரலில் வரும் `ஹம்மிங்'கும், இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசையும் செய்யும் மாயம் அற்புதம். சில பாடல்களில் இசை முந்திக்கொள்ளும். சிலவற்றில், வரிகளுக்கும் குரலுக்கும் வழிவிட்டு இசை ஒதுங்கிக்கொள்ளும். அப்படியில்லாமல் வரிகளும், இசையும், குரலும் ஒன்றோடு ஒன்று குழைந்து கேட்போர் மனதைக் கொள்ளையிடும் ரசவாத வித்தையைச்செய்த பாடல். மலைப்பாதைப் பயணத்தின் இதத்தை, காட்டுப்பூக்களின் வாசத்தை, கண்முன் பச்சைப்பசேலென்று விரியும் இயற்கையை, குளிர்க் காற்றை உணரச்செய்யும் பாடல்.

அவள் அருகிலிருக்கிறாள். அவள்மீது காதல் வயப்பட்டிருக்கிறேன். அதை அவளிடம் சொல்லவேண்டும். அதனை இயற்கையின் துணைகொண்டு சொல்லவேண்டும். அவளுடனான அந்தப் பயணம் அவனை என்னவெல்லாம் செய்கிறது என்பதாக அமைந்த பாடல்.

`பூவாசம் மேடை போடுதம்மா, பெண்போல ஜாடை பேசுதம்மா' - தென்றலை பெண்ணாக பாவித்து அது என்மீது மோதுகிறது. பெண்ணைப்போல் ஜாடை பேசுகிறது என்கிற கவிஞரின் கற்பனை, காதல் குறும்பு. 

அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாகப் போகிறாள்

ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூடப் பார்க்கிறாள்

பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்

பட்டம் தரத் தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்

முதல் சரணத்தில் இயற்கையை பெண்ணாக, அவளது உருவமாக, வெட்கமாக வர்ணித்த கவியரசர் இரண்டாவது சரணத்தில் கவிதையைப் பாடலாக்கியிருப்பார். மேகங்களால் மூடப்பட்ட மலைக்காட்சியை, ஜரிகை சேலைகொண்டு மலையை மூடப்பார்ப்பதாக எழுதிய வரிகள் கவித்துவத்தின் உச்சம். பள்ளம் சிலர் உள்ளம் எனப் படைத்த ஆண்டவனைத் தேடுகிறாராம்... அவனுக்குப் பட்டம் தருவதற்கு. இடையில் அவரது தனித்துவமான தத்துவ வரிகளையும் இணைத்திருப்பது அழகு.

காடுகள் மலைகள் தேவன் கலைகள்

மலையின் காட்சி இறைவன் ஆட்சி

மறவேன் மறவேன் அற்புதக் காட்சி

இவை எல்லா சரணத்திலும் வரும் கடைசி வரிகள். காடுகளும் மலைகளும் இறைவனுடையவை.  இயற்கையை நாம் அனுபவிக்கமட்டுமே அனுமதிக்கப்பட்டிருக்கிறோம். நாம் எப்படி அவற்றை உருவாக்கவில்லையோ அப்படி அவற்றை அழிக்கவும் நமக்கு உரிமையில்லை.

எப்போது இந்தப் பாடலைக்கேட்டாலும், சரத்பாபு ஷோபாவோடு சேர்ந்து அந்த ஜீப்புக்குள் நாமும் அமர்ந்து அந்த மலைப்பயணத்தை அனுபவிப்பதாக உணரச்செய்யும் பாடலும் இசையும்.

- பயணிப்போம்

https://www.kamadenu.in/news/series/1981-sendhalam-poovil-kanandasan.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category

Share this post


Link to post
Share on other sites

காலமெல்லாம் கண்ணதாசன் 9: பொன்னை விரும்பும் பூமியிலே...


 

 

kalamellam-kannadasan-alayamani

 

படம்    : ஆலயமணி

இசை    : எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி

 

குரல்    : டி.எம். சௌந்தரராஜன்

 

* * *

 

பொன்னை விரும்பும் பூமியிலே

என்னை விரும்பும் ஓருயிரே

புதையல் தேடி அலையும் உலகில்

இதயம் தேடும் என்னுயிரே

 

ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே

ஆலயமணியின் இன்னிசை நீயே

தாய்மை எனக்கே தந்தவள் நீயே

தங்க கோபுரம் போல வந்தாயே

புதிய உலகம் புதிய பாசம்

புதிய தீபம் கொண்டு வந்தாயே

 

பறந்து செல்லும் பறவையைக் கேட்டேன்

பாடிச் செல்லும் காற்றையும் கேட்டேன்

அலையும் நெஞ்சை அவரிடம் சொன்னேன்

அழைத்து வந்தார் என்னிடம் உன்னை

இந்த மனமும் இந்த குணமும்

என்றும் வேண்டும் என்னுயிரே

ஆலமரத்தின் விழுதினைப் போலே

அணைத்து நிற்கும் உறவு தந்தாயே

வாழைக் கன்று அன்னையின் நிழலில்

வாழ்வது போலே வாழவைத்தாயே

உருவம் இரண்டு உயிர்கள் இரண்டு

உள்ளம் ஒன்றே என்னுயிரே

 

* * *

தேடல் இல்லாத மனிதனைத் தேடினாலும் கண்டுபிடிக்கமுடியாது. ஒருநாளில் நாம் காணும் மனிதர்களை சற்று கவனித்துப்பார்த்தால், எல்லோரும் எதையோ தேடிக்கொண்டேயிருக்கிறார்கள். தேடித் தொலையும் விழிகளுடன் எப்போதும் பரபரப்பு. பெரும்பாலான மனிதர்களின் தேடல் பணம்தான். பணம் இருந்தால் எல்லாத் தேவைகளும் தீர்ந்துவிடும்... என்னும் மாயை அப்படித் தேட வைக்கிறது.

வாழ்க்கை முழுக்க பொருளைத் தேடித் தேடி, வாழ்வின் பொருளை உணர முடியாமலே போய்விடுகிறது. எனில் வாழ்வின் பொருள்தான் என்ன? வாழ்க்கைக்குப் பொருள் தேவையில்லையா? நிச்சயம் தேவைதான். வாழ்வதற்குப் பொருள்வேண்டும். வாழ்ந்ததற்கும் பொருள் வேண்டும்.

எதையாவது இழக்கும்போது, இந்த உண்மை நம் முகத்தில் பளீரென அறையும். அந்த இழப்புதான் நாம் இதுவரை எவற்றையெல்லாம் இழந்துவந்திருக்கிறோம் என்பதை நமக்கு உணர்த்தும்.

பணத்தையெல்லாம் பெரிதாக எண்ணாமல் சுய ஒழுக்கத்தோடும், அறத்தோடும் வாழும் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கும், பணம் இல்லாத சூழலில், பணத்தேவைக்காக படும் அவமானத்தில், எதுவும் செய்ய இயலாத கையறு நிலையில், பணம்தான் வாழ்க்கையோ, பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லையோ என்கிற எண்ணம் தோன்றும். ஆனால், நேர்மையாயிருப்பதின் உச்சபட்ச மகிழ்ச்சியே நேர்மையாக இருப்பதுதான். அந்த உணர்வை எத்தனை பொருளாலும் புதையலாலும் அளித்துவிட முடியாது.

ஆரோக்கியமான உடல் உறுப்புகளோடு பிறக்கும் குழந்தை கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். ஊனத்தோடு பிறக்கும் குழந்தைகளோ கடவுளின் குழந்தைகள். அவர்களுக்குத்தான் அதிகபட்ச அக்கறையும், கவனிப்பும் தேவைப்படுகிறது. ஒரு மனிதனுக்குத் தேவையானது ஆரோக்கியமும் ஊனமற்ற உடலும் மனமும்தான். அதைக்கொடுத்த இறைவனே, மனிதன் அனுபவிக்க இயற்கையையும் படைத்திருக்கிறான். உங்கள் தேடல் உங்கள் பாடு. எதை அடைய, எதைத் தேடுகிறோம்... அது கிடைக்கும்.

எவ்வளவு பொருள் சேர்த்தாலும், உனக்காக நாலு நல்ல மனிதர்களைச் சேர்த்துக்கொள் என்பார்கள். எவ்வளவு சத்தியமான வார்த்தைகள். பெரும் பணக்காரர்களிடமும், அதிகார வர்க்கத்திடமும், கண்ணசைக்கும் முன்னரே சேவகம் செய்ய ஆயிரம்பேர் காத்திருப்பர். அதெல்லாம் அவர்கள் மீதுள்ள அன்பாலா? இல்லை, அவர்களிடம் உள்ள பணத்தாலும் பயத்தாலும். இரண்டும் போனால் எல்லாம் போய்விடும்.

எது போனாலும், நம் மீது அக்கறை கொள்ள, கவனித்துக்கொள்ள, புரிந்துகொள்ள, சுயநலமற்ற அன்புகொண்ட இதயம் ஒன்று இருந்தாலும் போதுமல்லவா? அப்படி ஓர் இதயத்தை அடைவது எத்தனை சுகம்? அதுபோன்ற ஏராளமான இதயங்களைப் பெற, நம் வாழ்க்கையை நாம் எப்படி அமைத்துக்கொள்ளவேண்டும் என்று சிந்திக்கவேண்டும்தானே?

ஒரு மனிதன், இருபது வயதுவரை பெற்றோருக்குப் பிள்ளையாக இருக்கிறான். இருபதிலிருந்து முப்பதுக்குள் மட்டும்தான் அவனுக்குப் பிடித்த அவனது வாழ்க்கையை வாழ்கிறான். வாழ்க்கை என்றால் என்ன என்பதைக் கண்டுகொள்கிறான். முப்பதுக்குப் பிறகு, அவனது பிள்ளை குடும்பம் என்று, அதற்காகவே தன் மீதி வாழ்வை செலவழிக்கிறான். எல்லா இன்ப துன்பங்களையும் அனுபவித்து, பிள்ளை பெற்று, வளர்த்து ஆளாக்கி அவர்களது வாழ்க்கைக்கான வழியைக் காண்பித்து முதியோனாகிறான். பிள்ளை பேரன் குடும்பம் என்று மகிழ்ச்சியாக எஞ்சிய வாழ்வைக் கழிக்கும் காலத்தில், ஆதரவின்றி, பேச ஆளின்றி முதியோர் இல்லத்தில் சேர்க்கப்படுவது எத்தனை துயரமானது.

1524803708.jpg

ஒரு குழந்தைக்குத் தேவைப்படும் கவனிப்பும் அக்கறையும் முதியோருக்கும், நோயுற்றவருக்கும், ஊனமுற்றோருக்கும் தேவைப்படும். அவர்களது தேவைகளை நாம் நிறைவேற்றுகிறோமா என்பதை நமக்கு நாமே கேட்டுக்கொள்ளத்தான் வேண்டும். காரணம், நாமும் ஒருநாள் பழுப்பு இலையாவோம். இலை கிழிந்து அந்தரத்தில் தொங்கும்.

உடலுக்கு நோவென்று இரண்டு நாள் மருத்துவமனையில் இருந்து பார்த்தால் தெரியும் வாழ்க்கை. அதுவரை தோன்றாத தத்துவங்களும், பெரியோர் சொல்லி புரியாமல் இருந்த வாழ்வும் புரியும். நன்றாக இருந்து, ஏதேனும் ஒரு விபத்தில் கையையோ, காலையோ அல்லது கண்களையோ இழப்பது எத்தனை கொடிது? வாழ்வின் புரிதல் என்பது இழப்பில் இருந்துதான் தெரியவேண்டுமா? இருக்கும்போதே உணர்ந்து தெளியலாம்தானே?

* * *

பொதுவாக கண்ணதாசன் பாடல்களுக்கான இந்தக் கட்டுரைகளை எழுதும்போது, பாடல் இடம்பெற்ற  படத்தை முழுமையாகப் பார்ப்பேன். முன்னரே பார்த்த படமாக இருந்தாலும், எல்லாப் படத்தின் கதையும் மனதில் தங்கியிருப்பதில்லை. பாடல்கள் அப்படி இல்லை. படத்தில், பாடலுக்கான தேவை என்ன? எந்தச் சூழலில் அந்தப் பாட்டு வருகிறது. அந்தச் சூழலுக்கு அந்தப் பாடல் எவ்வாறு பொருந்துகிறது என்பதைச் சொல்ல அது உதவியாக இருக்கும்.

`பொன்னை விரும்பும் பூமியிலே' என்ற இந்தப் பாடல் மனசின் அடியாழத்தில் ஏற்கெனவே தங்கிப்போன பாடல். ஆலயமணியின் கதை உண்மையில் இப்போது நினைவில் இல்லை. ஆனால் இந்தப் பாடல் எனக்குள் கிளர்த்திய உணர்வுகள்தான் இந்தக் கட்டுரையின் ஆரம்ப பத்திகள். கண்ணதாசன் இப்படித்தான் இதயங்களை வென்றார்.

எந்த விளக்கவுரையும், பொழிப்புரையும் தேவைப்படாத எளிமையான வரிகளுக்குச் சொந்தக்காரர். அவரின் வரிகளுக்கு நாம் அர்த்தம் சொல்லத்தேவையில்லை. அவரது வரிகள்தாம் நமக்கு ஆயிரம் ஆயிரம் அர்த்தங்களைச் சொல்லித்தருகின்றன.

புதையல் தேடி அலையும் உலகில், இதயம் தேடும் உயிரை எப்படியெல்லாம் போற்றிப் பாராட்டலாம்?  ஆயிரம் மலரில் ஒரு மலர், ஆலயமணியின் இன்னிசை, தாய்மை தந்த தங்க கோபுரம், புதிய உலகம், புதிய பாசம்,  இருளைப்போக்கி வாழ்க்கையில் புதிய ஒளிக்கீற்றைப் பரவச்செய்யும் புதிய தீபம் என்கிறார் கண்ணதாசன்.

பறவைகள், ஆலமரம், வாழைக்கன்று என்று அவர் பயன்படுத்தும் சொற்கள், நமக்கு நன்கு பழகியவை, எளிமையாகப் புரிபவை. அவற்றின் மூலம் அவர் உணர்த்தும் பொருள் புதிது. இயற்கையை உதாரணம் கொண்டு எழுதப்படும் அவர் பாடல்கள் இயற்கையைப்போலவே காலங்கள் கடந்தும் இருந்துகொண்டிருக்கும் என்பது உண்மைதானே?

கருணை மகன் கால் இழந்தான்

கண்ட மக்கள் மனமொடிந்தார்...

என்று பாடலின் ஆரம்பத்தில் தொகையறா வரும்.

கால்களை இழந்த சிவாஜி, சக்கர நாற்காலியில் இருந்து எதிரில் நிற்போரின் கால்களை அத்தனை ஏக்கத்தோடு பார்ப்பதாக அமைந்திருக்கும் காட்சி மனதை உருக்கும்.

இழப்புக்குப்பின் தெரியவரும் உண்மைக்கு வலி அதிகம். எல்லாமும் நம்மிடம் இருக்கின்றது. இருக்கும்போதே சுதாரித்துக்கொள்வோம். இழந்தோர்க்கு உதவியாய் அன்பாய் இருப்போம்.

வாழ்வின் பொருள் அன்பன்றி வேறென்ன?

- பயணிப்போம்

https://www.kamadenu.in/news/series/2166-kalamellam-kannadasan-alayamani.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, நவீனன் said:

பறந்து செல்லும் பறவையைக் கேட்டேன்

பாடிச் செல்லும் காற்றையும் கேட்டேன்

அலையும் நெஞ்சை அவரிடம் சொன்னேன்

அழைத்து வந்தார் என்னிடம் உன்னை

இந்த மனமும் இந்த குணமும்

என்றும் வேண்டும் என்னுயிரே

சில மாதங்களின் முன்னர் இந்தப்பாடலை ஆரம்ப தொகையறாவுடன் கேட்க முடிந்தது. உங்களுக்காக பகிர்கின்றேன். 

நவீனன் மன்னிப்பாராக.

 

 

Share this post


Link to post
Share on other sites

காலமெல்லாம் கண்ணதாசன் 10: அஞ்சு ரூபாய்’ பாட்டு..!


 

 

5-rupees-song

  

 

 

படம்    : பரிசு


இசை    : கே.வி.மகாதேவன் 
குரல்    : பி.சுசீலா, டி.எம்.சௌந்தரராஜன்

* * *

 

எண்ண எண்ண இனிக்குது ஏதேதோ நினைக்குது
வண்ண வண்ணத் தோற்றங்கள் அஞ்சு ரூபா
கண்ணை வட்டமிட்டு மயக்குது அஞ்சு ரூபா

கல்லால் அடித்த அடி வலிக்கவில்லை
அந்தக் காயத்திலே உடம்பு துடிக்கவில்லை
கண்ணால் அடித்த அடி வலிக்குதடி
நீ கண்ணால் அடித்த அடி வலிக்குதடி
அந்தக் காயத்திலே மனது துடிக்குதடி

தாயார் அணைத்திருந்த மயக்கமுண்டு
நான் தந்தை மடியிருந்த பழக்கமுண்டு
நீ யாரோ நான் யாரோ தெரியாது
நீ யாரோ நான் யாரோ தெரியாது
இன்று நேர்ந்தது என்னவென்று புரியாது

வர வர இதயங்கள் மலர்ந்து வரும்
வளமான எண்ணங்கள் மிதந்து வரும்
பல பல ஆசைகள் நிறைந்து வரும்
பருவத்தின் மேன்மை புரிந்து விடும்

ஒருவருள் ஒருவரை ஒன்றாக்கி வைத்தது
விட்ட குறை தொட்ட குறை அஞ்சு ரூபா
இனி வேகத்தில் வளரும் அஞ்சு ரூபா

* * *

வார்த்தைகளில் விவரித்துவிட முடியாத ஓர் உணர்வு காதல். என்றாலும் சங்க இலக்கியங்களிலும், திரைப் பாடல்களிலும், கவிதைகளிலும் அதிகம் எழுதப்படுவது காதல்தான். அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபிபோல ஊற்றெடுத்துக்கொண்டே இருப்பது காதல். அதிகம் பிரச்சினைக்குள்ளாவதும் காதல்தான். காதல் என்றால் என்னவென்று ஒவ்வொருவரும் அவரவர் அனுபவத்தை வைத்து அணுகுகின்றனர்.

காதலில் முக்கிய பங்கு வகிப்பது கண்கள் என்பர். கண்களை, பார்வையை, காதலை இணைத்து வந்த பாடல்களையும் கவிதைகளையும் பட்டியலிடவே முடியாது. காரணம், காதல் துவங்குவது கண்களில்தான்.

எம்.ஜி.ஆர். - சாவித்திரி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த `பரிசு' திரைப்படத்தில் இடம்பெற்ற `எண்ண எண்ண இனிக்குது' பாடலில் காதலின் படிமத்தை, அதன் வளர்நிலையை வரிவரியாக எழுதியிருக்கிறார் கவியரசர்.

கண்களுக்கும், காதல் கொண்ட கண்களுக்கும்தான் எத்தனை வேறுபாடு? காதல் சுமந்த கண்களின் பாரத்தையும் ஈரத்தையும் தாங்கவேமுடியாது; துடைத்திடவும் முடியாது. காதலின் பார்வையில் தடுமாறாதவர்கள் எவருமில்லை. காதலை முதலில் காட்டிக்கொடுப்பதும் கண்கள்தான். காதல் கொண்ட கண்களில் கனிவு கூடும். ஒருவித மயக்கநிலையில் இருக்கும், இருக்கவைக்கும். அந்தப் பார்வையையும் காதலையும் எப்போதும் எண்ணத்திலேயே வைத்திருக்கும். எப்போதும் அதன் நினைவிலேயே இருக்கும். அந்த நினைவு இனித்துக்கொண்டே இருக்கும்.

1525396550.jpg

எண்ண எண்ண இனிக்குது, ஏதேதோ நினைக்குது... என்ற வரிகளில் `ஏதேதோ' என்பதன் அர்த்தத்ததை கேட்பவரின் எண்ணத்துக்கு விட்டது கவிஞரின் திறமை. காதல் கொண்ட மனம் எத்துணை துன்பம் வந்தாலும் தாங்கிக்கொள்ளும். உண்மையில் அத்துன்பங்களெல்லாம் அதற்குப் பொருட்டே அல்ல. கண்ணால் அடித்த அடியை மட்டும் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை, அந்தக் காயத்தில்தான் மனது துடிக்குதடி என்கிறார் கவியரசர்.

காதலித்த அனைவரும் சந்திக்கும் பிரச்சினை, பெற்றோரா காதலா எது முக்கியம் என்னும் கேள்வி. அடுத்த சரணத்தில் அதற்கு அற்புதமாக விடையளிக்கிறார் கண்ணதாசன்.

தாயின் அணைப்பில் மயக்கத்தை அனுபவித்திருக்கிறேன், தந்தை மடியில் விளையாடி உறங்கிய பழக்கமும் உண்டு. ஆனால் நீ யார் என்று தெரியாது, உனக்கும் எனக்கும் முன் பின் பழக்கமேயில்லை, அப்படியிருக்கையில் இன்று இந்த மனதுக்கு என்ன நேர்ந்ததென்றே புரியவில்லை. எதனால், எதன்பொருட்டு, எப்போது, எப்படி என்ற கேள்விகளுக்கெல்லாம் அப்பாற்பட்டதாயிற்றே காதல். ஒரு புதிய உறவை, புதிய நெருக்கத்தை, புதிய கிறக்கத்தை உணரச்செய்வது காதல். பெற்றோர் உட்பட எல்லா உறவுகளையும் மறக்கச்செய்து, நமக்குள் என்ன நேர்கிறது என்றே புரியாமல், ஆனால் நினைக்க நினைக்க நன்றாக இருக்கிறதே... இப்படியே இருந்துவிடக்கூடாதா என்று எண்ணவைக்கும்.

நீ யாரோ நான் யாரோ தெரியாது என்ற வரிகளுக்குப் பின், மீண்டும் ஒலிக்கும் அதே வரியை அதன் பொருள் உணர்ந்து நீட்டி, இன்று நேர்ந்தது என்னவென்று புரியாது.... என அற்புதமாகப் பாடியிருப்பார் பி.சுசீலா.

காதல் வயப்பட்டாயிற்று... பிறகு? அதற்கான விடையைத்தான் அதற்கடுத்து சொல்கிறார் கவியரசர்.

வர வர இதயங்கள் மலர்ந்து வரும்
வளமான எண்ணங்கள் மிதந்து வரும்
பல பல ஆசைகள் நிறைந்து வரும்
பருவத்தின் மேன்மை புரிந்து விடும்

காதலில் காதல் மட்டும்தான் சுயநலம். காதல் கொண்ட மனதுக்குள் சுயநலத்துக்கு இடமில்லை. இந்த உலகமே ஒரு சொர்க்கம்போல இருக்கும். பார்ப்போர் அனைவர் மீதும் அன்புகொள்ளச் செய்யும். எல்லோர் மீதும் அக்கறை காட்டும். எல்லோரும் நல்லவர்களாகவே இருப்பர். இவை எல்லாமே காதலுக்கு இடையூறு இல்லாதபோது மட்டுமே. காதலுக்கு ஒரு துன்பம் என்றால் உலகத்தையே எதிர்த்து நிற்கும் வல்லமையையும் அதே காதல் தரும். அதனால்தான் காதலில் காதல்மட்டும்தான் சுயநலம் கொண்டது.

ஒரு அரும்பாக இருந்த இதயம் மெல்ல மெல்ல வளரும். அதன் நறுமணம் இந்தப் புவியெங்கும் பரவும். மனதில் நல்ல நல்ல எண்ணங்களைத் தோற்றுவிக்கும். தன் காதலின் இணையோடு எப்படியெல்லாம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசைகள் பல்கிப் பெருகும். பருவத்தில் மேன்மையும் பொறுப்பும் வாழ்வும் புரிய ஆரம்பிக்கும் என்று நிறைவுசெய்கிறார் கண்ணதாசன்.

* * *
படத்தில் படகோட்டும் பெண்ணாக இருப்பார் சாவித்திரி. எம்.ஜி.ஆர். அக்கரைக்குச் செல்ல சாவித்திரி படகோட்டுவார். வைத்த கண் வாங்காமல் எம்.ஜி.ஆர். சாவித்திரியைப் பார்க்க, அய்யய்யே... சேச்சேச்சேச்சே... என்னய்யா அப்படிப் பார்க்கிறே.... என்று அலுத்துக்கொள்வது கவிதை. படகில் இருவரும் பயணிக்கும் காட்சியிலும் ஒரு பாடல் உண்டு. ``ஆளைப் பார்த்து அழகைப் பார்த்து ஆசை வைக்காதே....'' என்னும் பாடலும் அற்புதமான பாடலே. அந்தப் பயணத்திற்காக படகோட்டியதற்கு ஐந்து ரூபாயைக் கூலியாகத் தருவார் எம்.ஜி.ஆர்.
அதற்கு அடுத்த சந்திப்பில் வருவதுதான் `எண்ண எண்ண இனிக்குது' பாடல். அந்த அஞ்சு ரூபாயை ஞாபகமாக இந்தப் பாடலில் பொருத்தியிருப்பார் கண்ணதாசன். பாடலின் நிறைவில்,

ஒருவருள் ஒருவரை ஒன்றாக்கி வைத்தது
விட்ட குறை தொட்ட குறை அஞ்சு ரூபா
இனி வேகத்தில் வளரும் அஞ்சு ரூபா
என்று முடித்திருப்பார். 

ஒருவருள் ஒருவராய் ஒன்றாக்கி வைத்த காதல் எல்லாவற்றையும் வளர்க்கும், வளர்க்கவேண்டும்.

காதல் என்பது உணர்தல் மட்டுமன்று, வளர்தலும்தானே?

- பயணிப்போம்

https://www.kamadenu.in/news/series/2374-5-rupees-song.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category

Share this post


Link to post
Share on other sites

காலமெல்லாம் கண்ணதாசன் 11: உள்ளம் என்பது ஆமை


 

 

kaalamellam-kannadasan-by-mathiraj

 

படம்    : பார்த்தால் பசிதீரும்
இசை    : எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி
குரல்    : டி.எம். சௌந்தரராஜன்

* * *

 

உள்ளம் என்பது ஆமை - அதில்
உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்
தூங்கிக் கிடப்பது நீதி

தெய்வம் என்றால் அது தெய்வம் - அது
சிலை என்றால் வெறும் சிலைதான்
உண்டென்றால் அது உண்டு
இல்லை என்றால் அது இல்லை

தண்ணீர் தணல் போல் எரியும் - செந்
தணலும் நீர் போல் குளிரும்
நண்பனும் பகை போல் தெரியும் - அது
நாட்பட நாட்படப் புரியும்

* * *

உள்ளம் என்றால் என்னவென்று கவிஞர்களும் கதையாசிரியர்களும் விதம்விதமாகக் கூறியுள்ளனர்.
உள்ளம் என்பது மலரைப்போன்றது. அதில் ஆசைகள் மலர்வதும் தெரியாது, உதிர்வதும் தெரியாது. உள்ளம் என்பது ஆழ்கடலைப்போன்றது - எப்போது அமைதியாய் இருக்கும், எப்போது பொங்கிப்பிரவகிக்கும் என்பது தெரியாது. மனம் ஒரு குரங்கு - அது கிளைக்குக் கிளை தாவிக்கொண்டே இருக்கும். இன்னும் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்...

உள்ளம் என்பது ஆமை என்கிறார் கவியரசர் கண்ணதாசன். தனக்கு ஓர் ஆபத்து என்று தெரிந்தால், எவரையும் தாக்க முற்படாது. தன் ஓட்டுக்குள், தன்னைத்தானே பதுக்கிக்கொள்ளும். ஆபத்து மட்டும்தான் என்றில்லை, பல நேரங்களில் எதற்கு வீண்வம்பு என்றோ, சோர்விலோ, கோபத்திலோ, பயத்திலோ, பாதுகாப்பை வேறிடத்தில் தேடாது தனக்குள் தானே சுருங்கிக்கொள்ளும். இப்படி உள்ளத்தைச் சுருக்கிக்கொண்டால் என்னவாகும்? உண்மை ஊமையாகிவிடும்.

உண்மை என்றால் என்ன? பொய்மை என்றால் என்ன? எதனைக்கொண்டு இதனை வரையறுப்பது? மனசாட்சிப்படி நடந்துகொள்வது சரியா? சட்டப்படி நடந்துகொள்வது சரியா? மனசாட்சியும் சட்டமும் ஒன்றாகப் பயணிக்கவே பயணிக்காதா? தனி ஒரு மனிதனாக சிந்திக்கையில் ஒவ்வொருவரும் தன் மனசாட்சிக்குக் கட்டுப்படவேண்டும்.

ஒரு சமூகமாகக் கூடி வாழ்கையில் சமூகத்திற்கு எது சரி என்பதை சட்டம் யோசிக்கும். அங்கு சட்டத்திற்குக் கட்டுப்படவேண்டும்.

எல்லா நேரங்களிலும் எல்லாரிடமும் நம் மனதிற்கு சரியெனப்பட்டதை பேசுகிறோமா? நம் எண்ணத்தில் நேர்மை இருந்தாலும் அப்படிப் பேசிட முடிவதில்லை. அந்தப் பேச்சால் அந்த உண்மையால் என்ன நடக்கும்? யாருக்கேனும் பாதிப்பா என்பதைப் பொறுத்தே அமைகிறது அது.

தன்னுடைய மேலதிகாரியிடம் தனக்கு சரியென்று பட்டதைச் சொல்ல முடிகிறதா? ஏழையின் சொல் அம்பலம் ஏறாது என்பார்கள். எனில் அதிகாரத்தைப் பொறுத்துதான் குரல் உயர்த்தமுடிகிறது. தன்னை விட அதிகாரம் மிக்கவர்கள் என்றில்லை, தனக்கு வேண்டப்பட்டவர்கள், நெருங்கியவர்கள், நண்பர்களிடமும் கூட அப்படிப் பேசிவிட முடிவதில்லை.

காரணம், இதனால் அவர்கள் உள்ளம் வருந்துமோ என்ற யோசனையும் பயமும் அப்படிப் பேச விடுவதில்லை.
ஒரு கவிஞனோ படைப்பாளனோ, தன் நெஞ்சில் தோன்றுவதையெல்லாம் படைத்துவிடுவதில்லை. சிலவற்றைத்தான் எடுத்து வைக்கிறார். எழுதுவதைவிட எழுதாமல் விட்டது அதிகம் என்பான் கவிஞன். பேசியதைவிட பேசாமல் விட்டது அதிகம் என்பான் பேச்சாளன்.

உள்ளம் என்பது ஆமை - அதில்
உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்
தூங்கிக் கிடப்பது நீதி

உள்ளம் - உண்மை, ஆமை - ஊமை, சொல்லில் - நெஞ்சில், பாதி - நீதி.... என்று வார்த்தைகள் சந்தத்துக்குள் எத்தனை அழகாகப் பொருந்தியிருக்கின்றன. அப்படிப் பொருத்திய வார்த்தைகளுக்குள் தன் சிந்தனையை, பொருளை எத்துணை கச்சிதமாகப் பொருத்துகிறார் கவியரசர். அதனால்தான் அவர் கவிகளுக்கெல்லாம் அரசர்.

கடவுள் என்ற ஒன்று இருக்கிறதா இல்லையா? இதற்கான பதிலையும், கேட்பவரின் எண்ணத்தை நோக்கியே திருப்பிவிடுகிறார் கண்ணதாசன். மலைப்பிரதேசத்தில் உருண்டையான ஒரு கல் இருக்கிறது. ஆம் அது கல்தான். அதை ஒரு தேர்ந்த சிற்பி செதுக்கிச் செதுக்கி, ஒரு உருவமாக்குகிறான்.

இப்போது கல், சிற்பம் என்ற பேருக்கு உருமாற்றமடைகிறது. அதன் மூலம், கல். ஆனால் ஒரு சிற்பத்தை கல் என்று சொல்லமாட்டோம்தானே? அதே சிற்பம் கருவறைக்குள் வைத்து வணங்கப்படும்போது கடவுள் ஆகிறது.

கல் என்று பார்ப்பதும், சிற்பமாக ரசிப்பதும், கடவுளாக வணங்குவதும் அவரவர் கண்களையும், உள்ளத்தையும் பொருத்தது என்கிறார் கண்ணதாசன்.

சரி என்பதும் தவறு என்பதும் அவரவர் பார்வையைப் பொருத்தது. கல் என்பதும் கடவுள் என்பதும் அப்படியே. உண்டென்றால் உண்டு. இல்லையென்றால் இல்லை. இன்பமும் துன்பமும் கூட அப்படித்தான்.

பெரும்பாலும் நாம் குழம்பிய மனநிலையிலேயே இருக்கிறோம். இருக்கிறதா இல்லையா என்ற சந்தேகம் நம்மை எப்போதும் ஆட்கொள்கிறது. நண்பனா பகைவனா என்பதைக்கூட புரிந்துகொள்ள இயலா நிலையில்தான் இருக்கிறோம். ஆனால் இதெல்லாம் குறுகியகாலம்தான். நாட்பட நாட்படப் புரியும். வாழ்க்கை புரியவைக்கும்.

உண்மை எல்லா நேரமும் உறங்கிக் கிடப்பதில்லை. எல்லா நேரமும் ஊமையாகவும் இருக்கமுடியாது. அது ஒரு நாள் வெடித்துக் கிளம்பும். அன்று புரட்சி உருவாகும். உண்மைக்கு மட்டும்தான் அப்படி ஒரு சக்தி இருக்கிறது. உண்மையைக் கொண்டு உருவாகும் புரட்சி மாபெரும் வெற்றிபெறும் என்பது வரலாறு.

- பயணிப்போம்

https://www.kamadenu.in/news/series/2531-kaalamellam-kannadasan-by-mathiraj.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category

Share this post


Link to post
Share on other sites

காலமெல்லாம் கண்ணதாசன் 12: நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா


 

 

kaalamellam-kannadasan-by-mathiraj

 

படம்    : ஆனந்தஜோதி

இசை    : எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி
குரல்    : பி.சுசீலா

* * *

நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா
பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா
உயிரே விலகத் தெரியாதா
மயங்கத் தெரிந்த கண்ணே உனக்கு உறங்கத் தெரியாதா
மலரத் தெரிந்த அன்பே உனக்கு மறையத் தெரியாதா
அன்பே மறைய தெரியாதா

எடுக்கத் தெரிந்த கரமே உனக்கு கொடுக்கத் தெரியாதா
இனிக்கத் தெரிந்த தமிழே உனக்கு கசக்கத் தெரியாதா
படிக்கத் தெரிந்த இதழே உனக்கு முடிக்கத் தெரியாதா
படரத் தெரிந்த பனியே உனக்கு மறையத் தெரியாதா
பனியே மறையத் தெரியாதா

கொதிக்கத் தெரிந்த நிலவே உனக்கு குளிரத் தெரியாதா
குளிரும் தென்றல் காற்றே உனக்கு பிரிக்கத் தெரியாதா
பிரிக்கத் தெரிந்த இறைவா உனக்கு இணைக்கத் தெரியாதா
இணையத் தெரிந்த தலைவா உனக்கு என்னைப் புரியாதா
தலைவா என்னைப் புரியாதா
* * *
பிரிவுத் துயரை பிழிந்தெடுத்துத் தந்த பாடல்களில் முதன்மையான பாடல் என்று இதனைச் சொல்லலாம். தெரிந்த, தெரியாதா? என்னும் இரண்டு சொற்களைக்கொண்டு கவியரசர் பின்னிய காலத்தால் அழியாத பாடல்தான் `நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா'?
பி.சுசீலா அவர்களின் குரல், பாடலுக்கு உயிர் தந்து, இப்போது கண்களை மூடிக் கேட்டாலும் நம் நினைவுகளை மீட்டெழுப்பி உருகச்செய்யும். பாடலில் - பல்லவி, சரணம் எல்லாவற்றுக்கும் ஒரே டியூன்தான். எம்.எஸ்.வி.- ராமமூர்த்தி அவர்களின் அந்த டியூன்தான் இப்போதும் நம்மைச் சுழன்றடிக்கிறது.
நீண்டகாலம் உடன் வாழ்ந்து இல்லாளை இழந்த ஒரு முதியவனுக்கும், ஏதோ காரணத்தால் பிரிந்துசென்றுவிட்ட காதலனின் நினைவில் வாடும் காதலிக்கும், உயிருக்கு உயிராய் இருந்து இப்போது துரோகியாவிட்ட நண்பனின் நினைவில் வாடுபவனுக்கும், இன்னும் இன்னும் நினைவில் வாழும் ஏராளமான உயிர்களுக்கும்.... எப்போதைக்குமான ஒரே ஆறுதலாய் கவியரசரால் வழங்கப்பட்ட அமுதுதான் `ஆனந்தஜோதி' திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல்.
* * *
நினைவுகள் தேங்கிய குளம்தான் மனிதன். எப்போதெல்லாம் கல் எறியப்படுகிறதோ அப்போதெல்லாம் நினைவுகள் வளையங்களாகி சுற்றிக்கொண்டே இருக்கின்றன. கல்லின் அளவைப் பொறுத்து நினைவுகளின் வளையங்கள் நீண்டு சுழல்கின்றன.
நினைவுகளில் நல்லன கெட்டன எல்லாமும் உண்டு. நினைவுகள் என்பது, கடந்தகாலம் நமக்குள் அழியாமல் தங்கிவிடுவது. கடந்த காலத்தின் எல்லாமும் தங்கிவிடுமா என்றால் இல்லை. எதையெல்லாம் நாம் மறக்கவிரும்புகிறோமோ அவைதான் மீண்டும் மீண்டும் நம் நினைவில் தளும்புகின்றன. 
ஒன்றை விரும்புகிறோம். அதை அடைய விரும்புகிறோம். அதற்காகப் போராடுகிறோம். போராடி அடைகிறோம். அடைந்த ஒன்று இல்லாமல் போகிறது. அடைவதற்காகப் போராடியதை விட இருந்த ஒன்று இல்லாமல்போவதன் வலிதான் எப்போதும் உருக்குகிறது நம்மை.
இழப்பை மனம் ஒருபோதும் விரும்புவதில்லை. தாங்கிக்கொள்வதில்லை. இல்லாமல் போன ஒன்றின் இருப்பிலேயே ஏங்கி ஏங்கி, வலித்து வலித்து, ஆற்றாமையால் பொங்கித் தீர்க்கிறது.
உண்மையில் நம் மனம் எதையும் மறக்க விரும்புவதில்லை. ஆனால் நீ ஏன் மறக்கமுடியாமல் தவிக்கிறாய் என்று நம் மனத்தை நாமே கேள்விகள் கேட்டும் குமைகிறோம். வாழ்வின் ஆகப்பெரிய முரண் இது.
எதுவெல்லாம் மறந்துபோகவேண்டுமோ அதுவெல்லாம் தானாக மறந்துபோகும். இரண்டு நாட்களுக்கு முன் என்னவெல்லாம் நடந்தது என்று நம்மை நாமே ஒரு கேள்வி கேட்டால்... நிறைய நேரம் யோசித்து ஒன்றிரண்டு சம்பவங்களைச் சொல்வோம். 24 மணி நேரத்தில் ஒன்றிரண்டு சம்பவங்கள் மட்டும்தானா நடந்தது? மற்றவையெல்லாம் எப்படி மறந்தது? அந்த இரண்டு சம்பவங்கள் மட்டும் ஏன் நினைவில் தங்கிப்போனது? சிலவற்றை, சிலரை, சில சம்பவங்களை மேலோட்டமாக மறந்தாலும் நம் ஆழ்மனம் நினைவில் வைத்திருக்கும். தேவையற்றதென்று கருதுபவற்றை, நினைவுகள் பிடித்து வைத்திருப்பதில்லை.
உனக்குப் பிடித்தது இது. உன்னைப் பிடித்தது இது. இந்த நிகழ்வின்போது நீ மகிழ்ச்சியாய் இருந்தாய். இது உனக்குப் பிடிக்கவில்லை. இதுபோல் உனக்கு இனி நடக்கவேகூடாது.... என்றெல்லாம் முக்கியத்துவப்படுத்துபவற்றை மட்டுமே ஆழ்மனம் அடுக்கிவைக்கிறது. 
* * *
மனசுக்குக் கவலையாய் இருந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டால், நம்மில் பெரும்பான்மையோர் `பழைய பாடல்கள் கேட்பேன்' என்று பதிலளிப்போம். அந்தப் பழையப் பாடல்களுள் பெரும்பான்மையானவை கண்ணதாசன் பாடல்களாக இருக்கும். பெரும்பான்மையான குரல் பி.சுசீலா அம்மாவின் குரலாக இருக்கும். அவற்றிற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருப்பார். கண்மூடிப் பாடலைக் கேட்டு முடித்திருக்கையில்... இறைவனின் சந்நிதியில் கைதொழுது கவலையையெல்லாம் அவரிடம் கொட்டி, வெளியே வரும்போது ஒரு நிம்மதி பரவுமே... அப்படி, பளிச்சென்று துடைத்துவிட்டதுபோல் இருக்கும்.
இந்தப் பாடலில் கவியரசர் கையாண்டிருக்கும் சொற்கள் அனைத்தும் நம்மிடம் புழக்கத்திலிருக்கும் எளிமையான சொற்கள். எதிர்ச்சொற்களைக் கூட எதிர்மறையாய் இல்லாமல் இயல்பாகப் பயன்படுத்தியிருப்பார். மலர்தலுக்கான எதிர்ச்சொல் உதிர்தல். ஆனால் மலரத் தெரிந்த அன்பே உனக்கு மறையத் தெரியாதா என்றே எழுதியிருப்பார். படிக்கத் தெரிந்த இதழே உனக்கு முடிக்கத் தெரியாதா, படரத் தெரிந்த பனியே உனக்கு மறையத் தெரியாதா என்பதெல்லாம் அழகியலின் உச்சம்.
பல்லவியிலும் முதல் சரணத்திலும் தனித்தனிப் பொருளைக் கையாண்ட கண்ணதாசன், இரண்டாவது சரணத்தில் மட்டும், ஒவ்வொரு வரியின் முடிவை அடுத்த வரியின் தொடக்கமாக்கியிருப்பார். 
கொதிக்கத் தெரிந்த நிலவே உனக்கு குளிரத் தெரியாதா
குளிரும் தென்றல் காற்றே உனக்கு பிரிக்கத் தெரியாதா
பிரிக்கத் தெரிந்த இறைவா உனக்கு இணைக்கத் தெரியாதா
இணையத் தெரிந்த தலைவா உனக்கு என்னைப் புரியாதா
தலைவா என்னைப் புரியாதா...

பிரிக்கத் தெரிந்த இறைவனுக்குப் பின் கடைசியாகத் தலைவனுக்கு வருகிறார். காதல்கொண்ட மனதுக்குத்தான் தெரியும் தலைவன் இறைவனுக்கும் மேல் என்று. இணையத் தெரிந்த தலைவா உனக்கு என்னைப் புரியாதா? என்ற கேள்வியோடு பாடலை நிறைவு செய்திருப்பார்.

அன்பு கொண்ட மனங்கள் அடிக்கடி கேட்டுக் கொள்வது ஒரேயொரு கேள்வியைத்தான். `உனக்கு என்னைப் புரியாதா?' என்ற அந்தக் கேள்வியும் காலமெல்லாம் சுற்றிக்கொண்டேயிருக்கும்... கவியரசரின் பாடலைப்போல.

- பயணிப்போம்

 

https://www.kamadenu.in/news/series/2700-kaalamellam-kannadasan-by-mathiraj-1.html

Share this post


Link to post
Share on other sites

காலமெல்லாம் கண்ணதாசன் 13: உள்ளத்தில் நல்ல உள்ளம்


 

 

kaalamellam-kannadasan-by-mathiraj

 

படம்    : கர்ணன்
இசை    : எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி
குரல்    : சீர்காழி கோவிந்தராஜன்

* * *
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா - கர்ணா
வருவதை எதிர்கொள்ளடா

தாய்க்கு நீ மகனில்லை
தம்பிக்கு அண்ணனில்லை
ஊர் பழி ஏற்றாயடா - நானும்
உன் பழி கொண்டேனடா

மன்னவர் பணி ஏற்கும்
கண்ணனும் பணி செய்ய
உன்னடி பணிவானடா - கர்ணா
மன்னித்து அருள்வாயடா

செஞ்சோற்று கடன் தீர்க்க
சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா - கர்ணா
வஞ்சகன் கண்ணனடா
* * *

பழம்பெரும் இதிகாசங்களான இராமாயணம், மகாபாரதம் இரண்டையும் ஒப்பிடுகையில் மகாபாரதத்தில் கதாபாத்திரங்களும், கிளைக்கதைகளும் அதிகம். மகாபாரதக் கதையில் ஒவ்வொரு பாத்திரமும் அதனதன் தனித்தன்மையோடு குறைநிறைகளோடு படைக்கப்பட்டிருக்கும். அன்பு, பாசம், குடும்பம், நட்பு, காதல், துரோகம், வஞ்சகம், வரம், சாபம், போர், அழிவு, தத்துவம் என்று அது தொடாத எல்லை இல்லை.

மகாபாரதத்தில் கர்ணனின் கதை மிகவும் துயரமானது. கர்ணன் யார்? அவனது குணாதிசயங்கள் என்ன? அவன் எப்படி வஞ்சிக்கப்பட்டான்? என்பதை மொத்தமாக ஒரு பாடலில் சொல்வது எத்தனை கடினமான பணி? அதனை மிகவும் திறம்படக் கையாண்டு இந்தப் பாடலைப் படைத்திருப்பார் கவியரசர் கண்ணதாசன். 

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது... என்று தொடங்கும் பாடலின் முதல் வரியே நம்மை உலுக்கும்.  உள்ளத்திலேயே நல்ல உள்ளம் ஆயிற்றே, பிறகு ஏன் அது உறங்காது? நல்ல உள்ளம் சுயநலம் பார்க்காது,  பிறர் நலம் ஒன்றையே பார்க்கும். தன்னைப் பற்றிக் கவலை கொள்ளாது, பிறர் துன்பம் கண்டு அது உறங்காமல் தவிக்கும். நிம்மதியின்றி அலையும். அடுத்தவர் துன்பம் களைய என்ன செய்யலாம் என்பதையே சதா சிந்திக்கும்.
கர்ணனும் அப்படித்தான். தன்னிடம் உள்ளதையெல்லாம் தானம் என்று கேட்போருக்கு வாரி வாரி வழங்கிய வள்ளல். இல்லையென்று இரப்போர்க்கு இல்லையென்று சொல்லாமல் தருபவன். அதனால்தான் தானம் வழங்குவோரை கர்ணன் என்ற பெயர்சொல்லி இப்போதும் அழைக்கிறோம்.
கர்ணன் அளவுக்கு இல்லையென்றாலும் நாமும், நம்மைச் சார்ந்தோருக்கு எத்தனையோ உதவிகள் செய்திருப்போம். ஆனால் அந்த உதவிகள் பயனளிக்காமல் போயிருக்கும். அல்லது பயன்பெற்றவர்கள் பின்னாளில் நம்மை துச்சமெனத் தூக்கி வீசியிருப்பர். அதனால் அடைந்த மனவேதனையை அனுபவிக்காதவர் நம்மில் எவருமே இருக்கமுடியாது. அதற்கு ஆறுதலாகத்தான் அடுத்த வரியை `வருவதை எதிர்கொள்ளடா' என்று எழுதுகிறார் கவியரசர்.
நல்ல உள்ளங்களை இறைவன் சோதிப்பது காலம்தொட்டு நடப்பதுதான். அதற்காகக் கலங்காதே. வருவதை எதிர்கொள்ளப் பழகு... என்று நம்பிக்கை விதைக்கும் வைரவரிகள் இவை.
கர்ணன் குந்தியின் மூத்தமகன். துர்வாச முனிவரின் வரத்தால் திருமணமாகாத குந்திக்கும் சூரியனுக்கும் வரமாகவேப் பிறந்தவன். மணமாகாமல் குழந்தை பிறக்கிறது. ஊருக்கு அஞ்சி தன் தாயால் ஆற்றில் விடப்பட்டு, ஒரு தேரோட்டியால் வளர்க்கப்பட்டு, சந்தர்ப்ப சூழ்நிலையால் துரியோதனன் பக்கம் சேர்ந்து, அங்கத நாட்டு அரசனாகிறான்.

தன் தாய்தான் குந்தி என்று தெரிந்தும் நட்புக்கு நன்றிக்கடனாய் துரியோதனன் பக்கமே இருந்தவன். கண்ணனின் ஆலோசனைப்படி குந்தி, கர்ணனை தன்னுடன் வருமாறு அழைக்க, அதை மறுத்து, என்னால் என் தம்பிகள் உயிருக்கு எந்த ஆபத்தும் வராது என்று வாக்கு தந்தவன். அவனோடு ஒட்டிப்பிறந்த கர்ண குண்டலங்களையும், கவச உடையையும் வஞ்சக வேடம் தரித்து வந்த கண்ணனுக்கு தானம் தந்தவன். இறுதியில் போர்க்களத்தில் உயிர் ஊசலாடும் தருணத்தில், இதுவரை கர்ணன் செய்த தானத்தின் புண்ணியங்கள் அனைத்தையும் தானமாகக் கேட்பான் கண்ணன். அப்போதும் இல்லையென்று சொல்லாமல் அளித்து உயிர் துறப்பான் கர்ணன். இந்த ஒட்டு மொத்தக் காட்சியையும் பாடலில் அழகாகப் பதியம் செய்திருப்பார் கவியரசர்.
பாண்டவர் தம் உடன்பிறந்த தம்பியர் என்றும், குந்திதான் தாய் என்றும் தெரிந்தபிறகும், அதை வெளிக்காட்டாமல் நட்பின் பக்கம் நிற்பதைக் கடமையாய் எண்ணி, ஊர் பழிச்சொல் அத்தனையையும் ஏற்றவன் கர்ணன். அதை எளிய வரிகளில் `தாய்க்கு நீ மகனில்லை, தம்பிக்கு அண்ணனில்லை' என்று எழுதியிருப்பார்.
நாம் எத்தனை நல்லது செய்தாலும், எவ்வளவு தானம் வழங்கியிருந்தாலும், நாம் இருக்கும் இடம் எதுவென்பது மிகவும் முக்கியம். பல நேரங்களில் நம்மை அறியாமல் சேராத இடத்தின்பக்கம் நிற்போம். நாம் நிற்கும் பக்கம் நியாயமில்லை என்று தெரிந்தபிறகும், இதுவரை நாம் அடைந்த பயனைக் கருதியோ, இப்போது விட்டு விலகுவது அறம் இல்லை என்றோ, வேறு வழியின்றி அங்கு இருக்கவேண்டியிருக்கும். அதுதான் உள்ளதிலேயே மிகப்பெரிய தவறு. தவறு என்று தெரிந்தால், அது தவறு என்று சுட்டிக்காட்டி அந்தத் தவறு நடக்காமல் நம்மையும், நாம் இருக்கும் இடத்தையும் காக்கவேண்டும். இயலாத பட்சத்தில் விட்டு விலகவாவது வேண்டும்.
செஞ்சோற்றுக் கடன் தீர சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா... என்ற வரிகளுக்குப் பின் வஞ்சகன் கண்ணனடா... என்று முடித்திருப்பார். காரணம் கர்ணன் செய்த தானங்கள் அவனைக் காத்துக்கொண்டே வர... அவனை வீழ்த்த நிறைய சூழ்ச்சிகளைச் செய்வான் கண்ணன். அதனால்தான் உனக்கு நேர்ந்த துன்பங்களுக்கெல்லாம் காரணம் நீயல்ல. சூழ்ச்சிகளால் உன்னைச் சாய்த்த இந்தக் கண்ணன்தான் காரணம். எனவே என்னை மன்னித்து அருள்வாயாக... என்பதாக பாடலை அமைத்திருக்கிறார்.
மகாபாரதத்தில் வரும் பீஷ்மர், துரோணாச்சார்யர், கர்ணன் என்று அனைவரும் நல்லவர்களே. ஆனால் அனைவருமே சூழ்நிலையால் துரியோதனன் பக்கம் இருக்கிறார்கள். அதற்கு அனைவருக்குமே அவர்கள் பக்க நியாயத்தைச் சொல்ல ஒரு காரணம் இருக்கிறது. அந்தக் காரணத்தில் நியாயமும் இருக்கிறது. ஆனால் அந்தக் காரணங்கள் அவரவர் சுயநலம் சார்ந்தது. தன்னளவில் இது சரி என்று பார்ப்பதை விட உலகத்துக்கு எது சரி என்று பார்ப்பதே உண்மையான நியாயம். கண்ணனின் வாயிலாக மகாபாரதம் எடுத்துச் சொல்லும் நீதியும் இதுவே. 
கண்ணனின் அடியொற்றி அவரது தாசனும், தன் பாடலின் வழியாக அந்த நீதியை அழகாகத் தந்திருக்கிறார்.

- பயணிப்போம்

https://www.kamadenu.in/news/series/2875-kaalamellam-kannadasan-by-mathiraj-2.html

Share this post


Link to post
Share on other sites

காலமெல்லாம் கண்ணதாசன் 14: மனிதன் என்பவன் தெய்வமாகலாம்


 

 

kaalamellam-kannadasan-by-mathiraj

  

படம்    : சுமைதாங்கி
இசை    : எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி
குரல்    : பி.பி.ஸ்ரீநிவாஸ்

* * *

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
வாரி வாரி வழங்கும் போது வள்ளல் ஆகலாம்
வாழை போல தன்னைத் தந்து தியாகி ஆகலாம்
உறுதியோடு மெழுகு போல ஒளியை வீசலாம்

ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகள் ஆகலாம்
உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்கள் ஆகலாம்
யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்
மனம்... மனம்... அது கோவில் ஆகலாம்

மனமிருந்தால் பறவைக்கூட்டில் மான்கள் வாழலாம்
வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்
துணிந்து விட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம்
குணம்... குணம்... அது கோவில் ஆகலாம்
* * *

மனித மனம் என்பது எளிதில் துவண்டுவிடக்கூடியது. எதிர்பார்ப்பு, ஏமாற்றம், தோல்வி, துயரம், நம்பிக்கை துரோகம் என்று உறவுகளாலும் சுற்றத்தாராலும் எப்போதும் காயப்பட்டுக்கொண்டே இருப்பது. இவையெல்லாவற்றையும் கடந்து, ஏற்றுக்கொண்டு, தாங்க வேண்டியவற்றைத் தாங்கி, ஒதுக்கவேண்டியவற்றை ஒதுக்கும் பக்குவம் வந்தவன் தெய்வமாகிறான்.

எப்போதெல்லாம் ஒரு மனிதன் தெய்வமாகிறான்? அடுத்தவருக்கு உதவும்போது, சுயநலம் பார்க்காது பொதுநலனைக் கருத்தில்கொண்டு வாழும்போது, மனிதன் தெய்வமாகிறான். அவன் மனமே கோவில் ஆகிறது.

கவியரசரின் பாடல்கள், நமக்குப் பழகிய எளிமையான சொற்களைத்தான் ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கி வருகின்றன. ஆனால் அவை நம் மனத்துக்குள் செய்யும் மாயம் அளப்பரியது. எந்தத் துன்பத்திலும் இந்தப் பாடலை ஒலிக்கவிட்டுக் கேட்கும்போது மனமானது, பாரம் குறைந்து லேசாகிவிடும்.

உதவி என்பது இருக்கும்போது மட்டும் செய்வதன்று. இயலாதபோதும் இல்லையென்று சொல்லாமல் செய்வது. கேட்பதற்கு முன்பே செய்யும் உதவியே கடவுளின் கருணைக்கு ஒப்பாகும். வாரி வாரி வழங்கியவர்கள்தான் வள்ளல் ஆகியிருக்கின்றனர். மனிதர்களிடம் இப்போது குறைந்து கொண்டே வரும் முக்கியமான ஒரு குணம், மனிதம்தான்.

வாழை மரத்தில் எந்தப்பகுதியும் பயன்படாத பகுதியாக இருப்பதில்லை. பூ, பழம், இலை, தண்டு என்று அனைத்தும் நமக்குப் பயன்படும். நம்முடைய வாழ்வும் வாழையைப்போல இருக்கவேண்டும். வாழையடி வாழையாய் தழைக்கப்போகும் நம் தலைமுறைக்கு நாம் விட்டுச்செல்வது அது ஒன்றே.

கரைவோம் என்று தெரியும் மெழுகு, தான் எதற்காக இப்படி அடுத்தவர்க்கு ஒளி தந்து அழியவேண்டும் என்று அது நினைப்பதில்லை. அதுபோல நம் மனம் இருக்கவேண்டும். அதுவும் உறுதியோடு ஒளிவீசவேண்டும். அடுத்தவர்க்கான வெளிச்சத்தை நாம் தருவதுபோல் மகிழ்ச்சியான ஒன்று வேறில்லை. உதவி என்றால் அது பொருளுதவியாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. கையேந்தும் வயதான முதியவருக்கு ஒரு தேநீர் வாங்கித் தருவது. பக்கத்து வீட்டு ஏழைச் சிறுவனுக்கு, கொஞ்சம் நேரம் ஒதுக்கி பாடம் சொல்லித்தருவது, சாலையைக் கடக்க தயங்கி நின்று கொண்டிருக்கும் பார்வையற்றவருக்கு உதவி செய்வது. துவண்ட மனதுக்கு ஆறுதல் வார்த்தை கூறுவதுகூட மிகப்பெரிய உதவிதான். பிறர்க்கு உதவி செய்து அதன்மூலம் கிடைக்கும் மகிழ்ச்சியையும் மனநிறைவையும் சொல்லில் அடக்கமுடியாது.

தலைவர்கள் இருந்தார்கள், இருக்கிறார்கள், இருப்பார்கள். ஆனால் எத்தனை தலைவர்கள் இப்போது சிலையாக இருக்கிறார்கள். சிலை என்பது சாலையோரம் வைக்கும் சிலை என்று கொண்டாலும் சரி, நூற்றாண்டுகள் கடந்த பின்னும் மக்கள் உள்ளங்களில் அழிக்கமுடியாத சிலைகளாக என்று பொருள் கொண்டாலும் சரி. தன்னுடைய ஊரின் நலனுக்காக எவன் ஒருவன் பாடுபடுகிறானோ, தன் ஊராருக்காக எவன் ஒருவன் வாழ்கின்றானோ, கண்ணீர் சிந்துகின்றானோ, கவலைப்படுகின்றானோ அவனே சிறந்த தலைவனாக இருக்கமுடியும். மக்கள் மனங்களில் அவனே சிலைபோலத் தங்கி வணங்கப்படுவான்.

உறவுகளைப் பேணுவதிலும் இப்போது தனித்தனித் தீவுகளாகிவிட்டோம். விஞ்ஞான வளர்ச்சி மனித மனங்களை சுருக்கிவிட்டதோ என்று தோன்றுகிறது. இரண்டு குழந்தைகள் ஒன்றாகச் சேர்ந்து விளையாடும் காட்சியோ, காதலர்களும் நண்பர்களும் மனம்விட்டு பேசிச் சிரிக்கும் காட்சியோ கூட அரிதாகிவிட்டது. பத்து நண்பர்கள் கூடியிருக்கும் இடங்களை உன்னிப்பாகக் கவனியுங்கள். அவர்களில் ஓரிருவர் தவிர மற்ற அனைவரும் தங்களுடைய அலைபேசியில் மூழ்கிக்கிடக்கிறார்கள். அரிதாக எங்காவது பூங்காவில், பொது இடத்தில் இரண்டு முதியவர்கள் மட்டும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக உறவுகளைத் தொலைத்துவிட்ட தலைமுறையாக மாறிக்கொண்டு வருகிறோம்.

உறவுகளுக்கென்று நம் உள்ளம் எப்போது விரிகிறதோ, வரவேற்கிறதோ, தேடிச்செல்கிறதோ அப்போதுதான் அது மலராக மலர முடியும். இருவருமாய் அலவலகம் செல்லும் தம்பதியர் என்றால்.... ஒரு நாளில் அவர்கள் எத்தனை நேரம் ஒன்றாக இருக்கிறார்கள்? எத்தனை பேர் வீட்டிலேயே இருக்கும் அப்பா, அம்மாவிடம் நேரத்தை செலவு செய்து பேசுகிறோம்? யோசித்துப் பார்க்கையில் பெரிய வருத்தமே மிஞ்சுகிறது. எல்லாம் நம்மிடமே இருக்கிறது. நம் மனதில் இருக்கிறது. நம் மனதை கோவிலாக வைத்துக்கொள்வதும் குப்பைத் தொட்டியாக வைத்துக்கொள்வதும் நம்மிடம்தான் இருக்கிறது.

கடைசி சரணத்தில் கவியரசர் கண்ணதாசன் கையாண்டிருப்பது மிகச்சிறந்த தன்னம்பிக்கை டானிக். 

பறவைக்கூட்டில் மான்கள் வாழலாம்... எப்போது? மனம் இருந்தால். கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்... எப்போது? வழி இருந்தால். எத்தனை பெரிய சுமையையும் தாங்க முடியும்... துணிவு இருந்தால். மனம் மட்டுமல்ல குணமும் சிறந்து இருந்தால்தான் கோவில் ஆகலாம்.

நம்மால் முடியாதது என்று எதுவுமில்லை. மனித ஆற்றல் அத்தனை மகத்தானது. மனதில் துணிவும், விடாமுயற்சியும் இருந்தால் சுமையென்று எதுவுமில்லை.

துன்பம் என்று எதைக்கருதி மனம் துயரப்பட்டாலும், இரண்டு நிமிடங்கள் ஒதுக்கி இந்தப் பாடலைக் கேளுங்கள். கவியரசரின் பாடல்வரிகளும், பி.பி.ஸ்ரீநிவாஸின் மயக்கும் குரலும் நம் மனதின் பாரத்தைக் குறைத்து, காற்றைப்போல மிதக்கவைக்கும்.

- பயணிப்போம்

https://www.kamadenu.in/news/series/3060-kaalamellam-kannadasan-by-mathiraj-4.html

Share this post


Link to post
Share on other sites

காலமெல்லாம் கண்ணதாசன் 15: கண்கள் இரண்டும்...


 

 

kaalamellam-kannadasan-by-mathiraj

 

படம்    : மன்னாதி மன்னன்
இசை    : எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி
குரல்    : பி.சுசீலா

* * *
கதறிச் சிவந்ததே நெஞ்சம்
வழிபார்த்துச் சிவந்ததே கண்கள்
கதறிச் சிவந்ததே வதனம்
கலங்கி ஒடுங்கிக் குலைந்ததே மேனி

கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ

பச்சைக் கிளியானால் பறந்தேனும் தேடுவேன்
பாடி வரும் தென்றல் தேரேறி ஓடுவேன்
சென்ற இடம் காணேன்
சிந்தை வாடலானேன்
சேதி சொல்லும் யாரும் தூது சொல்லக் காணேன்

நின்ற இடம் யாவும் நிழல் போலத் தோணுதே
அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே
கணையாழி இங்கே
மணவாளன் அங்கே
காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே
* * *

விரும்பிய ஒன்றைத் தொலைப்பதும், தேடுவதும், பிரிவதும், வாடுவதும் காதலுக்கே உரிய குணம். பிரிவைப் பேசும் காதல் கவிதைகளும், பாடல்களும் கூடுதல் அழகு பெறுகின்றன.

இல்லாமலே போவதைத்தான் பிரிவென்று காதல் நினைக்குமா? இல்லை. ஒரு நாள் என்றில்லை ஒரு நிமிடம் தனித் தனியே இருப்பதையும், பொருள் தேடிப் பிரிவதையும்கூட பிரிவென்று எண்ணியே ஏங்குமாம் காதல். அந்தப் பிரிவில் உடலும் உள்ளமும் என்ன பாடெல்லாம் படும் என்பதை அழகாகப் பாடலாக்கியிருக்கிறார் கண்ணதாசன்.

காதல் உடலைத் தனித்தனியே இருக்கவிட்டு, உள்ளத்தை ஒன்றாக்கிவிடுகிறது. அதனால்தான் பாதி உடலைப் பிரிந்ததுபோல் உள்ளம் தவித்துச் சாகிறது.

`மன்னாதி' மன்னன் படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலில் பத்மினி அற்புதமாக நடித்திருப்பார். இயல்பிலேயே பரதநாட்டியக் கலைஞர் என்பதால் பிரிவைச் சொல்லும் அவரது விழிகளும், முக பாவங்களும் பாடலுக்கு உயிர் தருவதாய் அமைந்திருக்கின்றன. கதாநாயகன் எம்.ஜி.ஆரின் ஒரு புகைப்படத்தை மட்டும் பாடல் காட்சியில் இடம்பெறச் செய்து, அந்தப் புகைப்படத்தைப் பார்த்து பத்மினி பாடுவதாக காட்சியை அமைத்திருப்பது, பாடலை நம்மோடு எளிதில் ஒன்றச் செய்துவிடுகிறது.

பாடலின் இடையிடையே எம்.ஜி.ஆரின் சண்டைக்காட்சிகள் இடம்பெறுவது, தன்னுடைய கதாநாயகனுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாதே என்ற கதாநாயகியின் பதற்றத்தைப் பார்ப்போர்க்கு எளிதில் தொற்றச் செய்துவிடும்.

தொகையறாவிலேயே காதலால் வாடும் ஒரு பெண் என்னவெல்லாம் ஆகிறாள் என்பதைச் சொல்கிறார் கவியரசர். கதறிக் கதறிச் சிவந்ததாம் நெஞ்சம். கதறல் என்கிற வார்த்தை எத்தனை பொருத்தமாக காதலின் வலியைச் சொல்கிறது? அழுவதற்கும் கதறி அழுவதற்கும் இடையில் எத்தனை உணர்ச்சிகள் மண்டிக்கிடக்கின்றன? அவன் மீண்டும் வரும் வழிபார்த்து, கண்கள் சிவக்க, உதடு துடிக்க, மேனி மொத்தமும் கலங்கி ஒடுங்கி உருக்குலைந்து நின்றுகொண்டிருக்கிறாள்.

பிரிவில் நாமும் இப்படித்தானே கலங்கி, புலம்பி நின்றுகொண்டிருந்தோம். முதன்முதலாக பள்ளிக்கு பிள்ளையை அனுப்பிய தாயும் இப்படித்தானே தவித்து நின்றுகொண்டிருக்கிறாள். பொருளீட்ட அயல் நாட்டுக்கு கணவனை அனுப்பிய மனைவி, வேலை நிமித்தம் பெற்றோரைப் பிரிந்த பிள்ளைகள்... என்று எல்லாமும் பிரிவுதான். எல்லாமும் துயரம்தான். என்றாலும், காதலில் மட்டும்தான் பிரிவென்பது உயிரே போய்விடும் வலியை உண்டாக்குகிறது.

ஒரு பறவையாக மாறிவிட்டால் பறந்து சென்றாவது அவன் எங்கிருக்கிறான் என்று தேடுவேன்.  தென்றல் காற்றைத் தேராக்கி அதில் ஏறி அவனைத் தேடுவேன். அவன் இருக்கும் இடம் அறியாமல் மனம் வாடி நிற்கிறேன். சேதியைச் சொல்லும் யாரும் அவன் என்னவானான்? எப்படி இருக்கிறான் என்று சொல்லவில்லையே... ஒரு பெரிய கதைக்காட்சியை, நான்கு வரிகளுக்குள் அடக்கியாளும் வித்தைக்காரராக கவியரசர் இருப்பதால்தான் காலம் கடந்தும் நம் உள்ளங்களைக் கொள்ளைகொண்டு இருக்கிறார்.

மனம் பழக்கத்துக்கு அடிமையான மிருகம். பழகிய எதையும் எளிதில் விடாது. எளிதில் மறக்காது. மனிதர்களின் இப்போதைய பழக்கம் மொபைல் போன். வராத குறுஞ்செய்திக்காக போனை எத்தனை முறை எடுத்து எடுத்துப் பார்க்கிறோம். குறுஞ்செய்தி வந்தால் அதற்கென்ற சிறு ஒலி வரும் என்பதும் தெரியும். என்றாலும் குறிப்பொலி வராமலேயே பத்து நிமிடத்துக்கு ஒருமுறை போனைத் திறந்து மூடும் பழக்கம் பெரும்பாலும், அலைபேசியை உபயோகிக்கும் அனைவருக்கும் தொற்றிக்கொண்ட பழக்கம்தானே?

கூடவே இருந்த ஒருவர் இல்லாமல் போனால், அவர் இல்லாமல் போனது தெரிந்தும் அவர் இருப்பது போலவே தோன்றும். இங்குதான் உட்கார்ந்திருப்பார், இங்கே நின்றுதான் நம்முடன் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார். என்று அவரைத் தவிர, அவர் இருந்த இடமெல்லாம் அவரை நினைவூட்டி நினைவூட்டி நம் உள்ளத்தைக் கொல்லும். மனசுக்கும் ஆழ்மனசுக்கும் உள்ள தொடர்பு இது. மிகவும் எளிய வரிகளில் இந்த உணர்வைப் பாடல் வரிகளாக்கியிருக்கிறார் கண்ணதாசன்.

நின்ற இடம் யாவும் நிழல் போலத் தோணுதே
அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே...

அவன் தந்த பரிசுப் பொருட்கள் எல்லாமும் இருக்கின்றன. அவனது நினைவுகள் நெஞ்சை விட்டு அகலாமல் நிழல்போலத் தொடர்ந்து வருகின்றன. காணும் இடமெல்லாம் அவனே நிறைந்திருக்கிறான். இல்லாமல் போனவர்கள்தான், அதிகம் இருந்து இம்சிப்பார்கள் உள்ளத்தை. மீண்டும் அவனைக் காணாமல் உயிர் வாழ்வதெப்படி? என்ற கேள்வியோடு நிறைவுபெறுகிறது பாடல்.

கடைசிச் சரணத்தின் கடைசி வரிகளில் `இங்கே, அங்கே, எங்கே' என்னும் வினாச் சொற்களை கச்சிதமாகப் பொருத்தியிருப்பார் கவியரசர். கணையாழி இங்கே, மணவாளன் அங்கே, காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே?

பாடல் முடிவுற்றாலும் தேடல் முடிவுறா வண்ணம், காதலின் பொருட்டு கவியரசர் கேட்கும் கேள்விகளும், எம்.எஸ்.வி.யின் டியூனும், சுசீலா அம்மாவின் குரலும் தொடர்ந்து வருகின்றன நம்மோடு ...

- பயணிப்போம்

https://www.kamadenu.in/news/series/3214-kaalamellam-kannadasan-by-mathiraj-4.html

Share this post


Link to post
Share on other sites

காலமெல்லாம் கண்ணதாசன் - 16 நல்லவர்க்கெல்லாம்...


 

 

kalamellam-kannadasan-16

தியாகம் - சிவாஜி, லட்சுமி

 

படம்    : தியாகம்
இசை    : இளையராஜா
குரல்    : டி.எம்.சௌந்தர்ராஜன்

* * *
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா
நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா
அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா
அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா

நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை
விதி செய்த குற்றம் அன்றி வேறே யாரம்மா
பறவைகளே பதில் சொல்லுங்கள்
மனிதர்கள் மயங்கும் போது நீங்கள் பேசுங்கள்
மனதுக்கு மனது கொஞ்சம் தூது செல்லுங்கள்

ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை
அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை
மனிதனம்மா மயங்குகிறேன்
தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே
தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே
* * *

திரைப்பாடல்களில் தத்துவத்தையும் வாழ்க்கையையும் இணைத்த பெருமை கவியரசர் கண்ணதாசன் அவர்களையே சாரும். திரையிசையோடு நாட்டுப்புற இசையை இணைத்த பெருமை இசைஞானி இளையராஜாவுக்குச் சொந்தம். இருவரும் இணைந்து வழங்கிய அற்புதமான திரைப்பாடல்கள் கொண்ட படம்தான் தியாகம். சிவாஜிகணேசன், லட்சுமி, பாலாஜி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்தது.

வெகுசில பாடல்களுக்கு முன்பு வரும் `இசை முனகல்' நம் ஆன்மாவை உருக்குவதாக இருக்கும். இந்தப் பாடலுக்கு முன் டி.எம்.எஸ்.அவர்களின் குரலில் வரும் ஹம்மிங் அப்படியான ஒன்று.

நாம் அடிக்கடி சொல்கிற, கேட்கிற, கேள்விப்படுகிற வார்த்தைகள்.... என்னை ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கற? என்னை எப்பதான் புரிஞ்சுப்பே? என்னை ஏன் தப்பாவே நினைச்சுட்டு இருக்கே? என் மனசை எப்பவுமே புரிஞ்சிக்க மாட்டியா? - இப்படி எத்தனை விதமாக, எத்தனை தொனிகளில் கேட்டாலும் எல்லா கேள்விகளுக்குள்ளும் இருக்கும் ஒரே செய்தி... புரிதல்தான்.

இந்தப் புரிதல் இல்லாததால்தான் பல பிரிதல்கள்.

புரிதல் ஏன் இல்லாமல் போகிறது? ஆத்மார்த்தமான நட்பில், ஆழமான காதலில், அழகான ஓர் உறவில் திடீரென்று ஏன் பிரிவு வருகிறது?

பிரிவு திடீரென்றெல்லாம் வருவதில்லை. அது ஏற்கெனவே அந்த உறவுக்குள் இருக்கிறது. வெளிக்காட்டாமல் - ஆழத்தில், மிக ஆழத்தில் அது அமைதியாக இருக்கிறது. அதை மேலே கொண்டுவராமல், அந்த உறவுக்குள் இருக்கும் அன்பு பார்த்துக்கொள்கிறது. அந்த அன்பில் மேலும் எதிர்பார்ப்பும், சந்தேகமும் எழுகையில் இடைவெளி உருவாகிறது. ஒரு சிறிய இடைவெளி போதும்தானே எந்தப் பெரிய பிரிதலுக்கும்?

பிரிவை நோக்கிச் செல்லும் ஓர் உறவில் எழும் ஆற்றாமையும், அழுகையும் மிகவும் துயரமானது. நம் எல்லோர்க்குள்ளும் ஒரு நல்லவன் இருப்பான். கெட்டவன் இருப்பதை நாம் ஒப்புக்கொள்ளாவிட்டாலும், எங்கேனும் ஓர் ஓரத்தில் ஒரு நல்லவன் இருக்கிறான் என்பதை பெரிதாக நம்புவோம். அந்த நல்ல மனசைப் புரிந்துகொள்ளாமல் வரும் பிரிவை என்ன சொல்லிப் புரியவைப்பது என்று தவிப்போம். சில, பேசினால் புரிந்துகொள்ளும். சில, என்ன சொன்னாலும் புரிந்துகொள்ளாது. 

என்ன செய்தாலும் புரிந்து கொள்ளாத நிலையில் தனக்குத் தானேயோ, இறைவனிடமோ, இயற்கையிடமோ தன்னிலை விளக்கம் அளிப்போம். அப்படி தன்னைத் தவறாகப் புரிந்துகொண்டு பிரிந்த காதலிக்கு அளிக்கும் தன்னிலை விளக்கமாக இந்தப் பாடலை இயற்றியிருப்பார் கவியரசர். வழக்கமாக அவர் முறையிடும் இறைவனிடமே இந்தப் பாடலிலும் தன்னிலை விளக்கம் அளிப்பதாக அமைந்திருக்கும்.

`என் மனசறிய நான் எந்தத் தப்பும் பண்ணல. இது எனக்குத் தெரியும், அடுத்து அந்த தெய்வத்துக்குத் தெரியும்...' என்று பேச்சு வழக்கில் நாம் சொல்வதையே பாடலின் பல்லவியாக ஆக்கியிருப்பார். கவியரசரின் பாடல்கள் எளிய மனிதர்களின் குரலையும், மனதையும் பிரிதிபலிப்பவை என்பது எத்தனை உண்மை.

நல்லவர்களுக்கு இரண்டு சாட்சிகள். ஒன்று மனசாட்சி, ஒன்று தெய்வத்தின் சாட்சி. நம்மை, நம் மனதை, நல்ல குணத்தை நாம் அறிவோம். அடுத்ததாக மற்ற மனிதர்கள் அறிந்துகொள்ளாவிடினும் தெய்வம் அறியும். கெட்ட குணத்துக்கும் இந்த விதிகள் பொருந்தும்.

நம்பிக்கை கொண்டு கல்லைப் பார்த்தால் அதுதான் தெய்வத்தின் காட்சி. அதுவே உள்ளத்தின் சாட்சியும், உண்மையின் காட்சியும் என்கிறார். கவியரசரின் பாடல்களில் வரும் ஓசை நயம் அலாதியானது. அடுத்தடுத்து வரும் வரிகளுக்குள் இருக்கும் சந்தம் பாடலை மனதோடு ஒட்டவைத்துவிடும்.

நதி வெள்ளம் காய்ந்துவிட்டால், அது நதியின் குற்றமில்லை. விதியின் குற்றம் அன்றி வேறு எது? என்கிறார். உண்மைதான். நதி காய்ந்துபோவது நதியின் குற்றமில்லை. பேராசை கொண்டு மணலைச் சுரண்டும், சுரண்டிய நம்மைப்போன்ற மனிதர்களின் குற்றமும்தானே? அதைத்தான் விதியின் குற்றம் என்கிறார்.

யார் என்ன சொன்னாலும் சொல்லட்டும், யார் என்ன நினைத்தாலும் நினைக்கட்டும். ஆண்டவன் அறிய, நம் நெஞ்சில் துளியும் நஞ்சும் வஞ்சகம்மு இன்றி இருக்கையில், அவனைத் தவிர வேறு ஆறுதல்களே தேவையில்லைதானே?

தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே, தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே...என்று பாடலை நிறைவு செய்யும் இந்தக் கடைசி வரிகளின் அர்த்தம் பொதிந்த வார்த்தைகளும் ஓசைநயமுமே கவியரசரின் திறமைக்குச் சான்று.

இதே படத்தில் `வசந்தகாலக் கோலங்கள்' என்ற ஒரு பாடலும் இருக்கிறது. கதாநாயகி இதே மனநிலையில் பாடுவதாக இருக்கும். அதுவும் மிக அழகான பாடல். அலையில் ஆடும் காகிதம், அதிலும் என்ன காவியம்? நிலையில்லாத மனிதர்கள், அவர்க்குள் என்ன உறவுகள்? என்று எழுதியிருப்பார்.

யாரேனும் நம்மைப் புரிந்துகொள்ளவில்லை என்று நினைக்கும்போதெல்லாம் இந்தப் பாடலை ஒருமுறை கேட்டால், எல்லாக் கவலைகளையும் மறந்து, நம்மை நாமே புரிந்துகொள்ள பேருதவியாக இருக்கும்.

- பயணிப்போம்

 

https://www.kamadenu.in/news/series/3375-kalamellam-kannadasan-16.html

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this