Sign in to follow this  
நவீனன்

ஒரே விகிதம்!

Recommended Posts

ஒரே விகிதம்!

 

 
VAADULAN_STORY

 

 


"உங்களுக்கு யார் யாரிடம் என்னென்ன பேசணுமென்று தெரிவதே இல்லை!'' என்று குற்றம் சாட்டினாள் சுபத்ரா - ஓய்வு பெற்ற பேராசிரியை. அவள் பெயருடன் இணைந்து வரும் பட்டங்கள் கொஞ்சம் நீளமானவை. (இடத்தை அடைக்கும்) சொன்னதோடு இல்லாமல் அசோக்கை உறுத்துப் பார்த்தாள். "எல்லாம் உன்னால தான்' என்று அவள் பார்வை சொல்லியது.
அவள் கணவர் பாலகோபால் எங்கோ யோசித்தபடியிருந்தார். "ஏன்தான் பேச்சை ஆரம்பித்தோமோ?' என்று அவருக்குத் தோன்றிற்று. இருந்தாலும் அசோக்கின் நிலைமை உறுத்திக் கொண்டுதானிருந்தது. ஏதோ எம். ஏ., படிக்கிறேனென்று தொடர்ந்து பயிற்சிக்குப் போனான். ஒரு "குரூப்' தேர்வு பெறுவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது.
அவனை வேறு சிறிய வேலைக்கு அனுப்புவதற்கு, கணவன் மனைவி இருவருக்குமே கூச்சமாகப் பட்டது. இத்தனைக்கும் பாலகோபால் பிரபல தனியார் கம்பெனியில் ஓய்வு பெற்ற பெரிய அதிகாரி. இப்போதும் சில நிறுவனங்களுக்குக் கௌரவ ஆலோசகராகப் பணியாற்றுகிறார். அவர் உதடு அசைந்தால் ஏனென்று கேட்கப் பலர் இருந்தார்கள். ஆனால் அசோக்கைப் பற்றி... படிப்பு, கல்வித் தகுதி, வயசு இவற்றை கேள்விப்பட்டதும் தயங்கினார்கள். பிடி கொடுத்தே பேசுவதில்லை.
ஒரு சினேகிதர் மட்டும் " சி.ஏ., முடிக்கச் சொல்லுங்கள். இப்போதான் ஃபண்ட் மோசடி, பாங்க் மோசடின்னு அடிபடறதே? நல்ல ஸ்கேல் உண்டு''
பாலகோபால் கொஞ்சம் யோசித்து, " ஒரு குரூப்தான் பாஸôகியிருக்கான்'' என்றார்.
"என்ன சார் இது? அம்மா பிரபல புரபொசர். அப்பா ரிடயர்ட் ஜி.எம்., அக்கா எம்.பி.ஏ., முடித்து கணவரோட ஹூஸ்டன்லே இருக்காள். உங்கள் குடும்ப ரத்தத்திலேயே கல்வி ஓடறதே?'' என்றார் நண்பர்.

 


பாலகோபால் மௌனமானார். உண்மைதான். படிக்கிறேன், படிக்கிறேனென்று கணினி முன்பு உட்காருவதையும் ஏதோ படம் வரைந்து பொழுதைக் கழிப்பதையும் இவரிடம் விளக்க முடியுமா? அதேசமயம் படிக்கும் சாக்கில் வீட்டிலேயே இருப்பது உதவியாகவும் இருந்தது. காலை நெரிசலில் காரை எடுக்க பயம் உண்டு அவருக்கு. அப்போதெல்லாம் அசோக்தான் ஓட்டுநர்.
அவ்வப்போது அசோக்கைப் பற்றி ஏதாவது வாக்குவாதம் நிகழும்தான். போன வாரம் டென்டிஸ்டைப் பார்த்த பிறகு, இது அதிகமாகி விட்டதே?
பாலகோபாலுக்கு கால் முட்டிக்குக் கீழ்வலி. ஆர்த்தோவிடம் காண்பித்து மாத்திரைகள் போட்டதில் ஓரளவு தேவலை. அன்றாடம் நடைப்பயிற்சி அவசியம் என்றார் நிபுணர். இந்தத் தருணத்தில்தான் திடீரென்று பல்வலி முளைத்தது. சூடான பானமோ, குளிர் பானமோ அருந்தும் போது என்னவோ செய்தது.
பல் டாக்டரிடம் பேசி ஏற்பாடாகி விட்டது. வாடகைக் கார் ஓட்டுநர் வரவில்லை. குறிப்பிட்ட நேரம் தவறினா, நிபுணர் கோபிப்பார். ""நானே கொண்டு விடறேம்பா'' என்று அசோக் முன் வந்தான்.

 


அவனை ஆச்சரியத்துடன் பார்த்தார் பாலகோபால். "நேற்று இரவுதான் சுபத்ராவுடன் கூச்சல் போட்டிருக்கிறான். இப்போது எதுவுமே நடக்காதது போல் இருக்கிறானே?'
திரும்பினார், அசோக்கின் கையில் ஒரு நோட்டுப் புத்தகம். ஒரு வேகத்துடன் அதைப் பிடுங்கினார், பார்த்தார். ஒன்றுமே புரியவில்லை.
"செஸ் மூவ்மெண்ட்ஸ், சதாசிவத்திடம் கற்றுக் கொள்கிறேன்.''
பாலகோபாலின் முகம் சுருங்கியது. சதாசிவம் பணிப்பெண்ணுக்கு உறவுப் பையன். "அவனுடன் இழைந்து பேசி.. சே! ஆனால் இப்போது அது குறித்து கேட்க நேரமில்லை'. காரில் ஏறிக்கொண்டு டாக்டரைச் சந்தித்தார்.
டாக்டர் செந்தில், பாலகோபாலை நன்றாகவே பரிசோதித்தார். பற்களை எக்ஸ்ரே படம் எடுக்க, அந்தப் படம் வேக உணவு போல உடனே வந்தது. அதைக் கணினியில் போட்டு, உதவியாளரிடம் மருத்துவ நுட்பங்களை விளக்கிக் கொண்டிருந்தார். பாலகோபால், சாய்வு நாற்காலியில் அமர்ந்தும் கூட, ஆயாசமாகவே உணர்ந்தார்.
"உங்க பல் மோசம்தான். ஆனா, அது பக்கத்திலே "ரூட்கேனல்' பல் இருக்கு.. பிடுங்கித்தான் ஆகணும்'' என்றார். "இப்போது வலி மாத்திரை தரேன்'' சட்டென்று ஞாபகம் வந்தவராக, " ஆ.. அந்தப் பக்கம் சுவைக்கவே கூடாது. அதை முழுதுமாய் அவாய்ட் பண்ணுங்கள்''
பாலகோபாலுக்குத் திடீரென்று ஆர்த்தோ நிபுணரின் நினைவு வந்தது. அவர், "கால்வலிக்கு நடைப்பயிற்சி தேவை என்கிறார். டென்டிஸ்டோ வலி இருக்கும் பகுதியைத் தவிர்க்க வேண்டும் என்கிறாரே?'

 


சிரித்தபடி, "என்ன டாக்டர் இது? தலைகீழ் விகிதம் போல் இருக்கிறதே?'' என்று மற்ற நிபுணரின் அறிவுரையைச் சொன்னார்.
டாக்டரின் முகம் மாறியது. "அப்படித்தான் அது! உங்கள் மனைவி கணக்கு புரொபசர் ஆச்சே! அதுதான் விகிதமெல்லாம் சொல்றீங்க!''
பாலகோபால் கட்டணத்தைச் செலுத்திவிட்டு மருந்துச் சீட்டைப் பெற்றுக் கொண்டார். வாசல் வரை வந்த டாக்டர் சட்டென்று அசோக்கைக் கவனித்தார்.
"ஒரு நிமிடம்'' என்று கூப்பிட்டார், பாலகோபாலுக்கு, தன் உடல் நிலையைப் பற்றித்தான் கவலை முளைத்தது,
"உங்க பையன்தானே அவன்'' ஏதோ.. ஆ, ""சி.ஏ. படிக்கிறான் இல்லை'' என்று விசாரித்து விட்டு, மளமளவென்று விஷயத்துக்குத் தாவினார்.
டாக்டருக்குப் பகுதி நேர பணிபுரிய ஆள் தேவையாம். அசோக்கை டேட்டா ஆபரேட்டராக வர முடியுமா என்று கேட்டார்.
பாலகோபாலுக்கு உள்ளூர மகிழ்ச்சியாக இருந்தாலும் காட்டிக் கொள்ளவில்லை, ""கேட்டுப் பார்க்கிறேன்'' என்றார். ஆனால் காரில் சென்று கொண்டிருந்தபோது, மகனிடம் டாக்டரின் கோரிக்கையைத் தெரிவித்தார். அப்போது அசோக்கின் முகம் மலர்ந்தது.

 


"அப்பாடா, அசோக்குக்கு வாழ்க்கையில் சின்ன நுழைவாயில் கிடைத்தது' என்று பாலகோபால் எண்ணியதில் தவறில்லை, மனைவி சுபத்ராவுடன் தன் உள்ளக் கிடக்கையைப் பகிர்ந்து கொண்டதிலும் தவறில்லை, எதற்கும் மூத்த பெண் வீணாவிடம் சொல்லிப் பார்க்கலாம் என்று அவள் யோசனை தெரிவித்ததிலும் தவறில்லை.
ஆனால் பாலகோபால் பேச்சோடு பேச்சாக டாக்டரிடம், தான் "விகிதம்' பற்றிப் பேசினதை சொன்னதுதான் தவறாகப் போயிற்று. தாயான சுபத்ரா நிமிட நேரத்தில் கல்லூரி எச்.ஓ.டி.யாக மாறினாள், ""டாக்டர் யார், என் தொழிலை தமாஷ் பண்ணறதுக்கு?'' என்று கோபித்தாள், பாலகோபால் எவ்வளவு சமாதானம் செய்தும் எடுபடவில்லை.
இரண்டு நாள் சென்ற பிறகு, வீணாவிடமிருந்து வந்த அழைப்பு, சுபத்ராவின் தீர்மானத்தை உறுதிப்படுத்தவே செய்தது, "என்னம்மா இது ? இந்த அசோக் டேட்டா ஆப்பரேட்டரா சேர்ந்தால் நமக்குத்தானே பேர் கெடும். நம்ம குடும்பம் என்ன ? பாரம்பர்யம் என்ன? அவன் சி.ஏ.வையே கன்டினியூ பண்ணட்டும். பணம் வேணுமானால் அனுப்பறேன்''

 


அரைகுறையாகக் கேட்ட பாலகோபாலுக்குச் சுர்ரென்று கோபம் வந்தது. " ரொம்ப ஜாஸ்தி பேச வேணாம்னு சொல்லு உன் பெண்கிட்ட'' என்றார்.
சுபத்ரா, போனை வைத்தாள். கணவரை உறுத்துப் பார்த்து "எல்லாம் உங்க பையன் அசோக்கினால்தான்'' என்றாள்.
அசோக்கின் நடவடிக்கைகள் சுபத்ராவை இன்னும் கவலை கொள்ள வைத்தன, சதாசிவம் மற்றும் வேறு சினேகிதர்களுடன் சமமாக ஏதோ பேசிச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான்.
சுபத்ராவுக்கு அடுத்த 15-வது நாள் ஒரு கருத்தரங்கம். "கணிதம்' பற்றி. இந்தியாவின் பல ஊர்களிலிருந்து ஆசிரியர்கள் வருகிறார்கள். வேலை தலைக்கு மேலிருந்தது.
"அசோக், தினம் என்ன அவர்களுடன் பேச்சு, படிக்கப் போ'' என்றாள் ஆணையிடுகிற மாதிரி.
அவன் அதைக் காதில் போட்டுக் கொண்டதாகவே தெரியவில்லை, சுபத்ரா வேகமாக வீட்டுக்குள் நுழைந்தாள். ஆண் பிள்ளைதானே? போகப் போக மாறுவான் எல்லாம் அவர் கொடுக்கிற செல்லம் என்று எண்ணினாள்.
ஞாயிற்றுக்கிழமை, அன்றுதான் சென்னை புறநகரில் உள்ள ஓர் ஓட்டலில் கருத்தரங்கு, பல பள்ளிகளின் ஆசிரியர்கள், தலைவர்களுடன் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கூட வருவாரென்று பேச்சு அடிப்பட்டது.

 


சுபத்ரா தன்னுடைய ராசியான ஊதா நிறப் புடவையைத் தேடினாள். அவளுக்கென்று சில "சென்டிமெண்டுகள்' உண்டு. கல்யாணம், விழாக்கள் போன்றவற்றுக்குச் சில உடைகள், டாக்டரைச் சந்திக்கப் போகும்போது வேறு பழைய ஆடைகள், என்று வகை வகையாகப் பிரித்திருந்தார்கள்.
அந்த ஊதாநிறம் எங்கே போய்விட்டது மாயமாய்? காட்ரெஜ் பீரோ... மர அலமாரி, தலையணைக்குக் கீழ் எங்கேயும் காணோம்? இஸ்திரி போடுவதற்கென்று மூட்டை.. அதில் கலந்திருக்குமோ?
பரபரவென்று பிரித்து நோக்கினாள், இருந்தது. ஏற்கெனவே இஸ்திரி போட்டது. பழைய புடவைகளுடன் சேர்ந்திருந்ததால், கசங்கிக் காட்சியளித்தது, வழக்கமான இஸ்திரி ஆளிடம் போனாள். ஊருக்குப் போயிருக்கிறான். வருவதற்கு இரண்டு நாளாகுமெனத் தெரிவித்தார்கள்.
என்ன செய்வதென்று நிற்கையில் அடுத்த தெருவிலுள்ள ஒரு கிழவரைக் காட்டினார்கள். சுபத்ரா செல்லைப் பார்த்தாள். வாகனம் வர இன்னும் அரைமணி நேரத்துக்கு மேலாகும். கூட ஒன்றிரண்டு துணிகளையும் எடுத்துக் கொண்டு அந்த முதியவரிடம் போனாள்.
"பத்து நிமிடம் ஆகும்'' என்றார் அவர்.
"காத்திருக்கட்டுமா?'' என்று சுபத்ரா கேட்டாள்,

 


"வூடு தெரியும்... நம்ம பேரன் கூட வந்திருக்கானே, கொணாந்து தரேன்'' என்றார்.
புடவையைப் பெற்றுக்கொண்டு சுபத்ரா ஐம்பது ரூபாய் தாளை நீட்டியதும். "அப்புறமா கொடுங்களேன். சில்லறை இல்லை''
சுபத்ரா, அவசர அவசரமாக டிரெஸ் செய்து கொண்டு தயாராக நின்றாள், சொன்ன நேரத்துக்கு கார் வந்தது, ஏறிக் கொண்டு புறப்பட்டாள்,
பாலகோபாலிடம், "எல்லாம் டைனிங் டேபிளில் வைச்சிருக்கேன். ரெண்டு பேரும் சாப்பிடுங்கள். நான் வர 5-6 மணி ஆகும்'' என்று சொன்னாள். "ஞாபகமாக, அசோக்கைப் படிக்கச் சொல்லுங்கள்'' என்றாள்.
கூட்டம், எதிர்பார்த்ததை விட நன்றாக நடந்தது, இன்றைய கணிதம் பயிலும் முறையில் ஏற்படும் மாறுதல்கள் வேறு பல பாடங்களில் கணிதத்தின் பயன்பாடு எல்லாம் அலசப்பட்டன. சுபத்ரா தானும் சொற்பொழிவாற்றின பின்னர், அவ்வப்போது இடையிடையே பொருத்தமாகப் பதில் அளித்தாள், பார்வையாளர்களின் கைதட்டல் அவளுக்கு மகிழ்ச்சி அளித்தது.
மாலை தேநீர் அருந்தினவுடன் சுபத்ரா புறப்பட்டாள். பெருமிதம் மேலிட கார் கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள். ஆ... இந்தப் புடவையின் ராசி, புடவை, இஸ்திரி போட்டது. அட! அந்தக் கிழவருக்குப் பணம் தர வேண்டும்?
வீட்டை நெருங்குகையில் ஒட்டுநரிடம் வேறு பாதைக்குத் திருப்பச் சொன்னாள். மாலை இருட்டில் அந்தக் கடை சட்டென்று புலப்படவில்லை, எப்படியோ கண்டுபிடித்து ஓரமாக நிறுத்தச் சொன்னாள்.

 


அந்தக் கிழவர் யாரிடமோ சீரியஸôகப் பேசிக் கொண்டிருந்தார், " கடை' மூடப்படுவதற்கான அறிகுறிகள் தெரிந்தன. துணிகள் நிறைந்த மூட்டை, இஸ்திரிப் பெட்டி எல்லாம் ஓரமாக.
ஒரு நடுத்தர வயதுக்காரரிடம் "என்னா சொன்னே நீ? காதே கேட்கலை?'' என்றார்.
"அதான் சொன்னேன். காது கேட்காத வயசுக் காலத்தில் ஏன் தேய்த்துத் தேய்த்து கஷ்டப்படணும்? பையன்தான் அமெரிக்காலேர்ந்து அனுப்புறானே?'' என்றான் மற்றவன்.
"நல்லபுள்ள.. அனுப்புறான்தான். ஆனால் முடியுற வரைக்கும், இந்த இஸ்திரியை விட மாட்டேன் இதுதான் என் சொத்து'' என்று உறுதியாகக் கிழவர் சொன்னார்.
ஒதுங்கி நின்ற சுபத்ரா காதில் எல்லாம் விழுந்தது. ஒரு கணம் யாரோ தன்னை பிடரியில் அடித்தது போல் உணர்ந்தாள். தளரும் வயதில், அந்திம காலத்தில் கூட தன் உழைப்பை நினைத்துக் கொள்ளும் கிழவர் எங்கே ? வளரும் பருவத்தில், இளமைக் காலத்தில் வேலைக்குப் போகத் துடிக்கும் அசோக்கின் ஆசைக்கு நடுவில் நிற்கும் தான் எங்கே? சே...


நினைக்க நினைக்க அவமானமாயிருந்தது. வெறுமனே பாரம்பரியம், படிச்ச குடும்பம் என்றெல்லாம் பெருமை பேசி அசோக்கின் இயல்பான விருப்பங்களுக்கு குறுக்கே நின்ற தன்னை நினைக்கும்போது, சுபத்ராவுக்கு மிக வெட்கமாயிருந்தது.
கிழவரிடம், நோட்டை நீட்டி சில்லறையை பெற்றுக் கொள்ளாமல் திரும்பினாள். " அப்புறமா அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்'' என்றாள்.
வீட்டை அடைந்தாள், உள்ளே போனதுமே "அசோக்! அசோக்'' என்று விளித்தாள்.
"இப்பத்தான் பால்கனியிலே சதாசிவத்தோட செஸ் ஆடிட்டு வந்தான். படுத்திட்டிருக்கான்'' என்ற பாலகோபால், ""சி.ஏ. புத்தகம் தொடக் கூட இல்லை!''
சுபத்ரா, "நீங்க உடனே டென்டிஸ்ட் செந்திலுக்குப் போன் பண்ணி, டேட்டா ஆபரேட்டர் வேலைக்கு பையன் வருவான்னு சொல்லுங்க, படம் வரையட்டும், செஸ் ஆடட்டும்'' என்றாள் படபடவென்று.
"அந்த டாக்டர்'' தயங்கினார் பாலகோபால்.
"ஏதோ விகிதம்னு கேலி பண்ணினாரே?''
"பரவாயில்லை, போகட்டும் வேலைக்கு'' என்றாள் சுபத்ரா அழுத்தமாக, "வாழ்க்கையில் முன்னுக்கு வர ஒரே விகிதம் உழைப்புத்தான்'' என்று அவள் உதடு முணுமுணுத்தது.

வாதூலன்

http://www.dinamani.com

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this