Sign in to follow this  
நவீனன்

மலை சாயும்போது!

Recommended Posts

 
 
மலை சாயும்போது!
 
 
 
 
 
 
 
 
E_1533269128.jpeg
 
 

மாலை நேரம் -
ஏரிக்கரை சாலை வழியாக, நானும், சந்திரனும், நிதானமாக நடந்து கொண்டிருந்தோம்.
வீட்டு மனை ஒன்றை பதிவு செய்வது சம்பந்தமாக, சென்னை வந்திருந்தேன்; வந்த வேலை, நண்பர் சந்திரன் உதவியுடன் முடிந்தது.
மறுநாள் காலையில் தான் ஊருக்கு, பஸ்.
அதனால், சந்திரன் வீட்டில் இரவு தங்குவது என்று முடிவாகி, பையை அவர்கள் வீட்டில் வைத்து, டிபன் சாப்பிட்டு, வெளியில் காலாற நடந்து கொண்டிருந்தோம். பல விஷயங்கள் பேசிக்கொண்டு நடந்த போது, சட்டென, கந்தசாமி நினைவு வர, ''கந்தசாமிய பாக்கிறதுண்டா... இந்த பக்கத்தில்தானே அவர் இருந்தார்,'' என்று சந்திரனிடம் கேட்டேன்.
''இப்பவும் இங்கதான் இருக்கார்... இரண்டு தெரு தள்ளி தான் அவர் வீடு,'' என்றார் சந்திரன்.
''அவர பாக்க முடியுமா...''
''பாக்கலாமே... டியூட்டி முடிஞ்சு இந்த வழியாகதான் வருவார்; வர்ற நேரம் தான்...''
''டியூட்டியா... அவர் தான் ரிடையராயிட்டாரே...''
''ஆமாம்... பென்ஷன் வாங்கிகிட்டு, வீட்டில், பேரன் - பேத்தியோடு சந்தோஷமா தான் இருந்தார்; மறுபடியும் வேலைக்கு போய் சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்த, அவர் மகன் ஏற்படுத்திட்டான்,'' என்றார், சந்திரன்.
புரியாமல் பார்த்தேன்.
''கந்தசாமியோட மகன் கான்ட்ராக்ட் வேலை பாத்துட்டு இருந்தான்ல... நல்லா தொழில் செய்து, வசதியாக தான் இருந்தான். திடீர்ன்னு அவனுக்கு பேராசை வந்திருச்சு... மொத்தமும் ஊத்தி மூடி, இப்ப வீட்ல முடங்கிட்டான்,'' என்றார், சந்திரன்.
''புரியல...''

 


''அவன், உள்ளூர்ல, தெரு போடறது... பைப் லைன் சீர் செய்யறது... மழை நீர் வடிகால் வெட்றதுன்னு, சின்ன சின்ன கான்ட்ராக்ட் எடுத்து செய்வான்; பஞ்சாயத்திலிருந்து வண்டி, ஆள், ஜல்லி, தாருன்னு எல்லாம் கிடைச்சுடும்... மாசம், ரெண்டு, மூணு கான்ட்ராக்ட் வரும்; வருமானம் நிறைய இல்லன்னாலும் நல்லாவே வந்துகிட்டிருந்தது.
''இவன் ஆசைப்பட்டானா அல்லது இவனுக்கு யாராவது ஆசை காட்டினாங்களான்னு தெரியாது. மாநகராட்சியில இருந்து, 20 வார்டுக்கு, ரோடு புதுப்பிக்கணும்; கான்ட்ராக்ட் தொகை, ஒரு கோடி ரூபாய்ன்னு டெண்டர் அறிவிச்சுருந்தது. அனுபவ கான்ட்ராக்டர்களே யோசிச்சுகிட்டிருந்த நேரம், இவன், 'கொட்டேஷனை' குறைச்சு போட்டு எடுத்துட்டான்.
''வேலையின் அளவே, ஒரு கோடி ரூபாய்; டிபாசிட் தொகை, கட்டிங் எல்லாம் கொடுத்து வேலைய ஆரம்பிக்கும் போது, 'ரோடு போடற மிஷின் ஒண்ணு மலிவு விலைக்கு வருது; வாங்கிப்போட்டா, வேலைக்கும், வேலை இல்லாத போது, வாடகைக்கும் விடலாம்'ன்னு யாரோ சொல்லப் போக, கடன் வாங்கி, அந்த இயந்திரத்தை வாங்கினான்.
''அதை, வச்சு ரோடு போட்டான்; ஒரு வார்டுல, ரெண்டு மெயின் ரோடு போட்டிருப்பான்; அவ்வளவுதான்... வண்டி உட்கார்ந்துடுச்சு. அது, அரத பழசு வண்டி; அதிக விலைக்கு அவன் தலையில் கட்டி ஏமாத்திட்டாங்கங்கிறது அப்புறம் தான் தெரிய வந்தது. அதை வச்சு போட்ட ரெண்டு ரோடும், அன்னைக்கு பெஞ்ச மழைக்கு பிட்டு பிட்டா பிரிஞ்சு போச்சு. குறிப்பிட்ட நாளுக்குள் வேலை முடிக்கலன்னு நோட்டீஸ்... ஏதோ பதில் சொல்லிட்டு, மிஷினை பிரிச்சு, எடைக்கு போட்டுட்டு வந்துட்டான்; ஒரு கோடி ரூபா இழப்பு...''
''பெரிய தொகையாச்சே...''
''கந்தசாமி சம்பாதிச்ச வீடு, வாங்கிப் போட்ட மனைகள், சேமிப்பு, கிராமத்து சொத்துன்னு அனைத்தையும் வித்து, கடனை அடைக்க வேண்டியதா போச்சு. வயசான காலத்துல, மகனால் அந்த மனுஷனுக்கு இப்படி ஒரு சோதனை,'' என்று சந்திரன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, எங்களைக் கடந்து சென்றது, ஒரு சைக்கிள்.
பழைய சைக்கிள் என்பதால், 'கீச்... கீச்...' என்று அதிலிருந்து சத்தம் வந்தது.
அதை, அசைந்து அசைந்து நிதானமாக, ஓட்டியபடி சென்றார், ஒருவர்.
இருள் கவிழ ஆரம்பித் திருந்ததால், முகம் தெரியா விட்டாலும், அது கந்தசாமியாக இருக்குமோ என்ற நினைப்பில், ''கந்தசாமி சார்...'' என்றேன்.
சைக்கிள் நின்றது.

 


திரும்பிப் பார்த்து, ''அட மூர்த்தியா... எங்க இப்படி... பாத்து எவ்வளவு வருஷம் ஆச்சு...'' என்று தன், 'கணீர்' குரலில் கேட்டபடி, சைக்கிளை நிறுத்தி, எங்கள் அருகில் வந்தார்.
சந்திரனைப் பார்த்து, ''இவரை தினமும் பார்ப்பேன்... உங்க ஞாபகம் வரும்; விசாரிப்பேன். அப்புறம், வீட்டில் எல்லாரும் சவுக்கியம் தானே... வாங்க காபி சாப்பிடலாம்,” என்று, பார்வையை காபி கடை பக்கம் திருப்பினார்.
''பரவாயில்ல... சந்திரன் வீட்டில் எல்லாம் ஆயிற்று... பேசிகிட்டே நடந்துகிட்டிருந்தோம்; உங்கள பற்றி சொன்னார் சந்திரன்... மனசுக்கு வருத்தமா போச்சு.''
''என்ன செய்யறது... அவன் தப்பு ஒண்ணுமில்ல; 'எவ்வளவு நாளைக்கு சின்ன வேலைகளை செய்து, பொழுத ஓட்டறது... துணிஞ்சு பெரிய வேலை எடுத்து செய்தால் தான், நல்ல தொகை பார்க்க முடியும். குழந்தைக வளர்றாங்க... அவங்க எதிர் கால தேவைகளுக்காக, 'ரிஸ்க்' எடுத்துப் பார்க்க வேண்டியது தான்'னான். கெட்டிக்காரன், கணக்கு போட்டு வேலை செய்யறவந்தான்; என்னமோ அவன் கெட்ட நேரம், பழைய மிஷின அவன் தலையில கட்டி ஏமாத்திப்புட்டாங்க... இவனும் ஏமாந்துட்டான்.
''பெரிய தொகை தான்... என்ன செய்ய, கோபப்பட்டால், ஆத்திரப்பட்டால் சரியாயிடுமா... அவனே மனசு உடைஞ்சு கிடக்கிறான்; இதுல, நாம வேறு கோபப்பட்டால், அது, அவனை இன்னும் பாதிக்கும். ஏதாவது பண்ணிக்கிட்டாலோ, எங்காவது ஓடிப்போயிட்டாலோ என்ன செய்யறது...
''பணம் எப்ப வேணும்ன்னாலும் சம்பாதிக்கலாம்; மகன் போய்ட்டா என்ன செய்யறது... இந்த மாதிரி நேரத்தில், நாம் அவனுக்கு, 'சப்போர்ட்டா' இருந்து, தைரியம் கொடுக்கணும். வீடு, மனைகள்ன்னு இருந்தது; வித்து, கடன்லருந்து காப்பாத்திட்டேன்.


''இருந்தாலும், அவன் இன்னும் அதிர்ச்சியில இருந்து மீண்டு வரல. அது சரியாக நாளாகும்; அது வரைக்கும், 'எங்கும் போகாத, வீட்ல இருந்து ரெஸ்ட் எடு; குடும்பத்த நான் பார்த்துக்கறே'ன்னு சொல்லி, வேலை தேடினேன். கொரியர் ஆபீசில் ஒரு வேலை கிடைச்சது; பத்தாயிரம் ரூபா சம்பளம் கொடுக்கறாங்க... அதோடு, பென்ஷன் பதினாறாயிரம் ரூபா வருது. ரெண்டையும் வச்சு குடும்பத்த ஓட்டிகிட்டிருக்கோம்,'' என்றவர், சற்று நிதானித்து, ''அவன் சீக்கிரம் எழுந்துருவான்; வேலை வேலைன்னு தினமும் எங்காவது போய்கிட்டும் வந்துகிட்டும் இருந்தவன்; ஒரேயடியா, அவனால உட்கார முடியாது. கைவசம் தொழில் அனுபவம் இருக்கு; அதோட, பெரிசா தோத்திருக்கான். அதனால், இனி எச்சரிக்கையா வேலை செய்வான்னு நம்பிக்கை இருக்கு. அது வரைக்கும், சிரமத்தைப் பாக்காம முடிஞ்ச வரை குடும்பத்துக்கு உதவணும்; என்ன, நான் சொல்றது...'' என்றவர், எங்களிடமிருந்து விடை பெற்று சென்றார்.
''இவ்வளவு நடந்திருக்கு... ஆனால், மகனை விட்டுக்கொடுக்கிறாரா பாருங்கள்... நமக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருந்தால், இத்தனை பக்குவமாக நடந்து கொண்டிருப்போமா... பையனை கரிச்சு கொட்டி, ரகளை பண்ணி வீட்டை விட்டே விரட்டியிருப்போம்; இல்ல, 'இப்படி ஆகிப்போச்சே'ன்னு தலையில கை வச்சு உட்கார்ந்து புலம்பிகிட்டிருப்போம். கந்தசாமி, மலை சாயும்போது, தாங்கி பிடிக்க முயற்சிக்கிறார்; இந்த மனுஷனுக்காகவாவது, அவன் மீண்டு வந்து, விட்டதை பிடிக்கணும்,'' என்றார், சந்திரன்.
''நானும் அப்படி தான் நினைக்கிறேன்,'' என்றேன்.
தொலைவில், அவரது சைக்கிள், 'கீச்... கீச்...' என்ற ஒலி எழுப்பியபடி சென்றது.

http://www.dinamalar.com

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this