Jump to content

தன் நகரம்


Recommended Posts

தன் நகரம்

 

 

white_spacer.jpg
தன் நகரம் white_spacer.jpg
title_horline.jpg
 
இரா.முருகன்
white_spacer.jpg

p58c.jpg ‘‘இ ன்னிக்கு மதியம், கட்டையான மீசை வெச்சுக்கிட்டு ஒருத்தன் வந்தான்..!’’

சாரா வீட்டில் நுழைந்தபோது, அம்மா சொன்னாள். அவள் நாற்காலியில் உட்கார்ந்திருந்தாள். படுக்கையை அசுத்தம் செய்திருந்தாள். இருட்டில் சூழ்ந்து நின்ற ஈரமும், சிறுநீருமாக வாடை மூக்கைக் குத்தியது. நாள் முழுக்கத் துர்வாடைக்கு நடுவே இருந்து பழகியிருந்ததால், அது பெரிதாகப்படவில்லை சாராவுக்கு. ஆனாலும், சுத்தம் செய்ய வேண்டிய இன்னொரு அறை.

சாராவுக்கு அலுப்பாக வந்தது. அம்மா மேல் பரிதாபமாகவும் இருந்தது. பழைய புரட்சிக்காரி. ஓய்ந்துபோன எழுத்துக்காரியும்கூட. நாடு விட்டு நாடு வந்து, சித்தம் தடுமாறிப் போனவள். அவள் வளர்த்த, அவளோடு வளர்ந்த கட்சியும் ஆட்சியும் ஒரு பகல் நேரத்தில் காணாமல் போயின. நாடு முழுக்க அந்தக் கட்சி உறுப்பினர்கள் தேடித் தேடி வேட்டையாடப்பட்டார்கள். உயிர் இன்னும் மிச்சமிருந்தவர்கள் ஓடி ஒளிய வேண்டி வந்தது. சாரா அம்மாவைக் கூட்டிக்கொண்டு இங்கிலாந்துக்கு வந்தது அகதி யாகத்தான்!

ஓடி வரும்போது, பல்கலைக் கழகத்தில் பாதி முடித்திருந்த படிப்புச் சான்றிதழை வாங்கி வர முடியாது போனதால், சாரா இப்போது லண்டன் ஓட்டல்களில் கழிவறைகளைச் சுத்தம் செய்துகொண்டு இருக்கிறாள். செங்கல் சூளை சந்துப் பிரதேசத் துக்கு அடுத்த ஒற்றை அறையில் குளிரும், அரை இருட்டும், தண்ணீர் கசியும் சுவருமாக வாழப் பழகிவிட்டாள். அம்மா படுத்தபடிக்கே நனைக்க, துவைத்துப் போட வேண்டிய விரிப்புகளின் ஈரமும் வாடை யும்கூடப் பழகிவிட்டது.

இங்கிலாந்துக்குக் கிளம்புவதற்கு முன்பே அம்மாவின் மனநிலை சிதைய ஆரம்பித்திருந்தது. வேரோடு கெல்லி எறியப்பட்டதும், அவளுடைய உலகம் அவள் மனதில் மட்டுமாகச் சுருங்கிக் குழம்பிப் போனது. லண்டன் அகதி முகாமில் குடியேற்ற உரிமைக்காக மௌனமாக வரிசையில் காத்திருந்தபோது, முகாம் அதிகாரியான வெள்ளைக்காரன் கேட்டான்... “இந்தக் கிழவி படிச்சிருக்காளா?”

தடுமாறும் ஆங்கிலத்தில், ‘இது என் அம்மா. பெரிய எழுத்தாளர்’ என்றாள் சாரா. அவனுக்கு என்ன போச்சு? எத்தனையோ கிழக்கு ஐரோப்பிய நாடுகள். பிழைப்புக்காக அங்கேயிருந்து பிரிட்டனுக்கு ஓடி வரும் பெருங்கூட்டத்தில் இந்த அழகான பெண்ணும், அந்தக் கிழவியும் வெறும் இரண்டு பேர். அம்மா நிதானமாகச் சுவரை வெறித்தாள். அவன் அழுக்கு ஜீன்ஸில் நின்ற சாராவை ஏற இறங்கப் பார்த்தான்.

“இப்போதைக்கு ஆறு மாசம் தாற்காலிக அனுமதி. மீதியை அப்புறம் பார்க்கலாம். சரி, ராத்திரி மில்னே பார் பக்கம் வாயேன். எல்லாத்தைப் பத்தியும் விளக்கமாச் சொல்றேன்...” என்ற அந்தக் கிழட்டு வெள்ளைக்காரன், சாராவின் டி-ஷர்ட் மத்தியில் விரலைக் காட்டி, “இதுக்கு உங்க நாட்டுலே என்ன பேர்?” என்று கேட்டான். கோபத்தை அடக்கிக்கொண்டு “டி-ஷர்ட்னுதான் சொல்றது” என்றாள்.

பாஸ்போர்ட்டில் முத்திரை குத்தி வாங்கிக்கொண்டு வெளியே போகும்போது, அம்மா சொன்னாள்... “போன வாரம் நம்ம வீட்டு வாசல்ல கண்ணாடி போட்ட ரெண்டு பசுமாடு சிகரெட் குடிச்சபடி ஷைக்கோவ்ஸ்கி சிம்பொனி பத்திப் பேசினதை உன்கிட்டே சொன்னேனா? கழிவறைப் பீங்கானில் தேநீர் குடிக்கிற ஓவியமாக்கும்! மாஸ்கோ இசைக் குழு வரைஞ்சபோது, உங்க அப்பாதான் கல்யாண உடுப்போடு பியானோ வாசிச் சார். அவர் நரகத்துக்குப் போயிட்டார் கையெல்லாம் சிவப்புச் சாயத்தோட.!”

நாட்டைவிட்டு வந்த பிறகு அம்மா இத்தனை நேரம் தொடந்து பேசியது அப்போதுதான். வார்த்தைகள். வாக்கியங்கள். எதிலும் தவறு இல்லை. ஆனால், எந்த அர்த்தமும் இல்லாமல் பேச்சுக் குழம்பி இருந் ததை சாரா கவலையோடு கவனித்த போது, ‘மில்னே பார், தெருக்கோடி, ஸ்கர்ட் போட்டுட்டு வா!’ எனப் பின்னால் அகதி முகாம் அதிகாரி குரல் துரத்தியது. “இவன் மேசை மேலே ஏறி, ஃப்யூஸ் ஆன பல்ப் வழியா சொர்க்கத்துக்குப் போவான். நகக் கண்ணுலே நரகல் வழிய வழிய, நீல நிறத்துலே பியர் குடிப்பான் அங்கே!’’ - அம்மா சொல்லி விட்டுச் சிரிக்க ஆரம்பித்தாள் அப்போது.

சாரா விளக்கு சுவிட்சைப் போட்டபோது, அம்மா திரும்பவும் மீசைக்காரனைப் பற்றிப் பேசிய படியே படுக்கையைக் காட்டினாள். ‘‘சட்டமா உள்ளே வந்து படுக்கையை நனைச்சுட்டுப் போய்ட்டான் அவன். நாளைக்கு ரேஷன்லே மூணு மாசம் நீடிப்பும், நாலு கிலோ மீட்டர் துணியும் கிடைக்கும்னு சொல்லிட்டுப் போனான்.”

ரேஷன். இங்கே இல்லாத சமாசாரம். அவள் நாட்டிலிருந்தும் எப்போதோ விடைபெற்றுப் போய்விட்டது. சாராவின் அப்பா ரேஷன் அதிகாரியாக இருந்தவர். அம்மாவைக் கல்யாணம் செய்துகொண்டபோது, அவரும் கட்சியில் இருந்தாராம். சிறப்பாகச் செயல்பட்டதற்காகப் பதக்கம் என்று அவர் இறந்ததும் சர்க்கார் கொடுத்ததை அம்மா ரொம்ப நாள் பத்திரமாக வைத் திருந்தாள். ஆட்சி மாறி, குடும்ப பென்ஷன் எல்லாம் நின்றுபோன பிறகு, அதை விற்று ஒரு வாரம் கோதுமை வாங்கிச் சாப்பிட வேண்டி வந்தது. சாரா பகலில் கல்லூரிக்குப் போனபடி, ராத்திரியில் மதுக் கடையில் வேலைக்குப் போனதும் அப்போதுதான்! கல்யாண உடை தைக்கிற கடை என்று அம்மாவிடம் சொல்லியிருந்தாள். ஆட்சி மாறாமல் இருந்தால், சாரா பொய் சொல்லியிருக்க மாட்டாள். படித்து முடித்துக் கல்லூரியிலேயே வேலைக்குப் போயிருப்பாள். உடை தைக்கிற கடையில் கல்யாண உடுப்பு வாங்கியிருப்பாள். நிச்சயித்திருந்தபடி மேத்யூவைக் கல்யா ணம் செய்திருப்பாள். கண்ட கிழவனும் அவள் மார்பைப் பற்றி கேட்க மாட்டான். மதுக் கடைக்கு குட்டைப் பாவாடையில் வரச்சொல்லிக் கூப்பிட்டிருக்க மாட் டான்.

அவளைத் தேடி அந்த அகதி முகாம் கிழவன்தான் வந்திருப்பானோ? இரண்டு, மூன்று தடவை தெருவில் பார்த்து நாய் போல் பின்தொடர்ந்தபோது, தப்பித்தாகிவிட்டது. விலாசம் தெரிந்திருக்கும். காசு சேர்த்துப் போன மாதம் அவள் வாங்கிய மொபைல் தொலைபேசி எண்ணும்கூட! அரசாங்க கம்ப் யூட்டரில் எல்லாமே பதிந் திருக்கும்.

அம்மாவின் தலையைச் சுவரோடு அழுத்திப் பிடித்தபடி அவளுடைய நனைந்த உடுப்புக்களை சாரா கழற்றியபோது, அம்மா சிரிக்க ஆரம்பித்திருந்தாள். படுக்கை ஈரம் தொடாத இடத்தில் வைத்த மொபைல் தொலைபேசி சிணுங்கியது. ‘‘மீசைக்காரனா இருக்கும். வெங்காயச் சாகுபடி பற்றி ரேஷன் கடையிலே கவிதை வாசிக்கக் கூப்பிடறான். சோயா மொச்சையும் நகச் சாயமும் உங்க அப்பாவுக்குத் தரப் போறாங்களாம். உள்ளே உடுத்த உலர்ந்த துணி இல்லாம ஊர்வலத்திலே எப்படிப் பஸ்ஸைத் தள்ளிக்கிட்டுப் பாட முடியும்?’’ -அம்மா குறைபட்டுக்கொண்டாள்.

தொலைபேசியில் யாரோ செய்தி அனுப்பியிருக்கிறார்கள். சாரா பயந்தது போல், அவள் வேலை பார்த்த நிறுவனத்திலிருந்து கூப்பிடவில்லை. ‘இன்னொரு ஓட்டலில் வேலைக் குப் போக வேண்டிய பெண் வரவில்லை. நீ போக முடியுமா? ஓவர் டைம் தருகிறோம்’ என்று ஆரம்பித்து, போகாவிட்டால் அடுத்த மாதம் வேலையிலிருந்து நீக்குவது பற்றிய எச்சரிக்கையில் முடியும் அழைப்பு அதெல்லாம். இது அது இல்லை.

வேலை? ஓட்டலில் அறை அறையாகப் போய் கலைந்து கிடக்கும் கட்டில் துணிகளைச் சீராக விரிக்க வேண்டும். கட்டில் அடியில் ஆணுறை கிடந்தால், அசிங் கப்படாமல் எடுத்து, குப்பைக் கூடையில் போட வேண்டும். மது நாற்றமும், வாந்தியோடு படுத்த அடையாளமுமாக ஈர வட்டத்தோடு கிடக்கும் தலையணை உறைகளை மாற்ற வேண்டும். அப்புறம் கழிவறைகள். மனிதக் கழிவு உலர்ந்தும், தரையில் அசுத்தம் சிந்தியும் கிடக்கும் அந்த நரகக் குழிகள் ஒவ்வொன்றையும் சுத்தம் செய்ய ஒதுக்கப்பட்டது ஐந்து நிமிடங்கள்தான். கடைசியாக தேநீர்க் குவளைகளைச் சோப்புத் தண்ணீரால் அலம்பி, குப்பையை வாரியெடுத்து வெளியில் வைத்துவிட்டு, அடுத்த அறைக்கு ஓட வேண்டும்.

முந்தா நாள் அவள் வேலை முடித்த அறையில் இருந்து சூப்பர்வைசர் கூச்சல் கேட்டது. சாரா “மேடம்” என்றபடி ஓடினாள். மேடம் அவளைக் கழிவறைக்குதான் கூட்டிப் போனாள். வாஷ்பேசினைக் காட்டி, “அதை எடு” என்றாள். உத்தரவுப்படி குனிந்து கையால் எடுத்தாள் சாரா. ஒற்றை இழையாகத் தலைமுடி. “என்ன வேலை பார்க்கிறே? சரியாக் கழுவத் துப்பில்லே. தினக் கூலியிலே ரெண்டு பவுண்ட் இன்னிக்கு கட்!”

ஒவ்வொரு பவுண்ட் வருமானமும் வேண்டியிருக்கிறது. வாஷ்பேசினில் பிடிவாதமாக ஒட்டியிருக்கிற தலைமுடியோ, கழிப்பறை பீங்கானில் நரகல் துணுக்கோ அதைத் தட்டிப் பறித்துவிட்டால், குடியிருப்புக் கூலி கொடுக்க முடியாது. வேலைக்குப் போகும்போது உடுத்த என்று வைத்திருக்கும் இரண்டு உடுப்பையும், அம்மாவின் நனைந்த பாவாடைகளையும் சுத்தம் செய்ய சோப்புக்கட்டி வாங்க முடியாது. நிறையத் தலைமுடி இழைகள் ஒன்று சேர்ந்தால் சாப்பாடுகூட இல்லையென்று ஆகிவிடலாம்.

தொலைபேசிச் செய்தியைப் படித்தாள் சாரா. நிக்கோலா அனுப்பியிருந்தாள். முக்கியமான விஷயமாம். பொதுத் தொலைபேசியிலிருந்து பிறகு கூப்பிடுகிறாளாம்.

நிக்கோலாவும் அகதியாக இங்கே வந்தவள்தான். முகாமில் பழக்கமானவள். சரளமாக ஆங்கிலம் பேசினாள். நாடக நடிகை. அம்மாவைத் தெரியுமாம். அவள் எழுதிய நாடகத்தில் தூக்கமின்மையால் அவதிப்பட்டு அலைகிற, சபிக்கப்பட்ட தேவதையாக நடித்திருக்கிறாளாம். அம்மா பாராட்டி னாளாம். அம்மாவுக்கு எதுவும் நினை வில்லை.

மேத்யூ கூட நிக்கோலாவின் ஊர்தான். பழக்கமான குடும்பமும்கூட. “நீலக் கண் அழகியைக் கல்யாணம் செஞ்சுக்கப்போறேன்னு சொன்னானே அந்தத் தடியன், நீதானா அது?” நிக்கோலா சிரித்தபடி கேட்டபோது, சாரா நாலு நாள் குளிக்காத கோலத்தில் இருந்தாள். ஆனால், ஓட்டல் சுத்தப்படுத்தி, நகக் கண்ணில் அழுக்கோடு இல்லை. நகத்தில் பவளச் சாயமும் கண்ணில் நீலமும் பாக்கி இருந்த நேரம் அது.

அகதி முகாம் கிழவன், நிக்கோலாவையும் மதுக்கடைக்கு வரச்சொல்லி யிருந்தான். குட்டைப் பாவாடையில் அவள் போயிருந்தாள். சிவப்பு ஒயின் வாங்கிக் கொடுத்து நெருங்கிப் பழகத் தொடங்கியவன் விரலெல்லாம் ரத்தம் வழிய அலறியபடி வெளியே ஓடியபோது, நிக்கோலா மிச்சம் ஒயினை நிதானமாகக் குடித்துக் கொண்டு இருந்ததாக சாராவிடம் அப்புறம் சொன்னாள். சவர பிளேடைக் காலுக்கு நடுவே வைத்துப் போகிற தற்காப்பு வழிமுறை, அகதியாக வருவதற்கு முன்பே அவளுக்குத் தெரிந்த ஒன்று. ‘‘கால் மேல் ஊர முற்படும் கைகளுக்கு நாட்டு வித்தியாசம் கிடையாது’’ என்றாள் அவள்.

“குளிருது” - அம்மா பரிதாபமாக விழித்தபடி சொன்னாள். சாரா அவசரமாக அவளுக்கு உடை அணிவித்தாள். படுக்கை விரிப்பை மாற்றி, நனைந்ததை எல்லாம் குளியலறைக்குத் துவைக்க எடுத்துப் போகும் போது, அம்மா பாட ஆரம்பித் திருந்தாள். கட்சி ஊழியர்களை ஊர்வலமாக அணிவகுத்து நடக்கச் சொல்லி உற்சாகப் படுத்தும் பாட்டு. மேத்யூவுக்குப் பிடித்தது இந்த மெட்டு. கிதாரில் இதைச் சரளமாக வாசிப்பான். என்ன செய்துகொண்டு இருப்பான் இப்போது மேத்யூ? இருக்கிறானா?

இருப்பான். எப்போதும் போல் கல்லூரி நூலகத்தில் புத்தகம் அடுக்கிக்கொண்டு, புதுப் புத்தகங்களுக்கு எண் எழுதிய அட்டைகளை மர அலமாரியில் செருகிக்கொண்டு இன்னும் அங்கேதான் இருப்பான். நீலக் கண் பெண்கள் புத்தகம் கேட்டு வரும்போது, சிரிக்கச் சிரிக்கப் பேசுவான். அலமாரிக்குப் பின்னே வைத்து முத்தம் கொடுப்பான். அணைத்தபடி, பவள நிறத்தில் சாயம் பூசிய விரல் நகத்தால் பின் கழுத்தில் மெள்ள வருடும் போது சிலிர்ப்பான். டி-ஷர்ட் பரிசளிப்பான். பிக்னிக் வரச் சொல்வான். டி-ஷர்ட்டை அவசரமாக அவிழ்ப்பான். உடல் முழுக்கக் கை பரவும். படுக்கையைப் பகிர்ந்துகொள்வான். பெரிய ஓட்டல் அறை. உலர்ந்த விரிப்பு கொண்ட படுக்கை. அங்கே சுத்தமான வாஷ்பேசினும் கழிப்பறையும் இருக்கும். ஆணுறையை ஞாபகமாகக் குப்பைக் கூடையில் போடுவான். மேத்யூவுக்கு அசுத்தம் பிடிக்காது.

ரொட்டியையும் மாமிசத்தையும் சூடு செய்து அம்மாவுக்கு ஊட்டிவிட்டாள் சாரா. நிக்கோலா என்ன பேசக் கூப்பிட்டிருப்பாள்? போன வாரம், அவளுக்கு வாய்ப்புக் கிடைத்த சந்தோஷத்தைப் பகிர்ந்துகொண்டாள். குரலை மட்டும் விற்கிற சந்தர்ப்பம். நூறு பவுண்ட் வருமானம். நிகழ் கலை சிற்பி ஒருத்தருக்காகப் பேசும் கழிப்பறையாகக் குரல் கொடுக்க வேண்டி வந்ததாம். யாராவது உட்கார்ந் ததும், ‘உங்கள் அற்புதமான பின்புறம் என் மேல் ஆரோகணித்து இருப்பது எத்தனை சுகமாக இருக்கிறது’ என்று கவர்ச்சியாகச் சிணுங் கும் கழிப்பறைப் பீங்கான். “என் குரலைத் தாராளமா அசுத்தம் செய்யுங்க. காசு கொடுக்கறதை மட்டும் குறைச்சுடாதீங்க” என்றாளாம் நிக்கோலா.

“தூக்கம் வருது. அடுப்புக்குள்ளே கல்யாண உடுப்பு வெச்சிருக்கேன். குளிச்சுட்டு உடுத்திக்கோ! விடிஞ்சதும் மீன் கடையிலே கல்யாணம்!” அம்மா நாற்காலியிலேயே தூங்க ஆரம்பித்தாள். அவளைக் குழந்தை போல் தூக்கிப்போய்ப் படுக்கையில் விடும்போது மொபைல் மறுபடி சிணுங்கியது. நிக்கோலாதான்.

“ஊருக்குப் போகணும்” என்றாள் நிக்கோலா எந்த உணர்ச்சியும் இல்லாமல். “ஏன், அலுத்துப்போச்சா லண்டன் அதுக்குள்ளேயும்?” சாரா விசாரித்தாள்.

“இங்கே இனி இருக்கவோ, குடியேற்றத்துக்கோ அனுமதி கிடை யாதுன்னு கவர்மென்ட் கடிதம் வந்திருக்கு. உள்ளாடையிலே சவர பிளேடு செருகிக்காம, இல்லே... உள்ளாடையே இல்லாம கிழவனோடு போய் உட்கார்ந்தா, தொடர்ந்து இருக்க முடிஞ்சிருக்குமோ என்னமோ”- நிக்கோலா உறங்காத தேவதைக் குரலில் சிரித்தாள்.

“மேத்யூவைப் பார்த்தா என்ன சொல்ல?”-அவள் ஏனோ ஆங்கிலத்தில் கேட்டாள்.

‘‘போன வாரம் கழிப்பறை கழுவும்போது யாரோட முடியோ வாஷ்பேசின்லே இருந்து சம்பளத்தைப் பறிச்சுக்கிட்டதுன்னு சொல்லு. அம்மாவைப் பார்க்க இன்னிக்கு மத்தியானம் கட்டையான மீசை வெச்சுக்கிட்டு ஒருத்தன் வந்தான்னு சொல்லு. அவ எனக்காக கல்யாண உடுப்பு வாங்கி அடுப்பிலே பத்திரமா வெச்சிருக்கான்னு சொல்லு.’’

அம்மா படுக்கையிலிருந்து முனகும் குரல். சாரா தொலைபேசியைக் காதோரம் அணைத்தபடி அருகே போனாள். “மதியம் வந்தவன் ஸ்கர்ட்லே சுற்றி கல்யாண கேக் கொண்டு வந்தான்!” அம்மா ஜன்னல் பக்கம் இருந்து எதையோ எடுத்து நீட்டினாள்.

குடியேற்ற உரிமை அளிக்கும் அலுவலகத்திலிருந்து வந்த கடிதம் என்று முத்திரையிலேயே தெரிந்தது. மனம் படபடத்தது. இங்கே இந்தக் கழிப்பறை நகரத்தில் இருக்கலாமா, அல்லது தன் நரகத்துக்கே திரும்ப வேண்டியிருக்குமா? போனால் அம்மா உயிருக்கு என்ன விலை தர வேண்டி வரும்? இருக்க வேண்டுமென்றால்? மதுக் கடைக்குக் கிழவனோடு போக வேண்டி வரலாம். உலராத உள்ளாடையோடு அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்தால், கை நகம் ஏன் அழுக்காக இருக்கிறது என்று கேட்பான். அது நரகல் என்று பதில் சொல்வாள்.

உறையைப் பிரிப்பதைத் தள்ளிப் போட்டாள் சாரா. ஒரு விநாடி சுவாசம். “அப்புறம் சொல்லு, நிக்கோலா!” - மொபைலைச் செல்லமாகக் காதோடு அணைத்தபடி கை விரல் நகங்களைப் பார்த்துக்கொண்டாள். நாளைக்கு அவை சுத்தமாக இருக்கும்!

 

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.   பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
    • @goshan_che எழுதிய தாயக பயண அனுபவங்கள் என்ற இந்த பயண கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பதால் அவரின் அனுமதியுடன் இந்த தாயக இளைஞர்களின் முயற்சிகள் தொடர்பான  காணோளியை இணைக்கிறேன்.    பி. கு அனுமதி பெறாமலே😂
    • ஆம் இது உண்மை எனக்கு பலமுறை இப்படி ஏற்பட்டது. இது ஒரு புதிய யுக்தி. பெரெரா அன்ட் சன்ஸ் இல் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இப்படி அடிக்கடி நடக்கும். கடை வாசலுக்கு முன் வந்து சாப்பிட்டு கொண்டிருப்பவரை பர்ர்த்து, கெஞ்சி மன்றாடி உணவ வாங்கி கேட்பது, அலுப்பு கொடுப்பது அடிக்கடி நடக்கும்.
    • வைகாசி மாதம் என்றால்  அகம் குளிரும் அன்னையின் முகம் காணும் ஆசைவரும்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.