நவீனன்

கோலமாவு கோகிலா திரை விமர்சனம்

Recommended Posts

கோலமாவு கோகிலா திரை விமர்சனம்

 

கோலமாவு கோகிலா திரை விமர்சனம்
 
 

கோலமாவு கோகிலா திரை விமர்சனம்

 

ஒரு மாஸ் ஹீரோவிற்கு எத்தனை மாஸ் வருமோ, அந்த அளவிற்கு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கும் ஒரு மாஸ் பேன் பாலோயிங் உள்ளது. அதற்கு காரணம் அவர் தொடர்ந்து தரமான கதையாக தேர்ந்தெடுத்து நடிப்பது தான். அந்த வகையில் இந்த கோலமாவு கோகிலாவும் தரமான படங்களின் லிஸ்டில் சேர்ந்ததா? பார்ப்போம்.

கதைக்களம்

நயன்தாரா மிடில் கிளாஸ் குடும்பம். அன்றாட வாழ்க்கையை நகர்த்தவே கஷ்டத்தில் இருக்கும் போது அவருடைய அம்மா சரண்யாவிற்கு கேன்சர் வருகின்றது.

அதை குணப்படுத்த நிறைய பணம் தேவைப்படுகின்றது. அந்த சமயத்தில் யதார்த்தமாக ஒரு போதைப்பொருள் கும்பலிடம் நயன்தாரா சிக்குகின்றார்.

அந்த கும்பலும் நயன்தாரா அப்பாவியாக இருக்கின்றார், யாருக்கும் சந்தேகம் வராது, இவரை வைத்தே கடத்தல் செய்யலாம் என்று நினைக்க, இவை நயன்தாராவிற்கு பெரும் பிரச்சனையில் போய் முடிகின்றது.

இந்த பிரச்சனை எல்லாம் கோகிலா எப்படி முறியடிக்கின்றார், தன் அம்மாவை எப்படி காப்பாற்றுகின்றார் என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

நயன்தாரா ஒன் Women ஷோ என்று சொல்லலாம், இவருக்கு மட்டும் எப்படி ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரம் இத்தனை நன்றாக கிடைக்கின்றதோ என எண்ண வைக்கின்றார். கொஞ்சம் நானும் ரவுடி தான் காதம்பரி ஸ்டைல், அமைதி மற்றும் பதட்டத்துடனே படம் முழுவதும் அசத்துகின்றார். அதிலும் ‘சார் நீங்க அவன சுட்டா தான் இங்க இருந்து போவேன், கொலை பார்க்க பயமா இருக்கு நான் திரும்பி காதை மூடிக்கொள்கின்றேன்’ என சொல்லும் இடமெல்லாம் செம்ம அப்லாஸ்.

அவருக்கு அடுத்து படத்தில் ஸ்கோர் செய்வது சொல்லி தெரிய வேண்டியது இல்லை யோகிபாபு தான். படத்தின் முதல் பாதி ஒரு பாடலுடன் எஸ்கேப் ஆகின்றார், அட எங்கடா போனார் என்று தேடும் நிலையில் இரண்டாம் பாதியில் நயன்தாராவுடனே ட்ராவல் செய்து கலக்குகின்றார்.

படத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களும் நம்மை கவர்கின்றனர், நயன்தாரா தங்கை ஜாக்லீன், யோகிபாபு கடையில் வேலை பார்க்கும் பையன், மொட்டை ராஜேந்திரன், இவர்களை எல்லாம் விட டோனி என்று ஒரு கதாபாத்திரம் வருகின்றது. அவருடைய மேனரிசம் சிரிப்பு சரவெடி. அதே நேரத்தில் ஜாக்லினை காதலிக்கும் இளைஞர் ஏற்கனவே மீசைய முறுக்கு படத்தில் எப்படி பதட்டமாக பேசுவாரோ, அதேபோல் தான் இதிலும், ஆனால் கொஞ்சம் ஓவர் ஆக்டிங்.

விறுவிறுப்பாக சொல்ல வேண்டிய கதையை இயக்குனர் நெல்சன் கொஞ்சம் மெதுவாகவே நகர்த்தி செல்கின்றார். இடைவேளைக்கு முன்பு வரும் படத்தின் எதிர்ப்பார்ப்பு, அதன் பிறகு காமெடி ஒர்க் அவுட் ஆனாலும் திரைக்கதை கொஞ்சம் மெதுவாகவே செல்கின்றது, அதிலும் கிளைமேக்ஸ் அட என்னப்பா இப்படி என்று தான் நினைக்க வைக்கின்றது.

சிவகுமாரின் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கின்றது, அனிருத் பாடல்கள் ஏற்கனவே ஹிட் செய்து விட்டார், பின்னணியிலும் நல்ல இசையை கொடுத்தாலும், கொஞ்சம் டயலாக் கேட்க விடுங்க சார் என்று சொல்ல தோன்றுகின்றது.

க்ளாப்ஸ்

நயன்தாரா, யோகிபாபு காட்சிகள் கைத்தட்டல் பறக்கின்றது.

படத்தின் வசனம் டார்க் ஹியூமர் நன்றாக ஒர்க் ஆகியுள்ளது, அதிலும் மொட்டை ராஜேந்திரன் ‘பச்சையப்பாவில் படித்தாலும் பச்சை பச்சையாக பேசுவேன், எட்டுக்கால் பூச்சிக்கு எட்டுக்கால் இருந்தாலும், 10வது மாடி போக 8 வருஷம் ஆகும், ஆனா 10 ரூ ராக்கேட் உடனே போகும், நீ ராக்கேட் மாதிரி போகனும்’ என்று பல வசனங்கள் பேசி இப்படி ஸ்கோர் செய்கின்றார்.

கதாபாத்திரங்கள் வடிவமைப்பு, அதிலும் டோனி செம்ம.

பல்ப்ஸ்

நல்ல விறுவிறுப்பாக செல்லவேண்டிய கதையை கொஞ்சம் மெதுவாக நகர்த்தி சென்றது.

கிளைமேக்ஸ் இன்னும் கொஞ்சம் கூட அழுத்தமாக இருந்திருக்கலாம்.

மொத்தத்தில் நயன்தாரா, யோகிபாபுவை நம்பி கோகிலா சரக்கை வாங்கலாம்.

https://www.cineulagam.com/films/05/100955?ref=cineulagam-home-latest

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

சினிமா விமர்சனம்: கோலமாவு கோகிலா

சினிமா விமர்சனம்: கோலமாவு கோகிலா

அறம் படத்திற்குப் பிறகு நாயகன் இல்லாமல் நயன்தாராவை மட்டும் மையப்புள்ளியாக வைத்து உருவாகியிருக்கும் படம்.

   
திரைப்படம் கோலமாவு கோகிலா
   
நடிகர்கள் நயன்தாரா, சரண்யா பொன்வண்ணன், யோகி பாபு, ஜாக்குலின், சரவணன், ஆர்.எஸ். சிவாஜி
   
இசை அனிருத்
   
ஒளிப்பதிவு சிவக்குமார் விஜயன்
   
கதை - இயக்கம் நெல்சன்
   
   

கீழ் மத்தியதரவர்க்கத்தைச் சேர்ந்த கோகிலாவின் அம்மாவுக்கு நுரையீரல் புற்றுநோய். தங்கை படித்துக்கொண்டிருக்கிறாள். தந்தையால் பெரிதாக சம்பாதிக்க முடியாது. இந்த நிலையில் யதேச்சையாக ஒரு போதைப் பொருள் கடத்தும் கும்பலின் அறிமுகம் ஏற்படுகிறது கோகிலாவுக்கு. தாயின் சிகிச்சைச் செலவுக்காக போதைப் பொருளைக் கடத்த ஆரம்பிக்கிறாள் கோகிலா.

கடந்து செல்க யூடியூப் பதிவு இவரது Lyca Productions
எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

முடிவு யூடியூப் பதிவின் இவரது Lyca Productions

ஒரு கட்டத்தில் அதனால் பல பிரச்சனைகள் ஏற்பட, அதிலிருந்து தன் குடும்பத்தைக் காப்பாற்றி, தானும் எப்படி தப்புகிறாள் என்பதுதான் கதை. இதற்கு நடுவில் கோகிலாவின் வீட்டிற்கு எதிரில் கடை வைத்திருக்கும் யோகிபாபுவின் ஒருதலைக் காதலையும் சமாளித்தாக வேண்டும்.

ஒரு சாதாரண கடையில் வேலை பார்க்கும் கோகிலா தன் மேலாளரிடம் சம்பள உயர்வு கேட்கிறாள். மேலாளர், அதற்கு தன்னை அரவணைத்துச் செல்ல வேண்டுமெனக் கூற, பதிலுக்கு கோகிலா கூறும் வசனம் அட்டகாசம். இப்படியாக பெரும் ஆரவாரத்துடன் துவங்குகிறது படம்.

கோலமாவு கோகிலாபடத்தின் காப்புரிமைLYCA PRODUCTIONS/கோலமாவு கோகிலா

போதைப் பொருள் கடத்தல் போன்ற ஒரு பாதாள உலகம் சம்பந்தப்பட்ட கதையின் மையப்புள்ளியாக ஒரு நாயகியை வைத்திருப்பதே இந்தப் படத்தின் முதல் வெற்றி. அதுவும் அந்த நாயகி நயன்தாராவாக இருக்கும்போது கேட்கவே வேண்டாம். துவக்கக் காட்சியிலிருந்தே தூள்பரத்துகிறார்.

அப்பாவியைப் போல இருந்துகொண்டு மிகவும் அழுத்தமான வேலைகளைச் செய்யும் பாத்திரம். அதில் அப்படியே ஒன்றிப்போயிருக்கிறார் நயன்தாரா. ஆனால், பல காட்சிகளில் அவரது நடிப்பு நானும் ரவுடிதான் படத்தை நினைவுபடுத்துகிறது. தவிர, படம் நெடுக முதுகில் பையும் ஒரே மாதிரியான உடையும் வருவது சலிப்பேற்படுத்துகிறது.

கோலமாவு கோகிலா

சூழலுக்கு ஏற்ப நடந்துகொண்டு தப்பிக்கும் நாயகி, விசித்திரமான பழக்கங்களைக் கொண்ட வில்லன்கள், உருப்படியில்லாமல் சொதப்பும் அடியாட்கள், சொதப்பும் காவல்துறை, சம்பந்தமில்லாத காரியங்களைச் செய்து சிக்கலில் மாட்டிக்கொள்ளும் நபர்கள் என ஒரு டார்க் காமெடி படத்திற்கான எல்லா அம்சங்களும் இந்தப் படத்தில் உண்டு.

ஆனால், இரண்டாம் பாதியில் பெரிய அளவில் போதைப் பொருளைக் கடத்த முற்படும்போது நேர்மையான தந்தை உட்பட குடும்பமே இணைந்துகொள்வது, தேவையில்லாமல் நாயகி குறுக்கு வழியில் இறங்குவது என இடைவேளைக்குப் பிறகு சற்று தொய்வடைகிறது படம். ஆனால், க்ளைமாக்ஸை நெருங்கும்போது மீண்டும் விறுவிறுப்பெடுக்கிறது.

படத்தின் நாயகி நயன்தாராவை ஒருதலையாகக் காதலிக்கும் யோகிபாபு, நயன்தாராவுக்கு அடுத்தபடியாக படத்தின் பலமான அம்சம். நயன்தாராவுக்காகவே அவரது வீட்டிற்கு எதிரில் கடை வைத்திருப்பது, பிறகு அவருக்கு உதவப்போய் பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்வது என்று வெளுத்துக்கட்டுகிறார் மனிதர்.

கோலமாவு கோகிலா

தொடர்ந்து பஞ்ச் டயலாக் பேசும் மொட்டை ராஜேந்திரன், நேர்மையான அப்பாவாக வரும் ஆர்.எஸ். சிவாஜி, தாயாக வரும் சரண்யா ஆகியோர் தேர்ந்த நடிகர்கள் என்பதால் படம்நெடுக ரசிக்கவைக்கிறார்கள்.

குறிப்பாக, நயன்தாராவின் தங்கையைக் காதலிக்கும் (ஒருதலைக் காதல்தான்) இளைஞனும் அசரவைக்கிறார்.

அறம் படத்தில் கதாநாயகி ஏற்றிருக்கும் ஆட்சியர் பாத்திரம் அவருக்கு ஒரு அதிகாரத்தைத் தருகிறது. ஆனால், இந்தப் படத்தில் எந்த பலமுமே இல்லாமல் வரும் நாயகி, நோயிலிருந்து தன் தாயைக் காப்பாற்ற முயல்கிறார், பலம்வாய்ந்த வில்லன்களை எதிர்கொள்கிறார், கொலை செய்கிறார். உண்மையில் இது நயன்தாராவுக்கு அடுத்த கட்டம். நயன்தாரா மட்டுமல்ல, படத்தில் வரும் பெண் பாத்திரங்கள் எல்லோருமே முக்கியமான முடிவுகளை எடுக்கிறார்கள். அந்த வகையில் இது ஒரு கவனிக்கத்தக்க படம்.

கோலமாவு கோகிலா

அனிருத்தின் இசையில் 'கல்யாண வயசு' பாடல் மட்டுமல்ல, பின்னணி இசையும் ரசிக்கவைக்கிறது.

நயன்தாராவின் ரசிகர்கள் மட்டுமல்ல, மற்றவர்களும் ரசிக்கக்கூடிய படம்தான்.

https://www.bbc.com/tamil/arts-and-culture-45219440

Share this post


Link to post
Share on other sites

ஹீரோயின் நயன்தாராவாம்... ஆனா, ஹீரோ யோகி பாபு ப்ரோ! - கோலமாவு கோகிலா விமர்சனம்

 
ஹீரோயின் நயன்தாராவாம்... ஆனா, ஹீரோ யோகி பாபு ப்ரோ! - கோலமாவு கோகிலா விமர்சனம்
 

ம்மாவுக்கு வந்த புற்றுநோயால் அலங்கோலமாகிப்போகும் வாழ்க்கையை மீண்டும் ரங்கோலி கோலமாக மாற்றப் போராடும் மகளின் கதையே `கோலமாவு கோகிலா.' 

மானம்தான் பாவாடை சட்டை, மத்ததெல்லாம் வாழை மட்டையென வாழும் கோகிலா. க்யூவில் குறுக்கே வந்தவனிடம் சண்டைபோட்டு சட்டையைக் கிழித்துக்கொள்ளும் ஏ.டி.எம் செக்யூரிட்டி அப்பா. கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் தங்கை. இவர்களைக் கட்டிமேய்க்கும் அம்மா. காசு பணம் பெரிதாய் இல்லையென்றாலும் நீதி, நேர்மையென வாழும் குடும்பம். திடீரென ஒருநாள் அம்மாவுக்குப் புற்றுநோய் இருக்கும் தகவல் அணுகுண்டாய் வெடிக்கிறது. 3 மாத இடைவெளிக்குள் 15 லட்சம் பணம் திரட்டினால், நோயைக் குணமாக்கிவிடும் மெல்லிய வாய்ப்பு. எங்கெங்கோ அலைந்தும் பணத்தைத் திரட்ட முடியாமல் தவித்து நிற்கையில், டிரக் ஸ்மக்லர்களின் உலகத்துக்குள் சென்றுவரும் அரியச் சந்தர்ப்பம் கிடைக்கிறது. அதைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்பவர் பணம் கோடிகளில் புரளும் அந்த உலகத்திலிருந்து தனக்குத் தேவையான லட்சங்களை ஈட்ட நினைக்கிறார். அதற்காக அவர் ஆங்காங்கே செக் புள்ளிகளை வைத்து, அவற்றைச் சரியாக இணைத்து கோலம் போட்டாரா என்பதே மீதிக்கதை.

நயன்தாரா - கோலமாவு கோகிலா

 

 

கோலமாவு கோகிலாவாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா! முகத்தில் அப்பாவித்தனம் உச்சகட்டம். சாந்தமே சொரூபமாக முகத்தை வைத்துக்கொண்டு கிடைக்கும் கேப்பில் எல்லாம் வில்லன்களுக்கு ஆப்பு வைக்கையில் அப்ளாஸை அள்ளுகிறார். படம் முழுக்க அவர் முகத்திலிருக்கும் ஒருவித இறுக்கம்தான் கொஞ்சம் சறுக்குகிறது. மற்றபடி, நயன்தாரா ரசிகர்கள் அவர் கண்ணால சொக்குவதும், தன்னால சிக்குவதும் உறுதியோ உறுதி. 'கோகில'மே நீ குரல் கொடுத்தால் உன்னைக் கும்பிட்டு கண் அடிப்பேன்' எனக் கோகிலாவை ஒருதலையாய் காதலித்துத் திரியும் சேகராகப் யோகிபாபு. கூட்டிக் கழித்துப் பார்த்தால் படத்துக்கு ஹீரோவே அவர்தான் ப்ரோ. `ஷாட்புட் மண்டையன், ஷிரஞ்ச் மூஞ்சி, மொட்டையடிச்ச காட்டுக்குரங்கு' என விதவிதமான உருவகேலி பந்துகளை சுவரைப் பார்த்து எரிந்து சிரிக்கவைக்கிறார். கோகிலாவின் அப்பாவாக ஆர்.எஸ்.சிவாஜி, அம்மாவாக சரண்யா, தங்கையாக ஜாக்குலின், ஜாக்குலினை காதலிக்கும் அன்புதாசன், போதை மாஃபியாக்கள் ஹரீஷ் பேரடி, நான் கடவுள் ராஜேந்திரன், சார்லஸ் வினோத் என நடிகர்களின் பெயரை எழுதவே அடிஷனல் ஷீட் வாங்க வேண்டும். அனைத்து நடிகர்களுமே அந்தந்த கதாபாத்திரங்களுக்கு கச்சிதமான தேர்வு. அதிலும், டோனி எனும் கதாபாத்திரத்தை இனி மீம்களில் பார்க்கலாம். செம ரகளை மாமே!

 

 

கோலமாவு கோகிலா

`ப்ளாக் காமெடி' எனும் ஜானருக்கு நிறைவான நியாயம் செய்திருக்கிறார் இயக்குநர் நெல்சன். துப்பாக்கி, போதைமருந்து, மாஃபியா, போலீஸ், அடி, உதை, குத்து எனப் படத்தில் பரவிக் கிடக்கும் ரத்த வாடையை, காமெடி ரூம் ஸ்ப்ரே அடித்து காலி செய்திருக்கிறார். வசனங்கள் பல இடங்களில் தாறுமாறு, மீத இடங்களில் `கலக்கப்போவது யாரு'! நிறைய விஜய் டிவி முகங்கள், அதன் பாணி வசனங்களை மட்டும்  தவிர்த்திருக்கலாம். அது வெள்ளித்திரையில் விஜய் டிவி பார்ப்பதுபோன்ற உணர்வையே தருகிறது. நேர்ப்புள்ளி கோலம்போல் கொஞ்சம் சாதாரணமாகவே இருக்கும் திரைக்கதையில் ஊடுபுள்ளிகள் வைத்திணைத்து இன்னும் சுவாரஸ்யம் சேர்த்திருக்கலாம். இரண்டாம் பாதியில், கும்மிடிப்பூண்டி டு செங்குன்றம் டெம்போ பயணக் காட்சிகள் மற்றும் ஒரு சொம்பு தண்ணீர் கேட்டு ஒட்டுமொத்த கேங்கையும் போட்டுத்தள்ளும் காட்சிகள் ரிப்பீட் மோடில் போட்டவாறு மீண்டும் மீண்டும் நடப்பது, அயர்ச்சியை உண்டுபண்ணுகிறது. அந்த நேரங்களில் அன்புதாசன் - யோகிபாபு காமெடி மட்டும்தான் ஒரே ஆறுதல். டன் கணக்கில் இருக்க வேண்டிய அம்மா சென்டிமென்ட்டும் 90 கிலோதான் இருக்கிறது. முக்கியமாக, லாஜிக் எனும் ஏரியாவையும் கவனித்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். 

`கல்யாண வயசு’ பாடல் இணையத்தில் பயங்கர ஹிட். அரங்கில் விசில் சத்தம் பாடல் சத்தத்தை ஓவர்டேக் செய்கிறது. வாழ்த்துகள் அனிருத்! ஆனால், படத்தில் பின்னணி இசை வசனங்களை ஓவர்டேக் செய்கிறது. குறைத்திருக்கலாம் அனிருத். வித்தியாசமான விஷுவல் ட்ரீட் தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சிவகுமார் விஜயன். ப்ளாக் காமெடி படங்களுக்கான விஷுவல் என்பதில் கச்சிதமான உழைப்பு.  நிர்மல் எடிட்டிங்கில் நிதானம் தெரிகிறது.

கோலமாவு கோகிலா

கதை, திரைக்கதையெல்லாம் தூக்கி ஓரம் வைத்துவிட்டு சீனுக்கு சீன் காமெடியை மட்டுமே குறிவைத்து கலகலப்பான கோலத்தைத்தான் போட்டு முடித்திருக்கிறாள் இந்த `கோலமாவு கோகிலா.'

 

https://cinema.vikatan.com/movie-review/134341-kolamavu-kokila-tamil-movie-review.html

Share this post


Link to post
Share on other sites

கோலமாவு கோகிலா – திரை விமர்சனம்


kk1.jpg?w=563&h=295

நயன் இப்போ சூப்பர் ஸ்டார் லெவல். நயன் தேர்ந்தெடுக்கற கதைகளும் அந்த லெவல் தான். சமீபத்தில் அவர் நடிப்பில் வந்த படங்கள் அனைத்தும் ஒவ்வொன்றும் ஒரு விதம், மேலும் அவர் அப்படங்களில் ஹீரோ அளவுக்கு முக்கிய வேடத்தில் வருகிறார் அல்லது ஹீரோவுக்கு ஜோடி என்றாலும் நடிக்க நல்ல வாய்ப்புள்ள பாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்தப் படமும் மிகவும் வித்தியாசனமான படம் தான்.

பேய் படங்கள் சீசன் மாதிரி இப்போ டார்க் க்ரைம் காமெடி சீசன். கோலமாவு கோகிலா அத்தகைய கதையே! பொருளாதரத்தில் நடுத்தரக் குடும்பத்துக்கும் கீழுள்ள ஒரு குடும்பத்தின் மூத்த மகளாக பொறுப்புள்ள அழகிய பெண் கோகிலாவாக வருகிறார் நயன்தாரா. அவர் வேலையில் சந்திக்கும் செக்ஸுவல் ஹேரஸ்மென்டை எதிர்த்து வெளியேறும் விதம், பின் அடுத்த வேலையை விரைவில் சேரும் சாமர்த்தியம் இவை மூலம் அவர் பாத்திரத் தன்மையை ஏழை குடும்பப் பெண் என்றாலும் கெத்தும், சாமர்த்தியமும் உடையவர் என்று முதல் காட்சிகளிலேயே புரிய வைத்து விடுகிறார் இயக்குநர் நெல்சன். அதன் பின் அம்மாவின் நோயின் மருத்துவ செலவுக்காக சந்தர்ப்பவசத்தால் ஒரு குறுக்கு வழி தெரியும்போது அதைப் பற்றிக் கொண்டு பணம் ஈட்ட ஆரம்பிக்கும் வரை நன்றாகவே யதார்த்தத்துடன் நகர்கிறது கதை. அடுத்து அந்த ஹெராயின் கடத்தும் கும்பலுடன் சேர்ந்து கொலை செய்வதையும் சகஜமாக பார்க்கும் போது (அசால்டாக இன்னொரு கொலை செய்யத் தூண்டுவது எல்லாம்!!!!) அந்தப் பாத்திரத்தின் தன்மை இயல்புக்கு எதிராக மாறுகிறது. அம்மாவுக்காக என்று செய்யும் சில செயல்கள் தவறாக இருந்தாலும் பயந்து பயந்து செய்யும் நேர்த்தி நன்றாக இருக்கிறது ஆனால் தீடீரென்று தேர்ந்த கடத்தல்காரியாக மாறும்போது நெருடல் ஏற்படுத்துகிறது.

அந்த நெருடலை பொருட்படுத்தாவிட்டால் அதற்குப் பின் திரைக்கதை கொஞ்ச நேரத்துக்கு நன்றாக நகர்கிறது. யோகி பாபு நயன் மேல் ஒரு தலைக் காதலுடன் அவர் வீட்டின் எதிர் பக்கத்தில் பொட்டிக் கடை வைத்திருக்கிறார். அவருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு, திரையில் தோன்றியவுடனே ஆர்பரிக்கிறது திரையரங்கம். அவரின் நகைச்சுவை பங்களிப்பினால் கொஞ்சம் இழுவையாக இருக்கும் படத்தைத் தூக்கி நிறுத்துகிறது. நயனின் தங்கையாக வரும் ஜெக்குலினின் ஒரு ரெண்டாங்கெட்டான் காதலனாக வரும் அன்புதாசனும் கலக்கலாக நடித்திருக்கிறார். அவர் பத்திரமும் நகைச்சுவைக்கு நன்றாக உள்ளது. ஆனால் நயனும் குடும்பத்தாரும் ஹெராயின் கடத்தலுடன் நிறைய பேரை கொலை செய்வதையும் எந்தவொரு குற்ற உணர்வும் இல்லாமல் செய்வது அவர்களின் பாத்திரப் படைப்புக்கு சரியாக ஒத்து வரவில்லை. ஒரு சாதாரண குடும்பத்துப் பெண்கள் ஒரு டான் குடும்பத்து ஆண்கள் போல செயல்படுவது கதையோடு ஒன்றமுடியாமல் செய்துவிடுகிறது.

கொலைகள் இல்லாமல் சாமர்த்தியத்துடன் நயன் செயல்பட்டு எதிரிகளை வீழ்த்துவதாக காட்டியிருக்கலாம். பின் பாதியில் நூறு கிலோ ஹீரோயினுடன் அந்தக் குடும்பம் ஒரு வேனில் சுத்துவது எல்லாம் காதில் பூ. போலிஸ் அதிகாரியாக சரவணன் வருகிறார். அம்மாவாக சரண்யா பொன்வண்ணன். ஒரு ஹெராயின் விநியோகஸ்தராக மொட்டை ராஜேந்திரன். இவர்கள் எல்லாம் கதைக்கு நல்ல பலம். அனிருத்தின் இசையில் சில பாடல்கள் படம் வரும்முன்னே பிரபலம் ஆகிவிட்டன. பின்னணி இசையும் நன்றாக உள்ளது. சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவும் நன்றே.

சில இடங்களில் வாய் விட்டு சிரிக்க வைக்கிறது படம். ஆனால் எதிர்பார்த்த அளவு சுவாரசியமாக இல்லை. எதிர்பார்த்தது நம் தவறோ? ஹாலிவுட்டில் 2013ம் ஆண்டு வெளிவந்த We’re the Millers படத்தின் காப்பி இந்த படம், அதில் ஹீரோ பிரச்சனையில் மாட்டிக்கொள்வார், அதை மாற்றி இப்படத்தில் ஹீரோயின். அனால் படத்தை முழுவதுமாக தாங்கி நிற்கிறார் நயன்தாரா, அதில் ஒரு சந்தேகமும் இல்லை. (சாவித்திரி மாதிரி ஒரு கண்ணில் மட்டும் அழுகிறார்). அவருக்கு இது ஒரு வெற்றிப் படம்!

kk.jpg?w=625&h=272

 

https://amas32.wordpress.com/2018/08/19/கோலமாவு-கோகிலா-திரை-விமர/

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Black Humour ல் அருமையாக ஆக்கப்பட்ட படம்தான். பொதுவாக இந்த genre ல் பெரிதாக லாஜிக் எதிர்பார்ப்பது இல்லை . லாஜிக் இல்லாமலும் அறிவுபூர்வமாகப் படம் எடுக்கலாம் என்பதற்கு இத்தகைய படங்கள் சாட்சி. 

நவீனன் அல்லது Nunavilan அடுத்து ' மேற்குத் தொடர்ச்சி மலை ' திரைப்பட விமர்சனத்தைப் பதிவு செய்யலாம். சமூக அக்கறையுடன் மிக நேர்த்தியாக எடுக்கப்பட்ட படம். வளர்ச்சி என்ற பெயரில் இன்று தமிழ்ச் சமூகம் தாக்குதல்களை எதிர்கொள்ளும் நேரத்திற்கு உகந்த படம்.

 

 

Share this post


Link to post
Share on other sites

 

8 minutes ago, சுப.சோமசுந்தரம் said:

 

நவீனன் அல்லது Nunavilan அடுத்து ' மேற்குத் தொடர்ச்சி மலை ' திரைப்பட விமர்சனத்தைப் பதிவு செய்யலாம். சமூக அக்கறையுடன் மிக நேர்த்தியாக எடுக்கப்பட்ட படம். வளர்ச்சி என்ற பெயரில் இன்று தமிழ்ச் சமூகம் தாக்குதல்களை எதிர்கொள்ளும் நேரத்திற்கு உகந்த படம்.

 

 

 

Share this post


Link to post
Share on other sites

ஏற்கெனவே நவீனன் அவர்கள் பதிவு செய்துள்ளதை நான் கவனிக்கவில்லை . நன்றி.

Share this post


Link to post
Share on other sites

படம் பாக்கோணும் போலை கிடக்கு....கஞ்சாவை விட காதல் பெரியது...

 

 

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now