-
Similar Content
-
By அருள்மொழிவர்மன்
இரவில் இன்பம் தரும் உன் விரல்கள்
பகலில் விலகிப் போக
வருத்தமொன்றே விருப்பப்பாடமாக எடுத்த எனக்கு
மறுஇரவு முழுநிலவாகுமோ!
-
By புங்கையூரன்
கண் தெரியும் தூரம் வரை…..
காலம் தின்று..துப்பிய ….,
எச்சங்களின் மிச்சங்களாய்….,
செத்துப் போன வீடுகளின்,
எலும்புக் கூடுகள் !
வெறுமைகளை மட்டுமே…,
வெளியே காட்டிய படி…,
உண்மைகளை ஆழப் புதைத்து..,
கண் மூடித் துயில்கின்ற…..,
வரலாறுகளின் சுவடுகள் !
அந்தத் திருக்கொன்றை மரத்தினுள்..,
ஆளப் புதைந்திருக்கும் …..,
வைரவ சூலம் மட்டும்….,
எத்தனை வடை மாலைகளையும்,
எத்தனை தேசிகாய்களையும்,….,
தன் மீது சுமந்திருக்கும் ?
அந்தக் கருக்குவாச்சி மரம்,
எத்தனை காதலர்களின்,
இரவு நேரச் சந்திப்புக்களை…,
விரக தாபங்கள் சிந்தும்,
கற்பூர சத்தியங்களை….,
தன்னுள் புதைத்திருக்கும் ?
காவோலைச் சேலை இழந்து….,
கதியால் கரங்களால் …,
தங்கள் மானம் காத்து..,
காவிளாய்ச் செடிகளின் விரிப்பில்,
மறைந்து கிடக்கிறதே நிலம் !
ஒரு காலத்தில்,,
கரும் பேட்டுக் குஞ்சுகளாய்…,
வரம்புகளில் மரக்கறிகளும்,
வளவு நிறைந்த மிளகாய் மரங்களுமாய்.,
நான் செய்த தோட்டம் !
நத்தை பொறுக்கும் செண்பகங்களும்….,
மிளகாய் கடிக்கும் கிளிகளுமாய் …,
கல கலத்த தோட்டம்….!
எனது மகன் …,
உழக்கிய துலா கூட….,
இன்னும் நிமிர்ந்தே நிற்கிறது !
மகன் கனடாவிலும்,,,.
மகள் ஜெர்மனியிலும…..!
பிள்ளைப்பெறு …..,
பாக்கப் போன மனுசியும்,
பிள்ளையள் பாவம் எண்டு….
அங்கையே நிண்டுட்டுது !
அக்கினி சாட்சியான.....,
வசிட்டர் வடக்கிலும்,
அருந்ததி தெற்கிலுமாய்....,
ஆரிட்டைப் போய் அழுகிறது ?
உனக்கென்னப்பா பிரச்சனை எண்டு....,
ஊரே பொறாமைப் படுகுது !
எனக்கென்ன குறைச்சல் ?
ஆஸ்பத்திரி மாதிரி..,
எல்லா மருந்துகளும்...,
அலுமாரிக்குள்ள அடுக்கி இருக்கு !
ஆரோ ஒருத்தி வந்து..,
அடிக்கடி சமைப்பாள் !,
பொறுங்கோ….வாறன் !
வல்லுவத்துக்குள்ள போன் சிணுங்குது !
ஒரு பேரனோட இங்கிலிசும்…,
மற்றப் பேரனோட ஜெர்மனும்..,
தமிழில கதைக்க வேணும் !
எனக்கென்ன குறைச்சல் ?
-
By புங்கையூரன்
சிறகு முளைக்கும் முன்னரே...,
இறக்கை விரிக்க வைத்த நாள்!
பொத்திப் பொத்திப்..,
பிள்ளை வளர்த்தவர்கள்...,
பெற்ற மனசுகளை இறுக்கிய நாள் !
எங்கு போனாலும் பரவாயில்லை..,
இங்கு மட்டும் வேண்டாம் ராசாக்கள் ...!
எங்காவது தூர தேசம் போய் விடுங்கள் !
நாங்கள் உயிரோடு இருந்தால்....
நாளைக்கு எங்களுக்கு...,
கொள்ளி போட வந்து விடுங்கள்!
காணியை விற்றார்கள்,
கழுத்தில் கிடந்ததை விற்றார்கள்!
கைகளில் கிடந்ததை விற்றார்கள்!
காதுகளில் கிடந்ததையும் விற்றார்கள்!
நாளைய நம்பிக்கைகளை,
எஜன்சிகளிடம் கையளித்தார்கள்!
உலகப் படத்தையே காணாதவர்கள்..,
சில நாட்களுக்குள்...,
உலகம் முழுவதையுமே..,
உள்ளங் கையில் வைத்திருந்தார்கள்!
இன்றோ....,
கோவில்கள், கும்மாளங்கள்,
கும்பாபிஷேகங்கள்,,,,,,
கறிப் பாட்டிகள்...,சாறிப் பாட்டிகள்,
கொண்டாட்டங்கள்....எனக்,
கொடி கட்டிப் பறக்கிறார்கள்!
இடைக்கிடை....,
சந்திப்புகளின் போது...,
பியருக்குக் சொட்டைத் தீனியாய்..,
பாரைக் கருவாட்டுப் பொரியலாய்,
கருவேப்பிலைக் கொத்தாய்,
கறுத்தக் கொழும்பான் மாம்பழமாய்,
யாழ்ப்பாண நினைவுகள்...,
அவர்களுடன் வாழ்கின்றன!
கொஞ்சம் போரடித்தால்....,
ஊர்ப்பக்கம் ஒரு முறை..,
எட்டிப்பார்த்து......,
சோர்ந்து போன ஈகோக்களைக்,
கொஞ்சம் நிமிர்த்திய திருப்தியுடன்..,
நீட்டிய வால்களை ...,
மீண்டும் சுருட்டிக் கொள்வார்கள்!
பீஜித் தீவில் ...,
மொரிசியஸ் தீவில்...,
தென்னாபிரிக்காவில்...,
மலேசியாவில்...சிங்கப்பூரில்,
தமிழர்கள் வாழ்வது போல...,
அமெரிக்காவில்....கனடாவில்...,
இங்கிலாந்தில்....அவுஸ்திரேலியாவிலும்,
தமிழர்கள் வாழ்வார்கள்!..
-
By புங்கையூரன்
என் முதலாவது காதலியே...!
உன்னை நெஞ்சோடு…,
இறுக்கமாக அணைத்த நாள்,
இன்னும் நினைவிருக்கின்றது!
நீ…,!
எனக்கு மட்டுமே என்று..,
பிரத்தியேகமாக...
படைக்கப் பட்டவள்!
உனது அறிமுகப் பக்கத்தில்,
எனது விம்பத்தையே தாங்குகிறாயே!
இதை விடவும்…,,
எனக்கென்ன வேண்டும்?
உனது நிறம் கறுப்புத் தான்!
அதுக்காக….,
அந்தக் கோபாலனே கறுப்புத் தானே!
அதுவே உனது தனித்துவமல்லவா?
உன்னைப் பற்றி…,
எனக்கு எப்பவுமே பெருமை தான்!
ஏன் தெரியுமா?
ஜனநாயகமும்...சோசலிசமும்,
உடன் பிறந்த குழந்தைள் போல..
உன்னோடு ஒன்றாகப் பிணைந்திருக்கின்றனவே!,
உலக அதிசயங்களில் ஒன்றல்லவா, இது?
என்னவளே...!
தோற்றத்தில்…,
நீ கொஞ்சம் பெரிசு தான்!
அதுவும் நல்லது தானே!
அதிலும்,,,
ஒரு வசதி தெரியுமா?
எந்த தேசத்தின் பணமானாலும்,
உனது ஆடைகளுக்குள் இரகசியமாக,
மறைத்து விடலாமே!
உன்னை அடைவதற்கு..,
நான் பட்ட பாடு…,
உன்னைத் தொடுவதற்கு,
நான் கடந்த தடைகள்,
அப்பப்பா..!
இப்போது நினைத்தாலும்,
இதயத்தில் இலேசாக வலிக்கிறதே!
விதானையிடம் கூட…,
கையெழுத்துக்கு அலைந்தேன்!
விதானையின் விடுப்புக்களுக்கு…,
விடை சொல்லிக் களைத்தேன்!
பாம்புகள் போல நீண்ட வரிசைகளில்,
பல பகல் பொழுதுகள்..,,
பைத்தியக் காரனாய்க்காத்திருந்தேன்!
நாளைக்கு வந்திருவாள் என்றார்கள்,
நாலு நாட்கள் எடுத்தது!
சில வேளைகளில்..,
உனது அழகிய மேனியில்..
அன்னியர்கள் சிலர்,
ஓங்கிக் குத்துவார்கள்!
அந்த வேளைகளில்..,
உன்னை விடவும்,
எனக்குத் தான் வலிக்கும்!
ஒரு நாள்…,
உன்னை அந்நியர்களின் வீட்டில்,
அனாதரவாய்க் கை விட்டேன்!
எனக்கு மட்டும்,விருப்பமென்று நினைத்தாயா?
உன்னை விட்டுத் தான் ஆக வேண்டும்!
எனக்கோ,
இரவு முழுவதும் தூக்கமேயில்லை!
எப்போது விடியும் என்ற ஏக்கத்தில்..,
இமைகளை மூட முடியவில்லை!
விடிந்ததும்..,
ஓடோடி வந்தேன் உன்னிடம்!
உன்னைக் காணவில்லை என்றார்கள்!
இதயத்தின் துடிப்பே,,,.
அடங்கிப் போன உணர்வு!
இரண்டு நாட்களின் பின்னர்..,
அந்த உத்தியோகத்தரின்,
'மூன்றே முக்கால்' கால் மேசைக்கு,,,
உனது சக தோழிகளுடன்..,
நாலாவது காலாகி.....
நீ மிண்டு கொடுத்துக் கொண்டிருந்தாய்!
அப்போதும் கூடப் பார்..!
உனது கறுப்பு நிறம் தான்…,
உன்னை மீட்டுத் தந்தது!
பத்து வருடங்களின் பின்னர்…,
இன்னொரு காதலி வந்தாள்!
நீ எனது முதல் காதலியல்லவா?
உன்னையும் வைத்துக் கொள்ளத் தான் ஆசை!
கெஞ்சிக் கேட்டும் பார்த்தேன்!
வஞ்சகர்கள் அவர்கள்!
இரண்டு லட்சம் கேட்டார்கள்!
இரண்டு லட்சத்தை..,
எங்கே தேடுவேன்!
அந்த இரண்டு லட்சம் உனக்கல்லவாம்!
என் சொந்தங்கள் மீது,,,,
எரி குண்டுகள் போடவாம்!
ஒரு நிமிடம் தான் சிந்தித்தேன்!
உனது முகம் வாடியது தெரிந்தது!
இறுக்கமாய் மனதை வரித்து,
உன்னிடம் சொன்னேன்…!
சரி தான் …. போடி!
(உருவகக் கவிதை)
-
By seyon yazhvaendhan
ஆனந்த விகடன் (15.2.17) இதழில் வெளியான எனது "நகரத்தின் புதிய தந்தை" கவிதையை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.... யாழ் களத்தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி!
நகரத்தின் புதிய தந்தை
எல்லாவற்றையும் மாற்றப்போவதாக வாக்களித்து
நாற்காலியைக் கைப்பற்றிய
நகரத்தின் புதிய தந்தைக்கு
அவர் பராமரிக்கவேண்டிய
பிள்ளைகளின் கணக்கு கொடுக்கப்பட்டது.
சாதுவானவர்கள், அடங்காதவர்கள்,
ஊதாரிகள், அயோக்கியர்களென
அனைவரின் புள்ளிவிவரம் அவரிடமிருந்தது.
அடங்காதவர்களை அவர் கலாச்சாரக் காவலர்களாக்கினார்.
ஊதாரிகளுக்கு வெகுமதிகள் கொடுத்தார்.
சாதுவானவர்களுக்கு வேலைகளைப் பகிர்ந்தளித்தார்.
அயோக்கியர்களைத் துணைக்கு வைத்துக்கொண்டார்
நகரம் முன்பைவிட நரகமானதைப் பற்றி
ஒருவரும் வாய்திறக்கவில்லை
-சேயோன் யாழ்வேந்தன்
(ஆனந்த விகடன் 15.2.17)
(எனது பதிவுகளில் படங்களை இணைக்க முடியவில்லை. யாழ் தளத்தின்நெறியாளர் அல்லது தோழர்கள் அதற்கான வழிமுறையைக் கூறவும்)
(அல்லது நான் இணைக்க முயன்ற படத்தை இப்பதிவில்இணைத்துவிடவும்)
-
By Mayuran
வார்த்தைகள் யாவும்
வலுவிழந்து போகின்றன
கார்த்திகை வானம் போல
மனம் கனத்துக் கிடக்கின்றது
நேற்று வரை எம்மோடு இருந்த நீ
இல்லை என்ற சொற்கேட்டு
இடி விழுந்த கோபுரம் போல
இதயம் நொருங்கிக் கிடக்கின்றது
ஆற்றல் மிகுந்த பேராசானே! நீ
ஆக்கி வைத்த இலக்கியங்கள்
இன்னும் நூறு தலைமுறைக்கு
ஈழத் தமிழர் கதை சொல்லி வாழும்
பழகிட இனித்திடும் வெல்லமே
பார்வையாலே பேசும் பெருமகனே
ஈழத்தமிழர் பெயர் சொல்லி எவர்
இரந்து கேட்டாலும் இல்லை எனாமல்
நிறைந்து வளங்கும் வள்ளலே
உன்னால் உயர்ந்தவர் பலர் - எம்
உள்ளத்தில் என்றும் நீ
இருப்பாய் பெரும் கனலாய்
வருகின்ற எம் படைப்புக்களின்
இனியும் நீ வாழ்ந்து கொண்டேய் இருப்பாய்...
#ஈழத்துப்பித்தன்
2002 காலப்பகுதிகளில் நாம் யாழ் களத்தில் நுழைந்த போது எம்மை தட்டிக் கொடுத்து வயது இடைவெளி பாராது சக நண்பனாய் எம்மோடு பழகியவரும் பல்துறைக் கலைஞனுமான "இராஜன் முருகவேள்" (சோழியான்) அவர்களின் நினைவு சுமந்து...
-
By Mayuran
பொய்த்துத்தான் போகாயோ
*******************************
சத்தம் இன்றி - பெரும்
யுத்தம் இன்றி
சலசலப்பு ஏதுமின்றி
சிணுங்கி வழிகிறாள்
சிலநாளாய் வானமகள்
முன்பெல்லாம்
அவள் வரவு கண்டு
ஆனந்தித்த பொழுதுகள்
அளவுக்குள் அடக்க முடியாதவை
மனம் ஆனந்தப்பூங்காற்று பாடி
மமதையிலே திழைத்திருக்கும்
மண் மணம் நாசி ஊடு புகுந்து
மண்ணில் வாழ்ந்த நாளை
மறுபடியும் மறுபடியும் கிளறி நிற்கும்
ஊர் போய் வந்த பின்னர்
உறவுகள் நிலை கண்ட பின்னர்
பெய்யெனப் பெய்யும் மழை
பிய்ந்த கூரை வழி வழிந்து
நிறைவில்லா வீடுகளை
நிறைத்து நின்றதனை கண்டதனால்
நீ எம்மவர் நிலை மாறுமட்டும்
பொய்த்துத்தான் போகாயோ எனும்
பெரும் ஏக்கம் நெஞ்சமெங்கும்...
#ஈழத்துப்பித்தன்
01.02.2016
http://inuvaijurmayuran.blogspot.ch/2016/05/blog-post_20.html
-
By Mayuran
சேகர் அண்ணாவின் (தமிழ்சூரியன்) பகீரதப்பிரயர்த்தன முயற்சியால் அவரது இசையிலும் எனது குரலிலும் வரிகளிலும் காட்சிப்படுத்தலிலும் வெளிவந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு வலுச்சேர்க்கும் முகமான பதிவு.
முள்ளிவாய்க்கால் பேராவலம்
முடிவில்லா ஓர் அவலம்
பன் நாட்டுப்படை புகுந்து
பல்லாயிரம் உயிர் தின்று
சொல்லாத கதை கோடி
சுமந்து கிடக்கும் மண்ணது
வில்லாண்ட இனம் ஒன்று
வீறுகொண்டு போர் கண்டு
விடுதலைக்காய் வேள்வியொன்றை
விருப்புடனே நடத்தியதையை
கண் காணச் சகிக்காத
காடையர்கள் கூட்டிணைவில்
இனம் ஒன்று அழிந்ததுவே
ஈரல் குலை அறுந்ததுபோல் தவித்தோமே
பல தேசம் வாழ்ந்தோம்
பார் எங்கும வீதி வழி குவிந்தோம்
பலனேதும் கிடைக்காமல்
பரிதவித்து பைத்தியமானோம்
இனப்படுகொலை ஒன்றை
இரக்கமின்றி சத்தமின்றி அரங்கேறி
இந்தியப் பெருங்கடலும் செந்நிறமாக
இடி வீழ்ந்துபோல் கிடந்தோமே
இமை மூட மறந்தோமே
ஆண்டுகள் ஏழு
அனல் இடை கரைந்து
அரவணைக்க ஆரும் இன்றி
அரற்றிக் கிடக்கிறோம் நாம்
எங்கள் இரத்த உறவுகளே!
ஆறாக உங்கள் இரத்தம்
அலை புரண்டு ஓடி
ந்ந்திக் கடல்
செங்கடல் ஆனபோதும்
அகிலம் முழுதும்
பரந்து கிடந்த எம்மால்
எதுவுமே செய்ய
முடியவில்லையே
என்ற குற்ற உணர்வும்
இயலாமையும்
கண்களைக்குளமாக்க
உங்களை இழந்த நினைவுகளோடு....
எங்கள் உரிமையை வென்று
உலக அரங்கில்
எமக்கான நீதியைப்பெற
அணிதிரள்வோம்
அலை அலையாய்....
ஓரணியில்..
#ஈழத்துப்பித்தன்
02.05.2016
http://inuvaijurmayuran.blogspot.ch/2016/05/blog-post_13.html
-
By Mayuran
மீண்டும் மீண்டும் உருவேற்றி
மீளவும் நினைவில் பெருந்தீ மூட்டி
சொல்லவும் மெல்லவும் முடியாமல்
உள்ளத்தில் அனல்கின்ற சிறுபொறியை
அணையாமல் காப்பது நம் கடனே அடையாளம் அத்தனையும் தொலைத்து
அடுத்தவனின் கருச் சுமந்து கிடக்கிறாள்
எங்கள் அன்னைத் தமிழீழ பூமி
உள்ளத்தில் சுழன்றாடும் சிறு நெருப்பை
உருவேற்றி கடத்துவோம் நாளை உலகுக்கு இனம் ஒன்று அழிந்ததன் அடையாளம்
இல்லாமல் செய்தனர் அதைக் கூட
தினம் அங்கு தடம் அழித்து அழித்து
திருவிழா பூமியாய் மிளிருது இன்று
பட்ட துயர் பகிருவோம் நாளை தலைமுறைக்கு கொத்துக் கொத்தாய் குதறி எடுத்த
கொத்துக் குண்டின் தடம் கூட இல்லாமல் போனது
செத்துக் கிடந்தவர் பிணம் கூட
சிதை மூட்ட ஆளின்றி சீன அமிலம் தின்று தீர்த்தது
முத்தான எம் முகவரி முடிந்து போனதை பதிந்து வைப்போம் மலை மலையாய் குவிந்த எம்மவர் மண்டை ஓடுகள் மேல்
மலையாய் எழுந்து நிற்குது ஆக்கிரமிப்பின் சின்னம் அங்கு
மாண்டவர் வரலாற்றை எம்மினமே மறுதலித்துக் கிடக்குது இன்று
ஆண்ட தமிழினத்தின் அரச முடி நிலம் சரிந்து
மீள முடியா அடிமையான கதை சொல்லி உனை உருவேற்று இன அழிப்பின் ஆதாரமாய் எஞ்சிக் கிடப்பது மே 18 மட்டுமே
உன்னுள் தீ மூட்டி உனை உருவேற்றி உலகுக்கு அதை காட்டு
பேதங்கள் ஆயிரம் எம்மை பிரித்துக் கிடந்தாலும்
சாவுக்கு அழுவதற்கேனும் சமத்துவம் காணுவோம்
இன அழிப்பின் அடையாளம் மே 18 அதை இறுகப் பற்றுவோம். #ஈழத்துப்பித்தன்
11.05.2016 (படங்கள் பறந்த வாகனத்துள் இருந்து மனம் கனத்துச் சுட்டவை.) http://inuvaijurmayuran.blogspot.ch/2016/05/blog-post_11.html -
By புங்கையூரன்
அன்னையர் தினம்..!
அகிலத்தின் அன்னையர்களுக்கு…,
இது ஒரு தினம் !
என் தேசத்து அன்னையருக்கு..,
இது ஒரு செய்தி!
எம்மை ஈன்றவளை ஒரு நிமிடம்,
நினைத்துப் பார்க்கையில்…!
இதயத்தின் ஆழத்தில் …,
எங்கோ ஒரு மூலையில்,
இலேசாக வலிக்கின்றது!
அப்பா என்னும் ஆண் சிங்கம்,
பிடரி சிலிர்க்கும் போதெல்லாம்..,
அடங்கிப் போன அம்மா!
பிரசவங்களின் போதெல்லாம்,,
மரணத்தைத் தரிசித்து…,
மீண்டு வருகின்ற அம்மா!
ஆண் என்றாலும்.
பெண் என்றாலும்,
ஆண்டவன் தானே தருகின்றான் என்று,
ஆறுதல் கொள்ளும் அம்மா!
அவளுக்கென ஆஸ்பத்திரியும் இல்லை,
ஆறுதல் சொல்லத் தாதிகள் இல்லை!
ஆயுள் காப்புறுதியும் இல்லை!
உரிந்த வேப்பம் பட்டைகளும்,
நல்லெண்ணையில் பொரித்த,
வெறும் முட்டைப் பொரியலும்,
கொஞ்சம் வசதியிருந்தால்…,
பச்சைக் காயம் ஆறி ப்போகக்,
கொஞ்சம் நற் சீரகம்!
எப்போது தூங்குகிறாள்?
எப்போது விழித்துக் கொள்கிறாள்?
என்பது யாருக்குமே தெரியாது!
ஒரு வேளை…,
எரியாத ஈர விறகுகளுக்கும்,
அரிக்கன் லாம்புகளுக்கும் மட்டுமே,
தெரிந்திருக்கக் கூடும்!
அக்காக்களையும், தங்கைகளையும்..,
ஓடி..ஓடிக் கவனிப்பாள்!,
ஏனம்மா.
எங்களை மட்டும் கடையிலா வாங்கினாய்?
இல்லையப்பு…,
உங்களுக்கு விளங்காது!
இது தான் எப்போதுமே அவளது பதில்!
நாளை அவளுக்கு எப்படியோ?
உங்களுக்கென்ன?
ஆம்பிளைச் சிங்கங்கள் நீங்கள் என்பாள்!
அம்மா வைத்துக்கொள்ளுங்கள்!
எதைக் கொடுத்தாலும்,
இன்னொரு பிள்ளையிடம் ,
அன்று மாலையே
அது போய் விடும்!
ஏனம்மா?
என்று கேட்டால்…,
எனக்கென்னதுக்கப்பு?
அவன் பார்த்துக்கொள்ளுவான்!
அவள் மீது கோபம் தான் வரும்!
,ஏன் அவ்வாறு செய்தாள்?
அக்காவின் மீது…,
அவளுக்கு விருப்பம் அதிகமா?
தனக்குக் கொள்ளி வைக்கப் போகிறவன்,
கடைக் குட்டி….,
அவன் மீது அவளுக்கென்ன,
தனியான பாசமா?
அன்று புரியவில்லை !
இன்று….,
எல்லாமே புரிகின்ற போது..,
அருகில் அவள் இல்லை!
அம்மா…!
சமன் படுத்த முயன்றிருக்கிறாள்!
மேடு பள்ளங்களை…
நிரவ முயன்றிருக்கிறாள்!
சமுத்திரத்தின் அலையாக,
வாழ்ந்து காட்டியிருக்கிறாள்!
எவ்வளவு உண்மை?
வசதியானதிடமிருந்து…,
வசதி குறைந்தததுகளுக்கு,
வசதிகளைப் பகிர்ந்திருக்கிறாள்!
அவளுக்கு எல்லாமே குஞ்சுகள் தானே?
இன்று எல்லாமே புரிகின்றது!
இறைவன் என்பவன்…,
எதற்காக.. அன்னையைப் படைத்தான் என்று!
தான் போகாத இடங்களுக்கெல்லாம்,
தாயைத் தனது பிரதிநிதியாக்கினான்!
அன்னையர் தின வாழ்த்துக்கள்!
-