யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
சுப.சோமசுந்தரம்

பாமரர் வழக்கே பாவலர் வழக்கு - சுப.சோமசுந்தரம்

Recommended Posts

  பாமரர் வழக்கே பாவலர் வழக்கு

 

            தேர்வு முடிவு வெளியானதும் மாணவன் ஒருவன் “அஞ்சும் (ஐந்தும்) பாஸ்” என மகிழ்ச்சியில் குதிக்கிறான். அவன் ஐந்தும் எனச் சொன்னதை வைத்து அவன் எழுதிய தேர்வுத் தாள்கள் மொத்தமே ஐந்து என்பது நமக்குப் புலனாகிறது.

            “இனைத்தென அறிந்த சினைமுதற் கிளவிக்கு

            வினைப்படு தொகுதியின் உம்மை வேண்டும்”

      என நவில்வது தொல்காப்பியம். மேற்கூறிய எடுத்துக்காட்டில் மொத்தம் இவ்வளவுதான் என (இனைத்தென) அறிந்த சினை முதற்சொல் (ஐந்து) வினைச்சொல்லுடன் இணையும் இடத்தில் (‘பாஸ்’ செய்தல் என்ற வினைப்படு தொகுதியில்) “உம்” வேண்டும். “அஞ்சும் பாஸ்” எனச் சொன்னவன் தொல்காப்பியனை அறிந்திலன்; அதனைக் கேட்டு மொத்தம் ஐந்து தாள்கள் எனப் புரிந்துகொண்ட யாமும் தொல்காப்பியம் அறிந்திலம். இதிலிருந்து நாம் தொல்காப்பியனைப் படிக்கவில்லை; தொல்காப்பியன்தான் நம்மைப் படித்தான் என்பது தெளிவு. மக்கள் பேசுவதற்காக இலக்கணம் அல்ல; மக்கள் பேசியதே இலக்கணம் என உலகிற்கு முதலில் உரைத்தவன் தொல்காப்பியன். உலக இலக்கணங்களுக்கே இலக்கணம் வகுத்தவன் அவன்.

 

            இலக்கணமே இவ்வாறென்றால் இலக்கியம் பற்றிக் கேட்கவா வேண்டும்? மக்களுக்கான இலக்கியம் என்பதை விட மக்களே இலக்கியம் என்பதுதானே சாலப் பொருத்தம்? மின்னல் கீற்றாய் நினைவில் ஒளிரும் ஒன்றிரண்டு இடங்களைக் குறித்தல் ஈண்டு நம் கருத்துக்கு நிறைவாய் அமையும்.

 

            எங்கள் இல்லத்தின் முற்றத்தில் ஒரு ஓரமாக முடங்கிக் கிடந்த உரலை ( ஒரு காலத்தில் உயிரோட்டமாய் இருந்து கிரைண்டர் யுகத்தில் தான் முடக்கப்பட்டதால் நம்மையும் முடங்க வைத்த பொருள்) நகர்த்த வேண்டியிருந்தது. தனியாளாய் நான் முயல, அந்நேரத்தில் வந்த என் ஆருயிர்த்தோழன், “எலே ! தனியாவா தூக்குத? ஒம் முதுகெலும்பு ஒடிஞ்சி இன்னிக்கு எழவுக் கொட்டு அடிக்கணும்ல !” என்றான். இந்த மிகைப்படுத்தலை வள்ளுவன் நலம் புனைந்துரைத்தலில் மக்களிடமிருந்து எடுத்தாளக் காணலாம் :

            அனிச்சப்பூ கால்களையாள் பெய்தாள் நுசிப்பிற்கு

            நல்ல படாஅ பறை

        மலர்களில் மென்மையானது அனிச்சம். அந்த அனிச்சப் பூவின் காம்பினைக் (கால்) களையாமல் சூடிக் கொண்டாள் (பெய்தாள்). மென்மை மலருக்கு மட்டுந்தானே ! காம்பிற்கு இல்லையே ! எனவே அக்காம்பின் கனத்தைக் கூடத் தாங்க இயலாத அவளது இடை வருத்தத்திற்கு (நுசிப்பிற்கு) – இடை ஒடிந்ததற்கு – நல்ல பறை படவில்லை (ஒலிக்கவில்லை). அஃதாவது சாப்பறை (இழவு கொட்டு) ஒலித்தது. உரலை நகர்த்தியதற்கு எலும்பொடிந்து சாவு நிச்சயம் எனும் மிகைப்படுத்தலை மிதமிஞ்சிய உயர்வு நவிற்சி அனிச்சத்தின் காம்பினால் இடையொடிந்து சாப்பறை ஒலித்தது. பாமரன் கோடு போட்டால் பாவலன் ‘ரோடு’ போட வேண்டாமா? அதுதானே இலக்கிய இன்பம் !

 

            என் இளாம்பிராயத்தில் என் ஆச்சி (பாட்டி) அடுத்த வீட்டு ஆச்சியிடம் என் சேட்டைகள் குறித்து அங்கலாய்த்தாள், “ஒம் பேரன் என்னா சேட்டை பண்ணுதாங்கிற !”. நிஜத்தில் நான் இவளுக்குத்தான் பேரன். என்னை அவள் பேரன் ஆக்கியது அவர்களது நட்பின், உறவின் நெருக்கத்தைக் காட்டுவது. சில காலம் கழித்துத் தமிழாசிரியர், கம்பனின் யுத்த காண்டத்தில்

            “குகனொடும் ஐவர் ஆனோம்முன்பு பின் குன்று சூழ்வான்

              மகனொடும் அறுவரானோம் எம்முழை அன்பின் வந்த

              அகனமர் காதல் ஐயநின்னொடும் எழுவர் ஆனோம்

              புகலருங் கானம் தந்து புதல்வராற் பொலிந்தான் நுந்தை”

      என இராமன் வீடணனுக்குச் சொன்னதை எடுத்துரைத்த போது சத்தியமாக என் ஆச்சிதான் நினைவுக்கு வந்தாள். தயரதனின் நான்கு புதல்வரோடு குகனை ஐந்தாவதாக, சுக்ரீவனை (குன்று சூழ்வான்) ஆறாவதாக, அன்பினால் எதிரிக் கோட்டையிலிருந்து வந்த வீடணனை ஏழாவதாக வரிசைப்படுத்துகிறான் இராமன். அத்தோடு நின்றானில்லை. “அரிய கானக வாழ்வை எமக்குத் தந்து மென்மேலும் புதல்வர்களால் பொலிவு பெற்றான் உன் தந்தை” என்றான். வீடணனை உடன்பிறப்பாய் ஏற்ற இராமன்  தன் தந்தையை உன் தந்தை எனச் சொல்லி உடன்பிறப்பு எனும் உறவை உடனே உறுதிப்படுத்தினான். தன் பேரனை உன் பேரன் என தோழியிடம் சொன்ன என் ஆச்சி கம்பனை அறிந்தாளில்லை. கம்பன் அவளை அறிந்திருக்கிறான் என்பதையுணர்ந்து வியந்துதான் போனேன்.

 

            முதிய உறவினர் ஒருவர் வேண்டிய பொருள் தந்து பேணும் தம் மகனிடம், “அப்பப்போ குழந்தைகளைக் கொண்டு வந்து காட்டு. எத்தனையோ வேலை வந்துட்டதால என்னைச் சவலையாய் ஆக்கிடாத” எனும்போது மணிவாசகர் திருவாசகம் திருக்கோத்தும்பி எனும் பகுதியில் “நோயுற்று மூத்து நான் நுந்து கன்றாகி” என இறைவனிடம் இறைஞ்சுவது நினைவுக்கு வருவது தவிர்க்க இயலாத ஒன்று. பால்குடி மறவாத குழந்தை இருக்கையில் அடுத்த குழந்தையைப் பெற்றெடுத்த தாய்க்கு அந்த முதற் பிள்ளை சவலைப் பிள்ளை. இதே நிலை கன்றில் நுந்து கன்று.

 

            தன் தாத்தா தன்னை விட்டு ஊருக்குச் செல்லக்கூடாது என அடம்பிடித்த என் மகள் தாத்தாவின் கைகளை இறுகப்பற்றி “நீ எப்படிப் போவேன்னு பாக்குறேன்” என்று மல்லுக்கட்டும் போது மீண்டும் மாணிக்கவாசகர் திருவாசகம் ‘பிடித்த பத்து’வில்

            எம்பொருட்டுன்னைச் சிக்கெனப் பிடித்தேன்

            எங்கெழுந் தருளுவ தினியே

      என இறைவனிடம் மல்லுக்கட்டுவது நினைவில் நிழலாடுகிறதே ! இரண்டிலும் பிணைத்தது தப்பிக்க இயலாத அன்புச் சங்கிலியே !

 

இலக்கியச் சுவையுணர்ந்த பாமரர் பாவலர் படைத்த இலக்கிய வாழ்வுதனை நண்ணினார். அப்பாமரர்தம் வாழ்வுதானே இலக்கியம் எனப் பாவலர் எண்ணினார்.

 

-       சுப. சோமசுந்தரம்

Edited by சுப.சோமசுந்தரம்
  • Like 1

Share this post


Link to post
Share on other sites

அற்புதம்! கட்டுரை குறித்த ஒற்றைச்சொல் திறனாய்வு!
கவிஞன் என்பவன் காலத்தின் கண்ணாடி! முன்னோர் வாழ்வியல் வழக்குகளின் பதிவுகளான இலக்கியங்களிலிருந்து தான் கற்றதும், சமகால மக்கள் வழக்குகளிருந்து தான் பெற்றதும், வாழ்ந்ததும், தம்மக்களை வாசித்ததையுமே, கவிதைகளாகவும், எழுத்தாக்கமாகவும்  வெளிப்படுத்துகின்றான் ஒரு படைப்பாளி! இவ்வாறு முகிழத்தெழும் உயிரியக்கங்களின் சாட்சியமே மொழி என்னும் அற்புதம்! மொழியே ஒரு இனம் பரிணமித்து வளர்ந்ததின் சாட்சியம்!!
"மீண்டும் மாணிக்கவாசகர் திருவாசகம் ‘பிடித்த பத்து’வில் 'எம்பொருட்டுன்னைச் சிக்கெனப் பிடித்தேன்! எங்கெழுந் தருளுவ தினியே!', என இறைவனிடம் மல்லுக்கட்டுவது நினைவில் நிழலாடுகிறதே!" என்ற கட்டுரையாளரின் வாழ்வியல் பதிவின் உள்நுழைந்த என் 'கற்பனைக் குதிரை' கண்ட காட்சியை இங்கே தருகின்றேன்!
'உண்ணமாட்டேன் என்று அடம்பிடித்த குழந்தை, கரம் பிடித்து எழுந்து நிற்கவும், நடக்கவும் கற்றுத்தந்த தாத்தாவுக்குப் போக்குக்காட்டி வீடெங்கும் ஓடுகின்றது! குழந்தையின் பின்னாலேயே ஓடி,ஓடிக் களைத்த தாத்தா 'சமர்த்துல்ல! சாப்பிடுடா கண்ணு!, தாத்தாவாலே ஒங்கூட ஓட முடியாதும்மா!' என்று கொஞ்சியும் கெஞ்சியும் 'பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து', குழந்தையின் புறம் புறம் திரிந்து அன்புடன் அமுதூட்டிய தாத்தா, பணிநிமித்தம் பிரிய நேரும்போது,  "தன் தாத்தா தன்னை விட்டு ஊருக்குச் செல்லக்கூடாது என அடம்பிடித்த மகள் தாத்தாவின் கைகளை இறுகப்பற்றி “நீ எப்படிப் போவேன்னு பாக்குறேன்” என்று மல்லுக்கட்டும் போது, என் நினைவில் உயிர்பெற்று வந்த திருவாசகம் இதுதான்!
"பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து நீ
பாவியேனுடைய ஊனினை உருக்கி, உள்ஒளி பெருக்கி உலப்பிலா
ஆனந்தமாகிய தேனினைச் சொரிந்து புறம்புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே!
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்! எங்கு எழுந்து அருளுவது இனியே!" - திருவாசகம்:பிடித்தபத்து

  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

இறைமை உணர்வில் ஒன்றிவிட்ட பாவலர் வழக்கும் பாமரர் வழக்கே எனினும், 'இறைவனை மட்டுமே பாடுவேன்' என்னும் நிலைப்பாடுடைய பாவலர்கள் தம் தலைவனுக்கே உரித்தான தனித்துவமான தகுதியைப் பாமரர் வழக்கினின்று   வேறுபடுத்திக் காட்டும் அழகையும் 'பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப்பரிந்து' என்ற வரியில் மிக நுட்பமாகக் காணலாம். பால் நினைந்தூட்டும் தாய் ஏதேனும் ஒருவேளை மறந்தும் விடுவாள்; குழந்தைத் தன் அழுகையின் வாயிலாகத் தாய்க்குத் தன் பசியை நினைவூட்டுகின்றது; பாலுக்காக அழும் குழந்தையின் குரல்கேட்டு, ஓடோடி வந்து பாலூட்டுவாள் தாய். எம் இறைவனோ, அத்தாய்க்கும் ஒரு படி மேலே என்பதையே 'நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து' என்னும் 'உம்'மையுடன் கூடிய சொற்றொடர் உணர்த்துகின்றது.

உடல்நலத்திற்காக உட்கொள்ளப்படும் மருந்தின் கசப்பைக் குறைக்க, அல்லது நீக்கவே அம்மருந்துடன் தேன் கலக்கப்படுகின்றது; மேலும் தேனும் ஒரு அருமருந்தாகவே செயல்படும் தன்மைகொண்டது; தேன் கலக்கப்படும் மருந்தின் வீரியத்தை எவ்விதத்திலும் குறைக்காமல் மருந்தின் கசப்புத்தன்மையை மட்டுப்படுத்தும் என்பது தேனின் இன்னொரு தனிச்சிறப்பு. திருவாசகத்தில் மிகவும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட சொல் தேன் என்பதுவும் தேனின் தனித்துவம் காரணமாகவே!

தேனீக்கள் வழங்கும் அருட்கொடையான தேன் மனிதகுலத்துக்கே கிடைத்த  அருமருந்து. இறைவன் அருள் இத்தகைய தேனுக்கு உவமையாகக் காட்டப்படுகின்றது திருவாசகத்தில். காலச்சூழலில், மனிதர்களுக்குத் தேனீக்கள் வழங்கும் கொடையான தேனின் அளவு குறையக்கூடும்; சிலமாதம் சுத்தமாகவே வற்றிவிடும். தேனுக்கு உலப்பு அல்லது வற்றும் தன்மை சிலகாலங்களில் ஏற்படும். ஆனால், இறைவன் அருளாகிய தேன் அள்ள அள்ளக் குறையாத வற்றா இருப்பு; அத்தகைய 'உலப்பிலா ஆனந்தமாகிய தேனினை'த் தமக்கு ஊட்டி வழங்க, இறைவன் தம் புறம்புறம் திரிந்தான் என்பதும்,  இப்பாடலின் செய்தி.

'மறுத்தனன் யான்,  உன் அருள் அறியாமையின், என் மணியே!' - திருவாசகம்:நீத்தல் விண்ணப்பம்:6-1ல்,  அருளாகிய தேனை இறைவன் தம்மைத் தேடிவந்து வழங்கியும், தாம் தம் அறியாமையினால் 'வேண்டாம்' என்று மறுத்துவிட்டதைப் பதிவு செய்கின்றார் மணிவாசகர். 

மழலை பேசும் குழந்தையின் கையில் பொற்கிண்ணத்தை வழங்கினால், கிண்ணம் பொன்னால் செய்யப்பட்டது என்பதை அறியாமல் வேண்டாம் என வீசி எறியும். அதுபோல,  எளியவனாக வந்து, தம்மைப் பணிகொண்டு அருளிய இறைவன் கிடைத்தற்கு அரியவன் என்று அறியாமல் விட்டுவிட்டேனே என்று பின்வரும் திருவாசகப் பாடலில் வருந்திப் பாடுகின்றார் மணிவாசகர்:

'மை இலங்கு நற்கண்ணி பங்கனே! வந்து எனைப் பணிகொண்டபின் மழக் 'கை' இலங்கு பொற்கிண்ணம் என்றலால் அரியை என்று உனைக் கருதுகின்றிலேன்!' - திருவாசகம்:திருச்சதகம்:1௦: 1-2

பாமரர் வழக்கு மிக உன்னிப்பாக உயிர்ப்புடன் வாசிக்கப்பட்டதால் மட்டுமே பாவாணர் வழக்கு மெருகேறியது என்றால் மிகையன்று! திருவாசகத்தின் இறைமை உணர்வைப் பாடவந்த வள்ளல் பெருமான்,

"தேன் படிக்கும் அமுது' ஆகிய உன் திருவாசகத்தைத் தினந்தோறும் நான் படிக்கும்போது, என்னையே நான் மறக்கின்றேன்! உன் திருவாசகத்தைப் படிப்பது என் நா மட்டுமன்று! என் உடலின் ஊன் அனைத்தும் படிக்கும்! உள்ளமும் படிக்கும்! என்னுள்ளே உலவும் உயிரும் படிக்கும்! உயிர்க்குயிராய் என்னுள்ளே உறைந்துள்ள எம் இறைவனும் நின் திருவாசகத்தைப் படிக்கும்! தனிக்கருணை மணிவாசகப் பெருந்தகையே! உம்மால் யாம் பெரும் அனுபவத்தை காணுங்கள்!" என்கின்றார்.  

மணிவாசகப் பெருந்தகைக்கு நிகர் அவரே என்பதால் “தனிப் பெருந்தகை” என்றார் வள்ளல் பெருமான்.

இவ்வாறு, இறைவனுக்கே தனிப்பெரும் அனுபவத்தைத் தந்த மணிவாசகர் என்னும் பாவாணரின் திருவாசகம் பாமரனின் அனுபவ வழக்கினின்று உதித்தது என்பது தமிழ் மொழிக்குப் பெருமை! இறைக்கவிவாணர் மணிவாசகரை, வள்ளல் பெருமான் என்னும் இறைக்கவிவாணர் பாடிய திருவருட்பா இதோ  உங்களுக்காக:

தேன்படிக்கும் அமுதாம்உன் திருப்பாட்டைத் தினந்தோறும்
நான்படிக்கும் போதென்னை நானறியேன் நாஒன்றோ
ஊன்படிக்கும் உளம்படிக்கும் உயிர்படிக்கும் உயிர்க்குயிரும்
தான்படிக்கும் அனுபவங்காண் தனிக்கருணைப் பெருந்தகையே. -  திருவருட்பா: 3253.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு