Jump to content

புத்திசாலியான பிரான்ஸ் காகம்


Recommended Posts

புத்திசாலியான பிரான்ஸ் காகம்
 

சுற்றுப்புறச் சூழலைத் தூய்மையாக வைத்திருப்போம்: சுத்தம் சுகம் தரும் என்ற வாசகங்கள், நாம் நமது சிறு பராயம் முதலிருந்தே அறிந்தவையாகும். உடல், உள சுத்தங்களைத் தாண்டி, நமது சுற்றுப்புறச் சூழலின் பாதுகாப்பு குறித்தும் அவதானம் செலுத்துவது மிக முக்கியமானதாகும். நாம் நடமாடித் திரியும் சுற்றாடலின் தூய்மையைச் சரிவரப் பேணும்போது தான், நம்முடைய உடல் மற்றும் உள தூய்மைகளும் சீராகப் பேணப்படுமென்பதே நிதர்சனமாகும்.

இலங்கையைப் பொறுத்தவரையில், சுற்றுப்புறச் சூழலின் தூய்மையானது, தற்காலத்தில் பெரிதும் பாதிப்படைந்த ஓர் இக்கட்டான நிலையிலேயே காணப்படுகின்றதென்பது, நாம் அனைவரும் பொதுவாகக் கண்டறிந்துகொண்ட உண்மையாகும். 

image_32acf68834.jpg

இன்று இந்த நாட்டில், குப்பைகளை அகற்றுவதென்பது, பாரிய பிரச்சினைகளில் ஒன்றாகக் காணப்படுகின்றது.  தற்காலிகமாகப் இப்பிரச்சினைக்கு ஒரு சுமூகத் தீர்வு காணப்பட்டாலும், இதற்கான நிரந்தரத் தீர்வென்பது, இன்னமுமே கண்டறியப்படாதுள்ளது. 

பொதுவாகப் பார்க்கப்போனால், திடப் பொருள்களாகிய திண்மக் கழிவுகளை அகற்றுவது தொடர்பில், கொழும்பு மாநகரமானது, சிறிது காலமாக பாரிய சவால்களை எதிர்நோக்கி வந்தது. 

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதியன்று, அனைவருத் சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது இடம்பெற்ற மீதொட்டமுல்ல குப்பை மேட்டுச் சரிவானது, இலங்கையின் வரலாற்று ஏடுகளில், கறுப்பு நாளாகப் பதியப்பட்டது.

பாரியளவிலான இடப்பரப்பில் சேகரிக்கப்பட்டு வந்த குப்பை மலையின் ஒருபகுதி சரிந்து விழுந்ததில், பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டமையானது, இலங்கையின் குப்பைப் பிரச்சினைக்குச் சவால் விடுக்கும் வகையில் அமைந்தது. 

குறித்த அனர்த்தத்தின் பின்னர், இலங்கையின் குப்பை அகற்றல் பிரச்சினையானது, இலங்கை அரசாங்கத்துக்குப் பாரிய தலையிடியாக மாறியது. இலங்கையில் முறையானதொரு கழிவு முகாமைத்துவத் திட்டம் காணப்படாமையே, இவ்வனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணமாகின. 

இதனையடுத்து விழித்துக்கொண்ட அரசாங்கம், மீள்சுழற்சி முறை என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி, குப்பைகளை மூன்று வகையாகப் பிரித்துக் கையளிக்க வேண்டுமென்ற உத்தரவைப் பிறப்பித்தது. எனினும், அதுவரை காலமும் குறித்த திட்டத்துக்குப் பழக்கப்படாத மக்களால், அரசாங்கத்தின் உத்தரவை உரிய முறையில் நிறைவேற்ற முடியாதுபோனது. 

எனினும், அரசாங்கம் இந்த முறைமையை விட்டபாடில்லை. மக்கள் தமது குப்பைகளை, இவ்வாறு பிரித்துத் தான் கையளிக்க வேண்டுமென்ற கடப்பாட்டை விதித்த அரசாங்கம், அவ்வாறு பிரிக்கப்படாமல் கொட்டப்படும் குப்பைகளைப் பொறுப்பேற்க வேண்டாமென, உரிய தரப்பினருக்கு ஆலோசனையும் வழங்கியிருந்தது. 

இதனால் வசமாக மாட்டிக்கொண்ட மக்கள், உக்கக்கூடிய கழிவுகளை வேறாகவும் பொலிதீன் மற்றும் கடதாசிகளை வேறாகவும், பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி போன்ற கழிவுகளை வேறாகவுமென வகைப்படுத்தி, குப்பை சேகரிக்கும் நகரசபை உத்தியோகஸ்தர்களிடம் கையளிக்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதனால், இலங்கையின் கழிவகற்றல் பிரச்சினைக்கு, ஓரளவு சுமூகமானத் தீர்வு கிட்டியுள்ளதென்பதும் நிதர்சனமே. 

எனினும் சில பிரதேசங்களில், மக்களுக்குப் போதிய தெளிவில்லாமை காரணமாக, ஆங்காங்கே முரண்பாடுகள் எழுந்துகொண்டு தான் இருக்கின்றன. இலங்கை அரசாங்கத்தால், இன்னமும் திடமான தீர்வுகள் முன்னெடுக்கப்படாமையே இதற்குக் காரணமாகும். நாட்டின் மிகப் பிரதானமான தேவையைப் பூர்த்தி செய்வதில், தாமதம் நிலவி வருகின்றமையானது, அபிவிருத்தியடைந்து வரும் நாடு என்ற நிலையிலிருந்து எப்போதுமே எம்மால் எழமுடியாதா என்றே எண்ணத் தோன்றுகிறது. 

உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுமிடத்து, இலங்கை மிகச் சிறிய நாடு என்பதுடன், மற்றைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையானது திண்மக்கழிவுகளை மிகச் சிறியளவிலேயே உற்பத்தி செய்கிறது. ஆனால், அவற்றை முறையாக நிர்வகிக்க முடியவில்லையென்பது தான் மிகவும் கவலைக்குரிய விடயமாக இருக்கின்றது. இருப்பினும், இங்கு குப்பைகளை மீள்சுழற்சி முறையில் அகற்றுவது தொடர்பில் கவனஞ் செலுத்தப்படுமானால், நாட்டின் பொருளாதாரமும் வலுப்படுமென்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

இலங்கையைப் பொருத்தமட்டில், மீள்சுழற்சி அமைப்பு முறையால் குப்பைகளைச் சுத்தப்படுத்துவதற்கும் அல்லது வேறு வழிமுறைகளைக் கையாள்வதற்கும், இன்னமும் சரியான வசதிகள் இல்லையென்பதே உண்மை. இது இலங்கையைப் பொறுத்தவரையில் பாரிய பிரச்சினையாகக் காணப்பட்டாலும், ஏனைய நாடுகளில் இத்தகையப் பிரச்சினைகள், பெரும்பாலும் பலர் அறியாத ஒன்றாகவே காணப்படுகின்றது. காரணம், அங்கு ஆரம்பம் முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரான குப்பை அகற்றல் முறையாகும்.

நாட்டுக்கு நாடு வித்தியாசமான முறையில் வெவ்வேறு விதமாகக் குப்பைகளை அகற்றுவது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், அண்மையில், பிரான்ஸில் குப்பைகள் அகற்றுவது தொடர்பில் நிகழ்ந்த சம்பவமொன்று உலக மக்கள் அனைவரையும் திரும்பிப் பார்க்கவைத்தது. 

பிரான்ஸின் மேற்குப் பகுதியில், “புய் டு பவ்” என்ற பூங்காவின்  தூய்மையைப் பேணுவதற்காக, பூங்கா நிர்வாகத்தினர், வித்தியாசமான முறைமையொன்றைக் கையாண்டுள்ளனர். பூங்காவுக்கு வந்து செல்லும் மக்களால், ஆங்காங்கே போடப்படும் குப்பைகள், காகங்களைக் கொண்டு அகற்றப்பட்டு வருகின்றன. 

image_df2d17f34d.jpg

குறித்த பூங்காவில் போடப்படும் சிகரட்டுகள், கடதாசிகள் மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள் உட்பட அனைத்துவிதமான குப்பைகளையும் எடுத்துவரும் காகங்கள், குப்பைகளைப் போடுவதற்கென அமைக்கப்பட்ட பெட்டியொன்றில் போடுகின்றன. இச்செயலைபட பாராட்டும் வகையில், குறித்த காகங்களுக்காக பூங்கா நிர்வாகத்தினரால் உணவுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

குப்பைகளை அகற்றும் இப்பணியில், ஆறு காகங்கள் ஈடுபட்டு வருகின்றன. தற்போதைக்கு இந்த ஆறு காகங்களுக்கே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. எனினும், தொடர்ந்து பூங்காவின் பாராமரிப்பிலுள்ள ஏனைய காகங்களுக்கும் இந்தப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு, கூடிய விரைவில் தொடர்ந்து அவற்றையும் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபடுத்த எண்ணியுள்ளதாக, பூங்காவின் உரிமையாளர் நிகோலஸ் டி வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். 

இவ்வாறானதொரு நிலையில், இலங்கையைப் போன்ற நாடுகளில், குப்பைகளை அகற்றுவது குறித்து உள்நாட்டுக்குள் மனிதரிடையே ஏற்படும் பிரச்சினைகளை ஒருபக்கம் தள்ளி வைத்துவிட்டு, மேற்குறிப்பிட்ட சம்பவத்தை நோக்கும் போது, ஆறறிவு யாரிடமுள்ளது என்ற கேள்வி மனதில் ஒரு கணம் எழுகின்றது. 

பறவைகள் என்ற வகையில் சாதாரணப் பயிற்சிகளைப் பெற்றுகொண்டதன் அடிப்படையில், மனிதனின் சமிஞ்ஞைகளை இலகுவாகப் புரிந்துகொண்டு, குப்பைகளை அகற்றுவதில் மிக எளிமையாக ஈடுபட்டு வருகின்றன. ஆனால், அபிவிருத்தியடைந்து வரும் நாடு என்ற ரீதியில், குறைந்தளவு மக்கள் தொகையைக் கொண்ட எமது நாட்டில், அரசாங்கம், ஊழியர்கள் எனப் பலர் இருந்தும், இன்னமும் சரியான தீர்வொன்று முன்னெடுக்கப்படாமல் இருக்கின்றமை வருத்தமளிக்கிறது.

குப்பைகளை அகற்றுவதில் காகங்கள் காட்டிய ஆர்வமும் பணி செய்யும் திறனும், ஒரு நிமிடம் எமது நாட்டினது அவல நிலையைக் கண் முன்னால் கொண்டுவந்து விட்டுள்ளது. 

பூங்கா ஊழியர்களது சாதாரண சமிஞ்ஞைகளைப் புரிந்துகொண்டு, குப்பைகளை அகற்றும் பணியில் மும்முறமாக ஈடுபடும் காகங்களைப் பார்க்கும்போது, மீள்சுழற்சி பண்ணப்படும் வகையில் குப்பைகளைப் பிரித்து ஒதுக்க வேண்டுமென்ற அரசாங்கத்தினது நிபந்தனையை, பொதுமக்களால் ஏன் இன்னமும் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கின்றதென்பது தான், மிகப் பெரிய கேள்வியாக இருக்கின்றது.

மக்கள் தமக்கிடையே மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டு, அபிவிருத்தியின் பங்காளிகளாக அவர்களும் திகழாத வரையில், நாட்டை மாற்றுவதும் கடினமே. 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/புத்திசாலியான-பிரான்ஸ்-காகம்/91-221000

Link to comment
Share on other sites

 

கேளிக்கை பூங்காவில் குப்பை பொறுக்கும் பணியில் காகங்கள்

தாள் துண்டு ஒன்றை கொண்டு வந்தால் பரிசாக ஒரு நகட் கிடைக்கும் என்பதை அவை புரிந்து கொள்கின்றன. அப்படியானால், நாள் முழுதும் இந்த வேலையை அவை செய்கின்றன. நமக்காகவும், நமது குழந்தைகளுக்காகவும் பூமி கோளத்தை நன்றாக பராமரிக்க நாம் என்ன செய்யலாம் என்பதை எண்ணி பார்க்கவும் இந்த காகங்கள் உதவுகின்றன.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.