நவீனன் 9,747 Report post Posted August 30, 2018 இமைக்கா நொடிகள் சினிமா விமர்சனம் விமர்சகர் மதிப்பீடு 2.5 / 5 வாசகரின் சராசரி மதிப்பீடு2.5 / 5 நடிகர்கள் அதா்வா,நயன்தாரா,விஜய்சேதுபதி,அனுராக் காஷ்யப்,ராஷி கன்னா,ரமேஷ் திலக் இயக்கம் அஜய் ஞானமுத்து அதர்வா மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள படம் இமைக்கா நொடிகள். ஒகேமியோ பிலிம்ஸ் தயாரிப்பில், டிமாண்டி காலனி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இந்தப் படத்தை இயக்கியுள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் அதர்வா, நயன்தாரா நடித்துள்ளனர். அதர்வா ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார். அதர்வா அக்காவாக நயன்தாரா நடிக்க, நயன்தாராவின் கணவராக விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் வருகிறார். பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ரமேஷ் திலக், தேவன், உதய் மகேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். பெங்களூருவில் வசிக்கும் சிபிஐ அகதிகாாி அஞ்சலி விக்ரமாதித்யனுக்கு சவால் விட்டு பெங்களூரு நகரத்தையே நடுங்க வைக்கும் தொடா் கொலைகளை செய்கிறாா் அனுராக் காஷ்யக். சென்னையில் மருத்துக் கல்லூாியில் படிக்கும் மருத்துவ மாணவா் அதா்வா இந்த கொலைகளால் பாதிக்கப்படுகிறாா். இந்த பிரச்சினையில் இருந்து அதா்வாவை அஞ்சலி எப்படி காப்பாற்றுகிறாா் என்பது தான் படத்தின் கதை. இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் 'நீயும் நானும்' என்ற பாடல் நேற்று வெளியாகி ரசிகா்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படம் விநியோகத்தில் ஏற்பட்ட சில பிரச்சினைகள் காரணமாக தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் இமைக்கா நொடி படம் வெளியாகாததால் ரசிகா்கள் சற்று ஏமாற்றமடைந்துள்ளனா். https://tamil.samayam.com/tamil-cinema/movie-review/imaikka-nodigal-movie-review-rating-in-tamil/moviereview/65601737.cms Share this post Link to post Share on other sites
நவீனன் 9,747 Report post Posted August 30, 2018 இமைக்கா நொடிகள் திரை விமர்சனம் இமைக்கா நொடிகள் திரை விமர்சனம் டிமாண்டி காலானி என்ற வித்தியாசமான பேய் படத்தை கொடுத்து அசத்தியவர் அஜய் ஞானமுத்து. இவரின் இரண்டாவது படம் என்னவாக இருக்கும் என்று நீண்ட நாள் எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்து வர, இரண்டாவது படத்திலேயே நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யூப் என பல நட்சத்திரங்களை வைத்து பிரமாண்ட படைப்பை கொடுத்துள்ளார், இதிலும் அஜய் தேர்ச்சி பெற்றாரா? பார்ப்போம். கதைக்களம் படத்தின் ஆரம்பத்திலேயே கொலை நடக்கின்றது, கொலையும் செய்துவிட்டு பணத்தையும் கேட்டு மிரட்டுகின்றார் அனுராக் காஷ்யுப். நயன்தாரா CBI-யில் வேலைப்பார்க்கின்றார். இந்த விஷயம் தெரிந்து பணத்தை கொடுக்காதீர்கள் என்று நயன்தாரா சொல்லியும் அவர்கள் கொடுக்க, வழக்கம் போல் பிணம் தான் அவர்கள் வீட்டிற்கு செல்கின்றது. இதை தொடர்ந்து இந்த கேஸின் தீவிரத்தை அறிந்து நயன்தாரா களத்தில் இறங்க, இதற்குள் அதர்வா எப்படி சிக்குகின்றார், அனுராக் யார்? எதற்காக இப்படியெல்லாம் செய்கின்றார்? என்பதன் சுவாரஸ்ய திரைக்கதையே இந்த இமைக்கா நொடிகள். படத்தை பற்றிய அலசல் நயன்தாரா வாரம் வாரம் இவரை திரையில் பார்த்துவிடலாம் போல, அந்த அளவிற்கு பல படங்கள் வருகின்றது, அதிலும் தரமான கதையாக தேர்ந்தெடுத்து நடிக்கின்றார், இதிலும் அப்படியே CBI ஆபிஸராக மிரட்டியுள்ளார், அதே நேரத்தில் விஜய் சேதுபதியுடனான காதல் காட்சியிலும் மெய் மறக்க வைக்கின்றார், இனி தைரியமாக அடுத்தப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் என்றே டைட்டில் கார்டே போடலாம். அனுராக் காஷ்யுப் தமிழில் முதன் முறையாக காலடி எடுத்து வைத்துள்ளார், பாலிவுட்டில் மிகச்சிறந்த இயக்குனராக இருக்கும் இவர் நடிப்பிலும் தனி முத்திரை பதித்துள்ளார், அதிலும் வித்தியாசமாக இரத்தம் உறையாமல் அவர் கொலை செய்வது நமக்கே பகீர் என்று இருக்கின்றது. அதர்வா-ராஷி கண்ணா திரையில் நன்றாக இருந்தாலும், படத்திற்கு இவர்கள் காதல் கதை பெரிதும் ஒன்றவில்லை, படத்திற்கு இவ்வளவு நேரம் காதல் காட்சிகள் தேவையா? என்பது போல் தான் தோன்றுகின்றது. படத்தின் இரண்டாம் பாதியில் வரும் டுவிஸ்ட் காட்சிகள் நம்மை சீட்டின் நுனிக்கு வர வைக்கின்றது, நாம் யூகிக்கும் எந்த டுவிஸ்டும் படத்தில் இல்லை, நம்மை அசர வைக்கும்படி தான் டுவிஸ்ட் காட்சிகள் உள்ளது. பாடல்களில் பெரிதும் ஸ்கோர் செய்யாத ஹிப்ஹாப் ஆதி பின்னணியில் மிரட்டி எடுத்துள்ளார், ஒரு விறுவிறுப்பான திரைக்கதைக்கு ஏற்ற பின்னணியை கொடுத்து அசத்தியுள்ளார், அதே நேரம் ராஜசேகரின் ஒளிப்பதிவும் பக்க பலமாக உள்ளது. க்ளாப்ஸ் படத்தின் திரைக்கதை, இரண்டாம் பாதியில் அடுத்தடுத்து வரும் டுவிஸ்ட் காட்சிகள். அனுராஜ், நயன்தாராவிற்கான Cat and mouse போன்ற காட்சிகள் விறுவிறுப்பை ஏற்படுத்துகின்றது. படத்தின் பின்னணி இசை, ஒளிப்பதிவு மற்றும் டெக்னிக்கல் விஷயங்கள். பல்ப்ஸ் படத்தின் அதர்வா-ராஷி கண்ணா காதல் காட்சிகள், 2.50 மணி நேரம் ஓடும் இப்படத்தில் இவர்கள் வரும் காட்சிகள் கொஞ்சம் பொறுமையை சோதிக்கின்றது. நேரத்தையும் கொஞ்சம் குறைத்திருக்கலாம். மொத்தத்தில் உங்களை கண் இமைக்காமல் பார்க்க வைக்கும் இந்த இமைக்கா நொடிகள். https://www.cineulagam.com/films/05/100959?ref=reviews-feed Share this post Link to post Share on other sites
நவீனன் 9,747 Report post Posted August 31, 2018 நயன்தாரா, அனுராக், விஜய் சேதுபதி... வித்தியாச காம்போ படம்..? - `இமைக்கா நொடிகள்’ விமர்சனம் ஒரு சிங்கம் பல நொடிகள் கண் இமைக்காமல் காத்திருந்து, கண்காணித்து, பதுங்கி, பாய்ந்து இரையை வேட்டையாடுகிறது. அதைக் கழுதைப்புலி ஒன்று குறுக்குவழியில் பறித்துச் சென்றால், அந்தச் சிங்கம் என்ன செய்யும்? கான்கிரீட் காட்டை களமாகக் கொண்டு இதைக் கதையாகச் சொல்லியிருக்கிறது `இமைக்கா நொடிகள்.' ஐந்து வருடங்களுக்கு முன், பெங்களூருவில் ருத்ரா எனும் சீரியல் கில்லர், சி.பி.ஐ அதிகாரி நயன்தாராவால் கொல்லப்படுகிறான். ஐந்து வருடங்களுக்குப் பிறகு, நகருக்குள் அதே பெயரில் அதே பாணியில் மீண்டும் கொடூர கொலைகள் அரங்கேறுகின்றன. சி.பி.ஐ எனும் கழுகை காக்கையாக்கி கரையவிடும் அந்த சூப்பர் ஸ்மார்ட் சீரியல் கொலைகாரன் யார், சி.பி.ஐ-யின் கைகளில் சிக்கினானா, கொலைகளுக்கான காரணம் என்ன என்பதை சீட்டின் நுனியில் உட்காரவைத்து சொல்லியிருக்கிறது படம். இதுதான் மொத்தப் படத்தின் கதையா எனும் கேள்விக்குறிக்கு இல்லை எனும் பதில்தான் ஆச்சர்யக்குறி! `மொத்தக் கோட்டையும் அழிங்க, நான் மொத இருந்தே சாப்பிடுறேன்' என திரைக்கதையில் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் அஜய் ஞானமுத்து. சி.பி.ஐ அதிகாரி அஞ்சலியாக நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டாரேதான்! நவரசத்தில் பல ரசங்களைக் காட்ட வேண்டிய கதாபாத்திரம். மாஸும் க்ளாஸுமாய் நடித்துக்கொடுத்திருக்கிறார். அஞ்சலியின் தம்பி அர்ஜுனாக அதர்வா. ரொமான்ஸ், ஆக்ஷன் என இரண்டுமுகம் காட்ட வேண்டிய கதாபாத்திரம். இரண்டுக்கு ஒன்றரை மதிப்பெண்கள் வாங்கியிருக்கிறார். சண்டைக் காட்சிகளில் தரம். அனுராக் காஷ்யப்தான் கதையின் சிங்கம். நடிப்பில் பங்கம் பண்ணியிருக்கிறார். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புதியவரான அனுராக்கை, பார்க்கப் பார்க்க பிடித்துப்போகிறது தமிழ் ரசிகர்களுக்கு. என்ன, சிங்கத்துக்கு லிப் சின்க்தான் பெரும் பிரச்னை. கௌரவ கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி. அவருக்கு படத்தில் என்ன கதாபாத்திரம் என்பதை, வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் பார்ப்பவர்கள் எல்லோருக்குமே தெரிந்திருக்கும். குட்டியான அதேநேரம் கெட்டியான கதாபாத்திரம், ரசிக்கும்படி நடித்திருக்கிறார். ராஷி கண்ணா, ரமேஷ் திலக், அபிஷேக் ராஜா, நயன்தாராவின் மகளாக நடித்திருக்கும் குழந்தையென மற்ற நடிகர்களும் நல்ல தேர்வு. நல்ல நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். படத்தின் ஓரிடத்தில் `சின்னச் சின்ன சந்தேகங்கள்தான் பெரிய பிரச்னைகளை உண்டாக்கும்' எனப் பேசும் ஒற்றை வசனம்தான் மையக்கதைக்கும் கிளைக்கதைகளுக்குமான வேர் என்பதை தெளிவாக நியாயப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் அஜய் ஞானமுத்து. ஆனால், உற்றுநோக்கினால் மையக்கதையும் கிளைக்கதைகளும் தாமரை இலையிலுள்ள நீர் துளிபோல் ஒட்டியும் ஒட்டாதமாதிரியே இருப்பது கொஞ்சம் உறுத்தல். படம் தேவைக்கு மேல் நீளம். இடைவேளையிலேயே முழுப்படம் பார்த்த உணர்வு வந்துவிடுகிறது. மொத்தப் படமும் பார்த்து வெளியே வரும்போது மூன்று சினிமாக்கள் பார்த்த ஃபீல். அதர்வா-ராஷிக்கண்ணா காதல் காட்சிகள் நன்றாகவே இருந்தாலும், கதைக்குத் தேவையில்லாத ஆணி. அனுராக் பேசும் நக்கல் வசனங்கள் ஷார்ப். அரங்கில் அப்ளாஸ் அள்ளுகிறது. ஒருவேளை, கமர்ஷியல் சமாச்சாரங்களை தீண்டாமல் எடுத்திருந்தால், படம் இன்னமும் சிறப்பாக இருந்திருக்குமோ என்ற ஐயமும் எழுகிறது. குடித்துவிட்டு கார் ஓட்டியதற்காகத் தன் தம்பியை பொது இடத்தில் அறையும் நயன்தாரா, நயன்தாராவுக்கும் ஒரு காவல் அதிகாரிக்குமான மோதல் எனச் சில சின்னச் சின்ன விஷயங்களையும் கதையின் மைய ஓட்டத்தோடு சம்பந்தப்படுத்தியிருப்பது சிறப்பு! ஆனால், அதே அளவு கவனத்தை மையக்கதையிலும் காட்டியிருக்கலாம் எனத் தோன்றுகிறது. மருத்துவமனையில் காவலுக்கு நிற்கும் போலீஸ் அநியாயத்துக்கு அசட்டையாக இருப்பது, மருத்துவமனையிலிருந்து தப்பிக்கும் அதர்வாவோ குற்றவாளியைக் கண்டுபிடித்து மீண்டும் சைக்கிளிலேயே அதே மருத்துவமனைக்கு வந்து மீண்டும் தப்பித்து... மறுபடி அதே மருத்துவமனைக்கு வந்து ஆம்புலன்ஸ் ஓட்டுவது, வீட்டுக்காவலில் இருக்கும் நயன் நினைத்த நேரமெல்லாம் யாருக்கு வேண்டுமானாலும் போன்போட்டு பேசுவதென படத்திலிருக்கும் சில லாஜிக் மீறல்களையும் குறைத்திருக்கலாம். ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவில் அனுபவம் பளிச்சென தெரிகிறது. ஆக்ஷன் சேஸிங், ரேஸிங் காட்சிகளின் பரபரப்பை பிசிறில்லாமல் கடத்தியிருக்கிறது. புவன் ஸ்ரீனிவாசனின் படத்தொகுப்பில் சில காட்சிகள் சடாரென முடிந்துவிடுவது, கதையோட்டத்தில் ஏற்பட்ட தடங்கல் போலாகிறது. பாடல்கள் அனைத்தும் வழக்கமான ஹிப் ஹாப் தமிழா பாணியிலேயே இருக்கிறது. பின்னணி இசையில் நிறையவே ஏமாற்றிவிட்டார். சில லாஜிக் மீறல்களும் படத்தின் நீளமும் அவ்வப்போது கண்ணை செருகவைத்தாலும், திடுக் திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை படத்தை கண் இமைக்காமல் பார்க்க வைக்கிறது! திடுக் த்ரில்லர் முயற்சிக்கு வாழ்த்துகள் அஜய்! https://cinema.vikatan.com/movie-review/135590-imaikkaa-nodigal-movie-review.html சினிமா விமர்சனம்: இமைக்கா நொடிகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க டிமாண்டி காலனி படத்தின் மூலம் கவனிக்க வைத்த இயக்குனர் அஜய் ஞானமுத்துவின் இரண்டாவது படம். பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யபும் நடித்திருப்பதால் கூடுதல் கவனத்தைப் பெற்றிருக்கிறது இந்தப் படம். படத்தின் காப்புரிமைTWITTER/IMAIKKAANODIGAL திரைப்படம் இமைக்கா நொடிகள் நடிகர்கள் நயன்தாரா, அதர்வா, ராஷி கண்ணா, ரமேஷ் திலக், விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், ராஜன் பி. தேவ் இசை ஹிப் ஹாப் தமிழா ஒளிப்பதிவு ஆர்.டி.ராஜசேகர் கதை - இயக்கம் அஜய் ஞானமுத்து பெங்களூரில் சைக்கோ கொலைகாரனான ருத்ரா (அனுராக் காஷ்யப்) பணக்காரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களைக் கடத்தி, 2 கோடி ரூபாய் பிணைத் தொகை கேட்பதை வழக்கமாக வைத்திருக்கிறான். ஆனால், பிணைத் தொகை கொடுத்த பிறகும் கடத்தப்பட்டவர்கள் கொடூரமாக கொலைசெய்யப்படுகிறார்கள். அந்த வழக்கை விசாரிக்க ஆரம்பிக்கிறார் சிபிஐ அதிகாரி அஞ்சலி (நயன்தாரா). ஆனால், தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள் அஞ்சலிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையிலேயே இருக்கின்றன. ஒரு கட்டத்தில் அந்த சைக்கோ கொலைகாரன் ருத்ரா, அஞ்சலியின் தம்பி அர்ஜுன்தான் (அதர்வா) என்று காவல்துறை முடிவுசெய்து, அவனைத் துரத்த ஆரம்பிக்கிறது. ருத்ரா அஞ்சலியைக் குறிவைப்பது ஏன், அர்ஜுன் ஏன் இதில் சம்பந்தப்படுகிறான், அஞ்சலியின் கடந்த காலம் என்ன என்பது மீதக் கதை. இதற்கு நடுவில் அர்ஜுனின் காதல் கதையும் அஞ்சலியின் திருமண வாழ்க்கையும் தனி ட்ராக். ஸ்காண்டிநேவிய த்ரில்லர் நாவல்களில் வருவதுபோல முதுகுத் தண்டைச் சில்லிடச் செய்யும் கதை. படம் துவங்கும்போதே ஒரு பரபரப்பான கடத்தல். கடத்தப்பட்டவரின் உறவினர்கள் பணத்தைக் கொடுத்த பிறகும், கடத்தப்பட்டவர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு சடலமே கிடைக்கிறது. இது தொடர்கதையாகவும் ஆகிறது. துவக்கத்தில் ஒரு சாதாரண, சைக்கோ கொலையாளி vs காவல்துறை என்பதுபோலத்தான் துவங்குகிறது படம். ஆனால், பிற்பாதிக்குப் பிறகு ஏகப்பட்ட திருப்பங்கள். ஒரு கட்டத்தில், 'அய்யோ.. ட்விஸ்ட்டெல்லாம் போதும்' என்று சொல்லுமளவுக்கு ட்விஸ்டுகள். படத்தின் காப்புரிமைTWITTER/IMAIKKAANODIGAL டிமாண்டி காலனி படத்தை சுமார் 2 மணி நேரத்திற்குள் முடித்த அஜய், இந்தப் படத்தை சுமார் மூன்று மணி நேரத்திற்கு இழுத்திருக்கிறார். படம் துவங்கியவுடனேயே நடக்கும் கடத்தல் சம்பவமும் கொலையும் உடனடியாக படத்தோடு ஒன்றவைத்துவிடுகிறது. ஆனால், இடையில் ஸ்பீட் பிரேக்கரைப் போல அதர்வாவை அறிமுகப்படுத்தி, அவருக்கான காதல் கதையை மிக நீளமாக பாடல்களுடன் சொல்ல ஆரம்பிக்கும்போது, துவக்கத்தில் ஏற்பட்டிருந்த உணர்வே போய்விடுகிறது. பிறகு ஒரு வழியாக பிரதான கதைக்குள் படம் வந்த பிறகு, நீளமான நயன்தாரா- விஜய் சேதுபதி ஃப்ளாஷ்பேக் மறுபடியும் சோர்வை ஏற்படுத்துகிறது. இவை எல்லாம் சேர்ந்து ஒட்டுமொத்தமாக மூன்று படங்களைப் பார்த்த அலுப்பை ஏற்படுத்துகிறது. ஆனால், படத்தில் பல வலுவான அம்சங்கள் உண்டு. கொலைகாரனை வெறும் சைக்கோ கொலைகாரனாகக் காட்டாமல், அதற்கு ஒரு வலுவான பின்னணியை வைத்திருப்பது, உண்மையிலேயே அட்டகாசம். அதேபோல நயன்தாரா பழிவாங்குவதாகச் சொல்லப்படுவதும் அதற்கான பின்னணியும் நல்ல திருப்பம். ஃப்ளாஷ்பேக் காட்சிகள் குறைவாக இருந்து, பிரதான கதையிலேயே படம் சென்றிருந்தால் இன்னும் சுருக்கமாக, இன்னும் மேம்பட்ட அனுபவத்தைத் தந்திருக்கும். வில்லன் ருத்ரா ஒரு காட்சியில் பல மாடிக் கட்டடத்தின் உச்சியில் இருக்கிறார். அடுத்த வினாடி கீழே இருக்கிறார். மற்றொரு காட்சியில், பாதுகாப்புக் காரணங்களுக்காக கதாநாயகனின் ஃபோன் ஸ்கேனருக்குள் சென்று வெளியில் வருவதற்குள் மாற்றப்படுகிறது. கதாநாயகனுக்கே தெரியாமல் அவரது பாக்கெட்டில் ரிமோட் வைக்கப்படுகிறது. இதையெல்லாம் தனி ஆளாக சைக்கோ கொலைகாரன் செய்கிறான். இதுபோன்ற நம்பமுடியாத பல தருணங்கள் கதையில் உண்டு. ஆனால், த்ரில்லர் பட ரசிகர்கள் அதை மன்னித்துவிடக்கூடும். கடந்த வாரம்தான் நயன்தாரா நாயகியாக நடித்த கோலமாவு கோகிலா திரைப்படம் வெளியாகியிருக்கும் நிலையில், இந்த வாரம் இந்தப் படம். கோலமாவு கோகிலா படத்திலிருந்த டெம்ப்ளேட் நடிப்பிலிருந்து மீண்டிருக்கிறார் அவர். சி.பி.ஐ. அதிகாரி, மனைவி, குழந்தையின் தாய் என வெவ்வேறு பாத்திரங்கள் ஒரே படத்தில். அனைத்திலும் சிறப்பாக இருக்கிறது அவரது நடிப்பு. படத்தின் காப்புரிமைTWITTER/IMAIKKAANODIGAL வில்லனாக வரும் அனுராக் காஷ்யப் மிரட்டியிருக்கிறார். கதாநாயகி, கதாநாயகனைவிட அதிக காட்சிகளில் வரும் பாத்திரம் இது. சமீப காலத்தில் வெளிவந்த படங்களில் இருந்ததிலேயே மிக சக்திவாய்ந்த வில்லன் பாத்திரம் இந்தப் படத்தில்தான். இருந்தபோதும் தமிழுக்குப் புதுமுகமான அனுராக் காஷ்யப் அதை அநாயாசமாகச் செய்திருக்கிறார். நயன்தாராவும் அனுராக் காஷ்யபும் பெரும் கவனத்தை ஈர்த்துக்கொள்வதால் கிடைத்த இடைவெளியில் ஜொலிக்க வேண்டிய கட்டாயம் அதர்வாவுக்கு. அதைச் செய்திருக்கிறார். தெலுங்கிலிருந்து அறிமுகமாகியிருக்கும் ராஷி கண்ணா ஒரு இனிமையான புதுவரவு. ஃப்ளாஷ் பேக் காட்சியில் வரும் விஜய் சேதுபதி, 'ஓக்கே பேபி' என்றபடி வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா நல்ல பாடல்களுக்குப் பெயர்போனவர். ஆனால், இந்தப் படத்திற்கு பாடல்கள் அனாவசியம் என்பதால், பாடல் காட்சிகள் வெறுப்பேற்றுகின்றன. டிமாண்டி காலனி படத்தைப் போலவே இந்தப் படத்திலும் பின்னணி இசையில் சத்தம் அதிகம். முதல் படத்தில் கவனத்தைக் கவர்ந்த அஜய் ஞானமுத்து, இரண்டாவது படத்திலும் அந்த கவனத்தைத் தக்கவைக்கிறார். ஆனால், நீளம் சற்று குறைவாக இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். https://www.bbc.com/tamil/arts-and-culture-45365904 Share this post Link to post Share on other sites
nunavilan 2,570 Report post Posted September 8, 2018 இமைக்கா நொடிகள் – திரை விமர்சனம் சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த இன்னுமொரு திரைப்படம் இமைக்கா நொடிகள். முன்பெல்லாம் படத்தின் பெயர் எண்டு கார்ட் போடும் முன் வசனத்தில் வந்துவிடும். இப்போ சமீப காலங்களில் படத்தின் பெயருக்கும் படக் கதைக்கும் பெரிய தொடர்பு இருப்பதில்லை. கவர்ச்சிகரமான பெயராக, பிரபலமான வசனத்தையோ பாடலையோ வைத்து பெயரிடுவது வழக்கமாகி விட்டது. இந்தப் படத்தில் இமைக்கா நொடிகள் பெயர் காரணம் எண்டு கார்ட் போடும் முன் வந்துவிடுகிறது. நயன் தொடர்ந்து தேர்ந்தெடுக்கும் கதைக்களங்கள் நன்றாக உள்ளன, அவர் நடிப்பும் அழகும் படத்துக்குப் படம் மெருகேறிக் கொண்டும் போகிறது. ஆனால் சூப்பர் ஸ்டாராக நீண்ட நாள் நிலைக்க திரைக்கதையில் நிறைய ஓட்டைகளை வைத்து அமைக்கும் இயக்குநரை தவிர்ப்பது நலம். க்ரைம் த்ரில்லர் படம் நிச்சயமாக மற்ற ஜானர்களை விட சுவாரசியம் மிகுந்தது, அரைத்த மாவையே அரைத்த கதையாக இல்லாமலும் இருக்க நல்ல வாய்ப்பும் கூட. ஆனால் கதை லாஜிக்கோடு இருக்க வேண்டியது இக்கதைகளுக்கு மிக அவசியம். சில படங்கள் சிரிப்புப் படங்கள், சும்மா லாஜிக் பார்க்காமல் சிரித்துவிட்டு வரலாம். இதில் நயன் பற்றிய மர்மம் ஐந்து வருடங்கள் கழித்து வில்லன் செய்யும் சில காரியங்களால் அதர்வா மூலம் வெளி வரும்போது அந்த மர்மம் வெளி வராமலே இருந்திருந்தால் நயன் வைத்திருக்கும் சில கோடி ரூபாய்கள் அவரிடமே தங்கியிருந்திருக்குமா, அது ஒரு சிபிஐ அதிகாரிக்குத் தகுந்த லட்சணமா போன்ற கேள்விகள் எழுகின்றன. அதர்வா நயன் தம்பியாக, கிளைக் கதையின் நாயகனாக வருகிறார். மெயின் கதையோடு சேரவே இடைவேளை ஆகிறது. அது வரை நடக்கும் கொலைகளும் நயனின் சிபிஐ பணியும் இன்னொரு பக்கம் வெத்தாகப் பயணிக்கிறது. அதர்வா ஒரு மருத்துவர். குடித்து விட்டு காதல் தோல்விக்காக மறுகுவார். அந்தக் காட்சியில் அக்காவிற்கு சத்தியம் செய்து கொடுத்திருப்பதால் வண்டி ஓட்டுநர் வரும் வரை காத்திருந்து அவர் வாகனம் ஒட்டாமல் இருப்பதாக வசனம் வரும். ஆனால் அதே சமயம் வேறொரு காட்சியில் நயன் அவரை குடித்துவிட்டு வாகனம் ஒட்டியதற்காக அடித்து விட்டார் என்று நயன் மேல் அதர்வாவுக்குக் கோபம் இருக்கும். அந்தக் கோபம் தணிய அவர் நண்பர் அன்று மருத்துவமனையில் எமெர்ஜென்சி இருந்ததால் தான் அதர்வா குடித்து விட்டு ஒட்டியதாக சொல்லுவார். அதனால் நயனும் மன்னித்து விடுவார். இதில் இரண்டு எரிச்சல் – ஒன்று குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை ஒரு மருத்துவரே செய்வதை காட்சியாக அமைத்திருப்பது, இன்னொன்று குடித்துவிட்டு மருத்துவர் எந்த எமர்ஜென்சி நோயாளியைப் பரிசோதித்து சரியான மருத்துவ கணிப்பைத் தரப் போகிறார்? குண்டடிப் பட்டு அறுவை சிகிச்சை முடிந்தவுடன் சும்மா பறந்து பறந்து சண்டை போடுவதெல்லாம் ஹீரோக்களால் மட்டுமே முடியும். அதர்வா ஸ்டன்ட் காட்சிகளில் காட்டும் திறன், நடனம் மற்றும் காதல் காட்சிகளில் காட்டுவது இல்லை. அனுராக் கஷ்யப் வில்லன். நன்றாக வெறுக்க வைக்கிறார். முட்டைக் கண்களும் முழித்துப் பார்க்கும் பார்வையும் அவருக்குப் பெரிய ப்ளஸ். தமிழ் படத்தில் தமிழ் உச்சரிப்புக்கு சரியாக வாயசைக்கக் கற்றுக் கொண்டால் வில்லனாக ஒரு சுற்று வரமுடியும். நயன் மகளாக வரும் சிறுமி நன்றாக நடித்தாலும் பேசும் வசனங்கள் வயசுக்குத் தக்கனவையாக இல்லை. அந்தக் குழந்தையை தைரியம் உள்ள பெண்ணாக காட்டவேண்டும் என்பதற்காக ஓவராகப் பேச வைத்துக் கடுப்படித்து விட்டார் இயக்குநர் அஜய் ஞானமுத்து. அன்றில் இருந்து இன்று வரை திரைப்படங்களில் ஒரு விபத்து அல்லது ஆபத்து என்று வரும்போது தவறாமல் மழை பெய்யும். இயக்குநர்களுக்கு அதில் என்ன ஒரு பிடித்தமோ தெரியவில்லை. படத்தின் செர்டிபிகேட்டைத் திரையில் பார்க்கும் போதே 170 நிமிடங்கள் படத்தின் நீளம் என்பது தெரிந்தவுடன் பக்கென்றாகி விடுகிறது. சுருங்க சொல்லி பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவது போல் கதையமைப்பது தான் இப்போதைய டிரென்ட். மூணு மணி நேரம் எல்லாம் ரொம்ப அதிகம். அதிலும் இரண்டு இடத்தில் வில்லன் கேம் ஓவர் என்று சொல்லுவார். இரண்டாம் இடத்தில் உண்மையிலேயே கேம் ஓவர் தான். ஆனால் அதன் பின் தான் கதையின் பிளாஷ் பேக் வருகிறது, விஜய் சேதுபதியும் வருகிறார். வந்து எப்படி குறைந்த நேரமே திரையில் வந்தாலும் மனதில் நிற்க முடியும் என்பதை காட்டிவிட்டுப் போகிறார். இந்த பின் பகுதி கடைசியில் வரும் சஸ்பென்ஸ் கொஞ்சம் முன்னாடி வந்திருந்தால் படம் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும். அதர்வா காதல் கதை எல்லாம் தேவையே இல்லாதது. ஹிப் ஹாப் தமிழாவின் இரண்டு பாடல்கள் படம் வெளிவரும் முன்னே எப் எம் வானொலியில் ஹிட். பின்னணி இசை சுமார் ரகம். ஒளிப்பதிவு ஆர்.டி ராஜசேகர், நன்றாக செய்திருக்கிறார். பெங்களூரிலேயே படமாக்கப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை பிராபகரின் வசனங்கள் கூர்மை! நயன் அனாயாசமாக நடிக்கிறார். விஜய் சேதுபதியும் அவரும் வரும் காட்சிகள் மிக அருமை. இப்போ நெட்ப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் முதலிய சேனல்கள் மூலம் நிறைய வெளிநாட்டுப் படங்கள் பார்ப்பது சாதாரணமாகி விட்டது. அதனால் க்ரைம் த்ரில்லர் கதைத் தேர்வு செய்யும்போது இன்னும் கதையை பரபரப்பாகவும் (கொலைகள் கோரமாகவும், பயங்கரமாகவும் இருந்தால் போதும் என்று இருந்துவிட முடியாது) லாஜிக் தவறுகள் இல்லாமலும் திரைக்கதை அமைக்கப்பட்டால் தான் படம் இரசிக்கப்படும். ரசிகனின் எதிர்ப்பார்ப்பு இப்போழுது அதிகரித்துவிட்டது. https://amas32.wordpress.com/2018/09/02/இமைக்கா-நொடிகள்-திரை-விம/ Share this post Link to post Share on other sites