காடுமண்டிய ஓர் பின்தங்கிய கிராமத்தில்தான் அந்தக் காப்பகம்! உலகத் தமிழர்களின் கவனத்திற்கு!!   ஐ.பி.சி தமிழ் மாதாந்தம் முன்னெடுக்கும் ’உயிர்ச் சுவடு’ எனும் அறப்பணிச் செயற்திட்டத்தின் மூன்றாம் பாகம் இன்றைய நாள் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள வன்னேரிக்குளம் யோகர் சுவாமிகள் திருவடி நிலைய முதியோர் காப்பகத்தில் இடம்பெற்றது. இதன்படி ஐ.பி.சி தமிழின் தாயகக் கலையக பணியாளர்கள் குறித்த முதியோர் காப்பகம் சென்று அங்குள்ள முதியோருடன் மகிழ்ச்சிகரமான ஒரு ஊடாட்டத்தினை மேற்கொண்டனர். குறித்த காப்பகத்தில் சமையல் செய்து முதியவர்களுடன் பரிமாறி பல்வேறுபட்ட ஆற்றுப்படுத்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. கடந்த 1998 ஆம் ஆண்டிலிருந்து பராமரிக்கப்பட்டுவரும் குறித்த காப்பகம் யுத்த சூழ்நிலைகளின்போது பாதிக்கப்பட்டிருந்தாலும் வட மாகாணசபை உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் உதவிகளுடன் மீளவும் இயங்கிவருகிறது. குறித்த முதியோர் காப்பகத்தின் நிர்வாக அலுவலரும் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினருமாகிய செல்வநாயகம் கருத்துத் தெரிவித்தபோது, “நீர்வளம் நிலவளம் உள்ளபோதும் நிதிவளம் மிகுந்த பற்றாக்குறையாக இருப்பதாக சுட்டிக்காட்டினார். கிளிநொச்சி நகரத்திலிருந்து சுமார் இருபது கிலோமீட்டர்களுக்கு அப்பால் பிந்தங்கிய ஒரு கிராமமாக காணப்படும் வன்னேரிக் குளத்திலேயே குறித்த முதியோர் இல்லம் இயங்கிவருவதாகவும் இதனால் தமக்கு உதவிகள் கிடைப்பது மிகவும் கடினமாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும் ஏ9 வீதிகளில் வெளித்தெரியும் அளவுக்கு இருக்கின்ற முதியோர் காப்பகங்களுக்கே திரும்பத் திரும்ப உதவிகள் கிடைப்பதாக தெரிவித்த அவர் இதுபோன்ற பிந்தங்கிய பிரதேசங்களில் காணப்படும் முதியோர் காப்பகங்கள் குறித்து ஊடகங்கள் வெளிச்சத்துக்குக் கொண்டுவரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். எவ்வாறாயினும் ஐ.பி.சி தமிழ் ஊடகத்தில் முன்னர் ஒலிபரப்பப்பட்ட நிகழ்ச்சியைப் பார்த்து புலம்பெயெர்ந்த தமிழ்க் கொடையாளிகள் பலர் தமக்கு உதவிகள் செய்ததாகவும் அண்மையில் கனடா நாட்டைச் சேர்ந்த கொடையாளி ஒருவர் குளாய்க் கிணறு அமைப்பதற்கான நிதியுதவியைச் செய்ததாகவும் சுட்டிக்காட்டினார். மண்ணையும் மக்களையும் மனதிருத்தி ஐ.பி.சி தமிழ் ஊடக வலையமைப்பின் முதல்வர் கந்தையா பாஸ்கரனின் சிந்தனையில் உதயமாகிய ‘உயிர்ச் சுவடு’ அறப்பணிச் செயற்திட்டம், ஒவ்வொரு மாதமும் ஐந்தாம் நாள் கடைப்பிடிக்கப்பட்டுவரும் நிலையில் இம்மாதத்துக்குரிய அறப்பணியாகவே மேற்படி வன்னேரிக்குளம் முதியோர் காப்பகத்தில் கடைப்பிடிக்கப்பட்டது. இதேவேளை உயிர்ச் சுவடு செயற்திட்டத்தின் முன்னைய பாகங்கள் கடந்த இரு மாதங்களில் கடைப்பிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.         https://www.ibctamil.com/srilanka/80/105705