யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
நவீனன்

இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? களத்தில் நின்ற வைத்தியரின் அனுபவ பகிர்வு!

Recommended Posts

அடுத்தது

 

 

சில நாள்களுக்கு முன்னர், யூட்யூபில் முள்ளிவாய்க்கால் போர் நாள்களில் அங்கே பணிபுரிந்த மருத்துவர் டி.வரதராஜாவுடைய செவ்வியைப் பார்த்தேன். அது போர் மும்முரமாக நடந்த இறுதி நாள்களில், 2009 மே 15 அன்று எடுக்கப்பட்டது. போர் முடிவுக்கு வருவதற்கு மூன்றே நாள்கள் இருந்தன. முள்ளிவாய்க்காலில் அவர் கொடுத்த கடைசி நேர்காணல். அதிலே ஒரு கேள்வி. “உங்களுக்குச் சாவுக்குப் பயமில்லையா?” அவர் பதில் சொல்கிறார், “சாவுக்குப் பயமில்லாமல் இருக்குமா? நேற்று இரவு நான் வழக்கம்போல பதுங்குக் p94a_1535697453.jpgகுழிக்குள் இரவைக் கழித்தேன். சாவு எந்த நேரமும் வரலாம். அடுத்த 10 நிமிடத்தில் ஒரு குண்டு விழுந்து நான் இறக்கலாம். இன்று இரவை நான் காண்பேனோ தெரியாது.” இந்தச் செவ்வியைக் கொடுத்த மருத்துவர் வரதராஜாவுக்கு என்ன ஆனது? அவர் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்துவிட்டதாகக் கேள்விப்பட்டேன். அரசின் எச்சரிக்கையை மீறி, போர் நிலவரங்களைக் களத்திலிருந்து பி.பி.சிக்கும், ஐ.நாவுக்கும் அவ்வப்போது தொடர்ந்து அறிவித்தவர் இவர்தான். முள்ளிவாய்க்கால் பேரவலம், மனித உரிமை மீறல்கள், இன அழிப்பு, போர்க்குற்றம் பற்றியெல்லாம் பின்னாளில் ஐ.நா பொதுச் சபையில் சாட்சியம் சொன்னவர், ஜெனீவா மனித உரிமை கண்காணிப்பகம் நடத்திய மாநாட்டில் பங்களித்தவர். நோபல் சமாதானப் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர். எப்படியோ அவரைத் தொடர்புகொண்டு சந்தித்தேன். முதல் கேள்வியாகக் கேட்டேன். “நீங்கள் முள்ளிவாய்க்காலில் 15 மே 2009-ல் கடைசியாகக் கொடுத்த நேர்காணலுக்குப் பின்னர் என்ன நடந்தது? நான் சொன்னதுபோலவே நடந்தது. அந்த நேர்காணல் முடிந்த 10-வது  நிமிடத்தில் என்மேல் குண்டுக்காயம் பட்டு அறிவிழந்து நிலத்தில் விழுந்தேன். பெரிய வெளிச்சம்தான் ஞாபகம் இருக்கிறது. என்னை ராணுவம் கைதுசெய்தது. என்னுடைய வலது கை, குண்டுபட்டு முற்றிலும் செயலிழந்துபோனது. எனக்குத் தகுந்த சிகிச்சையளிக்காமல் தாமதப் படுத்தினார்கள். நான் அரசாங்கத்தின் எதிரியாகவே கருதப்பட்டேன். நான் முல்லைத்தீவு மாவட்டம் பிராந்திய சுகாதாரச் சேவை பணிப்பாளர், அரச மருத்துவர். அப்படியிருந்தும் என்னை புலிகளின் ஆள் என்று சந்தேகப்பட்டார்கள். பேருந்தில் ஏற்றி என்னை வவுனியாவுக்குக் கொண்டுபோக முயற்சித்தபோது, பஸ்காரன் சொல்கிறான், “இவனுக்கு மேலே பஸ் ஏற்றுவேனே ஒழிய இவனை பஸ்ஸில் ஏற்றமாட்டேன்.” என்னைக் கொழும்புக்கு அழைத்துச்சென்று விசாரணை என்ற பெயரில் கொலை மிரட்டல் செய்தார்கள். பயங்கரவாதச் சட்டத்தின்கீழ் என்னை நான்கு  வருடம் சிறைக்கு அனுப்பப் போவதாக பயமுறுத்தினார்கள்.

பின்னர், ஊடகவியலாளர் மாநாட்டைக் கூட்டி, அதில் நான் அன்று வரை கொடுத்த நேர்காணல்கள் எல்லாம் பொய்யானவை என்று சொல்ல வேண்டும் என என்னை நிர்ப்பந்தித்தார்கள். அப்படிச் செய்தால் எனக்கு விடுதலை கிடைக்கும். அப்படியே செய்தேன். உயிர் வாழ்ந்தால்தானே உண்மையை உலகத்துக்குச் சொல்லமுடியும். அமெரிக்கத் தூதரகத்தில் அரசியல் தஞ்சம் கோரினேன். அவர்களுக்கு என் கதை முழுக்கத் தெரியும். 2011 நவம்பர் மாதம் அமெரிக்கா வந்துசேர்ந்தேன். 

p94b_1535697540.jpg

ளப்பணியின்போது எடுக்கப்பட்ட, மருத்துவர் பாதுகாத்து வைத்திருந்த புகைப்படங்கள்.

“முள்ளிவாய்க்கால் வாழ்க்கையில் உங்கள் மனதைத் தாக்கிய சம்பவம் ஒன்றைக் கூறமுடியுமா?”

“ஒன்றல்ல, நிறைய இருக்கின்றன. ஒரு தாய் தன்னுடைய இரண்டு பிள்ளைகளுடன் ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவருக்கு வேறு ஒருவரும் இல்லை. அந்த இரண்டு மகன்கள்தான் அவரிடமிருந்த சொத்து. ஒருவனுக்கு 10 வயது, மற்றவனுக்கு 8 வயது.  ‘என்ரை பிள்ளைகளைப் பாருங்கோ, என்ரை பிள்ளைகளைப் பாருங்கோ’ என்று கதறியபடியே இருந்தார். புளியமரத்தின் கீழே உட்கார்ந்திருந்த அவர் மடியின் மீது எட்டு வயதுப் பையனின் தலை கிடந்தது. மூத்தவன் கீழே வெறும் தரையில் சரிந்து படுத்திருந்தான். மூத்த பையனை நான் முதலில் சோதித்தேன். அவன் எப்போதோ இறந்துபோயிருந்தான். அந்த அம்மாவிடம் பையன் இறந்துபோனதைச் சொன்னேன்.  ‘ஐயோ, ஐயோ’ எனத் தலையிலடித்துக் கதறினார். ‘இவனைப் பாருங்கோ’ என்று மடியில் கிடந்த மற்றவனைக் காட்டினார். அவனுடைய தலையை ஒரு சன்னம் துளைத்து மறுபக்கம் போயிருந்தது. ‘ஒன்றுமே செய்ய முடியாது. சிறிது நேரத்தில் இறந்துவிடுவான்’ என்ற கொடூரமான வார்த்தைகளைச் சொன்னேன். இப்போது அதை நினைத்துப் பார்க்கும்போது என் மேலேயே வெறுப்பு ஏற்படுகிறது. ஓர் ஆறுதல் வார்த்தைகூடச் சொல்ல நேரமில்லை. ஒவ்வொரு நோயாளரையும் பார்த்து முடித்த பின்னர் உதவியாளர்  ‘அடுத்தது’ (NEXT) எனக் கத்துவார். நோயாளி வருவார். அவர் போனதும் ‘அடுத்தது’ எனக் கத்துவார். இப்படி என் வாழ்க்கை யந்திரமயமாக மாறியிருந்தது.”

“உங்கள் இளமைக்காலம் பற்றிக் கூறுங்கள்?”

“ஒரு வார்த்தையில் சொல்வதானால்  ‘அலைச்சல்தான்’. 1975-ல் தம்பலகாமம் எனும் ஊரில் பிறந்தேன். எனக்கு 10 வயது நடந்தபோது, ராணுவம் ஊரைச் சுற்றிவளைத்தது; சிலரைக் கைதுசெய்து ஒரு கடையினுள் அடைத்து அதற்குத் தீ வைத்தது. சின்ன வயதில் அந்தக் கருகிய உடல்களைப் பார்த்தேன். அந்தக் காட்சி என்மனதில் என்றென்றுமாக நிலைத்துவிட்டது. ராணுவத்தின் பிடியிலிருந்து தப்ப முல்லைத்தீவுக்குக் குடிபெயர்ந்தோம். அங்கே படிப்பை விட்டுவிட்டு ஒரு கடையில் பொட்டலம் கட்டும் வேலை பார்த்தேன். நான் ஏற்கெனவே ஐந்தாம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்ததாகச் செய்தி வந்தது. எனக்குப் படிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. தம்பலகாமத்துக்கும் முல்லைத்தீவுக்குமாகப் பல தடவை அலைந்தோம். இறுதியில் முல்லைத்தீவுப் பள்ளிக்கூடத்தில் சேர்ந்தேன். எப்படியும் படித்து ஆளாக வேண்டும் என்ற வெறி என்னுள் இருந்தது. பள்ளிக்கூடத்தில் பகலிலும் அதே பள்ளிக்கூடத்தில்  அரிக்கன் லாம்பில் இரவிலும் படித்தேன். அங்கேயே பெஞ்சில் தூங்கினேன். அப்படித்தான் 94-ல் மருத்துவப் படிப்புக்குத் தெரிவுசெய்யப்பட்டேன். போரினால் பல தடவை படிப்புக்கு இடையூறு ஏற்பட்டாலும் தொடர்ந்து படித்து 2004-ல் மருத்துவப் பட்டம் பெற்றேன்.”

p94c_1535697576.jpg

“உங்கள் மருத்துவச் சேவை முதலில் எங்கே தொடங்கியது?”

“திரிகோணமலையில் உள்ள ஒரு சின்ன ஊர் ஈச்சிலம்பற்று. 70,000 பேர் அங்கே மருத்துவ வசதியில்லாமல் கஷ்டப்பட்டார்கள். தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை, ஆகவே ஒரு மருத்துவரும் அங்கே போகச் சம்மதிக்கவில்லை. நானாகவே போய் அந்த ஊருக்கு மாற்றல் கேட்டு மருத்துவராகப் போனேன். எப்படியாவது மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என நினைத்தேன்.

போர் காரணமாக மக்கள் குடிபெயர்ந்தபோது, நானும் அவர்களுடன் மட்டக்கிளப்புக்குப் போனேன். அங்கே எனக்கு எதிரிகள் பெருகிவிட்டார்கள். ராணுவமும் கருணா அணியும் என்னைக் கொல்ல தருணம் பார்த்திருந்தனர். பல தடவை மயிரிழையில் உயிர்தப்பினேன். ஒவ்வொரு தடவையும் நான் பிறந்ததற்கான கடமை இன்னும் தீர்க்கப்படவில்லை என நினைத்துக்கொள்வேன். 2007 டிசம்பரில் முல்லைத்தீவுக்கு என்னை மாற்றினார்கள். அங்கே மே 2009-ல் போர் முடிவுக்கு வரும் வரைக்கும் சேவையாற்றினேன்.”

“முள்ளிவாய்க்காலில் சிசேரியன் அறுவை சிகிச்சை செய்ததாகச் சொல்லியிருந்தீர்கள். அதிலெல்லாம் உங்களுக்குப் பயிற்சி இருந்ததா?”

“மருத்துவக் கல்லூரியில் எல்லாவிதமான நோய்களுக்கும் காயங்களுக்கும் சிகிச்சை முறை கற்பித்திருந்தார்கள். பல துறைகளிலும் அடிப்படை அறிவை வளர்த்துக் கொண்டேன். குண்டுபட்டு துடித்துக் கொண்டிருக்கும் ஒருவரிடம் போய் எனக்கு அதில் பயிற்சி கிடையாது என்று சொல்ல முடியுமா? ஏதாவது செய்து அவர் உயிரைக் காப்பாற்ற வேண்டிய கடமை இருந்தது.  ஒருவரையும் திருப்பி அனுப்ப முடியாது. இருக்கிற அறிவையும் உபகரணங்களையும் மருந்தையும் வைத்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்ய முயல்வோம்.

2009 பிப்ரவரி மாதம். புதுமாத்தளன் பாடசாலையில் ஆஸ்பத்திரி ஒன்று தொடங்க முடிவெடுத்தோம். மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், எக்ஸ்ரே, ஆய்வு வசதி ஒன்றுமே கிடையாது. மிக முக்கியமாக ஜெனரேட்டர் இல்லை. ஆகவே, மின்சாரம் கிடையாது. அப்போது, அந்தக் கர்ப்பிணிப் பெண்ணைக் கொண்டுவந்தார்கள். பிரசவம் ஆகாமல் மூன்று நாள் கடும் அவஸ்தையில் இருந்தார். எப்படியும் சிசுவை வெளியே எடுக்க வேண்டும். எடுக்காவிட்டால் பிள்ளை செத்துவிடும். தாயும் இறந்துவிடுவார்.

p94d_1535697589.jpg

சிசேரியன் அறுவை சிகிச்சை செய்வதற்குத் தேவையான உயரமான கட்டில் இல்லை. சாதாரண கட்டிலில் உடலை வைத்துக் குனிந்துதான் செய்ய வேண்டும். உட்கார்ந்துகொண்டும் செய்ய முடியாது. பெண்ணின் இடுப்புக்குக் கீழே விறைக்கும் ஊசியைச் செலுத்திவிட்டுத் துணிந்து அறுவை சிகிச்சை செய்ய முடிவுசெய்தேன். ஒருவர் ரோர்ச் லைட்டை அடித்துப் பிடித்தார். குனிந்த நிலையில் வயிறைக் கிழித்து, கர்ப்பப் பையை வெட்டிச் சிசுவை வெளியே எடுத்தேன். சிறிது தாமதித்தாலும் குழந்தை இறந்திருக்கும். நஞ்சுக்கொடியையும் அகற்றிச் சுத்தம் செய்தோம். என் முதுகு தாங்கமுடியாமல் வலித்தது. கர்ப்பப்பையைத் தைத்தபோது ரத்தம் பெருகிக்கொண்டேயிருந்தது. ஊசியும் தெரியவில்லை நூலும் தெரியவில்லை. ஐந்து மணி நேரம் கடந்துவிட்டது. என்ன செய்வது என்று புரியவில்லை. உதவியாளர் ஒருவர் ‘ஒரு மடிப்பு விட்டுப்போயிருக்கலாம், தடவிப் பாருங்கள்’ என்றார். உண்மைதான் விட்டுப்போன மடிப்பைச் சேர்த்துத் தைத்து ரத்தம் பாய்வதை நிறுத்தினேன். வயிற்றையும் தைத்து முடிக்க 8 மணி நேரம் ஆனது. எட்டு மணி நேரம் குனிந்து வேலை செய்ததால் தாங்க முடியாத முதுகு வலி. தாயையும் சேயையும் காப்பாற்றிய மகிழ்ச்சியில் அது மறைந்துபோனது.”

“போரில் ராணுவம் கொத்துக்குண்டு பாவித்ததா?”

“இலங்கை ராணுவம் (Cluster Bombs) கொத்துக் குண்டுகள் பாவிப்பதாக செய்திகள் வந்தன. ஏற்கெனவே அவை தடைசெய்யப்பட்டிருந்தன. ஆனால், எங்களிடம் அதற்கான ஆதாரம் கிடையாது.

2009 மே மாதம் போர் முடிவுக்கு வருவதற்கு இன்னும் சில நாள்களே இருந்தன. போர் உச்சத்தில் இருந்த காலம் அது. வழக்கம்போல அன்று காலை விடியும்போதே காயம்பட்டவர்களும் இறந்தவர்களும் நோயாளர்களும் அவர்கள் உறவினர்களும் மருத்துவமனையை நிறைக்கத் தொடங்கிவிட்டனர். ஆஸ்பத்திரி இயங்கியது புளியமரத்தின் கீழ்தான். பாயிலும், வெறும் தரையிலும், பிளாஸ்டிக் விரிப்பிலும் காயம்பட்டவர்கள் கிடந்தார்கள். 24 மணி நேரமும் ஒரு கூட்டு ஓலம் கிளம்பியபடியே இருந்தது. மருந்துகள் இல்லை; உபகரணங்கள் இல்லை; உதவி இல்லை. நூற்றுக்கணக்கானவர்கள் வெளியே வரிசையில் நின்றார்கள். மிகவும் ஆபத்துநிலையில் இருந்தவர்களுக்கு மாத்திரம் சேலைன் கொடுக்கப்பட்டது. அவை புளியமரத்துக் கிளைகளில் தொங்கின. பஞ்சுகூட இல்லை என்றபடியால் வேட்டியையும், சாரத்தையும் கிழித்து புண்களைத் துடைத்துச் சுத்தமாக்கினோம். இறந்துபோன உடல்களும் காயம்பட்ட உடல்களும் ஒரே வரிசையில் கிடந்தன. அறுவை சிகிச்சையில் வெட்டப்பட்ட கால்களும், கைகளும் மூலையில் ஒரு பெரிய பிளாஸ்டிக் வாளியில் குவிக்கப்பட்டிருந்தன. அன்று மாலை அவை பிணங்களுடன் புதைக்கப்படும். பார்வைக்கு இறைச்சிக் கடைபோலவே ஆஸ்பத்திரி இருந்தது. தரையில் எப்பவும் ரத்தம் ஓடும். ரத்தத்தில் தோய்ந்து என்னுடைய ஒரே சப்பாத்து உக்கி கிழிந்துவிட்டதால் கடைசி நாள்களில் நான் வெறும் காலுடனேயே நடந்து வேலை பார்த்தேன்.

55 வயது மதிக்கக்கூடியப் பெண்ணைத் தூக்கிவந்தார்கள். பெரிய காயம்பட்டு முழங்கால் சில்லு வெளியே தெரிந்தது. சதைகள் தொங்கி, ரத்தம் ஒழுகியது. அவருடைய புண்ணைச் சுத்தமாக்கச் சொல்லிவிட்டு அடுத்தவரைப் பார்த்தேன். பாதியில் எல்லோரும் வெளியே ஓடினார்கள். மருத்துவர்கள், உதவியாளர்கள், நோயாளர்கள் எல்லோரும் இடித்துப் பிடித்து வெளியேறினார்கள். காரணம், அந்தப் பெண்ணின் முழங்காலுக்குள் ஒரு குண்டு புதைந்துபோய்க் கிடந்ததுதான். டோர்ச் பாட்டரியிலும் பார்க்கக் கொஞ்சம் பெரிய குண்டு. கொத்துக்குண்டிலிருந்து புறப்பட்டப் பல குண்டுகளில் ஒன்று அவர் காலுக்குள் ஆழமாகப் புதைந்துவிட்டது. எந்த நேரமும் அது வெடிக்கலாம். அந்த பயத்தில் ஆள்களெல்லாம் வெளியேறி விட்டார்கள். காயம்பட்டப் பெண்ணுக்கு விசயம் தெரியாது. அவர் கத்தியபடியே கிடந்தார். தெரிந்தாலும் எங்கே ஓடுவது? அவர்தானே குண்டு.

வெளியே நானும் மற்ற மருத்துவர்களும் கூடி ஆலோசித்தோம். முதல் தடவையாக ராணுவம் கொத்துக்குண்டு பாவித்திருப்பதற்கானத் தடயம் எங்களுக்குக் கிடைத்திருந்தது. மருத்துவர்கள் பயத்தை வெளியே காட்டினால் மருத்துவமனையை மூட வேண்டி வரும். அறுவை சிகிச்சை மூலம் குண்டை அகற்றுவது முடியாத காரியம். எந்த நேரமும் குண்டு வெடிக்கலாம். அப்போது நோயாளியுடன் மருத்துவரும் இறந்துபோவார். 17 வயது இளம்பெண் ஒருவர்தான் ஆலோசனை சொன்னார். தொடைக்குக் கீழே, முழங்காலுக்கு மேலே  அவருடைய காலை மெதுவாக அதிர்ச்சி தராமல் கம்பி வாளால் அறுத்தோம். வெட்டிய காலை வண்டியில் வைத்துத் தள்ளிச் சென்று தூரத்தில் புதைத்தோம். அந்தப் பெண்மணியின் உயிரைக் காப்பாற்றியது பெரிய சாதனையாக அமைந்தது. அவர் சுகமாக இருக்கிறார் என்ற செய்தி சமீபத்தில் எனக்குக் கிடைத்திருக்கிறது.”

“உங்களுக்குச் சவால் கொடுத்த சம்பவங்கள் ஏதாவது இருக்கின்றனவா?”

“மருத்துவ வாழ்க்கை முழுக்கச் சவால்தான். எல்லா அறுவை சிகிச்சைகளும் வெற்றியிலேயே முடிந்தன என்று சொல்ல முடியாது. ஆகக் குறைந்த வசதிகள், ஆகக் குறைந்த உபகரணங்கள் ஆகக் குறைந்த மருந்துகள் இவற்றை வைத்துக்கொண்டு சமாளித்ததுதான் பெரிய விசயம். ஒரு நிறைமாதக் கர்ப்பிணிப் பெண்ணை கொண்டுவந்தார்கள். அதைப்போல ஒரு காட்சியை நான் என் மருத்துவ வாழ்க்கையில் கண்டது கிடையாது. குண்டு, வயிற்றைத் துளைத்துப் பின்னர் கர்ப்பப்பையையும் துளைத்து வெளியேறியிருந்தது.  குழந்தையின் கை, குண்டுத்துளை வழியாக வெளியே வந்துவிட்டது. நச்சுக்கொடியும் துவாரத்திலிருந்து வழிந்தது. குழந்தையில் குண்டு பட்டிருந்ததால் அது இறந்துவிட்டது. தாயைக் காப்பாற்றலாம் என்று பார்த்தால், அவருடைய உடலில் பல பாகங்கள் சிதைந்துபோயிருந்தன. அவரையும் காப்பாற்ற முடியவில்லை.”

“புலிகளுடன் உங்கள் உறவு எப்படி இருந்தது?”

“மருத்துவரீதியாக அவ்வப்போது உதவினார்கள். போர்முகத்தில் நான் வேலை செய்ததால், பல விநோதமான சம்பவங்கள் நேர்ந்தன. ஒரு நாளைக்கு 200 பேரைப் பார்க்க வேண்டும். 18 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்தாலும் முடிவுக்கு வருவதில்லை. யுத்த வலயத்தில் 3,00,000 பேர் சிக்கியிருந்தார்கள். ஆனால், 80,000 பேர்தான் என அரசாங்கம் ஊடகங்களுக்குத் தொடர்ந்து அறிவித்தது. 2,20,000 ஆள்கள் அழிந்தாலும் கணக்குக் காட்ட வேண்டிய அவசியம் கிடையாது. ஆஸ்பத்திரியில் நாங்கள் நோயாளர்களின் விவரங்களைக் கடைசி நாள் வரை பதிவுசெய்யத் தவறவில்லை.

அதிகாலை நேரம் ஒரு பெண்ணைக் கொண்டுவந்து இறக்கினார்கள். நடு இரவு பங்கரிலிருந்து வெளியே சிறுநீர் கழிக்கப் போயிருக்கிறார். அந்த நேரம் RPG (Rocket Propelled Grenade) அதாவது, நுனியில் குண்டு பொருத்திய ரொக்கட் ஆகாயத்திலிருந்து கீழிறங்கி அவருடைய ஒரு தொடையைத் துளைத்து மற்றொரு காலையும் துளைத்து வெளியேறமுடியாமல் அப்படியே நின்றுவிட்டது. அதிர்ஷ்டவசமாகக் குண்டு வெடிக்கவில்லை. ஏவுகணையின் நுனியில் பொருத்தியிருந்த குண்டு எந்த நேரமும் வெடிக்கலாம். ரொக்கெட்டை நடுவே வெட்டி இரண்டு பக்கமும் உருவி எடுத்துவிட்டுத்தான் சிகிச்சையை மேற்கொள்ளலாம். ஆனால், முதலில் குண்டைச் செயலிழக்கச் செய்ய வேண்டும். புலிப்படை வீரர் ஒருவர், செய்தி கேட்டு எங்கேயோயிருந்து வந்து, குண்டைச் செயலிழக்கவைத்தார். அதன் பின்னர்தான் நாங்கள் சிகிச்சையை ஆரம்பிக்க முடிந்தது. பெண்ணும் மரணத்திலிருந்து தப்பினார்.”

“நீங்கள் 2011-ல் அமெரிக்கா புறப்பட்டபோது, இலங்கை அரசு அதைத் தடுக்க முயலவில்லையா? வேறு ஏதாவது விதத்தில் தொந்தரவு கொடுத்ததா?”

“நான் அமெரிக்கா புறப்படுவது அவர்களுக்குத் தெரியாது. முன்னரே தெரிந்திருந்தால் எப்படியும் தடுத்திருப் பார்கள். நான் இந்தியா சென்று அங்கேயிருந்து ரகசியமாக அமெரிக்கா வுக்குப் பயணமானேன். ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராகப் பேசிவிடுவேன் என்று அவர்களுக்குப் பயமிருந்தது. 2014-ல் இலங்கைக் குற்றப் புலனாய்வுத் துறை எனக்கு ஒரு கடிதம் அனுப்பியது. அதில், சித்திரவதைக் கூடம் என அறியப்பட்ட கொழும்பு 4-ம் மாடிக்கு ஒரு குறிப்பிட்ட தேதியில் வரும்படி எனக்கு ஆணை பிறப்பித்திருந்தது. என் தங்கை ‘அவர் இங்கே இல்லை’ என்று சொன்னபோது... அவர்கள் சொன்னார்கள், ‘அவர் இல்லாவிட்டால் என்ன? நீ வா... அது போதும்.’ ”

“இப்போது அமெரிக்காவில் என்ன செய்கிறீர்கள்?”

“அமெரிக்காவில் திரும்பவும் மருத்துவம் படித்து, பரீட்சைகள் எழுதி, எல்லாச் சோதனையும் பாஸ் பண்ணினேன். மருத்துவப் பணிக்குப் பல ஆஸ்பத்திரிகளுக்கு விண்ணப்பித்திருக்கிறேன். அன்றாடம் சாப்பாட்டுக்குத் தொழில்நுட்ப உதவியாளர் வேலைசெய்கிறேன். தினம் நல்ல செய்தி வருகிறதா என்று குறுஞ்செய்தியையும் மின்னஞ்சல்களையும் வீட்டுத் தபால்பெட்டியையும் பார்க்கிறேன். அடுத்தது என்னவென்று காத்திருக்கிறேன்.”

- அ.முத்துலிங்கம்

 

https://www.vikatan.com/thadam/2018-sep-01/interview/143824-dr-varatharajan-about-tamil-eelam.html

 

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


 • Topics

 • Posts

  • எங்கள் தெருவெங்கும் அன்னை பூபதிகள்! தீபச்செல்வன்.. April 19, 2019   ஈழத்தில் அன்னையர்களின் போராட்டத்திற்கு தனித்துவமான இடமுண்டு. தாய்மை உலகில் உன்னதமான உணர்வு. மனிதர்கள் மாத்திரமின்றி அனைத்து உயிரினங்களிலும் தாய்மை மிகவும் உன்னதமானதாக கருதப்படுகிறது. விலங்குகள், பறவைகள் என அனைத்து உயிரினங்களிலும் தாய்மையின் மகத்துவத்தை உணரலாம். ஈழத்து அன்னையர்களின் வாழ்வு துயரத்தில் தோய்ந்தது. இன்றைக்கு ஈழமெங்கும் அன்னையர்கள் தவித்து வாழும் ஒரு வாழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்காக, அவர்களின் விடுதலைக்காக, நீதிக்காக ஈழத்தில் அன்னையர்கள் தெருவில் வாழும் ஒரு போராட்டத்திற்கு நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். அன்னையர்கள் கண்ணீர் சிந்தும் ஒரு நாடு எத்தகைய நீதியில் இருக்கிறது என்பதையே வெளிப்படுத்துகிறது. கிளிநொச்சியிலும் வவுனியாவிலும் அன்னையர்கள் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்காக போராடிக் கொண்டிருக்கின்றனர். தெருவில் வீழ்ந்து புரண்டழும் இந்த தாய்மாரைப் பார்த்தும் இலங்கை அரசும் உலகமும் நீதியை வழங்காமல் மௌனித்து அநீதி காக்கிறது.அன்னையர்களின் கண்ணீருக்கு பதில் அளிக்காதிருக்கும் மனிதாபிமானமற்ற கொடிய முகத்தையே நாம் உணரவேண்டியுள்ளது. அன்னையர்கள் தலைமுறைகளால் பூமியை உருவாக்கியவர்கள். தங்கள் மாசற்ற தாய்மையால் எல்லோராலும் நேசிக்கப்படுபவர்கள். அன்னையர்கள் தவித்து வாழும் தேசங்களில் வடக்கு கிழக்கு தமிழ் தேசமும் ஒன்று.   ஈழம் முழுக்க முழுக்க அன்னையர்களின் தவிப்பாலும் கண்ணீராலும் ஏக்கத்தாலும் காத்திருப்பினாலும் மூழ்கியதொரு தேசம். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தொடரும் நிலையிது. ஈழத்தில் இப்போது நடக்கும் போராட்டங்களைப் பார்க்கும்போது அர்ஜன்டீனா அன்னையர்களின் போராட்டமே நினைவுக்கு வருகிறது. அந்நாட்டில் இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டபோது, அவர்களை மீட்க அன்னையர்கள் தெருவுக்கு வந்து போராட்டங்களை நடத்தினர். சைக்கிளில் சென்ற தமது பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டதை நினைவுபடுத்தி, கடதாசிச் சைக்கிள்களை செய்து வைத்தபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். மிகவும் துயரமும் மனித மாண்புக்கு இழிவு சேர்க்கும் செயலுமாக, போராட்டத்தில் ஈடுபட்ட அன்னையர்களையும் காணாமல் ஆக்கப்பட்டனர். ஈழத்தில் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்காக அன்னையர்கள் தம்மை உருக்கி காணாமல் போனபடி போராட்டத்தை நடத்துவதற்கு ஒப்பானதொரு செயலே இது. இன்று தியாகி அன்னை பூபதியின் நினைவுநாள். ஏப்ரல் 19 1988ஆம் ஆண்டு இந்தியப் படைகளுக்கு எதிராக உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்தவர் அன்னை பூபதி. இவர் பத்துப் பிள்ளைகளின் தாய். ஆனாலும் தன் தாயகத்து பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும் என்று உண்ணா விரதப் போராட்டத்தை முன்னெடுத்தவர். இவர் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களின் அன்னையர் முன்னணியின் முதன்மைச் செயற்பாட்டாளர். இந்திய இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் யுத்தம் நடைபெற்றபோது, விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்த வேண்டும், உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி அன்னையர் முன்னணி சார்பில் போராட்டத்தை மேற்கொண்டார். அன்னையர் முன்னணியின் கோரிக்கைக்கு இந்தியப் படைகள் செவிசாய்க்கவில்லை. அன்னையர் முன்னணிக்கும் இந்தியப் படைகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றன. 1988இல் ஜனவரி 4ஆம் திகதி திருகோணமலையிலும் பெப்ரவரி 10ஆம் திகதி கொழும்பிலும் அன்னையர் முன்னணிக்கும் இந்தியப் படைகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. அன்னையர் முன்னணியின் கோரிக்கைகளை இந்தியப் படைகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனையடுத்து சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை நடாத்த அன்னையர் முன்னணி தீர்மானித்தது. சாகும்வரையிலான போராட்டத்திற்கு பல அன்னையர்கள் முன்வந்தனர். எனினும் ஒருவர் போராட்டத்தில் ஈடுபடுவதென தீர்மானிக்கப்பட்டது. இதன்படி குலுக்கல் முறையில் போராட்டத்தில் ஈடுபடுபவர் தெரிவு செய்யப்பட்டார். முதலில் அன்னம்மா டேவிட் தெரிவு செய்யப்பட்டார். பெப்ரவரி 14 மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் உண்ணா நோன்பு இருந்தபோது அன்னம்மா டேவிட் கடத்தப்பட்டமை காரணமாக இவரது உண்ணாவிரதப் போராட்டம் தடைப்பட்டது. இதனையடுத்தே அன்னை பூபதி மார்ச் 19 போராட்டத்தில் குதித்தார். போராட்டத்தில் ஈடுபட்ட அன்னை பூபதி  “சுயவிருப்பின் பேரில் உண்ணாவிரதமாயிருக்கிறேன். எனக்கு சுயநினைவிழக்கும் பட்சத்தில் எனது கணவனோ, அல்லது பிள்ளைகளோ என்னை வைத்தியசாலையில் அனுமதிக்க முயற்சிக்கக் கூடாது” என்று கடிதம் எழுதி வைத்தார். நீர் மட்டும் அருந்தியபடி, உணவை விடுவித்து போராட்டத்தில் ஈடுபட்டார் அன்னை பூபதி. உண்ணா விரதப் போராட்டத்திற்கு ஆதரவளித்தவர்கள், அன்னை பூபதியின் பிள்ளைகள் கடத்தப்பட்டபோதும் இவரது உண்ணிவிரதப் போராட்டம் தொடர்ந்தது. இந்திய படைகளினால் இவரது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளாத நிலையில் சரியாக ஒரு மாத்தின் பின்னர் ஏப்ரல் 19 அன்னை பூபதி உயிர் துறந்தார். இந்திய நாட்டின் அகிம்சை முகத்தை திலீபன் என்ற போராளி கிழித்தெரிந்த நிலையில் அன்னை பூபதியின் அறப்போராட்டம் ஊடாக ஈழப் பொதுமக்களால் இந்திய அரசின் அகிம்சை முகம் கிழிக்கப்பட்டது. அன்னைபூபதி ஈழத் தமிழ் மக்களின் அறப்போராட்டத்தின் முகம். இந்திய படைகளின் அராஜகங்களுக்கு எதிரான அற வழி ஆயுதம். ஜனநாயக வழிப் போராட்டத்தின் அடையாளம். இன்றைக்கு ஈழத்தில் தாய்மார்கள் தெருத் தெருவாக வீழ்ந்து புரண்டு போராட்டத்தில் ஈடுபடும்போது அன்னை பூபதியே நினைவுக்கு வருகிறார். இன்றைக்கு எங்கள் தெருவெல்லாம் அன்னை பூபதிகள் உள்ளனர். அன்னை பூபதி இந்திய அரசின் போரை நிறுத்த வேண்டும் என்பதற்காகவே உண்ணா விரதம் இருந்து உயிர் துறந்தவர். போரை நிறுத்தி, தம் தாயகத்து பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கமே அவரிடமிருந்தது. இன்று எங்கள் தெருவெங்கும் அன்னையர்கள் போராடுவதும் பிள்ளைகளுக்காகவே. காணாமல் ஆக்கப்பட்ட தம் பிள்ளைகளை விடுவிக்க வேண்டும் அவர்களின் உண்மை நிலை என்ன என்று அறிவிக்க வேண்டும் என்று  போராடுகின்றனர். தம்மை உருக்கி, தம்மை அழித்து மேற்கொள்ளும் இந்தப் போராட்டத்திற்கும் அன்னை பூபதியின் போராட்டத்திற்கும் மிக நெருக்கம் உண்டு. எங்கள் அன்னையர்கள் – அன்னை பூபதிகள் நடத்தும் போராட்டங்கள் இலங்கை அரசின் கொடிய இன ஒடுக்குமுறை முகத்தை அம்பலம் செய்கிறது. அன்னை பூபதியின் 29 ஆண்டு நினைவுநாள் என்பது அன்னையர்கள் இத் தீவில் மூன்று தசாப்தங்களாக இருக்கும் புத்திர விரத்தின் அடையாளத்தையும் ஈழச் சனங்களின் வாழ்வையும் உணர்த்தும் ஒரு நாளாகும் அன்னைபூபதி அம்மாவின் நினைவு நாட்களின் முதல்நாள் ஈழநாதம் பத்திரிகையில் அவரது ஒளிபட இணைப்பு வரும். ஈழம் முழுதும் பெப்ருவரி 10 முதல் மார்ச் 19 வரை அவரது நினைவில் மூழ்கியிருக்கும். பள்ளிக்கூடத்திலும் தெருவிலுமாக எங்கள் வாழ்வோடு அவரது நினைவு நாட்கள் கலந்திருந்தன. ஈழத் தாய் சமூகத்தின் குறியீடே அன்னை பூபதி. குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்   http://globaltamilnews.net/2019/118610/
  • டிரம்ப் – ஜனாதிபதி தேர்தல் – ரஸ்ய தலையீடு – முல்லரின் அறிக்கை சமர்ப்பிப்பு.. April 19, 2019 டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்ற 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ரஸ்ய தலையீடு இருந்ததா என்பது குறித்து விசாரித்த ரொபர்ட் முல்லரின் 400 பக்க அறிக்கை அமெரிக்க பாராளுமன்றமான காங்கிரஸ் அவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.  இரண்டு ஆண்டுகள் விசாரணை மேற்கொள்ளப்பட்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி டிரம்ப் வெள்ளை மாளிகை வழக்குரைஞரிடம்,  தலையீடு குறித்து விசாரித்த ரொபர்ட் முல்லரை நீக்கச் சொன்னதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விசாரணை தம் பதவியை சிறுமைப்படுத்தும் முயற்சி என ஜனாதிபதி டிரம்ப் கருதினாலும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததாக அமெரிக்க அரசின் தலைமை வழக்கறிஞர் வில்லியம் பார் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/2019/118622/
  • தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் – April 18, 2019   தாய்மண்ணுக்கும் தமிழ் மக்களுக்கும் நன்மை நடக்கும் என்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயாராக இருப்பதாக ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு தெரிவித்தார். வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் , விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் முல்லைத்தீவு கரைத்துரைப்பற்று பிரதேச செயலகமும் இணைந்து நடத்திய தமிழ் சிங்கள புத்தாண்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் ; மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 30 ஆண்டுகள் போருக்கு பின் ஒரு சகாப்தம் முடிந்திருக்கின்றது. ஒரு தலைமுறையே எங்கள் தேசத்தை விட்டு போகவேண்டிய கட்டாயத்தினை காலம் எங்களுக்கு ஏற்படுத்தியிருக்கின்றது. ஆகையினாலே மீதி இருக்கின்ற நாங்கள் வளர்ந்துவரும் இந்த இளம் சமுதாயத்திற்கு தலைமை தாங்குகின்ற இரட்டிப்பான பொறுப்பை எங்கள் தோளிலே சுமந்திருக்கின்றோம். ஆகையினாலேதான் இங்கே கூடியிருக்கும் அரசியல் . அரசாங்கம், அரசு என்ற மூன்று பகுதியையுடைய பிரதிநிதிகளையும் உத்தியோகத்தர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்கள். வௌ;வேறு பகுதிகளில் கடமையாற்றிக் கொண்டிருந்தாலும் தமிழரை பொறுத்தவரையில் இருப்பது ஓரு தேசம், இருப்பது ஒரு எதிர்காலம் கட்டவேண்டியது ஒரு சமுதாயம் ஆகையினாலே கட்டியமைக்கவேண்டிய அந்த சமுதாயத்திற்கான குறைந்தது குறிப்பிட்ட காலத்திற்காவது உங்கள் வேற்றுமைகளை விட்டு எங்கள் மக்களுக்காக பணிபுரியுங்களென்று தாழ்மையுடன் நான் கேட்டுக்கொள்வதுடன் அதுவே இந்த தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டில் நாங்கள் எடுத்துக்கொள்ளக்கூடிய திடமான தீர்மானம் ஆகுமென்று ஆளுநர் இதன்போது தெரிவித்தார். எமக்கு செல்லவேண்டிய தூரம் எவ்வளவோ இருக்கின்றது. செய்யவேண்டிய காரியங்கள் எவ்வளவோ இருக்கின்றது. ஆகையினாலே பேச்சுக்களையும் சந்திப்புக்களையும் குறைத்து அதிகளவில் வேலை செய்யவேண்டிய ஒரு கட்டாயம் எங்கள் மத்தியில் உள்ளது. இந்த புத்தாண்டிலே வடமாகாணம் ஒரு முன்மாதிரியான மாகாணமாக இருக்கவேண்டும் என்பதே எனது நோக்கமென்றும் குறிப்பிட்ட ஆளுநர், வடமாகாணத்தின் 28 பில்லியன் ரூபா வரவு செலவுத்திட்டத்தில் நான் நேற்று கையொப்பமிட்டுள்ளதுடன் இந்த 28 பில்லியனில் நாங்கள் எவ்வளவு வடமாகாணத்திற்குள் உழைத்துக் கொள்ளப்போகின்றோம் என்பது கேள்விக்குறியாகவும் கவலைக்குரியதாகவும் உள்ளதாகவும் குறிப்பிட்டார். இந்த மாகாணத்தின் முழுவருமானத்தையும் எங்களுக்குள்ளேயே நாங்கள் உழைத்துக் கொள்ளமுடியும். ஏனெனில் பொருளாதார சுதந்திரம் இல்லாத ஒரு சமுதாயம் அரசியல் சுதந்திரத்தை யோசிக்கமுடியாது. ஆகையினாலே அடிப்படையாக எமது மக்கள் பொருளாதார சுதந்திரத்தை அடையக்கூடிய வழிமுறைகளை நாங்கள் தேடவேண்டியதுடன் அது எங்கள் ஒவ்வொருவருடைய கடமையாகவுள்ளது என்றும் ஆளுநர் ; குறிப்பிட்டார். தேசத்தை கட்டியெழுப்பும் பணியிலே அரசியல் சின்னங்களையும் அரசியல் யாதார்த்தங்களையும் குறிக்கோள்களையும் ஒரே ஒருமுறையாவது பின்வைத்து இந்த மக்களை நிமிர்த்த செய்வதற்காக முன்வாருங்களென வடமாகாணத்தின் அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் ஆளுநர் அழைப்பு விடுத்தார்.       http://globaltamilnews.net/2019/118582/
  • வல்லிபுர ஆழ்வார் கோவிலின் சம்புப்புல் பரம்பல் தீப்பற்றி எரிந்துள்ளது. April 18, 2019   குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமராட்சி – ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோவிலின் தென்கிழக்கு மூலையில் கற்கோவளம் வங்கக்கடல் தீர்த்த சமுத்திரத்துக்கு செல்லும் வீதியின் வலது புறத்தில் அமைந்துள்ள சம்புப்புல் பரம்பல் இன்று வியாழக்கிழமை தீப்பற்றி எரிந்துள்ளது. சுமார் 10 பரப்பு நிலத்தில் நெருக்கமாக வளர்ந்திருந்த சம்புப் புல் பரம்பல் தீப்பற்றி எரிவதைக்கண்ட அதற்கு அண்மையில் அமைந்துள்ள தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஊழியர்கள் உடனடியாக வல்லிபுரம் கிராமசேவையாளர் ஸ்ரீ சங்கருக்கு தகவல் வழங்கினர். கிராம சேவையாளர் பருத்தித்துறை பிரதேசசெயலர் ஆழ்வாப்பிள்ளை சிறிக்கு தகவல் வழங்கியதையடுத்து பிரதேச செயலாளர் பருத்தித்துறை பிரதேச சபைத்தலைவர் அ.சா அரியகுமாருடன் தொடர்பு கொண்டு பிரதேச சபை தண்ணீர் பவுசர்கள் எடுத்துச்செல்லப்பட்டு சபை ஊழியர்கள் தண்ணீரைப்பாய்ச்சி தீயை அணைக்க சுமார் இரண்டு மணி நேர போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். குறித்த தீயை அணைக்காது போனால் வல்லிபுரக்கோவிலுக்கு கிழக்கே உள்ள பனை வடலிக்கு தீ பரவி அருகில் உள்ள சவுக்கங்காட்டுக்கு பரவி பெரும் சேதங்களை ஏற்படுத்தி இருக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.     http://globaltamilnews.net/2019/118577/
  • நெடுந்தீவில் கடும் வறட்சி April 18, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர்   கடும் வறட்சி காரணமாக நெடுந்தீவு குதிரைகளுக்கு வன ஜீவராசி திணைக்களத்தின் ஏற்பாட்டில் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றன என நெடுந்தீவு பிரதேச செயலகம் தெரிவித்தது. நெடுந்தீவில் கடுமையான வறட்சி காணப்படுகின்றது. அதனால் குதிரைகள் குடிநீர் இல்லாது தவித்து வந்த நிலையில் , குதிரைகள் நீர் அருந்துவதற்கு என கட்டப்பட்டு உள்ள தொட்டிகளில் தினமும் வணஜீவராசி திணைக்களத்தின் ஏற்பாட்டில் நீர் ஊற்றப்படுகின்றது. அதேவேளை அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் இடர் முகாகாமைத்துவ நிலையத்தின் உதவியுடன் சாராப்பிட்டியில் உள்ள நன்னீர் கிணற்றில் இருந்தும் , தேசிய குடிநீர் வழங்கல் அபிவிருத்தி அதிகார சபையிடமிருந்தும் குடிநீரை பெற்று வழங்கி வருவதாக பிரதேச செயலகம் மேலும் தெரிவித்தது   http://globaltamilnews.net/2019/118556/