Jump to content

"கதை இருக்கட்டும்... இந்தப் படத்துக்கு ஏன் இந்த டைட்டில்?!" - 'தொட்ரா' விமர்சனம்


Recommended Posts

"கதை இருக்கட்டும்... இந்தப் படத்துக்கு ஏன் இந்த டைட்டில்?!" - 'தொட்ரா' விமர்சனம்

 
136374_thumb.jpg
 

ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் கல்லூரியில் மலர்கிற சாதியை மீறிய காதல், கல்யாண வாழ்க்கை வரை சென்றதா, இல்லையா? இந்த ஜோடி எந்த மாதிரியான பிரச்னைகளைச் சந்திக்கிறார்கள்? இதற்கான விடைகளுடன் விரிகிறது 'தொட்ரா' திரைப்படம்.

கல்லூரியில் படித்துக்கொண்டே வீடுவீடாக பேப்பர் போட்டு பார்ட் டைம் வேலைபார்க்கும் ஹீரோ, சங்கர் (ப்ரித்வி பாண்டியராஜன்). அதே ஊரில் இருக்கும் அரசியல்வாதி, சாதி சங்கத் தலைவர் குடும்பத்து மகளாக ஹீரோயின் திவ்யா (வீணா). தமிழ் சினிமாவின் ஆயிரத்து ஐந்நூற்றி முப்பத்தி ஏழாவது முறையாக, ஒரு மழையில் இருவரும் சந்தித்துக்கொள்கிறார்கள். பிறகு, கல்லூரியில் வாலன்டியராக திவ்யாவிடம் பார்க்கும் இடங்களிலெல்லாம் அட்டன்டென்ஸ் போடுகிறார், ஹீரோ. ஒரு வழியாக அவரும் ஓகே சொல்லி, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சந்தித்து காதலிக்கிறார்கள். வழக்கம்போல இது வீட்டுக்குத் தெரிந்து சாதிப் பிரச்னை ஆகிறது. அதன்பின் நடக்கும் பஞ்சாயத்துகள், ரிவெஞ்ச் என 'டேக் டைவர்ஷன்' போர்டு மாட்டி, படம் பார்ப்பவர்களைப் பல கிலோ மீட்டர்கள் சுற்றலில் விட்டுப் படம் ஊர்கிறது. 

தொட்ரா

 

 

காதலர்களைச் சேர்த்துவைக்கும் ஏஜென்ஸி வைத்திருக்கும் ஏ.வெங்கடேஷிடம் தஞ்சம் புகும் சங்கருக்கு, அவர் என்ன நோக்கத்திற்காக உதவிசெய்கிறார், சாதித் தலைவர்களான ஹீரோயினின் அப்பாவும், அண்ணனும் என்னென்ன எதிர்வினைகள் செய்கிறார்கள், காதல் ஜோடியின் நிலை என்ன... என்பதே படத்தின் கதை.

 

 

தமிழ்நாட்டுக்குத் தெரிந்த, சாதிக்கு இறையான இளவரசன் - திவ்யா, சங்கர் - கெளசல்யா... இரு உண்மையையும் ஒரு கதையாக்கி, சாதிக்கு எதிரான நிலைப்பாட்டினை எடுத்த இயக்குநர் மதுராஜுக்குப் பாராட்டுகள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ப்ரித்வி பாண்டியராஜனின் படம் வெளியாகியிருக்கிறது. நடிப்பில் அவ்வப்போது செயற்கைத்தனம் எட்டிப் பார்த்தாலும், அப்பாவியான இளைஞனாகக் கவர்கிறார். ஹீரோயின் வீணா சில காட்சிகளில் அழகு, சில காட்சிகளில் அலுப்பு. முக்கியமான காட்சிகளில், ஹீரோயின் தேமேயென இருப்பது, திரைக்கதையின் பலவீனம். ஹீரோயினின் அண்ணனாக பவுன்ராஜ் கேரக்டரில் நடித்துள்ள எம்.எஸ்.குமார் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். சாதிக் கெளரவத்தில் காலரைத் தூக்கிவிட்டுத் திரியும் கிராமத்து டான் கேரக்டர், இவருக்கு கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது. குமாரின் மனைவியாக வரும் 'மைனா' சூசனும் தன் பங்கை சரியாகச் செய்திருக்கிறார். ஏ.வெங்கடேஷ் தன் பணியை சரியாகச் செய்ய முயன்றிருக்கிறார். ஆனால், கதை நகர நகர பல இடங்களில் இவரது நடிப்பு ஓவர் ஆக்டிங்! 

தொட்ரா

ஹீரோவுக்கு நண்பர்களாக வரும் இருவரும், அந்த கேரக்டரில் இருந்து விலகியே இருக்கிறார்கள். எளிமையான திரைக்கதையில், இரு உண்மைச் சம்பவங்களைச் சொன்ன இயக்குநர், அதை ஒரு படைப்பாகக் கொடுக்கும் இடத்தில் தாறுமாறாகத் தடுமாறியிருக்கிறார். ஜவ்வ்வ்வ்வ்வ்வ்வாய் இழுத்தடித்த முதல் பாதியில், எடிட்டர் கண்ணை மூடிக்கொண்டு கத்தரி போட்டிருக்கலாம். பல காட்சிகளில் ஏற்கெனவே வெளியான படங்களின் காட்சிகளின் ரெஃபரென்ஸ் போரிங்! 'அத்தர், ஜவ்வாது, பன்னீர்னு எல்லாமே கலந்து வந்தாலும், சாக்கடை சாக்கடைதான். என்னெல்லாம் கலந்து மிதந்து வந்தாலும், ஆத்து தண்ணி ஆத்து தண்ணிதான்' போன்ற வசனங்கள் வில்லனுக்குப் பொருத்தம். அதேமாதிரி, சாதிக்கு எதிரான வசனங்களும் வலிமையாக இருந்திருக்கலாம். 

 

 

கேட்ட பின்னணி இசை, பாடல்களாகவே கடந்துபோகிறது, உத்தமராஜாவின் இசை. ஒளிப்பதிவு, எடிட்டிங் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. திரைக்கதையும் நொண்டி அடிப்பதால், 'படம் எப்போ முடியும்?' என நிலைக்குச் செல்லவேண்டி இருக்கிறது. முக்கியமாக, அந்த 'பர்தா' டெக்னிக்கில் எஸ்கேப் ஆவதெல்லாம் பாகவதர் காலத்து ஃபார்முலா பாஸ்!

தொட்ரா

சாதித் தலைவர்கள் மற்றும் காதலை வைத்து டீல் பேசுபவர்கள் ஆகியோரைப் பற்றிய படமாக மட்டும் இருந்திருந்தால், படத்தின் மீதான ஈர்ப்பு இன்னும் அதிகமாகியிருக்கும். காலேஜ் வரை படித்திருக்கும் சங்கருக்கும், திவ்யாவுக்கும் ஏ.வெங்கடேஷ் கொடுக்கும் வேலை 'முடியல!' ரகம். 

இரு உண்மைச் சம்பவங்களை இணைத்த ஐடியா சூப்பர். அதை சுவாரஸ்யமாகச் சொல்லியிருந்தால், படம் கவனம் பெற்றிருக்கும். 'தொட்ரா' என்ற இந்தப் படத்தின் தலைப்பிற்கும், கதைக்கும் என்ன சம்பந்தம் என இயக்குநரிடம்தான் கேட்க வேண்டும்.

https://cinema.vikatan.com/movie-review/136374-thodraa-tamil-movie-review.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.