Sign in to follow this  
நவீனன்

அப்பாஸ்புரம் அய்யனார் சாமி

Recommended Posts

அப்பாஸ்புரம் அய்யனார் சாமி - சிறுகதை

 
பிச்சையம்மான் - ஓவியங்கள்: வேலு

 

குளிருக்கு, மாராப்புத் துண்டை இழுத்துப் போர்த்தியிருந்தது. பாதரசக்கட்டை உடைந்துபோயிருந்ததால், கரந்தமலையில் விட்டெறிந்து நாளாகிவிட்டது. கையில் துருப்பிடித்த அரிவாள்… புதிய அரிவாளை அடித்துக் கொடுக்க மலையில் ஆள் இல்லை. மாராப்பு மணி, கரந்தமலையில் ஒரு மரத்தில் காற்றில் ஆடியபடியே பல ஆண்டுகளாகக் கிடக்கிறது. அழுக்குப்படிந்த குதிரையில் ஊர் எல்லையில் இருக்கும் முத்தரங்குளத்தில் வந்து நின்றது அய்யனார் சாமி. நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் பலனாக, முத்தரங்குளம் கரை உயர்த்திக் கட்டப்பட்டிருந்தது. செங்குளத்தைத் தாண்டும்போதே குதிரை இளைக்கத் தொடங்கியதால், முத்தரங்குளத்துக்குள் இறக்கிவிட்டது சாமி. நெடுநேரமாகக் கரையில் நின்றுகொண்டே இருந்தது குதிரை. கரையில் ஏறி குளத்தைப் பார்த்த சாமிக்கு, ஆங்காரம். குளத்தில் தண்ணீர் இல்லை. `தரதர’வெனப் புழுதி பறக்கக் கீழிறிங்கிய சாமி, ஆலமரத்தடியில் இருந்த சிலையைத் தூக்கி தார்ச்சாலையில் ஒரே போடாகப் போட்டுடைத்து ஆத்திரத்தைத் தணித்துக்கொண்டது. வடக்கு ஓரக்கரையில் நின்ற தேவாங்கின் கண்கள் சுருங்கின.

p48a_1536054467.jpg

குதிரையும் சாமியும் நடந்தே ஊருக்குள் போனார்கள். ஊர்த் தொழுப்பக்கம் போகாமல் சுற்றியே சென்றார்கள். பறையர் ்தெருவுக்குள் நுழைந்து குழுதாடியில் இருந்த தண்ணீரைக் குதிரைக்குக் காட்டிவிட்டு, திண்ணையில் இருந்த குடத்துத் தண்ணீரை `மடமட’வெனக் குடித்து தூர எறிந்தது. ஒய்யான் வீட்டு முன்னர் பொட்டலில் கிடந்த மரக்கிளையில் அமர்ந்தது சாமி. ஆள் அரவமில்லை. 11 மணி வரையிலும் தொலைக்காட்சி நாடகம் பார்த்த சனங்களின் கண்கள் ஓய்வெடுத்தன.

ஊர் ரொம்பவும் மாறிப்போயிருந்தது. மச்சு வீடுகள் பெருகியிருந்தன. இரண்டு செல்போன் கோபுரங்கள் முளைத்திருந்தன. தெருவுக்கு ஒன்றாக பைப்படிக் குழாய்கள். காட்டாற்றின் மேலே பாலம் கட்டியிருந்தனர். ஆர்.சி.பள்ளி, புதுப்பொலிவுடன் காணப்பட்டது. ஆரம்ப சுகாதார நிலையம்… பெரும்பாலான வீடுகளில் மோட்டார்பைக்குகள். மந்தைக்கு அருகில் ஒரு பழங்கால அரசர் படம்போட்ட கட் அவுட். மந்தையம்மன் கோயில் பொட்டலில் சாலையையொட்டி ஒரு சாதிச் சங்கப் பதாகை.  ஊர் புதிதாகத்தான் இருக்கிறது.

2 மணிக்கு அலாரம் அடித்ததுபோல் ஒண்ணுக்கு விடுவது ஒய்யானின் வழக்கம். தகரக்கதவை விலக்கி வெளியே வந்தான் ஒய்யான். பொட்டலில் அமர்ந்திருந்த அய்யனாரையும் குதிரையையும் கண்ட ஒய்யான், சிறிதும் அசைந்துகொடுக்கவில்லை. எந்தவிதமான பாவனையையும் காட்டிக்கொள்ளவில்லை. `என்றாவது ஒருநாள் சாமி வரும்…’ என அவன் எதிர்பார்த்துதான் இருந்தான்.

``ஒய்யா…’’

``சாமி…’’

``ஒங்கையால சாப்பிடணும்டா…’’

``நா சோறு பொங்கி நீ சாப்பிட இம்புட்டு வருஷமா வேணும்..?’’ ஏக்கத்துடன் கேட்டான் ஒய்யான்.

``கோழி அடிச்சு சாப்புட்டு நீ அடிக்கிற பற சத்தத்துல அரிவாள் எடுத்து விடியவிடிய ஆடணும்டா… காலு மரமரத்துப்போச்சு...’’

p48b_1536054509.jpg

குதிரை, கனைத்துக்கொடுத்தது. ஒய்யான், சிறிது நேரம் அமைதியாக நின்றிருந்தான்; திண்ணையில் அமர்ந்தான். எழுந்து வெளிவாசலுக்குப் போனான். சாமி விட்டெறிந்த குடம் உடைந்திருந்தது. எடுத்து மறுபடியும் திண்ணையில் வைத்தான். பஞ்சாரத்துக்குள் நைசாகக் கை நுழைத்து, கோழியைப் பிடித்துவிட்டான்.

மூவரும் பெரிய சாமியாடிக் களத்தை நோக்கிச் சென்றனர். ஒய்யான் கோழியைப் பிடித்துக்கொண்டு முன்னால் நடக்க, சாமியும் குதிரையும் பின்தொடர்ந்தனர். பாதை மாறிய ஒய்யான் கையைப் பிடித்து, ஊர்த் தொழு வழியாகவே போகச் சொன்னது அய்யனார் சாமி. ஒய்யான், சாமியை ஏறெடுத்துப் பார்த்தான். ஊர்த் தொழுவுக்குள் கால் வைத்து ஒய்யான் நடந்து சென்றான். அதைப் பார்த்த சாமிக்கு, அப்போதே ஆடத் தோன்றியது. `ஏழு வருஷமா இவன தனியா தவிக்க விட்டுவிட்டேனே…’ என சாமிக்குத் தன்மீதே கோபம்.

வருஷம் தவறாமல் ஆவிச்சிப்பட்டியில் பொங்கல் வைப்பதில்லை. வாசப்பொங்கலுக்கு மறுநாள் ஊர்த் தொழுவத்தில் மாடடைத்து பொங்கல் வைப்பார்கள். வருஷம் தவறாமல் ஏதோ ஒரு பஞ்சாயத்து. இதையெல்லாம் சமாளித்து பொங்கல் வைத்தால் வெளியூர்க்காரர்களின் கேலிப்பேச்சிலிருந்து தப்பிக்கலாம். அந்த ஆண்டு பொங்கல் வைக்க ஏற்பாடாகியிருந்தது. சுப்பையா குடும்பத்தில் மூத்தவர் இறந்துபோயிருந்தார். பொதுவாக ஊரில் மூத்த தலைக்கட்டு வீட்டில் கேதம் நடந்தால் விசேஷங்களைத் தள்ளிப்போடுவதுண்டு. இதைக் கணக்கில் வைத்து சுப்பையாவின் பேரன் வாதம் பண்ணிக்கொண்டிருந்தான்.

``எங்க அய்யா ஊர்த் தலைவரா இருந்தவரு. எவ்ளோ நல்லது கெட்டதுகளை ஊருக்காகப் பார்த்திருப்பாரு. செத்து ஒரு மாசம்கூட முழுசா முடியல… அதுக்குள்ள என்ன பொங்கலு..?’’

p48c_1536054565.jpg

நடந்து முடிந்திருந்த பஞ்சாயத்து போர்டு தேர்தலில் சுப்பையாவின் பேரன் தோற்றுப்போயிருந்தான். நிறைய செலவு செய்திருந்தும் தோற்றுப்போனவன், வெற்றி பெற்ற சரவணனிடம்தான் வாதம் செய்துகொண்டிருந்தான்.

``அதெல்லாம் சரிதான்பா. அவருக்கு உரிய மரியாதைய ஊரு சார்பா செஞ்சோம். நீயும்தான் பார்த்த. இந்த வருஷமாச்சும் பொங்கவெப்போம்… மூணாம் வருஷம் பொங்கவெச்சது. பிரச்னை பண்ணாத…’’ என்றார்கள் ஊர் முக்கியஸ்தர்கள்.

அவனுக்கு எதுவும் ஏறவில்லை. அப்பாஸ்புரத்தில் நின்றிருந்த அய்யனார் சாமி சிலையைத் தூக்கி, புதருக்குள் விட்டெறிந்தான் சுப்பையா பேரன். அப்போதே சாமிக்கு ஆங்காரம் பெருக்கெடுத்தது. ஆவிச்சிப்பட்டி ஆள்களின் பிரதான தெய்வம் அய்யனார் சாமி. சாமியைத் தூக்கிச் சுத்தப்படுத்தி அலங்கரித்தார்கள். வாசப்பொங்கல் முடிந்த மறுநாள் தொழுவில் பொங்கல் வைப்பதற்காக ஏற்பாடு நடந்துகொண்டிருந்தது. பெரிய சாமியாடியை அழைக்க மரியாதையுடன் ஊர் ஆள்கள் அவர் களத்துக்குச் சென்றனர். பெண்கள் தொழுப் பொட்டலைச் சுத்தம்செய்து பொங்கல் வைக்கத் தொடங்கினர். இளவட்டங்கள் தொழுவில் மாடுகளை அடைத்தனர். விருந்தாளிகள் கலர் கலராகத் திரிந்தனர். தப்படிக்கும் ஒய்யான், தன் பறையை அனலுக்குக் காட்டாமல் ஆரம்பம் முதலே ஒதுங்கியிருந்தான். அவன் ஆள்கள் தொழுவத்துக்குள் இறங்காமல் சாலையில் அமர்ந்தே தங்களது பறையைத் தயார்படுத்திக்கொணடிருந்தார்கள். அவர்கள் தொழுவத்துக்குள் இறங்கக் கூடாது. இறங்கவும் மாட்டார்கள்!

நெஞ்சளவு உயர சுவர் நான்கு புறமும் கட்டப்பட்டு, கிழக்கு பார்த்த சிறிய நுழைவுவாயில்கொண்ட இடம்தான் தொழுவம். அதுக்கு முன்னால் சிறிய பொட்டல். ஊர் ஆள்கள் பொங்கல் வைப்பதற்காக, அருள் வந்து சாமி ஆடுவதற்காக அந்தப் பொட்டல். தொழுவுக்குள் யாரும் செருப்பு அணிந்துகொண்டு இறங்க மாட்டார்கள். புனிதமான இடம். வெளியூர்களில் படித்துத் திரியும் இளவட்டங்கள் விவரம் அறியாமல் செருப்புக்காலுடன் உள்ளே இறங்கினால் பெருசுகள் அதட்டுவார்கள். மாட்டுப்பொங்கல் அன்று எல்லா சாதிக்காரர்களின் மாடுகளும் அவரவர் வசதிக்கேற்ப அலங்கரிங்கப்பட்டு தொழுவுக்குள் அடைக்கப்படும். ஒய்யான் மாட்டையும் அவன் தெரு ஆள்களுடைய மாடுகளையும் தொழுவுக்குள் இறக்கக் கூடாது. சாமி குத்தம்! அவர்களின் மாடுகள், பிள்ளையார் குளத்தின் உயர்ந்த கரையில் நின்று காய்ந்த புற்களை மேய்ந்துகொண்டிருந்தன. ஒய்யான் நிலைக்கல்லாக இருந்தான்.

சாணி தெளித்துப் பூசப்பட்ட வீட்டுத்தரையில் அம்மணமாக புழுதியுடன் தவழ்ந்துகொண்டிருந்த ஒய்யானின் மவன்… தொழுவத்தில் ஐஸ் கேட்டு அடம்பிடிக்கும் சிறுமிகள்... வெட்டவெயிலில் அலங்கரிக்கப்படாமல் நின்றுகொண்டிருக்கும் அவனது மாடு… மொனை மழுங்கிய கொம்புகளில் கலர் அப்பப்பட்டு தொழுவத்தில் அடைக்கப்பட்டுள்ள மாடுகள்... ஊரார் வைக்கும் பொங்கலில் கலந்துகொள்ளாமல் பூலாம் மலையில் கருவமர முட்களுடன் மல்லுகட்டி விறகு வெட்டும் அவன் பொண்டாட்டி… குழந்தைகளை ஒருபுறம் சமாளித்துக்கொண்டும், அடுப்பைக் கவனித்துக்கொண்டும் போதையில் நடுத்தொழுவத்தில் நின்று கறி கேட்கும் புரு‌ஷன்மார்களை அதட்டிக்கொண்டு ஊர்ப் பெண்கள்... எல்லோரும் ஒய்யானின் நினைவுக்குள் வந்து அலைக்கழித்துக் கொண்டிருந்தார்கள். ஒய்யான், நிலைக்கல்லாகவே நின்றுகொண்டிருந்தான்.

p48d_1536054681.jpg

``ஒய்யா அங்க என்னடா பண்ற... சாமி வர்ற நேரமாச்சு…’’ அம்மாசி குரல்கொடுத்தான். ஒய்யான், எதையும் கண்டுகொள்ளவில்லை; பொங்கலுக்காக அடுப்பில் கனன்றுகொண்டிருந்த தீ ஜுவாலையைப் பார்த்துக்கொண்டிருந்தான். பெரிய சாமியாடிக்கு அலங்காரம் நடந்துகொண்டிருந்தது. தொழுவத்தில் இரண்டு மூன்று இளவட்டங்கள் சண்டைபோடும் சத்தம். சண்முகம் பொண்டாட்டி வைத்த பொங்கல் முதலாவதாகப் பொங்கியது. ஊர்ப் பெண்கள், கிழவிகள் குலவைச் சத்தமிட்டனர். ஒய்யான், நிலைக்கல்லாக நின்றுகொண்டே இருந்தான்.

பெரிய சாமியாடி, அய்யனாராகத் தொழுவத்துக்கு வந்தார். தப்படிக்கும் சத்தம் அவர் காலை நகர்த்தியது. பொங்கல் வைத்து முடித்தவர்கள் சாமியிடம் திருநீறு வாங்கக் கூடினர். பறைச் சத்தம் ஜனங்களையும் உசுப்பேற்றியது. குண்டு அப்பத்தா மருமகள்மீது அருள்வந்தது. அவளை சிலர் சாந்தப்படுத்த முயன்றனர். ``மஞ்சத்தண்ணி எங்கடா..?’’

ஒரு சிறுவன் சொம்பில் மஞ்சத்தண்ணி கொண்டுவந்து கொடுத்தான். அவளுக்குக் கொடுத்தார்கள். சாமியாடி பெருமூச்சு மட்டுமே விட்டுக்கொண்டிருந்தார். சுற்றிலும் ஜனங்கள். அருள் வந்தபாடில்லை.

``என்ன ஆச்சுன்னு கேளுங்கப்பா...’’ குண்டப்பத்தா சுற்றி இருந்த ஆண்களை அதட்டியது.

``கொஞ்சம் பொறு…’’

``நீ அங்குட்டு போ மொதல்ல…’’ சாமியாடியின் மீது அருள் இறங்காத கோபத்தை, குண்டப்பத்தாமீது காட்டினர்.

சிலையாக நின்றுகொண்டிருந்த ஒய்யான், கூட்டத்தை விலக்கி மந்தைக்குள் இறங்கினான். பறைச் சத்தம் மாடுகளை மிரட்டியது. கூட்ட நெரிசலைத் தாங்காத பிச்சம்மா இடுப்பில் இருந்த அவளது மவன் வீறிட்டு அழத் தொடங்கினான். கூட்டத்துக்குள் நுழைந்த ஒய்யானை சிலர் அடையாளம் கண்டு அதட்டினர். சாமியாடியைச் சுற்றி நின்ற கண்கள் ஒய்யானைப் பார்த்தன.

ஒய்யான் ``தொழுவுல நானும் பொங்கல் வைக்கிறேன்…’’

``அதெல்லாம் கூடாதுப்பா… சாமிக்கு ஆகாது… நீ மொதல்ல ரோட்டுக்குப் போ!’’

பறைச் சத்தம் நின்றது. ரோட்டில் நின்ற அவனின் ஆள்கள் அவனை அழைத்தனர்.

``இதுக்குமேல சாமிக்கு அருளு வராதுப்பா… துன்னூற கொடுக்கச் சொல்லு… மாடு அவுத்துவுட நேரமாச்சு...’’

``இப்படி நடந்தா எங்குட்டு அருள் வர்றது..?’ ஒய்யானைக் காண்பித்துப் பேசினார் சுப்பிரமணி.

சரவணன் பஞ்சாயத்து போர்டு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு நடக்கும் முதல் பொங்கல். சாமிக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்தவனுக்கு, கோபம் தலைக்கேறியது. `சல்சல்’னு நடந்து வந்தவன், ஒய்யானின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான். சுற்றி இருந்தவர்களும் அவனை நோக்கிக் கை ஓங்க, பெண்கள் சத்தம்போடத் தொடங்கினர். குழந்தைகள் வீறிட்டு அழத்தொடங்கினர். சாமியாடிக்கு அருள் வரவில்லை. ஜனங்களுக்குத் திருநீறு மட்டும் கொடுத்துவிட்டு வீட்டுக்குச் சென்ற பெரிய சாமியாடி இறந்துபோனார். ஒய்யான் அன்றுமுதல் பறையைத் தொடவில்லை. நடந்ததை நினைத்து ஊரை வெறுத்துப்போன சாமி, குதிரையைக் கிளப்பிக்கொண்டு கரந்தமலைக்குள் புகுந்தது.

ய்யான், தீ மூட்டி தனது பறையை அனலுக்குக் காட்டிக்கொண்டிருந்தான். அவன் வாட்டிக்கொடுத்த கறியை முழுவதும் தின்று தீர்த்தது சாமி. குதிரைக்கும் தீவனம் போட்டிருந்தான் ஒய்யான். பெரிய சாமியாடி களம். மனிதனைப் பார்க்கவேண்டுமென்றால் மூன்று மைல்கள் தாண்டிச் செல்ல வேண்டும். தனித்திருந்த இடம். பெரிய பொட்டல். கடலை விதைப்பு நடந்துகொண்டிருந்த பூமி. மேற்கே ஏரக்காப்பட்டி மலை. கிழக்குப் பக்கம் தூரத்தில் கரந்தமலை விரிந்து கிடந்தது. ஒய்யான், பறையை வருடிக்கொடுத்தான். சாமி எழுந்து நின்றது. குதிரையின் கண்கள் விரிந்துகொடுத்தன.

இடுப்பில் முட்டுக்கொடுத்து வானத்தைப் பார்த்துத் தப்படிக்கத் தொடங்கியவன் நிறுத்தவில்லை. இடுப்பை வளைத்து நெஞ்சை பூமிக்கு நேராக வைத்துக்கொண்டு முன்னே நாலடி, அதே வாக்கில் பின்னே நாலடி கால்களை எடுத்து வைத்தது சாமி… நிதானமாக ஆடத் தொடங்கியது. நெஞ்சை பூமிக்கு நேராகக் காண்பித்தது. ஒய்யான், தலையை ஆட்டத் தொடங்கினான். தப்படிக்கும் குச்சியைக் கண்களால் நிறுத்திப் பார்க்க முடியவில்லை. வேகம்... முன்னங்கால்களைத் தூக்கிக் கனைத்தது குதிரை. அரிவாளை முதுகுப்பக்கம் குறுக்குநெடுக்காக வைத்துக்கொண்டு நிமிர்ந்து ஆடியது சாமி. `யாய்ய்ய்….’ நாக்கைத் துருத்தி, வெட்டவெளியைப் பார்த்து அரிவாளைக் காட்டி அதட்டியது. வானத்தைப் பார்த்து உரையாடியது. ஒய்யான் உச்சம் தொட்டான். சாமியின் மீது புழுதி ஏறியது.

`இங்கேயே இருப்பியா…?’’

சாமி மறுத்துத் தலையாட்டியது `ம்ம்ம்ம்...’

``என்ன மாதிரியே ஏம்புள்ளைகளையும் விட்டுடாத…’’

முசுமுசுவெனப் பெருமூச்சு விட்டது சாமி.

அரிவாளை, பறையை நோக்கிக் காண்பித்து ``இந்தப் பறைலதான்டா எல்லாம் இருக்கு. விடாத… அடி… ஊர் ஜனங்க விசும்பி எந்திரிக்கட்டும்…’’

பொட்டலைத் தாண்டிய பறைச் சத்தம் ஊருக்குள் புகுந்தது. ஒய்யான் தப்படிக்கும் சத்தத்தில் கரந்தமலைக்குள்ளிருந்து ஒளியை வீசிவிட்டு சிவப்பாக எழுந்துகொண்டிருந்தான் சூரியன். பரந்த நிலப்பரப்பில் ஒய்யானின் பறை ஒலியில் சூரியன் பூமியைப் பார்த்தான்.

தூரத்தில் கரந்தமலையில் ஏறிக்கொண்டிருந்தது அய்யனார் சாமி.

ஊர்த் தொழுவம் இடிந்து கிடந்தது.

https://www.vikatan.com

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this