Sign in to follow this  
நவீனன்

``அன்று பெரியார், மகாத்மா காந்தி... இன்று திருமுருகன் காந்தி" தடுப்புக்காவல் சட்டத்தில் அடுத்து யார்?

Recommended Posts

``அன்று பெரியார், மகாத்மா காந்தி... இன்று திருமுருகன் காந்தி" தடுப்புக்காவல் சட்டத்தில் அடுத்து யார்?

 

"என்றென்றும் மக்கள் புரட்சிக்காக மே 17 இயக்கம் காலத்தில் நிற்கும். நாங்கள் உழைத்து சிறுகச்சிறுக வங்கியில் சேர்த்த மொத்த நிதியும் சென்ற வாரம் முடக்கப்பட்டிருக்கிறது. எங்கள் நண்பரின் நகையை வைத்து இந்தக் கூட்டத்தை நடத்துகிறோம். ஆனால், என்றுமே உங்கள் அடக்குமுறைகளுக்கு அடிபணிய மாட்டோம்."

``அன்று பெரியார், மகாத்மா காந்தி... இன்று திருமுருகன் காந்தி
 

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் கைதைக் கண்டித்தும் அவரை விடுதலை செய்யக்கோரியும், ''உபா' எனும் கறுப்புச்சட்டத்தினை நீக்கிடு' என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி மே 17 இயக்கம் சார்பில் பொதுக்கூட்டம் செப்டம்பர் 8, 2018 அன்று சென்னை தியாகராய நகரில் நடத்தப்பட்டது. இதில், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன், ம.தி.மு.கவின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆளூர் ஷாநவாஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

தூத்துக்குடி 13 பேர் படுகொலை, சேலம் எட்டு வழிச்சாலை போன்ற பிரச்னைகள் குறித்து ஐ.நா சபையில் பேசிய மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பேசினார். இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி நார்வேயில் இருந்து பெங்களூரு திரும்பிய அவர், பெங்களூரு விமான நிலையத்திலேயே சிறைப்பிடிக்கப்பட்டார். திருமுருகன் காந்தி மீது 'லுக் அவுட் நோட்டீஸ்', பிறப்பிக்கப்பட்டிருந்ததால் அவரைச் சிறைப்பிடித்து வைத்திருந்தனர் விமான நிலைய காவலர்கள். முதலில் சென்னை வேப்பேரி , மயிலாப்பூர் காவல் நிலையத்தில் அவர்மீது 124 (A) தேசத்துரோக வழக்கு போடப்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தனர். 

திருமுருகன் காந்தி

 

 

இது மட்டுமின்றி பெரியார், அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்துப் பேசியதற்காகவும் இவர்மீது வழக்குகள் போடப்பட்டன. மேலும், 'உபா' என்று சொல்லக்கூடிய 'சட்ட விரோத நடவடிக்கை தடுப்புச் சட்டம் - UAPA ' ஆகிய பிரிவுகளிலும் இவர் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். நடந்து முடிந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள் இந்த விவகாரங்கள் குறித்து தங்கள் கருத்துகளை விரிவாக முன்வைத்தனர். 

 

 

பொதுக்கூட்டத்தில் தொடக்கவுரையாற்றிய மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் பிரவீன் குமார் பேசுகையில்... 

பிரவின் குமார்

``அரசு அடக்குமுறைக்கு எதிரான பொதுக்கூட்டம் இது. 'இந்தக் கோரிக்கைக்காக மக்கள் கூட்டம் கூடுமா? திருமுருகன் காந்தியும் இல்லையே' போன்ற கவலைகள் இருந்தன. ஆனால், நாற்காலிகள் தீர்ந்து மக்கள் நின்றுகொண்டு கூட்டத்தில் பங்கேற்றுள்ளதைப் பார்க்கும்போது, அரசு அடக்குமுறைகளுக்கு எதிரான மனநிலையே மக்களிடம் வலுப்பெற்றிருக்கிறதென்று தெரிகிறது. ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு எங்கள் இயக்கத்துக்கு எந்தவித பொதுக்கூட்டம், கருத்தரங்குக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்ட பிறகு இப்போதுதான் அனுமதி கிடைத்திருக்கிறது. அதுவும் சில விதிகள், கட்டுப்பாடுகளைப் பிறப்பித்திருக்கிறார்கள். முதல் கட்டுப்பாடு திருமுருகன் காந்தி கைதைப் பற்றி பேசக்கூடாது என்பதுதான்! பிறகு எதற்கு நாங்கள் கூடப்போகிறோம்? 1930-ம் ஆண்டு முன்னாள் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஒரு பேச்சுவார்த்தையில் 'தடுப்புக் காவல் சட்டம் இந்த நாட்டில் இருக்குமேயானால் நான் அதில் ஆட்சி செய்யமாட்டேன்' என்றார். இந்த நாட்டில் இன்று வரை தடுப்புக்காவல் சட்டம் இல்லாமல் இருந்ததில்லை. என்றென்றும் மக்கள் புரட்சிக்காக மே 17 இயக்கம் காலத்தில் நிற்கும். நாங்கள் உழைத்து சிறுகச்சிறுக வங்கியில் சேர்த்த மொத்த நிதியும் சென்ற வாரம் முடக்கப்பட்டிருக்கிறது. எங்கள் நண்பரின் நகையை வைத்து இந்தக் கூட்டத்தை நடத்துகிறோம். ஆனால், என்றுமே உங்கள் அடக்குமுறைகளுக்கு அடிபணிய மாட்டோம்" என்றார்.

 

 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் பேசுகையில்...

ஆளூர் ஷாநவாஸ்

``பெரியார் சிலைக்கு மாலை போட்ட காரணத்தினால் கைது செய்யப்பட்ட திருமுருகன் காந்தியை விடுதலை செய்யக்கோரி தியாகராய நகரில் பொதுக்கூட்டம். ஒரு கையில் வயிற்றைப் பிடித்துக் கொண்டு, மறு கையில் மைக்கைப் பிடித்துக்கொண்டு இன மீட்புக்காக கருஞ்சட்டை போட்டுக்கொண்டு 45 ஆண்டுகளுக்கு முன்னர் இறுதி மூச்சு அடங்குகிற வேளையில் பெரியார் எங்கு பேசினாரோ... அதே இடத்தில் இன்று இந்தப் பொதுக்கூட்டம் நடக்கிறது. கிட்டதட்ட அரைநூற்றாண்டு காலம் கடந்தாலும் கருத்தியலில் மாற்றம் இல்லை. திருமுருகன் காந்தி இனவாதம், சாதியவாதம், மதவாதம் பேசியிருந்தால் மகிழ்ந்திருப்பார்கள். ஆனால், இவற்றையல்லாமல் திருமுருகன் காந்தி மானுடம் பேசினார். திருமுருகன் காந்தி என்கிற ஒற்றைக்குரலை நசுக்கினால் எங்களை அடக்கி விட முடியாது, அது பெருங்குரலெடுத்து பெருவடிவம் எடுக்கும் என்பதற்கான ஆதாரம்தான் தூத்துக்குடி விமான நிலையத்தில் ஒலித்த அந்த ஷோபியாவின் குரல். பெரியார், அம்பேத்கர் சிலைக்கு மாலை போட்டால் சிறை, ஆனால் பலர் கோட்சேவுக்கு சிலை வைத்துக் கொண்டாடுகிறார்கள் அவர்கள் மீது நடவடிக்கை இல்லையென்றால், இது பாசிசம் இல்லாமல் வேறென்ன. திருமுருகனை நீதிமன்றத்தில் காவல்துறை ஆஜர்படுத்தியபோது நீதிபதி சொல்கிறார் 'இவரைக் கைது செய்யமுடியாது' என்று! ஆனால், திருமுருகனைக் கைது செய்தார்கள். 'எஸ்.வி சேகரை ஏன் கைது செய்யவில்லை' என்று நீதிபதி கேட்கிறார்? ஆனால் எஸ்.வி சேகரை கைது செய்யவில்லை! திருமுருகன் காந்தி சரியான  பாதையில் பயணிப்பதாலேயே அவரைக் கைது செய்துள்ளனர்."

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த மல்லை சத்யா பேசுகையில்...

மல்லை சத்யா

``1922-ல் தேசப்பிதா மகாத்மா காந்தி பேசியதற்காக அவர்மீது இதே போன்ற தடுப்புக்காவல் சட்டத்தை பிரித்தானிய அரசு ஏவியது. கிட்டதட்ட 100 ஆண்டுகள் கழித்து திருமுருகன் காந்தி அதே போன்றதொரு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அடிமை இந்தியாவில் எந்தச் சட்டத்தை தூக்கி எரிய வேண்டுமென்று முழங்கினோமோ அதே சட்டம் இன்று சமூக செயற்பாட்டாளர்களை ஒடுக்கிக்கொண்டிருக்கிறது. அறிவாசான் தந்தை பெரியார் 1933-ம் ஆண்டு 'குடி அரசு' இதழில் அப்போதைய அரசு எங்குச் செல்கிறது என்று தலையங்கம் தீட்டியதற்காக இதே போன்ற தடுப்புக்காவல் சட்டத்தில் நீதிமன்றம் முன் நிறுத்தப்பட்டு 9 மாதம் சிறைத் தண்டனைப் பெற்றார். 'குடி அரசு' முடக்கப்பட்டு 'புரட்சி' என்ற இதழ் உருவாயிற்று. மகாத்மா காந்தி, தந்தைப் பெரியார் ஆகியோர் மீது பாய்ச்சப்பட்ட சட்டம் இன்று திருமுருகன் காந்தி மீது பாய்கிறது என்றால் அவர் போகின்ற பாதை சரியென்று அர்த்தம்" என்றார்.

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கூறியதாவது...

வேல்முருகன்

``தமிழ்நாட்டில் ஓட்டு அரசியலை விரும்பாமல், இயக்க அரசியலை முன்னிறுத்துவதில் மே 17 முன்னுதாரணமாகத் திகழ்கிறது. இதுவரை எந்த ஆட்சியிலும் இல்லாத ஒடுக்குமுறையைப் பாய்ச்சுகிறார்கள்! உபா சட்டம் பாய்ச்ச அவரென்ன ஆயுதம் ஏந்திப் போராடினாரா. இல்லை! அவர் களநிலவரத்தை, உண்மையைப் பேசினார். அவரது ஆயுதம் 'பேச்சு' தான். தொலைக்காட்சியில் அவர் எதிராளிகளுக்குக் கொடுக்கும் பதிலடிகளுக்கு யாரும் வாய் திறக்கமுடியவில்லையே ஏன்? இதையெல்லாம் ஆளும் வர்க்கத்தினர் ஏற்பதில்லை. திருமுருகனைக் கைது செய்தால் அவரைப்போன்ற ஆயிரம் திருமுருகன்கள் உருவாகுவார்கள்" என்றார்.   

ஆயுதம் ஏந்தாத திருமுருகன் காந்தியை 'உபா' சட்டத்தில் கைது செய்வதே மனித உரிமை மீறல் என்று சமூக ஆர்வலர்கள் கூறிவரும் வேளையில், அவரை இயற்கை உபாதையைக் கூட கழிக்க விடாமல் கொடுமைப்படுத்துவது அடக்குமுறைகளின் உச்சம் என்பதைத் தவிர வேறென்ன!

https://www.vikatan.com/news/tamilnadu/136556-may-17-condemns-thirumurugan-arrest.html

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this