யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
நவீனன்

மாயக்கல்லி மலை: விடாப்பிடி

Recommended Posts

மாயக்கல்லி மலை: விடாப்பிடி
முகம்மது தம்பி மரைக்கார் /
 

நீண்ட மௌனத்தின் பிறகு, மீண்டும் பேசுபொருளாக மாறியிருக்கிறது, மாயக்கல்லி மலை விவகாரம். 

இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாணிக்கமடு பகுதியிலுள்ள மாயக்கல்லி மலையில், 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதியன்று, புத்தர் சிலையொன்றை அடாத்தாக வைத்ததிலிருந்து தொடங்கிய சர்ச்சை, இப்போது இன்னொரு கட்டத்தை அடைந்திருக்கிறது.

மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை முன்னிறுத்தி, அங்கு விகாரை ஒன்றை அமைப்பதற்காக, ஓர் ஏக்கர் காணி வழங்கப்படும் என்று, கிழக்கு மாகாணக் காணி ஆணையாளர் டி.டி.அநுர தர்மதாஸ உறுதியளித்து கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதை அடுத்து, மாயக்கல்லி மலை விவகாரம், மீண்டும் சூடு பிடித்துள்ளது.

மாயக்கல்லி மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட பின்னர், 15 டிசெம்பர் 2016ஆம் ஆண்டில், அம்பாறையிலுள்ள வித்தியானந்தா மகா அறப்பள்ளியின் அதிபர் கிரிந்திவெல சோமரத்ன தேரர், கிழக்கு மாகாணக் காணி ஆணையாளருக்கு, கடிதமொன்றை எழுதியிருந்தார். அதில், இறக்காமம் - மாயக்கல்லி மலைப் பிரதேசத்தில் விகாரையொன்றை நிர்மாணிப்பதற்காக, ஒரு துண்டு காணியை வழங்குமாறு கோரியிருந்தார்.

கிரிந்திவெல சோமரத்ன தேரர் தலைமையில் தான், மாயக்கல்லி மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டது. குறித்த இடத்தில் சிலை வைப்பதற்கு, அம்பாறை நீதவான் நீதிமன்றம், தடையுத்தரவு பிறப்பித்திருந்த  நிலையிலும், அங்கு பலாத்காரமாக சிலை வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

image_013dcc784c.jpg

இந்த நிலையில், சோமரத்ன தேரரின் மேற்படி கடிதத்துக்குரிய பதிலை, கடந்த மாதம் 7ஆம் திகதியன்று, கிழக்கு மாகாணக் காணி ஆணையாளர் டி.டி.அநுர தர்மதாஸ அனுப்பி வைத்திருந்தார். 

அந்தக் கடிதத்தில், குறித்த விகாரை நிர்மாணிப்புக்காக, 1 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதனை அளவீடு செய்து, இறக்காமம் பிரதேசச் செயலாளர் வழங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. குறித்த கடிதத்தின் பிரதி, இறக்காமம் பிரதேசச் செயலாளருக்கும், கிழக்கு மாகாணக் காணி ஆணையாளரால் அனுப்பப்பட்டிருந்தது.

இதனையடுத்து, இறக்காமம் பிரதேசச் செயலாளரை, கிரிந்திவெல சோமரத்ன தேரர் தொடர்பு கொண்டு, விகாரைக்கான காணியை ஒதுக்கீடு செய்து தருமாறு கோரியதாக அறிய முடிகிறது.

மாயக்கல்லி மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டமைக்கு, முஸ்லிம் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையிலேயே, அங்கு விகாரை அமைப்பதற்கு, 1 ஏக்கர் காணி வழங்கப்படுமென, காணி ஆணையாளர் எழுத்து மூலம் அறிவித்துள்ளார். 

இந்த நிலையில், கிழக்கு மாகாணக் காணி ஆணையாளர் அனுப்பிவைத்த கடிதத்தின் பிரதியை, இறக்காமம் பிரதேசச் செயலகத்திலிருந்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், கே.எல். சமீம் என்பவர் பெற்றுக்கொண்டார். இவர், வண்ணத்துப் பூச்சியைச் சின்னமாகக் கொண்ட ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின், இறக்காமம் பிரதேசத்துக்கான அமைப்பாளராவார்.  

இதனைத் தொடர்ந்து, மாயக்கல்லி மலைப் பகுதியில் விகாரை அமைப்பதற்காகக் காணி எதனையும் வழங்கக் கூடாதெனத் தெரிவிக்கும் ஆட்சேபனைக் கடிதமொன்றை, இறக்காமம் பிரதேசச் செயலாளரிடம், கே.எல். சமீம், கடந்த 4ஆம் திகதியன்று சமர்ப்பித்திருந்தார்.

இதேவேளை, இம்மாதம் 11ஆம் திகதி (இன்று) நடைபெறவுள்ள இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்கான நிகழ்ச்சி நிரலில், மாயக்கல்லி மலை - சிலை விவகாரத்தைச் சேர்த்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்து, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் செயலாளர் எம்.டி. ஹசன்அலி, இறக்காமம் பிரதேசச் செயலாளருக்கு, கடந்த 7ஆம் திகதியன்று, கடிதமொன்றை அனுப்பி வைத்தார்.

இதற்கிணங்க, இன்று செவ்வாய்கிழமை நடைபெறவுள்ள இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்கான நிகழ்ச்சி நிரலில், மாயக்கல்லி மலை விவகாரம் சேர்க்கப்பட்டுள்ளதோடு, குறித்த கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் இறக்காமம் பிரதேச அமைப்பாளர் சமீமுக்கு, இறக்காமம் பிரதேசச் செயலாளரால், எழுத்து மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், “மாயக்கல்லி மலைப் பகுதியில் விகாரை அமைக்கும் நோக்கத்துக்காக காணி வழங்குவதை எதிர்க்கும் தீர்மானமொன்றை, இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்க வைப்பதே எனது முதல் நடவடிக்கையாக இருக்கும்” என்று, கே.எல்.சமீம் கூறினார். 

“அம்பாறை மாவட்டத்தில், பல கட்சிகளைச் சேர்ந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக, முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர், பதவி வகிக்கின்றார். 

ஆனாலும், பௌத்தர்கள் எவரும் இல்லாத இறக்காமம் மாயக்கல்லி மலைப் பகுதியில், விகாரையொன்றை அமைக்கும் பொருட்டு காணி ஒதுக்குவதற்கு எதிராக, இவர்களில் ஒருவர் கூட வாய் திறக்கவில்லை என்பது, மிகவும் கவலையையும் ஏமாற்றத்தையும் தருகிறது” என்றும், சமீம் மேலும் தெரிவித்தார். 

இன்னொருபுறம், மாயக்கல்லி மலைப் பகுதியில் விகாரை அமைப்பதற்காக காணி வழங்கும் நடவடிக்கைக்கு ஆட்சேபனை தெரிவிக்கும் கடிதமொன்றை, இறக்காமம் பிரதேசத்தை சேர்ந்த சட்டத்தரணி எஸ்.எல்.பாறூக் என்பவரும், இறக்காமம் பிரதேசச் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளார். இவர், மாயக்கல்லி மலைக் குழுவின் செயலாளர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

“தீகவாபி - மாணிக்கமடு பரிவார தூபி நிர்மாணத்துக்காக காணி வழங்குவதற்கு எதிரான ஆட்சேபனை மனு” எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில், ஏன் காணி வழங்கக் கூடாது என்பதற்கான காரணங்களையும், சட்டத்தரணி பாறூக் குறிப்பிட்டுள்ளார்.

அவை,  தொல்பொருள்கலைச் சட்டத்துக்கிணங்கவும்  2014.10.10ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாகவும், மாயக்கல்லி மலையும்  அதனை அண்டிய சூழலும், இலங்கையின் ஒவ்வொரு பிரஜையினாலும் பேணிப் பாதுகாக்கப்பட  வேண்டிய அரச சொத்து என்பதால், குறித்த ஓர் இனத்துக்கு மட்டும் விகாரை அமைக்க காணி  வழங்குவது, அடிப்படை உரிமை மீறலாகும். 

இறக்காமம் பிரதேச எல்லைக்குள்  இருக்கின்ற மாணிக்கமடுவை, அட்டாளைச்சேனை பிரதேசச் செயலக எல்லைக்குள் இருக்கும்  தீகவாபியோடு இணைத்துத் தலைப்பிட்டு, உயரதிகாரிகளையும் பிரதமர், ஜனாதிபதி போன்றோரையும்  பிழையாக வழிநடத்தி சிபாரிசு பெறப்பட்டிருப்பது, முற்றிலும் சட்டரீதியாகத் தவறானது.

காணி வழங்குவதற்கு சிபாரிசு  வழங்கிய குழுவிலுள்ள இறக்காமம் பிரதேசச் செயலாளர், இறக்காமம் பிரதேச சபைச் செயலாளர்  ஆகியோரின் அனுமதி பெறப்படாமை.இறக்காமம் பிரதேசத்திலுள்ள  பதிவு செய்யப்பட்ட சிவில் அமைப்புகளின் அபிப்பிராயங்கள், சிபாரிசுக் குழுவில்  இடம்பெறாமை. விகாரை அமைக்கக் கோரும் பகுதியின்  10 கிலோமீற்றர் தூரம் வரை, ஒரு பௌத்த குடும்பம் கூட இல்லாத சூழலில், அங்கு விகாரை  அமையுமானால், எதிர்காலத்தில் ஓர் இனத்துக்கான திட்டமிட்ட குடியேற்றங்கள் உருவாக்கப்படலாம்  என்ற அச்சம் உள்ளது.

இறக்காமம் பிரதேசச் செயலக  எல்லைக்குள், இதற்கு முன்னர் 5 இடங்களில் விகாரை அமைக்கக் காணி வழங்கியுள்ளமையால்,  மாணிக்கமடுவில் அமையப் பெறும் விகாரையானது, இனங்களுக்கிடையில் குரோத மனப்பாங்கை  ஏற்படுத்துமென்பதால், இதனைக் கைவிடுவதே சிறந்தது.   

இவ்வாறு, மாயக்கல்லி மலைப் பகுதியில் விகாரையொன்றுக்கு அமையப் பெறுவதற்கு எதிராக, அரசியல் அதிகாரமற்ற கட்சிப் பிரதிநிதிகளும் தனிநபர்களும் செயற்பட்டு வருகின்ற நிலையில், அந்தப் பிரதேச மக்களின் வாக்குகளைப் பெற்று, ஆட்சி அதிகாரத்திலுள்ள கட்சிகளும் அவற்றின் பிரதிநிதிகளும் என்ன செய்தார்கள் என்கிற கேள்வி இங்கு முக்கியமானதாகும். 

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவொன்று, இந்த விவகாரம் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவை, கடந்த சனிக்கிழமையன்று கொழும்பில் சந்தித்துப் பேசியிருக்கிறது. 

எவ்வாறாயினும், மாயக்கல்லி மலைப் பிரதேசத்தை கையகப்படுத்துவதற்கான செயற்பாடுகள் ஆரம்பமான போதே, அதனைத் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை, இந்தப் பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொள்ளவில்லை என்று, சட்டத்தரணி பாறூக், குற்றச்சாட்டொன்றையும் முன்வைக்கிறார்.

“மாயக்கல்லி மலைப் பகுதியானது, 10.10.2014 அன்று வெளியான 18/84ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் மூலம், தொல்பொருள்கலைத் திணைக்களத்துக்குச் சொந்தமான பகுதியாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. அப்போது, கிழக்கு மாகாண சபையிலும், இறக்காமம் பிரதேச சபையிலும், காங்கிரஸ் ஆட்சி இருந்தது. ஆனாலும், இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், எதுவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. குறிப்பாக, மாயக்கல்வி மலை விவகாரம் தொடர்பில், எதுவித எழுத்து மூலமான ஆட்சேபனைகளையும் அக்கட்சி இதுவரை தெரிவிக்கவில்லை” என்று, சட்டத்தரணி பாறூக் குற்றஞ்சாட்டுகிறார்.

மாயக்கல்லி மலையில் சிலை வைக்கப்பட்டுள்ளமையை, மத ரீதியானதொரு விவகாரமாக மட்டும் பார்க்க முடியாது. “ஆளில்லாத கடையில் டீ ஆத்துவது போல்”, பௌத்தர்கள் யாருமேயில்லாத பகுதிகளில், புத்தர் சிலைகளைக் கொண்டுவந்து வைப்பதற்குப் பின்னால் “ஆயிரத்தெட்டு” காரணங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானது, நில அபகரிப்பாகும்.

சிறுபான்மையின மக்கள் பெரும்பான்மையாகவும் செறிந்தும் வாழ்கின்ற பகுதிகளில், சிங்களக் குடியேற்றங்களை நிறுவுவதற்கான திட்டத்தைச் செயற்படுத்துவதற்குரிய ஆரம்ப கட்ட நடவடிக்கையாகவும் இதனைப் பார்க்க வேண்டியுள்ளது.

சிறுபான்மை மக்களின் நிலங்களை அபகரிப்பதற்கான கருவியாகவும், புத்தர் சிலைகளை சிங்களப் பேரினவாதம் பயன்படுத்தி வந்துள்ளது. அதனால் தான், அமைதியே உருவான புத்தர் சிலைகளைக் கண்டு, சிறுபான்மை மக்கள் அச்சப்படுகிறார்கள். 

மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்றுவதில்லை என்பதிலும் அங்கு விகாரையொன்றை அமைக்காமல் விடுவதில்லை என்பதிலும், சிங்களப் பேரினவாதிகள் விடாப்பிடியாக உள்ளனர். 

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த சிங்கள அமைச்சர் ஒருவர், இந்தச் சிலை வைப்பின் பின்னணியில் இருந்ததாக, கடந்த காலங்களில் பேசப்பட்டமையும் இங்கு நினைவு கொள்ளத்தக்கதாகும்.

மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்றுமாறு, அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம்கள் கோரிக்கை விடுத்துவரும் நிலையில், அந்த சிலையை வைத்து - அங்கு விகாரையொன்றை அமைக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளமையானது, முஸ்லிம்களுக்கு பாரிய ஏமாற்றத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளமையை அவதானிக்க முடிகிறது.

இவ்வாறான கோபங்களின் திரட்சி தான், முன்னைய ஆட்சியாளர்களை மண் கவ்வச் செய்ததென்பதை, நல்லாட்சியாளர்கள் நினைத்துப் பார்த்தல் அவசியமாகும்.

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மாயக்கல்லி-மலை-விடாப்பிடி/91-221525

Share this post


Link to post
Share on other sites

இலங்கை: மாயக்கல்லி மலை பௌத்த விகாரைக்கு நிலம் ஒதுக்க எதிர்ப்பு

இலங்கை மாயக்கல்லி மலையில் பௌத்த விகாரை அமைப்பதற்கு ஓர் ஏக்கர் பரப்புள்ள காணியை கிழக்கு மாகாண காணி ஆணையாளர் ஒதுக்கியுள்ளதற்கு அப்பகுதியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மாயக்கல்லி மலை புத்தர் சிலை Image captionமாயக்கல்லி மலையில் புத்தர் சிலை.

அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாயக்கல்லி மலையில், 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ம் தேதி, பௌத்த தேரர்கள் தலைமையில் பலாத்காரமாக புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டது.

முஸ்லிம்களும் தமிழர்களும் மட்டுமே வாழும் இப் பிரதேசத்தில், பௌத்தர்கள் எவருமற்ற இடத்தில், மேற்படி புத்தர் சிலை வைத்தமை குறித்து, அங்கு வாழும் மக்கள் கடந்த இரண்டு வருடங்களாக தமது கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அச்சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் பௌத்த விகாரை ஒன்றினை அமைப்பதற்காக, ஒரு ஏக்கர் பரப்பளவுள்ள காணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த காணியின் எல்லைகள் காட்டப்பட்டு, அதனை இறக்காமம் பிரதேச செயலாளர் முறையாக ஒப்படைப்பார் எனவும், கிழக்கு மாகாண காணி ஆணையாளர் டி.டி.. அனுர தர்மதாஸ எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

அம்பாறை திகாமடுல்ல ஸ்ரீவித்தியானந்த மஹா பௌத்த அறப்பளியின் தலைவர், கிரிந்தவெல சோமரத்ன தேரருக்கு, கிழக்கு மாகாண காணி ஆணையாளர் எழுதியுள்ள கடிதத்திலேயே இது குறித்து அறிவித்துள்ளார். அக்கடிதத்தின் பிரதி, இறக்காமம் பிரதேச செயலாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கிழக்கு மாகாண காணி ஆணையாளர் அறிவித்துள்ளபடி, விகாரை அமைக்கும் பொருட்டு மாயக்கல்லி மலைப் பகுதியில் காணி வழங்கக் கூடாது எனத் தெரிவித்து, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு எனும் அரசியல் கட்சியின் இறக்காமம் பிரதேச அமைப்பாளர் கே.எல். சமீம் என்பவர், இறக்காமம் பிரதேச செயலாளருக்கு எழுத்து மூலமான ஆட்சேபனை மனுவொன்றினை வழங்கினார்.

மாயக்கல்லி மலை Image captionமாயக்கல்லி மலை.

அதேபோன்று, அப்பிரதேசத்தைச் சேர்ந்த சட்டத்தரணி எஸ்.எல். பாறூக் என்பவரும், இது தொடர்பில் ஆட்சேபனை மனுவொன்றினை சமர்ப்பித்தார். இன்னும் சிலரும் காணி வழங்குவதற்கு எதிராக, இவ்வாறு எழுத்து மூலம் ஆட்சேபனை தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று செவ்வாய்கிழமை, இறக்காமம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது, இக் கூட்டத்தில், மாயக்கல்லி மலைப் பகுதியில் விகாரை அமைப்பதற்காக காணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதென காணி ஆணையாளர் அறிவித்துள்ளமை குறித்தும், அது தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆட்சேபனைகள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.

இறுதியாக, ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் பேசி, தீர்க்கமானதொரு முடிவினைப் பெற்றுக் கொள்ளும் வரையில், மாயக்கல்லி மலைப் பகுதியில் பௌத்த விகாரை அமைப்பதற்காக காணி வழங்குவதில்லை என்று, இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஒரு மனதாகத் தீர்மானிக்கப்பட்டது.

குறித்த பகுதியில் பௌத்த விகாரை அமைக்கப்படுமானால், எதிர்காலத்தில் அங்கு சிங்கள குடியேற்றம் உருவாக்கப்படலாம் என, அப் பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் சந்தேகிக்கின்றனர்.

"விகாரை அமைக்கக் கோரும் பகுதியின் 10 கிலோமீற்றர் தூரம் வரை, ஒரு பௌத்த குடும்பம் கூட இல்லாத சூழலில், அங்கு விகாரை அமையுமானால், எதிர்காலத்தில் ஓர் இனத்துக்கான திட்டமிட்ட குடியேற்றங்கள் உருவாக்கப்படலாம் என்ற அச்சம் உள்ளது" என்று, விகாரை நிர்மாணத்தின் பொருட்டு காணி வழங்குவதற்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட ஆட்சேபணை மனுவில், சட்டத்தரணி பாறூக் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/sri-lanka-45498244

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு