Sign in to follow this  
நவீனன்

பிள்ளை மனம் கல்லு

Recommended Posts

பிள்ளை மனம் கல்லு

 

ka2

"ஏம்மா உனக்கு ஒருதடவ சொன்னா புரியாதா நல்ல மாட்டுக்கு ஒரு சூடு அதான் மாச மாச பெட்ரோல் போட்டு உன்ன பாக்க வரோம்ல நீ ஏன் இப்படி வந்து நிக்கிற காலங்காத்தாலே அழுதுட்டு வந்து நிக்கிற உன் மூஞ்சியை பாத்தா வெலங்குமா என் பொண்டாட்டி காலையிலயே ராமாயணம் பாட ஆரம்பிச்சுட்டா தேவையா எனக்கு உன் வயித்துல பொறந்தேன் பாரு...ச்சே.''
இதை கேட்ட மூத்தவள் பங்கஜத்தின் நெஞ்சம் வெடித்து விடாதா என்று தன் கையாலாகாத நிலையை எண்ணி மருகினாலே தவிர, வேறு ஏதும் செய்ய முடியாத நிலை. பெண்டாட்டி பேச்சை கேட்டு பணம் ஒன்றே பெரிது என்று கருதும் பிள்ளைகளை பெற்ற தன் இழிநிலை. பெண்பிள்ளையின் அருமை இப்போதல்லவா புரிகிறது?
எவ்வளவு சந்தோஷத்துடன் பெற்ற இரண்டு ஆண் பிள்ளைகள். பிள்ளைகள் வளரும் போது கூட, " உனக்கு என்ன ரெண்டும் ஆம்பிளை புள்ள... வர வர செலவு இல்ல. எனக்கு அப்படியா? பொம்பள புள்ளைங்களை வளர்த்து ஆளாக்கணும். செலவு கட்டிட்டு போற வரைக்கும்''னு பக்கத்து வீட்டு மங்களா புலம்பும்போது பெருமிதமாகத் தான் இருந்து. இருபத்திரண்டு வருடமாய் இரு ஆண் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி கல்லயாணம் செய்து வைத்தாள். வந்த இரு மகராசிகளும் எதிலும் ஒற்றுமை இல்லை என்றாலும் தங்களுக்கு மாமனார் மாமியார் வேண்டாம் என்பதில் அவ்வளவு ஒற்றுமை. மூத்தவன் ராமுவுக்கு வெளியூர் வேலை. திருமணம் ஆன பிறகு அங்கேயே பிள்ளைகளுடன் தங்கிவிட்டான். சின்ன வயதில் இருந்தே ஒட்டுதல் இல்லை.

 

அதனால் பெரிதாய் வருத்தம் இல்லை. ஆனால் இளையவன் ஜெயபால் "அம்மா... அம்மா' என்று என்னை விட்டு ஒரு நொடி கூட விலகியது கிடையாது. இரு பிள்ளைகளுக்கும் அனைத்து சொத்தையும் சமமாகத்தானே பிரித்து கொடுத்தது. ஆனால் இப்போது மாதா மாதம் பெட்ரோல் போட்டுக்கொண்டு எங்கள் இருவரையும் பார்க்க ஏதோ பாசத்தால் வருவது போல் சொல்லிக்காட்டுகிறான். என் பெயரில் இப்போது வரை இருக்கும் ஒரு காணி நிலமும் அதில் விளைச்சலில் வரும் பணத்திற்கே எங்களை இருவரும் பார்க்க வருகிறார்கள் தவிர, பாசத்தை விட பணம் எண்ணும் அரிச்சுவடியை அறிந்தவர்கள் அல்லவே இவர்கள். ச்சே... ஏன் இப்படி நினைக்கிறோம்? நம் பிள்ளைகளை நாமே தவறாக நினைப்பதா? எல்லாம் மனைவியின் திருவிளையாடல். மற்றபடி இவர்கள் திருமணத்திற்கு முன்பு இவ்வளவு மோசம் இல்லேயே... ஆனால் என்ன செய்ய? என்று எண்ணும்படி நிலை. இப்போது வாசலில் அழுது கொண்டு நிற்பவளை என்ன என்று கூட கேட்காமல் குதறும் பிள்ளையை என்ன தான் செய்வது?


"என்ன குடி மூழ்குற காரியம்... இப்படி வந்து நிக்கற?'' - ஒருவழியா கேட்டான்.
"உன் அப்பா நேத்து குடிச்சுட்டு என்ன அடிச்சுட்டாருப்பா. நெத்தில காயம். உடம்பு எழுந்துருக்க முடில. அதான் சண்டை போட்டுட்டு வந்துட்டன் மொத பஸ்சுக்கே'' கேட்டுக்கொண்டே கல் போல நின்ற தன் மகனை கண்கலங்க ஏறிட்டாள் .
"சொல்லி முடிச்சுட்டல்ல. இன்னும் ஏதாவது இருக்கா?'' என்று கேட்டான்.
"ஏங்க பசங்கள ஸ்கூலுக்கு அனுப்பணும். சீக்கிரம் வாங்க'' என்றது மருமகளின் குரல்.
கதை முடியும் வரை ஒட்டு கேட்டுட்டு கணவனை அழைக்கிறாள் மகாராணி. முடிவைச் சொல்ல அல்லது இதுக்கு மேல் கேட்க இவனுக்கு உத்தரவு இல்லை என்பதுபோல்.
சென்றவன் திரும்பி வருவதற்குள் அடுத்த வீட்டு லட்சுமியின் அழைப்பு ஏனோ அப்போது கேட்க இதமாகவே இருந்தது . அவள் வீட்டிற்குச் சென்று அவளிடம் பேஸ்ட்டை வாங்கி பல் துலக்கி முகம் கழுவி ஒரு மடக்கு தண்ணீரை விழுங்கினாள் மூத்தவள்.

 


"அம்மா இந்தாங்க ரெண்டு இட்லி முதல சாப்பிடுங்க...'' கருணையே உருவான லட்சுமி சின்ன வயதில் இருந்தே தெரிந்தவள் தான் பங்கஜத்திற்கு. ஒரே ஊரும் கூட. திருமணம் ஆகி இங்கே வசிக்கிறாள். மாமியார் மாமனாருடன் வாழ்பவள். இவள் பக்கத்தில் தான் என் மருமகளும் வசிக்கிறாள் என்று நினைப்பே கனத்தது . பூக் கூடையை சாக்கடை பக்கத்தில் வைத்தால் பூ வாசமும் வராது சாக்கடை நாற்றமும் வராது என்பார்களே அதுபோல என் பிள்ளையின் நிலை... என நினைத்தது தாய் உள்ளம். ஆனால் லட்சுமி வீட்டின் நிலையே வேறு தன் மாமனார் மாமியாருக்கு தனி அறை லிப்ட் வசதியோடு தன் கணவர் செய்து கொடுத்தது என்று பெருமையாய் ஊருக்கு வரும்போது சொல்லுவாள். அது மட்டுமல்லாது லஷ்மியின் தந்தை அவ்வப்போது வந்து போக தங்குவதற்கென்று லட்சுமியின் தந்தைக்கும் தங்க ஓர் அறை வசதியும் தன் கணவரால் தரப்பட்டது என்பாள். ஆனால் இவ்வளவு பணம் இருந்தும் அனைத்தும் மாமியார் மாமனாரின் ஆலோசனையின் கீழ்தான் அவர்கள் வீட்டு வரவுகளும் பெரியவர்களிடம் கேட்டுதான் பெற வேண்டும். பேர பிள்ளைகள் பிறந்தநாள் அன்று கூட தாத்தா பாட்டியின் காலில் வணங்கி வாங்க வேண்டும் முதல் பரிசுகளை. அப்போதுதான் பிள்ளைகளுக்கு மரியாதை வளரும் என்று தன் கணவன் எண்ணம் என்பாள் லட்சுமி . இதையெல்லாம் அறிந்தும் லட்சுமியை மனதார வாழ்த்துமே தவிர, என்றுமே தனக்கு இப்படி இல்லையே என்று பொருமியது கிடையது. அவரவருக்கு அமைவதெல்லாம் இறைவன் போடும் பிச்சை... இதில் இச்சைக்கொண்டு என்ன பயன் என்று உணர்ந்தவள். லட்சுமி, "இன்னும் ரெண்டு சாப்பிடுங்க'' என்று கொடுத்த இட்லியை சாப்பிட்டுக்கொண்டே அவ்வபோது கண்கள் மகன் வீட்டையும் பார்த்தது.


"ஏன் அம்மா உங்களுக்கு இந்த நிலமை இந்த வயசிலும்? உழைச்சு கொட்டுறீங்க. அந்த நன்றி இல்லையே பங்கஜமா உங்க பசங்களுக்கு. நீங்களும் மாத மாதம் இவங்களுக்கு படி அளக்கணுமா. உங்க மருமக வட்டிக்கு விட்டு ஏராளமா காசு புழங்குது. இதுல நீங்க வேற ஏன்மா? உங்களை முதல நீங்க பாருங்க. இப்படிப்பட்ட பிள்ளைங்க உங்களுக்கு போய்...ச்சே'' என்றாள் எரிச்சலில்.
"மாதாமாதம் பேர புள்ளைங்களை கண்ணுல பாக்குற சந்தோஷம் தான். காசு இல்லைன்னா அந்த பக்கம் வர மாட்டானுங்க. எனக்கு அந்த சந்தோஷம் கூட இல்லாம போய்டும் லட்சுமி''


பங்கஜம் சொல்வதை கேட்டுக்கொண்டே, தன் கணவன் குழந்தைகளுடன் வருவதை கண்டால்.
"அம்மா பை' என காட்டிய பிள்ளையிடம் "பாட்டிக்கு பை சொல்லுங்க'' என சொல்ல அழகாக பிஞ்சு கையால் ஆட்டிவிட்டு சென்றது. பிள்ளைகள் சென்றதும் பங்கஜம் பாட்டியும் கிளம்பினாள். பக்கத்து வீட்டில் ஜெயபால் பிள்ளைகளை ஸ்கூலுக்கு அழைத்து செல்ல வெளியே வரும் நேரம் .
லட்சுமி தன் கணவன் கொடுத்த காசை கொடுக்க... அதை மறுத்து, " உன் அன்பு மனசும் வாயும் நிறைச்சுது தாயி இது எதுக்கு வேண்டாம்மா... நீ என்னைக்கும் மகாலட்சுமியாய் இரும்மா'' என்று வாழ்த்திவிட்டு தன் பையன் பைக் எடுக்கும் சத்தம் கேட்டு வெளியே விரைந்தாள். பிள்ளைகளை பைக்கில் உட்கார வைத்துக்கொண்டு இருந்தான்.


பங்கஜதத்தைப் பார்த்ததும், " எனக்கு வேலை இருக்கு. நீ வீட்டுக்குப் போ. நான் மாச கடைசில வந்து பாக்குறேன்'' என்றான் அருமை புதல்வன்.
இதையெல்லாம் சொல்லிக்கொடுத்த மருமகளோ மனதிற்குள் சிரித்தது ஏனோ பங்கஜத்திற்கு கேட்டது. "பஸ்ஸýக்கு காசு?'' என்று தன் பையன் கேட்ட போது, மலர்ந்த முகம் "வரும்போது எடுத்துட்டு வராமலா வந்துருப்பாங்க உங்க அம்மா. அதான் இந்த வயசிலும் தனக்குனு ஒரு காணி வச்சுருக்காங்கல. அத நம்மளுக்கா முழுசா கொடுக்கப் போறாங்க... நம்ம சின்ன பையன் ரெண்டு பொம்பளைப் புள்ளைய வச்சு கஷ்ட படுறானேன்னு நினைப்பு இருந்தா உங்களுக்கு எழுதி கொடுத்திருப்பாங்களே... அடிச்சா மட்டும் ஓடி வர தெரியும். இது தெரியாதாமா உங்க அம்மாவுக்கு?'' என நாரசமாய் கேட்டது மருமகளின் குரல் .தீயாய் எரிந்தது பங்கஜத்தின் மனது.
" நாம் வாயை திறந்தால் அது அடுத்தவர்களை ஆசிர்வதிப்பதற்கே தவிர, ஏச அல்லட என்று தன் மருமகளை திட்ட நினைத்த நாவை கட்டுபடுத்திவிட்டு தன்னையே ஆசையாய் பார்த்த பேத்திகளிடம் காசு கொடுத்தாள். "பாட்டி... கிளம்பிடாத பாட்டி. வீட்டிலே இரு பாட்டி. நாங்க வந்து பாப்போம். நீ போய்டாத. வந்து நிறைய கதை சொல்லணும்'' என்று ஏக்கமாய் வந்த பிள்ளைகளின் குரல். அதைக் கேட்டும் அசையாத இருந்த தன் பிள்ளையின் மனம் கல் தானோ?

கீர்த்திகா குமார்

http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/sep/11/பிள்ளை-மனம்-கல்லு-2998287.html

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this