Jump to content

ஐ.நா. கண்காணிப்பில் பொது வாக்கெடுப்பு: இலங்கை வடமாகாண சபை கோரிக்கை


Recommended Posts

ஐ.நா. கண்காணிப்பில் பொது வாக்கெடுப்பு: இலங்கை வடமாகாண சபை கோரிக்கை

இலங்கையின் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகள் பற்றித் தீர்மானிப்பதற்காக தமிழர் பகுதியான இலங்கை வடக்கு-கிழக்குப் பிராந்தியத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பில் பொதுவாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளை வடக்கு மாகாண சபை கோரியுள்ளது.

விக்னேஸ்வரன்படத்தின் காப்புரிமைAFP

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30:1, 34:1 தீர்மானங்களை நடைமுறைப்படுத்தும் பொருட்டு இலங்கை அரசாங்கம் அர்த்தமுள்ள நடவடிக்கை எதனையும் இதுவரையில் எடுக்காத நிலையில் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலான 5 முக்கிய தீர்மானங்கள் அடங்கிய பிரேரணை வடமாகாணசபையின் 131-வது அமர்வில் இன்று ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கடந்த 130-வது அமர்வில் முன் மொழிந்த மேற்படி விடயம் தொடர்பான பிரேரணையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், கடந்த அமர்வில் மாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், எதிர்கட்சி தலைவர் சி.தவராசா மற்றும் உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், கே.சயந்தன், அயூப் அஸ்மின் உள்ளிட்டோர் அடங்கிய குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

பிறகு, வலுப்படுத்தப்பட்ட பிரேரணையை இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 131வது மாகாணசபை அமர்வில் எம்.கே.சிவாஜிலிங்கம் முன்மொழிந்தார். மாகாண சபை உறுப்பினர்கள் இதனை ஒருமனதாக நிறைவேற்றினர்.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டுவருவதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையைக் கோருவதும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசையின் பொருட்டு ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்புடன் கூடிய பொதுவாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்தலும் இந்தப் பிரேரணையில் இடம் பெற்றுள்ள முக்கியத் தீர்மானங்கள்.

விக்னேஸ்வரன்படத்தின் காப்புரிமைAFP

ஐந்து தீர்மானங்கள்

வடமாகான சபை நிறைவேற்றியுள்ள பிரேரணையில் இடம் பெற்றுள்ள அந்த 5 தீர்மானங்கள்:

1.இலங்கையானது ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்கள் 30:1, 34:1 ஆகியவற்றை முழுமையாக அமுல்படுத்துவதற்கு இதுவரை விரும்பவில்லை. எனவே மேற்குறிப்பிட்ட தீர்மானங்களை 2019 மார்ச் மாதத்திற்கு முன்னர் முழுமையாக அமுல்படுத்த தவறுமாயின் இலங்கையை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்துக்கு அல்லது விசேடமாக உருவாக்கப்படும் நியாயசபைக்கோ கொண்டு செல்வதன் பொருட்டு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக்கும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபைக்கும் கொண்டு செல்லுமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகளை இச்சபை கோருகிறது.

2. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் பேசும் மக்களின் நிலை, காணாமற்போனோர், தமிழ் அரசியற் கைதிகள், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ்த் தொடரும் கட்டுப்பாடில்லாத தடுத்துவைப்பு, தமிழ்ப் பிரதேசங்களில் பெருமளவிலான பாதுகாப்புப் படைகள் நிலைகொண்டுள்ளமை மற்றும் இத்தீவின் வடக்கு-கிழக்குப் பிராந்தியத்திலுள்ள தனியார் காணிகளில் இலங்கைப் பாதுகாப்புப் படைகள் தரித்திருக்கின்றமை ஆகியவற்றை கண்காணிப்பதன் பொருட்டு இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையிடும் பிரதிநிதி ஒருவரை நியமிக்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையை இச்சபை கோருகிறது.

3. கணிசமான முன்னேற்றம் ஏற்படும் வரை இலங்கை மீது இராணுவத் தடைகளை விதிப்பதற்கு ஐ.நா பாதுகாப்பு சபையை வலியுறுத்துமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையை இச்சபை கோருகிறது.

4.யுத்தத்தில் ஈடுபட்ட இலங்கை இராணுவத்தினருக்கு நுழைவிசைவை நிராகரிக்குமாறும், ஐ.நா உயர் ஸ்தானிகரின் மனித உரிமைகளுக்கான 2018 பிப்ரவரி 26 - மார்ச் 23 ஆம் தேதியிட்ட அறிக்கையில் முன்மொழியப்பட்டபடி சர்வதேச நியாயாதிக்கத்தின் பிரயோகம் அடங்கலாக ஏனைய வழிமுறைகளை ஆராயுமாறும் ஐ.நா. உறுப்பு நாடுகளை இப்பேரவை கோருகிறது.

5.இலங்கை தமிழ் பேசும் மக்களுக்குரிய சமத்துவமான அரசியல் தீர்வொன்றை வழங்குவதற்கு விரும்பாமையாலும், தவறியுள்ளமையாலும்,கடந்தகால வன்முறையின் மீளெழுகையைத் தவிர்ப்பதன் பொருட்டு எந்தவொரு அர்த்தமுள்ள முயற்சியையும் முன்னெடுப்பதற்குத் தவறியுள்ளமையாலும், ஓர் நிலையான அரசியல் தீர்வைக் காண்பதை நோக்காகக் கொண்டு தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசையைத் தீர்மானிப்பதன் பொருட்டு இத்தீவின் வடக்கு-கிழக்குப் பிராந்தியத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்புடன் கூடிய பொதுவாக்கெடுப்பு ஒன்றை நடத்துமாறு ஐ.நா. உறுப்பு நாடுகளை இச்சபை கோருகிறது.

https://www.bbc.com/tamil/sri-lanka-45486042

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.