Jump to content

வரதட்சிணை புகார்களில் உடனடி கைது நடவடிக்கை மேற்கொள்ளலாம்: உச்ச நீதிமன்றம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வரதட்சிணை புகார்களில் உடனடி கைது நடவடிக்கை மேற்கொள்ளலாம்: உச்ச நீதிமன்றம்

supreme-court-babri-masjid.jpg

 

"வரதட்சிணை புகார்களில், காவல்துறையினர் உடனடியாக கைது நடவடிக்கை மேற்கொள்ளலாம்" என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முன்னதாக, வரதட்சிணை புகார்களை குடும்ப நல குழுக்கள் விசாரித்த பிறகே, காவல்துறையினர் கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், அதனை 3 நீதிபதிகள் அமர்வு தற்போது மாற்றியுள்ளது.

வரதட்சிணை புகாருக்கு ஆளாகும் கணவர், அவரது குடும்பத்தினரை, காவல்துறையினர் உடனடியாக கைது செய்வதற்கு, இந்திய தண்டனையியல் சட்டத்தின் 498ஏ பிரிவு வழிவகை செய்கிறது. இந்தப் பிரிவு தவறாக பயன்படுத்தப்படுவதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு மீது உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு கடந்த ஆண்டு ஜூலை 27-இல் உத்தரவு பிறப்பித்தது.

அப்போது, 498ஏ பிரிவு தவறாக பயன்படுத்தப்படுவதாக கவலை தெரிவித்த நீதிபதிகள், வரதட்சிணை புகார்களை விசாரிக்க குடும்ப நலக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்; அந்த குழுக்களின் அறிக்கை கிடைக்கப் பெறும் வரை காவல்துறையினர் கைது நடவடிக்கையை மேற்கொள்ளக் கூடாது என்று உத்தரவிட்டனர். இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி உச்சமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுக்கள் மீது பதிலளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம், தேசிய மகளிர் ஆணையம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற விசாரணையின்போது, பெண்களுக்கான நீதியை உறுதி செய்ய வேண்டிய அதே தருணத்தில், ஆண்களுக்கான உரிமையையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது' என்று தெரிவித்த நீதிபதிகள், தீர்ப்பை செப்டம்பர் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், வரதட்சிணை புகார்களை விசாரிக்க குடும்ப நல குழுக்களை அமைக்க தேவையில்லை; புகாருக்கு ஆளானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டிய அவசியமிருந்தால், காவல்துறையினர் அந்த நடவடிக்கையை மேற்கொள்ளலாம்' என்று தெரிவித்தனர்.

அதேவேளையில், வரதட்சிணை வழக்குகளில் முன்ஜாமீன் பெறுவதற்குரிய சட்டப் பிரிவு பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டனர். 498ஏ சட்டப் பிரிவு தவறாக பயன்படுத்தப்படும் புகார் குறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், சட்டங்களில் குறைபாடுகள் இருப்பின் அதனை அரசமைப்புச் சட்டரீதியாக சரி செய்ய வேண்டியது நீதிமன்றங்கள் அல்ல; நாடாளுமன்றம்தான்' என்றனர்.

தினமணி

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.