Jump to content

‘அக்கா ஒரு நிமிஷம், அந்த பெட்ரோல் விலை’ : தமிழிசையிடம் கேள்வி கேட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு தர்ம அடி?-


Recommended Posts

‘அக்கா ஒரு நிமிஷம், அந்த பெட்ரோல் விலை’ : தமிழிசையிடம் கேள்வி கேட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு தர்ம அடி?- வைரலாகும் விவகாரம்

 

 

 
download%204

தாக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர், தமிழிசை பிரஸ்மீட்

 தமிழிசை பேட்டி அளிக்கும்போது பெட்ரோல் விலை தினமும் ஏறுவதாக தெரிவித்த ஆட்டோ டிரைவர் பாஜக ஆட்களால் இழுத்துச் செல்லப்பட்டு தாக்கப்பட்டதாக வெளியான தகவல் ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் பெட்ரோல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களுக்கு அளித்தது. இதனால் தினம் தினம் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்து வருகிறது.

 

இதனால் விலைவாசியும் கடுமையாக உயர்ந்து வருகிறது. பெட்ரோல் விலை உயர்வு குறித்து பாஜகவை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வரும் வேளையில் பிரதமர் மோடி அதுகுறித்து வாய் திறக்காமல் மவுனமாக இருந்து வருகிறார்.

மறுபுறம் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது குறித்து எதுவும் செய்ய முடியாது. அது எங்கள் கையில் இல்லை என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, எனக்கு அரசாங்கம் இலவசமாக பெட்ரோலைத் தருவதால் பெட்ரோல் விலை உயர்வு என்னைப் பாதிக்கவில்லை என்று தெரிவித்தார். பின்னர் சர்ச்சையானவுடன் மன்னிப்பு கேட்டார்.

ராஜஸ்தான் மாநில பாஜக அமைச்சர் மக்கள் பெட்ரோல் பயன்பாட்டை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று பேட்டி அளித்தார்.

இவ்வாறு பெட்ரோல் டீசல் உயர்வு மக்களைப் பாதிப்பதைப் பற்றி கவலைப்படாமல் எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் பாஜக அமைச்சர்கள், தலைவர்கள் விமர்சிக்கப்பட்டு வரும் வேளையில் மற்றொரு சமபவம் நேற்று சென்னையில் நடந்துள்ளது.

விநாயகர் சிலை ஊர்வலம் குறித்த விழாவில் சைதாப்பேட்டையில் தமிழிசை கலந்துகொண்டார். அப்போது அவர் பேட்டி அளிக்கும்போது பின்னால் நின்ற ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பவ்யமாக “அக்கா ஒரு நிமிடம் பெட்ரோல் விலை டெய்லி ஏறுதுக்கா” என தனது ஆதங்கத்தைத் தெரிவித்தார்.

அப்போது இதைக்கேட்ட தமிழிசை, அவரது பக்கம்கூட திரும்பாமல் சிரித்தபடி இருந்தார். அப்போது அவரைப் பாஜக நிர்வாகிகள் கழுத்தில் கையைப்போட்டு இழுத்தனர். பின்னர் அவரை வெளியே இழுத்துச் சென்றவர்கள் அவரைத் தாக்கியதாக செய்தி வெளியானது.

தற்போது இந்தக் காட்சி ட்விட்டர், வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அக்கா ஒரு நிமிஷம் என பலரும் விமர்சனம் செய்கின்றனர். ஆட்டோ ஓட்டுநர் அர்பன் நக்சல் ஆக மாற்றப்படுவார் எனவும், வன்முறை கூடாது என்று தமிழிசை கூறுகிறார், ஆனால் அந்த மனிதரை அப்படி இழுத்துச் செல்கின்றனர் என்றும் நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.

இப்படித்தான் இவர்கள் நடப்பார்கள், இதுதான் இவர்கள் பாதை என்று ஒருவர் விமர்சித்துள்ளார். “பாஜகவுக்கு விமர்சனம் என்றால் பிடிக்காது. ஏனென்றால் அவர்களிடம் இதற்கு பதிலே கிடையாது. இவர்களுக்கு நாட்டை ஆளவே தெரியாது. அனைத்தும் ஜூம்லா தான். 2019-ல் அனைத்துக்கும் முடிவு வருகிறது” என்று ஒருவர் விமர்சித்துள்ளார்.

பாஜக ஆதரவு நெட்டிசன் ஒருவர் “கேட்டது தவறில்லை... இடம் பொருள் அறிந்து கேட்க வேண்டியதைக் கேட்க வேண்டியவர்களிடம் கேட்க வேண்டும் எதையும்.. பிரபலமானவர்களை பொது இடத்தில் சீண்டுவதே வேலையாகிப் போய்விட்டது... இதை தொடர்கதையாக விடாமல் தண்டிக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

ஆட்டோ ஓட்டுநர் பொய்யொன்றும் சொல்லவில்லையே, இவர்கள் அவருக்கு கட்டாயம் பதிலளித்தே ஆகவேண்டும் என ஒருவர் பதிவிட்டுள்ளார். ஹெச்.ராஜா பிரச்சினை ஒருபுறம் என்றால், தமிழிசையிடம் கேள்வி எழுப்பிய ஆட்டோ ஓட்டுநர் தாக்கப்பட்டது தற்போது வைரலாகி வருகிறது.

https://tamil.thehindu.com/tamilnadu/article24967625.ece?utm_source=HP-RT&utm_medium=hprt-most-read

Link to post
Share on other sites

`நல்லா இருக்கீங்களா அப்பா..!' - தாக்கப்பட்ட ஆட்டோ டிரைவரிடம் நலம் விசாரித்த தமிழிசை

3329_thumb.jpg
 

`சாமானியர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் என்னைப் போன்றவர்கள் அரசியலில் இருக்கிறார்கள்’’ என பா.ஜ.க-வின் தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

ஆட்டோ டிரைவர் - தமிழிசை

சைதாப்பேட்டையில் நேற்றுமுன்தினம் நடந்த விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தார் தமிழிசை. அப்போது தமிழிசை பின்னால் நின்றுகொண்டிருந்த ஆட்டோ டிரைவர் கதிர் என்பவர், `பெட்ரோல் விலை இப்படி உயர்ந்துகொண்டே போகிறதே!' என்று கேள்வி எழுப்பவே, ஆட்டோ டிரைவரின் கேள்வியைக் கேட்டும் கேட்காததுபோல தமிழிசை இருந்தார். ஆட்டோ டிரைவர் விடவில்லை. மீண்டும் அவர் கேள்வி எழுப்ப, தமிழிசையின் அருகில் இருந்த பா.ஜ.க தொண்டர்கள் வயதான அந்த ஆட்டோ டிரைவரை அப்புறப்படுத்தித் தாக்கினர். தமிழிசை இதைக் கண்டுகொள்ளாமல் வெளியேறினார். தாக்கப்பட்ட ஆட்டோ டிரைவரோ, `தினசரி வருமானத்தில் பெரும்பகுதி பெட்ரோலுக்கே செலவழிக்க வேண்டியதா இருக்கிறது. பெட்ரோல் விலை குறித்து கேட்டால் வயதானவன் என்றுகூட பார்க்காமல் அடிக்கிறார்கள்" எனப் புகார் கூறினார். இது சர்ச்சையாக மாறியது. பலரும் தமிழிசைக்கு எதிராகக் கண்டனங்கள் தெரிவித்தனர்.

 

 

இந்த நிலையில், தாக்கப்பட்டதாகக் கூறப்பட்ட ஆட்டோ டிரைவர் கதிரை தமிழிசை இன்று நேரில் சந்தித்தார். இதன்பின் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது, ``ஆட்டோ டிரைவர் கதிரை பா.ஜ.க தொண்டர்கள் தாக்கியதாகத் தவறாக வதந்தி பரப்பப்பட்டுள்ளது. அவரை யாரும் தாக்கவில்லை. அப்புறப்படுத்தவே செய்தார்கள். தவறாக வதந்தி பரவியதைத் தொடர்ந்து ஆட்டோ டிரைவர் கதிரின் வீட்டுக்கு இன்றைக்கு நான் சென்றேன். நட்புறவு பாராட்டவே அவரது வீட்டுக்குச் சென்றேன். அவரிடம் சம்பவம் குறித்துப் பேசினேன். 

 

 

அதற்கு, `நீங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டேன். அதுக்கு நீங்கள் சிரித்துக்கொண்டே பதிலளித்தீர்கள்' எனக் கதிர் தெரிவித்தார். கதிரின் குழந்தைகளிடம் நான் பேசிவிட்டுத்தான் வந்தேன். ஒருவரை அடிக்க வைத்துச் சிரிக்கும் அளவுக்கு நாங்கள் ஒன்றும் கொடுங்கோலாக அரசியலில் பணிபுரியவில்லை. கதிர் கேட்ட கேள்வியை நான் ஸ்போர்ட்டிவாகவே எடுத்துக்கொண்டேன். எதற்கெடுத்தாலும் சிலர், பா.ஜ.க-வையே குறை சொல்கிறார்கள். சாமானியர்களுக்கு எதிரான கட்சி பா.ஜ.க என்பதுபோல அவதூறு பரப்பப்படுகிறது. சாமானியர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் என்னைப் போன்றவர்கள் அரசியலில் இருக்கிறார்கள்" எனக் கூறினார்.

 

முன்னதாக கதிர் வீட்டுக்குச் சென்ற வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் தமிழிசை. அதில், ``நல்லா இருக்கீங்களா அப்பா" என அந்த ஆட்டோ டிரைவர் கதிரிடம் நலம் விசாரிக்கிறார். தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு இனிப்புகளை வழங்கி கதிருடன் அவர் பேசுகிறார். 

https://www.vikatan.com/news/tamilnadu/137269-tamilisai-visits-the-auto-driver-kathirs-house.html

Link to post
Share on other sites
  • 4 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.