Sign in to follow this  
நவீனன்

மஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா?

Recommended Posts

மஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா?
கே. சஞ்சயன் /

அண்மையில், மஹிந்த ராஜபக்‌ஷ இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம் வெற்றியளித்திருப்பதாக, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரமுகர்களும் கூறிக் கொண்டிருக்கின்றனர்.   

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஹுல் காந்தியுடனான சந்திப்பு என்பன, ஒன்றிணைந்த எதிரணியை உற்சாகப்படுத்தி இருக்கின்றன.   

image_762206914d.jpg

“புதுடெல்லியில் இந்திய அரசாங்கம், மஹிந்தவுக்கு இராஜ உபசாரத்தை அளித்தது. மஹிந்தவின் ‘கட்அவுட்’கள் கட்டப்பட்டு, வரவேற்பு அளிக்கப்பட்டது” என்று பெருமிதம் வெளியிட்டிருந்தார் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ்.

“புதுடெல்லியுடன் இருந்த தவறான புரிதல்கள் களையப்பட்டு, சுமூகமான நிலை ஏற்பட்டுள்ளது” என்று கூறியிருக்கிறார் கெஹலிய ரம்புக்வெல. “இந்தியாவுடன் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கியுள்ளன. விரைவில், இந்த அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு, இந்தியா உதவும்” என்று குட்டையைக் குழப்பி விட்டிருக்கிறார் குமார வெல்கம.   

விரைவில் இலங்கை அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு, இந்தியா ஆதரவு அளிக்கும் என்று குமார வெல்கம போன்ற மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், கருத்துகளை வெளிப்படுத்தியிருப்பது தான் இங்கு ஆச்சரியம்.  

மஹிந்த ராஜபக்‌ஷ, புதுடெல்லியில் ‘த ஹிந்து’வுக்கு அளித்திருந்த செவ்வியில், “எந்தவொரு வெளித் தரப்பினரும், மற்றுமொரு நாட்டின் தேர்தல்களில் தலையிடக் கூடாது என்பதே எனது கருத்து. யாரை அதிகாரத்துக்குக் கொண்டு வர வேண்டும் என்பதை, அந்நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும். இது அந்த நாட்டின் உள்விவகாரம்” என்று குறிப்பிட்டிருந்தார்.  

ஆனால், அடுத்த சில நாட்களிலேயே, அவரது தரப்பில் உள்ள ஒரு முக்கிய பிரமுகர், ஆட்சியைக் கவிழ்க்க, இந்தியா உதவும் என்று கூறுகிறார். அவ்வாறாயின் மஹிந்த ராஜபக்‌ஷ, புதுடெல்லிக்குப் போய், இதற்குத் தான் ஆதரவு கோரினாரா என்ற கேள்வி எழுகிறது.  

அதேசமயம், தாம் ஆட்சியைப் பிடிப்பதற்கு, இந்தியாவின் உதவியைப் பெற்றுக் கொள்வதை, தவறு என்று அவர்கள் கருதவில்லை என்பதையும் இது உணர்த்தியிருக்கிறது. மஹிந்த ராஜபக்‌ஷவின் இந்தியப் பயணம் அவருக்கான புதிய பாதைகளை, திறந்து விடும் என்ற எதிர்பார்ப்புகள் இருந்தாலும், அவரது தரப்பில் உள்ளவர்கள், அளவுக்கு மிஞ்சி உளறிக் கொட்டி, எல்லாவற்றையும் நாசப்படுத்தி விடுவார்கள் போலவே தெரிகிறது.  

ஏனென்றால், 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், தம்மை இந்தியப் புலனாய்வு அமைப்பான ‘றோ’ தோற்கடித்து விட்டது என்று மஹிந்த ராஜபக்‌ஷ குற்றம்சாட்டிய போது, அதை இந்திய அரசாங்கம் இரசிக்கவில்லை.  

அதே செவ்வியில் மஹிந்த ராஜபக்‌ஷ, தாம் இந்திய அரசாங்கத்தைக் குற்றம்சாட்டவில்லை என்றும், நரேந்திர மோடி அரசாங்கம், இப்போது தான் பதவிக்கு வந்து, ஆறேழு மாதங்களாகிறது. அவர்களுக்கு இது தெரியுமோ தெரியாது என்றும் நழுவப் பார்த்திருந்தார்.  

தம்மை இந்தியப் புலனாய்வு அமைப்புத்தான் தோற்கடித்து விட்டது என்ற மஹிந்த ராஜபக்‌ஷவின் குற்றச்சாட்டு, இந்தியாவை வெறுப்புடனேயே நோக்க வைத்தது. அதைவிட மோசம் என்னவென்றால், ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்துக்குத் தெரியாமல், இந்தியப் புலனாய்வுப் பிரிவு செயற்படுகிறது என்ற தொனியில் மஹிந்த வெளியிட்ட கருத்து, புதுடெல்லிக்கு இன்னும் சினமூட்டியது.  

அமெரிக்க - சோவியத் ஒன்றியம் ஆகிய நாடுகளின் பனிப்போர் காலத்தில், ஓர் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதும் அதற்கு வெளிநாடுகள் உதவுவதும் சர்வ சாதாரணம். ஆபிரிக்காவில், இலத்தீன் அமெரிக்க நாடுகளில், ஆசியாவில் ஆட்சியில் இருக்கும் அரசாங்கங்களைக் கவிழ்ப்பதற்கு, அமெரிக்கா ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.

அந்த நடவடிக்கைகள் எல்லாமே, ஜனநாயக ரீதியானவை என்று கூற முடியாது. இரகசிய இராணுவ நடவடிக்கைகள் மூலமும், இரகசிய இராணுவப் புரட்சிகளுக்கான உதவிகள் அளிக்கப்பட்டதன் மூலமும், ஆட்சிக் கவிழ்ப்புகள் அரங்கேற்றப்பட்டன.  

பனிப்போர்க் காலத்தில், தமக்குச் சாதகமான அரசாங்களை உருவாக்கிக் கொள்வது, முக்கியமான ஓர் உத்தியாக வல்லரசுகளிடம் காணப்பட்டது.  

இவ்வாறாகக் கடந்த நூற்றாண்டு, புதிய தேசங்களின் பிறப்புக்கு சாதகமானதாக இருந்தது மாத்திரமன்றி, வெளிநாட்டுத் தலையீடுகளின் மூலம், ஆட்சிகளை மாற்றிக் கொள்வதும் கூட, ஒருவித அறமாகவே பார்க்கப்பட்டது,  

ஆனால், இந்த நூற்றாண்டில் நிலைமைகள் அப்படியில்லை. புதிய தேசங்களின் உருவாக்கம், கிட்டத்தட்ட சாத்தியமே இல்லாதளவுக்கு நிலைமைகள் மாறியிருக்கின்றன. அதைவிட, பிறநாடுகளின் உள்விவகாரங்களில், மற்றொரு நாடு தலையீடு செய்வது, அநாகரிகமாகவும் அவமானமாகவும் பார்க்கப்படுகிறது.  

இந்தியாவைப் பொறுத்தவரையில், ‘பிராந்தியத்தின் முதல்வன்’ என்ற நிலையில் இருப்பதை விரும்புகிறது. ஆனாலும், இந்தியா தனக்கென உருவாக்கி வைத்திருக்கின்ற ‘இமேஜ்’ அழிந்து போவதை, ஏற்கத் தயாராக இல்லை.  

அணிசேரா நாடாகத் தன்னைக் கூறிக் கொள்வதில், இந்தியா பெருமைப்படுவதாகக் காட்டிக்கொள்கிறது. அண்டை நாடுகளைக் கட்டுப்படுத்துவதில் ஆர்வம் கொண்டிருந்தாலும், அவற்றில் தலையீடு செய்வதில்லை என்று காட்டுவதில், இந்தியாவுக்கு அலாதியான விருப்பம்.  

இலங்கை, மாலைதீவு, நேபாளம், பங்களாதேஷ் என்று பல்வேறு நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில், இந்தியாவின் தலையீடுகள் இருந்தாலும், அதைப் பகிரங்கமாக ஒப்புக்கொள்ள இந்தியா தயாராக இல்லை.  

பிற நாடுகளின் உள்விவகாரங்களில், தலையிடாத கொள்கையைப் பின்பற்றுவதாக, சர்வதேச அரங்கில் இந்தியா காட்டிக் கொண்டு வந்துள்ள சூழலில், மஹிந்த ராஜபக்‌ஷ, திடீரென இந்தியாவே தம்மைப் பதவியில் இருந்து தூக்கியெறிந்தது என்று குற்றம்சாட்டியது, அதற்கு அதிர்ச்சியையே கொடுத்தது. அதற்காக இந்தியா மறுப்பு எதையும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.  

எது எவ்வாறாயினும், சர்வதேச அரங்கில், அயல்நாட்டு அரசாங்கத்தைத் தூக்கியெறியும் வல்லமை கொண்ட நாடாக இருக்கிறது என்று தாம் பார்க்கப்படுவதை, இந்தியா விரும்பவில்லை. ஒரு மென்வலு வல்லரசாக இருப்பதையே இந்தியா விரும்புகிறது.  

இப்போது மஹிந்த ராஜபக்‌ஷ, இந்தியா மீதான குற்றச்சாட்டுகளைக் கைவிட்டு விட்டு, அதைக் கடந்து செல்ல முனைகிறார். ஆனால், அவரது தரப்பிலுள்ளவர்களோ மீண்டும் இந்தியாவை எரிச்சலூட்டி இருக்கிறார்கள்.  

தற்போதைய அரசாங்கத்தைக் கவிழ்க்க, இந்தியா உதவும் என்று அவர்கள் வெளியிட்டிருக்கும் கருத்து, சர்வதேச அரங்கில், இந்தியாவுக்கு அவப்பெயரை ஏற்படுத்தக் கூடியதாகவே உள்ளது.  
இதில் இரண்டு பரிமாணங்கள் உள்ளன.  

பிறநாட்டு அரசாங்கங்களின் மீது, தலையிடும் கொள்கையை, இந்தியா இன்னமும் கடைப்பிடிக்கிறதா என்ற சந்தேகப் பார்வை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இது, முதலாவது.  

கொழும்பின் ஆட்சியை விரும்பியவாறு மாற்றிக் கொள்வதற்கு, கைப்பாவையாகப் பயன்படுத்தப்படும் அளவுக்கு, இந்தியாவின் தரம் தாழ்ந்து போய் விட்டதா என்ற பார்வை இரண்டாவது.  

இந்த இரண்டு கோணங்களில் இருந்தும் பார்க்கின்ற சர்வதேச சமூகம், இந்தியாவைக் குறைத்து மதிப்பிடவே முற்படும். அத்தகையதொரு நிலைக்கு இந்தியாவைத் தள்ளிவிட்டிருக்கிறது மஹிந்த தரப்பு.  

2015இல் இந்தியாதான் ஆட்சியைக் கவிழ்த்தது என்று கூறியும், இப்போது, தற்போதைய அரசாங்கத்தைக் கவிழ்க்க இந்தியா உதவப் போகிறது என்று கூறியும், இலங்கை விவகாரத்தில், ஜனநாயக அரசைக் கவிழ்க்கும் சக்தியாக, இந்தியாவை அறிமுகப்படுத்த முற்பட்டிருக்கிறது ஒன்றிணைந்த எதிரணி.  

இந்தியாவுடனான தவறான புரிதல்களுக்கு, மஹிந்த ராஜபக்‌ஷ முடிவுகட்டி விட்டு வந்திருக்கிறார் என்பது உண்மையானால், நிச்சயமாக அவரது தரப்பினர், இந்தியாவைச் சங்கடத்துக்குள்ளோ, சிக்கலுக்குள்ளோ மாட்டிவிட முற்பட்டிருக்க மாட்டார்கள்.  

‘இலங்கையில் அரசாங்கத்தைக் கவிழ்க்கப் போகிறோம்’ என்று, மஹிந்த அணி, பல கூத்துகளை நடத்தி முடித்து விட்டது. கடந்த மூன்று ஆண்டுகளாக அவர்கள் செய்த எந்த முயற்சியும் வெற்றிபெறவில்லை.  

‘மீண்டும் ஆட்சியைக் கவிழ்ப்போம்’ என்று கூறினால், அது எடுபடாது என்பதால், இந்தியாவின் உதவியுடன் ஆட்சியைக் கவிழ்ப்போம் என்று கூறியிருக்கலாம். ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு இந்தியா தடையாக இருக்காது என்று கூறுவது வேறு; இந்தியாவின் உதவியுடன் ஆட்சியைக் கவிழ்ப்பது என்று கூறுவது வேறு.  

மஹிந்த ராஜபக்‌ஷவும் அவரது பரிவாரங்களும், தாமே உண்மையான தேசியவாதிகள் என்று காட்டிக் கொள்பவர்கள். நாட்டுக்கு விசுவாசமானவர்கள் தாம்தான் என்று கூறிக் கொள்பவர்கள். அவர்களால் எப்படி, ஆட்சிக் கவிழ்ப்புக்கு, இந்தியாவின் ஆதரவைப் பெற முடிந்தது என்ற கேள்வி உள்ளது.  

ஒரு நாட்டின் உள்விவகாரங்களில், பிறிதொரு நாடு தலையீடு செய்வதை எதிர்த்துக் கொண்டே, ஆட்சிக் கவிழ்ப்புக்கு ஆதரவை, இந்தியாவிடம் போய் மஹிந்த கோரியிருந்தாரேயானால், அது அவரது பச்சோந்தித்தனத்தையே வெளிப்படுத்தும்.  

இந்தியாவுக்கும் மஹிந்தவுக்கும் இடையில் புதிய உறவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பது உண்மையோ - பொய்யோ, அது இரண்டு தரப்புகளுக்குமே சங்கடமான சூழ்நிலையையும் சேர்த்தே கொண்டு வந்திருக்கிறது என்பது தான் உண்மை.  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மஹிந்தவின்-தாளத்துக்கு-ஆடுமா-இந்தியா/91-222306

Share this post


Link to post
Share on other sites

இந்தியக்காரர் தம்மையே நம்புவதில்லை...

மஹிந்தவையா நம்ப போகிறார்கள்..

Share this post


Link to post
Share on other sites
Quote

மஹிந்த ராஜபக்‌ஷ, புதுடெல்லியில் ‘த ஹிந்து’வுக்கு அளித்திருந்த செவ்வியில், “எந்தவொரு வெளித் தரப்பினரும், மற்றுமொரு நாட்டின் தேர்தல்களில் தலையிடக் கூடாது என்பதே எனது கருத்து. யாரை அதிகாரத்துக்குக் கொண்டு வர வேண்டும் என்பதை, அந்நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும். இது அந்த நாட்டின் உள்விவகாரம்” என்று குறிப்பிட்டிருந்தார்.  

21.jpg

அது நடக்கவே நடக்காது

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this