Sign in to follow this  
நவீனன்

#HisChoice: இலக்கணம் மீறும் நவீன ஆண்களின் உண்மைக் கதைகள்

Recommended Posts

#HisChoice: இலக்கணம் மீறும் நவீன ஆண்களின் உண்மைக் கதைகள்

சுஷீலா சிங்பிபிசி செய்தியாளர்.

'பெண் என்பவள் பிறப்பதில்லை, விதைக்கப்படுகிறாள்' என்ற பிரபலமான வாசகம் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு பிரெஞ்சு தத்துவஞானி சிமோன் டி போவா எழுதிய மிகப் பிரபலமான 'தி செகண்ட் செக்ஸ்' என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புத்தகம், சரித்திரம் முழுவதும் பெண்கள் எப்படி அணுகப்படுகிறார்கள் என்பதை படம் பிடித்து காட்டுகிறது.

#HisChoice

சமூகத்திற்கும், அதன் தேவைகளுக்கும் போக்குகளுக்கும் ஏற்ப பெண்கள் தங்களை மாற்றிக் கொள்ளவும், வளைந்து கொடுக்கவும் வேண்டியிருப்பதை நாம் மறுக்கமுடியாது. பெண்கள் ஏன் மாறவேண்டும் என்பதற்காக எண்ணற்ற நியாயங்களும், கதைகளும், கற்பிதங்களும் சமூகத்தில் அங்கிங்கெனாதபடி எங்கும் விரவிக்கிடக்கின்றன.

புராணங்களும், இலக்கியங்களும் பெண்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும், ஆண் எப்படி இருந்தாலும் சரி, பெண் என்பவள் சட்ட- திட்டங்களுக்கும், வரையறைகளுக்குள்ளும் அடங்கி நடப்பது அவசியம் என்று போதிக்கின்றன.

கணவன் சத்யவான் இறந்ததும், மனைவி சாவித்திரி எமனுடன் போராடி கணவனின் உயிரை மீட்டுக் கொண்டுவந்தாள் என்னும் கதை இந்தியாவில் பிரபலமானது. இதுபோல் பல 'கற்புக்கரசிகளை' சரித்திரம் முழுவதும் உதாரணம் காட்ட முடியும். அவர்களை வணங்கி அந்த பாரம்பரியத்தை இன்றைய பெண்களுக்கும் நினைவூட்டும் சம்பிரதாயங்கள் இன்றும் தொடர்கின்றன.

ஆனால், இதுபோன்ற 'கற்புக்கரசர்கள்' வேண்டாம், மனைவியின் உயிரை மீட்ட கணவர்களின் ஒரு உதாரணத்தைக்கூட நம்மால் நினைவுபடுத்த முடியவில்லை. வரலாற்றின் ஏடுகளிலும் அதுபோன்ற பதிவுகள் காணக்கிடைக்கவில்லை.

சாவித்ரியைப் போல கணவர்களுக்கு ஏன் உணர்வுகள் பொங்குவதில்லை?

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பெண்கள், ஆண்களுக்கு 'பாரமாக' இருக்கிறார்கள். எந்தவொரு ஆணாவது மனைவி இறந்ததும் உடன்கட்டை ஏறிய கதையை கேட்டதுண்டா? ஏனெனில் எல்லா நியாயங்களும், நீதிநெறிகளும், சட்ட- திட்டங்களும் பெண்களுக்கானது. அவற்றை உருவாக்கியவர்கள் ஆண்களே. இவை பெண்களை அழுத்தி வைப்பதற்காக உருவாக்கப்பட்டவை.

இந்தக் கதைகளில் பெண், ஆணை மீட்டு அழைத்துவருவாள். ஆனால் ஆண்கள், பெண்களை மீட்டு அழைத்து வருவதுமில்லை, அப்படி அத்திப் பூத்தாற்போல் ஒரு சம்பவம் நடைபெற்றாலும், சலவைக்காரரின் ஒற்றை வார்த்தையை மட்டும் கேட்கும் ஏகபத்தினி விரதனான கணவன், கற்புக்கரசி என்று சொல்லப்படும் மனைவியை காட்டுக்கு அனுப்பிவிடுவார்.

இதுபோன்ற 'விதிமுறைகள்' இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள பெண்களுக்கும் உரித்தானது. பெண்களுக்கு எதிரான 'சதி'யை எதிர்த்து போராடும் இன்றைய பெண்கள், தங்கள் விருப்பத்திற்கு தைரியமாக வாழும் உண்மைக் கதைகளை பிபிசியின் #HerChoice என்ற சிறப்புத் தொடரில் வெளிகொணர்ந்தோம்.

#HerChoice தொடர் வெளியானபோது, வாசகர்களும், அலுவலகத்தில் சக ஆண் நண்பர்களும் இதைப் பற்றி விரிவான விவாதங்களை மேற்கொண்டனர். சரி, பெண்களுக்கு மட்டும்தான் சமூக அழுத்தங்கள் உள்ளனவா? "எங்களுடைய விருப்பங்களையும், மாறிவரும் இன்றைய நவீன யுகத்தில் நாங்கள் சந்திக்கும் பிரச்சனைகளைப் பற்றியும் பேசுவது யார்? ஆண் என்றல் இப்படித்தான் என்று ஒரு வரையறைக்குள் இன்றைய ஆண்களை அடக்கிவிட முடியுமா? என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன".

இது போன்ற அடர்த்தியான கேள்விகளை பிபிசி ஆசிரியர் குழுக் கூட்டத்தில் விவாதித்தோம். யாரையும் எந்த வரையறைக்குள்ளும் அடைத்துவிடக்கூடாது; நவீன ஆண்களின் வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் மாறுதல்களை பிரதிபலிக்கும் உண்மைக் கதைகளை வாசகர்கள் முன் வைப்பது என்று முடிவு செய்தோம். #HisChoice சிறப்புத் தொடர் உருவானதன் பின்னணியில் இருப்பது #HerChoice எழுப்பிய தாக்கங்களே.

இத்தொடரை காலமாறுதல்களின் ஒரு சிறிய குறியீடாகவே நாங்கள் உணர்கிறோம். ஆனால் யாருடைய வாழ்க்கையையும், சரி- தவறு என்று சொல்வதோ, பிரதிநிதித்துவப்படுத்துவதோ இத்தொடரின் நோக்கமல்ல.

ஆனால் கதைமாந்தர்களின் வாழ்க்கையின் சிக்கல்களை தெரிந்துகொண்ட பிறகு, அதை அவர்களுடைய கோணத்தில் இருந்து புரிந்துக் கொண்ட பிறகு, சரி-தவறு, நியாயம்-அநியாயம் என்ற முடிவை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்.

#HisChoice சிறப்புத் தொடரில் ஆண்களின் உணர்வுச் சிக்கல், உடல் சிக்கல் மற்றும் சமூக ரீதியான சிக்கல் ஆகியவற்றை, அவற்றின் ஆழத்தை, தாக்கத்தை புரிந்து வெளிப்படுத்துகிறோம்.

#HisChoice தொடரில் வெளியாகவிருக்கும் உண்மைக் கதைகள் இதுவரை கேட்கப்படாத, கேள்விப்படாத கதைகளாக இருக்கலாம், உங்களுக்குள் அதிர்வை ஏற்படுத்தி, மாற்றத்திற்கான விதையை விதைக்கலாம்.

#HisChoice
 • வீட்டு வேலையை நான் பார்த்துக் கொள்கிறேன்… நீ வேலைக்குப் போய் சம்பாதித்து வா என்று மனைவியை கம்பீரமாக வேலைக்கு அனுப்பும் கணவன்…
 • அதிகப் பணம் தேவை என்பதற்காக 'பாலியல்' தொழிலில் ஈடுபடும், நல்ல வேலையில் இருக்கும் ஒரு பட்டதாரி இளைஞனின் உண்மைக் கதை...
 • உரிய வயதில் திருமணம் நடைபெறவேண்டும், என்பது பெண்கள் மட்டுமே எதிர்கொண்ட பிரச்சனை. இது இன்று ஆண்களும் எதிர்கொள்ளும் சவால். மெத்தப் படித்து, நல்ல வேலையில் இருந்தும் திருமணமாகாத தமிழ்நாட்டைச் சேர்ந்த 35 வயது ஆணின் கதை…
 • மருதாணி வரைவதில் சிறுவயது முதல் இருந்த காதலை தொழிலாக மாற்றிக் கொண்ட ஆண் எதிர்கொண்ட சவால்கள்…
 • கட்டுப்பாடான குடும்பம். நண்பர்களுக்குத் திருமணமாகிறது, ஆனால் தனக்கு மட்டும் திருமணமாகவில்லை என்ற நிலையில் இயல்பான பாலியல் உணர்வுகளை பாலியல் தொழிலாளிகளுடன் இணைந்து எதிர்கொண்ட குஜராத் மாநில ஆணின் கதை...
 • முதல் காதலை மறக்கவே முடியாது, ஆனால் காதலித்த அண்டை வீட்டுப் பெண், பெண்ணல்ல என்று தெரிய வந்தபிறகு காதலனின் எதிர்வினை….
#HisChoice
 • பத்திரிகையில் ஒரு விளம்பரத்தை பார்த்து, இந்த உதவியை செய்தால் என்ன தவறு என்ன என்று நினைக்கும் இளைஞனின் கதை. ஆனால் அந்த உதவியைப் பற்றி காதலியிடமோ அல்லது மனைவியிடமோ எப்போதுமே சொல்லக்கூடாது என்று விரும்பும் ஆண்…
 • காதல் திருமணம். அழகான குழந்தை… மணமுறிவு… மனைவி மறுமணம். ஆனால், மகளுக்காக மறுமணம் செய்யாமல் இருக்கும் தாயுமானவனின் கதை…
 • பாலியல் வன்முறை சம்பவங்கள் நடக்கும் போதெல்லாம், பாதிக்கப்பட்ட பெண்ணே குற்றம் சாட்டப்படுகிறார். குழந்தைகளை வளர்க்கும்போதே பெண்களை மதிக்கவேண்டும், சரி எது, தவறு எது என்று ஆண் குழந்தைக்கும் சொல்லி வளர்க்கவேண்டியது பெற்றோரின் கடமையல்லவா? இதுபற்றி ஒன்றரை வயது குழந்தையின் தந்தையின் மனோபாவம்…
 • நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு அவரைவிட வயது குறைந்த நிக் ஜோனாசுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றபோது, சிலர் வாழ்த்து தெரிவித்தால், பலர் ஏன் அதை விமர்சிக்கிறார்கள்? திருமண உறவில் ஆணின் வயது பெண்ணை விட அதிகமாக இருக்கவேண்டியது கட்டாயமா? இதைப்பற்றிய தனது வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் ஆண்….

போன்ற உண்மைக் கதைகள் கொண்ட பிபிசியின் #HisChoice சிறப்புத் தொடர், வார இறுதி நாட்களில் வெளியாகும்.

இந்த சிறப்புத் தொடர் உங்களை சிந்திக்கத் தூண்டும் ஓர் ஆக்கபூர்வமான தொடர். மற்றவர்களை பார்க்கும் உங்கள் கோணத்தை மாற்ற உதவும் தொடர் என்று உறுதியாக கூறுகிறேன்.

பிபிசியின் #HisChoice இந்திய கணவர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மைக் கதைகள்.

இவை 'நவீன இந்திய ஆண்கள்' பற்றியும், அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், சவால்கள், அவர்களின் விருப்பங்கள், தெரிவுகள், அவர்களை மற்றவர்கள் எப்படி கையாள்கிறார்கள் என்பவற்றைப் பற்றிய ஒரு புதிய பார்வையைக் கொடுக்கும்.

https://www.bbc.com/tamil/india-45603408

Share this post


Link to post
Share on other sites

"மனைவி வேலைக்கு போகிறாள், நான் வீட்டைப் பராமரிக்கிறேன்" - ஓர் இல்லத்தரசனின் கதை #HisChoice

#HisChoice

என் மனைவியின் சகோதரியின் திருமணத்திற்காக மாமியார் வீட்டிற்கு சென்றிருந்தோம். மனைவி திருமண கொண்டாட்டங்களிலும், ஆடல் பாடல்களிலும் ஈடுபட்டிருந்தாள்.

மகள் என்னுடனே ஒட்டிக் கொண்டிருந்தாள். ஏனென்றால் அவள் எப்போதும் என்கூடவே இருப்பாள், அவளுக்கு தேவையான அனைத்தையும் நானே செய்வேன்.

நாங்கள் சிரித்து பேசிக் கொண்டிருந்தோம். என் மகளின் டயாப்பர் ஈரமாகிவிட்டது. அதை மாற்றி சுத்தப்படுத்துவதற்காக மகளுடன் நான் கழிவறைக்கு சென்றபோது, என் மாமியார் என்னைத் தடுத்தார்.

என்னை தனியாக அழைத்துச் சென்று, நீ இந்த வீட்டின் மருமகன், கூடியிருக்கும் சொந்தக்காரர்கள் தவறாக நினைப்பார்கள். சோனாவை கூப்பிடுகிறேன், அவள் குழந்தையை கழுவிவிட்டு டயாப்பர் மாற்றட்டும் என்று சொன்னதுடன், என் மனைவிக்கு குரல் கொடுத்தார்.

இதுவும் என்னுடைய வேலைதான், நான் எப்போதும் செய்வதுதான் என்று சொல்வதற்குள் அவர் என் மனைவியை அழைத்து, போய் குழந்தையை சுத்தம் செய் என்று சொல்லிவிட்டார்.

நானும் என் மனைவியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம். நான் வீட்டில் எல்லா வேலைகளையும் பார்ப்பது ஒன்றும் புதிதல்லவே? நான் ஹவுஸ்-ஹஸ்பண்ட் என்பது எனது மாமியாருக்கு தெரியும், பிறகு ஏன் அவர் இப்படி சொல்கிறார் என்பதுதான் எங்களுக்கு வியப்பாக இருந்தது.

ஆனால் வீட்டில் உறவினர்கள் இருப்பதால் நான் இந்த வேலையை செய்வது மாமியாருக்கு அவமானமாக இருந்திருக்கலாம். பலரின் முகத்தில் எள்ளல் சிரிப்பு இருந்ததை கவனித்தேன். இதுவும் எனக்கு புதிதல்ல, திருமணத்திற்கு வந்திருந்தவர்கள், இவன் ஹவுஸ் ஹஸ்பண்ட் என்று எனது காதுபடவே நையாண்டித் தொனியில் பேசியதும் எனக்கு புதிதல்ல.

நான் ஹவுஸ் ஹஸ்பண்ட் என்பது உண்மையாக இருந்தாலும், அதைப் பற்றி யாரும் பேசக்கூடாது என்பதுதான் என் மாமனார் மாமியாரின் கவலை.

ஒரு விஷயம் உங்களுக்கு அவமானம் தருவதாக இருந்தால், அதை மீண்டும் மீண்டும் பேசி உங்களை குத்தி பேசி, கேலி செய்வதுதான் நம் மக்களின் பழக்கம் என்பதை நான் நன்றாகவே அறிவேன்.

ஆனால், ஒரு விஷயத்தில் நான் தெளிவாகவே இருந்தேன். நான் தேர்ந்தெடுத்தது தவறான விஷயம் அல்ல, எனவே என்னுடைய நிலைப்பாட்டை ஒருபோதும் மாற்றிக் கொள்ளப்போவதில்லை என்ற உறுதியுடன் இருந்தேன்.

Presentational grey line

பிபிசியின் #HisChoice இந்திய கணவர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மைக் கதைகள்.

இவை 'நவீன இந்திய ஆண்கள்' பற்றியும், அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், சவால்கள், அவர்களின் விருப்பங்கள், தெரிவுகள், மற்றவர்கள் அவர்களை எப்படி கையாள்கிறார்கள் என்பதைப் பற்றிய ஒரு புதிய பார்வையைக் கொடுக்கும்.

Presentational grey line

ஒரே சாதியை சேர்ந்த பெண்ணை காதலித்து மணந்து கொண்டேன். யாருக்கு நல்ல வேலை கிடைக்கிறதோ அவர்கள் வேலைக்கு போகலாம் என்றும், மற்றவர் வீட்டை கவனித்துக் கொள்வது என்றும் நாங்கள் காதலித்த காலத்திலேயே முடிவு செய்துவிட்டோம்.

நான் வேலைக்கு சென்றுக் கொண்டிருந்தேன், ஆனால் மிகவும் நல்ல வேலை என்று சொல்ல முடியாது. ஆனால், என் மனைவிக்கு கிடைத்த வேலை அவளுக்கு பிடித்தமானதாகவும், முன்னேற்றம் கொடுக்கும் வேலையாகவும் இருந்தது. நல்ல சம்பளமும் கிடைத்தது.

எனவே எங்கள் முடிவுப்படியே அவள் வேலையை தொடர்ந்தாள், நான் வீட்டைப் பார்த்துக் கொண்டேன். வீட்டு வேலைக்காக நான் யாரையும் வைத்துக் கொள்ளவில்லை, எல்லா வேலைகளையும் நானே செய்கிறேன்.

வீட்டை சுத்தம் செய்வது, பெருக்கித் துடைப்பது, சமைப்பது, பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது, வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி வருவது, குழந்தையை பார்த்துக் கொள்வது என சகல வேலைகளையும் நான் செய்கிறேன்.

ஒரு வேளை நாங்கள் வீட்டு வேலைக்கு யாரையாவது வைக்க நினைத்தாலும்கூட, வேலைக்கு வருவதற்கு வேலையாட்கள் தயங்குவார்களோ என்னவோ?

என் வீட்டில் நான் கடைக்குட்டி, இரண்டு அண்ணன்கள் இருந்தாலும், அம்மாவுக்கு நான் உதவி செய்வேன். நான் சிறுவனாக இருந்தபோதே, என்னை 'பொம்பளைச்சட்டி' என்று எனது நண்பர்கள் கேலி செய்வார்கள். ஆனால் நான் அதைப் பற்றி கவலைப்படவில்லை. அம்மா ஒரு வேலையை செய்யும்போது, நாம் அதை செய்வதில் என்ன தவறு இருக்கிறது? எந்த வேலையாக இருந்தால் என்ன? என்ற எண்ணம் எனக்கு இருந்தது.

 

 

ஆனால், இன்று டெல்லியில் இருக்கும் படித்த நல்ல வேலைக்கு போகும் என் நண்பர்கள் கூட என்னுடைய 'வேலைத் தெரிவு' குறித்து புரிந்துக் கொள்கின்றனர். ஆனால் நான் என்னுடைய சொந்த ஊரான போபாலுக்கு போகும்போது, அங்கு கேலிப் பேச்சுகளை சந்திக்கிறேன்.

அரசியல் அல்லது பொது விஷயங்களைப் பற்றி அவர்கள் பேசும்போது நான் பேசும்போது, என்னை தடுத்து உனக்கு இதெல்லாம் புரியாது. இதெல்லாம் வீட்டு வேலை மாதிரி சுலபமானது இல்ல, என்று கூறி என்னை மட்டம் தட்டுவதாக நினைத்து மகிழ்ச்சியடைவார்கள்.

ஒருமுறை என் நண்பர்கள் ஏதோ பேசிக் கொண்டிருந்தபோது, நான் எனதை கருத்தை சொல்லத் தொடங்கியது, அதெல்லாம் எதுக்கு? போய் டீ போடு என்று ஏளனம் செய்தார்கள். நான் சிரித்துக் கொண்டே, டீ மட்டும் போதுமா? பக்கோடாவும் போடட்டுமா என்று எதிர்கேள்வி கேட்டேன்.

நான் எதிர்கொள்ளும் கேள்விகள், கேலிகள், நையாண்டி நக்கல்கள் அனைத்தையும் இயல்பாக எதிர்கொள்கிறேன். ஏனெனில் நான் செய்வது என்ன? அது சரியா தவறா என்ற ஆழமான புரிதல் எனக்கு இருக்கிறது.

நான் இயல்பாக இருந்தாலும், சில சமயம் எனக்குத் தெரிந்தவர்கள் என்னை சீண்டி வெறுப்பேற்றுவதற்காக போன் செய்து, இன்னைக்கு சமையலில் என்ன ஸ்பெஷல்? சாப்பிட வரட்டுமா என்று கேட்பார்கள்.

வீட்டு வேலைகளுக்கு யாரும் பெரிய அளவு மதிப்பு கொடுக்காததும், வீட்டு வேலை என்பது பெண்களுடையது, ஆண் என்றால் வெளியில் சென்று பணம் சம்பாதித்து வருவது என்ற நமது சமூகத்தின் எண்ணமும்தான் இதற்கு காரணம் என்பது எனக்கு தெரியும்.

நான் சோம்பேறியாக வீட்டில் உட்கார்ந்துக் கொண்டு, ஜாலியாக இருக்கிறேன் என்று நண்பர்கள் விமர்சிப்பார்கள். ஆனால் அது உண்மையல்ல, வீட்டு வேலைகள் மட்டுமல்ல, ஒரு ஆண் வெளியில் சென்று செய்ய வேண்டிய வேலைகள் அனைத்தையும் நான் செய்கிறேன்.

 

 

ஆனால் உண்மையில் வீட்டில் இருந்து வேலை செய்யும் ஒரு பெண்ணை எப்படி மட்டமாக நினைக்கிறார்கள் ஆண்கள் என்பதை என்னால் நன்றாக புரிந்துக் கொள்ள முடிகிறது. அதே மனோபாவம்தான் என்னை வசைபாடும்போதும் வெளிப்படுகிறது.

திருமணமாகி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மகள் பிறந்தாள். ஒரு குழந்தையை பராமரிப்பது என்பது முழு நேர வேலை, அதற்கு பொறுப்பும் பொறுமையும் அதிகம் தேவை.

வீட்டைப் பார்த்துக் கொள்வது, குழந்தையை குளிக்க வைப்பது, உணவு ஊட்டுவது, வெளியில் அழைத்துச் செல்வது என குழந்தையைப் பற்றிய எண்ணங்களே எனக்கு சுற்றிவருகிறது.

குழந்தையை பூங்காவிற்கு விளையாட அழைத்துச் செல்லும்போது முதலில் அங்கிருந்த தாய்மார்கள் என்னை பார்த்து சிரிப்பார்கள், என் மகளை கொஞ்சுவார்கள்.

ஆனால், சில நாட்களில் அவர்களின் பேசும் தொனியே மாறிவிட்டது. இன்றைக்கும் வந்திருக்கிறீர்களே? வேலைக்கு போகவில்லையா? உடல்நிலை சரியில்லையா? மனைவி எங்கே? இப்படி பலவிதமான கேள்விகளை கேட்டார்கள்.

என் மனைவி வேலைக்கு போகிறாள், நான் வீட்டில் இருந்து குடும்பப் பொறுப்புகளை கவனிக்கிறேன் என்றதும் கேள்விக்கணைகள் வேறுவிதமாய் மாறின.

#HisChoice

இவ்வளவு சிறிய குழந்தையை எப்படி பராமரிக்க முடிகிறது? உங்களை எல்லா வேலைகளையும் செய்ய வைக்க எப்படி மனைவிக்கு மனசு வருகிறது? குழந்தைக்கு உடை மாற்றிவிடுவது, டயாப்பர் மாற்றுவது, உணவு ஊட்டுவது எல்லாம் உங்களால் எப்படி செய்ய முடிகிறது என்பது போன்ற சந்தேகங்களுக்கு நான் பதிலளித்தாலும், அவை மீண்டும் மீண்டு எழுகின்றன.

நான் வேற்றுலகத்து மனிதன் என்பதைப் போல் பார்ப்பார்கள். அவர்களின் பேசுபொருளாய் எல்லா இடத்திலும் நான் மாறியிருப்பேன் என்பதும் எனக்கு தெரியும். வீட்டு வேலைகளை ஆண்கள் செய்வதை தரக்குறைவாக நினைப்பதும், பெண்களை மட்டமாக நினைப்பதும் ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும்தான் என்று புரிந்தது.

தன் கணவன் வீட்டு வேலைகளை செய்தால் நன்றாக இருக்கும் நினைக்கும் பெண்கள்கூட ஒரு அளவுக்கு மேல் அதை விரும்புவதில்லை என்பதையும் நான் நிதர்சனமாக உணர்ந்தேன்.

மதிப்பேயில்லாத வேலையை நான் செய்வதுபோலவும், எனக்கு திறமையில்லை என்றும், அதனால்தான் நான் வீட்டு வேலை செய்கிறேன் என்றும் சமூகத்தினரின் பொதுப்பார்வை என்னை சுட்டிக்காட்டுகிறது. 'பொறுப்பில்லாதவன்' என்று எனக்கு முத்திரை குத்துகின்றனர்.

திருமணம் ஆகி நாங்கள் தனிக்குடித்தனம் இருந்தபோது, வீட்டுக்கு பெற்றோர் வந்தபோது, வீட்டு வேலைகளை நான் செய்வதை பார்த்த அம்மாவுக்கு அது சுத்தமாக பிடிக்கவில்லை. அவர் அதை நேரடியாக சொல்லவில்லை என்றாலும், சாடைமாடையாக உணர்த்தினார். ஆனால் அம்மாவுக்கு நான் வீட்டு வேலைகளில் உதவி செய்யும்போது அவருக்கு அது தவறாக தெரியவில்லையே?

 

 

ஏன் வேலைக்கு போகவில்லை? வெளியில் போய் வேலைத் தேடினால்தானே கிடைக்கும்? வீட்டில் உட்கார்ந்துக் கொண்டு ஒன்றுக்கும் உதவாத வேலைகளை பார்த்தால் யார் உன்னை மதிப்பார்கள்? இப்படி பல கேள்விகள்...

என் தாயின் சங்கடத்தை புரிந்துக் கொண்டு என் மனைவியும் அப்போது வீட்டில் என்னுடன் சேர்ந்து வேலை செய்வாள். ஆனால் அவளால் இரண்டையும் சமாளிக்க முடியவில்லை, ஒரு பெண் வேலைக்கு சென்றால், வீட்டு வேலையும் பார்க்கவேண்டும் என்பது ஏன் கட்டாயப்படுத்தப்படுகிறது?

ஒரு பெண் வேலைக்கு செல்லத் தயாரானால் இரட்டை வேலை பார்க்க வேண்டியது அத்தியாவசியமா? ஓர் ஆணிடம் யாரும் அப்படி எதிர்பார்ப்பதில்லையே? எனவே வேலை செய்யவேண்டாம் என்று மனைவியை தடுத்துவிட்டேன். ஆனால் என் அம்மாவுக்கு அது பிடிக்கவில்லை என்றாலும், அந்த விஷயத்தில் அவர் என்றுமே வாய் பேசா மெளனிதான். அவர் எதாவது சொன்னால், அதற்கு நான் பொறுமையாக, ஏற்றுக் கொள்ளும் பதிலை சொல்லிவிடுவேன் என்று அவருக்கு தெரியும்.

இப்போது மகள் பள்ளிக்கு செல்கிறாள். வீட்டுப்பாடமாக 'ஃபேமிலி ட்ரீ' வரையச் சொல்லியிருந்தார்கள். நான் வெளிவேலையாக சென்றிருந்தேன். என் மனைவி மகளுக்கு உதவி செய்தாள். அதில் குடும்பத் தலைவன் என்ற இடத்தில் என்னுடைய பெயர் எழுதியிருந்தார்கள்.

வீட்டிற்கு வந்த நான் இதைப் பார்த்து, இது தவறு என்று சொன்னேன். வீட்டுக்கு தேவையான பணத்தை சம்பாதிக்கும் ஒருவர்தான் குடும்பத் தலைவர், எனவே என் மனைவி சோனாலியின் பெயர்தான் அந்த இடத்தில் இடம்பெறவேண்டும் என்று நான் சொன்னேன்.

ஆனால் அதற்கு சோனாலி ஒத்துக் கொள்ளவில்லை.

ஹெட் ஆஃப் த ஃபேமிலி என்பவர் ஆணோ அல்லது பெண்ணோ யார் வேண்டுமானாலும் இருக்கலாம். குடும்பத்திற்காக எல்லா வேலையும் செய்பவர்தான், குடும்பத்தலைவர், ஒரேயொரு வேலையை செய்பவர் அல்ல என்று கூறி, என் பெயரை மாற்ற மறுத்துவிட்டாள்.

#HisChoice

இறுதியாக, தனிமனிதனாக என்னைப் பற்றி சொல்லட்டுமா? நான் ஒரு ஃப்ரீலான்ஸ் எழுத்தாளர், எழுதுவதில் ஆர்வம் உண்டு. வேலைகளை முடித்துவிட்டு எழுத உட்கார்ந்துவிடுவேன். நான் எழுதிய இரண்டு புத்தகங்கள் வெளிவந்துவிட்டன, ஒன்று பதிப்பில் இருக்கிறது. ஆனால் இதுபற்றியெல்லாம் யாருக்கும் கவலையில்லை.

மாற்றங்கள் என்னும்போது, தொழில்நுட்பமாக இருந்தாலும் சரி, கல்வி, வேலை, இடம் மாறுதல் என பல்வேறு விஷயங்களை சுலபமாக ஏற்றுக் கொள்ளும் நமது இந்திய சமூகம், வீட்டு வேலை என்னும்போது மட்டும் சற்றே பின்தங்கி நிற்கிறது. இதிலும் மாற்றம் வரும். ஆனால் சற்று காலம் எடுக்கும்.

இன்று கூட்டுக் குடித்தனங்கள் அரிதாகிவிட்ட நிலையில், தனியாக வசிக்கும் தம்பதிகள் இருவரும் வேலைக்கு சென்றால் குடும்ப பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு என இருவரும் ஓடிக் கொண்டே இருக்கவேண்டியிருக்கிறது. மன அழுத்தம், மனச் சோர்வு என்று பலவித அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். அப்போது யாராவது ஒருவர் வேலை பார்க்கலாம், மற்றொருவர் வீட்டைப் பராமரிக்கலாம் என்று முடிவு செய்வதற்கான மாற்றங்கள் தொடங்கிவிட்டன. அது வெளிநாட்டில் சற்று அதிகமாகவும், நம் இந்திய சமூகத்தில் பெருநகரங்களில் மட்டும் சாத்தியமாகவும் ஆகியிருக்கலாம். ஆனால் மாற்றம் நிகழ்ந்தே தீரும்.

வேலை எதையுமே செய்யாமல், வேலைக்கு செல்வதற்கான தகுதிகூட இல்லாமல் சுற்றித் திரியும் ஆண்கள்கூட, வீட்டு வேலை செய்வதை அவமானமாக நினைக்கிறார்கள். அவர்கள்கூட என் அளவுக்கு விமர்சனங்களை எதிர்கொள்ளமாட்டார்கள் என்பதையும் நான் உணர்ந்திருக்கிறேன்.

நான் மட்டுமல்ல, என் மனைவியும் பல சங்கடமான கேள்விகளை எல்லா இடங்களிலும் எதிர்கொள்கிறாள். அலுவலகத்திலும் அவளை கேலி செய்வார்கள். ஆனால் நாங்கள் இருவரும் பரஸ்பர புரிதல் கொண்டவர்கள். நமக்கு சரி என்று தெரிந்த விஷயத்தை வெளியில் இருப்பவர்கள் விமர்சித்தால் அது அவர்களுடைய கோணம் என்று புரிந்துக் கொள்ளும் அளவு பக்குவம் கொண்டவர்கள்.

நான் வீட்டு வேலை செய்வது பற்றி என் சகோதரர்கள் எதுவும் சொல்வதில்லை என்றாலும், அதைப் பாராட்டியதும் இல்லை. ஆனால், வேலைக்குப் போகாமல் வீட்டில் இருந்து எல்லா வேலைகளையும் பார்க்கும் பெண்கள் என்னை பாராட்டுவார்கள்.

நாம் வித்தியாசமாக எதாவது செய்யும்போது, முதலில் எதிர்ப்புகள் வரும், கேலி செய்வார்கள், பிறகு கொஞ்சம் யோசிப்பார்கள் இறுதியில் அதை ஏற்றுக் கொள்வார்கள்.

மாற்றம் ஒன்றே மாறாதது என்ற விஷயத்தை நான் நன்றாக புரிந்து வைத்திருக்கிறேன். நான் எடுத்து வைத்திருக்கும் அடி, மாறிவரும் காலத்தில் ஆண்கள் எடுக்கவேண்டிய முதல் அடி...

(வீட்டு வேலைகளை செய்து ஹவுஸ் ஹஸ்பண்டாக இருக்கும் ஆண் ஒருவரின் வாழ்க்கை அனுபவத்தை பேசும் இந்த கட்டுரை பிபிசி செய்தியாளர் நிலேஷ் தோத்ரேவால் எழுதப்பட்டது. இந்த #hischoice சிறப்புத் தொடர் பிபிசி செய்தியாளர் சுசீலா சிங்கால் தயாரிக்கப்பட்டது.)

https://www.bbc.com/tamil/india-45601801

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

நான் பாலியல் தொழிலாளிகளிடம் சென்றது ஏன்? #HisChoice

நான் பாலியல் தொழிலாளிகளிடம் சென்றது ஏன்?

அந்த முதல் அனுபவத்தையும், முதல் இரவையும் என்னால் மறக்கவே முடியாது. 28 வயதில் முதன்முறையாக ஒரு பெண்ணை நான் ஸ்பரிசித்தேன்.அந்த பெண் என் மனைவி இல்லை என்பதோ, அவர் ஒரு பாலியல் தொழிலாளி என்பதோ எனக்கு எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தவில்லை.

எனது பாலியல் விருப்பங்கள் நிறைவேறியது ஒரு பாலியல் தொழிலாளியிடம் என்பதால் எனக்கு எந்த குற்ற உணர்ச்சியோ வருத்தமோ ஏற்படவில்லை. அந்த முதல் அனுபவம் ஒரு வாரம் வரை என்னை பரவசத்தில் வைத்திருந்தது. ஏதோ பெரிதாக சாதித்துவிட்டது போலவும், சொர்க்கத்தில் இருப்பது போலவும், ஒரு அரசனைப் போலவும் உணர்ந்தேன்.

எனது 28 வயதில் எட்டாயிரம் ரூபாய் மாத சம்பளத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துக் கொண்டிருந்தேன். வீட்டின் மூத்த மகனான எனக்கு திருமணத்திற்கு பெண் பார்த்துக் கொண்டிருந்தனர் பெற்றோர்.

குஜராத் மாநிலத்தில் ஆண்களின் எண்ணிக்கையைவிட பெண்களின் எண்ணிக்கை குறைவு. எனவே இங்கு திருமணத்திற்கு பெண் கிடைப்பது சற்று சிரமமானது. திருமணம் செய்துக் கொண்டால்தானே சமூகத்தில் மதிப்பும் கிடைக்கும், ஒருவருடைய பாலியல் விருப்பங்களும் நிறைவேறும். ஆனால் இயல்பான ஆசை கொண்டவர்களுக்கு திருமணம் ஆகாவிட்டால் என்னவாகும்?

Presentational grey line

எனக்கு திருமணம் ஆகவில்லை என்பது பெற்றோருக்கு மிகப்பெரிய மனஅழுத்தத்தை கொடுத்தது. நடுத்தர வசதி கொண்ட சாதாரணமான குடும்பத்தை சேர்ந்த எனக்கு திருமணத்திற்கு பெண் கிடைப்பது குதிரைக்கொம்பாக இருந்தது.

அரசுப் பணியில் இல்லாத உங்கள் மகனுக்கு எப்படி பெண் கொடுப்பது? தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவனின் வாழ்க்கையில் என்ன பாதுகாப்பு இருக்கிறது? உங்களுக்கு சொத்து என்று பெரிதாக எதுவுமே இல்லையே? என எனக்கு பெண் கேட்கச் செல்லும்போது பெற்றோர்கள் பல கேள்விகளை எதிர்கொண்டனர்.

ஆனால் என்னைவிட குறைவான சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த எனது நண்பன் நீரஜூக்கு திருமணமானது ஆச்சரியமான விஷயம் இல்லை. ஆனால் அவரது அப்பாவிடம் 20 ஏக்கர் நிலம் இருந்ததுதான் அவனுக்கு பெண் கிடைத்த காரணம்...

நானும் எனது நெருங்கிய நண்பர்கள் மூவரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்துவோம். ஒருநாள் நாங்கள் ஒன்றாக மது அருந்திக் கொண்டிருந்தபோது, "ஏண்டா, கல்யாணம் ஆகலைன்னா என்ன குடியா முழுகிப் போயிடும். பொண்ணு கிடைக்கிற வரைக்கும் வாழ்க்கையை அனுபவிக்காம ஏன் தள்ளிப்போடற, அதுக்கு வேற வழியை பாக்கலாம்"என்று என் துக்கத்தை போக்கும் வழியைச் சொன்னார்கள் நண்பர்கள்.

"டேய், உலகம் ரொம்ப அழகானதுடா, வா, உனக்கு அதைக் காட்டறோம்" என்று சொல்லி ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார்கள்.

நான் பாலியல் தொழிலாளிகளிடம் சென்றது ஏன்?

அங்கே உடலை முறுக்கேற்றும் வகையில் ஆபாசப் படங்களை பார்க்க வைத்த நண்பர்கள், திருமணம் செய்துக் கொள்வதும் இதற்குதான் என்று சொன்னார்கள். அங்குதான் ஒரு பாலியல் தொழிலாளியை சந்தித்தேன், முதல் அனுபவமே நன்றாக இருந்தது. ஒரு வாரம் கழித்து மீண்டும் ஆசை கட்டுக்கடங்காமல் பொங்கியது.

எனவே பாலியல் தொழிலாளியை அணுகுவதை தொடர்ந்தேன். எனக்கு திருமணமும் நடக்கவில்லை, நானும் பாலியல் தொழிலாளிகளிடம் செல்வதை நிறுத்தவில்லை. வயிற்று பசிக்கு ஹோட்டலுக்கு போவதுபோல், உடலின் தேவைகளை தணித்துக் கொள்ள ஹோட்டலுக்கு செல்வதை வாடிக்கையாக்கிக் கொண்டேன்.

ஐந்து ஆண்டுகள் தொடர்ந்த எனது இந்த பழக்கம் வீட்டிற்கு தெரியவந்தபோது, என் அப்பாவின் கோபம் அணுகுண்டாய் வெடித்தது. தோளுக்கு மேல் வளர்ந்த என்னை அவரால் அடிக்க முடியவில்லை, எனவே, அவரே அவர் கோபத்தால் கத்தி ஆத்திரத்தை தணித்துக் கொண்டார்.

"அவமானமாக இல்லையா? அம்மா, சகோதரிகளைப் பற்றி கொஞ்சமாவது நினைத்துப் பார்த்தாயா? இனிமேல் சமூகத்தில் எப்படி நடமாடுவார்கள்? நாங்கள் யாரையாவது தலைநிமிந்து பார்க்க முடியுமா? என்று வார்த்தைகளால் விளாசினார்.

Presentational grey line

 

இவை 'நவீன இந்திய ஆண்கள்' பற்றியும், அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், சவால்கள், அவர்களின் விருப்பங்கள், தெரிவுகள், மற்றவர்கள் அவர்களை எப்படி கையாள்கிறார்கள் என்பதைப் பற்றிய ஒரு புதிய பார்வையைக் கொடுக்கும்.

Presentational grey line

மது அருந்திருயிருந்தபோது நண்பர்கள் ஹோட்டலுக்கு கூட்டிச் சென்று பெண்ணையும் அனுப்பிவைத்தார்கள் என்று பதில் சொன்னதும் அவரின் கோபம் கரைபுரண்டது. "அவர்கள் ஒருமுறை தானே கட்டாயப்படுத்தினார்கள்? அதே தவறை ஏன் ஐந்து வருடமாக தொடர்கிறாய்?" என்ற அப்பாவின் சீற்றத்திற்கு, அது உடலின் இயல்பான தாகம் என்பதை சொல்ல முடியவில்லை.

அக்கா, அவரது கணவர் என அடுத்து சுற்று படலம் தொடர்ந்தது. இப்படி பல சுற்றுக்களாக அனைவரும் என்னை திட்டித் தீர்த்தது நான் ஏதோ கொலைக்குற்றம் செய்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. திட்டித் தீர்த்தாலும், உடலின் தாகம்தான் மோகமாக மாறி என்னை அலைகழித்தது என்பதை புரிந்துக்கொண்ட அப்பா, மூன்றாவது நாளே ஒரு பெண்ணைப் பற்றி என்னிடம் சொன்னார்.

"கணவனை இழந்த பெண், ஐந்து வயது மகன் இருக்கிறான், நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண், உனக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்றிருக்கிறேன். பெண்ணின் தந்தைக்கும் உன்னைப் பற்றிய எல்லா விவரங்களையும் சொல்லிவிட்டேன். பரவாயில்லை, திருமணம் ஆனால் எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்லிவிட்டார். இந்த பெண் நம் குடும்பத்திற்கும் ஏற்றவளாக இருப்பாள். இவளை திருமணம் செய்துக் கொள்" என்று அப்பா சொன்னார்.

நான் பாலியல் தொழிலாளிகளிடம் சென்றது ஏன்?

"இப்போது நன்றாக சம்பாதிக்கிறாய், நல்லபடியாக குடும்பம் நடத்து" என்று அப்பா அறிவுரை சொன்னார். ஆனால் இந்த காலகட்டத்தில் எனக்கு வேறொரு பெண்ணை பிடித்துப்போய்விட்டது.

நான் வழக்கமாக செல்லும் ஹோட்டலில் அந்த பெண் வேலை பார்த்தாள். ஹவுஸ் கீப்பிங் பணியிலிருந்த அவளுக்கு சம்பளம் சுமாராக இருந்தாலும், பார்ப்பதற்கு நன்றாக இருப்பாள். நான் பாலியல் உறவுக்காகவே ஹோட்டலின் வாடிக்கையாளராக இருப்பதை தெரிந்து கொண்ட அவள், திருமணம் செய்துக் கொள்ளக் கோரிய எனது விருப்பத்தை நிராகரித்துவிட்டாள்.

அந்த பெண் வேறு ஒருவரை திருமணம் செய்துக் கொண்டதும் எனக்கு வருத்தம் ஏற்பட்டது. வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டது. பிறகு வாழ்க்கையே தனிமையாகிவிட்டது. திருமணம் இல்லாமல் தனியாக வாழ்வது எவ்வளவு கொடுமையானது என்பதை உணர்ந்தேன். ஆனால், எனக்கு பெண் கொடுக்க யாரும் தயாராக இல்லை.

என்னை மையமாக வைத்து குடும்பத்தில் உள்ள அனைவரும் பல்வேறு பிரச்சனைகளையும், அவமானங்களையும் எதிர்கொள்ள நேர்ந்தது. எனவே வேறுவழியில்லாமல் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டேன்.

வீட்டில் இருந்து வெளியேறிய இரண்டு வாரத்தில் பெற்றோர் என்னை வீட்டிற்கு அழைத்தனர். திரும்பி வந்தாலும், அவர்கள் என்னால் எதிர்கொள்ளும் அவமானங்களைப் பார்க்க முடியவில்லை. சமூகத்தில் உள்ளவர்களுக்கு எனக்கு திருமணம் ஆகவில்லையே என்ற கவலையைவிட, பொழுதுபோக்குவதற்கும், பேசுவதற்கும் பேசுபொருளாகிவிட்டது என் குடும்பம்.

Presentational grey line

பிறகு மீண்டும் வீட்டில் இருந்து வெளியேறலாம் என்ற முடிவு எடுத்தாலும், குடும்பத்திற்கும் பிரச்சனை இல்லாமல் ஊரில் இருந்தே வெளியேறிவிடலாம் என்று முடிவு செய்தேன். புதிய ஊர், புதிய மனிதர்கள்... இப்போது என் மனதிற்கு தோன்றினாற்போல் வாழ்கிறேன்.

பாலியல் தொழிலாளிகளிடம் செல்கிறேன். சில முறை என் முதலாளியும் என்னுடன் நான் செல்லும் இடங்களுக்கு என்னுடன் வருவார். திருமணத்தை தாண்டி உறவு வைத்துக் கொள்ளும் பெண்களிடமும் தொடர்பு வைத்திருக்கிறேன்.

வயது 39 ஆகிவிட்டது. இன்னும் எனக்கு திருமணம் ஆகவில்லை, கட்டுப்பாடான, நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்த நான், இன்று குடும்பமே இல்லாமல் வாழ்கிறேன். ஆனாலும் நான் இப்போது தனிமையில் வாடவில்லை.

திருமணம் என்பது என் வாழ்க்கையில் எட்டாக் கனியாகிப்போனதால், நான் பாலியல் இச்சைகளை வேறு பெண்களிடம் தீர்த்துக் கொள்கிறேன். வாழ்க்கை இயல்பாகவே சென்றுக் கொண்டேயிருக்கிறது...

என் குடும்பத்தினரும் காலத்திற்கு ஏற்ப மாறிவிட்டார்கள். என் தம்பி, ஒரு பழங்குடியினப் பெண்ணை காதலித்து திருமணம் செய்துக் கொண்டான். இதுவே என்னுடைய விவகாரம் வெளியாவதற்கு முன்னர் இது சாத்தியமாகியிருக்காது.

தற்போது நான் ஒரு நாடோடி... இப்போது திருமணம் செய்துக் கொள்ளும் எண்ணமே எனக்கு போய்விட்டது. மாதம் 40 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறேன். எந்தவொரு குறையும் இல்லை... குற்றவுணர்ச்சியும் இல்லை...

எனக்கு திருமணமாகி இருந்தால் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்று தெரியாது. ஆனால், இன்று சமுதாயத்தில் நான் சுதந்திரமாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன்.

https://www.bbc.com/tamil/india-45612218

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this