Sign in to follow this  
நவீனன்

சுமந்திரனின் சமஷ்டி

Recommended Posts

சுமந்திரனின் சமஷ்டி

 
sumanthiran-1.jpg

கடந்த சனிக்கிழமை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் சுமந்திரன் சி.வை.தாமோதரம்பிள்ளை நினைவுப் பேருரை ஆற்றினார். சமஷ்டியின் விஸ்தீரணம் என்ற தலைப்பிலான அந்த உரையை அவர் அதிகம் சிரத்தையெடுத்து தயாரித்து வந்திருந்தார்.

தமிழ் அரசியல்வாதிகளில் தமது பேச்சை முன்கூட்டியே தயாரித்துக் கொண்டு வந்து பேசுபவர்கள் குறைவு. அப்படி தயாரித்துக் கொண்டு வந்திருந்தாலும் பலபேச்சுக்கள் அவையில் இருப்பவர்களை புத்திசாலிகளாகக் கருதி தயாரிக்கப்பட்டவை அல்ல.

ஆனால் சுமந்திரன் தான் கூறவரும் கருத்தை தர்க்க பூர்வமாக முன்வைப்பவர் அது தொடர்பான தொடர்ச்சியான பகிரங்க விவாதங்களுக்கும் தயாராகக் காணப்படுபவர்.

சனிக்கிழமை அவர் ஆற்றிய உரைக்காக அவர் பல்வேறு நாடுகளின் யாப்பு அனுபவங்களை தேடித் திரட்டிக் கொண்டு வந்திருந்தார். அவருடைய உரையின் பின் கேள்வி கேட்ட சயந்தனும் முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட கேள்விகளோடு வந்திருந்தார்.

சயந்தன் சுமந்திரனின் விசுவாசி எனினும் வீரசிங்கம் மண்டபத்தில் அவர் கேட்ட கேள்விகள் சுமந்திரனுக்குச் சங்கடத்தைத் தரக்கூடியவை. குறிப்பாக முகநூற்பரப்பில் சுமந்திரனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டு வரும் கூரான கேள்விகளை சயந்தன் திரட்டிக்கொண்டு வந்து கேட்டார்.

அக்கேள்விகளுக்கு சுமந்திரன் வழங்கிய பதில் குறித்து தனியாக ஆராய வேண்டும். ஆனால் தனக்கு எதிராக முன்வைக்கப்படும் பல கேள்விகளை தனக்கு விசுவாசமான ஒருவர் மூலம் தொகுத்து ஒரு பகிரங்கத் தளத்தில் அக்கேள்விகளுக்கு பதில் கூற முன்வந்தமை துணிச்சலானது.

அது ஒரு சிறந்த அறிவியல் ஒழுக்கம், அதில் ஒரு வெளிப்படைத்தன்மை உண்டு. தர்க்கத்தை தர்க்கத்தால் எதிர் கொள்ளும் அவ்வாறான துணிச்சலைப் பாராட்ட வேண்டும்.

வழமையாக அவருடைய கூட்டத்திற்கு வரும் ஆதரவாளர்களும் உட்பட சுமார் 300 பேருக்குக் குறையாதவர்கள் அரங்கில் காணப்பட்;டனர். எனினும் அவருடைய அரசியல் எதிரிகள் என்று கருதத்தக்க கூட்டத்துறை சார்ந்த மற்றும் சாராத அரசியல் பிரமுகர்களை அங்கு காணமுடியவில்லை.

தனது நினைவுப் பேருரையில் சுமந்திரன் என்ன பேசினார்?

அவர் வழமையாகப் பேசி வருபவற்றைத்தான் ஆதாரங்களுடன் பேசினார். அவருடைய பேச்சின் சாராம்சத்தை ஒரே வரியில் சொன்னால் சமஸ்ரி என்ற லேபல் முக்கியமல்ல எனலாம். இதற்கு உலகம் முழுவதிலும் இருந்து அவர் உதாரணங்களை எடுத்துக் காட்டினார்.

சமஸ்ரி என்ற தலைப்புடன் யாப்பைக் கொண்டிருக்கும் பல நாடுகளில் நடைமுறையில் சமஸ்ரி இல்லை என்று எடுத்துக் காட்டினார். அதே சமயம் சமஸ்ரி என்று குறிப்பிடாத பல யாப்புக்கள் நடைமுறையிலுள்ள உலகின் மிக உயர்வான ஜனநாயக நாடுகளில் சமஸ்ரி ஒரு பிரயோகமாக உள்ளதைச் சுட்டிக்காட்டினார்.

எனவே சமஸ்ரி என்று பெயரோடுதான் ஒரு தீர்வைக் கொண்டு வரவேண்டும் என்றில்லை என்பதே அவருடைய பேச்சின் அடித்தொனியாக இருந்தது.

ஒரு சட்டத்தரணியாக சுமந்திரன் தனது கருத்துக்கு சில சட்டத்துறை சார்ந்த தீர்ப்புக்களையும் மேற்கோள் காட்டினார். யாப்பு எனப்படுவது ஒரு நாட்டின் அதியுயர் சட்டம் என்ற அடிப்படையில் அவர் சமஸ்ரியை அதிகபட்சம் ஒரு சட்டவிவகாரமாகவே அணுகியிருந்தார்.

ஆனால் சமஸ்ரி என்பது இலங்கையைப் பொறுத்தவரை ஓர் அரசியல்தீர்வு. அப்படியொரு தீர்வைக் கொடுப்பதற்கான அரசியல் திடசித்தம் (political will)சிங்களத் தலைவர்களிடம் உண்டா? அதைப் பெறுவதற்கான அரசியல் திடசித்தம் தமிழ்த் தலைவர்களிடம் உண்டா என்பதே இங்கு விவகாரம்.

அது ஓர் அரசியல் விவகாரம். அதைச் சட்டக்கண் கொண்டு மட்டும் பார்க்க முடியாது. அதை ஓர் அரசியல் விவகாரமாகப் பார்;க்க வேண்டும். எனவே அதனோடு சம்பந்தப்பட்ட எல்லாத் துறைகளுக்கூடாகவும் அதைப் பார்க்க வேண்டும்.

சுமந்திரன் கூறுகிறார் பிரித்தானியாவின் யாப்பில் எழுத்தில் சமஷ்டி இல்லை என்று. அது எழுதப்படாத யாப்பு என்று அழைக்கப்படும் ஒரு யாப்பு. ஆனால் அங்கே ஸ்கொட்லாந்து பிரிந்து போவதா இல்லையா என்பதை முடிவெடுக்க அனுமதிக்கப்பட்டது.

இப்படிப்பார்த்தால் அங்கு சமஷ்டிரியை விடவும் அதிகரித்த அதிகாரம் உண்டு என்பதே நடைமுறையாகும். ஆனால் இந்த உதாரணம் இலங்கைத்தீவுக்கும் பொருந்துமா?

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்கொட்லாந்துக்கு விஜயம் செய்தார்கள். இவ்விஜயத்தை ஒழுங்குபடுத்தியது எடின்பரோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அசங்க வெலிகல என்று கூறப்பட்டது.

அசங்க பின்னாளில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு யாப்புத் தெடர்பில் ஆலோசகராகச் செயற்பட்டதாக கருதப்படுகிறது. அசங்க பிரித்தானியா இலங்கை ஆகிய இரு நாடுகளினதும் ஒற்றையாட்சி முறைமைகளை ஒப்பிட்டுக் கூறிய ஒரு தகவலை யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவரான குமாரவடிவேல் குருபரன் ஓருமுறை மேற்கோள் காட்டியிருந்தார் ‘பிரித்தானியாவின் ஒற்றையாட்சி பேரினவாதத்தன்மை மிக்கது அல்ல’ என்பதே அது.

ஆனால் அசங்க பின்னாளில் இக் கூற்றிலிருந்து பின்வாங்கியதாக அவரது டுவிட்டர் பதிவு ஒன்றிலிருந்ததாக குருபரன் தெரிவித்தார்.

எனினும் அசங்க முன்பு கூறியது சரிதான். பிரித்தானியாவிலிருப்பது ஒற்றையாட்சிதான். ஆனால் பெரிய பிரித்தானியா என்பது ஒரு யூனியன். அதாவது இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்கொட்லாந்து ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு ஜக்கிய இராஜ்ஜியம். இந்த சமூக உடன்படிக்கையின் பிhயோகவடிவமே பிரித்தானியாவின் எழுதப்படாத யாப்பு ஆகும். இது இலங்கைக்கு பொருந்துமா?

இல்லை பொருந்தாது. பிரித்தானியாவின் ஜனநாயகம் ஸ்கொட்லாந்து பிரிந்து செல்வதற்கான தேர்த்லை நடத்துமளவிற்கு செழிப்பானதாய் இருந்தது. அசங்க கூறியது போல அது பேரினவாதத் தன்மை மிக்கது அல்ல.

ஆனால் இலங்கைத் தீவின் ஒற்றையாட்சிக் கட்டமைப்பு எனப்படுவது இந்த நாட்டில் தமிழர்களையும், முஸ்லிம்களையும் சகநிர்மாணிகளாக ஏற்றுக்கொள்ளாத சிங்கள – பௌத்த மனோநிலையின் சட்ட ஏற்பாடுதான். எனவே பிரித்தானியாவின் ஜனநாயக நடைமுறை வேறு. இலங்கைத்தீவின் நடைமுறை வேறு.

பிரித்தானியாவின் வரலாறு வேறு. இலங்கைத்தீவின் வரலாறு வேறு. இலங்கைத்தீவின் வரலாற்றனுபவம் ஜனநாயக நடைமுறை என்பனவற்றின் பின்னணியில் வைத்தே சமஸ்டி என்ற லேபல் தேவையா? இல்லையா? என்று முடிவெடுக்க வேண்டும்.

அப்படித்தான் இந்திய சமஸ்ரியும். அது ஓர் அரைச் சமஸ்ரி. ஆனாலும் அதற்கு ஒரு தேவை அங்குண்டு. குறிப்பாக பிராந்தியக் கட்சிகளின் எழுச்சியோடு இந்தியப் பேரரசு அதன் சமஸ்ரி நடைமுறையைப் பலப்படுத்த வேண்டிய தேவைகள் அதிகரித்திருப்பதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

ஒருகட்சி ஏகபோகத்திலிருந்து பலகட்சிகளின் கூட்டரசாங்கம் என்ற ஒரு மாற்றம் ஏற்பட்டதிலிருந்து இந்தியாவின் சமஸ்ரியானது அதிகம் அவசியமான ஒரு நடைமுறையாகிவிட்டது.

இணைந்த வட-கிழக்கு மாகாண சபையின் முதல்வராக இருந்த வரதராஜப்பெருமாள் ஒருமுறை என்னிடம் சொன்னார் 13 ஆவது திருத்தமானது இந்திய சமஷ்டியை மனதிலிருத்தி உருவாக்கப்பட்டது என்ற தொனிப்பட. எனவே மாகாணசபையின் சட்டவாக்க விஸ்தீரணத்தை அளந்தறிய அதற்குவேண்டிய சட்டப் பரிசோதனைகளை விக்கினேஸ்வரன் செய்திருக்க வேண்டும் என்றும் வரதராஜப்பெருமாள் கூறினார்.

ஆனால் மாகாண சபையின் சட்டவாக்க அதிகாரம் எனப்படுவது தனிய ஒரு சட்டப்பிரச்சினை மட்டும் அல்ல. அது ஓர் அரசியல் விவகாரம்.

இலங்கைத்தீவிற்கு மாகாண சபைகள் தேவை என்பதை எந்த நோக்கு நிலையிலிருந்து முடிவெடுப்பது? தமிழர்களையும், சிங்களவர்களையும், முஸ்லிம்களையும் இச்சிறியதீவின் சகநிர்மாணிகள் என்ற நோக்கு நிலையிலிருந்தா? அல்லது தமிழ் மக்களைப் பேய்க்காட்ட வேண்டும் என்ற நோக்கிலிருந்தா? அல்லது ஐ.நாவைப் பேய்க்காட்ட வேண்டும் என்ற நோக்கு நிலையிலிருந்தா? எந்த நோக்கு நிலையிலிருந்து என்பதுதான் இங்கு மாகாண சபையின் விஸ்தீரணத்தைத் தீர்மானிக்கிறது.

எனவே மாகாண சபையின் அதிகாரங்கள் அல்லது சமஸ்ரியின் விஸ்தீரணம் என்பவையெல்லாம் சட்டப் பிரச்சினைகள் மட்டுமல்ல அதற்குமப்பால் அவை அரசியல் விவகாரங்கள். அவற்றைச் சட்டக்கண் கொண்டு மட்டும் பார்;க்கக்கூடாது.

சம்பந்தப்பட்ட எல்லாத் துறைகளும் இணைந்த ஒரு கூட்டு ஒழுக்கத்துக்கூடாக ஆராயும் போதே இலங்கைத்தீவிற்கேயான சமஸ்டியின் விஸ்தீரனத்தை கண்டுபிடிக்கலாம். தனியே சட்டக்கண் கொண்டு பார்க்கும் போது அது ஒரு முழுமையான பார்வையாக இருக்காது.

சுமந்திரன் ஏன் அதை அதிகபட்சம் சட்டக்கண் கொண்டு பார்க்கிறார்? அவர் ஒரு வெற்றிபெற்ற சட்டத்தரணியாக இருப்பதால் மட்டுமல்ல அவர் கொழும்பு மையத்திலிருந்து சிந்திப்பதும் ஒரு காரணம்தான்.

மாறாக தனக்கு வாக்களித்த மக்களின் துன்ப, துயரங்களிலிருந்து சிந்திப்பாராகவிருந்தால் அதை ஒரு சட்டப்பிரச்சினையாக மட்டும் அணுக மாட்டார்.

இதற்கு ஆகப்பிந்திய ஓர் உதாரணத்தைக் கூறலாம். கடந்த செவ்வாய்க்கிழமை வடமராட்சி கிழக்கில் அதாவது சுமந்திரனின் ஊரில் நடந்த சம்பவம் அது. வடமராட்சி கிழக்குக் கடலில் சிங்கள மீனவர்கள் கடலட்டை பிடிப்பதைத் தடுக்குமாறு அப்பகுதி மீனவர்கள் தொடர்ச்சியாகப் போராடி வருகிறார்கள்.

இப்போராட்டங்களில் சுமந்திரனும் சம்பந்தப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக அரச உயர்மட்டத்துடன் பேசியுமிருக்கிறார். அரசாங்கத்திடமிருந்து வாக்குறுதிகளை வாங்கியுமிருக்கிறார். ஆனால் எல்லா வாக்குறுதிகளையும் மீறி சிங்கள மீனவர்கள் கடலட்டை பிடித்துவருகிறார்கள்.

இவர்களை கடந்த செவ்வாய் இரவு தமிழ் மீனவர்களை கையும் களவுமாக பிடித்து தடுத்து வைத்திருந்தார்கள். ஆனால் பொலிசார் வந்து அவர்களை மீட்டுச்சென்றிருக்கிறார்கள். அதோடு சம்பந்தப்பட்ட தமிழ் மீனவர்களை அச்சுறுத்தியுமிருக்கிறார்கள்.

இது ஒரு கடற்கொள்ளை. வடமராட்சி கிழக்கிலிருந்து முல்லைத்தீவுக் கரை வரை நடந்து கொண்டிருக்கிறது. தமது கடலையும், கடல் படு திரவியங்களையும் பாதுகாக்கும் சக்தியற்ற தமிழ் மீனவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை.

சுமந்திரன் அரச உயர் இடத்திடமிருந்து பெற்ற வாக்குறுதிகளும் வேலை செய்யவில்லை. தனது வாக்காளர்களின் கவலைகளையும் அச்சங்களையும் சுமந்திரன் விளங்கிக் கொள்வாராக இருந்தால் இது வெறும் நிர்வாகப் பிரச்சினையோ அல்லது சட்டம் ஒழுங்குப் பிரச்சினையோ மட்டும் அல்ல என்பதைக் கண்டு பிடிக்கலாம். இது ஓர் அரசியற் பிரச்சினை என்பதையும் கண்டுபிடிக்கலாம்.

அப்படித்தான் யாப்புருவாக்கமும் அது தனிய ஒரு சட்டப் பிரச்சினை மட்டும் அல்ல. அதை ஓர் அரசியல் விவகாரமாக சம்பந்தப்பட்ட அனைத்து துறைசார் ஒழுக்கங்களும் இணைந்த ஒரு கூட்டு ஒழுக்கத்துக்கூடாகப் பார்க்க வேண்டும்.

அப்படிப் பார்த்தால் தான் அமெரிக்க யாப்பையும், பிரித்தானிய யாப்பையும், இந்திய யாப்பையும் பிரயோக வடிவத்தில் விளங்கிக் கொள்ளலாம். அப்பிரயோகத்திற்கு அடிப்படையாக உள்ள ஜனநாயகச் சூழலையும், வளர்ச்சியுற்ற முதலாளித்துவத்தின் பண்புகளையும், சமூக ஒப்பந்தங்களுக்கான வரலாற்றுப் பின்னணியையும் விளங்கிக் கொள்ளலாம்.

அப்படி விளங்கிக் கொள்வதற்கு ஒரு பல்துறைசார் கூட்டு ஒழுக்கம் தேவை என்பதையும் விளங்கிக் கொள்ளலாம். இப்படி எல்லாவற்றையும் விளங்கிக் கொள்வதற்கு முதலில் வாக்களித்த மக்களை நேசிக்க வேண்டும். அவர்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும்.

http://athavannews.com/category/weekly/அரசியல்-கட்டுரைகள்/

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this