Jump to content

வடக்கிலும் கிழக்கிலும் தீவிரவாதப் போக்கின் செல்வாக்கு


Recommended Posts

வடக்கிலும் கிழக்கிலும் தீவிரவாதப் போக்கின் செல்வாக்கு
எம்.எஸ்.எம். ஐயூப் / 
 

“தற்போதைய தலைமை போய், மாற்றுத் தலைமை உதித்தால், மீண்டும் கூட்டமைப்பின் சார்பில், முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குவதற்குச் சாத்தியம் உள்ளது” என, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறியதாக, ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது.   

அதாவது, “விக்னேஸ்வரனை இனி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறக்குவதில்லை” என்று, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ சுமந்திரன் கூறி வருவதைப் போலவே, “இனி, கூட்டமைப்பின் கீழ், தேர்தலில் நிற்கப் போவதில்லை” என விக்னேஸ்வரனும் கூறுகிறார்.  

ஆனால், மாற்றுத் தலைமை என்ற விடயத்தில், விக்னேஸ்வரன் கடந்த வருடம், வேறு கருத்தைக் கொண்டிருந்தார். தமிழர்களுக்கு மாற்றுத் தலைமை வேண்டும் என்று, சிலர் கூறிய போது, அவர் “மாற்றுத் தலைமைக்கு அவசியம் ஏற்படவில்லை” என்று கூறியிருந்தார்.   

ஆனால், அதன் பின்னர் “60 வயதுக்கு மேற்பட்டவர்கள், அரசியலில் இருந்து ஒதுங்கி, இளைஞர்களுக்கு இடமளிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இப்போது தனி வழி போவதாகக் கூறுகிறார்.  

இது, வடக்கில் மிதவாதத்துக்கும் தீவிர போக்குடையவர்களுக்கும் இடையிலான போராட்டம், தீவிரமடைந்து வருவதையே காட்டுகிறது. இதேநிலையைத் தெற்கிலும் காணக்கூடியதாக இருக்கிறது.   

வடக்கில், தீவிர போக்குடையவர்கள் பொதுவாக, தமிழ் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதைப் போலவே, தெற்கிலும் சிங்களத் தீவிர போக்குடையவர்கள், தேசிய அரசியலில், பாரிய தாக்கத்தை எற்படுத்தி வருகிறார்கள்.   

வடக்கில் விக்னேஸ்வரன், தனி வழி போவதானது, எப்போதோ நிர்ணயிக்கப்பட்டதொன்று என்றும் கூறலாம்.   

2013ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நடைபெற்ற, வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு, விக்னேஸ்வரன் முதலமைச்சரானார். அவருக்கும் கூட்டமைப்புக்கும் இடையிலான சுமூக உறவு, சுமார் ஒரு வருடம் தான் நிலவி வந்தது.

ஏறக்குறைய ஒரு வருடத்துக்கு மேலானதாக இருந்தாலும், சுமூக உறவு, இரண்டு வருடங்கள் நீடிக்கவில்லை. அதன் பின்னர், அவருக்கும் கூட்டமைப்பின் சில தலைவர்களுக்கும் இடையே பிரச்சினைகள் உருவாகத் தொடங்கின.  

2015ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம், நடைபெற்ற பொதுத் தேர்தலுக்கு, நிதி திரட்டுவதற்கு, கூட்டமைப்பு ஒரு குழுவை வெளிநாடுகளுக்கு அனுப்பியது. விக்னேஸ்வரன் அதில் பங்கேற்கவில்லை. இதை, சுமந்திரன் போன்றவர்கள் விமர்சித்திருந்தனர்.   

அதன் பின்னர், அதே ஆண்டு, கூட்டமைப்பின் தலைமையோடு, விக்னேஸ்வரன் பிரச்சினைப்பட்டுக் கொண்டு, இருக்கும் சிலரையும் சேர்த்துக் கொண்டு, தமிழ் மக்கள் பேரவையை உருவாக்கினார்.   

தமிழ் மக்கள் பேரவையானது, கூட்டமைப்புக்கு எதிரானது அல்லவென்றும் அதற்குப் போட்டியாக அமைக்கப்படவில்லை என்றும் முதலில் கூறப்பட்டாலும், அது கூட்டமைப்பின் பிரதான போட்டியாளராகும் அறிகுறிகள் ஆரம்பத்தில் இருந்தே தென்பட்டன.   

அரசாங்கத்தின் அரசமைப்புத் தயாரிக்கும் பணிக்கு, கூட்டமைப்பு ஆதரவளித்து வருகிறது. கடந்த வாரமும் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன், “உத்தேச புதிய அரசமைப்பின் மூலம், தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும்” எனக் கூறியிருந்தார்.   

ஆனால், கூட்டமைப்பின் போட்டியாளர்கள், அதன் மூலம் எந்தத் தீர்வும் கிடைக்கப் போவதில்லை எனக் கூறி, அதை எதிர்த்து வருகிறார்கள்.   

இந்தப் பிளவு, கூட்டமைப்பை பாதிக்கக்கூடியது என்பது, கடந்த பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போது தெளிவாகியது. 

இதற்கு முன்னர் நடைபெற்ற தேர்தல்களின் போது, கூட்டமைப்புக்கு வடக்கில் போட்டியொன்று இருக்கவில்லை. தீவுப்பகுதிகளில் டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செல்வாக்கு இருந்த போதிலும் ஏனைய பகுதிகளில் கூட்டமைப்பின் வெற்றி எப்போதோ நிர்ணயிக்கப்பட்டது என்ற நிலை இருந்து வந்தது.   

ஆனால், கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் பின்னர், பல சபைகளின் நிர்வாகத்தை ஸ்தாபிக்க, கூட்டமைப்பு வேறு கட்சிகளின் உதவியை நாட வேண்டிய நிலைமை உருவாகியது.   

தமிழ் அரசியலில், கூட்டமைப்பின் பிரதான கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சி, எப்போதும் மிதவாதக் கட்சியாகவே கருதப்பட்டது. 

அது, தமிழர் விடுதலைக் கூட்டணியின் பிரதான கட்சியாக இருந்த காலத்திலும் சரி, தமிழ் ஆயுதக் குழுக்கள் தீவிர போக்குடைய அமைப்புகளாக இருந்த காலத்திலும் சரி, தமிழர் விடுதலைக் கூட்டணி, மிதவாதக் கட்சியாகக் கருதப்பட்டது.   

இனப் பிரச்சினையைப் பொறுத்தவரை, அது மக்களின் உணர்ச்சிகளை உசுப்பிவிடக்கூடியது. எனவே, தெற்கிலும் வடக்கிலும் மக்கள் தீவிரப் போக்கையே எப்போதும் விரும்புகின்றனர்.   

வடக்கில், தமிழ் அரசியலை எடுத்துக் கொண்டால், மக்கள் மரபு ரீதியான தமிழரசு கட்சி போன்ற கட்சிகளைத் தொடர்ந்தும் நேசித்து வந்த போதிலும், ஆயுதக் குழுக்கள் மிக வேகமாக தமிழ் அரசியலில் இடம் பிடித்துக் கொண்டன.   

ஆயுதக் குழுக்களிலும் உமா மகேஸ்வரனின் தலைமையிலான தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்), ஸ்ரீ சபாரத்தினத்தின் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (டெலோ) கே. பத்மநாபாவின் தலைமையிலான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) ஆகிய இயக்கங்கள், புலிகளை விட மிருதுவான போக்கைக் கடைப்பித்து வந்தன.   

இவை, மக்கள் இயக்கம் ஒன்றைக் கட்டியெழுப்பி, ஆயுதப் போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என்று வாதிட்டன. ஆனால், வேலுப்பிள்ளை பிரபாகரனின் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.ரீ.ரீ.ஈ), ஆரம்பத்தில் இருந்தே, அரச படைகளைத் தாக்குவதில் கூடுதல் ஆர்வம் காட்டினர். மக்கள் அதையே விரும்பினர்.  

அக்காலத்தில் அரசாங்கத்தின் நடவடிக்கைகளையும் அரச படைகளின் அடாவடித்தனங்களையும் மக்கள் வெறுத்து வந்தமையாலும் அந்த அரசாங்கத்தையும் அரச படைகளையும் புலிகளே பலமாகத் தாக்கி வந்தனர் என்பதாலும் இந்தநிலை ஏற்பட்டது.   

இப்போதும் ஆயுதப் போராட்டம் இல்லாவிட்டாலும், அரசாங்கத்தையும் அரச படைகளையும் கடுமையாக விமர்சிக்கும் போக்கையே மக்கள் விரும்புகிறார்கள்.   

அதன் விளைவே, கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் என நம்பலாம். அந்தத் தேர்தல்களின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தோல்வியடைந்ததாகப் பொதுவில் முடிவு செய்ய முடியாது. ஆனால், அக்கட்சியின் நிலையில், சற்றுச் சரிவு ஏற்பட்டது என்பதை, எவரும் மறுக்க முடியாது.  

இந்த நிலையில், சில பிரச்சினைகளை எவ்வாறு அணுகுவது என்பதில், கூட்டமைப்பு தடுமாறுவதையும் காணலாம்.   

“சமஷ்டி வேண்டாம்” என சுமந்திரன், காலியில் நடைபெற்ற கூட்டமொன்றில் கூறியதாக வெளியான செய்தியை அடுத்து, அவர் எதிர்கொண்ட பிரச்சினைகள் அதையே காட்டுகின்றன.   

“சமஷ்டி என்ற சொல்லாடல் தேவையில்லை; நடைமுறையிலேயே சமஷ்டி இருக்க வேண்டும்” என, சுமந்திரன் பின்னர் கூறியிருந்தார். ஆனால், பெயர் பலகையிலேயே சமஷ்டி இருக்க வேண்டும் என, அவரது போட்டியாளர்கள் கூறி வருகின்றனர்.   

சமஷ்டி என்ற சொல்லாடல் இல்லாது, மக்கள் சமஷ்டியை அடையாளம் காண மாட்டார்கள். எனவே, சொல்லாடல் வேண்டும் என்பதையே மக்கள் விரும்புவார்கள்.   

போர்க் காலக் குற்றங்கள் விடயத்தில், அரச படைகளுக்கும் புலிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்ற அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் ஆலோசனையை சுமந்திரன் மறுப்பதற்கும், இந்தக் கடும் போக்காளர்களுடனான போட்டியே காரணமாக இருக்கலாம்.   

தனிப்பட்ட நோக்கங்களுக்காகச் செய்த குற்றங்கள் தவிர்ந்த, போரோடு நேரடியாகத் தொடர்புடைய குற்றங்களுக்காக, புலிகளுக்கும் படையினருக்கும் பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்பதே அமைச்சர் சம்பிக்கவின் ஆலோசனையாகும்.   

அதாவது, படையினர் கொக்கட்டிச்சோலை போன்ற இடங்களில் சாதாரண மக்கள் மீது மேற்கொண்ட தாக்குதல்கள், இறுதிப் போரின் போது புலிகள் தம்மோடு வைத்திருந்த மக்களைப் பற்றிக் கவனியாது, புலிகளின் நிலைகள் மீது நடத்திய தாக்குதல்கள், புலிகள் பஸ்களில், ரயில்களில் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் எல்லைக் கிராமங்களில், மக்கள் மீது நடத்திய தாக்குதல்கள் உள்ளிட்ட சகல போர்க் கால குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு, பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்பதே, சம்பிக்கவின் கருத்தாகும்.   

இதைக் கூட்டமைப்பு ஏற்றிருந்தால், வடக்கில் தீவிர போக்குடையவர்கள் கூட்டமைப்பை விட்டுவைக்க மாட்டார்கள். எனவேதான், சுமந்திரன் அதையும் படையினரின் செயற்பாடுகளையும் அரசியல் கைதிகளின் செயற்பாடுகளையும் சமமாக மதிக்க முடியாது என்று கூறி நிராகரித்திருந்தார்.  

தெற்கின் நிலைமையும் இதுவே. தற்போதைய அரசாங்கம், 2015 ஆம் ஆண்டு பதவிக்கு வந்தவுடன், இனப்பிரச்சினை விடயத்தில் வெளியிட்ட சில கருத்துகளையும் மேற்கொண்ட சில நடவடிக்கைகளையும் சர்வதேச சமூகம் வரவேற்றது.   

சில தமிழ் அமைப்புகள் உள்ளிட்ட, அமைப்புகள் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. ‘தமிழ்நெற்’ போன்ற இணையத்தளங்கள் மீதான தடை நீக்கப்பட்டது. போர்க் கால மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, விசாரணை மேற்கொள்வதற்காக, பொதுநலவாய அமைப்பு நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகள் அடங்கிய நீதிமன்றங்களை அமைக்கும் ஆலேசனையுடனான ஐ.நா மனித உரிமைப் பேரவையின் பிரேரணையை அரசாங்கம் ஏற்றுக் கொண்டது.   

எனவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட இலங்கைத் தலைவர்கள், சர்வதேச மன்றங்களில், வெகுவாகப் பாராட்டப்பட்டார்கள். இலங்கை மீதான சர்வதேச அழுத்தம் வெகுவாகக் குறைந்தது.   

எனவே, தாம் இலங்கைப் படையினரதும் நாட்டினதும் நற்பெயரைப் பாதுகாத்ததாகவும் மஹிந்த ராஜபக்‌ஷவை மின்சாரக் கதிரையிலிருந்து பாதுகாத்ததாகவும் ஜனாதிபதி கூறி வந்தார்.   

அதற்கிடையே, இதே விடயங்களைப் பாவித்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் அணியினர், அரசாங்கம் நாட்டையும் படையினரையும் காட்டிக் கொடுத்ததாகப் பிரசாரம் செய்து வந்தனர். அவர்களது தீவிரவாதப் போக்கை, தென் பகுதிச் சிங்கள மக்கள் விரும்புவதாகவே தெரிகிறது.   
அவர்களது இந்தப் பிரசாரத்தின் தாக்கத்தால், ஜனாதிபதி மாறிவிட்டார். ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 2015 ஆம் ஆண்டு பிரேரணைக்கு, இலங்கை அனுசரணை வழங்கும்போது, மௌனமாக இருந்த அவர், சிறிது காலத்துக்குப் பின்னர், வெளிநாட்டு நீதிபதிகளின் தலையீட்டை ஏற்க முடியாது என்றார்.   

அந்தப் பிரேரணையின் படி, நிறுவப்பட வேண்டிய காணாமற் போனோர்களுக்கான அலுவலகம் போன்றவற்றையும் மஹிந்த அணியினர் கடுமையாக எதிர்த்தனர். அதன் காரணமாகவோ, என்னவோ அந்த அலுவலகத்தை நிறுவும் பணியும் ஆமை வேகத்திலேயே மேற்கொள்ளப்பட்டது. பிரேரணை நிறைவேறி மூன்றாண்டுகளாகியும் ஏனைய நிறுவனங்கள் இன்னமும் நிறுவப்படவில்லை.   

புதிய அரசமைப்பைத் தயாரிக்கும் பணியும் ஏறத்தாழ முடங்கிப் போயுள்ளது என்றே கூற வேண்டும். ஆரம்பத்தில் அதில் பங்கேற்ற மஹிந்த அணியினர், அதற்கான உபகுழுக்களில் இருந்து விலகிவிட்டனர். அது நிறைவேறும் சாத்தியக்கூறுகள் இல்லை என்ற நிலைப்பாட்டிலேயே, மக்கள் விடுதலை முன்னணி, நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதற்கான பிரேரணையொன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது.   

புதிய அரசமைப்பு சாத்தியமில்லை என அமைச்சர் மனோ கணேசனும் அண்மையில் கூறியிருந்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவ்வாறானதொரு முயற்சி மேற்கொள்ளப்படாததைப் போல், அந்த விடயத்தில் மௌனமாக இருக்கிறார். அதுவும் தென் பகுதி தீவிரவாதத்தின் தாக்கமாகும்.  

இளைஞர்கள் 11 பேர் கடத்தப்பட்டு, காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்பட்டு, முன்னாள் கடற்படைத் தளபதியும் தற்போதைய பாதுகாப்பு ஆளணியின் தளபதியுமான ரவி விஜேகுணவர்தனவைக் கைது செய்ய வேண்டியுள்ளது என, இரகசியப் பொலிஸார் நீதிமன்றத்தில் அறிவித்தவுடன், ஜனாதிபதி அதில் தலையிட்டார். அதுவும் தென்பகுதி தீவிரவாதத்தின் மீதான ஜனாதிபதியின் பயத்தால் ஏற்பட்ட ஒரு விளைவாகும்.  

இவ்வாறு, வடக்கிலும் தெற்கிலும் இப்போது, தீவிரப் போக்குடையவர்களின் கையோங்கிக் கொண்டு வருகிறது. இந்த நிலையில் தான், இனப் பிரச்சினை விடயத்தில் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டியுள்ளது. 

இரு புறத்திலும் தீவிரப் போக்குடையவர்கள் பதவிக்கு வந்தால், நிலைமை மேலும் மோசமாகிவிடலாம்.   

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கிலும்-கிழக்கிலும்-தீவிரவாதப்-போக்கின்-செல்வாக்கு/91-222626

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.