Sign in to follow this  
நவீனன்

செக்கச்சிவந்த வானம் திரை விமர்சனம்

Recommended Posts

செக்கச்சிவந்த வானம் திரை விமர்சனம்

 
 

செக்கச்சிவந்த வானம் திரை விமர்சனம்

 

தமிழ் சினிமாவில் ஒரு சிலருக்கு மட்டுமே படம் வெற்றி தோல்வி தாண்டி ஒவ்வொரு படத்திற்கான எதிர்ப்பார்ப்பும் விண்ணை முட்டும். அப்படி படத்திற்கு படம் எதிர்ப்பார்ப்பை எகிற வைப்பவர் தான் மணிரத்னம். அவருடைய இயக்கத்தில் இன்று வெளிவந்துள்ளது செக்கச்சிவந்த வானம்.

ரகுமான் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூறியிருப்பார், இது நாயகன் ஸ்டைல் படம் என்று, மேலும் மணிரத்னம் புல் ஃபார்மில் உள்ளார் என்றும் தெரிவித்தார், அவரின் வார்த்தைகள் உண்மையானதா? பார்ப்போம்.

கதைக்களம்

பிரகாஷ்ராஜ் தமிழகத்தின் மிகப்பெரும் புள்ளி, விஜய் சேதுபதி ட்ரைலரில் சொல்வது போல் மதிப்பிற்கு உரிய கிரிமினல் தான் பிரகாஷ்ராஜ்.

இவரை ஆரம்பத்திலேயே ஒரு கும்பல் கொல்ல முயற்சி செய்கின்றது. அதை தொடர்ந்து அவரின் மூன்று மகன்களும் யார் அப்பாவை இப்படி செய்தார்கள் என தேட ஆரம்பிக்கின்றனர்.

ஒருவரின் மீது ஒருவருக்கு சந்தேகம், இடையில் பெரியவர் இடத்தை யார் பிடிப்பது என்று போட்டியும் கூட.

ஒரு கட்டத்தில் பிரகாஷ்ராஜ் இறக்க, அவரை கொல்ல முயற்சி செய்தது யார், அந்த இடம் யாருக்கு என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

அரவிந்த்சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி என 4 நடிகர்களை வைத்து இவர்கள் அனைவருக்கும் சரியான கதாபாத்திரம் கொடுத்து அதை வெற்றிக்கரமாக முடிப்பது சாதாரண விஷயமில்லை. அப்படி ஒரு விஷயத்தை மணிரத்னத்தை தவிர வேறு யாராலும் செய்ய முடியாது என்று இந்த வயதில் நிரூபித்து நிமிர்ந்து நிற்கின்றார்.

அரவிந்த்சாமி படத்தின் 4 கதாபாத்திரங்களில் கை ஓங்கி நிற்பது இவருக்கு தான், முரடன் அப்பா சொல்வதை மட்டுமே கேட்டு சுதந்திரம் என்றே இல்லாமல் அடிதடி என்று வாழ்ந்தே, வாழ்க்கையை ஓட்டுகின்றார். அவர் அப்பாவின் இடத்தை பிடிக்க விரும்புவது, அதற்கான விஷயங்களை மேற்கொள்வது, அதன் இழப்பு, சோகம், வருத்தம் என செம்ம ஸ்கோர் செய்கின்றார்.

வெளிநாட்டு ஜாலி பறவைகளாக அருண்விஜய், சிம்பு. எல்லோருக்கும் ஒரே நோக்கம் பிரகாஷ்ராஜ் இடத்திற்கு யார் வருவது என்பது தான், அருண் விஜய் செம்ம ஸ்டைலிஷாக இருக்கின்றார், இவரை வைத்து எத்தனை பெரிய ஆக்‌ஷன் காட்சிகளையும் அசால்ட்டாக எடுத்துவிடலாம், அதிலும் நீச்சல் குளத்தில் விழுந்து எழுந்து செல்லும் காட்சி பிரமிப்பு.

சிம்பு கடைக்குட்டி, அண்ணனால் தனக்கு ஒரு வலை சுற்றப்படுகின்றது என அறிந்து அவர் ஒரு கேங்கை தேற்றி களத்தில் இறங்குகின்றார். நீண்ட நாட்களுக்கு பிறகு சிம்புவிற்கு பல எமோஷனில் நடிக்கும் ஒரு வாய்ப்பு, அதுவும் தன் அம்மாவிடம் ‘நீ எனக்கு மட்டும் அம்மாவா இருமா’ என்று அழும் இடத்தில் சூப்பர். இந்த சிம்பு தான் இத்தனை நாட்கள் மிஸ்ஸிங்.

விஜய் சேதுபதி அட மணிரத்னம் படத்தில் மீண்டும் ஒரு வைலன்ஸ் சைட் மௌனராகம் கார்த்திக் என்றே சொல்லலாம். அவருக்கே உரிய ஸ்டைலில் வசனத்தில் வரும் காட்சிகளில் எல்லாம் சிக்ஸர் தான், கடைசி வரை ‘நீங்க நல்லவரா, கெட்டவரா?’ என்று ஆடியன்ஸ் கேட்கும்படியே அவர் கதாபாத்திரம் கொண்டு போனது ரசிக்க வைக்கின்றது.

இவர்களை தவிர ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் என பெரிய பட்டாளமே இருந்தாலும், பிரகாஷ்ராஜ், ஜெயசுதா நடிப்பு தனித்து நிற்கின்றது. கேங்ஸ்டர் கதை தளபதி, நாயகனுக்கு பிறகு மணிரத்னம் தொட்டு இருக்கு களம்.

ஆனால், இன்றும், தன் இடம் தனக்கு தான் என நிரூபிக்கின்றார், ‘இதெல்லாம் எதுக்கு சொடக்கு போட்டால் இந்த உயிர் இப்படி போய்டும், நீ நான், நாளைக்கு பிறக்க போறவன் வரைக்கும் சைபர்’ தான் என வரும் வசனம் எல்லாம் ஆயிரம் அர்த்தம்.

படத்தின் ஐந்தாவது ஹீரோ ரகுமான் தான், பாடல்கள் மாண்டேஜாக வந்தாலும், பின்னணியில் படத்தை தூக்கி வேற லெவலுக்கு கொண்டு செல்கின்றார். அதேபோல் சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு பல இடங்களை மிக அழகாக படம்பிடித்து காட்டியுள்ளது.

க்ளாப்ஸ்

படத்தின் திரைக்கதை, இத்தனை கதாபாத்திரத்தை வைத்து அதை அழகாக கொண்டு சென்றவிதம்.

நடிகர், நடிகைகள் நடிப்பு, முடிந்தளவு எல்லோரும் ஸ்கோர் செய்துள்ளது.

கிளைமேக்ஸ் டுவிஸ்ட் ட்ரைலரை பார்த்து அப்படியே படம் செல்கின்றது என்று நினைக்கும் தருணத்தில் தடம் மாறும் கிளைமேக்ஸ்.

படத்தின் இசை, ஒளிப்பதிவு என டெக்னிக்கல் விஷயங்கள்.

பல்ப்ஸ்

மணிரத்னம் படத்திற்கே உண்டான கொஞ்சம் அதுவும் இரண்டாம் பாதியில் மெதுவாக நகரும் சில காட்சிகள் (ஆனால், கதைக்கு அதுவும் தேவை தானே).

ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதிராவ் இவர்கள் எல்லாம் நட்சத்திர அந்தஸ்திற்காகவே தவிர பெரிதும் கவரவில்லை.

மொத்தத்தில் ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் மணிரத்னம் இஸ் பேக்.

 
 

 

 

https://www.cineulagam.com/films/05/100966?ref=reviews-feed

Share this post


Link to post
Share on other sites

தமிழில் ஆக்‌ஷன் சினிமாக்களின் டான்.. மணிரத்னம்! #Verified செக்கச் சிவந்த வானம் விமர்சனம்

 
 
தமிழில் ஆக்‌ஷன் சினிமாக்களின் டான்..  மணிரத்னம்!  #Verified செக்கச் சிவந்த வானம் விமர்சனம்
 

சென்னையின் செல்வாக்கான மாஃபியா சேனாபதி. அவருக்குப் பின் அவர் அரியாசனத்தில் அமரப்போவது யாரென அவர் மகன்களுக்குள் நடக்கும் வாரிசு யுத்தமே `செக்கச்சிவந்த வானம்'.

மாஃபியா சேனாபதிக்கு மூன்று மகன்கள். மூத்த மகன் வரதராஜ், இரண்டாவது மகன் தியாகராஜ், கடைக்குட்டி எத்திராஜ். ஒருநாள், சேனாபதியும் அவர் மனைவியும் செல்லும் காரில் வெடிகுண்டு வீசப்படுகிறது. இருவரும் பலத்த காயங்களுக்குள்ளாகிறார்கள். இந்த கொலை முயற்சி செய்தியைக் கேட்டு பதறி அடித்து ஓடிவருகிறார்கள் மூன்று மகன்களும். `தந்தையைக் கொலை செய்ய முயற்சி செய்து யார்' மற்றும் `அவருக்குப் பின் வாரிசு யார்' என்ற இரு கேள்விகள் மூவரையும் தோட்டாவாகத் துளைத்தெடுத்து பித்துப் பிடிக்க வைக்கிறது. இந்த இருபெரும் கேள்விக்குறிகளின் பதிலறிந்து நிறுத்தற்குறி வைக்கும் பயணத்தில் ரத்தம் தெறிக்கத் தெறிக்க செக்கச்சிவப்பாய் பரபரக்கிறது திரைக்கதை. 

CVV Arvindswamy

 

 

செக்கச்சிவந்த வானத்தில் அவ்வளவு நட்சத்திரங்கள், அனைத்தும் அக்னி நட்சத்திரங்கள். பதற்றமும் பரபரப்பும் முகமாய்க் கொண்ட வரதனாக அரவிந்த்சாமி. தொழிலதிபருக்கான அளவெடுத்து செய்யப்பட்ட மூளைக்காரன் தியாகுவாக அருண்விஜய். `கூல் லைக் குக்கும்பர்' எத்தியாக சிம்பு. புரியாத புதிர் ரசூலாக விஜய்சேதுபதி. திரைக்கதையில் நால்வருக்கும் சரிசமமான ஏரியாவைப் பிரித்துக்கொடுக்க, நடிப்பில் பிரித்துமேய்ந்திருக்கிறார்கள். அப்பாவுக்கு விபத்து நேர்ந்த செய்திகேட்டு, `நான் வரணுமா' என சிம்பு தரும் எக்ஸ்பிரஷன்...ப்பா. வெல்கம் பேக் சிம்பு. ஆக்‌ஷன் காட்சிகளில்தான் உடல் ஒத்துழைக்க மறுக்கிறது. மணிரத்னம் படத்திலும் விஜய்சேதுபதி விஜய்சேதுபதியாகவே. ஒட்டுமொத்தப் படத்திலும் அவர் துப்பாக்கியைத் தூக்குவது ஒரே ஓர் இடத்தில்தான். படத்தில் அவருக்கு உடல்தான் துப்பாக்கி வார்த்தைகள்தாம் தோட்டா. அசால்டான உடல்மொழியும் நக்கலான வசன உச்சரிப்புமாய்த் தெறிக்கவிட்டிருக்கிறார் மனிதர். 

 

 

CVV Stills

எல்லாம் இழந்து எதற்கும் துணிந்து, `நீ சைபர் நான் சைபர்' என மரணத்தின் விளிம்பில் ஒருவன் மிருகமாக உருமாறும் காட்சி, பதறவைக்கிறார் அரவிந்த்சாமி. தியாகு கதாபாத்திரத்துக்கு அருண் விஜய்யைத் தவிர வேறு ஆப்ஷன் இல்லை. இன்னமுமே அவரைப் பயன்படுத்தியிருக்கலாம் என நினைக்க வைத்துவிடுகிறார் அருண்விஜய். இப்படித் தனித்தனியாக வரும் காட்சிகளிலேயே கெத்துக் காட்டுபவர்கள், காம்பினேஷன் காட்சிகளில் ஓவர் ஆக்டிங் செய்யாமல் ஒருவருக்கொருவர் இடம் கொடுத்து படத்தை வேறொரு தளத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். வரதனின் மனைவி சித்ராவாக ஜோதிகா. `நல்லாருப்பியா தம்பி நீ... நல்லாருப்பியா' என சிம்புவிடம் போனில் அழும் காட்சியில்தான் யாரென அழுத்திச் சொல்லியிருக்கிறார் ஜோ. தியாகுவின் மனைவி ரேணுவாக ஐஸ்வர்யா ராஜேஷ். எத்தியின் மனைவி சாயாவாக டயானா எரப்பா மற்றும் வரதனின் காதலி பார்வதியாக அதிதி. மூவருக்கும் பெரிய கதாபாத்திரம் இல்லை. டயானா எரப்பாவுக்கு அவரின் பெயரைவிட சின்ன கதாபாத்திரம்தான். சில நிமிடங்களே வந்தாலும் சிறப்பாக நடித்துக்கொடுத்திருக்கிறார்கள் மூவரும்.  சேனாபதியாக வரும் பிரகாஷ்ராஜ். சேனாபதியின் மனைவியாக ஜெயசுதா, செழியன் மாமாவாக சிவா ஆனந்த் (படத்தின் இணை எழுத்தாளர்), சின்னப்பதாஸாக வரும் தியாகராஜன் ஆகியோர் கவனம் ஈர்க்கிறார்கள். 

CVV Vijay Sethupathi

டிரெய்லரைப் பார்த்தே கணித்துவிடக் கூடிய கதைதான். அதற்குப் பரபரப்பான திரைக்கதை அமைத்து சீட்டில் கட்டிப்போட்டிருக்கிறார்கள். யதார்த்தமில்லாத பேச்சுமொழி, கொஞ்சம் அந்நியப்பட்டு நிற்கும் உடல்மொழியென முதற்பாதி முழுக்கவே வழக்கமான மணிரத்னம் படமாகத்தான் நகர்கிறது. ஆனால், இவை இரண்டையும் இரண்டாம்பாதியில் அடியோடு மாற்றி, `மணிரத்னம் படம்தானா இது' என ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார். வசனங்களில் தெளிக்கப்பட்டுள்ள நகைச்சுவை அரங்கில் சிரிப்பலைபாய்கிறது. தனது சில க்ளீஷே காட்சிகளை சுயபகடியும் செய்திருக்கிறார் மனிதர். அதில், வீட்டின் உச்சியில் நின்று வெற்றிக்கூச்சல் போடும் அருண்விஜய்யைப் பற்றி `உங்கண்ணன் லூஸு மாதிரி மாடில நின்னு கத்திட்டு இருக்கானாம். செக்யூரிட்டி ஃபோன் பண்ணான்' என  சிம்புவிடம் விஜய்சேதுபதி நக்கல் செய்யுமிடம் தாறுமாறு! 

 

 

திரைக்கதையிலிருக்கும் பல லாஜிக் மீறல்களும் இதை மற்ற மணிரத்னத்தின் படங்களிலிருந்து தனித்துக் காட்டுகிறது.  இவ்வளவு பெரிய சென்னையையும் ஒரே ஒரு மாஃபியா கும்பல் குத்தகைக்கு எடுத்தாற்போல், சென்னை எங்கும் அவர்கள் மட்டும்தான் இருக்கிறார்கள். ஸ்மார்ட்போனைப் போல கையில் எந்நேரமும் துப்பாக்கியோடு அவ்வளவு அசால்டாக ஊருக்குள் சுற்றுகிறார்கள். போலீஸ் தூங்குகிறதா, பொதுமக்கள் என்ன தக்காளித்தொக்கா. கடைகள், அலுவலகங்கள், பள்ளிவளாகங்கள் என நினைத்த இடங்களில் எல்லாம் நுழைகிறார்கள், சண்டை பிடிக்கிறார்கள், சாமானை உடைக்கிறார்கள். திரைக்கதையில் இருக்கும் முக்கால்வாசி ட்விஸ்ட்களை முன்கூட்டியே கணித்துவிட முடிவது படத்தின் பெரும் மைனஸ்.

CVV Simbu

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் `பூமி பூமி பாடல்' ஒன்றுபோதும். படத்தின் மொத்த ஆன்மாவும் அதுதான். பல இடங்களில் தடதடக்கும் பின்னணி இசை, சில இடங்களில் மௌனமே ராகமாகப் படபடக்கிறது, பயம் தொற்றுகிறது. சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவில் ஆங்கிள்கள் அல்டிமேட். லைட்டிங்கில் விளையாடியிருக்கிறார். குறிப்பாக இந்தக் காட்சியில், குறிப்பாக அந்தக் காட்சியில் என்றெல்லாம் சொல்ல இடம் கொடுக்காமல் எல்லாக் காட்சியையும் ஒரே தரத்தில் கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு ஃப்ரேமும் ஸ்க்ரீன்ஷாட் அடித்தால் வால்பேப்பர்கள்.  கலை இயக்கமும் ஆடை வடிவமைப்பும் விஷுவலாக இன்னும் அழகு சேர்த்திருக்கிறது. படத்தின் விறுவிறுப்புக்குப் பெரும்காரணகர்த்தா படத்தொகுப்பாளர் ஶ்ரீகர்பிரசாத். எந்த இடத்திலும் தேங்கி நிற்காதொரு படத்தொகுப்பு. திலீப் சுப்பராயனின் சண்டை வடிவமைப்பு செம நேர்த்தி, ரத்த வாடையை மட்டும் குறைத்திருக்கலாம். 

ஆக, கீச் கீச் என்றது, கிட்டே வா என்றது, லாஜிக் மீறல்களையும் அதீத வன்முறையையும் தவிர்த்திருந்தால் படம் செம என்றது..!

https://cinema.vikatan.com/movie-review/138200-chekka-chivandha-vaanam-movie-review.html

Share this post


Link to post
Share on other sites

செக்கச் சிவந்த வானம் - சினிமா விமர்சனம்

முரளிதரன் காசிவிஸ்வநாதன்பிபிசி தமிழ்
செக்கச் சிவந்த வானம்படத்தின் காப்புரிமைTWITTER
   
திரைப்படம் செக்கச் சிவந்த வானம்
   
நடிகர்கள் அரவிந்த் சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், ஜோதிகா, ஜெயசுதா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், தியாகராஜன், டயானா எரப்பா, மன்சூர் அலிகான்
   
ஒளிப்பதிவு சந்தோஷ் சிவன்
   
இசை ஏ.ஆர்.ரஹ்மான்
   
இயக்கம் மணிரத்னம்
   
   

காற்று வெளியிடை படத்திற்குப் பிறகு மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம்.

கடல், ஓ.. காதல் கண்மணி, காற்று வெளியிடை படங்களால் சோர்ந்து போயிருக்கும் அவரது ரசிகர்களுக்கு இந்தப் படம் சற்று உற்சாகமளிக்கக்கூடும்.

தாதாவான சேனாதிபதிக்கு (பிரகாஷ் ராஜ்) மூன்று மகன்கள். சேனாதிபதியும் அவரது மனைவியும் (ஜெயசுதா) காரில் போய்க்கொண்டிருக்கும்போது அவரைக் கொல்ல சிலர் முயல்கிறார்கள்.

சேனாதிபதியின் மகன்களான வரதன் (அரவிந்த் சாமி), எத்தி (சிம்பு), தியாகு (அருண் விஜய்) ஆகிய மூவரும் தந்தையைக் குறிவைத்தவனைப் பழிவாங்க விரும்புகிறார்கள்.

போட்டி தாதாவான சின்னப்பதாஸ் (தியாகராஜன்), மனைவியின் தம்பியான செழியன் (சிவா ஆனந்த்), மருமகள் (ஜோதிகா), மகன்கள் என பலர் மீதும் கோபம் திரும்புகிறது.

செக்கச் சிவந்த வானம்படத்தின் காப்புரிமைTWITTER

இதற்கு நடுவில் சேனாதிபதி இறந்துவிட, தந்தையின் இடத்திற்கு மகன்கள் மூவருமே போட்டிபோடுகிறார்கள்.

வரதனின் நண்பனும் காவல் துறையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டவருமான ரசூல் (விஜய் சேதுபதி) தனியாக ஒரு விளையாட்டை ஆரம்பிக்கிறார். ஒரு சிறிய திருப்பத்தோடு படம் முடிகிறது.

உறவுச் சிக்கல்களை விட்டுவிட்டு ஒரு தாதா கதைக்கு மணிரத்னம் திரும்பியிருப்பதே ரசிகர்களுக்கு உற்சாகமளிக்கக்கூடும்.

துவக்கத்தில் சேனாதிபதி தாக்கப்பட்டவுடன் அதை 'யார் செய்திருக்கக்கூடும்' என்பது மாதிரியான கதையாக துவங்கி, இடைவேளை தருணத்தில் தாதா குடும்பத்திற்குள் நடக்கும் போட்டியாக மாறுகிறது.

முதல் பாதியில் இயக்குநர் வைத்திருக்கும் திருப்பம் சீக்கிரமே பார்வையாளர்களுக்கு புரிந்துவிட்டாலும் அதனை முழுமையாக அவிழ்க்காமல் படம் நெடுக்க எடுத்துச் செல்வது சுவாரஸ்யம்.

அதே போல படத்தின் இறுதியில் வரும் திருப்பமும் நன்றாகவே இருக்கிறது.

செக்கச் சிவந்த வானம்படத்தின் காப்புரிமைTWITTER

தந்தையின் இடத்தைப் பிடிக்க மூன்று மகன்களும் நடத்தும் நரவேட்டைதான் படத்தின் மையப்புள்ளி.

அந்தக் கட்டத்திற்கு படம் வந்து சேர்ந்தவுடன் படம் விறுவிறுப்பானாலும், அதுவரை படத்தில் தென்படும் பிரச்சனைகள் ரொம்பவுமே சோதிக்கின்றன.

தாதாக்கள் சுட்டுக்கொண்டேயிருக்கிறார்கள், ராணுவத்தில் பயன்படுத்தும் வெடிகுண்டை காருக்குள் வீசுகிறார்கள், பாலியல் விடுதியில் துப்பாக்கிச் சூடு நடக்கிறது - ஆனால், காவல்துறை கண்டுகொள்வதேயில்லை.

அவ்வப்போது காவல்துறை அதிகாரி ஒருவர் கூப்பிட்டு சமாதானம் பேசுவதோடு சரி. சேனாதிபதியின் மகன்கள் மூவரும் எந்த நாட்டிலும் எதை வேண்டுமானாலும் செய்யும் சக்தி படைத்தவர்களாக வேறு இருக்கிறார்கள்.

அதனால், சேனாதிபதி என்ன தாதா வேலை பார்க்கிறார், வெளிநாட்டில் இருக்கும் இரண்டாவது மகன் என்ன செய்கிறார் போன்ற கேள்விகளும் அவ்வப்போது தோன்றி மறைகின்றன.

தவிர, மணிரத்னம் படங்களில் எல்லாமே, ஒருவருக்கொருவர் பேசுவது மிக செயற்கையாகவே இருக்கும். அந்தப் பிரச்சனை இந்தப் படத்திலும் இருக்கிறது.

செக்கச் சிவந்த வானம்படத்தின் காப்புரிமைTWITTER

அதனால், ஒரு குடும்பத்திற்குள் நடக்கும் மோதல் என்பதாக பல சமயங்களில் மனதில் பதியாமல் போகிறது இந்தக்கதை.

புதுச்சேரியில் ஒரு பாலியல் விடுதில் நடக்கும் துப்பாக்கிச் சண்டை சுத்தமாகப் பொருந்தவில்லை.

நூற்றுக்கணக்கான பெண்கள் உள்ள பாலியல் விடுதியில், துப்பாகிச் சண்டை நடந்து ஆட்கள் விழுந்துகொண்டிருக்கும்போது அங்கேயிருக்கும் பெண்கள் அப்போதும் வாடிக்கையாளர்களைப் பிடிக்கப்பார்க்கிறார்கள்!

அதேபோல துபாயில் இருக்கும் தியாகுவின் வீட்டிற்கு நான்கு தடியர்கள் புகுந்து போதைப் பொருளை வைத்துவிட்டுச் செல்கிறார்கள்.

தியாகுவின் மனைவி போலீசுக்கு போன் செய்தால், அவர்கள் வந்து தியாகுவின் மனைவியைக் கைதுசெய்கிறார்கள். துபாய் போலீஸ் அவ்வளவு சிறுவர்களா? சிசிடிவி காட்சிகளைப் பார்க்க மாட்டார்களா?

வரதனின் காதலியாக வரும் அதிதி ராவின் பாத்திரம் படத்திற்கு தேவையில்லாத ஓர் ஆணி.

தாதாவாக நடிப்பது பிரகாஷ் ராஜிற்கு அல்வா சாப்பிடுவதைப் போல. மனிதர் பின்னுகிறார். அவரை விட்டுவிட்டால் சிம்புவும், விஜய் சேதுபதியும் ஜொலிக்கிறார்கள்.

சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் சந்தேகமில்லாமல் படத்தின் பலங்களில் ஒன்று.

பாடல்கள் எதுவும் தனியாக வராமல் பின்னணியில் ஒலிப்பது, ஆசுவாசமளிக்கிறது. வசனங்களில் இருக்கும் ரசிக்க முடியாத செயற்கைத்தன்மை படத்தின் முக்கியமான பலவீனம்.

மணிரத்னத்தின் ரசிகர்களைப் பொறுத்தவரை, அவர் மீண்டும் தலையெடுக்கும் வகையிலான ஓர் உற்சாகமான படம்தான் இது.

ஆனால், ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்குள் பொருத்திப்பார்த்தால், மோசமில்லாத ஒரு படம். அவ்வளவுதான்.

https://www.bbc.com/tamil/arts-and-culture-45668090

நெட்டிசன் நோட்ஸ்: செக்க சிவந்த வானம் - விசில் சத்தங்களோட மணிரத்னம் படம் பார்த்து எவ்ளோ வருஷமாச்சு!

 

 
gbhjpng

மணிரத்னம் இயக்கத்தில் பிரகாஷ் ராஜ், அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய், சிம்பு, ஜோதிகா,ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் ஆகியோர் நடித்துள்ள செக்கச் சிவந்த வானம்'  இன்று வெளியாகியுள்ளது.

இந்த படம் குறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்தை பதிவிட்டு வருகிறார்கள் அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

 
 

Maathevan

‏விசில் சத்தங்களோட மணிரத்னம் படம் பார்த்து எவ்ளோ வருஷமாச்சு!

கடைசியா ராவணன் ரிலீஸ் அப்போ கேட்டது    

ஷ்ஷார்ப் 

‏விஜய் சேதுபதிக்கு படம் ஃபுல்லா வெயிட் கொடுக்கல...

கடைசியா இன்ஸ்பெக்டர் ரஸூல் இப்ராஹீம்னு சொல்லும்போது மொத்த வெயிட்டும் கொடுத்துட்டாரு மணிரத்னம்

செந்தில் வேல்

‏விக்ரம் வேதா படத்திற்கு பிறகு Public review நல்லா வந்திருக்கிறது என்றால் மணிரத்தனம் உழைப்பு தான்.....

Gautham

‏மணி மறுபடியும் ஒரு இருவர் எடுத்திருக்கார் 

பிரகாஷ் ராஜ்- ஜெயலலிதா

அரவிந்த்சாமி- தினகரன்

அருண்விஜய்-ஓபிஎஸ்

சிலம்பரசன்-இபிஎஸ்

விஜய் சேதுபதி-ஸ்டாலின்

பிரகாஷ்

‏படம் செம - முக்கியமா க்ளைமேக்ஸ்      

கவின்தமிழ்

‏மணிரத்னம் பேன்ஸ், சிம்பு பேன்ஸ்க்கு இந்த படம் பிடிக்கலாம்.. ஏன்னா அவங்க முந்தைய படங்களோடு ஒப்பிடு பண்றப்ப இது கொஞ்சம் பரவாயில்லனு தோணும்..

PRAKA

‏செக்க சிவந்த வானம் மினி விமர்சனம்

மணிரத்னம் பக்கா மாஸ் கதையை தன்னோட பாணில எடுத்து மறுபடி வெற்றிக்கொடி நாட்டிட்டார். ஒரு தளபதி நாயகன், குரு வரிசைல மணிரத்னதிற்கு இந்த படம் ஒரு மைல்கல்..

Timepass

‏ புடிச்சிருக்கு . .

ரெம்ப புடிச்சிருக்கு .

 #ManiRatnam is back with bang . . . #CCV

Aanthaiyar

‏#பொன்னியின்செல்வன் படித்த, படிக்காத எல்லோருக்கும் பிடித்த படமாக இருக்கும் #chekkachivandhavaanam   

அதற்காக அடேங்கப்பா என்று பிரமிக்கவும் முடியாது..

அடச்சே என்று சலிப்பாகவும் முடியாது.

ஜஸ்ட் #ManiRatnam  மேஜிக்

PSKK

‏இது தான வேணும், எடுத்துக்கோங்க - மணிரத்னம்

kanna

‏"வந்தா ராஜாவா தான் வருவேன்"

- மணிரத்னம்

சி.பி.செந்தில்குமார்

‏தளபதி ,திருடா திருடா படங்களுக்குப்பின் வேகமான திரைக்கதை,மணிரத்னம் ஈஸ் பேக்

ராஜி

‏படத்துல விஜய் சேதுபதி பிண்ணிருக்காப்ள... அவர் கேரக்டர் தான் பெரிய ட்விஸ்ட்டே படத்துல..

அவருக்கு அப்பரம் அருண்விஜய் கேரக்டர் செம்மயா டிசைன் பண்ணிருக்காரு மணிரத்னம்.. ஜோதிகா STR அரவிந்தசாமினு படத்துல எல்லாருக்குமே equal scope..

மணிரத்னத்தோட தரமான இன்னொரு சக்ஸஸ்

திருச்சி மன்னாரு!

‏செக்கச்சிவந்த வானம் செம மாஸ்...

முக்கியமா சிம்பு, விஜய் சேதுபதி வர சீன்ஸ் எல்லாம் விசில் பறக்குது தியேட்டர்ல...

வேற லெவல் மணிரத்னம் படம்!!!

ஏ ஆர் ரஹ்மான் இசை ஒரு ப்ளஸ்..

கன்ஃபார்ம் ப்ளாக்பஸ்டர்!!

https://tamil.thehindu.com/opinion/blogs/article25057846.ece

Share this post


Link to post
Share on other sites

செக்கச்சிவந்த வானம்

Image result for sekka sevantha vaanam

வேறெந்த மணிரத்னம் படமும், “கடலுக்குப்” பிறகு, எனக்கு இந்தளவுக்கு ஏமாற்றமளித்த்தில்லை. ஏன் என்பதை சுருக்கமாய் சொல்கிறேன்.

ஏன் என்பதை சொல்கிறேன்.

பாக்யராஜ் தனது “வாங்க சினிமாவைப் பற்றி பேசலாம்” நூலில் anti-sentiments பற்றி குறிப்பிடுகிறார். நாம் என்னதான் புரட்சிகரமாய் கதை சொல்ல முயன்றாலும், பரீட்சார்த்த முயற்சிகள் செய்தாலும், கதைகூறலில் அடிப்படையான செண்டிமெண்டுகளை மதிக்க வேண்டும். காதலுக்காக ஒரு பெண் தன் பெற்றோரை விட்டு வருவதாய் காட்டினாலும் அப்போது அவளது தத்தளிப்பை, குழப்பத்தை, கண்ணீரையும் உணர்த்த வேண்டும் (“காதல்” படத்தில் போல). ஜாலியாய் பையை தூக்கிக் கொண்டு போனில் பாட்டுக் கேட்டபடி ஒரு பஸ் பிடித்து காதலனை சந்தித்து இருவரும் “லாலாலா” என பாடியபடி ஊரை விட்டு ஓடுவதாய் காட்டக் கூடாது. என்னதான் பெற்றோர் சித்திரவதைப் படுத்தினாலும் பெண் தன் பெற்றோரை விஷம் வைத்து கொன்று விட்டு ஓடிப் போவதாய் காட்டக் கூடாது. இவையெல்லாம் உலகத்தில் நடக்கிறது தான் – ஆனால் சினிமாவில் மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. பல படங்கள் (தன் படமும் உட்பட) இந்த anti-sentimentகளாலே தோல்வியுற்றுள்ளன என பாக்யராஜ் சொல்கிறார். 

 “செக்கச்சிவந்த வானத்தை” பொறுத்தவரையில் anti-sentimentகளின் இமய மலையாக உள்ளது. யார் யாரோ சாகிறார்கள், துப்பாக்கி வெடிக்கிறது, ரத்தம் கொப்பளிக்கிறது, கத்துகிறார்கள், அழுகிறார்கள் – ஆனால் பார்வையாளர்கள் ஏதோ அரசியல் போஸ்டரை வெறித்துப் பார்க்கும் பசுமாட்டைப் போல அமர்ந்திருக்கிறார்கள்.

உ.தா., அரவிந்த் சாமியின் மனைவி ஜோதிகா. அரவிந்த் சாமிக்கு அதிதி ராவுடன் கள்ளத்தொடர்பு. ஒருநாள் இந்த கள்ள உறவை கண்டுபிடித்து ஜோதிகா சின்னவீட்டுக்கு வந்து அதிர்ச்சி கொடுக்கிறார். ஆனால் ஜோதிகாவுக்கு தன் கணவனின் கள்ளத்தொடர்பைக் கண்டு கோபமோ அவரைப் பார்த்து அதிதி ராவுக்கு அச்சமோ இல்லை – ஏதோ பக்கத்து வீட்டுக்கு வந்த விருந்தாளியைப் போல ஜோதிகாவை எதிர்கொண்டு பஞ்ச் வசனமெல்லாம் பேசுகிறார். ஜோதிகாவும் ஏதோ எதிர்வீட்டு ஆண்டி சின்னக் குழந்தையை பிடித்து ஏசுவது போல திட்டுகிறார். அவ்வளவு தான். இதற்கு அடுத்து ஜோதிகா தன் கணவனை குற்றம்சாட்டுவதோ கோபிப்பதோ இல்லை – ஒரு காட்சியில் லேசாய் கிண்டலடிக்கிறார். இந்த நிலையில் ஒருவேளை இவர்கள் இடையிலானது ஒரு உறவற்ற உறவோ, உணர்ச்சியற்ற திருமண பந்தமோ என நாம் நினைக்கிறோம். ஒருவேளை ஜோதிகா அரவிந்த் சாமியின் சகோதரியோ என்ற குழப்பம் கூட எனக்கு பாதி படம் வரை இருந்தது.

 ஒருவேளை அரவிந்த் சாமி அதிதியை தான் காதலிக்கிறாரோ? ஆனால் அரவிந்த் சாமிக்கும் அவரது சகோதரர்களுக்கும் மோதல் வர தம்பியான சிம்பு அண்ணனை மிரட்ட அதிதியை பிடித்து வைத்துக் கொண்டு மிரட்டுகிறார். அரவிந்த் சாமி பதறுகிறார். உணர்ச்சிவசப்படுகிறார். ஓ, இவர் அவளை காதலிக்கிறார் என நாம் ஒருவாறு புரிந்து கொள்ள, அடுத்தடுத்த காட்சிகளில் அவர் அதிதி எங்கே போனார் என்றே கேட்பதில்லை, அவளைத் தேடுவதும் இல்லை, அதிதியும் தான் காதலிக்கும் அரவிந்த் சாமி எங்கே என்று கூட கேட்பதில்லை. தப்பித்து ஓடி விடுகிறார். இந்த பாத்திரங்கள் எல்லாரும் தன்னலமானவர்கள், போலியானவர்கள் என இயக்குநர் காட்டி இருந்தால் பரவாயில்லை, புரிந்து கொள்ளலாம். ஆனால் சீரியஸாய் அன்பு பாராட்டி விட்டு அடுத்த நிமிடம் எனக்கென்ன என இருந்து விடுகிறார்கள். தன் மனைவியை பற்றி அக்கறையே இல்லாமல் கள்ளக்காதலி மீது பாய்ந்து முத்தமிடும் அரவிந்த் சாமி, அப்பா அம்மாவைப் பற்றிக் கூட கவலையின்றி அப்பாவைக் கொன்று, அம்மாவை விதவையாக்கி என்னென்னமோ ரத்தக் களரியெல்லாம் செய்யும் அரவிந்த சாமி தன் மனைவி சுடப்பட்ட பின் திடீரென விழுந்து விழுந்து அழுகிறார். தன் மீதான தாக்குதல்கள் அதிகரித்த பின் அவர், ரொம்ப அக்கறையாய், தனது குழந்தைகளை தனியாய் ஊருக்கு அனுப்புகிறார். ஆனால் மனைவி இறந்த பின் குழந்தைகளுக்கு தகவல் சொல்லவோ அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என விசாரிப்பதோ இல்லை.

படம் முழுக்க இப்படித் தான் போகிறது. பாத்திரத்தின் உணர்ச்சி நிலை, பரஸ்பர ஒட்டுதல், நோக்கம் என எதைக் குறித்தும் தெளிவில்லை. இறுதி திருப்பம் சிறப்பு. ஆனால் கடைசியில் ஏன் விஜய் சேதுபதி தன் நண்பனையும் தனக்கு உணவளித்த நண்பன் குடும்பத்தையும் வேரறுக்க துணிய வேண்டும், அந்த சீக்ரெட் ஆபரேஷனில் ஈடுபடுவதன் மூலம் அவர் அடைவதென்ன என்பது குறித்த எந்த தெளிவும் இல்லை. தன் அப்பா ஒரு கேங்க்ஸ்டர் என சின்ன வயதில் அறிய வந்து தான் துடித்துப் போனதாய் சொல்கிறார் விஜய் சேதுபதி. அவரும் கேங்க்ஸ்டர் ஆகி விட மாட்டார் என தன் அம்மாவிடம் உறுதியளித்த்தாய், அதனாலே போலீசில் சேர்ந்ததாய் சொல்கிறார். ஆனால் என்னதான் நேர்மையான போலீஸ் என்றாலும் தன் நண்பனையும் அவன் குடும்பத்தையும் அழிக்கும் அளவுக்கு அவர் ஏன் செல்ல வேண்டும்? என்ன ” “தங்கப் பதக்கம்” சிவாஜியா? ஒருவேளை விஜய் சேதுபதியின் அப்பா இறக்க வில்லை என்று வைப்போம். இவர் போலீஸ் ஆகி விடுகிறார். ரொம்ப நாள் கழித்து தன் அப்பா ஒரு கேங்க்ஸ்டர் என தெரிய வருகிறது. அப்போது இதே போல ஒரு சீக்ரெட் ஆபரேஷன் செய்து தன் அப்பாவை போட்டுத் தள்ளி விடுவாரா, கூலாக?

அப்பா டானாக வரும் பிரகாஷ் ராஜின் பணத்தில் தான் மந்திரி சபையே நடக்கிறது என ஒரு வசனம் வருகிறது. ஆட்சி செய்பவர்களே பிரகாஷ் ராஜின் பினாமிகள். ஆனால் அவர் இறந்த பின் ஆளுங்கட்சி தரப்பில் இருந்து எந்த சலனமும் இல்லை. ஒரு அரசாங்கத்தையே ஒருவர் தன் பணபலத்தால் இயக்குகிறார் என்றால் அவரது பிள்ளைகளை காவல் துறை அவ்வளவு சுலபமாய் ஒரு சீக்ரெட் ஆபரேஷன் மூலம் அழிக்க முடியுமா? பிள்ளைகள் இடையே போட்டி நிலவும் போது இவர்களால் பலன் பெறும் மந்திரிகள் தலையிடாமலா இருப்பார்கள்? இதைப் பற்றியெல்லாம் மணிரத்னம் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை.

யாருடன் பார்வையாளர்கள் மனம் ஒன்ற வேண்டும், யாரை ஆதரிக்க வேண்டும், யாருக்காக மனம் கலங்க வேண்டும் என்பதில் எந்த தெளிவும் இல்லை. ஆக, யார் செத்தாலும் பார்வையாளர்கள் அசையாமல் மலங்க மலங்க பார்க்கிறார்கள் – சிரிக்கிறார்கள், அடுத்து வரப் போகும் வசனத்தை ஊகிக்கிறார்கள். கிளைமேக்ஸ் வரை கேங்க்ஸ்டர்களை ஹீரோக்களாய் காட்டி விட்டு, கடைசியில் மட்டும் இவர்களை கொல்லும் பொருட்டே விஜய் சேதுபதி செயல்படுகிறார் என்றால் அதன் நியாயத்தை காட்ட வேண்டாமா? யார் ஹீரோ என்கிற குழப்பம் படம் முழுக்க உள்ளது. உ.தா., இந்த கேங்ஸ்டர்களால் சமூகத்துக்கு நேரும் தீங்கு, இவர்களின் கொடூரம் ஆகியவற்றை வலுவாய் காட்டி விட்டு கடைசி திருப்பம் வந்திருந்தால் அதை மக்கள் ஏற்றிருப்பார்கள். சகோதரர்களுடன் பரஸ்பரம் அடித்துக் கொள்கிறார்கள் என்பது ஒழிய இப்படத்து கேங்க்ஸ்டர்களின் தீமை என்ன, அவர்களை போலீஸ் ஏன் அழிக்க வேண்டும் என்பதை மணி சார் நீங்க காட்ட தவற விட்டீர்கள்.

தொழில்நுட்ப ரீதியாய் இப்படம் மிகச் சிறப்பு (எல்லா மணிரத்னம் படங்களையும் போல). கதைகூறலில் சில புதிய விசயங்களையும் முயன்று பார்த்திருக்கிறார்கள். காட்பாதர் போல துவங்கி அப்படியே உல்டா செய்து espionage படமாக மாற்றி உள்ளீர்கள். ஆனால் இந்தளவு அடிப்படைகளை கோட்டை விட்டு விட்டு ஒரு பரீட்சார்த்த படம் தேவையா சொல்லுங்கள்?

இப்படத்தின் ஒட்டாத போக்கு, எதற்கும் ஒரு உணர்ச்சிகரமான பின்கதை இல்லாமல் கதையை நகர்த்துவது ஆகிய கதைகூறல் அம்சங்கள் சமகால உளவியலை காட்டுவதாய் கெ.என் சிவராமன் பாராட்டுகிறார். குவிண்டின் டரண்டினோவும் அதைத் தான் செய்கிறார் – ஆனால் Kill Billஇல் உமா தர்மன் தலையில் சுடப்படும் போதும் நம் இதயமும் பதபதைக்கிறது; அதன் இரண்டாம் பாகத்தில் உமா தன் கணவரை கொல்ல நேரும் போது நமக்கு கண்ணீர் வருகிறது. அதில் உள்ள உணர்ச்சி ஆழம் நிச்சயம் மணிரத்னத்தின் இப்படத்தில் இல்லை. 

நீங்கள் வித்தியாசமாய் படமெடுக்க முயன்றாலே இப்படி ஆகி விடுகிறது. பழையபடி ஒரு நல்ல காதல் படமே அடுத்து எடுங்கள் மணி சார்! குவிண்டின் டரண்டினோ வேலையை அவரே பார்த்துக் கொள்வார்.

 

http://thiruttusavi.blogspot.com/2018/09/blog-post_27.html?m=1

Share this post


Link to post
Share on other sites
On 9/28/2018 at 4:02 PM, கிருபன் said:

இப்படத்தின் ஒட்டாத போக்கு, எதற்கும் ஒரு உணர்ச்சிகரமான பின்கதை இல்லாமல் கதையை நகர்த்துவது ஆகிய கதைகூறல் அம்சங்கள் சமகால உளவியலை காட்டுவதாய் கெ.என் சிவராமன் பாராட்டுகிறார். குவிண்டின் டரண்டினோவும் அதைத் தான் செய்கிறார் – ஆனால் Kill Billஇல் உமா தர்மன் தலையில் சுடப்படும் போதும் நம் இதயமும் பதபதைக்கிறது; அதன் இரண்டாம் பாகத்தில் உமா தன் கணவரை கொல்ல நேரும் போது நமக்கு கண்ணீர் வருகிறது. அதில் உள்ள உணர்ச்சி ஆழம் நிச்சயம் மணிரத்னத்தின் இப்படத்தில் இல்லை. 

நீங்கள் வித்தியாசமாய் படமெடுக்க முயன்றாலே இப்படி ஆகி விடுகிறது. பழையபடி ஒரு நல்ல காதல் படமே அடுத்து எடுங்கள் மணி சார்! குவிண்டின் டரண்டினோ வேலையை அவரே பார்த்துக் கொள்வார்.

 

http://thiruttusavi.blogspot.com/2018/09/blog-post_27.html?m=1

 

இன்று இந்தப்படம் பார்த்தேன். இது நல்லதொரு விமர்சனம். எனக்கும் இதேபோல் நிறைய கேள்விகள் இருந்தது. முடிவும் பிடிக்கவில்லை.

ஆனல் Kill-Bill உடன் இதை ஒப்பிட முடியாது. KillBill-1, Kill-Bill-2,  இரண்டுமே  most violent படம் என்றே சொல்லலாம். மேலும் சண்டைக்காட்சிகள் அதில் மிகவும் சிறப்பாக எடுக்கப்பட்டிருந்தது. உமா த்ர்மன் ஜப்பானுக்கு சென்று வில்லன்  குழுவினருடன் மோதும் காட்சி நம்பமுடியவில்லை. கிட்டத்தட்ட ஒர் 25 நிமிடங்கள் நடக்கும் விறுவிறுப்பாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் சலிப்பை தருவதாக அமையும். ஒற்றைகண் பெண்ணுடன் மோதும்காட்சி, காப்பிலி பெண்ணுடம் மோதும் காட்சி, இடையில் காப்பிலியின் குழந்தை பாடசாலையில் இருந்து வரும் காட்சி நல்லதொரு சென்டிமென்டல் சீன். எல்லாம் அருமை.

 

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this