Sign in to follow this  
கிருபன்

ராஸ்பெர்ரி பையில் இயங்குதளம் நிறுவி நிரல் எழுதுவது எப்படி

Recommended Posts

ராஸ்பெர்ரி பையில் இயங்குதளம் நிறுவி நிரல் எழுதுவது எப்படி

நினைவக அட்டை மற்றும் துணைக்கருவிகளும் தேவை

ராஸ்பெர்ரி பை பல மாதிரிகளில் கிடைக்கிறது, பை 3 B மாதிரி அதிக அம்சங்கள் கொண்டது சுமார் ரூ 3200 க்கு கிடைக்கிறது. புதிதாக பை 3 B+ என்ற மாதிரி சுமார் ரூ 3700 விலையில் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. இதைத் தவிர திட்டத்துக்குத் தேவையான துணைக்கருவிகளைத் தனியாக வாங்க வேண்டும். நீங்கள் என்ன வேலைக்குப் பயன்படுத்தப் போகிறீர்களோ அதற்குத் தேவையான துணைக்கருவிகளையும், மின்னேற்றி (charger), தேவைப்பட்டால் உறைபெட்டி (case), குறைந்தபட்சம் 8GB நினைவக அட்டை (SD Card) ஆகியவற்றையும் சேர்த்து வாங்கிவிடவும். 

மின்னணுவியல் திட்டங்களும் செய்யலாம் 

பொதுநோக்க உள்ளீடு / வெளியீடு (General Purpose Input / Output – GPIO) மின்செருகிகள் 40 உள்ளன. இவற்றின் வழியாக மின்விளக்கு போன்ற வெளிப்புற சாதனங்களைக் கட்டுப்படுத்த முடியும் மற்றும் உணர்கருவிகளையும் இணைக்க முடியும். ஒரு ஈரப்பத உணரியை மின்செருகிகளில் இணைத்து ஒரு மின் நீர்க்குழாய்வாயிலையும் வேறு மின்செருகிகளில் இணைத்து அதைக் கட்டுப்படுத்துவதன் மூலம் உங்கள் வீட்டில் பூந்தொட்டிகள் காய்ந்தால் உடன் தண்ணீர் திறந்துவிட தானியங்கி நீர்ப்பாசன அமைப்பு உருவாக்கலாம். தேவையான மென்பொருட்களை நிறுவி நிரல் எழுதியபின் இம்மாதிரி தானியங்கியாக வேலை செய்யும்போது விசைப்பலகை, சுட்டி, கணினித்திரை எதுவும் தேவைப்படாது.

ராஸ்பெர்ரி பை நினைவக அட்டையில் இயங்குதளம் நிறுவுதல்

வாங்கியவுடன் உங்கள் பை தானாகவே எந்த வேலையையும் செய்யாது. முதல் வேலையாக அதில் இயங்குதளம் நிறுவ வேண்டும். இதற்கு நினைவக அட்டை (SD Card) செருகி அதில் எழுதக்கூடிய வேறொரு கணினி தேவை. தமிழில் ராஸ்பெர்ரி பை நினைவக அட்டையில் இயங்குதளம் நிறுவுதல் பற்றிய அறிமுக காணொலி ஒன்று இங்கே.

 1. ராஸ்பெர்ரி பையின் அதிகாரப்பூர்வமான இணையதளத்துக்குச் செல்லுங்கள்.
 2. பதிவிறக்கம் பக்கத்துக்குச் சென்று ராஸ்பியன் (Raspbian) இயங்குதளத்தைத் (Operating System – OS) தேர்ந்தெடுக்கவும்.
 3. மேசைத்தளம் சேர்த்து (with desktop) உள்ள இயங்குதளத்துக்கான குறுக்கக் கோப்பைப் (zip file) பதிவிறக்கவும். இதன் அளவு 1.8 GB. விரித்த (unzip) பிறகு, இது 4.8 GB ஆகும். 
 4. இந்த குறுக்கப்பட்ட கோப்பை விரிப்பதற்கு லினக்ஸ் கணினி என்றால் அன்ஜிப் (Unzip) பயன்படுத்தலாம். விண்டோஸ் கணினி என்றால் 7-ஜிப் (7-Zip) மென்பொருள் தேவை. இவற்றில் ஒன்றைப் பயன்படுத்தி கோப்பை விரிக்கவும் (unzip).
 5. பதிவிறக்கம் செய்யப்பட்ட ராஸ்பியன் இயங்குதளத்தை நினைவகத்தில் எழுத ஒரு வடிவ எழுதி தேவை. லினக்ஸ் என்றால் எட்சர் (Etcher) பயன்படுத்தலாம். விண்டோஸ் என்றால் Win32 Disk Imager பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 
 6. எழுதும்போது எவ்வளவு விழுக்காடு வேலை முடிந்திருக்கிறது என்று காட்டும். இது முழுவதும் முடிந்து செய்திப் பெட்டி வந்தபின் நினைவகத்தை வெளியில் எடுக்கலாம்.
 7. ராஸ்பெர்ரி பையில் விசைப்பலகை, சுட்டி, கணினித் திரை ஆகியவற்றை இணைத்துக் கொள்ளவும். இப்பொழுது மின்னேற்றியை (charger) இணைத்தால் ஒரு சிவப்பு காட்டி விளக்கு எரியும். துவங்குவதற்கு இயங்கு தளம் இல்லை என்று இது காட்டுகிறது.
 8. அடுத்து மின்னேற்றியைக் கழட்டி விட்டு நினைவகத்தைச் செருகவும். திரும்பவும் மின்னேற்றியை இணைத்தால் ஒரு பச்சை காட்டி விளக்கு விட்டுவிட்டு எரியத் தொடங்கும். இது இயங்கு தளம் ஏற்றலைக் குறிக்கிறது. பச்சை காட்டி விளக்கு எரியத் தொடங்காவிட்டால் நினைவகத்தில் இயங்குதளம் சரியாக நிறுவவில்லை என்று தெரியவரும். அதைச் சரிபார்க்கவும்.
 9. இயங்கு தளம் முழுவதும் ஏற்றியபின் கணினித் திரையில் ஒரு முனையச் சாளரம் (terminal window) தோன்றி அதன் தூண்டி (prompt) நீங்கள் பயனர் பெயர் உள்ளிடக் காத்திருக்கும். பயனர் பெயரை “pi” என்று உள்ளிடவும்.
 10. அடுத்து கடவுச்சொல்லை “raspberry” என்று உள்ளிடவும். (இவற்றைப் பின்னர் மாற்றிக் கொள்ளலாம்).
 11. அடுத்து “sudo startx” உள்ளிட்டால் வரைபட பயனர் இடைமுக மேசைத்தளம் (GUI Desktop) தோன்றும். இனி நீங்கள் வேறு எந்தக் கணினியையும் போலப் பயன்படுத்தலாம், மைன் கிராஃப்ட் (Minecraft) நிகழ்பட ஆட்டம் விளையாடலாம்.
ராஸ்ப்பெரி பை வரைபட பயனர் இடைமுக மேசைத்தளம்

ராஸ்ப்பெரி பை வரைபட பயனர் இடைமுக மேசைத்தளம்

ஸ்க்ராட்ச் மற்றும் பைதான் மொழிகளில் Hello world

எந்தவொரு கணினி மொழியையும் பயிலுவதற்கு முயலும் புதியவர்களின் அல்லது துவக்க நிரலாளர்களின் முதன்முதல் நிரல்தொடரானது Hello world என்பதாகவே இருக்கும். இந்த Hello world எனும் நம்முடைய முதன் முதல் நிரல்தொடரை இரண்டு கணினி மொழிகளில் எவ்வாறு எழுதுவது என இப்போது காண்போம்.

ஸ்க்ராட்ச் (Scratch) என்பது ஒரு வரைகலை தொகுப்பின் அடிப்படையிலான கணினி மொழியாகும். இது கணினி மொழியின் அடிப்படை இலக்கணங்களை ஆழ்ந்து கற்காத தட்டச்சு செய்யத்தெரியாத சிறுவர்கள் கூட மிக எளியதாக நிரல்தொடரை எழுதுவதற்கு உதவுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சிறந்த கணினி மொழியாகும். முதலில் இந்த ராஸ்பெர்ரி பை திரையிலுள்ள முதன்மை பட்டியலில் Scratch 2 என்பதை தெரிவுசெய்து சொடுக்குக. பின்னர் விரியும் துணைப்பட்டியலில் Looks என்பதை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் தோன்றிடும் திரையின் say Hello! என்ற தொகுப்பினை பிடித்து இழுத்துவந்து வலதுபுறமுள்ள காலிபணியகத்தில் விட்டிடுக. அதன் பின்னர் உரையை Hello world என்றவாறு மாற்றியமைத்திடுக. பின்னர் இத்தொகுப்பினைத் தெரிவுசெய்து சொடுக்கி அதனுடைய நிரல்தொடரை செயல்படச் செய்திடுக. உடன் நம்முடைய முதன்முதல் நிரல்தொடரின் விளைவு பின்வருமாறு திரையில் தோன்றிடும்.

ஸ்க்ராட்ச் மொழியில் முதல் நிரல்தொடர்

ஸ்க்ராட்ச் மொழியில் முதல் நிரல்தொடர்

பைதான் (Python) என்பது மிகவும் திறன்மிகுந்த தொழில்முறையாளர்கள் மட்டுமல்லாது புதியவர்களும் விளையாட்டாக கற்றுக்கொள்ள முடிந்த ஒரு சிறந்த கணினி மொழியாகும். எளிய ஆங்கிலச் சொற்களைக் கொண்டு பாமரனும் கணினி மொழியை விரைவாகக் கற்கவேண்டும் என்பதே இந்தக் கணினிமொழி உருவாக்கியதன் அடிப்படை நோக்கமாகும். முதலில் இந்த ராஸ்பெர்ரி பை திரையிலுள்ள முதன்மை பட்டியலில் Thonny Python IDE என்பதை தெரிவுசெய்து சொடுக்குக. பின்னர் விரியும் திரையில் print(“Hello world”) என்ற கட்டளைவரியை உள்ளீடு செய்திடுக. அதன் பின்னர் hello3.py எனும் கோப்பாக இந்த நிரல்தொடரை சேமித்திடுக. பின்னர் Run எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் நம்முடைய முதன்முதல் நிரல்தொடரின் விளைவு பின்வருமாறு திரையில் தோன்றிடும்.

பைதான் மொழியில் முதல் நிரல்தொடர்

பைதான் மொழியில் முதல் நிரல்தொடர்

– முனைவர் ச. குப்பன் / இரா. அசோகன்

 

http://www.kaniyam.com/how-to-install-an-operating-system-in-the-raspberry-pi-and-write-code/

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this