சுப.சோமசுந்தரம்

அப்படியென்ன அவசரம் , சித்தி ? - சுப.சோமசுந்தரம்  

Recommended Posts

                                      அப்படியென்ன அவசரம் , சித்தி ?

                                                                                      -சுப.சோமசுந்தரம்

 

          சென்ற சனிக்கிழமை காலை அப்படி மோசமாக விடிந்தது. அம்மா எழுப்பினாள். "ஒங்க மீனா சித்திக்கு (அம்மாவின் தங்கை) நெஞ்சு வலிக்குன்னு சித்தியும் சித்தப்பாவும் ஆஸ்பத்திரிக்குப் போறாங்களாம். வாரியா, போவோம் ?"

 

          எங்கள் வீட்டிற்கும் சித்தி வீட்டிற்கும் ஏறக்குறைய நடுவில்தான் அந்த மருத்துவமனை. நானும் அம்மாவும் அங்கு சென்றடைந்த போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சித்திக்கு முதலுதவி ஆரம்பித்திருந்தார்கள். இதய நோய் மருத்துவர் சொன்னார், "இது massive attack. கொடுத்துள்ள மருந்திலும் ஊசியிலும் stable ஆகிறதா என்று பார்ப்போம்". சித்தியைப் பார்க்க உள்ளே சென்றேன். பேசக்கூடிய நிலையில் இருந்தாள் என்றாலும் தேவையான விடயங்களை மட்டும் பேசுமாறு நாங்களும் மருத்துவர்களும் அறிவுறுத்தினோம். "லேசான வலிதானே ? அதற்குள் விழுந்தடித்து ஓடி வந்துட்டீங்களே ! " என்றாள். "நான்தானே உனக்குத் தலைமகன் ! மேலும் அருகில் வசிப்பவன் நான்தானே !" என்றேன். வழக்கம் போல் வாஞ்சையுடன் சிரித்தாள்.

 

          சுமார் இரண்டு மணி நேரத்தில் தம்பி (சித்தியின் மகன்) தன் மனைவி, குழந்தைகளோடு விருதுநகரிலிருந்து நெல்லை வந்துவிட்டான். மாலையில் இதைவிடப் பெரிய மருத்துவமனைக்கு மருத்துவர் ஆலோசனைப்படி மாற்றினோம். பெரிய மருத்துவமனை என்றால் பெரிதாக நினைக்க வேண்டாம். தேவைப்பட்டால் 'ஸ்டென்ட்' பொருத்தலாம். மற்றபடி நோயுற்றவர்களை வேறு பெருநகரங்களுக்கு அழைத்துச் செல்ல முடியாத நிலையில் பைபாஸ் அறுவை சிகிச்சை என்றால் திருவனந்தபுரத்திலிருந்தோ மதுரையிலிருந்தோ மருத்துவர் வர வேண்டும். இதுதான் இன்றைக்கும் நெல்லை மாநகரின் நிலை. ஆஞ்சியோகிராம் பார்த்து விட்டு மருத்துவர் சொன்னது "முக்கியமான மூன்று தமனிகளில் ஒன்று கையே வைக்க முடியாத அளவிற்குப் பழுதாகி விட்டது. மற்ற இரண்டிலும் அநேகமாக 100 சதவீத அடைப்பு உள்ளது. இரண்டு நாட்களில் condition stable ஆனால் ஸ்டென்ட் வைக்கலாம். ஒன்றிரண்டு மாதங்கள் கழித்து சென்னையிலோ பெங்களூருவிலோ மருத்துவம் பார்க்கலாம்."

 

          முன்பே ஒன்றிரண்டு முறை எச்சரிக்கை மணி அடித்திருக்க வேண்டும். ஏதோ வாய்வுப்பிடி என்று சித்தி அலட்சியப்படுத்தியிருப்பாள். இப்போதும் அப்படித்தான் நம்பிக் கொண்டிருந்தாள் என நினைக்கிறேன். மறுநாள் காலை பெங்களூருவிலிருந்து தங்கை (சித்தியின் மகள்) வந்த பின்பு அவளிடம் வீட்டில் புதிதாக அமைத்த குழாயில் வால்வை எப்படி மாற்றி நல்ல தண்ணிரோ உப்புத் தண்ணிரோ ஒரே குழாயில் வரவைப்பது  என விளக்கியதிலிருந்தே தெரிந்தது - இவளது இதய வால்வோடு இவள் வாழ்வுக்காக நாங்கள் போராடுகிறோம் என்பதை இவள் அறியவில்லை என்று.

 

          இதுவரை படர்க்கையிலிருந்த என் சித்தி இனி முன்னிலையில். செவ்வாய்க்கிழமை காலையில் கூட தங்கையிடம், "தாலிச் சங்கிலியைப் போட்டு விடு. மூளிக் கழுத்தோடு எப்படித்தான் இருப்பது ?" எனக் கேட்டாயே ! அவசர சிகிச்சைப் பிரிவில் அவ்வப்போது பரிசோதனைகள் செய்ய வசதியாக நகைகள் அணிந்து கொள்ள அவர்கள் அனுமதிப்பதில்லை. அப்போதும் கூட தெரிந்தது - நெருங்கிவிடும் காலனின் நிழல் கூட உன்மீது படவில்லை என்று. அன்று மதியமே மீண்டும் மாரடைப்பு. மருத்துவர்கள் போராடினார்கள். "நான்கு நாட்கள் நீங்கள் பார்க்க, பேச அவளை விட்டு வைத்தேன். போதுமடா" என்று காலன் வாயிற்படியில் வந்து நின்றான். அவ்வுலகில் கால் வைத்துவிட்ட உன்னை இவ்வுலகிற்கு இழுத்து வர பாசம் எனும் கயிற்றின் ஒரு முனையில் நாங்கள் இழுக்க மறுமுனையில் இழுத்த அந்தப் படுபாவி காலன் வென்று தொலைத்தான். நாங்கள் தோற்று விழுந்தோம்.

 

          உன்னை வீட்டிற்கு வாகனத்தில் ஏற்றி விட்டு நான் வந்த காரை நோக்கி நடந்தேன். சத்தமில்லாமல் என்னால் அழ முடியும் என்பதே அப்போதுதான் எனக்குத் தெரிந்தது. பீறிட்டு வரும் அழுகையை அடக்க முற்பட்டபோது முகம் அஷ்ட கோணலாகியிருக்க வேண்டும். எதிரே வந்த ஒன்றிரண்டு செவிலியர் பச்சாதாபத்துடன் என்னைப் பார்த்துச் சென்றார்களோ ? வெளியே காரை எடுக்க எனக்கு உதவிய காவலாளி என் முகத்தைப் பார்த்து ஊகித்து விட்டார். உறவினை இழந்த குமுறல் என்று. "சார், தனியாப் போறீங்க. காரை கவனமா ஓட்டிருவீங்களா?" என்றார். "பரவாயில்லை, ஓட்டிருவேன்" என்றேன். காலனைத்தான் ஓட்ட முடியவில்லை. காரையுமா ஓட்ட முடியாது? என் சித்தி மங்கையர் திலகம். அதனால் வானமும் அழுதது. கார் கண்ணாடியில் வழிந்தோடிய நீரைத் துடைக்க 'வைப்பர்' இருந்தது. கார் ஓட்டும்போது கண்களில் வழியும் நீரைத் துடைக்க 'வைப்பர்' இல்லையே, சித்தி !

 

          தனிமையில் வரும் அழுகை மற்றவர்கள் முன் வரவில்லை. ஆண் அழக்கூடாது என இச்சமூகம் வரையறுத்த திமிரோ? உறவுகளை இழந்திருக்கிறேன். ஆனால் உன்னை இழந்தது என்னை ஏன் இவ்வளவு உலுக்குகிறது? என் மனதை அலசினேன். எல்லோராலும் விரும்பப்படும் ஆளுமை சிலரிடம் உண்டு. உன்னிடம் உண்டு ; என்னிடம் இல்லை. நான் வார்த்தையால், மனதால் கூட தீங்கிழைக்காத சிலர் என்னிடம் வெறுப்பினை உமிழ்வதை உணார்ந்திருக்கிறேன். அதைச் சரிசெய்ய மெனக்கிடுவதில்லை. எனக்கான அடையாளத்தை நான் ஏன் தொலைக்க வேண்டும்? நான் நானாக இயங்க, நான் உள்ளவாறு அப்படியே என்னை ஏற்றுக்கொள்ளும் உன்னைப் போன்ற பலர் இவ்வுலகில் எனக்கான வலிமை. உன் மறைவு அந்த வலிமை சிறிது குறைந்ததற்கான குறியீடு. உன் இழப்பு என்னை உலுக்குவது அதனால்தான் என என் மனம் சொல்கிறது. என் இயல்புக்கு அவ்வளவாக ஒத்து வராத உறவுகளுக்கும் நீ நல்லவள்தான். நீ புறம் பேசுவதில்லை. மற்றவர்கள் புறம் பேசுவதையும் ஊக்குவிப்பதில்லை. இப்படி எல்லோருக்கும் நல்லவளாக இருந்த நீதானே எனக்குச் சிறந்த உறவாக அமைய முடியும் ! நீ இவ்வுலகிலேயே கடிந்து பேசுவது சித்தப்பாவிடம் மட்டும்தான் என்று உன்னைப் பற்றிய நெருடல் ஆரம்பத்தில் என்னிடம் இருந்தது. அது கணவன்-மனைவி உறவின் புரிதல் எனப் பின்னர் விளங்கியது. பொதுவாக கணவன்-மனைவிக்கிடையில் ஏற்படும் எரிச்சல் அவரவர் மனதோடு ஏற்படும் எரிச்சல் எனும் பக்குவம் வர நாளானது. அப்பக்குவம் ஏற்பட நீயும் காரணம் எனக் கொள்ளலாம். எல்லோரையும் விட உன் இழப்பினால் சுக்குநூறாய் உடைந்தவர் சித்தப்பாதான். அதுதான் இயற்கையும் கூட. மற்றவர்களிடம் இயல்பாகப் பேசி இத்துயரம் எனும் நிதர்சனத்திலிருந்து தப்பியோட மெனக்கிடுகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. வேறு வழி ? சக்கரம் சுழலத்தானே வேண்டும் !

 

          மஞ்சள், பூ, குங்குமத்தோடு  தீர்க்க சுமங்கலியாக உன்னை அனுப்பினோம். அன்பு, பரிவு, பாசம் எல்லாம் தந்த உனக்கு நாங்கள் செய்த கைம்மாறு உன்னைச் சுட்டுச் சாம்பலாக்கியதுதான். அந்தச் சிதையில் உன்னைச் சாம்பலாகப் பார்த்தபோது உன் முகம் மட்டுமா நினைவில் நிழலாடியது ? நான் அலுவலகத்திலிருந்து வர நேரமானால், உன் பேத்தியை (என் குழந்தையை), பள்ளிக்கூடத்திற்கு அருகில் வசித்த நீ, உன் வீட்டில் அழைத்து வந்து பாசத்துடன் கவனித்துக் கொள்வாயே ! இப்படி தனிப்பட்ட முறையிலும் நான் உன்னிடம் பட்ட கடன் கணக்கெல்லாம் நினைவில் வந்து போனது. திருமூலர் சொன்ன "நீரினில் மூழ்கி நினைப்பொழிதல்" உன் விடயத்தில் பொய்தான் சித்தி ! இத்துயரிலிருந்து வெளியே வருவது என்ற ஒன்றில்லை. உன் நினைவலைகளுடன் வாழ்ந்துதான் இத்துயரைத் தொலைக்க வேண்டும்.

 

          "அப்படியென்ன அவசரம், சித்தி ?" என்று நான் கேட்பது உன்னிடமல்ல. நீ அவசரப்படவில்லை என்பது மருத்துவமனையில் நீ அன்றாட விடயங்களைச் சாதாரணமாகப் பேசியதிலிருந்து தெரிகிறது. உண்டு என நீ நம்பிய உன் இறைவனிடமோ அல்லது நான் நம்புகிற இயற்கை விதியிடமோ கேட்பதாய் வைத்துக் கொள்ளேன். அந்தப் பாழாய்ப் போன கடவுளை நம்பித் தொலைத்திருக்கலாமோ என நினைக்கிறேன். அப்படி நம்பியிருந்தால், 'உன்னை இறைவன் அழைத்துக் கொண்டான், என்னை அவன் அழைக்கும் போது உன்னை வந்து பார்ப்பேன்' எனும் நம்பிக்கையோடு ஆறுதல் அடைந்து வாழ்ந்து தொலைக்கலாம். ஆனால் எனக்கு அப்படியில்லையே ! என்னைப் பொறுத்தமட்டில் மரணம் என்பது கால்சியம் கார்பனேட், சோடியம் பாஸ்பேட் எல்லாம் எரிந்து சாம்பலாவதுதானே ! ஆனால் கடவுளை நம்பாதவனுக்கும் மகிழ்ச்சி, துயரம், பாசம் எனும் அத்தனை மனித உணர்வுகளும் உண்டே ! உள்ளத்தின் ஆழத்தில் உள்ள துயரத்தை கால்சியம் கார்பனேட் அழித்தொழிக்காதே ! கடவுள், ஆன்மா, சொர்க்கம் என்று நீ நம்பிய விடயங்களெல்லாம் நிஜத்தில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அந்த சொர்க்கத்தில் நீ மகிழ்ச்சியாய் இருந்து எங்களையெல்லாம் பார்க்க வேண்டும் என்று சிறுபிள்ளையைப் போல் ஆசைப்படுகிறேன், சித்தி !

Edited by சுப.சோமசுந்தரம்
 • Like 8
 • Sad 3

Share this post


Link to post
Share on other sites

இந்தக் கடைசி பந்தி மட்டும் இதயத்தில் இருந்து வந்துள்ளது......!  tw_blush:

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

தனி மனித அறம் என்பது மனம், மொழி, மெய் என்னும் மூன்று கருவிகளாலும், தனக்கோ பிறருக்கோ, முக்காலத்திலும் எத்தீங்கும் செய்யாது, நன்மை ஒன்றே நல்கி, இன்னுரை ஒன்றே செப்புமொழியாய் வாழ்ந்தோர் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தோராவர். அத்தகைய வாழ்வாங்கு வாழ்ந்த மாதரசி "வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்" என்பது வள்ளுவர் வாக்கு! பொய்யாமொழிப் புலவரின் வாக்கே மந்திரமாகும். ஏனென்றால், வள்ளுவன் என்னும் "நிறைமொழி மாந்தனின் ஆணையிற் கிளந்த மறைமொழி" அல்லவா அம் மந்திரக் குறள். 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

நன்றி ... சுப. சோமசுந்தரம்!

மரணம் என்பது மனிதனால்.., அவனது விஞ்ஞான அறிவால் ..இன்னமும் அவிழ்க்கப் படாத ஒரு முடிச்சு!

இயற்கையை அவதானிக்கையில்.. ஒன்று மறைதலும் .. மீண்டும் .. அது இன்னொரு வடிவில் உருவாவதும் தானே நடை பெறுகின்றது?

எல்லாவற்றையும் போலவே .. உயிரும் ஒரு வட்டத்தில் பயணிக்கின்றது என்றே நம்புவவோமே!

சித்தியும் மீண்டும் வருவாள்!

இந்தத் தடவை.... ஒரு நல்ல ஆரோக்கியமான உடலோடு...!

இதை எழுதியது... உங்கள் மகளாக இருந்தால் .... இவளை மகளாகப் பெற... இவன் என் நோற்றான் கொல்லெனும் சொல்...! பொறாமயாக இருக்கின்றது!?

 

 • Like 1
 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

 உங்கள் துயரில் நாங்களும் பங்கு கொள்கிறோம். உறவுகளைக் கலங்க வைத்து  எல்லோரும் ஒரு நாள் போகும் இடம் ...கல்லறை.  .நல்லவர்கள் விரைவில் சென்றுவிடுகிறார்கள்.  
 

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள் திரு சுப சோமசுந்தரம் அவர்களே. உங்கள் துயரில் பங்கு கொள்கிறேன்.

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

சுப. சோம சுந்தரம்  ஐயாவின்    துக்கத்திற்கு,    ஆழ்ந்த  அனுதாபங்கள்.

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, புங்கையூரன் said:

இதை எழுதியது... உங்கள் மகளாக இருந்தால் .... இவளை மகளாகப் பெற... இவன் என் நோற்றான் கொல்லெனும் சொல்...! பொறாமயாக இருக்கின்றது!

இதை எழுதியவன் நான்தான். மறைந்தவள் என் சித்திதான். வயது 68 என்றாலும் சுறுசுறுப்பாக இயங்கியமையால் அவளை யாரும் வயதானவர் பட்டியலில் வைக்கவில்லை. என் புலம்பலைப் பார்த்து என் மகள்தான் என்னை எழுதத் தூண்டினாள். மற்றபடி என் மகள் சோம.அழகு வேறு எங்காவது எழுதியவற்றை ' தோட்டத்து மல்லிகையில்' அவள் பெயரில் நான் பதிவிடுகிறேன். 

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, புங்கையூரன் said:

நன்றி ... சுப. சோமசுந்தரம்!

மரணம் என்பது மனிதனால்.., அவனது விஞ்ஞான அறிவால் ..இன்னமும் அவிழ்க்கப் படாத ஒரு முடிச்சு!

இயற்கையை அவதானிக்கையில்.. ஒன்று மறைதலும் .. மீண்டும் .. அது இன்னொரு வடிவில் உருவாவதும் தானே நடை பெறுகின்றது?

எல்லாவற்றையும் போலவே .. உயிரும் ஒரு வட்டத்தில் பயணிக்கின்றது என்றே நம்புவவோமே!

சித்தியும் மீண்டும் வருவாள்!

இந்தத் தடவை.... ஒரு நல்ல ஆரோக்கியமான உடலோடு...!

இதை எழுதியது... உங்கள் மகளாக இருந்தால் .... இவளை மகளாகப் பெற... இவன் என் நோற்றான் கொல்லெனும் சொல்...! பொறாமயாக இருக்கின்றது!?

 

 

24 minutes ago, சுப.சோமசுந்தரம் said:

இதை எழுதியவன் நான்தான். மறைந்தவள் என் சித்திதான். வயது 68 என்றாலும் சுறுசுறுப்பாக இயங்கியமையால் அவளை யாரும் வயதானவர் பட்டியலில் வைக்கவில்லை. என் புலம்பலைப் பார்த்து என் மகள்தான் என்னை எழுதத் தூண்டினாள். மற்றபடி என் மகள் சோம.அழகு வேறு எங்காவது எழுதியவற்றை ' தோட்டத்து மல்லிகையில்' அவள் பெயரில் நான் பதிவிடுகிறேன். 

புங்கையூரான்....  நல்ல  இடத்தில்,   மாட்டிக் கொண்டார்.
உதவி   வேணுமென்றால்......   தொலைபேசி  அடிக்கவும். 

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.

சுப. சோமசுந்தரம் ஐயா அவர்கள்  அறிஞர். அன்னவர் திருமகள் படைப்பாளி;  எழுத்தாளர்.

எழுத்தாளர், அறிஞருக்கு முன்பே எழுத்துலகில் பிறந்துவிட்டதால்,  வாசகர்களுக்கு இயல்பாகத் தோன்றும் ஐயம், புவியுலகில் எழுத்தாளரின் தந்தையான அறிஞருக்குப் பெருமையே!

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள் நண்பரே, உங்களின் துயரில் நாமும் பங்கு கொள்கின்றோம்.....! 

On 10/6/2018 at 9:48 AM, suvy said:

இந்தக் கடைசி பந்தி மட்டும் இதயத்தில் இருந்து வந்துள்ளது......!  

 

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள் சுப. சோமசுந்தரம் ஐயா. அன்பானவர்களின் இழப்பை அவர்கள் நினைவுகள் மூலம்தான் ஈடுசெய்யலாம்.

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

சித்தியின் ஆத்மா சாந்தியடையட்டும்...உங்கள் துயரில் நாமும் பங்கு கொள்கிறோம் 

 

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

அன்னாருக்கு அஞ்சலிகள்.. கள உறவுக்கு ஆழ்நத இரங்கல்கள 

Image may contain: 1 person, eyeglasses and text

Edited by சண்டமாருதன்
 • Like 1
 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

திரு.சுப.சோமசுந்தரம் ஐயா அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் ..

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
On 10/7/2018 at 8:58 AM, தமிழ் சிறி said:

 

புங்கையூரான்....  நல்ல  இடத்தில்,   மாட்டிக் கொண்டார்.
உதவி   வேணுமென்றால்......   தொலைபேசி  அடிக்கவும். 

தமிழ் சிறி புங்கையூரனைக் கலாய்த்திருக்கிறார். மற்றபடி பேரா.கிருஷ்ணன் சொன்னதைப் போல புங்கையூரனின் ஐயம் நியாயமானது . தந்தை என்ற முறையில் எனக்குப் பெருமையானதும் கூட . மேலும் பேரா. கிருஷ்ணன் என் மீதுள்ள அபிமானத்தினால் சொன்ன 'அறிஞர்'  என்ற அடைமொழிக்கு என்னைத் தகுதியாக்க இன்னும் எவ்வளவோ வாசிக்க வேண்டும் ; எழுத வேண்டும். மூவர்க்கும் நன்றி.

 • Like 1
 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

இன்று தான் வாசித்தேன். ஆழ்ந்த அனுதாபங்கள்

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

உங்கள் துயரில் பங்கு கொள்கிறேன் காலங்கள்  உங்கள் துயரை தணிக்கும்

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now