Sign in to follow this  
கிருபன்

இரு பிரதான கட்சிகளும் இனிமேலும் ஆட்சியில் இணைந்து செயற்படுவதென்பது வெறும் பாசாங்கு

Recommended Posts

இரு பிரதான கட்சிகளும் இனிமேலும் ஆட்சியில் இணைந்து செயற்படுவதென்பது வெறும் பாசாங்கு

 

அரசாங்கம் அதன் பதவிக்காலத்தின் இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. கடந்த பெப்ரவரியில் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல்களையடுத்து புதிய பிரதமர் ஒருவரை நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டம் காட்டியதற்குப் பிறகு ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கூட்டரசாங்கத்தில் தொடர்ந்தும் சேர்ந்து செயற்படுவதென்பது உண்மையிலேயே ஒரு பாசாங்கு என்பதைத் தவிர வேறு ஒன்றுமாக இருக்கமுடியாது. இரு தரப்புகளுமே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்களில் கவனத்தைச் செலுத்தத் தொடங்கியிருக்கின்றன.ranilwikramasinga.jpgஅதனால் 2015 ஜனவரியில் நிலவிய உற்சாகமான நாட்கள் ஒரு முடிந்த கதையாகிப்போய்விட்டன. வரலாற்றில் முதற்தடவையாக ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக் கட்சியும் ஆட்சியதிகாரத்தில் ஒன்றாக இணைந்திருக்கக்கிடைத்த வாய்ப்பும் பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முழுமையான ஒத்துழைப்பை வழங்குகின்ற சூழ்நிலையும் புதியதொரு அரசியலமைப்பைக் கொண்டுவருவதற்கான அருமையான சந்தர்ப்பமாகும். ஆனால், அது இப்போது தவறவிடப்பட்டுவிட்டது.

ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னமும் 14 மாதங்கள் தான் இருக்கின்றன. அத்தகைய பின்புலத்தில் இப்போதுள்ள பிரச்சினை இரு பிரதான கட்சிகளும் சேர்ந்து ஆட்சி செய்வதென்ற பாசாங்கை இரு தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் ' நயநாகரிகத்துடன் ' தொடரக்கூடியதாக இருக்குமா என்பதேயாகும்.

இத்தகைய ஒரு கட்டத்தில் ஜனதா விமுக்தி பெரமுன ( ஜே.வி.பி.) வினால் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் அரசியலமைப்புக்கான 20 ஆவது  திருத்த யோசனை முக்கியத்துவம் பெறுகிறது. அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தத்தின் விளைவும் தாக்கமும் ஒரு புறமிருக்க, ஜே.வி.பி.யின் திருத்த யோசனை நல்லாட்சி அரசாங்கத்தின் தோற்றத்துக்கான அடிப்படைக் காரணியைக் கையாளுவதாக அமைகிறது என்பது முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டியதாகும். 

அதாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதென்பதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என்று 2015 தேசிய தேர்தல்களில் அதன் தலைவர்கள் நாட்டு  மக்களுக்கு உறுதியளித்தார்கள். அவர்கள் மாத்திரமல்ல, இதுகால வரையில் நடைபெற்றிருக்கக்கூடிய ஜனாதிபதி தேர்தல்களில் வேட்பாளர்களாக நின்றவர்களில் பெரும்பாலானவர்கள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ஒழிக்கப்போவதாகவே வாக்குறுதி அளித்தார்கள்.

அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தம் 1978 நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களைக் கணிசமான அளவுக்குக் குறைத்திருப்பதுடன் இனிமேல் ஜனாதிபதி பதவிக்கு வரப்போகிறவர்  தனக்கு முன்னதாக பதவியில் இருந்த ஜனாதிபதிகள் அனுபவித்திருக்கக்கூடிய அதிகாரங்களைக் கொண்டிருக்கப் போவதில்லை என்றாலும் தற்போதைய வடிவில் இருக்கின்ற ஜனாதிபதி பதவிகூட மாகாணங்களுக்கு பயனுறுதியுடைய வகையில் அதிகாரங்களைப் பரவலாக்கம் செய்து சிறப்பான ஆட்சிமுறையைக் கொண்டுவருவதற்கு   தடையாகவே இருக்கிறது.

தற்போது உச்சநீதிமன்றத்தின் பரிசீலனையில் இருக்கும் ஜே.வி.பி.யின் 20 ஆவது திருத்த யோசனை மாத்திரமே  அரசியலமைப்புச் சீர்திருத்தங்களைப் பொறுத்தவரை தற்போது அரசியல் அரங்கில் பேசு பொருளாக இருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. பல்வேறுபட்ட காரணிகள் அரசியலமைப்புச் சபையை ஒரு ஸ்தம்பித நிலைக்குக் கொண்டுவந்திருப்பதால், 20 ஆவது திருத்த யோசனை இயல்பாகவே அதற்கென ஒரு பொருத்தப்பாட்டை பெற்றிருக்கிறது எனலாம். அரசாங்கத்தின் பங்காளிகளில் ஒரு பிரிவினர் அந்த யோசனையை விரும்பாதவர்களாக இருக்கின்ற அதேவேளை, மறுபிரிவினர் அந்த யோசனை சாத்தியமாகக்கூடியதாக எதையும் செய்வதற்கு முன்வராவிட்டாலும் எது நடந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளத்தயார் என்ற மனநிலையில் இருக்கின்றனர். நிறைவேற்று ஜனாதிபதி பதவி ஒழிக்கப்படுமோ இல்லையோ 2019 ஜனாதிபதி தேர்தல் மீது கவனம் திரும்பியிருக்கின்றது என்பதுதான் உண்மை. அதற்குக் காரணம் அந்த பதவியின் மிகுந்த  முக்கியத்துவம் மாத்திரம் அல்ல, இத்தடவை தேர்தல் ராஜபக்ஷாக்களின் கதியை, அதாவது மீண்டும் அவர்கள் அதிகாரத்துக்கு திரும்பி வருவதற்கான வாய்ப்பைத்  தீர்மானிக்கப்போகிறது.

ஜனாதிபதி தேர்தல் மீதான கவனக்குவிப்பு எம்மை மீண்டும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் காணக்கூடியதாக இருந்தததைப்போன்ற பிரசாரங்களுக்கு கொண்டுசெல்லப்போகிறது. வவுனியாவுக்கு தெற்கே பிரசாரம் ராஜபக்சாக்களின் கொள்ளை பற்றியதாகவும் வவுனியாவுக்கு வடக்கே பிரசாரம்  மனித உரிமை மீறல்களைப் பற்றியதாகவும் இருக்கப்போகிறது.

நிலைமாறுகால நீதியைப் பொறுத்தவரை, ஜனாதிபதி சிறிசேன ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் வருடாந்தக் கூட்டத்தொடரில் தனது உரையின்போது என்ன கூறப்போகிறார் என்று ஒருவித பதற்றநிலை காணப்பட்டத் அதை விளங்கிக்கொள்வதில் பிரச்சினை இருக்கவில்லை. 2015 அக்டோபரில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தின் ஏற்பாடுகளை கைவிட்டு மனித உரிமை மீறல்களிலோ போர்க்குற்றங்களிலோ ஈடுபட்டிருக்கக்கூடியவர்கள் என்று கருதப்படுபவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் என்ற யோசனையை ஜனாதிபதி தனதுரையில் முன்வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவ்வாறு அவர் செய்திருந்தாரென்றால், அது முன்னொருபோதும் இல்லாத ஒன்றாக அமைந்திருக்கும்.

எது எவ்வாறிருந்தாலும், நிலைமாறுகால நீதி தொடர்பிலான செயற்பாடுகள் ( 30/1 தீர்மானம் மீதான மார்ச் 2019 காலக்கெடு நெருங்கும் நிலையில் ) தீவிரமடையும் என்றே எதிர்பார்க்கலாம்.காணாமல் போனோர் விவகார அலுவலகம் அதன் இடைக்கால அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்திருக்கிறது. அதை ஆராய்வதற்கென்று அவர் ஒரு குழுவை நியமித்திருக்கிறார். இழப்பீட்டு அலுவலக சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு பாராளுமன்றத்தில் இம்மாதம் எடுக்கப்படவிருக்கிறது. பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலமும் வெளியிடப்பட்டிருக்கிறது. உண்மை மற்றும் நீதி ஆணைக்குழு தொடர்பான சட்டமூலமும் இம்மாதம் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விவகாரங்கள் சகலது தொடர்பிலும் ஜனாதிபதி சிறிசேன எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கப்போகிறார் என்பதே இங்குள்ள முக்கிய பிரச்சினையாகும். ராஜபக்ஷாக்கள் எடுத்ததைப்போன்ற சிங்கள வலதுசாரி சக்திகளுக்கு விருப்பமான நிலைப்பாட்டை ஜனாதிபதி எடுப்பாரா அல்லது 2015 அக்டோபர்  ஜெனீவா தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கிய ஒரு அரசாங்கத்தின் தலைவர் என்ற வகையில் அதற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பாரா? 

ஜனாதிபதி சிறிசேன அண்மைக்காலத்தில் தனது அதிகாரத்தை வெளிக்காட்டி தனமுனைப்புடன் சில நடவடிக்கைகளை எடுத்ததைக் காணக்கூடியதாக இருந்தது. ஸ்ரீலங்ஙன் எயார்லைன்ஸ் விமானத்தில் பயணிகளுக்கு வழங்கப்பட்ட மரமுந்திரிக்கொட்டை தரங்குறைந்ததாக இருந்ததகை் கண்டித்தது. ஆஸ்திரியத் தலைநகர் வியன்னாவில் இருந்து இலங்கைத் தூதுவர் உட்பட தூதரக உத்தியோகத்தர்களைத் திருப்பியழைத்தமை, முப்படைகளினதும் பிரதான தலைமை அதிகாரி இரகசியப் பொலிசார் முன்னிலையில் ஆஜராகவேண்டியிருந்த சூழ்நிலையில் அவர் ஜனாதிபதிக்கு தெரியத்தக்கதாக நாட்டுக்கு வெளியே உத்தியோகபூர்வ நிகழ்வொன்றில் பங்கேற்றைமை போன்ற சம்பவங்களை உதாரணத்துக்குக் கூறலாம்.இவையெல்லாம் ஆட்சி நிருவாக விவகாரங்களில் தனது அதிகார முத்திரையைப் பதிப்பதில் அவர் நாட்டம் கொண்டிருப்பதுடன் அரசாங்கப்பங்காளியான ஐக்கிய தேசிய கட்சியிடமிருந்து தன்னை தூரவிலக்கிக்கொள்வதில் அக்கறையாக இருக்கிறார் என்பதையே வெளிக்காட்டுகின்றன. அதே போன்றே சுதந்திர கட்சியின் அதிருப்தியாளர்கள் மத்தியில் இருந்த கட்சி அமைப்பாளர்களை நீக்கிவிட்டு வர்களின் இடத்துக்கு ஜனாதிபதி தனது விசுவாசிகளை நியமித்த செயலையும் நோக்கவேண்டும்.

ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னமும் ஒரு வருடத்துக்கும் சற்று கூடுதலான காலமே இருக்கிறது.அதற்கு முன்னதாக மாகாணசபைகள் தேர்தல்களுக்கான சாத்தியமும் இருக்கிறது. இவையெல்லாவற்றுடனும் சேர்த்து தற்போதைய அரசியலில் அதிகாரச் சமநிலையில் மாற்றம் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது.

ஜனாதிபதி தேர்தல் சுவாரஸ்யமானதாக இருக்கப்போகிறது. அதற்குக் காரணம் முடிவுகளை முன்கூட்டியே துணிந்து சொல்வது சிரமம் என்பது மாத்திரமல்ல, களத்தில் இறங்கக்கூடிய வேட்பாளர்கள் யார் யார் என்பது இன்னமும் தெரியாமல் இருப்பதும்தான். எது எவ்வாறிருந்தாலும் அரசாங்கம் அதன் 2015 சீர்திருத்த நிகழ்ச்சித் திட்டத்தில் எவையெல்லாவற்றையும் செய்யமுடியுமோ அவற்றைச் செய்வதில்தான் அதன் எஞ்சியிருக்கக்கூடிய ' நம்பகத்தன்மை' தங்கியிருக்கிறது.

- கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து

http://www.virakesari.lk/article/42070

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this