Sign in to follow this  
பிழம்பு

"கடவுள் மீது எனக்கு கோபம் கிடையாது; மனிதர்கள் மீதுதான்" - ஒரு தேவதாசியின் கதை

Recommended Posts

ஒரு காலத்தில் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட, அவமதிக்கப்பட்ட்ட தேவதாசிகள் தற்போது அதே சமூகத்தில் நல்ல நிலையில் வாழ்வதற்கான சூழலை சித்தாவாஏற்படுத்தியுள்ளார்.

தனது ஏழாவது வயதிலேயே தேவதாசியாக்கப்பட்ட சித்தாவா, அந்த ஒடுக்குமுறையிலிருந்து தான் மீண்டு வந்ததுடன், தேவதாசிகள் பலருக்கு விடுதலை பெற்றுத்தந்து, மறுவாழ்வு அமைத்துக்கொடுத்ததற்காக இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான 'பத்மஸ்ரீ' விருதையும் பெற்றுள்ளார்.

சித்தாவாவின் வாழ்கை பயணத்தை அறிவதற்காக அவரது கிராமத்திற்கு சென்றோம்.

மகாராஷ்டிர-கர்நாடக எல்லையிலுள்ள பெல்காம் மாவட்டத்தின் காட்ப்ரபாவிலுள்ள சிறிய பங்களா போன்ற அவரது மாஸ் என்னும் அமைப்பின் அலுவலகதிற்கு சென்றோம். தேவதாசிகள் சமூகத்திற்கு இவர் ஆற்றிய பணிகளை பாராட்டி, கடந்த ஏப்ரல் மாதம் குடியரசு தலைவர் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான 'பத்மஸ்ரீ' விருதை சித்தாவாவிற்கு வழங்கி இருந்தார். சித்தாவா தனது மாஸ் என்னும் அமைப்பின் மூலம் இதுவரை ஆயிரக்கணக்கான தேவதாசிகளை மீட்டெடுத்துள்ளார். இந்திய குடிமகனுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீயை பற்றி தான் அந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படும் வரை அப்படி ஒன்று இருப்பதே தெரியாதென்று அவர் கூறுவது ஆச்சர்யத்தை உண்டாக்குகிறது.

"கடந்த ஜனவரி மாதம் எனக்கு டெல்லியிலிருந்து அழைப்பொன்று வந்தது. எனக்கு இந்தி மொழி தெரியாதென்பதால் எனது மகனிடம் தொலைபேசியை கொடுத்துவிட்டேன். அந்த நபரிடம் பேசிய பிறகு பத்மஸ்ரீ விருதுக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். எனக்கு பத்மஸ்ரீ விருதை பற்றி அதுவரை தெரியாது. பிறகு தொலைக்காட்சியில் செய்தியை பார்க்கும்போதுதான் அதன் முக்கியத்துவம் குறித்து எனக்கு புரியந்தது" என்று சிரித்துக்கொண்டே சித்தாவா கூறுகிறார்.

சித்தாவா இந்த விருதை பெறுவதற்கு காரணமான அவரது கடந்த கால வாழ்க்கை, பணிகள் குறித்து அவரிடம் கேட்டபோது, அவர் கூறும் விடயங்கள் நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்துகின்றன.

தான் கடந்த வந்த பாதை குறித்தும், சந்தித்த பிரச்சனைகள் குறித்தும் கூறும் சித்தாவா, அதை எதிர்த்து வாழ்க்கையில் நீச்சலடித்து புதிய வாழ்க்கையை கட்டமைத்ததுடன், பலரது வாழ்க்கையை மாற்றும் சவாலான பணியையும் வெற்றிகரமாக செய்துள்ளார்.

சித்தாவாவின் அலுவலகத்திலிருந்து சுமார் பத்து கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அவரது இரு அறைகளை கொண்ட வீட்டிற்கு சென்றிருந்தபோது, அங்கு கடவுள்களின் சிறியளவிலான புகைப்படங்களையும், பெரியளவிலான அம்பேத்கர் புகைப்படத்தையும் காண முடிந்தது.

"எனக்கு அப்போது ஏழு வயதிருக்கும். எனது கழுத்தில் ஏதோ மணியை மாட்டிவிட்டு அப்போதிலிருந்து நான் ஒரு தேவதாசி என்று கூறினார்கள்" என்று சித்தாவா தான் கடந்த வந்த வாழ்க்கையை பற்றி கூறுகிறார்.

"நாங்கள் மொத்தம் ஆறு சகோதரிகள். அதில் ஐந்து பேருக்கு திருமணமாகிவிட, எஞ்சியிருந்த நான் பெற்றோர்களை எதிர்காலத்தில் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக கிராமவாசிகள் கருத்துப்படி பெற்றோர்களேயே தேவதாசி ஆக்கப்பட்டேன்."

கர்நாடகாவில், குறிப்பாக மகாராஷ்டிராவை ஒட்டிய பகுதியில் தேவதாசி முறை பல ஆண்டுகளுக்கு நீடித்திருந்தது. கடவுளுக்கு ஆற்றும் பணி என்ற பெயரிலும் மதரீதியான பாரம்பரியம் என்ற முகப்பின் அடிப்படையிலும் பல பெண்களின் வாழ்கை நாசமாக்கப்பட்டது.

கடவுளின் சேவகர்கள் என்று கூறப்படும் தேவதாசிகள், அதுகுறித்த அர்த்தம்கூட புரியாத வயதிலும், சில சூழ்நிலைகளில் அவர்கள் பிறந்தவுடேனே தேவதாசிகளாக அறிவிக்கப்படுகின்றனர். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு மற்றவர்களிடம் தர்மம் பெற்று, மதரீதியான நிகழ்ச்சிகளில் பங்கேற்று கிடைக்கும் பணம், பொருளை கொண்டு தங்களது வாழ்க்கையை முன்னெடுக்கும் நிலைக்கு படிப்படியாக தள்ளப்படுகின்றனர்.

 

தேவதாசிகள் திருமணம் செய்துகொள்வதற்கு மறுப்பு தெரிவிக்கப்படுவதால், மற்றவர்களின் உதவியோடு அவர்கள் வாழ்க்கையை நடத்தும் சூழ்நிலையே நிலவுகிறது. பெரும்பாலான நேரங்களில் ஆண்களின் இச்சைக்கு இவர்கள் இரையாகிறார்கள்.

பெரும்பாலும் தலித் சமூகத்தை சேர்ந்தவர்களாக இருக்கும் தேவதாசிகள், ஒரு கட்டத்தில் விபச்சாரத்திலும் தள்ளப்படுகின்றனர். "ஒரு பெண் தேவதாசியாக்கப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. உதாரணத்துக்கு, எங்களது பெற்றோருக்கு ஆண் குழந்தைகளே பிறக்காத காரணத்தினால் நான் தேவதாசி ஆக்கப்பட்டேன். தலைமுடியின் அமைப்பின் காரணமாகவும் சிலர் தேவதாசி ஆக்கப்படுகின்றனர்."

"அதிக ஆண் குழந்தைகள் உள்ள வீட்டில், ஒரேயொரு பெண் குழந்தையிருந்தால் தனியாக திருமணம் செய்துவைத்து மற்றொரு வீட்டிற்கு அனுப்புவதை விட தேவதாசி ஆக்கி தங்களுடனே பெற்றோர் வைத்துக்கொள்வர். சில வேளைகளில், குழந்தை பேறில்லாத தம்பதிகள் தங்களுக்கு பெண் குழந்தை பிறந்தால் தேவதாசி ஆக்கிவிடுவதாக கடவுளிடம் வேண்டிக்கொள்வர்" என்று அவர் மேலும் கூறுகிறார்.

"அதிர்ச்சியளிக்கும் வகையில், சில வேளைகளில், கிராமத்தில் மழை பொழியவில்லை என்றாலோ, பயிர் விளைச்சல் பாதிக்கப்பட்டாலோ, அக்கிராமத்தினர் ஒன்றுக்கூடி, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சிறுமிகளை தேர்ந்தெடுத்து, அந்த குறிப்பிட்ட பிரச்சனை சரியானால், அவர்களை தேவதாசி ஆக்குவதாக வேண்டிக்கொள்வார்கள்" என்று சித்தாவா தொடர்ந்து விளக்குகிறார்.

   

"எனது கழுத்தில் மணியை அணிவித்துவிட்டு தேவதாசியாக அறிவித்தபிறகு அளிக்கப்பட்ட பச்சை வளையல்கள், பச்சைநிற புடவை, கால் வளையம் ஆகியவற்றை அணிந்துகொண்டு அதன் அர்த்தம் புரியாமல் நான் மகிழ்ச்சியடைந்தேன்.

"அந்த நிகழ்ச்சி முடிந்து கிராமத்திற்கு திரும்பிய பிறகு மீண்டும் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தவுடன், உடன் பயில்பவர்கள் 'நீ எந்த கிராமத்தினருக்கு மணம் முடிக்கப்பட்டாய்?', 'உன்னுடைய கணவர் பெயரென்ன?', 'உன்னுடைய கணவர் என்ன செய்வார்?' என்பது போன்ற கேள்விகளை கேட்டது எனக்கு அச்சத்தை உண்டாக்கியது. எனக்கு யாருடனாவது திருமணமாகியிருந்தால் அவரது பெயரை தெரிவித்திருப்பேன், ஆனால் அப்படி ஏதும் நடக்காத நிலையில் நான் என்ன கூறுவேன்?" என்று தனது கடந்தகால நினைவலைகளை சித்தாவா மீட்டெடுக்கிறார்.

சிறிய வயதிலேயே பாரம்பரியம் என்ற பெயரில் சிறைவாசத்திற்குட்படுத்தப்பட்ட சித்தாவா தனது முழு நினைவுகளை மீட்டெடுக்கும்போது இன்னமும் சிரமப்படுவதாக கூறுகிறார்.

ஒருகட்டத்தில் எங்களது வீட்டிற்கு வந்த தேவதாசி ஒருவர், அவர் அழைத்து வந்த ஆணுடன் நான் சென்றால், அதற்காக அவர் தரும் பணத்தை கொண்டு எங்களது வீட்டுக்கு செலவுகளை கவனித்துக்கொள்ளலாம் என்று என்னுடைய பெற்றோரிடம் கூறினார். எனக்கு அவரது கருத்தில் உடன்பாடில்லை."

"நான் தொடர்ந்து பள்ளிக்கு செல்வதற்கு விருப்பப்பட்ட நேரத்தில், அந்த ஆணுடன் உடலுறவு வைத்துக்கொள்வதற்கு நான் வற்புறுத்தப்பட்டேன். அந்த சம்பவம் நடைபெற்ற இரண்டு மாதத்தில் என்னுடைய தந்தை இறந்துவிட்டார். என்னுடைய முதலாவது உடலுறவிற்கு பிறகு நான் கர்ப்பமானேன். 15வது வயதில் எனக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது."

"அதன் பிறகு இன்னும்பல இன்னல்களை அனுபவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டேன். தேவதாசிக்கென ஒதுக்கப்பட்டுள்ள வேலைகளை முடிந்தபின்பு, வீட்டிற்கு திரும்பி சகோதரிகளையும், வரும் விருந்தாளிகளையும் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு எனக்கு வலுக்கட்டாயமாக வழங்கப்பட்டது. அந்த வயதிற்கான முதிர்ச்சி கூட கிடைக்காத நிலையில் அத்தனை வேலைகளையும் செய்வதற்கு நான் மிகவும் சிரமப்பட்டேன். நான் மற்ற தேவதாசிகளை போன்று இதுபோன்ற வீட்டு வேலைகளை செய்து, பணத்தையும் ஈட்டவேண்டுமென்று எனது தாயார் கூறுவார். அதுமட்டுமின்றி, நான் ஈட்டிய பணத்தை கொண்டு வீட்டிற்கு தங்க நகைகளையும், எப்போதாவது வீட்டிற்கு வரும் சகோதரிகளுக்கு புடைவைகளையும் வாங்கி தரவேண்டிய நிலை இருந்தது" என்று அவர் மேலும் கூறுகிறார்.

தனக்கு நேர்ந்த அவலங்களை தொடர்ந்து எடுத்துரைத்த சித்தாவா, தனது பெற்றோர் சுயநலத்திற்காக தன்னை தேவதாசி ஆக்கிவிட்டதாக கூறுகிறார்.

"தேவதாசிகளும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாகுகின்றனர். சில தேவதாசிகள் தாங்கள் ஈட்டும் பணத்தை கொண்டு தங்க நகைகளையும், துணிகளையும் வாங்குகின்றனர். ஒரு தேவதாசியின் செயற்பாட்டை மற்றவர்களும் பின்பற்ற வேண்டுமென்று அவர்களது குடும்பத்தினரும் நினைக்கின்றனர்."

தங்களிடம் பணம் வேண்டி கெஞ்சும் தேவதாசிகள், தங்களது பாலியல் ஆசைகளும் இணங்க வேண்டுமென்ற மனப்போக்கு கிராமத்தினரிடம் உள்ளது. சில நேரங்களில் ஆண்களுடன் உடலுறவு வைத்துக்கொள்வதற்கு தேவதாசிகள் வற்புறுத்தப்படுகின்றனர்" என்று அவர் மேலும் கூறுகிறார்.

"இதில் கொடுமை என்னவென்றால், தேவதாசிகளின் பெற்றோரும் தங்களது மகளை மற்றவர்களுடன் உடலுறவு வைத்துக்கொள்வதற்கு வற்புறுத்துகின்றனர். கழுத்தில் மணியை மாட்டிக்கொண்டு தேவதாசி ஈட்டும் பணத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தங்களது பிழைப்பை நடத்துகின்றனர். தனது பாலியல் இச்சைகளை தீர்த்துக்கொள்வதற்காகத்தான் ஒவ்வொரு ஆணும் தேவதாசியிடம் வருகிறான். தேவதாசிகளின் வாழ்க்கை முழுவதுமே துயரத்தால் நிறைந்தது" என்று சித்தாவா தனது அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்.

"என்னை உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள், என்னை பெற்றெடுத்த தாயாலே நான் துன்புறுத்தப்பட்டேன். மற்ற தேவதாசிகளை போன்று நான் பணம் ஈட்டுவதில்லை என்று எனது தாயார் தொடர்ந்து நச்சரித்துக்கொண்டே இருந்தார். ஆனால், அவரது கடைசிக்காலத்தில் நோயுற்றிருந்தபோது, எனது சகோதரிகளிலேயே நான் தான் நல்லவள் என்று கூறினார்."

"தேவதாசிக்கும், விபச்சாரிக்கும் வேறுபாடுண்டு. ஒவ்வொரு நாளும் மதியம் இரண்டு மணியிலிருந்து பத்து மணிவரை மற்றவர்களுடன் விபச்சாரிகள் தொடர்பு வைத்துக்கொள்கிறார்கள். அதனால் அது ஒரு தனிப்பட்ட தொழிலாக கருதப்படுகிறது. ஆனால், 95 சதவீத தேவதாசிகள் அதுபோன்ற வேலைகளை செய்வதில்லை. அவர்கள் ஒன்று அல்லது இரண்டு ஆண்களை தங்களது கணவர்களாக ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், தங்களுக்கென மனைவி, குடும்பத்தை கொண்டுள்ள அந்த ஆண்கள் தேவதாசிகளை ஒருபோதும் தங்களது மனைவிகளாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். எங்களிடம் வந்து பணத்தையோ, பொருளையோ கொடுத்துவிட்டு, சிறிது அன்பை காட்டிவிட்டு, தங்களது பாலியல் இச்சைகளை தீர்த்துக்கொண்டு செல்லும் அந்த ஆண்களின் சொத்தில் எவ்வித உரிமையும் எங்களுக்கு கிடையாது. அதுமட்டுமில்லாமல், எங்களது குழந்தைகள் அந்த ஆண்களின் பெயரை பயன்படுத்தவும் கூடாது. ஆனால், அவர்களது மனைவிகளுக்கும், குழந்தைகளுக்கும் அனைத்துவிதமான உரிமைகளும் உள்ளது" என்று அவர் மேலும் கூறுகிறார்.

இந்த பாரம்பரியத்திற்கெதிராக சில தேவதாசிகள் மட்டுமே செயல்பட நினைக்கின்றனர். அதில் சித்தாவாவும் ஒருவர். யாரும் இந்த அசாதரண வழக்கத்திற்கு எதிராக செயல்படவில்லை. தேவதாசி முறைக்கெதிராக பலர் தொடர்ந்து குரல்கொடுத்ததன் விளைவாக கடந்த 1982ஆம் ஆண்டு கர்நாடகாவில் தேவதாசி முறைக்கு தடைவிதித்து சட்டம் நிறைவேற்றப்பட்டது.

பல நூற்றாண்டுகளாக நீடித்து வரும் இந்த ஒடுக்குமுறையை முடிவுக்கு கொண்டுவருவதற்கு அந்த ஒரு சட்டம் மட்டும் போதுமானதாக இல்லை. எனவே, இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகும்கூட பல சிறுமிகள் தேவதாசிகளாக்கப்பட்டனர்.

இந்நிலையில், கர்நாடக அரசும், பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இந்த சட்டம் குறித்து நடத்தியாய் விழிப்புணர்வு கூட்டங்களில் ஒன்று, கடந்த 1990ஆம் ஆண்டு சித்தாவாவின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

"நான் இரண்டாவது முறையாக கர்ப்பமடைந்திருந்தபோது, கர்நாடக பெண்கள் ஆணையத்தின் பிரதிநிதிகளை சந்தித்தேன். அவர்கள் நடத்திய கணக்கெடுப்பில் பெல்காம் மாவட்டத்தில் மட்டும் 3600 தேவதாசிகள் இருப்பது தெரியவந்தது. ஒருகட்டத்தில் கிராம பெரியவர்களுடன் அந்த பிரதிநிதிகள் எனது வீட்டிற்கு வந்தப்போது திருமணம் செய்துகொள்ளுமாறு என்னை வற்புறுத்துவார்கள் என்று அஞ்சினேன். ஆனால், எனது சிந்தனையை கூர்மையாக்கும் வகையில் பல கேள்விகளை அவர்கள் கேட்டனர்."

"இந்த கிராமத்திலுள்ள அனைவரும் உள்ளூர் கோவிலுக்கு சென்று தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி, வழிபடுகின்றனர். ஆனால், உங்களது சாதியை சேர்ந்தவர்களை தவிர்த்து மற்ற சாதியை சேர்ந்தவர்கள் தேவதாசிகளாக ஆக்கப்படுவதில்லை. இந்த வழக்கத்தை நீங்கள் முடிவுக்கு கொண்டுவர விரும்பவில்லையா? என்று அவர்கள் கேள்வியெழுப்பியவுடன், ஏன் நாம் மட்டும் இந்த வழக்கத்தில் சிக்க வேண்டும்? என்ற கேள்வி எனது மனதில் தோன்றியது" என்று சித்தாவா தனது வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்ட நொடியை விவரிக்கிறார்.

"லதா மாலா என்ற அந்த பிரதிநிதி, எனது வாழ்க்கையில் கடவுள் போல வந்து, 'இந்த சிறுமிக்கு 17 வயதுதான் ஆகிறது. இப்போதுகூட இவரால் ஒரு மாறுபட்ட வாழ்க்கையை கட்டமைக்க முடியும். அதற்கு நாம் தான் உதவ வேண்டும்' என்று கூறியது எனக்குள் தன்னம்பிக்கையை உண்டாக்கியது."

தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட சித்தாவா, தடைகளை உடைத்தெறிந்ததுடன் அதேபோன்ற நிலைமையில் சிக்குண்டுள்ள மற்றவர்களின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்துபவராக மாறினார். பெல்காம் மாவட்டத்தின் பல்வேறு தாலுகாக்களுக்கு சென்ற சித்தாவா தேவதாசிகளை ஒடுக்குமுறையிலிருந்து மீட்டெடுப்பதற்கு உதவியதுடன், அவர்களது குழந்தைகளின் தகவல்களை சேகரிக்க தொடங்கினார்.

குறிப்பிட்ட காலத்திற்கு, சித்தாவாவின் பணிகளை பாராட்டிய பலரும் அவரே ஒரு அமைப்பை தொடங்கி பணிகளை முன்னெடுப்பதற்கு பரிந்துரைத்தனர். இதுகுறித்த ஆலோசித்த சித்தாவாவும், அவரது சாகாக்களும் தங்களுக்கென ஒரு அமைப்பை உருவாக்குவதற்கு முடிவெடுத்து, 'மஹிளா அபிவ்ருட்தி மட்டு சந்ரக்ஸன் சன்ஸ்தா' (மாஸ்) என்னும் அமைப்பை 1997ஆம் ஆண்டு தொடங்கினர்.

"நாங்கள் எங்களது அமைப்பை தோற்றுவிக்கும்போது, தேவதாசிகளை ஒடுக்குமுறையிலிருந்து மீட்டெடுத்து மறுவாழ்வு அமைத்துக்கொடுப்பது நோக்கமாக இருந்தது. ஆனால், கிட்டத்தட்ட முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்ட தேவதாசி முறை மீண்டும் தலையெடுக்காமல் இருப்பதை நாங்கள் உறுதிசெய்து வருகிறோம். அதுமட்டுமின்றி, தேவதாசிகள் மற்றும் அவர்களது குழந்தைகளுக்கு நிவாரணம் கிடைப்பதை உறுதி செய்யவேண்டும். தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது தேவதாசிகள் முறையால் பாதிக்கப்பட்ட பல்வேறு சமூகங்களை சேர்ந்த பெண்களுக்கும் உதவுவதை நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம்" என்று அவர் கூறுகிறார்.

பெரியளவில் வளர்ந்த அந்த அமைப்பின் தலைமை செயலதிகாரியாக சித்தாவா பொறுப்பேற்றுக்கொண்டார். "நாங்கள் பெல்காம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தேவதாசிகளிடம் இந்த ஒடுக்குமுறையிலிருந்து விடுபடுவது குறித்து விளக்கி காவல்துறையிடம் அழைத்துச்சென்று தக்க நடவடிக்கைகளை எடுத்தோம். இந்த ஒடுக்குமுறையை ஆதரிக்கும் பலரும் எங்களுக்கு சாபம் விடுத்தனர்" என்று தனது வாழ்வின் மாறுபட்ட அனுபவங்களை சித்தாவா விளக்குகிறார்.

"தேவதாசிகளை மீட்கும் பணிகள் முக்கிய கட்டத்தை அடைந்தபோது, பல்வேறு கோயில்களை சேர்ந்த பூசாரிகள் மக்களின் வருகை குறைந்ததால் தங்களது வருமானம் குறைந்துவிட்டது அதற்கு நீங்கள்தான் காரணம் என்று கூறி எங்களை தாக்கினர். அதுமட்டுமின்றி, அந்த பூசாரிகள் ரௌடிகளை கொண்டு என்னையும், எனது சகாக்களையும் தாக்கவும், பிரச்சனை செய்வதற்கும் முற்பட்டனர்" என்று சித்தாவா விவரிக்கிறார்.

இன்று, அனைத்து கிராமங்களிலும் மாஸ் அமைப்பு பரந்து விரிந்துள்ளது. ஏதாவதொரு கிராமத்தை சேர்ந்த ஒருவர் தேவதாசியாக்கப்பட்டால் அங்கிருக்கும் எங்களது பிரதிநிதி உள்ளூர் காவல்துறைக்கு தகவல் கொடுத்து தக்க நடவடிக்கை எடுப்பார் என்று கூறும் சித்தாவா, இதுவரை தாங்கள் மீட்டுள்ள 4800க்கும் மேற்பட்ட தேவதாசிகளுக்கு மறுவாழ்வு அமைத்து கொடுப்பதற்கான நடவடிக்கையையும் எடுத்துள்ளதாக கூறுகிறார்.

தேவதாசிகளுக்கு பல்வேறு தொழில்பயிற்சிகளை வழங்கும் இந்த அமைப்பு அதோடு நிறுத்திக்கொள்ளாமல், அவர்கள் தனியே தொழில் தொடங்குவதற்கு தேவையான கடனையும் அளிக்கின்றனர். அது மட்டுமின்றி, அவர்களது குழந்தைகளுக்கு கல்வி கிடைப்பதை உறுதிசெய்யும் பணியையும் தங்களது அமைப்பு முன்னெடுப்பதாக சித்தாவா கூறுகிறார்.

"எங்களது பெல்காம் மாவட்டத்தில் தேவதாசி முறை ஒழிக்கப்பட்டுவிட்ட நிலையில், குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர், குழந்தை கடத்தல்கள் போன்ற பல விதமான சமூக பிரச்சனைகளை தீர்ப்பதற்கு நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம்" என்று அவர் மேலும் கூறுகிறார்.

கடந்த இருபதாண்டுகளுக்கு மேலாக சித்தாவா மேற்கொண்டு வரும் பணியினை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு 'பத்மஸ்ரீ' விருதும் வழங்கப்பட்டுள்ளது.

"இந்த பத்மஸ்ரீ விருது எங்களுக்கு கிடைப்பதற்கு பலர் பணியாற்றியுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் இதற்கு கடினமாக உழைத்துள்ளனர். இந்த விருது எனக்கு மட்டுமல்ல, இந்த அமைப்பை சேர்ந்த அனைவருக்குமே கிடைத்த ஒன்றாகவே கருதுகிறேன். தேவதாசி என்பதற்காக இழிவாக பார்க்கப்பட்டவர்கள், தற்போது தங்களது பணியால் சமூகத்தில் எப்படி பார்க்கப்படுகிறார்கள் என்பதே மிகவும் முக்கியம்" என்று சித்தாவா பெருமையுடன் கூறுகிறார்.

கடைசியாக, நீங்கள் கடவுள் மீது கோபமாக உள்ளீர்களா? என்று சித்தவாவிடம் கேட்டோம். அதற்கு, முதலில் சிரித்த அவர், "இல்லை. இதற்கும் கடவுளுக்கும் சம்பந்தமில்லை. எனது கழுத்தில் மணியை மாட்டி, தேவதாசி என்னும் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கிய ஒவ்வொருவரின் மீதுதான் எனது கோபம் உள்ளது. கடவுள் ஒருபோதும் கழுத்தில் மணியை மாட்டிக்கொண்டு பிச்சை எடுத்து, மற்றவர்களுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்வதற்கு கூறுவதில்லை. இவையெல்லாம் மனிதர்களினாலேயே உருவாக்கப்பட்டன. இந்த ஒடுக்குமுறைக்கு வித்திட்டவர்கள் மீதுதான் எனது கோபம் உள்ளது" என்று சித்தாவா கூறுகிறார்.

https://www.bbc.com/tamil/india-45804413

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this