Jump to content

இனவெறி பேசி தமிழ் மக்களை பலியிட முனையும் சில தமிழ் ஊடகங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
43274954177305.560933d08f2c1.jpg
நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் இலங்கை அரசின் கொடுங்கோன்மை ஆட்சிகளால் இன்னும் சிறைகளில் வைக்கப்பட்டு தம் வாழ்வைத் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் பத்து அரசியல் கைதிகள்  அனுராதபுரம் சிறைச்சாலையில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார்கள். "அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு" மற்றும் "சமுக நீதிக்கான வெகுஜன அமைப்பு" போன்ற அமைப்புக்கள் எல்லா இன மக்களையும் இணைத்து போராட்டங்களை முன்னெடுத்தன.
 
அதைத் தொடர்ந்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் அனுராதபுரம் நோக்கி நடைப்பயணம் ஒன்றை தொடங்கினார்கள். அதற்கு தமிழ்த் தேசியத்தை வைத்து பிழைப்பு நடத்தும் "லங்கா சிறி" இணையத்தளம் "சிங்களவர்களின் கோட்டைக்குள் நுழைந்த தமிழ் மாணவர்கள்; அதிரும் அனுராதபுரம்!" என்று செய்தி வெளியிட்டது. தமிழ் இனவெறி பேசி தமிழ் மக்களை இலங்கையின் மற்ற இன மக்களில் இருந்து பிரித்து தனிமைப்படுத்தி இலங்கையின் கொலைகார அரசுகளின் கொலைக்களங்களில் பலியிட்டார்கள். இவ்வளவு இழப்புகளிற்குப் பின்பும் தமது பிழைப்புவாதங்களிற்காக அந்த அயோக்கியத்தனத்தை தொடர்கிறார்கள்.
 
இன்று அனுராதபுரத்தில் நடைப்பயணம் மேற்கொண்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்களிடம் இரு சிங்கள இனவெறியர்கள் வாய்ச் சண்டைக்கு போன செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த நிகழ்வு சிங்கள, தமிழ் இனவெறியர்களை தூக்கி எறியாமல் இலங்கை மக்களின் பிரச்சனைகளிற்கு தீர்வு ஒன்றினை என்றுமே காண முடியாது என்ற யதார்த்தத்தை மீண்டும் ஒரு முறை வலியுறுத்தி சொல்லியிருக்கிறது. இலங்கையின் ஒடுக்கப்படும் மக்கள், ஏழை மக்கள் இணந்தால் மட்டுமே இனவெறியர்களையும், இலங்கை அரசையும் எதிர்த்து போரிட முடியும் என்பதன் அவசியத்தை எடுத்துக் காட்டி இருக்கிறது.
 
இந்த சிங்கள இனவெறியர்கள் குழப்பம் விளைவிக்க முயன்ற இதே அனுராதபுரம் நகரில்  "அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு"  இலங்கையின் எல்லா இன மக்களையும் இணைத்துக் கொண்டு 05.10.2018 அன்று அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி போராட்டம் ஒன்றை முன்னெடுத்தது. தமிழ், சிங்கள மொழிகளில் உரைகள் நிகழ்த்தப்பட்டன. அந்தப் போராட்டத்தில் குழப்பம் விளைவிக்க எந்த ஒரு சிங்கள இனவெறியனும் முன் வரவில்லை. மக்கள் இணைந்தால் வாலாட்ட முடியாது என்பதை இனவெறியர்கள் அறிவார்கள்.
 
தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்தை எதிர்த்து "அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் சங்கம்" போராட்டங்களை நடத்திய போது யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களும் அவர்களுடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் போராட்டங்களை நடத்தினர். அப்போராட்டங்களை அடுத்து இலங்கை அரசு உயர்கல்வியை தனியார் மயமாக்கும் தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கியது. அப்போராட்ட அனுபவங்களை இந்த நடைப்பயணத்திற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பயன்படுத்தி இருக்க வேண்டும். "அனைத்து பல்கலைக் கழக மாணவர் சங்கத்தையும்" இணைத்துக் கொண்டு இப்போராட்டங்களை முன்னெடுத்து இருந்தால் போராட்டம் பெரும் வீச்சுடன் பரவி இருக்கும். இன வெறியர்களும் இகழ்ந்து பேச முன் வந்திருக்க மாட்டார்கள்.
 
தமிழ் மக்களை பிடித்திருக்கும் கேடுகளான சமயங்களிற்கும், சோதிடர்களிற்கும், சாதியை கேட்கும் திருமண சேவைகளிற்கும் விளம்பரங்கள் செய்து கொண்டு "லங்காசிறி" போன்ற பிழைப்புவாத வலதுசாரி இணையங்கள் தமிழ்த் தேசிய தொண்டு செய்கிறார்களாம். தமிழ் சினிமாவின் மூன்றாந்தர வணிக குப்பை நடிக, நடிகையருக்கு தளங்கள் வைத்து நடத்திக் கொண்டு தமிழ்த் தேசியமும் பேசும் இந்த இணையத் தளத்தைப் போன்ற கேவலத்தை போல வேறு எவரும் தமிழ்த் தேசியத்தை இழிவுபடுத்த முடியாது. "தினமலர்", "தினமணி" போன்ற பார்ப்பனிய, தமிழ் மக்கள் விரோத பத்திரிகைகளிற்கு தங்களது இணையத்தளத்தில் இணைப்புகள் கொடுத்துக் கொண்டே இவர்கள் தமிழ்த் தேசிய வியாபாரமும் செய்கிறார்கள்.
 
"சிங்களவர்களின் கோட்டைக்குள் நுழைந்த தமிழ் மாணவர்கள்; அதிரும் அனுராதபுரம்!" என்று வீராவேசமாக செய்தி வெளியிடும்  "லங்காசிறி" இணையத் தளத்தினர் ஏன் தாங்கள் சிங்களவர்களின் கோட்டைக்குள் நுழைந்து இலங்கை அரசை அதிர வைக்கக் கூடாது? இலங்கை அரசை அதிர விட்டு தமிழ் மக்களின் பிரச்சனைகளிற்கு ஒரு தீர்வை இந்த வீரமறவர்கள் பெற்றுத் தரலாமே.  "சிறி லங்கா" என்ற சிங்கள மொழிச் சொல்லை "லங்கா சிறி" என்று மாற்றிப் போட்டுக் கொண்டு சிங்களவரை அதிர வைக்கிறோம், தமிழ்த் தேசியத்தை வளர்க்கிறோம் என்று பிழைப்பு நடத்துவது கொஞ்சம் கூட நியாயமில்லை அய்யாமாரே!!. செய்திகளும், கட்டுரைகளும் தான் போட்டோக்கொப்பி என்றால் இணையத்தளத்தின் பெயரையும் கொப்பி அடித்து வைப்பது கொஞ்சமும் சகிக்க முடியாமல் இருக்கிறது அய்யாமாரே!!
 
-விஜயகுமார்
14 Oct 2018
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.