Jump to content

மகிழ்ச்சியின் முரண்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சியின் முரண்

dhonijpg.jpg

 

இருவிதமான மகிழ்ச்சிகள் உண்டு.

முதல் வகை மகிழ்ச்சி பெரிய துயரங்களோ அவநம்பிக்கைகளோ இல்லாத இயல்பு வாழ்வில் தோன்றுவது. இதை சின்ன தருணங்களின் மகிழ்ச்சி எனலாம். 

ஆறுதலாய் அமர்வது, ஒரு ஜோக்கை முழுக்க உணர்ந்து சிரிப்பது, அரட்டையடிப்பது, பொழுதுபோக்குகளில் ஈடுபடுவது, வேலையில் அடையும் சிறு சிறு வெற்றிகளில் மகிழ்வது, திட்டமிட்ட பயணங்களில் முழுமனதுடன் ஈடுபடுவது என.

இந்த மகிழ்ச்சியை நீங்கள் தேடிக் கொண்டே இருக்கிறீர்கள். மேல் தட்டு ஜாடியில் இருக்கும் இனிப்பை ஒரு குழந்தை எம்பி, ஏறி நின்று அம்மாவுக்குத் தெரியாமல் எடுக்க முயல்வது போல. ஒரு சின்ன துண்டு இனிப்பு தான் கிடைக்கும், ஆனால் அது கிடைக்கப்பட்டதும் அப்படி ஒரு மகிழ்ச்சியில் குழந்தையாக துள்ளுவோம். அதேவேளை அதை சாப்பிடத் துவங்கியதும் “இவ்வளவு தானா” என ஏக்கமும் போதாமையும் தோன்றும். எப்போதுமே வாழ்க்கையில் ஒரு நிறைவின்மை உணர்வு இருக்கும். இந்த நிறைவின்மையை ஒழிப்பதே இந்த வாழ்வின் இலக்கு; ஒவ்வொரு அன்றாட தேவை நிறைவேற்றமும் இந்த போதாமையை மறைக்கவே தேவைப்படும்.

இந்த வாழ்க்கையில் நிறைய புகார்கள் இருக்கும். சாப்பாடு, சுற்றுச்சூழல், சாலையில் படுகுழிகள், வாகன நெருக்கடி, பொறுப்பில்லாத மக்கள், உதவாக்கரை அரசாங்கம், அலுவலகத்தில் எவ்வளவு பிரச்சனைகள் என புகார்கள் எனும் மணலுக்குள் தலையை புதைத்துக் கொள்வோம். கூகிள் நிறுவனத்தில் வேலை செய்தாலும் கூட, நம் வாயில் இருந்து தினமும் முழநீளத்துக்கு புகார்கள் வளரும்.

இப்படி நாம் புகார் வாசிக்கும் போதே சிலர் நம்மிடம் “உனக்கு உள்ள வாய்ப்பு வசதிகளில் இத்துனூண்டு கூட இல்லாதவங்களைப் பார். ஆறுதல் கிடைக்கும்.” என்பார்கள். நமக்கே இவ்வளவு பிரச்சனைகள் என்றால், நகரங்களில் தெருவோரமாய் படுத்துறங்கும் எளிய மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்றே பெருங்குழப்பமாய் இருக்கும். ஆனால் என்னுடைய அனுபவம் என்னவென்றால் மிக அவலமான வாழ்வில் இருப்பவர்களே மிகச் சுருக்கமான புகார் செய்தி வாசிக்கிறார்கள். ஏன்?

இது வாழ்வின் மீதான எதிர்பார்ப்பின் பிரச்சனை, வாய்ப்பற்றவர்களுக்கு எதிர்பார்ப்புகள் குறைவு, ஆகையால்… என்று நான் முன்பு விளக்கம் கண்டதுண்டு. ஆனால் இது தவறான விளக்கம் என்று இப்போது உணர்கிறேன். ஏழையோ செல்வந்தனோ எல்லாருக்கும் எதிர்பார்ப்புகளும் கனவுகளும் ஏராளம். ஆகையாலே வாழ்க்கையில் ஏமாற்றங்களும் ஜாஸ்தி. இவ்விசயத்தில் மனிதர்களுக்குள் வேறுபாடே இல்லை.

அது இல்லையெனில் எது? மகிழ்ச்சியான வாழ்வின் பிரச்சனை என்ன?

மகிழ்ச்சியான வாழ்வின் பிரச்சனை மகிழ்ச்சியே.

மகிழ்ச்சி நமக்கு இன்னும் ஒரு சாக்லேட் கூட கிடைத்திருக்கலாமே எனும் சின்ன சின்ன அற்ப ஏக்கங்களில் நம்மை ஆழ்த்துகிறது. இத்தகையோர் சினிமா, விளையாட்டு, தகாத உறவு, சாகசம் என ஏதாவது ஒரு பரபரப்பை நாடிக் கொண்டே இருப்பார்கள்.

மகிழ்ச்சி உண்மையில் மகிழ்ச்சியை அழிக்கிறது. அறுபது வயதில் எல்லா வேலைகளும் ஒருநாள் ஓய்ந்து தேமேவென சாய்வு நாற்காலியில் இருக்கும் ஓய்வு பெற்ற முதியோர் ஒரு உதாரணம். தினசரி வேலையின், அழுத்தங்களின், நெருக்கடிகளின் பிடி மென்னியை விட்டதும் மனதில் துன்பம் நிறையும். ஓய்வு பெற்றோருக்கு விரைவில் மரணம் நேர்வதும் / கடுமையான வியாதிகளில் போய் மாட்டிக் கொண்டு அந்த அவஸ்தைகளுடன் மட்டும் மன்றாடுவதும் வழமை.

மற்றொரு உதாரணம் – நமது வாழ்க்கைத் தரம் கடந்த கால் நூற்றாண்டில் பெருமளவு உயர்ந்துள்ளது. மகிழ்ச்சியும் சௌகர்யங்களும் அதிகமாக மன அழுத்தம் கொள்வோரின் எண்ணிக்கையும் கணிசமாய் கூடவே உயர்ந்துள்ளது.

அடுத்தது இரண்டாவது வகை:

யோசிக்கவோ தீர்க்கவோ அவகாசம் இன்றி, கடும் போதாமைகள், சிக்கல்கள், பிரச்சனைகளில் மாட்டிக் கொண்டோரின் வாழ்க்கையில் இம்மகிழ்ச்சி வருகிறது – இந்த வாழ்க்கையில் எதையும் தனியாய் உணர்ந்து ருசிக்க முடியாத, எதையும் ஜாலியாக போகிற போக்கில் எடுத்துக் கொள்கிற மகிழ்ச்சி உண்டு.

இத்தகையோர் பற்பல அன்றாட பிரச்சனைகளை அதிகம் கருத்திற் கொள்ளாமல் கடந்து போவார்கள். “ஓ இப்படி ஒரு பிரச்சனை இருக்கிறதா, நான் பார்க்கலியேங்க?” என அவ்வப்போது யோசிப்பார்கள், அந்த பிரச்சனைகளின் சிகரத்தின் உச்சியில் நின்றபடியே.

நான் என் தனிப்பட்ட வாழ்வில் இதை எதிர்கொண்டிருக்கிறேன். என் சுற்றத்தில் மிக மிக கடுமையான வேலைப்பளுவில் மாட்டியிருப்போரையும், சதா உள்ளுக்குள் கண்ணீர் உகுத்தபடி இருப்போரையும் நிறைய பார்த்திருக்கிறேன். அசோகமித்திரனின் சிறுகதைகளில் இத்தகையோர் அடிக்கடி வருவார்கள்.

இது மகிழ்ச்சியின்மை தரும் மகிழ்ச்சி. கேட்க முரணாய், பைத்தியக்காரத்தனமாய் இருக்கும். ஆனால் இப்படி ஒரு மகிழ்ச்சி உண்டு. இவ்வுலகில் கணிசமானோர் இத்தகைய மகிழ்ச்சியை உணர்வதுண்டு. இவர்களிடம் பெரிய போதாமை உணர்வு இருக்காது. மகிழ்ச்சியை நாட, விரட்டிப் போக எந்த தூண்டுதலும் இராது. மகிழ்ச்சி ஒரு ஈயைப் போல இவர்களின் மூக்கிலோ தோளிலோ வந்து அமரும். கவனிக்கும் முன் போய் விடும். நான் அசோகமித்திரனின் ஆளுமையில் இந்த அலுப்பான, தேடலற்ற மகிழ்ச்சியை (மகிழ்ச்சியற்றதால் ஏற்படும் மகிழ்ச்சியை) பார்த்திருக்கிறேன். அவர் கதைகளை புகழ்ந்தால் ஒரு சின்ன உற்சாகம் அவரிடம் பிறக்கும். உடனே “இப்ப என்னத்துக்கு இதையெல்லாம் பேசி…” என ஒரு இயல்பான புருவ உயர்த்தலும் விலகலும் தோன்றி விடும். துயரங்களை குடித்துக் குடித்து கசப்பைப் பற்றியே கசப்பின்றி மிக சாதாரணமாய் பேச அவரால் முடியும். தெருவில் இறங்கி கவனித்தாலே, கடற்கரையில் உட்கார்ந்து கொண்டு பராக்கு பார்த்தாலே, வாகன நெருக்கடியில் நிற்போர் முகங்களில் நோக்கினாலே இதே போன்று மகிழ்ச்சியை எதிர்கொள்ளும் “பொறுப்பற்ற” சுபாவத்தை காண முடியும். 

தோனியின் தலைமையின் கீழ் இந்திய கிரிக்கெட் அணி இரண்டு டெஸ்ட் தொடர்களை மிக மிக கேவலமான முறையில் இழந்தது. அப்போது ஒரு பத்திரிகையாளர் கேட்டார், “இவ்வளவு மட்டமாய், போராட்ட உணர்வே இன்றி தோற்றிருக்கிறோம். இதை இந்தியாவின் படுமட்டமான டெஸ்ட் தோல்விகளில் ஒன்றாய் கூறலாமா? இந்த தோல்விகளை எப்படி மதிப்பிடுவீர்கள்?”

தோனி ஒரு சன்னமான புன்னகையுடன் சொன்னார்: “சாகும் போது சாவீர்கள், அவ்வளவு தான். எப்படி மேலும் சிறப்பாய் சாகலாம் என யோசிக்க மாட்டீர்கள்.”

இத்தகையோர் மகிழ்ச்சியை மதிப்பிடுவதோ அலசுவதோ உரிமை கொண்டாடுவதோ இல்லை என்பதால் குறைவான அழுத்தத்தோடு இருப்பார்கள்.

ஆக 

1)   மகிழ்ச்சி என்பது ஒரு முரண்போலி (paradox) – அது இருந்தால் இருக்காது, இல்லாவிட்டால் இருக்கும்.

2)    மகிழ்ச்சி என்பது அதனளவில் மகிழ்ச்சி அல்ல.

3)   மகிழ்ச்சி மகிழ்ச்சியின்மையையும் மகிழ்ச்சியின்மை மகிழ்ச்சியையும் தரும்.

 ஒரு பார்முலாவாக எழுதுவதானால்

   மகிழ்ச்சி = + மகிழ்ச்சி

 

http://thiruttusavi.blogspot.com/2018/10/blog-post_73.html?m=1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.