• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
விசுகு

தன்னார்வ மொழி உரிமை கண்காணிப்பாளர்

Recommended Posts

தன்னார்வ மொழி உரிமை கண்காணிப்பாளர்

.............................................................
கிளிநொச்சிக்குச் செல்லும் போதெல்லாம் அதிகமாகக் கவலை கொள்வது கடைகளின் பெயர்ப் பலகைகளைப் பார்த்துத்தான். எத்தனை அழகழகான தமிழ்ப் பெயர்களால் அலங்காரமாகி நின்ற இடங்கள் இப்படி ஆகிவிட்டனவே என்று.; மொழி இனத்தின் அடையாளங்களில் மிகமிக முக்கியமானதல்லவா!

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து எழுத்துப் பிழைகளுடன் காணப்பட்ட பெயர்ப் பலகைகளை எங்கெல்லாம் கண்டேனோ அவற்றை எல்லாம் சேகரித்தேன். அவற்றில் முகநூல் பதிவுகளில் இருந்தே அதிகமான படங்களை தரவிறக்கி சேகரித்து வைத்திருந்தேன்.

பெரிய பெரிய பெயர்ப் பலகைகளில்
முக்கியமான பெயர்ப் பலகைகளில்
தமிழர்களின் இடங்களிலேயே உள்ள பெயர்ப் பலகைகளில்
விளம்பரங்களில்
பொதுத் தளங்களில்
பேருந்துகளில்
என எங்கும் எதிலும் காணப்பட்ட எழுத்துப் பிழைகளை தொடர்ந்து படங்களாக பார்த்த போது
மொழி மீது 
நாங்கள் 
காட்டாத அக்கறை பற்றிய
கவலை வந்தது.

முகநூலில் மிக அதிகமாக எழுத்துப் பிழைகளைச் சுட்டிக்காட்டும் சில நண்பர்களுடன் உரையாடினேன். அவர்களின் ஊடாக தேடித்தான் அரசகரும மொழிகள் அமைச்சின் செயற்பாடுகளை அறிந்தேன்.

காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையாக எனக்கொரு அழைப்பு. 
2018 யூன் 04. காலை 6.00 மணி. மன்னார் கச்சேரியில் பணிபுரியும், ஒருவர் தொலைபேசியில் அழைத்தார்.

'அக்கா, இண்டைக்கு 9.00 மணிக்கு மன்னார் கச்சேரிக்கு அமைச்சர் மனோ கணேசன் வாறார். அவர் உரையாற்றுவார் நீங்களும் அவருடன் ஏதும் கேட்க இடமிருக்கிறது. வருகிறீர்களா?'

அதுவரை மனோகணேசன் என்றவரை ஒரு அமைச்சர் என்று பெயரளவில் மட்டுமே தெரிந்து வைத்திருந்தேன். முதல் முறையாக நேரில் காணவும் அவரது உரையை கேட்கவும் ஒரு கேள்வியுடனும் வென்றேன். சென்று முதல் வரிசையில் அமர்ந்தும் கொண்டேன்.

முகமன் கூறல்களுக்குப்பின் அமைச்சர் உரையாற்றினார்.

அவரது முதலாவது கருத்தே 'நான் மனோ கணேசன். ஷன் இல்லை. சன். என் பெயர் எழுத்துப் பிழையாக எழுதப்பட்டிருக்கிறது' 
ஆஹா. அழகு. இந்தத் துணிச்சல்மிக்க மனிதர்களே அதிகம் வேண்டும். மேடையில் நின்றே தவறை தவறு எனச் சுட்டிக்காட்டும் தைரியம்தான் வேண்டும்.

கனணித்திரையை சுவரில் பார்த்துக் கொண்டிருந்தபோதே அவரது பெயர் திருத்தப்பட்டது.

யாரோ நீட்டிய காகிதத் விரித்துப் பார்த்தார். 'இங்கே சிங்களவர்களும் வந்திருப்பதால் சிங்களத்தில் பேசவும்' அட விடுங்கப்பா இங்கே தமிழில்தான் பேசுவேன் என்று கூறி ஆரம்பித்த அவருடைய உரை உண்மையில் நன்றாக இருந்தது.

கேள்வி நேரத்தில் இரண்டாவது ஆளாக எழுந்தேன்.

'வணக்கம். நிகழ்வின் ஆரம்பத்தில் உங்களது பெயரில் இருந்த எழுத்துப் பிழையைச் சுட்டிக் காட்டினீர்கள். அது உடனடியாகத் திருத்தப்பட்டது. பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. அதைப்போலவே நீங்கள் நினைத்தால் நாடு முழுவதிலும் உள்ள எழுத்துப் பிழைகளை ஒரு மாதத்திற்குள் சீர்செய்து விடலாம் என்று நம்புகிறேன். இதற்கு ஏதும் வழியை ஏற்படுத்துவீர்களா?' என்றேன்.

'1956. இந்த இலக்கத்துடன் தொடர்பு வைத்திருங்கள். வட்ஸப், வைபர், ஐஎம்ஒ மூன்றிருலுமாக நீங்கள் படங்களை அனுப்பலாம். அநேகமானவர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்கிறீர்கள். தவறுகளை கண்டால் உடனே அதனை தெளிவாக படம் எடுத்து 1956 இற்கு உடனடியாக அனுப்புங்கள். மிகுதியை நாங்கள் கவனித்துக் கொள்வோம் உங்கள் கேள்விக்கு நன்றி'

அட! இவ்வாறெல்லாம் வழி இருப்பதை இத்தனை நாட்களாக அறியாமல் இருந்திருக்கிறேனே என்று தோன்றியது.

மாற்றுத்திறனாளிகளுக்கான அரச பாராட்டுச் சான்றிதழ்களில் சிங்களம் மட்டும் காணப்படுகிறது. தமிழிலும் ஒப்பமிட்டு வழங்கப்படுதல் வேண்டும் என்ற கருத்தையும் முன்வைத்தேன்.

சான்றிதழின் பிரதியை கொண்டு வந்தீர்களா என்றார். அனுப்பிவைக்கிறேன் என்றேன். அரச ஆவணங்கள் இருமொழியில் தரப்படுவதில் கூடிய கவனம் எடுத்து வருவதாகக் கூறினார்.

வெறும் வாக்குறுதியாக இருக்குமோ? என்று நானும் மனதுக்குள் நினைக்காமல் இல்லை. எனினும் வரும்போதே நெற்காட் போட்டுக்கொண்டேன்.

எழுத்துப் பிழைகளுடன் சேகரித்த படங்களில் தெளிவாகவும் எந்த இடம் அல்லது எந்தப் பேருந்து என்று இனங்காணும் வகையிலும் இருந்த படங்கள் அனைத்தையும் வைபரில் அனுப்பினேன். அடுத்தநாளே எனக்கு பதில் எழுதியிருந்தார்கள். 
கவனத்தில் எடுப்பதாக.

பின்பு முகவரி கேட்டு எழுதினார்கள்.

பின்பு கடிதமும் ஒரு படிவமும் வந்தது. நிரப்பி அனுப்பினேன்.

பின்னர் அழைப்பு வந்தது.

(இதற்குள் ஆங்காங்கே கண்ட எழுத்துப்பிழைகளுடன் கூடிய பெயர்ப் பலகை படங்களை அனுப்பவும் செய்தேன்.)

12.10.2018, கொழும்பு 7, 
கமநல ஆராய்ச்சி நிலையத்தில் நிகழ்வு. 
தன்னார்வத் தொண்டராக எனது செலவிலேயே சென்றேன். தொண்டர்கள் மட்டுமே வந்திருந்தார்கள். யாரையும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஒரு முகம் கூட அறிமுகமில்லாத இடத்தில் நானே என்னை கவனித்துக் கொண்டேன். 
இலங்கை முழுவதிலும் இருந்து வந்திருந்த தொண்டர்களில் யார் முஸ்லிம் யார் சிங்களவர் யார் தமிழர் என்று தெரியவில்லை. வந்திருந்தவர்களிலும் பெரும்பான்மையானவர்கள் ஆண்கள். மிகச்சிலரே பெண்கள். அதிலும் தமிழ் முகங்கள் குறைவு. அமைதியாகச் சென்று இரண்டாவது வரிசையில் தனியாக அமர்ந்து கொண்டேன்.

மங்கள விளக்கின் திரிகளை ஏற்றும்போது நானும் அழைக்கப்பட்டேன். தோற்றம் காரணமாக இருந்திருக்கலாம். பெயர்கள் அழைக்காமல் நடந்த நிகழ்வு. தன் புன்னகையாலும் சைகையாலும் அழைத்த அந்தப் பெண்மணியின் பெயரோ பதவியோ எனக்குத் தெரியவில்லை. (படத்தில் பச்சைச் சேலையுடன் நிற்கிறார்.)

நிகழ்வு ஆரம்பமாகியது.
நோக்கம் பற்றிய உரை
அரசகரும மொழிக் கொள்ளை தொடர்பான விளக்கம்
மொழிக்கொள்கை தொடர்பான சட்ட ரீதியான விளக்கம்
தொடர்ந்து மொழி ரீதியான நல்லிணக்கம் பற்றிய குறுந்திரைப்படங்கள் 3 காட்சிப்படுத்தப்பட்டன. 
படங்கள் பார்த்து முடிந்து வெளிச்சம் உயிர்ப்பிக்கப்பட்ட போது என்னை அடுத்து, இரண்டு வெற்று இருக்கைகளைக் கடந்து இருந்தவன் தன் கண்களைத் துடைத்துக் கொண்டான். முகம் சிவந்திருந்தது.

'நீங்கள் தமிழா?' என்றேன். 'ம்' என்று புன்னகைத்தான்.

'கடைசியா போட்ட மொழி தரமா இருக்கு என்ன?' என்றேன்.

'முதலாவது படமும் நல்லம்' என்றான்.
'மொழிதான் எனக்கு அதிகமான எளிமையா புரியிது.' என்றேன்.

'ஓம்' என்றான்.

மதிய உணவு வேளையில் கிளிநொச்சியில் இருந்து வந்திருந்த ஒருவர் அறிமுகமாகினார். உணவு பரிமாறிக்கொள்ள அவரே உதவினார். அவர்தான் படங்களையைும் எடுத்து பின்னர் அனுப்பி வைத்தார்.

உணவு முடியும் வேளை எனது வலது புறத்தில் இருந்து ஒரு சிங்களத்தொனி கலந்த குரல் 
'ஆ எப்பிடி சுகமா?'

பார்த்தவுடன் புரிந்தது. 'ஆ நீங்களா? எங்க இங்க?' என்று மரியாதை குறித்து எழுந்தேன்.

'இருங்க நீங்க இருங்க' என்றவர் இதற்குமுன் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த தேசப்பிரிய அவர்கள். இவருடன் பலதடவைகள் எதிர்த்துப் பேசியிருக்கிறேன். 'நீங்க செய்ய மாட்டிங்க. நான் செய்திட்டு உங்களுக்கும் பாராட்டுவதற்கு அழைப்பு விடுப்பேன்.' என்று நேரே கூறியிருக்கிறேன்.

'நான்தான் செயலாளர். தெரியுமா?' என்றார்.

'தெரியாதே' என்றேன். உண்மையில் தெரியாது. மன்னாரைவிட்டு மாற்றமாகி எங்கே போனார் என்று தேடும் அளவுக்கு அவர் நான் வேலை செய்த தளங்களில் உறுதுணையாக இருந்திருக்கவில்லை. புன்னகையுடன் விடைபெற்றுக் கொண்டார்.

பிற்பகல் அமைச்சரின் உரை. இரண்டாவது தடைவை அவரது உரையும் பிடித்திருந்தது.

கேள்வி நேரத்தில்,
'மாற்றுத்திறனாளிகள் சார்பாக என்னிடம் ஒரு கேள்வி உண்டு. மொழிகளில் சைகைமொழி பேசுபவர்கள் தகவல் அறியும் உரிமை முழுதாக மறுக்கப்பட்டவர்களாக உள்ளார்கள். மொழி உரிமை என்ற அடிப்படையில் சைகை மொழியில் தகவலறியும் வாய்ப்புகள் தொடர்பாக ஏதும் திட்டங்கள் இருக்கின்றனவா இல்லாவிடில் ஏதாவது வழிமுறையை ஏற்படுத்த இயலுமா என்பதை அறிய விரும்புகிறேன்' என்றேன்.

'நல்ல கேள்வி. அரசகரும மொழிகள் என்ற வகையில் மும்மொழிகள் பிரதானமானவை. ஆனாலும் சைகை மொழியின் நிலைப்பாடு குறித்து திறந்த பேச்சுக்களை நடாத்தி வருகிறோம். அதன் அவசியம் இருக்கிறது என்று தெரியும். விரைவில் சைகை மொழி பேசுவோருக்கான நல்ல வழிமுறைகளை ஏற்படுத்துவதற்கு முயற்சியில் உள்ளோம். உங்கள் கேள்விக்கு நன்றி' என்றார்.

அழைக்கப்பட்ட தொண்டர்கள் 100 பேரில் 25 பேருக்கு மட்டுமே இம்முறை அடையாள அட்டையும் சான்றிதழும் வழங்கப்படுவதாக கூறினார்கள். அதிகமான முறைப்பாடுகளை முன்வைத்தவர்கள் என்ற அடிப்படையில் வழங்குவதாகவும் உரையில் தெரிய வந்தது. ஐந்தாவது ஆளாக எனது பெயர் அழைக்கப்பட்டது.

சான்றிதழும் அடையாள அட்டையும் வாங்கிய பின் 'நானும் எனது நூல்களை உங்களுக்குத் தர விரும்புகிறேன்' என்று கூறி எனது நூல்களை வழங்கினேன்.

மாற்றுத்திறனாளிகளை பாராட்டும் நிகழ்வுகளில் வழங்கப்பட்ட சான்றிதழ்கள் சிங்களத்தில் மட்டும் ஒப்பம் வைத்துவிட்டு தமிழில் அச்சடிக்கப்பட்ட பகுதி வெற்றிடமாக இருப்பதையும் சுட்டிக்காட்டிய பிரதிகளையும் அதில் வைத்திருந்தேன்.

அப்பதிவை சுருக்கமாக முகநூலில் பதிவிட்டேன். 24 மணித்தியாலங்களுக்குள் வந்த வாழ்த்துக்கள் உண்மையில் எனக்கு மிகுந்த உற்சாகத்தைத் தந்தன.

தன்னார்வ மொழி உரிமை கண்காணிப்பாளர் அடையாள அட்டையானது நான் காணும் எப்பகுதியில் 
மொழிப்பிறழ்வு, 
மொழிப்பிழை, 
மொழியுரிமை மீறப்பட்டாலும், 
அங்கே உரிமையுடன் நின்று 
சரியான மாற்றத்திற்காக தொண்டாற்றுவதற்கே மக்காள்.

நீங்களும் நம் மொழியை பாதுகாக்க தொண்டாற்றலாம்.

இது அறிவுரை அல்ல. 
கடமை.

நம் இனம் வாழ மொழியும் ஆரோக்கியமாக வாழ வேண்டும்.

இது மனோகணேசன் என்ற அமைச்சரின் கடமையும் பொறுப்பும் மட்டும் அல்ல. நமதுமாகும்.

ஏனெனில் செழுமையாக வாழ வேண்டியது நமது மொழியாகும்.

வெற்றிச்செல்வி
13.10.2018

https://www.facebook.com/vetrichelvi.velu?__tn__=%2CdCH-R-R&eid=ARDCUR7W41Y5Xx5viOrZt7kLM8Fl0HFwH63QsYGdgTrctHm1X3Zrde6Mn0zHn-6Al9JWSnDCM8L2wmXf&hc_ref=ARTrTP1ybxyE9YFlb4vVSlbKPjQd7zLcg9rBnLaLwmt7Kew3VqzKt2LOFd3JCUZRgJI&fref=nf

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this