Jump to content

அங்கணாக்குழியும் எழுத்தாளர் நாறும்பூநாதனும்! - செம்மொழிப் புதையல்-1


Recommended Posts

அங்கணாக்குழியும் எழுத்தாளர் நாறும்பூநாதனும்! - செம்மொழிப் புதையல்-1

பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி.

"பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!"
- பாவேந்தர் பாரதிதாசன்

 

புகழ்பெற்றத் தமிழ் எழுத்தாளர் நாறும்பூநாதன் அவர்களின் எழுத்துக்கள் பெரும்பாலும் "மக்கள் வாசிப்பு" சார்ந்தவை. தமிழ் எழுத்துலகின் படைப்பாளிகளைக் குறித்து நாம் அறிந்திராத அரிய செய்திகளை, 'இவர்' 'அவர்'களை 'வாசித்ததன்' பின்புலத்தில் மண்ணின் மணம் கமழ, சுவையுடன் படைப்பது இவரின் தனித்துவம்.

விளையும் பயிர்!

மாணவப்பருவத்திலேயே தம் படைப்புகளைத் தொடங்கிவிட்ட  "எழுத்தாளர் நாறும்பூநாதன் அவர்களை"ப் உயர்நிலைப்பள்ளி நாட்கள் தொட்டு வாசித்துவரும் எனக்கு அண்மையில் அவர் தமிழ் மரபு அறக்கட்டளையின் "மண்ணின் குரல்" வலைத்தளத்தில், "வட்டார வழக்கு: திருநெல்வேலி பேச்சு வழக்கு - பகுதி 1"ல் விரிவாகப் பேசியுள்ளதைத் தற்செயலாகக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது; வாசிப்பின் இறுதியில் வியப்பின் விளிம்புக்கே சென்றது என் மனம். ( http://voiceofthf.blogspot.com/2017/02/1.html)

தமிழ் மரபை அழித்தே தீர்ப்பது என்ற தீராப்பகையுடன் வடமொழியும், சமற்கிருதமும் இடைவிடாமல் மூவாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து தாக்குதல் நிகழ்த்தியும், அசராமல், இன்னும் தொன்மைத் தமிழ்மரபு மாசுபடாமல், நெல்லை மண்ணின் குரல் வியப்பூட்டும் வகையில் சங்ககாலத் தமிழ்மணம் கமழ உயிர்ப்புடன் வாழ்ந்துகொண்டிருக்கின்றது என்பதை அவர் பேச்சு உணர்த்தியது.

எழுத்தாளர் நாறும்பூநாதனின் பங்களிப்பு - நெல்லை மண்வாசனையில் வாழும் சங்கத்தமிழ்!   

நெல்லை மண்வாசனை குறித்து எழுத்தாளர் நாறும்பூநாதன் அவர்கள் பதிவிட்டுள்ள செய்திகள் தமிழியல் மற்றும் தமிழ் மரபு ஆய்வாளர்களுக்கான மிக முக்கியமான ஆய்வுத் தரவுகளாகும். அதிலிருந்த 'அங்கணக் குழி' என்னும் சொல்லாடல் என்னை மிகவும் கவர்ந்தது.

கம்பனைச் சாட்சிக்கு அழைத்துப் பரிமேலழகரைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்ற உதவிய எழுத்தாளர் நாறும்பூநாதன்!

நாறும்பூநாதன் அவர்கள் 'அங்கணகுழி' குறித்துச் சொன்ன செய்திகள் மிகவும் தமிழக வரலாற்றுப் பார்வையில் மிக முக்கியத்துவம் கொண்டது! கம்பனைச் சாட்சிக்கு அழைத்துப் பரிமேலழகரைக் குற்றவாளிக்கூண்டில் நிறுத்த எனக்கு மிகவும் உதவியது அவ்விளக்கமே! சரி, நேராக விஷயத்துக்கு வருவோம்.

நெல்லையின் அங்கணாக்குழி!

நெல்லை மாவட்டத்தின் பாரம்பரிய வீடுகளில் கடைசி அறையாக இருப்பது சமையலறை. சமையல் அறையிலிருந்து புறவாசல் செல்ல ஒரு கதவு இருக்கும். சமையலறையின் ஓர் மூலையில் சுமார் இரண்டடி சதுர அளவுப் பரப்பு தாழ்வான வாட்டத்துடன்  சமையலறைக் கழிவுநீர் வெளியேறும்   துளையுடன் அமைந்திருக்கும் பகுதி 'அங்கணாக்குழி' அல்லது 'அங்கணக்குழி' என்றழைக்கப்படுகின்றது.

ஏழைப்பெண்களின் குளியலறையாக அங்கணாக்குழி!

தனியாகக் குளியலறை இல்லாத வீடுகளில், இந்த அங்கணக்குழிகளே பெண்களின் குளியலறை. காபி அல்லது டீ போட்டு முடித்தவுடன், காபித்தூள்-டீத்தூள் கழிவுகள் இந்த அங்கணாக் குழிகள் வழியாகவே சாக்கடையில் சங்கமிக்கும்.

காபி நன்றாக இல்லை என்றால், 'அங்கணாக் குழில கொட்டறத என் வயிற்றில கொட்டக் குடுத்திருக்க!" என்று கோபமுகம் காட்டுவார் நெல்லை மண்ணின் குடும்பத் தலைவன்.

திருக்குறளில் அங்கணாக்குழி!

இருக்கட்டும். 'அங்கணம்' என்ற சொல்லை உவமையாகக் கொண்டு ஒரு திருக்குறள் படைத்துள்ளார் வள்ளுவர்.

அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தம்கணத்தர்
அல்லார்முன் கோட்டிக் கொளல். - திருக்குறள் 720

கேட்கும் சான்றாண்மையற்றத் தகுதியற்றவர்கள் முன்பு அறிவார்ந்த நல்ல கருத்துக்களை விதைப்பது அங்கணத்துக்குள் அமிழ்தத்தை ஊற்றுவதைப் போன்றது என்று வள்ளுவர் சொல்லும் திருக்குறள், சங்கத் தமிழ் வாழும் நாற்றங்காலாக நெல்லை மாவட்டத்தமிழ் வாழ்ந்துகொண்டிருக்கின்றது என்பதற்குச் சான்று.

பத்தாம் நூற்றாண்டில் திருக்குறளுக்கு உரையெழுதிய மணக்குடவர், 'அங்கணம்' என்ற சொல்லுக்கு 'அங்கணம்' என்றே பொருள் உரைத்துள்ளார் என்பது பத்தாம் நூற்றாண்டில் அச்சொல் தமிழகமெங்கும் பேச்சுவழக்கில் இருந்திருக்கிறது என்பதற்குச் சான்று.

கம்பராமாயணத்தில் அங்கணாக்குழி!

கி.பி. 1180-1250களில் வாழ்ந்த கவிச்சக்கரவர்த்தி கம்பன் கம்பராமயணத்தில்

வரி சிலை ஒருவன் அல்லால், மைந்தர் என் மருங்கு வந்தார்
எரியிடை வீழ்ந்த விட்டில் அல்லரோ? அரசுக்கு ஏற்ற
அரியொடும் வாழ்ந்த பேடை, அங்கணத்து அழுக்குத் தின்னும்
நரியொடும் வாழ்வது உண்டோ -நாயினும் கடைப்பட்டோ னே! கம்பரா-யுத்தகாண்டம்-மாயாசனகப்படலம்-6"

என்று சீதையின் கூற்றாக முழங்கியதிலும் 'அங்கணம்' என்ற சொல்லாடல் உண்டே! கம்பனுக்குப்பின் பதிமூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்\ தோன்றிய வைணவரான பரிமேலழகருக்கு கம்பனின் 'அங்கணத்து அழுக்குத் தின்னும் நரி' என்ற உவமை உறுதியாகத் தெரிந்திருக்கவே செய்யும்!

பரிமேலழகர் ஏன் அங்கணாகுழியை மூடினார்?

திருக்குறளுக்கு உரையெழுதிய பரிமேலழகர் பின் ஏன் 'அங்கணம்' என்ற சொல்லுக்கு 'முற்றம்' என்று மாற்றுப் பொருள் ஏன் சொல்லவேண்டும்? வடமொழிப் பற்றாளரான பரிமேலழகர் தமிழர் மரபுகளும், தத்துவங்களும் தன்னகத்தே கொண்ட திருக்குறளிலிருந்து அவற்றை முற்றிலுமாக நீக்கி, திருக்குறளுக்கு ஆரியச் சாயம் பூசும் முழுமுனைப்பும் கொண்டவர் என்பதை 'அறம் என்பது மனுதருமம் சொல்வதை செய்வதும்,   மனுதருமம் மறுத்ததை விலக்குவதும்தான்' என்று சொல்லும் இடத்திலேயே தொடங்கிவிடுகின்றது.

பரிமேலழகரைப் பின்பற்றியே, கலைஞர் மு.கருணாநிதி, பேராசிரியர் மு.வரதராசனார் உள்ளிட்ட பல உரையாசிரியர்களும் இப் பொருளையே உரைத்துள்ளார்கள் என்பதுதான் வியப்பு.

கூடுதல் கொசுறு: வண்ணநிலவன் எழுத்திலும் அங்கணாக்குழி!

வண்ணநிலவன் கதைகள் தொகுப்பில் எட்டாவதாக வரும் "அழைக்கிறார்கள்" கதையில் பிரிவுறாத நெல்லை மாவட்டத்தின் குலசேகரப்பட்டினம் என்ற ஊரில் நிகழ்வாக, அங்கணத்தைக் குறித்துப் பின்வரும் ஓர் உரையாடல் வருகின்றது:

"குடும்பன் விசுவாசம் மிக்கவன். கஸ்தூரியின் வீடு இடிந்துவிட்டது தெரியும் அவர்களுக்கு. வீட்டடி மனையை வாங்கின குலசேகரப்பட்டணத்து சாயபு வீட்டை அடியோடு இடித்து மட்டமாக்கி புதுவீடு கட்ட ஆரம்பித்திருந்ததும் அப்போதுதான். குடும்பன் ஒதுங்கி நின்று சொன்னது வேதம். அவனும் கூலிக்கு வீடு இடித்தானாம். புறவாசல் அங்கணத்தை இடிக்கும்போது, அவர் போட்டுப் போட்டுத் துப்பின வெற்றிலை எச்சில் காவி இன்னும் அங்கணத்து மூலையில் இருந்ததைப் பார்த்தேஞ்சாமி என்றானே."

மேற்கண்ட வரிகள் அழகாகச் சொல்லும் 'அங்கணம்' என்பது புறவாசலில் உள்ள ஒன்று என்று. பண்டையத் தமிழர்களின் இல்லங்களில் முற்றம் என்பது வீட்டின் முன்னேயுள்ள பகுதி என்பதால் அது எப்போதும் தூய்மையாக வைக்கப்படுவது அனைவரும் அறிந்த செய்தி. முற்றம் என்பது முன்றில் என்றும் அழைக்கப்பட்டது.

சீரிளமைச் சங்கத்தமிழ் வாழும் நெல்லை!

'ஆரியம் போல் உலகவழக்கு அழிந்து ஒழிந்து சிதையாத சீரிளமையோடு இன்றும் விளங்கும் தமிழ்மொழியின் தொன்மைப் பெயர்ச்சொல்லாடல்கள் இன்றும் தென்மாவட்ட மக்கள் மொழியாக செம்மையாக வாழ்ந்து வருகின்றது. அத்தகைய சொற்களைப் பாதுகாக்க நம்மிடையே மக்கள் வாசிப்பாளரரும், எழுத்தாளருமான நாறும்பூநாதன் போன்ற படைப்பாளிகளை எம் தமிழன்னை தொடர்ந்து பெறும் பேறு பெற்றவள்! அவளின் சீரிளமையும் குன்றாத வளமையுடனும் மாறாத செழுமையுடன் என்றும் பொலிந்து ஒளிரும்!

வெள்ளம் போல் தமிழர் கூட்டம்! வீரங்கொள் கூட்டம்!  அன்னார்
உள்ளத்தால் ஒருவரே! மற் றுடலி னால் பலராய்க் காண்பார்!
கள்ளத்தால் நெருங்கொணாதே எனவையம் கலங்கக் கண்டு
துள்ளும் நாள் எந்நாளோ! - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்!

 

புதையல் வேட்டை தொடரும்!

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.