Sign in to follow this  
கிருபன்

மைத்திரியின் பேயாட்டம் - தடுமாறும் மக்கள்

Recommended Posts

மைத்திரியின் பேயாட்டம் - தடுமாறும் மக்கள்

புருஜோத்தமன் தங்கமயில் / 2018 டிசெம்பர் 05 புதன்கிழமை, பி.ப. 12:30 Comments - 0

 ராஜபக்‌ஷக்களின் சர்வாதிகாரத்துக்கு எதிராக, நாட்டு மக்களால் ஜனநாயகத்தைக் காப்பதற்காக முன்னிறுத்தப்பட்ட மைத்திரிபால சிறிசேன, இன்றைக்கு ஜனநாயக விரோதியாக, மக்களின் இறைமையைக் கேலிக்குள்ளாக்கிவிட்டு, சர்வாதிகாரத்தின் வேர்களைப் பிடித்துக்கொண்டு நிற்கிறார்.   

இலங்கை அரசியல் மோசமான தலைவர்களைப் பதிவு செய்து வைத்திருக்கின்றது. நாட்டில் இன ரீதியான மோதல்களைக் கட்டமைத்துக் கொண்டு, வாக்கு அரசியலில் வெற்றிபெற்று, நாட்டைப் படுகுழிக்குள் தள்ளிய தலைவர்கள் ஏராளம்.   

ஆனால், நாட்டின் முதற்குடிமகனாக சர்வ அதிகாரங்களோடு இருக்கும் ஒருவர், மைத்திரி அளவுக்குத் தாழ்வுச் சிக்கலோடு இருந்ததில்லை. நாடு எதிர்கொண்டுள்ள தற்போதையை நெருக்கடிக்கு, மைத்திரியின் அதிகாரத்தின் மீதான பேராசையும் தாழ்வுச் சிக்கலுமே பிரதான காரணங்களாகும் என்ற குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் காணப்படுகிறது.   

உலகம் பூராவும் ஆட்சியாளர்களுக்கு எதிராகவே, அரசியல் சதி முயற்சிகள் பெரும்பாலும் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால், இலங்கையில், ஆட்சியின் தலைவனே அரசியல் சதியில் ஈடுபடுவது போன்ற காட்சிகள், அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.   

பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரி அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்து, பதவியேற்று சில மாதங்கள் வரையில், ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதில்லை என்று அவர் கூறிவந்தார். ஆனால், 2016ஆம் ஆண்டின் பின்னராக, ஆட்சியதிகாரத்தில் தொடர்ந்தும் நீடித்திருப்பதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்தத் தொடங்கினார்.   அதற்காக, இணங்கும் தரப்பொன்றை அவர் தேடத்தொடங்கினார். ராஜபக்‌ஷக்களிடம் இருந்து, சுதந்திரக் கட்சியை மைத்திரி கைப்பற்றினாலும், அதன் வாக்கு வங்கியை, அவரால் கைப்பற்ற முடியவில்லை.   

அதனால், மீண்டும் ரணிலோடு இணக்கமாகி, ஜனாதிபதியாகிவிட வேண்டும் என்கிற முனைப்பில் இருந்தார். அதற்காக, ரணிலிடம் பணிவான கோரிக்கைகளோடு மைத்திரி சென்றார்.   

ஆனால் ரணிலோ, மீண்டும் ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரியை ஐக்கிய தேசியக் கட்சியால் முன்மொழிய முடியாது என்று கூறிவிட்டார். இதுதான், அடிப்படையில் பெரும் விரிசலுக்கான காரணம்.   

இவ்வாறானதொரு நிலையில், கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்த் தோல்விகளைப் பயன்படுத்தி, ரணிலைப் பிரதமர் பதவியிலிருந்தும், கட்சி தலைமைப் பொறுப்பிலிருந்தும் நீக்கிவிட்டு, தன்னுடைய கோரிக்கைகளோடு ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைமையிடம் செல்லலாம் என்று மைத்திரி நினைத்தார்.   

அதற்காக அவர், சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களைக் கொண்டு, ரணிலுக்கு எதிராகக் கிளர்ச்சியைத் தோற்றுவித்தார். நாடாளுமன்றத்தில் பிரதமருக்கு எதிராக, நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருமளவுக்கு அவர், நடந்து கொண்டார்.   

ஆனால், அங்கும் தோல்வி கிடைத்த புள்ளியில், மாற்று வழிகளைத் தேட ஆரம்பித்தார். மைத்திரி, புதிய வழிகளைத் தேடுகிறார், தன்னைத் தோற்கடிப்பதற்கான முயற்சிகளைக் கைவிடவில்லை என்பது ரணிலுக்கும் நன்கு தெரியும்.   

ஆனால், அரசமைப்பைக் கேலிக்குள்ளாக்கி, அதில் ஏறிநின்று மைத்திரி விளையாடுவார் என்று, ரணில் எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக, ஒக்டோபர் 26ஐ எதிர்பார்க்கவேயில்லை.   

நாட்டின் தலைவராக, தான் இருந்தாலும், சர்வதேச ரீதியில் ரணில் பெற்றிருக்கின்ற முக்கியத்துவம், மைத்திரியின் மனநிலையோடு விளையாடியது.  அமைச்சரவைக் கூட்டங்களின் போதும், தன்னை மீறிய நிலையொன்றை ரணில் பெற்றிருக்கின்றார் என்பது, அவரது நிலைப்பாடு.   

இது, ஒரு கட்டத்தில் தானொரு சம்பிரதாயபூர்வமான தலைவர் என்கிற நிலையை ஏற்படுத்திவிட்டதாக மைத்திரி நினைத்தார். ஒரு கட்டத்துக்கு மேல், தன்னுடைய கட்சிக்காரர்களையே, கட்டுப்படுத்த முடியாத சூழல் உருவானது. இதனால் அவர், நாளுக்கு நாள் அழுத்தத்தை எதிர்கொள்ளத் தொடங்கினார். அழுத்தத்தின் அளவு அதிகரித்து, அதனை எதிர்கொள்ள முடியாத சூழலில், அவசரமான மாற்றுவழிகளைத் தேடி, இன்றைய வழியை அடைந்திருகின்றார். ஆனால் அது, அவரையோ, அவரைச் சார்ந்தவர்களையோ இலக்கில் சேர்க்காது.   

மாறாக, ஒவ்வொரு நாளும் அவர்களை, இன்னும் குழப்பமான வழிகளை நோக்கித் தள்ளுகின்றது. அது, அவர்களை மாத்திரமல்ல, ஒட்டுமொத்த நாட்டையும் படுகுழியை நோக்கித் தள்ளிக் கொண்டிருக்கின்றது.   
படுகுழியை நோக்கிய பாய்ச்சல் என்பது, செங்குத்தானதாக இருக்கின்றது. அதிலிருந்து உடனடியாகத் தப்பித்துக் கொள்ளாதுவிட்டால், சில வருடங்களுக்குள் மீளவே முடியாத சுமை, நாட்டின் மீது இறக்கி வைக்கப்படும்.   

ஏற்கெனவே, ஆயுத மோதல்களால் சிதைவடைந்து போயிருக்கின்ற நாட்டினுடைய பொருளாதாரமும், மனித உரிமைகளின் நிலையும் இன்னும் இன்னும் மோசமடையும்.   

அதிகாரத்தை அடைவதற்காக, எது வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற நிலை நிலைபெறும். அது, ஒட்டுமொத்தமாகச் சர்வதேசத்திடமிருந்து விலக்கி வைக்கப்படும் சூழலை ஏற்படுத்தும்.   

மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமராக நியமிக்கப்பட்டமை, புதிய அமைச்சரவைக்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவை திங்கட்கிழமை (03) பிறப்பித்திருக்கின்றது.   

இதன்மூலம், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இயங்கி வந்த நாடாளுமன்றத்தில், தோற்கடிக்கப்பட்ட சட்டவிரோத அரசாங்கம் விலக்கப்பட்டிருக்கின்றது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை உத்தரவுக்கு எதிராக, மஹிந்த உயர்நீதிமன்றத்தை நாடியிருக்கின்றார். மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கும் நிலையில், அந்த வழக்கு விசாரணைகள் தொடர்பில் உயர்நீதிமன்றம் தலையீடுகளைச் செய்யும் வாய்ப்புகள் ஏதும் இல்லை.   

எதிர்வரும் 12ஆம் திகதி இறுதித் தீர்மானத்தை மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்குமானால், அதன் பின்னரே, மஹிந்தவின் மனுவை உயர்நீதிமன்றம் கவனத்தில் எடுக்கும். அதுவரை, அது தொடர்பில் எந்தக் கருத்தையும் வெளிப்படுத்தும் வாய்ப்பில்லை. இது, சாதாரண சட்டஅறிவுள்ள அனைவருக்கும் தெரியும். ஆனால், சட்டத்துறைப் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா உள்ளிட்டவர்களைக் கொண்டிருக்கின்ற ‘ராஜபக்‌ஷ கொம்பனி’, அதிகாரத்தை அடையும் போராட்டத்தில் நாளுக்கு நாள் கோமாளிகளாக அம்பலப்படுகின்றார்கள்.   

இந்தப் பத்தி எழுதப்படும் வரையில், நாட்டில் அரசாங்கம் என்கிற ஒரு ‘வஸ்து’ இல்லை; ஜனாதிபதி மாத்திரமே இருக்கிறார். அத்தோடு, 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எந்தவித அதிகார கடப்பாடுகளும் இன்றி இருக்கிறார்கள்.   

 19ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம், அமைச்சர்களையே, பிரதமரின் ஆலோசனையோடுதான் ஜனாதிபதி நியமிக்க வேண்டும் என்கிற நிலை இருக்கும் போது, பெரும்பான்மையுள்ள கட்சியினர் முன்மொழியும் நபரைப் பிரதமராக ஏற்று, பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டிய கடப்பாடு ஜனாதிபதிக்கு உண்டு. ஆனால், அவரோ, 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவளித்தாலும் ரணிலை பிரதமராக்க மாட்டேன் என்கிறார்.   

மைத்திரியோடு பேசி எந்தத் தீர்வையும் காண முடியாது என்கிற கட்டத்துக்கு, ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும் வந்திருக்கிறார்கள்.   

ஒவ்வொரு சந்திப்பிலும் பேச்சுகளை ஆரம்பிக்கும் போது, நம்பிக்கையளிக்கும் தோரணையில் பேசும் மைத்திரி, எதிர்த்தரப்பு தம்முடைய நியாயங்களை முன்வைக்கும்போது, தடுமாற ஆரம்பித்து, பேச்சுகளை இடைநடுவில் முடித்துக்கொள்ளும் கட்டத்துக்கு வருவதாக, பேச்சுகளில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் கூறுகிறார்.

“ஜனாதிபதியிடம் நியாயமான காரணங்கள் ஏதுமில்லாத நிலையில், அவர் எங்களின் கண்களைப் பார்த்துப் பேசுவதற்கே தயங்குகிறார். அவர் பொம்மை மாதிரி, விடயங்களை ஒப்புவித்துவிட்டுத் தடுமாறுகிறார். அப்படிப்பட்டவரோடு பேச்சுகளில் இணக்கப்பாட்டைக் காண்பதென்பது முடியாத காரணம். வெளிப்படையாகச் சொன்னால், தான் செய்த அனைத்துமே தவறு என்பதை உணர்ந்து கொண்ட ஒருவர், நியாயங்கள் குறித்துப் பேச முற்படுவது எவ்வளவு வேடிக்கையானதோ, அதுமாதிரியானது மைத்திரியின் செயற்பாடுகள்” என்றார், அந்த நாடாளுமன்ற உறுப்பினர்.   

“ராஜபக்‌ஷக்கள் என்னைக் கொலை செய்வதற்கு முனைகிறார்கள், நான் ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்தால், என்னையும் என்னுடைய குடும்பத்தையும் ஆறடிக் குழிக்குள் புதைத்துவிடுவார்கள்” என்று கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்திலும், அதன் பின்னரும் மேடைகளில் முழங்கிய மைத்திரி, இப்போது அந்தக் கூற்றுகளை வாக்குகளுக்காகப் பேசியதாக ஏளனத் தொனியில் கூறுகிறார்; அவருக்கு வாக்களித்த மக்களின் முகத்தில் காறி உமிழ்கிறார். இதுவே, மைத்திரி இன்றைக்கு எங்கிருக்கின்றார் என்பதைக் காட்டப்போதுமானது.  

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மைத்திரியின்-பேயாட்டம்-தடுமாறும்-மக்கள்/91-226152

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this