Jump to content

லாவணி: அழிவின் விளிம்பில் இருக்கும் 300 ஆண்டுகால கலை வடிவம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ்
  •  
300 ஆண்டு லாவணிகலை: தமிழகத்தில் அழிய காரணம் என்ன?

தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளைப் போலவே, அரசியல், சமூக பிரச்சனைகளை விவாதிக்கும் ஒரு கலை வடிவம் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு உயிர்ப்புடன் இருந்தது என்றால் நம்பமுடிகிறதா?

 

தஞ்சையை ஆண்ட மராத்தியர்களால் தமிழகத்திற்கு கிடைத்த கலைவடிவமான லாவணிதான் அந்த பழங்கால விவாத நிகழ்ச்சி.

எரிந்த கட்சி, எரியாத கட்சி என்ற பெயரில் இரண்டு பிரிவாக கலைஞர்கள் அமர்ந்துகொண்டு, பாடல் மற்றும் வசனத்தை இசையோடு பேசி ஒரு தலைப்பை விவாதிக்கும் நிகழ்ச்சி லாவணி ஆகும்.

 

கலைஞர்கள் தாங்கள் தேர்வுசெய்த குழுவிற்கு வலுசேர்க்க புராண, இதிகாச கதைகள், தமிழ் இலக்கியத்தில் இருந்து எடுத்தாளப்படும் கதைகள், வரலாற்று உண்மைகள் போன்றவற்றை பாடியும், கதையாக சொல்லியும், நயத்துடன் விவாதிக்கவேண்டும்.

சொல்லும் கருத்து வலிமையானதாகவும், நேரம் எடுத்துக்கொள்ளாமல், உடனடியாகவும் பதில் தந்து எதிர்க்கட்சியை வீழ்த்தும் கட்சி வெற்றிபெறும்.

300 ஆண்டு லாவணிகலை: தமிழகத்தில் அழிய காரணம் என்ன?

மராத்திய மன்னர்கள் காலத்தில் தொடங்கிய லாவணி கலை, ஆங்கிலேயர் காலத்தில் சுதந்திர வேட்கை ஊட்டவும், இரண்டாம் உலகப் போர் சமயத்தில் அவ்வப்போது மக்களுக்கு நாட்டு நடப்புகளை சொல்வதற்கும் பயன்பட்டது என அனுபவம் மிக்க லாவணி கலைஞர்கள் கூறுகிறார்கள்.

அழிவின் விளிம்பில் லாவணி

தற்போது தமிழகத்தில் அதிபட்சமாக 20 லாவணி குழுக்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளதாக தஞ்சையைச் சேர்ந்த மூத்த லாவணி கலைஞரான 67 வயதாகும் ஜோதிவேல் பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டார்.

தளர்ந்த உடலோடு, இரண்டு பைகளுடன் நம்மை சந்திக்க வந்த ஜோதிவேலிடம் களைப்பு தெரிந்தது. ஆனால் லாவணி பற்றி கேட்டதும் உற்சாகம் அடைந்தவர், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஏற்று நடித்த லாவணி கச்சேரி புகைப்படங்களை ஆர்வத்தோடு காட்டினார்.

''லாவணி கலையை சொல்லித்தர எங்களைப் போன்ற வயதானவர்கள் மட்டுமே இருக்கிறோம். இளைய தலைமுறையில் பலருக்கும் இதுபோன்ற ஒரு கலைவடிவம் தமிழகத்தில் இருந்தது என்பதே தெரியாமல் போய்விடுமோ என்று அச்சப்படுகிறோம். தஞ்சாவூரில் பிரபலமாக இருந்த லவாணி, தமிழகத்தில் தென்மாவட்டங்களில் கோயில் திருவிழாக்களில் கட்டாயமாக இடம்பெற்றிருந்தது.''

''காலம் மாறியதும், லாவணியின் முக்கியத்துவம் குறைந்துவிட்டது. நீங்கள் லாவணி நிகழ்ச்சியை பாரக்கவேண்டும் என்றால், மதுரை மீனாட்சி கோயில் பகுதியில் ஒவ்வோர் ஆண்டும் மாசி மாதத்தில் காமன் பண்டிகை என்ற பெயரில் நடக்கும் லாவணியைப் பார்க்கலாம்,''என தொய்வுடன் பேசினார் ஜோதிவேல்.

காட்டுப்புறம், நாட்டுப்புறம், பூபாளம் மற்றும் காலங்கடா என நான்கு விதமான லாவணிகள் இருந்தன. கிராம திருவிழாக்களின்போது, இரவு முழுவதும் நடக்கும் என நினைவுகூறுகிறார் இந்த மூத்தக்கலைஞர்.

எரிந்த கட்சி, எரியாத கட்சி எது?

லாவணியில் எரிந்த கட்சி, எரியாத கட்சி என்ற பெயரால் இரண்டு குழுக்கள் அழைக்கப்படுவதற்கு காரணம் என்ன என்று கேட்டபோது சுவாரசியமான தகவலை தெரிவித்தார் ஜோதிவேல்.

''மராத்திய லாவணிக்கு முன்னதாக, தமிழகத்தில் காமன் கூத்து என்ற புராணக் கதை, லாவணி பாணியை போலவே வழங்கப்பட்டு வந்தது. காமனை சிவன் எரித்தார் என்ற புராண கதையில் எரிந்த கட்சி என்பது காமனை குறிக்கிறது, எரியாத கட்சி என்பது சிவனைக் குறிக்கிறது.''

300 ஆண்டு லாவணிகலை: தமிழகத்தில் அழிய காரணம் என்ன?

''லாவணி போலவே அந்தக் கூத்து இருந்ததால், லாவணியை வழங்குவதிலும் எரிந்த கட்சி, எரியாத கட்சி என்ற முறை பின்பற்றப்பட்டது. விவாதம் செய்பவர்கள், தங்களது அணியின் கருத்தை நிலைநாட்ட விவரங்களை பேசுவார்கள், பாடுவார்கள். ''

''அரசியல் விவகாரங்களை சுவாரசியமாக எதுகை, மோனையோடு பாடுவது என்ற நடைமுறைகூட இருந்ததது. மொழிப்போர் தொடர்பான விவாதங்கள் லாவணி வடிவில் நடைபெற்றன,'' என லாவணி நிகழ்ச்சியை விளக்கினார் ஜோதிவேல்.

மராத்தியர்கள் விட்டுச் சென்ற கலை பாரம்பரியம்

தனது ஆசானாகக் கருதும் எம்.கே.அப்துல் காதர் அல்லது டேப் காதர் என்ற கலைஞர் தனது இறுதி ஆண்டுகளுளில், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்ததை நினைவுகூர்ந்த ஜோதிவேல், ''லாவணி ஆவணப்படுத்தும் நிலைக்கு வந்துவிட்டது என்பது எங்களைப் போன்ற கலைஞர்களுக்கு வருத்தம் அளிக்கிறது. அவ்வப்போது அரசாங்கத்தில் கலை நிகழ்ச்சிகளில் லாவணிக்கு முக்கியத்துவம் தந்தால், இந்த கலை உயிர்ப்புடன் இருக்கும்,'' என கூறியபோது அவரது கண்கள் குளமாகின.

ஜோதிவேலின் உணர்ச்சிபூர்வமான சந்திப்பை அடுத்து, லாவணி கலையைப் பற்றி சுமார் பத்து ஆண்டுகள் ஆராய்ச்சி செய்துள்ள ஆந்திராவில் உள்ள குப்பம் பல்கலைகழகத்தில் தமிழ்துறையில் பணியாற்றும் விவேகானந்த கோபாலனிடம் பேசினோம். அவர் 'லாவணி வரலாறும் வளர்ச்சியும்' என்ற புத்தகத்தின் ஆசிரியரும்கூட.

p04dtmk7.jpg
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

"அறைகளுக்குள் சிறைப்படுவதல்ல கலை"

Exit player
 
"அறைகளுக்குள் சிறைப்படுவதல்ல கலை"

லாவணியின் வரலாறு 1670களில் தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னன் வெங்கோஜியின் காலத்தில் இருந்து தொடங்குகிறது என்றார் ஆராய்ச்சியாளர் கோபாலன்.

''மராத்தியப் படைகளை வழிநடத்திய தளபதி வெங்கோஜி, தஞ்சையை ஆளும் நிலை ஏற்பட்டபோது, அவரோடு தஞ்சைக்கு வந்த போர்வீரர்கள் தங்களது ஊருக்கு திரும்பாமல், இங்கயே தங்கிவிட்டனர். அரண்மனையில் மன்னருக்காக நடைபெறும் கலை நிகழ்ச்சியில் லாவணி இடம்பெற்றது''.

''அதைத் தொடர்ந்து மராத்திய குடும்பங்களுக்காக, பொதுவெளியில் மராத்திய மொழியில் லாவணி நடத்தப்பட்டது. காலப்போக்கில் அது தமிழ் மொழியிலும் நடத்தப்பட்டது,'' என்றார் ஆராய்ச்சியாளர்.

தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் உள்ள ஓலைசுவடிகளில், தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னர்களில் சரபோஜி மன்னனின் மகன் இரண்டாம் சிவாஜி லாவணி பாடல்களுக்கு முக்கியத்துவம் அளித்தவர் என்பதற்கான சான்று உள்ளது.

300 ஆண்டு லாவணிகலை: தமிழகத்தில் அழிய காரணம் என்ன?

குறிப்பாக இரண்டாம் சிவாஜி தனது அவையில் லாவணி வேங்கட ராவ் என்ற அவைப் பாடகருக்கு வாய்ப்புகளை கொடுத்தார் என்பதும் புலனாகிறது. மேலும், லாவணி போட்டிகளில் அவர் தலைமையேற்று நடத்தியுள்ளார் என்றும் தெரியவருகிறது.

லாவணிக்கு அங்கீகரம் தேவை

மராத்திய மன்னர்களின் ஆட்சிக்காலத்திற்கு பின்னரும் லாவணி கலை தமிழகத்தில் நிலைபெற்று, கோயில் திருவிழாக்களில் நடத்தப்பட்டது.

வானொலி மற்றும் தூர்தர்சன் தொலைக்காட்சியில் லாவணி நிகழ்ச்சி இடம்பெற்றதை நினைவுகூறும் கோபாலன், ''1970 முதல் 1980கள் வரை லாவணி பொதுவெளியிலும், ஊடகங்களிலும் பிரபலமாக இருந்தது. தகவல் தொழில்நுட்பம் மாறிவிட்ட நிலையில், லாவணிக்கு கிடைத்த இடம் மறையத்தொடங்கியது. தற்போது வெகு சில ஊர்களில் மட்டுமே, இந்த நிகழ்ச்சி நடைபெறுவதை காணலாம்,'' என்றார் கோபாலன்.

தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகத்தில் லாவணி தொடர்பான புத்தகமும், சுவடிகளும் உள்ளன என கோபாலன் கூறியதை அடுத்து, அங்குள்ள மராத்திய மொழி நிபுணர் ராமச்சந்திரனிடம் பேசினோம்.

இரண்டாம் சரபோஜி மன்னர் காலத்தில், தென்னிந்தியா மற்றும் வடஇந்தியாவில் அவர் பயணம் செய்த திருத்தலங்களின் வரலாறுகளை லாவணி பாடல்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன என விளக்கினார்.

மேலும் 'லாவணி' என்றால் 'நடுதல்' என்ற பொருள் தரும் மராத்திய சொல் என்றும், ஆரம்பத்தில் நாற்று நடும்போது பாடப்பட்ட பாடல்களாக லாவணி இருந்தது என்றும், பின்னர் தனி ஒருவகை இசைப்பாடலாக மாறிவிட்டது என்ற குறிப்பையும் தந்தார்.

சரபோஜி காலத்தில் தஞ்சாவூரின் தெருக்களில் ஒலித்த நூற்றுக்கும் மேற்பட்ட லாவணி பாடல்கள் புத்தக வடிவில் சரஸ்வதி மகால் நூலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அந்தப் பாடல்கள் தங்களை பாடும் குரலுக்காக காத்துக்கிடக்கின்றன.

https://www.bbc.com/tamil/india-46552725

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி பிழம்பு ......!  😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.