Jump to content

எழுத்தாளர் பிரபஞ்சன் நினைவலைகள்


Recommended Posts

இழப்பதற்கும் அடைவதற்கும் ஏதுமற்ற கலைஞன்
 
பிரபஞ்சன்
நேற்றிரவு முழுக்க விடாமல் மழைபெய்து கொண்டேயிருந்தது. தூக்கம் வராத அந்த மழை இரவில் நினைவுகள், எழுத்தாளர் பிரபஞ்சனையே நிலை கொள்ளாமல் சுழன்று கொண்டிருந்தது. அவருக்கு சென்னை பீட்டர்ஸ் காலனியில் ஒதுக்கப்பட்ட வீடொன்று உண்டு. மூன்றாவது மாடி. இப்படியான மழைநாளில் முழுவீடும் ஒழுகும். தன் வாழ்நாளெல்லாம் தேடித்தேடி சேகரித்த பல அரிய புத்தகங்கள் மழையில் நனையும். ஒழுகாத இடம் தேடி, படுக்கவும் இடமின்றி, ஒரு தமிழ் எழுத்தாளனின் பல ஆண்டு கால அலைச்சல் யாராலும் கண்டு கொள்ளப்படாமலேயே போகிறது. போகட்டும். இதனாலெல்லாம் துவண்டுபோகாத படைப்புமனம் வாய்க்கப் பெற்ற படைப்பாளியாகத்தான் நான் பிரபஞ்சனைப் பார்க்கிறேன் 
இருபதாண்டுகளுக்கு முன் பாண்டிச்சேரியில் எழுத்தாளர் கி.ரா.வுக்காக நடத்தப்பட்ட ஒரு விழாவில் பட்டுவேட்டி, பட்டுச்சட்டை, கையில் புகையும் ஒரு முழு சிகெரெட்டோடு நான் முதன் முதலில் பிரபஞ்சனைப் பார்த்தேன். கொண்டாட்டங்களுக்காகப் பிறந்த கலைஞன் என நான் அவரை எனக்குள் பதித்துக் கொண்டேன். ஆனால் பெரும் துக்கங்களை உள்ளடக்கிக் கொண்டு அப்படி வாழ ஆசைப்படும் எழுத்தாளன் என்பது அவரை ஆழ்ந்து படிப்பவர்களும், அவரின் நட்புக் கண்ணியில் ஏதோ ஒரு துளியில் ஒட்டிக் கொள்பவர்களுக்கும்கூடப் புரியும்.
ஆறேழு மாதங்களுக்கு முன் அவர் ஒரு இலக்கிய நிகழ்வுக்காக கனடா சென்றிருந்தபோது அவர் மனைவி இறந்துவிட்டார். பதறி அடித்து பாண்டிச்சேரிக்குப் போனால், அதே தூய்மையான வெள்ளை வேட்டியும், வெள்ளைச் சட்டையுமாக எங்களை எதிர்கொள்கிறார். அப்பிரிவின் துயரை அவர் அன்று ஆற்றிக் கொண்ட விதம் வேறெந்த மரணத்திலும் நான் காணாதது. அதீத துக்கமும், சந்தோஷமும் மனப்பிறழ்வைச் சமீபிக்குமோ என பயத்தில் உறைந்த தருணமது.
ப.செயப்பிரகாசம், அ.மார்க்ஸ் என்று தமிழின் முக்கிய ஆளுமைகள் பலர் அம்மரணத்திற்கு வந்து கொண்டே இருக்கிறார்கள். பிரபஞ்சன் ஒரு நண்பரின் கைப்பிடித்து சொல்கிறார்.
“ராணிக்கு ஒரு நல்ல கணவன் வாய்த்திருந்தால் அவள் நன்றாக வாழ்ந்திருப்பாள். அவள் வாழ்நாளெல்லாம் இக்குடும்பத்தைக் காத்துக் கொள்ள ஓடிக் கொண்டேயிருந்தாள். நான் ஒரு போதும் அவளுக்கு ஒரு நல்ல கணவனாக இருந்ததில்லை......”
என்னால் என் அழுகையை அடக்க முடியவில்லை. இப்பூமி பரப்பெங்கும் உண்மையான கலைஞர்களின் குரல்கள், லௌகீக வாழ்வின்முன் இப்படித்தான் உள்ளடங்கிப் போய்விடுகிறது. மூன்றாந்தர மனிதர்களின் வெற்றிப் பெருமிதத்திற்கு முன் ஒரு படைப்பாளி ஒடுங்கிப் போவது இந்தப் புள்ளியில்தான். ஆனால் பிரபஞ்சன் தன் உன்னதமான உயரிய படைப்பின் மூலம் இத்தாக்குதலைத் தன் காலில் போட்டு நசுக்குகிறார். லௌகீக வாழ்வின் தோல்வியை, மானுட வாழ்விற்கான தன் ஆகச் சிறந்த படைப்புகளின்மூலம் இட்டு நிரப்பி விஸ்வரூபமெடுக்கிறார்.
எழுத்துக்கும் பொருளுக்குமான இச்சூதாட்டத்தில் ஒரு உண்மையான கலைஞன் பொருளின் பக்கம் சாய்வது மாதிரி ஒரு மாயத்தோற்றம் தெரியும். ஆனால் அவன் மிகுந்த பசியோடு தன் படைப்பின் பக்கத்திலேயே உட்கார்ந்திருப்பான்.
ஒரு பிரபல வாரப்பத்திரிகையில் ஒரு தொடர்கதை எழுத ஒப்புக்கொண்டு ஏழெட்டு வாரங்கள் எழுதி முடிக்கிறார். அச்சு இயந்திரத்தின் அகோரப்பசிக்கு இவரால் தீனி போட முடியவில்லை. அது அவரையே கேட்கிறது. படைப்புக்கும், அச்சேற்றத்திற்குமான இடைவெளியை ஒரு எழுத்தாளன் நிதானமாகத்தான் கடக்க வேண்டியுள்ளது. இட்டு நிரப்புவது அல்ல எழுத்து. இந்தப் பெரும் மனப்போராட்டத்துடனேயே, அவர் அக்கதையின் நாயகி சுமதியை அண்ணாசாலையில் நிறுத்திவைத்துவிட்டு திருவண்ணாமலைக்கு பஸ் ஏறி வந்துவிட்டார். எத்தனையோ அற்புதமான இரவுகளைப்போல அவர்தன் கதாநாயகியை அம்போவென விட்டுவிட்டு வந்து எங்களோடு கொண்டாடிய அந்த இரவும் மறக்க முடியாதது. சலிப்படையாத உரையாடல் அவருடையது. சங்க இலக்கிய வாசிப்பும், கற்றுத் தேர்ந்த அம்மரபைத் தொடர்ந்து மீறுவதும், நவீன வாசிப்பைத் தன் மூச்சுக் காற்றைப்போல தனக்குள்ளேயே வைத்திருப்பதும் அவரை ஒரு காட்டாற்று வெள்ளமாகவே வைத்திருக்கிறது.
திருவண்ணாமலையில் அரசு ஊழியர்கள் தங்களுக்கென்று ஒரு இலக்கிய வட்டம் தேவையெனக் கருதினார்கள். குற்ற உணர்வுகள் மேலோங்கி வரும்போதெல்லாம் மனிதர்கள் அன்னதானமிடுவார்கள்,  கிரிவலம் போவார்கள், தேவாலயங்களில் முட்டி தேய்ப்பார்கள், இப்படி இலக்கியக் கழகங்களும் ஆரம்பிப்பார்கள். அப்படித்தான் அன்று அரசு ஊழியர் இலக்கிய வட்டத் துவக்கவிழா காந்தி சிலை மூலையில் பொது மேடையில் துவங்கியது.
சில அரசு ஊழிய நண்பர்களோடு நானும் போய், நெய்வேலியில் ஒரு இலக்கியக்கூட்டம் முடித்து பிரபஞ்சனை காரில் அழைத்து வந்தோம். வழியெங்கும் இலக்கியம், கலை, படைப்பாளிகள் என சொற்களின் விளையாட்டுகளினூடே ஊர் வந்து சேர்ந்தோம். அதுவரை அவர் அந்த இலக்கிய அமைப்பு பற்றி ஒரு வார்த்தை கேட்கவில்லை. அடுத்தநாள் மாலை அந்த இலக்கிய வட்டத்தைத் துவக்கி வைத்து உரையாற்றினார். அவர் துவங்கின நிமிடமே கூட்டத்திலிருந்த எல்லா அரசு ஊழியர்களின் முகங்களும் வெளிறிப் போனது. யாருக்காகவோ வெட்டப்படுகிறது என நினைத்த குழிகளில் அவர்களே ஒவ்வொருவராக இறக்கிவிடப்பட்டுக் கொண்டிருந்தார்கள். நிதானிப்பதற்குக்கூட அவகாசம் தராமல் அவர்களைத் தன் பேச்சால் நடுத்தெருவில் நிர்மூலமாக்கிக் கொண்டிருந்தார்.
என் அப்பா பெயர் என்ன? அவர் என்றைக்குச் செத்தார் என்பதற்கு நான் இவர்களுக்கு நூறு ரூபாய் தரவேண்டி உள்ளது என்பதில் துவங்கி, ஒவ்வொரு அரசு அலுவலகங்களும் எப்படி லஞ்சத்தால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது என்பதை விலாவாரியாக விளக்கி ஒவ்வொரு அலுவலருக்கான ரேட் என்ன? அதை அவர்கள் எங்ஙனம் பெறுவார்கள் என்பதுவரை அவர்களை வைத்துக் கொண்டே பேசித் தீர்த்தார். கூட்டம் முடிந்து நீடித்த மௌனம், ஒரு அகால மரணத்தை எதிர்கொள்வது மாதிரியிருந்தது எனக்கு. அதுதான் அரசு ஊழியர்களின் இலக்கிய வட்ட துவக்க விழாவும் நிறைவு விழாவும். இப்படியாக அரசு ஊழியர்கள் ஆற்ற இருந்த ஒரு பெரிய இலக்கியப் பணியை முடிவுக்குக் கொண்டுவந்தார். ஒரு படைப்பாளியின் உன்னதத் தருணமிது. இதைக் கடப்பதற்கு மிகப் பெரிய ஆன்ம பலம் தேவை. பிரபஞ்சன் பல நேரங்களில் இதைச் சுலபமாகக் கடந்து விடுகிறார்.
எனக்கு சுந்தரராமசாமியைப் பார்க்கும் போதும், படிக்கும்போதும், இவரை மாதிரியான ஒரு பொருளாதாரச் சூழல் பிரபஞ்சனுக்கு வாய்த்திருந்தால், இன்னும்கூட வீரிய விதைகள் இவரிடமிருந்து இத்தமிழ் மண்ணில் விழுந்திருக்கும் எனத்தோன்றும். ஒரே மனிதன் ஒட்டுமொத்த மானுடப் பசிக்கான துயரத்தைப் பாடிக்கொண்டே தன் சொந்தப் பசிக்காகவும் ரொட்டிகளைத் தேட வேண்டியிருந்தது. அதுதான் பிரபஞ்சனுக்கு நேர்ந்தது. ஆனால் தன் ஒட்டுமொத்த படைப்புகளில் அவர் மனிதகுலத்தை ஒரு அடி முன்னே நகர்த்தவும், சக மனிதர்கள் மீது அன்பு செலுத்தவும், ஆண், பெண் உறவு நட்பின்மேல் கட்டப்பட்டுள்ள மிக உன்னதமான, வார்த்தைப்படுத்த முடியாத ஓர் உணர்வு. தினம் தினம் அதை ஸ்தூலமாக்கியும், உதறித் தள்ளியும் மனிதக் கால்களில் மிதிபட்டு அது நம் கண்ணெதிரே உடைபடுவதையும் பிரபஞ்சனின் கதைகளின்றி வேறெதுவும் எனக்குச் சொல்லித் தந்துவிடவில்லை.
அவர்தான் ‘ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள்’ என்ற தன் கதை மூலம், மனிதர்களின் பொருளற்ற கணங்களில், வறுமைபிடுங்கும் தருணங்களில் அவன் அருவருக்கத்தக்க வெறொரு ஜந்துவாக மாறினாலும் கூட சாதாரண காலங்களில் மனதில் அத்தனை ஈரத்தோடு வாழும் ஓர் உன்னதப் பிறவிதான் என எனக்கு மனிதனின் மேன்மையைச் சொன்னவர்.
இந்நிலப்பரப்பெங்கும், அன்பைத்தேடி, விரசமற்ற விரல் ஸ்பரிசம் பற்றி, தோழமைத் தோள்களில் சாய்ந்து கொள்ள வேண்டி உள்ளும், புறமும் சதா அலைந்து கொண்டிருக்கும் பெண் மனதின் ஒரு சின்ன வெளிப்பாடுதான் ‘மரி என்கிற ஆட்டுக்குட்டி’. புதரிலும் காட்டுமுள்ளிலும் சிக்கி, சிதறுண்டு கடைசியில் ஒரு மேய்ப்பனின் மடியில் ஆறுதலோடு படுத்துறங்கும் அந்த ஆட்டுகுட்டியைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு மரி ஞாபகத்துக்கு வருகிறாள்.
கடைசிப் பேருந்தையும் தவற விட்டுவிட்டு வெளிச்சம் படாத ஏதோ ஒரு நகர பேருந்து நிலையத்தின் இருட்டில் தன்னை மறைத்துக் கொள்ள முயற்சிக்கும் மரியே! ஒரு படைப்பாளி தன் அன்பின் கரங்களை அகல விரித்து உனக்காகக் காத்திருக்கிறான் எனச் சொல்ல தோன்றும்,  அவரின் ஆண், பெண் நட்பை உறவைச் சொல்லும் கதைகள்.
எத்தனையோ முறை எங்கள் வீட்டில், நிலத்தில், பள்ளி மைதானத்தில், விடுதி அறையில், பஸ் பயணத்தில், கார் பின்னிருக்கையில் அவருடன் பேசித் தீர்த்த வார்த்தைகள் செலவழியாதவை. தினம் தினம் தன்னையே புதுப்பித்துக் கொள்பவை. பின்விளைவுகள் எதுபற்றியும் அவர் கவலைப் பட்டதில்லை. அதன் பொருட்டு தான் இழப்பதற்கு தன்னிடம் எதுவுமில்லை பவா என்று சொல்லிச் செல்வார். இழக்கப் போவது எதுமில்லை என்பது போலவே அவர் எதிர்பார்ப்புகளும் மிக எளிமையானவைதான்.
தன் குடும்பச் சிதைவை “மகாநதி” என்கிற உயிருள்ள ஒரு நாவல் மூலம் தன் வாசகர்களிடம் பகிர்ந்து கொண்டார். கள்ளுக்கடைகள் இழந்து, சாக்னா ஸ்டால்கள் இழந்து, வீடு இழந்து, அந்த ஆலமரம் வேரோடு சரியும்போதும் அதன் கம்பீரம் குலையாமல், தன் வேரில் கோடாரியோடு மல்லுக்கட்டுபவன்மீதும் விழும் ஆலமர நிழல் மாதிரியானது பிரபஞ்சனின் வாழ்வும் படைப்பும்.

 

பவா செல்லதுரை

பிரபஞ்சனை நினவுகூர எனக்கு என்றும் மறக்கவியலாத காரணம் என ஒன்று உண்டு. அவர் புதுச்சேரியிலிருந்து எழுபதுகளில் நடத்திய ‘வண்ணங்கள்’ இதழில்தான் எனது 8-10 வரிக் கவிதை ஒன்று வெளியானது. அதுவே அச்சிதழில் வெளியான எனது முதல் எழுத்து. ‘அசுரவித்துக்கள்’ என அதன் தலைப்புகூட இன்னும் பசுமையாக ஞாபகம் இருக்கிறது. பிரபஞ்சன் இதழுடன் வாழ்த்துப் போஸ்ட் கார்டு எழுதியனுப்பியிருந்தார். சோடனைகள் இல்லாத எளிய மனிதர். தோற்றம், எழுத்து என இரண்டிலும் காந்தி போல எமது தந்தையர் போல என்றும் எம்முடன் உடன் வருபவர். அந்தச் சொல்லின் எல்லாப் பொருளுடனும் பிரபஞ்சன் ஒரு செவ்வியல் மனிதர்..

யமுனா ராஜேந்திரன் fb

#பிரபஞ்சன்

பிரபஞ்சன் ஒத்துக்கொண்டபடி நிகழ்ச்சிக்கு வந்துவிட்டாரென்றால் சந்தோசம், வராவிட்டால் வருத்தப்பட வேண்டியதில்லை.   ஏனென்றால் நிகழ்ச்சி ஏதும் இல்லாமல் திடுமென வந்து நின்று தோழமையால் நம்மை நிரப்பிவிடுவார். ஹோட்டல் கெளரிசங்கரில் தங்கியபடி ஒசூரில் இதமான தட்பவெப்பநிலையை அனுபவிப்பத்தபடி நண்பர்களோடு நேரம் பொழுதின்றி அளவளாவுவார். இங்குள்ள கால்நடைப்பண்ணை அவருக்கு மிகவும் பிடித்த இடம். 

நிகழ்ச்சி ஒன்றுக்காக அதிகாலையில் ஒசூரில் வந்திறங்குகிறார் பிரபஞ்சன். கால்களில் வெவ்வேறு செருப்பு. வரவேற்கப் போயிருந்த நாங்கள் ஒன்றும் சொல்லாமல் அவரைப் பார்த்தோம். ஓவியர் ஹுசைன் ஒருபக்க செருப்பையே இரண்டு காலிலும் போடுவாராமே, அதுமாதிரி வேண்டுமென்றே இவர் இப்படி போடுகிறாரோ என்கிற குழப்பம். "பஸ்சிலிருந்து எனக்கு முன்பாக இறங்கிய ஆளுக்கு என்ன அவசரமோ என் செருப்பில் ஒன்றை மாற்றிப்போட்டுக்கொண்டு போய்விட்டார்" என்றார். 10 மணிவாக்கில் நண்பர்  சாதிக்கின் கிங்ஸ் கடைக்குப் போய் வேறு செருப்பு வாங்கினோம். பழைய செருப்பை கடைக்கு வெளியே விட்டுவிட்டு வரும்போது சொல்கிறார்: ஒருவேளை புது செருப்பு வாங்க அந்த மனுசனும் இதே கடைக்கு வந்தால் தன்னோட செருப்பை கண்டுகொள்ளட்டுமே.

ஆதவன் தீட்சன்யா fb

யார் வேண்டுமானாலும் அஞ்சலி எழுதிக் கொள்ளுங்கள். ஆனால் பிரபஞ்சன் 55 ல் சொன்னாரே- இரு வேளை தினம் சாப்ட கிடைச்சிருந்தா இன்னும் நல்ல கதைகளை எழுதிருப்பேன் என்று. அதை எழுத மறக்காதீங்க

 

தமயந்தி fb 

Link to comment
Share on other sites

***************மானசீகன்*****************

பிரபஞ்சனை சிறிய வயதிலேயே கேள்விப்பட்டிருக்கிறேன்.  அந்தப் பெயரே என்னை வசீகரித்திருக்கிறது . அந்தப் பெயரை அவர் வைக்கவில்லை என்றால் நான் வைத்திருப்பேன். 

எழுத்தாளர்கள் சினிமா நடிகர்களைப் போல ஸ்டைலாக  இருக்க முடியும்  என்பதை நிரூபித்தவர் அவர்தான்.  ஜெயகாந்தனின் சபையைப் போல் பிரபஞ்சனின் மேன்ஷன் ரூமும் இலக்கியவாதிகளின் ஜங்ஷன்தான் . ஆனால்  இரண்டும் வேறு வேறு. அது குருகுலம் என்றால் இது சீட்டுக்கச்சேரி . நண்பர்களை வரச் சொல்லி விட்டு அறையைப் பூட்டி விட்டுப் போன பிரபஞ்சன் குறித்து யாரோ எழுதியிருந்தார்கள் . ( பவா என்று நினைக்கிறேன் ) எழுத்தாளராக இருந்து கொண்டு கல்வித்துறையிலும் இருக்கிற  எனக்கு  ஏன் அவரால் அங்கு நீடித்திருக்க  இயலவில்லை  என்பதைப்  புரிந்து கொள்ள முடிகிறது .

வணிக  இதழ்களுக்காகவும் , வாழ்தலின் நிர்பந்தத்திற்காகவும் நிறைய  எழுதியவர். அதனாலேயே அவரை மதிப்பிடுவது சிரமம்.  வரலாறும், புனைவும் அவருக்கான களம்.  அடித்து ஆட வேண்டிய  ஒரு பேட்ஸ்மேனை சூழல் பெரும்பகுதி பை ரன்னராகவே ஆக்கி விட்டது.  வானம் வசப்படும் நூலும் சில சிறுகதைளும் அவர் பெயரை நீண்ட காலம் சொல்லும். 

தமிழ் எழுத்தாளர்களிலேயே தலைசிறந்த  கதைசொல்லி அவர்தான். குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைத்து கடைசியில் அழச் செய்து விடுகிற வித்தையால் சபையில் விஸ்வரூபம் எடுத்து விடுவார் . ஆண்டன் செகா கதையை பிரபஞ்சன் சொல்லிக் கொண்டிருக்கும் போது ஆண்டன் செகாவே வந்தாலும் சத்தமில்லாமல் முதல் வரிசையில் அமர வேண்டியதுதான் ; வேறு வழி இல்லை .குற்றாலத்திலும் , கும்பகோணத்திலும் நடைபெற்ற  இஸ்லாமிய  இலக்கிய மாநாடுகளில் அவரை நேரில் சந்தித்திருக்கிறேன். ' நீ நல்லா பேசறடா . எழுது.  உனக்கு அதுவும் வரும் ' என்று தலையில் கை வைத்து ஆதிர்வதித்திருக்கிறார் .

தமிழ் எழுத்தாளர்கள் பெண்களைப் பற்றி பேசியிருக்கிறார்கள் . ஆனால் பெண்களின் பிரச்சினைகளை பேசியவர் அவர்தான்.  அவருடைய  நாவலொன்றில் கணவன் சங்கீத வித்வான். மனைவி சங்கீதத்தில் ஞானசூன்யம் . வழக்கம் போல் சங்கீதம் தெரிந்த  வேறொரு சின்னப் பெண்ணிடம் காதல் வந்து விடும்.  அவள் கேட்கும் போதெல்லாம் ' கலை ' 'மேதமை ' ' ஒத்த ரசனை ' என்று பிதற்றுவார்.  கடைசியில் மனைவி கேட்பாள் ' எனக்கு சங்கீதத்திலே அனா ஆவன்னா தெரியாத மாதிரி  உங்களுக்கு சமையல்ல  எதுவும் தெரியாது.  அதுக்காக வட்டமா தோசை சுட தெரிஞ்ச  யாரோ  ஒருத்தனோட போயிட்டு வந்து ' ரசனை  ' அது இதுன்னா நீங்க  ஏத்துப்பீங்களா ? ' . இந்த நாவலைப் படித்து விட்டு சிந்து பைரவி பார்த்தால் அந்த  அனுபவம் வேறொன்றாகி விடும்.  இதுதான் பிரபஞ்சனுக்கான இடம். 

அவருடைய  பல கதைகளில் தேர்தல் அரசியலால் சீரழிக்கப்பட்ட  ஒரு பெண்ணின் சித்திரமும் , லௌகீகத்தின் நெருக்கடியால் நுண் உணர்வுகளைத் தொலைத்து விட்ட ஆணின் குற்ற  உணர்வும் மீண்டும் மீண்டும் நம்மைப் பின்தொடர்வதை உணர்ந்திருக்கிறேன். 

அவருடைய பல கதைகளில் கதை நாயகியின் பெயர் சுமதி ( முன்னாள் காதலி என்றே ஊகிக்கிறேன் ) மென்மையும் , அன்பும் நிறைந்த  அந்தப் பெண்ணின் மீதான காதலே பிரபஞ்சனின் உந்துசக்தியாய் இருந்திருக்க முடியும்.  அந்த  உணர்வு தந்த  நம்பிக்கைதான் லௌகீகத்தின் சகல தளங்களையும் கலைத்துப் போட்டு விட்டு கூலிங் கிளாஸோடு ஸ்டைலாக நடக்க வைத்திருக்கிறது.  பாக்கெட்டில் பைசா  இல்லாத  ஒருவனை சகலருக்குமான ஹீரோவாக உணர  வைத்திருக்கிறது. பிரபஞ்சனை விட  அவரை இயக்கிய  அந்த  உணர்வே எனக்கு முக்கியமாகப் படுகிறது.  சுமதியம்மா எங்கே இருக்கிறீர்கள்?  உங்கள் கண்ணீரையோ , வெறித்த பார்வையையோ நான் பார்க்க வேண்டும்.  ஏனென்றால்  எங்கள் பிரபஞ்சன் அங்குதான் இருக்கிறார்.
Mohammed Rafeek R fb

Link to comment
Share on other sites

இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி யின் தேசிய நிர்வாகக் குழு கூட்டம் விசாகப்பட்டினத்தில். இங்கு தான் என் தோழர் பிரபஞ்சன் அவர்களின் மரணச் செய்தி கிடைத்தது. படைப்புலகின் ஒரு மேன்மையான பகுதி, தன் கண்களை மூடிக்கொண்டதைப் போன்ற உணர்வு தான் எனக்கு ஏற்படுகிறது. படைப்பாளிகளை அவர் வாழும் காலத்தில் அவர்களைப் புரிந்து கொள்ளவில்லை. இறந்த பின்னரும் புரிந்து கொள்ளவில்லை. பாரதியை, புதுமைப் பித்தனைப் போல காலம் செல்ல செல்லத்தான் மேன்மை களைப் புரிந்து கொள்கிறார்கள். பிரபஞ்சன் அவர்களை புரிந்து கொள்ள தமிழ் மக்களுக்கு இன்னமும் கொஞ்ச காலம் தேவைப்படும். தோழர் பிரபஞ்சன் அவராலேயே என் தாய் மடி என்று அழைக்கப்பட்ட தாமரை அவருக்கு அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறது. தாய் உடல் நலம் இல்லாமல் இருந்த போதும் உடனிருந்து அனைத்து உதவிகளையும் செய்த பெருமைகுரிய தம்பி பி.என். எஸ் பாண்டியயனுக்கு என் ஆறுதல்

 

C. மகேந்திரன் fb

Link to comment
Share on other sites

நினைவுகள்: பிரபஞ்சகவி என்னும் மனிதாபிமானி
====================================== ====== 
 எட்டாண்டுக் காலம் பாண்டிச்சேரி என அழைக்கப்பட்ட புதுச்சேரியில் வாழ்ந்த நான் பிரபஞ்சனின் கதை வெளிகளை நேரில் பார்த்திருக்கிறேன். அங்குலம் மாறாமல் தெருக்களையும், வண்ணங்கள் மாறாமல் கட்டடங்களையும், வாசம் மாறாமல் சூழலையும் எழுதுவதன் மூலம் தனது கதைகளின் பாத்திரங்களை புதுச்சேரிக்காரர்களாகக் காட்டியிருக்கிறார். புதுச்சேரிப் பல்கலைக்கழக சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப்பள்ளியின் கௌரவ விரிவுரையாளராக இரண்டு பருவங்கள் பணியாற்றினார். வாரத்திற்கு இரண்டு நாள் வருவார். வருபவர் மாணவிகளோடும் மாணவர்களோடும் தொடர்ச்சியாகப் பேசிக்கொண்டே  இருப்பார். மொழிபெயர்ப்பில் தமிழில் கிடைத்த பெரும்பாலான நாடகங்களை வாசித்தவர். ஆண்டன் செகாவின் செர்ரிப்பழத்தோட்டம் நாடகத்தைப் பாடம் நடத்தியபோது நானும்  ஓரத்தில் மாணவனாக அமர்ந்து கேட்டிருக்கிறேன். மாணவர்களைத் தள்ளி நிறுத்தாத உரையாடல் அவருடையது. 

ஒரு கதை உண்டாக்கும் நம்பகத்தன்மையே அதன் வாசகத் தளத்தை விரிவுபடுத்துகிறது. ஒரு சிறுகதையோ நாவலோ வாசகர்களைத் தன் பக்கம் இழுக்கவும், அவர்களுக்கு நெருக்கமானதாகத் தோன்றுவதற்கும் புனைவெழுத்தின் மூன்று அடிப்படைகளில் ஏதாவது ஒன்று அவனது சொந்த வாழ்க்கையோடு தொடர்புடையதாக இருந்தால் போதும். அந்தப் புனைவெழுத்தை - கதையை- வாசகர்கள் நடந்திருக்கக் கூடிய கதையாக அல்லது நடக்கக் கூடிய கதையாக நம்பி வாசிப்பர். காலம், வெளி, பாத்திரங்கள் என்ற மூன்றில் எதாவது ஒன்று தொடர்பு பட்டதாக இருந்தால் போதும். நம்பகத்தன்மை உண்டாகி விடும்.

பிரபஞ்சனின் கதைகள் உண்டாக்கும் நம்பகத்தன்மை என்பது அவர் வெளிகளை- இடங்களைச் சித்திரிக்கும் எழுத்துமுறையில் இருக்கிறது என்பது எனது கணிப்பு. குறிப்பான இடங்களில் கதை நிகழ்வதாக எழுதுவது மூலம் அக்கதையின் காலத்தையும், இடம் பெற்றுள்ள பாத்திரங்களையும் நம்பத் தக்கவர்களாக மாற்றி விடுவார்.வட்டாரம் சார்ந்த கதைகள் என்ற வகைபாடுகளின் பின்னணியில் அந்தந்தப் பிரதேசத்தின் வட்டாரமொழிப் பிரயோகம் இருக்கிறது என்றாலும், இடங்களைச் சித்திரித்துக் காட்டும் படைப்பாளியின் திறமையினால் தான் நம்பகத்தன்மை கூடுகிறது.

மனிதாபிமான வெளிப்பாடு நவீனத்துவக் கதைகளின் முதன்மையான கூறாகக் கருதப்பட்ட காலத்தின் பிரதிகளாக அவரது சிறுகதைகள் ஒவ்வொன்றும் வெளிப்பட்டன. சிறுகதைகள் அளவிற்கு நாவல்களில் முழுமையை உருவாக்கவில்லையென்றாலும் புதுச்சேரி வரலாற்றை உள்வாங்கிக் கொண்டு எழுதிய வரலாற்றுப் புதினங்கள் தமிழ் வரலாற்றுப்புதினங்களில் திசை விலகல்களை ஏற்படுத்தியவை. 

அவர் எழுதிய இரண்டு நாடகங்களும் எனக்கு நெருக்கமானவை.  புனைகதைகளிலிருந்து விலகியவை. குறியீடுகளைப் பொதிந்து வைத்து எழுதிய முட்டையில் ஒரு நடிகனாக இருந்திருக்கிறேன்.  ராமாயணக் கிளைக் கதையான அகல்யாவைத் திரும்பவும் எழுத வைத்து இயக்கி வெற்றிகரமான மேடையேற்றமாகத் தந்திருக்கிறேன். முதலில் அவர் எழுதிய பிரதியில் சூர்ப்பனகை இல்லை. எனக்காகச் சூர்ப்பனகையையும் இணைத்து எழுதித்தந்தார். அதற்காக அவரோடு தொடர்ந்து விவாதங்கள் நடத்தியதுண்டு. அவரது எழுத்துகள் குறித்தும் எழுதியதுமுண்டு.

 

ராமசாமி .அ

 

 

###################

பிரபஞ்சன் -பிரும்மம் 

அய்யா பிரபஞ்சனின் இழப்புச் செய்தி துயரத்தை தருகிறது.அவரைச் சந்திக்கும் தருணங்களில் எல்லாம் சிறிய தலையசைப்புடன் கூடிய புன்னகையை எனக்கு தந்துபோவார்.அவருடன் ஆண்டாளைப் பற்றியும் நாயன்மார்களைப் பற்றியும் உரையாடிய கே.கே நகர் பொழுதொன்று ஞாபக்கிளையில் அசைகிறது.சிகரெட் பிடிப்பதில் அவருக்கென இருந்த கம்பீரமும் மிடுக்கான உடல் மொழியும் வசீகரமான மழைச்சாரல் மாதிரி எனக்குள் இப்போதும் அடித்துக்கொண்டிருக்கிறது. அவருடனான சந்திப்புக்கள் எனக்கு மறக்கமுடியாதவை.என்னுடைய முதல் சிறுகதை நூல் வெளியீட்டு விழாவிற்கு தலைமை தாங்கி சிறப்புரை வழங்கினார்.தொடர்ச்சியாக நீங்கள் எழுதவேண்டும் உண்மை எதுவென்று உலகுக்கு உணர்த்தும் வரை எழுதுங்கள் என்று சொன்ன அவரின் குரல் எனக்குள் ஒலித்துக்கொண்டிருக்கிறது.அவருக்கு சென்னையில் எடுக்கப்பட்ட பிரபஞ்சன் நிகழ்வில் ஒரு அமர்வை தொகுத்தும் வழங்கும் வாய்ப்பு எனக்கு கிட்டிற்று.நான் எப்போதும் பிரபஞ்சனை அய்யா என்று தான் அழைப்பேன்.அவர் எல்லோரையும் அழைப்பதை போல சார் என்று என்னை விளிப்பார்.அய்யா உங்களை இழந்திருக்கும் இந்நாளில் உங்கள் பிரும்மம் கதையை முறிந்து விழுந்த முருங்கை மரத்தின் வலியோடு வாசித்துக்கொண்டிருக்கிறேன்.அந்தக் கதையின் இறுதி வரியில் நீங்கள் இப்படி எழுதியுள்ளீர்கள்.

"ஒரு நாள் காலை காப்பிக்கு மாடியை விட்டுக் கீழிறங்கி, வழக்கப்படி டம்ளரோடு முருங்கையின் அருகில் போய் நின்றேன். எனக்கு ஆச்சரியம் காத்திருந்தது.

துண்டாகி நின்றிருந்த மரத்திலிருந்து, ஒரு இடத்தில் சின்னதாய்க் கிளைத்து இருந்தது.

உயிர்தான்".

அன்பின் அய்யா தமிழ் இலக்கியத்தின் உயிர்களில் நீங்களும் ஒருவர்.அது எப்போதும் மறையாது.

-அகரமுதல்வன் 
21.12.2018

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஏன் தமிழகத்தில் கேரளாவில் பாஜாகவினால் வெற்றி பெறமுடியவில்லை. அங்கு வேறு இயந்திரமா உபயோகிக்கிறார்கள்?  😀
    • த‌வ‌றுக்கு ம‌ன்னிக்க‌னுன் அண்ணா🙏..............நான் நினைத்தேன் 2013கால‌ க‌ட்ட‌த்தில் சொன்ன‌து என்று......................
    • அவர் இப்பவே யப்பான் துணைமுதல்வர்தான். எத்தனையோ கிண்டல்கள்>கேலிகளுக்கு மத்தியில்தான் சீமான் தமிழ்நாட்டின் 3வது கட்சியாக வளர்ந்துள்ளார்.ஏனைய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்துத்தான் போட்டி போடுகின்றன. ஒருவருக்கும் தனித்து நிற்க தைரியமில்லை. இன்று சீமான் கூட்டணிக்கு இணங்கினால் மற்றைய கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டிய முடியும். நக்கல் செய்பவர்கள் நையாண்டி செய்பவர்கள் நாம்தமிழர்களுக்கு எதிராக சின்னத்தை முடக்கி சதிசெய்தவர்கள் எல்லோயைும் மீறி நாம் தமிழர்வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற யதார்த்தம் எல்லோருக்கும் தெரியும். அது யாழ்களத்தின் நாம்தமிழர் கட்சி எதிர்ப்பாளர்களுக்கும் நன்னு தெரியும். சீமான் பேச்சில் எங்காவது குறை கண்டு பிடித்து நக்கல் செய்வர்கள் மற்றைய கட்சிகள் 100 வீதம் உத்தமமான மக்கள் சேவை செய்யும் கட்சிகள் என்று நிளனத்து கொள்கிறார்கள் போலும்.தடைகளைத்தாண்டித்தான் வளரணும். 
    • நான் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிக்க‌ முழு கார‌ண‌ம் எம் தேசிய‌ த‌லைவ‌ர் மேல் இருந்த‌ ப‌ற்றின் கார‌ண‌மாய்............2009க்குபிற‌க்கு  ப‌ல‌ த‌டைக‌ளை தாண்டி இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு த‌லைவ‌ர‌ ப‌ற்றி எவ‌ள‌வோ சொல்லி இருக்கிறார் இவ‌ர் ம‌ட்டும் இல்லை என்றால் க‌லைஞ‌ர் செய்த‌  வேத‌னைக‌ளை கொடுமைக‌ளை  சாத‌னை என்று மாற்றி சொல்லி இருப்பின‌ம் திராவிட‌ கும்ப‌ல்............கால‌மும் நேர‌மும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது அண்ணா...........இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து இந்த‌ உல‌கில் என்ன‌னென்ன‌ மாற்ற‌ம் வ‌ரும் என்று உங்க‌ளுக்கும் தெரியாது என‌க்கும் தெரியாது..................சீன‌ன் பாதி இல‌ங்கையை வாங்கி விட்டான் மீதி இல‌ங்கையை த‌ன் வ‌ச‌ப் ப‌டுத்தினால் அதுயாருக்கு ஆவ‌த்து..............இதோ பிர‌பாக‌ரனின் ம‌க‌ள் வ‌ந்து விட்டா ஈழ‌த்து இள‌வ‌ர‌சியின் தோட்ட‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தின் மீது பாயும் என்று சொன்ன‌ காசி ஆன‌ந்த‌னை ஏன் இன்னும் ம‌த்திய‌ அர‌சு அவ‌ரை கைது செய்ய‌ வில்லை.................இப்ப‌டி ப‌ல‌ சொல்லிட்டு போக‌லாம் கால‌ நீர் ஓட்ட‌த்தில் மாற்ற‌ங்க‌ள் மாறி கொண்டே இருக்கும்...............    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.