Jump to content

வெள்ளை நிற பள்ளிச் சீருடை - சயந்தன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளை நிற பள்ளிச் சீருடை

சயந்தன்

December 30, 2018
 

மிருதுவான கன்னத்தில் பிஞ்சு விரல்களைப் பொதித்தபடி நிச்சலனத் தூக்கத்திலிருந்த குழந்தையின் கழுத்தை நெரித்துக்கொல்வதே காலத்திற்குச் செய்கின்ற நீதியாயிருக்குமென்று இளமாறனுக்குத் திடீரென்று தோன்றிற்று என்றெழுதிய கதைசொல்லி இக்கதைக்குப் பயன்படுமென்று கருதிய ஆவணங்களையும், கடிதங்களையும், கத்தரித்த செய்தித் துணுக்குகளையும் தொடர்ந்து வாசிக்கலானான்.

1999.05.16
ஹொட்டஹேன பொலிஸ் நிலைய ஆய்வாளர் ஆரியரட்ணவினால் கொழும்பு பெரியாஸ்பத்திரியில் வைத்துப் பெறப்பட்ட வாக்குமூலத்தின் பிரதி. (வலது மூலையில் பச்சை நிறப் பேனாவால் “நல்ல பொலிஸ்காரன்” என்று எழுதப்பட்டிருந்தது.) 

…பெயர் அரங்கன், 
வயது 20, 
ஓம், எனக்குச் சிங்களத்தில் ஓரளவிற்குத் தடையின்றிப் பேசமுடியும். 
இல்லை என்னால் எழுந்து சாய்ந்துகொள்ளமுடியாத அளவிற்கு இடுப்பில் காயமேற்பட்டிருக்கிறது. இங்கே, உள்ளே குண்டுச் சிதறல்கள் ஒன்றிரண்டு இருந்ததாகவும், சத்திரசிகிச்சையின் பிறகு அவற்றை வெளியில் எடுத்ததாகவும் டொக்டர் சொல்லியிருக்கின்றார்.. அந்தக் குழந்தையைப் பார்த்தீர்களா.. அவளுடைய இரண்டு கால்களையும் வெட்டி நீக்கியிருக்கிறார்கள்.. வார்ட்டில் பகல் இரவென்று அவள் ஓயாது அழுதுகொண்டேயிருக்கிறாள்.. நான் உயிர் பிழைத்திருப்பதும், உங்களோடு பேசிக்கொண்டிருப்பதுவும் ஒரு தெய்வாதீனச்செயல் என்றுதான் சொல்லுவேன். அல்லது இந்த ஆஸ்பத்திரியின் மொர்ச்சுவரியில் நாற்பத்தொராவது சடலமாக என்னைக் கிடத்தியிருப்பார்கள். 

.. ஓம், அது என்னுடைய கூடாத காலம். மருதானையில் பேரூந்திலிருந்து இறங்கிய நான் அதே பஸ் நிறுத்தத்தில் என்னுடைய இரண்டு நண்பர்களுக்காகக் காத்திருந்தபோதுதான் அது நடந்தது. அவர்கள் மூன்று மணிக்கு வருவதாகச் சொல்லியிருந்தார்கள். 

.. ஏனென்றால்.. நீங்கள் என்னைத் தவறாக நினைக்கக் கூடாது. நாங்கள் வயது வந்தவர்களுக்கான ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதற்காக மட்டக்குளியிலிருந்த ஜெயசீலித் தியேட்டருக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தோம். மருதானையிலிருந்து 155ம் இலக்க பஸ் எடுத்தால், நேராகச் சென்று இறங்கலாம்.. இல்லை, அடிக்கடி என்றல்ல, மாதத்தில் ஐந்தாறு தடவைகள் செல்வதுண்டு. ஜிந்துப்பிட்டியிலிருக்கிற முருகன் தியேட்டருக்கும் வெள்ளவத்தை சவோய்க்கும் கூடப் போவதுண்டு. 

.. உயர்தரப் பரீட்சைக்கு இரண்டாவது முறை தோற்றியிருக்கிறேன். இம்முறை நம்பிக்கையிருக்கிறது. 

.. ஓம், சொந்த இடம் யாழ்ப்பாணம். என்னுடைய தேசிய அடையாள அட்டை கொழும்பில் பதியப்பெற்றது, பார்க்கிறீர்களா.. யாழ்ப்பாணத்திலிருந்து இங்கு வந்து நான்கு ஆண்டுகளாகிவிட்டன. அதற்குப் பிறகு சென்றதில்லை. யாழ்ப்பாணத்தில் அம்மம்மா இருக்கின்றா. நானென்றால் அவருக்கு நிறைய விருப்பம், ஆனால் கப்பலிலும் விமானத்திலும் யாழ்ப்பாணம் சென்று வருவதை அவ்வளவிற்கு விரும்பவில்லை. சென்ற வருடம், லயன் எயர் விமானம் மன்னார்க் கடலில் விழுந்தபின்னர், அந்த நினைவே இல்லை. 

.. ம்ம்.. அது விழவில்லை. சுட்டு வீழ்த்தப்பட்டது.. .

.. நீங்கள் சொல்வதுபோல அப்பாவி மக்கள்தான் அநியாயமாகச் சாகிறார்கள். இந்தக் குழந்தை பள்ளிக்கூடத்திலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தவள், விரல் சொடுக்கும் நேரத்தில்  இரத்தத்தில் குளித்திருக்கிறாள், இவளைப்போலவே இருபதுக்கும் மேலே சின்னப் பிள்ளைகள்.. கண்ணை மூடினால் அவர்களுடைய ஓலமும் முனகலுமே காதில் கேட்டுக்கொண்டிருக்கிறது. 

.. உண்மையில் என்ன நடந்ததென்று துல்லியமாக எனக்குச் சொல்லத்தெரியவில்லை. 

.. பொறுங்கள், நினைவுபடுத்துகிறேன். அப்போது வெயில் அனலை வீசிக்கொண்டிருந்தது. தேகம் வேர்த்துக்கொட்டியது. கைக்குட்டையால் அடிக்கடி கழுத்தைத் துடைத்தபடி வருகின்ற ஒவ்வொரு பஸ்களிலிருந்தும் நண்பர்கள் இறங்குகிறார்களா என்று பார்த்துக்கொண்டிருந்தேன். வாகனங்களின் இரைச்சலும், ஹோன் சத்தங்களுமாக, எரிச்சலும் அரியண்டமுமாக அந்தச் சூழல் இருந்தது. அடிக்கடி நேரத்தைப் பார்த்தேன். அவர்கள் வரவில்லை. அவர்களைப் படு தூஷணத்தில் மனதிற்குள் திட்டினேன். கடைசியாக எனக்குத் தெரிந்த காட்சியில் பஞ்சிகாவத்தைச் சந்தியிலிருந்து மருதானை வரை வீதியில் நீளத்திற்கும் வாகனங்கள் ஒன்றையொன்று நெரித்தபடி நின்றன. எல்லா சாரதிகளும் சமநேரத்தில் ஹோர்ன் அடித்துக்கொண்டிருந்தார்கள். பள்ளிக்கூட பஸ்களில் நேர்சரிப் பிள்ளைகளைக் கண்டேன். அவர்களுக்கு ஆறு அல்லது ஏழு அல்லது எட்டு வயதுகள்தான் இருக்கும். அவர்கள் ஜன்னலில் முகத்தை வைத்து வெளியே ஒரு விசித்திரத்தைப் பார்ப்பதுபோல பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பாடல்களைப் பாடிச்சென்றார்கள். காகிதத்தில் செய்த விமானங்களை வெளியே பறக்கவிட்டார்கள். பொலிசார் வீதிக்கடமையில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்கள். அப்பொழுதுதான் காதைப் பிளக்கிற வெடிச்சத்தம் கேட்டது, யாரோ தூக்கி வீசிவிட்டதைப்போல பஸ் நிறுத்தத்தின் கண்ணாடித் தடுப்பில் மோதி விழுந்தேன். கண்ணாடிகள் நொருங்கிச் சில்லுச் சில்லாகி உதிர்ந்தன.. கால் தடுக்கி விழுந்ததைப்போலத்தான் முதலில் ஒரு பிரமையேற்பட்டது. வெளியே கூச்சலும் குழப்பமும்.. ஆட்கள் கத்துகிற சத்தம் உயர்ந்து உச்சமானது. பிறகு தேய்ந்து அடங்கியது. மூக்கை அரிக்கின்ற மணம். ஒரு செக்கில் என்னைப் போட்டு நெரிப்பதைப்போல.. துண்டு துண்டாக முறித்துப் போட்டதைப்போல.. முதுகு, தொடையெல்லாம் ஈரமாயிருப்பதை உணர முடிந்தது. இரத்தம். எண்ணங்கள் சோர்ந்தன. குப்புறக் கிடக்கின்றேன் என்றும் கையை ஊன்றி எழவேண்டும் என்றும் நினைக்க முடிந்தது. இயலவில்லை. ஊஞ்சல் ஆடுவதைப்போல.. 

.. ஓர் இரவுத் திருவிழாவில் தொலைந்துவிட்டதைப்போல அப்போது நினைத்தேன். அதுதான் என்னுடைய கடைசி நினைவு. 

.. பிறகு ஆஸ்பத்திரியில்தான் கண் விழித்தேன், டொக்ரர் அதிக இரத்த இழப்பென்று டொக்டர் சொன்னார். 

.. சரிதான். நீங்கள் சொல்வதுபோல, இரத்தத்தில் தமிழ் சிங்களம் முஸ்லீமென்றெல்லாம் பிரிவில்லை.

.. இல்லை. எனக்குச் சிரமம் இல்லை. எப்போது வேண்டுமானாலும் விசாரணை செய்யலாம். நீங்கள் உங்கள் கடமையைச் செய்கிறீர்கள்.. 

.. இன்னமும் எத்தனை நாட்களுக்கு ஆஸ்பத்திரியிலிருக்கவேண்டுமென்று தெரியவில்லை.

.. நீங்கள் நிறையப் பகிடியாகப் பேசுகிறீர்கள், நிச்சயமாக, குணமானதும் ஜெயசீலித் தியேட்டருக்குப் போவேன்.. ஆனால் நண்பர்களுக்காகக் காத்திருக்க மாட்டேன். 

1999.05.12
வீரகேசரி பத்திரிகையின் பிரதான செய்தித் தலையங்கம் கத்தரிக்கப்பட்டு கோப்பில் இடுவதற்காகத் துளையிடப்பட்டிருந்தது. 

கொழும்பில் நேற்றுப் பாரிய குண்டுவெடிப்பு. முப்பது பள்ளிச் சிறார்கள் உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பலி, 250 பேர் படுகாயம். மினிபஸ்ஸைச் சோதனையிட முயன்றபோது அனர்த்தம்

2009.05.16
பேர்ண் மாநில பொலிஸ் நிலைய தகவல் அறிக்கை. ஆங்காங்கே ஜெர்மன் சொற்கள் அடிக்கோடிடப்பட்டு அவற்றுக்குரிய அர்த்தம் தமிழில் பென்சிலால் குறிக்கப்பட்டிருந்தது. 

நேரம் இரவு 10.20.  

நான், கிறிஸ்டியான் சூவில் 

10 லங்காஸ் ஸ்ராஸா, 3005 பேர்ண் முகவரியிலிருந்து கிடைக்கப்பெற்ற குடும்ப வன்முறை குறித்த ஒரு தகவலையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்றேன். 

10.30இற்கு முகவரியை அடைந்தபோது தகவல் அறிவித்த பக்கத்து வசிப்பிடக்காரர் (கரேன் லின்ஞ், பிறந்ததிகதி 14/03/74) எனக்காகக் காத்திருந்தார். சற்று நேரத்திற்கு முன்னர், அவரது பக்கத்து வீட்டிலிருந்து ஒரு பெண்ணின் அழுகுரலும் கூச்சலும் ஏற்பட்டதையடுத்து பொலிசாருக்கு முறையிட்டதாக அவர் சொன்னார். அவர் சுட்டிக்காட்டிய வீட்டின் வாசல் கதவை தட்டி, “பொலிஸ் வந்திருக்கின்றோம், கதவைத் திறவுங்கள்” என்றேன். உள்ளேயிருந்து யாரும் வெளிவரவில்லை. நீண்டநேரமாகவே வீடு அமைதியாயிருக்கின்றது என்றும் ஏதும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்திருக்கலாமென்றும் கரேன் லின்ஞ் குறிப்பிட்டார். 

மேலுமொரு முறை கதவைத் தட்டிய நான் அதைத் திறக்க முயற்சித்தேன். அது ஏற்கனவே திறந்தேயிருந்தது. நேராக தொலைக்காட்சியிருந்த பகுதிக்குச் சென்றேன். ஒரு பெண் (திருமகள், பிறந்ததிகதி 04.03.1981) சுவரின் மூலைக்குள் ஒடுங்கியிருந்தாள். அவளைப் பார்த்த மாத்திரத்திலேயே அவள் உடல் ரீதியான வன்முறைக்கு உள்ளாகியிருந்தாள் என்பதை உணர்ந்துகொள்ள முடிந்தது. அவளுடைய கன்னங்கள் வீங்கியிருந்தன. கழுத்துப் பகுதியின் ஆடை கிழிந்திருந்தது. அவள் என்னை அச்சத்துடன் பார்த்தாள். அவளுடைய உதடுகள் சுழித்துச் சுழித்து நடுங்கின. அவள் இரண்டு கைகளாலும் அடிவயிற்றைப் பொத்திப்பிடித்திருந்தாள். அதுவரை சோபாவில் தலையைத் தொங்கப்போட்டபடியிருந்த அவளுடைய கணவர் (அரங்கன், பிறந்த திகதி 30/05/1979) எழுந்து நேராக என்னிடம் வந்தார். இரண்டு கைகளையும் நீட்டி “என்னைக் கைது செய்யுங்கள்” என்றார். நான் அவரைச் சோபாவில் சென்று அமரும்படி சொன்னேன். அவர் “என்னை இப்பொழுதே கைது செய்யுங்கள். என்ன தண்டனை வேண்டுமென்றாலும் கொடுங்கள்” என்று கெஞ்சினார். அவரை அழைத்துச் சென்று சோபாவில் அமர்த்தினேன். அவர் ஆபத்தற்றவராகத் தோன்றினார். இதற்கிடையில் சக அதிகாரியான எம்மா சம்பவ இடத்திற்கு வந்திருந்தாள். அவள் பாதிக்கப்பட்ட பெண்ணின் காயங்களைப் படம் பிடித்தாள். குடும்ப வன்முறையை எதிர்கொள்ளல் என்ற சட்ட ஆலோசனைப் புத்தகத்தைக் கையளித்தாள். பெண்ணின் காயங்களை மேலோட்டமாகப் பரிசீலித்தவள், மருத்துவ சிகிச்சையெதுவும் வேண்டியதில்லையென்று கருதுவதாகச் சொன்னாள். 

அப்போது அவளுடைய கணவர் மன்றாடுவதைப்போல என் காலில் விழுந்தார்.  அவர் தன்னுடைய மனைவி கருவுற்றிருப்பதாகவும், அவளுடைய வயிற்றில் மிருகத்தனமாக உதைந்துவிட்டதாகவும் அவளுக்கு உடனடியாகச் சிகிச்சையளியுங்கள் என்றும் அழுது ஓலமிட்டார். அவசர மருத்துவச் சேவைக்கு அறிவித்த எம்மா நான்காவது நிமிடத்தில் அவர்கள் வந்துவிடுவார்கள் என்றாள். நான் அரங்கனின் கைகளில் விலங்கினையிட்டேன். மிக அமைதியாகவும் நிதானமாகவுமிருந்த அரங்கன், கீழ்க்காணும் விபரங்களை என்னிடம் தெரிவித்தார். 

அரங்கனும் திருமகளும் இரண்டு வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டார்கள். அவர்கள் இருவருமே ஸ்ரீலங்காவினைச் சேர்ந்தவர்கள். பின்னர் சுவிற்சர்லாந்தில் சந்தித்து அறிமுகமாகியிருந்தார்கள். அரங்கன் ஓர் அரசியல் தஞ்சக் கோரிக்கையாளர். ஓராண்டுக்கு முன்னர், அவரது கோரிக்கை அங்கீகரிக்கப்பட்டு, நிரந்தர வதிவுரிமை வழங்கப்பட்டது. அவர் தற்போதைக்கு ஒரு நாடற்றவர். இப்பொழுது ஒரு இறைச்சி விற்பனைக் கடையில் முழுநேரமாக வேலை செய்கிறார். 

இரண்டு வாரங்களுக்கு முன்னர், தான் கருவுற்றிருக்கும் செய்தியை திருமகள் கூறியபோது, அரங்கன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தவில்லை. வாழ்க்கையில் ஒரு ஸ்திரத்தன்மைக்கு வராமல் தற்போதைக்குக் குழந்தை தேவையற்றது என்ற ரீதியில் கருதியதாக அரங்கன் தெரிவித்தார். ஆயினும் நிலமை சுமுகமாகவே இருந்தது. இன்று தொலைக்காட்சிச் செய்தியறிக்கையில் ஸ்ரீலங்காவில் இடம்பெறும் யுத்தக் காட்சிகள் ஒளிபரப்பப்படுவதைக் கண்ணுற்ற அரங்கன் தொலைக்காட்சியை நிறுத்திவிடும்படி திருமகளிடம் கோரியிருக்கிறார். “குழந்தைகள் இறந்தும் காயமடைந்தும் கிடப்பதைக் காணச் சகிக்கவில்லை. தொலைக்காட்சியை நிறுத்து” என்றார். அதற்கு திருமகள், “உனக்குத்தான் குழந்தைகளென்றால் ஆகாதே, அப்படியிருக்க எதற்கு முதலைக் கண்ணீர் வடிக்கின்றாய்” என்றிருக்கிறார். இவ்வாறு உரையாடல் வாக்குவாதமாக விரிந்து வன்முறையாக வெடித்திருக்கின்றது. 

திருமகளைச் சுவரோடு தள்ளி அவள் மீது இரண்டு கால்களாலும் மாறி மாறி உதைந்ததை அரங்கன் ஒப்புக்கொண்டார். மனைவியின் கருவை அழிக்கும் நோக்கத்தில் அவள் மீது வன்முறையைப் பிரயோகித்தீர்களா என்று வினவியபோது அவரது கண்களிலிருந்து கண்ணீர் பெருகி வழிந்தது. அவர் எதுவும் பேசவில்லை. கர்ப்பத்தை அதாவது உங்களது மனைவியைச் சந்தேகிக்கிறீர்களா என்று கேட்டேன். (இது ஒரு பொலிஸ்காரனின் வேலையல்ல என்று எம்மா கடிந்துகொண்டாள்.) அப்பொழுது விலங்கிட்ட கைகளோடு துள்ளியெழுந்த அரங்கன் ஓடிச் சென்று சுவரில் தன் தலையை மோதத்தொடங்கினார். அது சாவதற்கான தீர்க்கமான முயற்சியைப் போலிருந்தது.  அவர் தன்னுடைய தாய் மொழியில் மிகப் பெரிதாகச் சத்தமிட்டார். மிகுந்த சிரமத்தோடு அவரை மீட்டோம். 

அவசர சேவை மருத்துவர், திருமகளைப் பரிசோதித்து முடித்திருந்தார். அவளை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வது நல்லதென்று அவர் அபிப்பிராயப்பட்டார். அப்படி அழைத்துச் சென்றபோது அரங்கனைக் கைது செய்வதற்கான முறைப்பாடொன்றினை அவளிடம் பெறுவதற்கு எம்மா முயற்சித்தாள். 

“புகார் எதனையும் அளிக்க விரும்பவில்லை” என்றாள் திருமகள். 

15.02.2010
உளச்சிகிச்சையாளர் திருமதி மரியா லூயிஸ் வழங்கிய சம்பவ அறிக்கை. (ஒரு பிரதி வைத்தியர் மெட் பீட்டருக்கு அனுப்பப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.)  

அரங்கன், 
வயது 31, 
ஸ்ரீலங்கா, 

சித்திரவதைக்குக் பிற்பட்ட மனவடு ஒன்றினால், ஏற்பட்ட மன எழுச்சி மற்றும் மனச்சோர்வினால், கடந்த பத்து மாதங்களாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவருடைய குடும்ப வைத்தியரின் பரிந்துரையில் நான்கு அமர்வுகளில் அவருக்கான உளவளத்துணை வழங்கப்பட்டிருந்தபோதும், மனைவியின் குழந்தைப்பேறின் போது அவருடைய உணர்வு நிலை மிக மோசமான கட்டத்தை எட்டியிருந்ததை அவதானிக்க முடிந்ததென்று மகப்பேற்றுத் தாதி திருமதி அக்னஸ்ஸுடைய குறிப்புக்களிலிருந்து அறிய முடிகிறது. முன்னைய நான்கு அமர்வுகளிலிருந்தும் கீழ்வரும் அவதானங்கள் பெறப்பட்டிருக்கின்றன.

  1. துணைநாடிக்கு நித்திரைக் குழப்பம், எண்ணங்களின் மீளோட்டம் போன்றவை இல்லாதபோதும், அவர் விபரிக்கின்ற, யானையொன்று பிளிறியவாறே குத்தென விழுந்து இறந்து போவது, யானையின் கண்ணீர் வழியும் கண்கள், மண்டையோடுகளை மாலையாக அணிந்த அவர்களுடைய மதத்துக் கடவுளால் ஆசீர்வதிக்கப்படுவது முதலான கனவுகளினுாடாக அவருடைய மீளமுடியாத இழவிரக்கம் மற்றும் பயங்கர உணர்வைப் பதிவு செய்ய முடிகிறது. 
  2. இவ்வாறான உளநிலை அவர் கடந்த காலத்தில் யுத்தப் பிரதேசமொன்றில் வாழநேரிட்டதாலும், நிறைய மரணங்களை நேரடியாகப் பார்த்ததினாலும் ஏற்பட்டிருக்கலாம். துணைநாடி தன்னுடைய இருபத்துநான்காவது வயதுவரை போர் நடந்த பகுதிகளில் வாழ்ந்திருக்கிறார். 
  3. துணைநாடி மதுப்பழக்கமோ புகைப்பழக்கமோ அற்றவர். அவருடைய உளநிலையில் ஏற்படும் மாற்றங்களின்போதும், அவற்றைக் கைக்கொண்டதில்லை. குறிப்பாக அவர் எந்தவிதமான மெய்ப்பாட்டு முறையீடுகளையும் அமர்வின்போது தெரிவிக்கவில்லை. 
  4. மனைவியின் கர்ப்பம் தொடர்பில் நபருக்கு எதிர்மறை எண்ண மனநிலையே தொடர்ந்து காணப்பட்டது. “நாடற்ற எனக்குக் குழந்தையெதற்கு” என்ற சலிப்பான கேள்விக்கூடாக அந்த மனநிலையை அவர் நியாயம் செய்தார். 
  5. மனைவியின் பாலுறவு நடவடிக்கைகளில் ஐயப்பாடோ அல்லது பிறழ்வான எண்ணங்களோ ஏற்படுகிறதா என வினவப்பட்டபோது “தயவு செய்து அப்படிக் கேட்காதீர்கள்” என்ற கெஞ்சலுடன் அக்கேள்வியை நிறுத்தினார். 
  6. துணைநாடியின் நாட்பட்ட மன வடுவின் நெருக்கடியால் இரண்டு கொடூர நடத்தை வெளிப்பாடுகள் பதியப்பட்டுள்ளன. முதலாவது அவரது மனைவி கர்ப்பமுற்றபோதும், இரண்டாவது அவருடைய குழந்தைப் பேறின்போதும் நிகழ்ந்திருக்கின்றன. 

இரண்டாவது சம்பவத்தின் பின்னர் மேலுமொரு உளச்சிகிச்சை அமர்விற்காக திரு அரங்கன் அழைக்கப்பட்டிருந்தார். அவருக்குச் சுய கண்காணிப்புச் சோதனையொன்று வழங்கப்பட்டது. குறித்த ஒரு நாளில் அவருடைய எண்ணங்கள், கற்பனைகள் அனைத்தையும் கோடுகள் இடப்பதாத வெள்ளைத்தாளில் உடனுக்குடன் பதிவுசெய்யுமாறு அவர் கேட்கப்பட்டார். ஆயினும் அமர்வின்போது அவர் எதுவும் எழுதப்படாத  ஐந்து வெள்ளைத்தாள்களை மட்டுமே கையளித்தார். அவருடனான உரையாடல் பதிவுசெய்யப்பட்டது. அது வருமாறு: 

“அரங்கன், ஒரு பூ மலர்ந்ததைப்போல அப்போதுதான் துளிர்த்திருந்த, குழந்தையைக் கைகளில் ஏந்திய மறுகணத்தில் பொத்தென்று கைவிட்ட செயலானது மனித நடத்தைகளுக்குப் புறம்பானது. அது நாட்பட்ட, விகாரமடைந்த ஆறாத மனவடு ஒன்றின் பிரதிபலிப்பென்றுதான் உணரமுடிகிறது. நீங்கள் என்ன உணர்கிறீர்கள்.. ”

“……..”

“அரங்கன், மகப்பேற்றில் உடனிருந்த தாதியின் கருத்துப்படி அக்கடைசி நிமிடங்களில் நீங்கள் ஒருவித ஏக்கத்தோடு நின்றிருந்ததாகவும் அது மிக இயல்பானதென்றும்….”

“அது என்னுடைய குழந்தை திருமதி மரியா லூயிஸ். அதன் முதற்கால் பூமிக்கு வருவதைக் காண நிறைய ஆசையோடும் அந்தரிப்போடும் நான் காத்துக்கொண்டிருந்தேன்.” 

“அற்புதம்.. அந்தத் தருணங்கள் மிக அழகானவை அரங்கன். நீங்கள் அதனை உணர்ந்திருப்பீர்கள். இணையின் கரத்தைப் பற்றிப்பிடித்தபடி, அவளுடைய நெற்றியை வருடிக்கொண்டு நம் இருவரதும் நடைபாதையில் முதல் தடவையாக என்னால் பகிர்ந்துகொள்ள முடியாமற்போன உன்னுடைய வலியை நீ தாங்குவதற்கான ஆதாரமாக என்றைக்கும் நானிருப்பேன் என்றவாறாக ஒரு குழந்தையின் அழுகுரலுக்காகக் காத்திருத்தலென்பது… ”

“திருமகள் என்னுடைய உயிர், திருமதி மரியா லூயிஸ். இதோ இந்த ஐந்து வெள்ளைத்தாள்களையும் அவளே வண்ணங்களால் நிரப்ப வல்லவள். அவளுடைய கன்னத்தை வருடியபடி நான் அருகிலேயே உட்கார்ந்திருந்தேன். கண்ணீர் ஏனோ வழிந்துகொண்டிருந்தது. கரைந்துபோகட்டுமென்று அதை அனுமதித்தேன். தாதி கண்கள் விரியக் கூவினாள். “இதோ, உன் மகன், பூமியின் காற்றை தலையால் முட்டித்திறந்தபடி வருகின்றான்” நான் வீரிடும் திருமகளை நெற்றியில் முத்தமிட்டு அணைத்துக்கொண்டேன். அவள் என் கையை இறுகப்பிடித்து நெஞ்சோடு வைத்துக்கொண்டாள். குழந்தையின் முதல் அழுகை, மறக்க இயலாத ஒரு பாடல். தாதி குழந்தையை நீரால் கழுவிச் சுத்தப்படுத்தினாள். மெத்தென்ற துணியில் ஒரு பொக்கிஷம்போல வைத்தாள். “வா தகப்பனே” என்று அழைத்து என் கைகளில் தந்தாள். நீரில் உலர்த்திய பூ என்று எங்கோ படித்திருக்கிறேன், அவன் அப்படியிருந்தான் . கருகருவென்ற தலைமுடி, குட்டிக்கண்கள், ஒரு சாயலில் அம்மம்மாவைப்போல.. 

திருமகளைக் கைத்தாங்கலாக கழிவறைக்கு அழைத்துச் சென்றாள் தாதி. திருமகள் கால் வைத்த தடங்களில் இரத்தத் துளிகள் சொட்டத்தொடங்கின. கைகளில் அள்ளித் தரையெல்லாம் தெளித்துவிட்டதைப்போல இரத்தப்பொட்டுக்கள். எனக்குக் கை நடுங்கத்தொடங்கிற்று. குழந்தையைப் பொத்தென்று கைவிட்டேன். நொடிச் சுதாகரிப்பில் இடது காலைப் பொத்திப்பிடித்தேன். அது தலைகீழாகத் தொங்கியது. மனித உடலிலிருந்து பிய்ந்த ஒரு பாகம் துடித்துக்கொண்டிருக்குமே.. அப்படி.. அப்போது குழந்தையின் வீரிட்ட அழுகை நான் ஞாபகப்படுத்த விரும்பாத ஒப்பாரி.. திருமகள் இரத்தத்தை சேறாக மிதித்தபடி ஓடிவந்து குழந்தையை வாரிக்கொண்டாள். நான் வீரிட்டபடி பிரசவ அறையின் கதவைத்திறந்து வெளியே ஓடத்தொடங்கினேன். தடதடவென்று படிகளில் இறங்கி ஓடினேன். ஓடி முடியுமிடத்தில் செத்துவிடவேண்டும் என்று நினைத்தேன்.” 

saya2.jpg?fit=807%2C1024&ssl=1 Yulanie

துணைநாடிக்கு குருதி அச்சநிலைக்கான அறிகுறிகளை அவதானிக்கமுடிகின்றது. மேலும் சில உளச்சிகிச்சை அமர்வுகளில் அவர் சமூகமளிக்கவேண்டியிருக்கிறது. சிகிச்சைகளில் அவரது ஒத்துழைப்புத் திருப்திகரமாக உள்ளது. தற்போதைக்குச் சித்திரவதைக்கு பின்னான மனவடு நோய்க்கு எஸ் எஸ் ஆர் ஐ  வகை குளிகையும், மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சிகளான சாந்தவழிமுறைகளும் தளர்வுப்பயிற்சிகளும் கொடுக்கப்பட்டன

03.09.2004, 
பேர்ண், அகதிகள் பணியகத்தில் நடந்த தஞ்சக் கோரிக்கை விசாரணைப் பிரதியின் கடைசிப்பக்கம். மொழிபெயர்ப்பாளர் வீரசிங்கமும் அதிகாரி திருமதி மார்ட்டினும் கையொப்பம் இட்டிருந்தார்கள்.  

அரங்கன்: … ஏனெனில் எல்லா மனிதர்களையும் போல.. நான் உயிர் வாழ ஆசைப்படுகின்றேன். 

அதிகாரி: ஸ்ரீலங்கா புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டு கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாகியிருந்ததாக நீங்கள் கூறியபோதும், அதற்கான ஆவணங்களைச் சமர்ப்பிக்கவில்லை. ஒரு குண்டுவெடிப்பில் ஏற்பட்டதாகக் கூறிய காயங்களைத் தவிர்த்து, சித்திரவதையில் ஏற்பட்டிருக்கக் கூடிய கட்புலனாகும் காயமெதையும் நீங்கள் கொண்டிருக்கவில்லை. 

அரங்கன்: ஸ்ரீலங்காவில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் ஆவணங்கள் எதுவுமின்றி ஒருவரைக் கைது செய்யவும் விசாரணை செய்யவும் இயலும். 

அதிகாரி: எவ்வகையான சித்திரவதைகள் என்று விபரிக்கமுடியுமா..? 

அரங்கன்: ஒரு பெண் அதிகாரியிடம் அவற்றைச் சொல்வதற்கு நான் கூச்சத்தையும், மனத்தயக்கத்தையும் உணர்கின்றபோதும்.. அவர்கள் பெற்றோல் நிரப்பிய மருத்துவ ஊசியை என் ஆண்குறியின் முனையில் நுழைத்து பெற்றோலை உட்செலுத்தினார்கள்.. 

அதிகாரி: போதும். உங்களை எங்கு கைது செய்தார்கள்..? 

அரங்கன்: கொழும்பு பெரியாஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டேன். அப்பொழுது என்னுடைய காயங்கள் முழுவதுமாகக் குணமாகிவிடவில்லை. 

அதிகாரி: காயமடைந்து சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த உங்களை அவர்கள் கைது செய்யவேண்டியிருந்த காரணத்தை என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை. 

அரங்கன்: அன்றைக்கு என்ன நடந்ததென்று ஒவ்வொரு வினாடியும் எனக்குத் துல்லியமாக நினைவிருக்கிறது. அப்போது வெயில் அனலடித்தது. சரியான வெக்கை. பஞ்சிகாவத்தைச் சந்தியிலிருந்து மருதானை வரை வீதியில் நீளத்திற்கும் வாகனங்கள் ஒன்றையொன்று நெரித்தபடி ஊர்ந்துகொண்டிருந்தன. பள்ளிக்கூட பஸ்களில் நேர்சரிப் பிள்ளைகள் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு ஆறு அல்லது ஏழு அல்லது எட்டு வயதுகள்தான் இருக்கும். அவர்கள் ஜன்னலில் முகத்தை வைத்து வெளியே ஒரு விசித்திரத்தைப் பார்ப்பதுபோல பார்த்துக்கொண்டிருந்தார்கள். பொலிசார் வீதிக் கடமையில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்கள். பஞ்சிகாவத்தைச் சந்தியிலிருந்து ஊர்ந்துகொண்டிருந்த ஆட்கள் இல்லாத ஒரு மினி பஸ் திருமண நிகழ்விற்குப் பயன்படுவதைப்போல சோடிக்கப்பட்டிருந்தது. 

அது மெல்ல மெல்ல முன்னேறியதில் தற்செயலாக தெருவோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு ஜீப்புடன் மோதியது. அனுசரித்துச் செல்லக்கூடிய அளவிலான சிறிய விபத்துத்தான். மினிபஸ் மேலும் நகரமுற்பட்டபோது ஜீப் வண்டியின் உரிமையாளன் அதை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபடத்தொடங்கினான். மினி பஸ்ஸின் சாரதியோ கெஞ்சலாக திருமண நிகழ்வொன்றிற்கு அவசரமாகச் செல்லவேண்டுமென்றும் தன்னை தொடர்ந்து செல்ல அனுமதிக்கும் படியும் கேட்டான். கெட்ட தூஷண வார்த்தைகளால் திட்டத்தொடங்கிய ஜீப் வண்டிக்காரன் முதலில் மினிபஸ்ஸை விட்டு இறங்கும்படியும் பொலிசாரிடம் முறையிடப்போவதாகவும் மிரட்டினான். இதனால் போக்குவரத்தில் தடங்கல் ஏற்பட்டிருந்தது. பின்னால் வந்துகொண்டிருந்த வாகனங்களின் ஓட்டுனர்கள் சம நேரத்தில் ஹோர்ன் அடித்துச் சூழலைக் களேபரப்படுத்தினார்கள். மினிபஸ் சாரதி பதற்றத்தோடு முன்னோக்கிச் செலுத்தத்தொடங்கினான். ஜீப் வண்டிக்காரன், மினிபஸ்ஸின் பக்கவாட்டை கையால் அடித்தவாறு “நிறுத்து நிறுத்து” என்று கத்தினான். சாரதி அதைச் சட்டை செய்யாமல் வேகமெடுத்தான். இதற்கிடையில் வீதிப்பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த ஒரு பொலிஸ்காரனிடம் ஜீப் வண்டிக்காரன் ஓடிச்சென்று முறையிட்டான். தன்னுடைய மோட்டார் சைக்கிளை உயிர்ப்பித்த பொலிஸ்காரன், மின்னலென முந்திச்சென்று நுாறடி தூரத்தில் போய்க்கொண்டிருந்த மினிபஸ்ஸுக்குக் குறுக்காக நிறுத்தினான். ஜீப் வண்டிக்காரன் அவர்களை நோக்கி மூச்சிரைக்க ஓடிச்சென்றான். அப்பொழுது ஒரு ஹையர்ஸ் வாகனத்தில் வெள்ளை நிற பள்ளிச் சீருடைகளுடன் சிறு பிள்ளைகள் மினிபஸ்ஸைக் கடந்தார்கள். அவர்கள் சிரிப்பும் கும்மாளமுமாக இருந்தார்கள். அவர்களுடைய முகங்கள் என் நினைவில் நிற்கின்றன. அவர்கள் காகிதத்தில் செய்த விமானங்களை வெளியே பறக்கவிட்டார்கள். அவர்கள் பாடல்களைப் பாடிச் சென்றார்கள். அப்பாடல் நான் ஞாபகப்படுத்த விரும்பாத ஒப்பாரி.

அவர்கள் கடக்கவும் பொலிஸ்காரனும் ஜீப் வண்டிக்காரனும் மினி பஸ்ஸிற்குள் ஏறவும் நேரம் சரியாகவிருந்தது. மினிபஸ் வெடித்துச் சிதறி எரியத்தொடங்கிற்று. 

அதிகாரி: காயமடைந்த இருநூற்று ஐம்பது பேர்களில் உங்களை மட்டும் கைது செய்ததென்றால்.. 

அரங்கன்: ஏனென்றால்.. அந்த மினிபஸ்ஸிற்கும் ஜீப் வண்டிக்கும் இடையில் சிறு விபத்து நடந்தது என்று சொன்னேன் அல்லவா.. அப்பொழுது ஜீப் வண்டிக்காரன் மினிபஸ்ஸின் சாரதியோடு கடுமையான வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டிருந்தான் அல்லவா. ஜீப்பை விட்டு இறங்கும்படியும் பொலிசாரிடம் முறையிடப்போவதாகவும் அவன் மிரட்டினான் அல்லவா. அந்த நேரத்தில் மினிபஸ்ஸின் சாரதிக்குப் பக்கத்து இருக்கையிலிருந்து குதித்துக் கீழே இறங்கிய நான், ஜீப் வண்டிக்காரனோடு சமரசத்தில் ஈடுபட்டேன் என்றும், ஐயாயிரம் ரூபாய்களை அவனுடைய கையிற்குள் வைத்து சமாதானப்படுத்த முயற்சித்தேன் என்றும் குற்றம் சுமத்திய புலனாய்வுப் பிரிவினர், வெடிமருந்து நிரப்பப்பட்ட மினிபஸ் தப்பிச் செல்வதற்கான அவகாசத்தை அவ்வாறு ஏற்படுத்தினேன் என்று பொய்யான குற்றச்சாட்டை என்னிடம் எழுதி வாங்க முயற்சித்தார்கள்… … 

கதை சொல்லிக்கு கை நடுங்கத் தொடங்கிற்று. 

 

 

https://eanil.com/?p=535

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
    • இதைவிட முக்கியமானது புலனாய்வுப் பிரிவுகளின் அச்சுறுத்தல் என எண்ணுகிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.