சில புதுப்பித்தல்களுக்காக இன்று ஐரோப்பிய நேரம் 21:00 ல் இருந்து சுமார் அரை மணிநேரத்திற்கு யாழ் தளத்தில் தடங்கல் ஏற்படும்
Sign in to follow this  
கிருபன்

பெப்ரவரி நான்குக்கு முன் புதிய அரசமைப்பு: முடியுமா?

Recommended Posts

பெப்ரவரி நான்குக்கு முன் புதிய அரசமைப்பு: முடியுமா?

எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 ஜனவரி 09 புதன்கிழமை, மு.ப. 11:05 Comments - 0

“அடுத்த வருடம் தைப் பொங்கலுக்கு முன்னர், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும்” எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இதற்கு முன்னர் ஓரிரு முறை கூறியிருந்தது.   

ஆனால், அதையடுத்துப் பல தைப்பொங்கல்கள் வந்து போய்விட்டன. அதேபோல், எதிர்வரும் பெப்ரவரி நான்காம் திகதிக்கு முன்னர், உத்தேச புதிய அரசமைப்பு, கொண்டு வரப்படும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் கூறியிருக்கிறார்.   

இது சாத்தியமா? “இல்லை” என்றே கூற வேண்டும். பெப்ரவரி மாதம் நான்காம் திகதி, இலங்கையின் சுதந்திர தினத்துக்கு முன்னர், இனப்பிரச்சினைக்கு தீர்வாகும் வகையில், நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய புதிய அரசமைப்பொன்றை, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியுமாக இருந்தால், அதை வரவேற்கத் தான் வேண்டும். ஆனால், முடியுமா?  

‘நல்லாட்சி அரசாங்கம்’ என, முன்னர் அழைக்கப்பட்ட இந்த அரசாங்கத்தின் ஆரம்பத்தில், அது இயலுமானது போல்த்தான் தெரிந்தது. ஆனால், இப்போது அது முடியாது என்ற நிலை தோன்றியிருக்கிறது. நாம் ஆசைப்படுகிறோம் என்பதற்காக, பகல் கனவு காண்பது வேடிக்கையான விடயமாகும்.   

புதிய அரசமைப்பொன்றை நிறைவேற்றிக் கொள்வதற்கான பொறிமுறையொன்றை, 2015ஆம் ஆண்டு பதவிக்கு வந்து சில வாரங்களில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான அரசாங்கம் தயாரித்தது. அதன் பிரகாரம், புதிய அரசமைப்பில் இடம்பெற வேண்டியவை தொடர்பாக, மக்களின் கருத்தறிவதற்காகக் குழுவொன்று அமைக்கப்பட்டது.   

அதையடுத்து, 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம், நாடாளுமன்றம் அரசமைப்புத் தயாரிப்புச் சபையாக (Constitutional Assembly) மாற்றப்பட்டது. 

அதன் கீழ், அரசாட்சிக்குரிய சகல விடயங்களும் ஆறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, அந்த ஒவ்வொரு பிரிவுக்குமுரிய விடயங்கள் தொடர்பாகவும் அரசமைப்பு ரீதியாக மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்களைப் பரிந்துரை செய்வதற்காக, ஆறு உபகுழுக்கள் நியமிக்கப்பட்டன.  

அந்த உபகுழுக்களில், மஹிந்த ராஜபக்‌ஷவின் அணியினரான ஒன்றிணைந்த எதிரணியினரும் அங்கம் வகித்தனர். அவர்களில் ஒரு சிலர், சில உபகுழுக்களின் தலைமைப் பதவியையும் வகித்தனர். அவர்கள் விரும்பியே அவற்றில் பங்குபற்றினர்.   

அந்த ஆறு குழுக்களினதும் பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு, புதிய அரசமைப்பு நகலொன்றைத் தயாரிப்பதற்காகப் பிரதமரின் தலைமையில் வழிநடத்தல் குழு (Steering Committee) என்ற பெயரில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டது.   

மேற்கூறப்பட்ட ஆறு உபகுழுக்களினதும் அறிக்கைகள், 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வழிநடத்தல் குழுவிடம் கையளிக்கப்பட்டன. அவற்றை ஆராய்ந்த வழிநடத்தல் குழு, 2017ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம், தமது இடைக்கால அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது. அதே காலகட்டத்தில், மஹிந்த அணியினர் தாம் புதிய அரசமைப்புத் தயாரிப்புப் பணிகளில் இருந்து, விலகிக் கொள்வதாக அறிவித்தனர்.   

வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை, கடும் போக்குச் சிங்களவர்களையும் தமிழர்களையும் சமாளிக்க எடுத்த முயற்சியின் பயனாக, அதன் சில ஆலோசனைகள், குழப்பமானவையாகவே தெரிகின்றன.   

உதாரணமாக, அரசின் சுபாவம் தொடர்பான அதன் ஆலோசனைகளைச் சுட்டிக் காட்டலாம். இலங்கை ‘ஏக்கீய ராஜ்ஜிய’ என்று சிங்களத்திலும், ‘ஒருமித்த நாடு’ என்று தமிழிலும் குறிப்பிட வேண்டும் என, அது கூறுகிறது. அதன் விளைவாக, அந்த அறிக்கையைத் தயாரித்தவர்கள், எந்தக் கடும் போக்காளர்களைச் சமாளிக்க நினைத்தார்களோ, அதே கடும்போக்காளர்கள் அதை எதிர்க்கத் தொடங்கினர்.  

‘ஏக்கீய ராஜ்ஜிய’ என்பது சிங்களத்தில் ‘ஒற்றை ஆட்சி’யைக் குறிக்கும் பதமாகவே, நீண்ட காலமாகப் பாவிக்கப்பட்டு வந்தது. எனவே, இது தம்மை ஏமாற்றும் வித்தை எனக் கடும் போக்குடைய தமிழர்கள் கூறினர்.   

‘ஒருமித்த நாடு’ என்றால், ஒரே நாடு என்றும் ஒன்றாகிவிட்ட நாடு என்றும் அர்த்தம் கொள்ள முடியும் என்பதால், சிங்களவர்களும் குழம்பினர். இந்த நிலையில் தான், கடைசியாக அரசமைப்புப் பணி நின்றிருந்தது. 

இந்தச் சந்தேகங்களைப் போக்க, வழிநடத்தல் குழு, கடந்த 15 மாதங்களில் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அதன் பின்னர், அது கூடியதா என்றாவது மக்களுக்கு தெரியாது.  

கடந்த வருடம் முழுவதிலும், அரசியல் தளம்பல் நிலை, நாட்டில் இருந்து வந்தது. ஜனவரி மாதத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான பிரசார வேலைகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வந்தன. 

பெப்ரவரி மாதத்தில், அந்தத் தேர்தல்கள் நடைபெற்றதிலிருந்து நாடு குழப்ப நிலையிலேயே இருந்து வந்துள்ளது. 

ஏப்ரல் மாதத்தில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டது.   

அதையடுத்து, அந்தப் பிரேரணையை ஆதரித்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 16 எம்.பிக்கள், அரசாங்கத்திலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டனர். அத்தோடு, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை அடுத்து, ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான மோதல் உக்கிரமடைந்தது.   

அதன் விளைவாக, ஒக்டோபர் மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்கி, மஹிந்த ராஜபக்‌ஷவை அப் பதவிக்கு நியமித்தார். 

அதையடுத்து, வருடம் இறுதி வரை, அரசியல் நெருக்கடி நிலைமை நிலவி வந்தது. எனவே, அரசமைப்புப் பணி முற்றாகப் புறக்கணிக்கப்பட்டு வந்தது.   

அவ்வாறிருக்க, பெப்ரவரி நான்காம் திகதிக்கு முன்னரான சுமார் 25 நாள்களுக்குள் முரண்பாடுகளற்ற அரசமைப்பு நகல் ஒன்றைத் தயாரிக்க முடியுமா? அல்லது, நாடறியாமலேயே வழிநடத்தல் குழு அதைத் தயாரித்து விட்டதா?  

அவ்வாறானதொரு நகல் அரசமைப்புத் தயாரிக்கப்பட்டு இருந்தாலும், இந்த நாடாளுமன்றத்தின் காலத்தில் அதை நிறைவேற்றிக் கொள்ள முடியாது என்றே தெரிகிறது.   

மற்றக் கட்சிக்காரர்கள் எவ்வாறு நடந்து கொண்டாலும், ஜனாதிபதியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 95 எம்.பிக்களும் மஹிந்த ராஜபக்‌ஷவின் தலைமையில் அதை எதிர்க்கப் போகிறார்கள்.   

எனவே, புதிய அரசமைப்பொன்றை நிறைவேற்றிக் கொள்ளத் தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு கிடைக்காது என்பது, மிகத் தெளிவான விடயமாகும்.   

போதாக்குறைக்கு, ஐக்கிய தேசியக் கட்சி மற்றொரு சர்ச்சையையும் கிளப்பிவிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமது நிறைவேற்று அதிகாரத்தைப் பாவித்து, அண்மையில் அரசியல் மற்றும் அரசமைப்பு நெருக்கடிகளை ஏற்படுத்தியதால், ஐ.தே.க இப்போது நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்ய வேண்டும் எனக் கூறி வருகிறது.   

“நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வேன்” என வாக்குறுதி அளித்துவிட்டு, இரண்டு முறை ஜனாதிபதியாகப் பதவிக்கு வந்த மஹிந்தவும் அவரது ஆதரவாளர்களும் அதைக் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள்.   

நிறைவேற்று ஜனாதிபதி முறையை முற்றாக இரத்துச் செய்வதாக இருந்தால், அதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுக்குப் புறம்பாக, சர்வஜன வாக்கெடுப்பொன்றையும் நடத்த வேண்டும் என, உயர்நீதிமன்றம் 2015ஆம் ஆண்டு கூறியிருந்தது.   

அதனால் தான் 19ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் மூலம், ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள், முற்றாக இரத்துச் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.   

அத்தோடு, உத்தேச புதிய அரசமைப்பு மூலம், சமஷ்டி ஆட்சி முறையொன்றை ஏற்படுத்தி, அதன் மூலம் நாட்டை இரண்டாகப் பிரிக்க, ஐ.தே.க திட்டமிட்டு உள்ளதாக மஹிந்தவின் ஆதரவாளர்கள், சிங்கள மக்களைப் பயமுறுத்தியும் வருகிறார்கள். 

அந்தநிலையில், நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்யும் ஆலோசனையும் இனப்பிரச்சினைக்கான தீர்வும் உள்ளடக்கப்பட்ட புதிய அரசமைப்பொன்றுக்கு, சிங்கள மக்கள் பெரும்பான்மையாகக் கொண்ட நாட்டில், சர்வஜன வாக்கெடுப்பொன்றின் போது மக்களின் ஆதரவு கிடைக்குமா என்பது அடுத்த கேள்வியாகும்.  

எனவேதான், இப்போது புதிய அரசமைப்புப் பற்றிய நோக்கத்தைத் தாம் கைவிட்டுள்ளதாகவும் அதனாலேயே, நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதற்கான 20ஆவது அரசமைப்புத் திருத்தத்தைத் தாம் சமர்ப்பித்ததாகவும் மக்கள் விடுதலை முன்னணி கூறிவருகிறது.   

அந்த 20ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் சில வாசகங்கள், அரசமைப்புக்கு முரண் என்றும், எனவே அதை நிறைவேற்ற, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுக்கு மேலதிகமாக, சர்வஜன வாக்கெடுப்பொன்றையும் நடத்த வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்திருந்தது.   

எனவே, அதுவும் இனப் பிரச்சினைக்கான தீர்வைப் போலவே, முன் நகர முடியாத நிலையில் உள்ளது.  
பெப்ரவரி மாதத்துக்கு முன்னரோ பின்னரோ, நிறைவேற்றப்படும் புதிய அரசமைப்பொன்றின் மூலம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கமும் என்ன சாதிக்கப் போகின்றன என்பதும் தெளிவாக இல்லை.   

வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையில், சிங்களத்தில் ‘ஏக்கீய ராஜ்ஜிய’ என்றும், தமிழில் ‘ஒருமித்த நாடு’ என்றும் குறிப்பிட்டு, சாதாரண அதிகாரப் பரவலாக்கல் முறையொன்றே முன்வைக்கப்பட்டு இருந்தது. அதிலும், அதிகாரப் பரவலாக்கலுக்கான அலகாக, மாகாணமே குறிப்பிடப்பட்டு இருந்தது.   

அந்த உத்தேச ஆட்சி அமைப்பில், மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்து விலகிச் செயற்பட, மாகாணங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு இருக்கவில்லை.  

பொதுவாக, அந்த அறிக்கையிலுள்ள ஆலோசனைகள் மூலமும் தற்போதைய அதிகாரப் பரவலாக்கல் முறையை விட, பாரிய மாற்றம் எதுவும் பரிந்துரைக்கப்படவில்லை.   

நிலைமை இவ்வாறு இருக்கத்தான், தீவிர போக்குடைய தமிழர்களும் சிங்களவர்களும் அரசியல் சந்தர்ப்பவாதிகளும் ‘ஏக்கீய ராஜ்ஜிய’ மற்றும் ‘ஒருமித்த நாடு’ என்ற பெயர்ப் பலகைகளைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு, அந்தத் திட்டத்தை எதிர்த்தார்கள்.   

தமிழர்கள், “ஒருமித்த நாடு அல்ல; சமஷ்டி என்ற பெயர் பலகையே எமக்கு வேண்டும்” என்றார்கள். சிங்களவர்கள், தமிழிலும் ‘ஒற்றை ஆட்சி’ என்ற பெயர்ப் பலகை வேண்டும் என்று கூச்சலிட்டனர். 

எனவே, இனப் பிரச்சினைக்கான தீர்வு என்ற பெயரில், பெயர் பலகைக்கான சண்டை ஒன்றே இப்போது நடைபெற்று வருகிறது.   

சிங்கள தீவிரவாதிகளும் தமிழ்த் தீவிரவாதிகளும் அறிக்கையின் உள்ளடக்கத்தைக் கருத்தில் கொள்ளவில்லை. அதன் மூலம் பரிந்துரைக்கப்பட்ட அதிகாரப் பரவலாக்கல் முறையை, எந்தவொரு தமிழ்த் தீவிரவாதியோ, சிங்களத் தீவிரவாதியோ விமர்சிக்கவில்லை.   

இனப்பிரச்சினையின் வரலாற்றைப் பார்த்தால், பேரினவாத நெருக்குவாரத்துக்குப் பதவியில் இருந்த சகல அரசாங்கங்களும் அடிபணிந்துள்ளதை அவதானிக்கலாம். பண்டா-செல்வா ஒப்பந்தம், டட்லி- செல்வா ஒப்பந்தம் ஆகியவை சிறந்த உதாரணங்களாகும்.   

தமிழீழ விடுதலை புலிகளின் ஆலோசகராக இருந்த கலாநிதி அன்டன் பாலசிங்கம், “சிறந்த தீர்வுத் திட்டம்” என்று கூறிய, சந்திரிகா குமாரதுங்க 1995ஆம் ஆண்டு சமர்ப்பித்த ‘பக்கேஜ்’ என்று அழைக்கப்பட்ட தீர்வுத் திட்டம், சந்திரிகா 2000ஆம் ஆண்டு சமர்ப்பித்த, ‘புதிய அரசமைப்பு நகல்’ ஆகியவை, ஐ.தே.கவின் எதிர்ப்பால் ஒதுக்கித் தள்ளப்பட்டன.   

2002ஆம் ஆண்டு, ஐ.தே.க அரசாங்கமும் புலிகளும் ஒஸ்லோவில் உடன்பட்ட சமஷ்டித் திட்டத்தை, பின்னர் புலிகள் எதிர்த்தனர். இப்போது அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணக்கம் கண்டுள்ளதாகத் தெரியும், புதிய அரசமைப்பை, மஹிந்த அணியினர் எதிர்க்கின்றனர்.   

இந்த நிலையில், சுமந்திரன் கூறுவதைப் போல், 25 நாள்களுக்குள் நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய வகையில், அரசமைப்பு நகலொன்றைச் சமர்ப்பிக்க முடியுமா என்பது சந்தேகமே. 

ஏதாவது ஒன்றைச் சமர்ப்பிக்கலாம்; நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய வகையிலான எதையும் சமர்ப்பிக்க முடியுமா?  

இதற்கிடையே காலம் ஓடிக் கொண்டே போகிறது. பண்டா- செல்வா ஒப்பந்தத்திலிருந்து 60 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. நாடு பெரிதாக அபிவிருத்தி அடையாவிட்டாலும், நாட்டின் பொதுவான அபிவிருத்தி மட்டத்தை விட, வடபகுதி அபிவிருத்தி மிகவும் பின்தள்ளப்பட்ட நிலையிலேயே இருக்கிறது.   

இது ஒருவகையில், தமிழ்த் தலைவர்கள் அரசியல் தீர்வில் மட்டும் தங்கியிருந்ததன் விளைவு எனவும் கூறலாம். இது புதிதாக சிந்திக் வேண்டிய விடயமாகும்.   

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பெப்ரவரி-நான்குக்கு-முன்-புதிய-அரசமைப்பு-முடியுமா/91-227713

 

Share this post


Link to post
Share on other sites
சில புதுப்பித்தல்களுக்காக இன்று ஐரோப்பிய நேரம் 21:00 ல் இருந்து சுமார் அரை மணிநேரத்திற்கு யாழ் தளத்தில் தடங்கல் ஏற்படும்

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

சில புதுப்பித்தல்களுக்காக இன்று ஐரோப்பிய நேரம் 21:00 ல் இருந்து சுமார் அரை மணிநேரத்திற்கு யாழ் தளத்தில் தடங்கல் ஏற்படும்