Sign in to follow this  
Justin

இயற்கை, நவீனம், போலிகள்: ஒரு ஆரோக்கிய வட்டமேசை

Recommended Posts

இரண்டு ஆண்டுகள் முன்பு பிரித்தானியாவில் நடந்த சம்பவம் இது. பிரிட்டிஷ் இராணுவத்தில் கப்ரனாகப் பதவி வகித்த இளம்பெண் நைய்மா முகமட்டிற்கு இரண்டாம் தடவையும் மார்பகப் புற்று நோய் வந்து விடுகிறது. அவரது மருத்துவர்கள் தமது முயற்சிகளின் இறுதிக் கட்டத்திற்கு வந்து விட்ட நிலையில், நைய்மா இணையத் தேடலில் மாற்று மருத்துவ முறைகளைத் தேட ஆரம்பிக்கிறார். அமெரிக்காவில் ஒரு மாற்று மருத்துவ நிலையம் நடத்தும் ரொபர்ட் யங் என்பவருடன் தொடர்பை ஏற்படுத்தி, தனது புற்று நோய்க்கு மாற்று மருத்துவம் செய்ய ஆரம்பிக்கிறார் நைமா. உடலில் அமிலத் தன்மையைக் குறைத்து காரத் தன்மையை அதிகரித்தால் சகல நோய்களும் குணமாகும் என்று தானும் நம்பி, அந்த நம்பிக்கையை மற்றவர்களுக்கும் விற்றுப் பெரும் காசு பார்ப்பவர் றொபர்ட் யங். நைய்மாவின் மார்பகப் புற்று நோய்க்கு அவர் அனுப்பி வைத்த மருந்து சோடியம் பைகாபனேற் எனப்படும் அப்பச் சோடா கலந்த நீர்! பல ஆயிரம் டொலர்களை இதற்காக வசூலித்த யங், மரணப் படுக்கையில் இருந்த நைய்மாவை அமெரிக்காவுக்கு வரவைழைத்து தன் சிகிச்சையைத் தொடர இருந்த வேளையில் நைய்மா மரணமாகிறார். விடயம் வெளியே தெரிந்ததும் உள்ளூர் சுகாதாரத்துறையினர் அனுமதிப் பத்திரமின்றி மருத்துவத் தொழில் செய்தமைக்காக றொபர்ட் யங்கைக் கைது செய்து, வழக்குப் போட்டு, இப்போது சிறையில் இருக்கிறார். மூன்று வருடங்களில் வெளியே வந்து தன் தொழிலை வேறொரு வழியில் தொடர்வார் யங். ஏன் தொடர்வார் எனின், றொபர்ட் யங்கின் இந்த நிரூபிக்கப் படாத (இது பற்றிப் பின்னர் அடிப்படை உயிரியல் ரீதியில் பார்க்கலாம்) மூடத்தனமான கருத்தை சில அமெரிக்க விளையாட்டுத் துறைப் பிரபலங்களும், ஹொலிவூட் நடிகையொருவரும் தொடர்ந்து ஆதரித்துப் பரப்பி வருகிறார்கள் என்பதாலாகும். 

அதிசயிக்கத் தக்க விதமாக, எங்கள் தமிழ் மக்களிடையே, அதிலும் புலம் பெயர்ந்து தகவல் தொழில் நுட்பத்தில் மிதந்து வாழும் மக்களிடம் ஏராளமான போலி மருத்துவக் கருத்துகள் இலகுவாகப் பரவுகின்றன. இதன் அடிப்படைக் காரணங்கள்: நவீன மருத்துவத்தின் மீதான நம்பிக்கையின்மை, இயற்கையானது எல்லாம் நல்லதே என்கிற நம்பிக்கை, மற்றும் எளிமையான அலட்சியம். ஒவ்வொரு முறையும் யாராவது ஒரு  நிரூபிக்கப் படாத மாற்று மருத்துவ முறையை இங்கே பதிவிடும் போது, அதற்குத் தனியாகப் பதில் கொடுக்க நேரமின்மை தடுக்கிறது. அதனால், சில அடிப்படையான விடயங்களை இந்தப் பகுதியில் பதிவு செய்து வைக்கும் முயற்சி இது. இந்த அடிப்படைத் தகவல்கள், போலியான, சில சமயங்களில் ஆபத்தான மருத்துவ நம்பிக்கைகளை நீக்க எங்களில் ஒருவருக்கு உதவினால் கூட, இந்தப் பதிவின் பயன் பூரணமடையும். 

இங்கே எழுதப் போகும்  கருத்துகளைத் தெளிவாக விளங்கிக் கொள்ள, இந்த மூன்று பதங்களையும் இப்போதே விளக்கி விடுகிறேன்: மாற்று மருத்துவம் (alternative medicine), நவீன மருத்துவ முறைகளில் இருந்து வேறுபடும் மருத்துவம், நவீன மருத்துவர்களால் கடைப்பிடிக்கப் படாதது. இயற்கை மருத்துவம் (naturopathy) அல்லது மூலிகை (herbal) மருத்துவம், இயற்கையான பொருட்கள் கொண்டு செய்யப் படுவது, ஆயுர்வேதம், சித்த மருத்துவம், ஹோமியோபதி என்பன இதற்குள் அடங்கும்.  நவீன மருத்துவம் (modern medicine) - ஆங்கில மருத்துவம், மேற்கத்தைய மருத்துவம் என்று பொதுவாக  அழைப்படுவது. நான் நவீன மருத்துவம் என்பதன் காரணம், இது கிரேக்கர், அரேபியர், ஒல்லாந்தர் எனப் பலராலும் கட்டமைக்கப் பட்ட ஒன்று- ஆங்கிலேயருக்கு தனியே உரித்தான ஒன்றல்ல!. தற்போது, ஒருங்கிணைக்கப் பட்ட அல்லது பூரணத்துவம் நோக்கிய மருத்துவம் (integrative or complementary medicine) என்ற பதமும் பயன் பாட்டில் இருக்கிறது. பொதுவாக இது நவீன மருத்துவ முறைகளுடன், சில பயன் உறுதி செய்யப் பட்ட மாற்று மருத்துவ முறைகளையும் இணைத்து வழங்கும் ஒரு மருத்துவ ஏற்பாடு! மருந்து மாத்திரைகளோடு, யோகாசனம், தியானம் போன்ற மன உடல் சிகிச்சைகளை வழங்குவது ஒருங்கிணைக்கப் பட்ட மருத்துவத்திற்கு ஒரு உதாரணம்.

எழுதுபவர் ஒரு போடியத்தில் நின்று, கீழே அமர்ந்திருக்கும் கேட்போரை நோக்கிப் பேசுவதாக இது இருக்க கூடாது என்பதால் இதை வட்ட மேசை என அழைக்கிறேன். சுடு சொற்களோ அதிகாரமோ இங்கே இருக்காது! தொடர்ந்து இணைந்திருங்கள்! 

- வரும். 

Edited by Justin
 • Like 12

Share this post


Link to post
Share on other sites

தொடருங்கள்...வாசிக்க ஆவலாய் உள்ளேன் 
 

Share this post


Link to post
Share on other sites
On 1/11/2019 at 2:57 PM, ரதி said:

தொடருங்கள்...வாசிக்க ஆவலாய் உள்ளேன் 
 

நன்றி ரதி, நேரம் கிடைக்கும் போது தொடர்வேன்!  இந்த இடத்திலும் வந்து ஆட்கள் territory marking  செய்யாமல் விட்டால் நல்லது! உருப்படியாக ஒரு விடயத்தை எழுத நேரமும் ஆராய்ச்சியும் தேவை! ரொய்லற் லெவல் கருத்துகளால் எங்கள் நேரத்தை வீணடிக்காமல் இருப்பார்கள் என நம்புவோமாக!

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

மாற்று மருத்துவம் & நவீன மருத்துவம்: ஆரம்பம் ஒன்று..பாதைகள் வேறு!

மேலே குறிப்பிட்ட வெவ்வேறு மருத்துவப் பாரம்பரியங்கள் அனைத்தும் ஆரம்பத்தில் ஒரே மாதிரியான அடிப்படையைக் கொண்டே ஆரம்பிக்கப் பட்டன. அந்த அடிப்படை எந்த விஞ்ஞானமும் காரண காரியத் தொடர்புகளும் அற்ற வெறும் ஊகிப்பாகவே இருந்தது.  நவீன மருத்துவம் என்று அழைக்கப் படும் ஐரோப்பிய வழி வந்த மருத்துவம், படிப்படியாக பழையதைக் கேள்வி கேட்கவும் புதியவற்றைப் பரீட்சித்துப் பார்க்கவும் முயன்றதில் இன்றைய நிலைக்கு வந்துவிட, மாற்று மருத்துவங்களாக இருப்பவை பாரம்பரிய முறைகளை அதிக கேள்விகள் இன்றி அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதில் முனைப்பாக இருந்தன. 

2400 ஆண்டுகளுக்கு முன் கிரேக்கத்தில் வாழ்ந்த ஹிப்பொகிறரிஸ் (Hippocrates) நவீன மருத்துவத்தின் தந்தை என்று கருதுவர். நோய்கள் கடவுள்களின் சாபங்கள் என்பதை மறுதலித்து உடலின் சமநிலை பாதிக்கப் படுவதே நோய்களுக்குக் காரணம் என்ற கருத்தை முன்வைத்து பல நோய்களை கடவுள் சாபங்கள் என்ற நிலையில் இருந்து இயற்கையின் உபாதையாக முதலில் கற்பித்தது ஹிப்போகிறரிஸ். இன்று நவீன மருத்துவர்கள் எடுத்துக் கொள்ளும் சத்தியப் பிரமாணம், இவரால் நேரடியாக எழுதப் படாவிட்டாலும், "do no harm" எனும் மருத்துவத்தின் முதல் கட்டளையை ஹிப்பொகிறரிஸ் தான் கற்பிக்க ஆரம்பித்தார். இவரைப் பின் தொடர்ந்து வந்த கிரேக்கரான கெலன் (Galen), மனித உடலின் அடிப்படை அமைப்பைப் புரிந்து கொள்ளாமல் நோய்களையும் மருத்துவத்தையும் விளங்கிக் கொள்ள இயலாது எனப் புரிந்து கொண்டு, மனித உடல் அமைப்பைக் குரங்குகளின் உடலைப் பிரேத பரிசோதனை செய்வதன் மூலம் விளக்க ஆரம்பித்தார். இதுவே  நவீன மருத்துவம் விஞ்ஞான அணுகுமுறையைப் பயன் படுத்த ஆரம்பித்த முதல் படிமுறை. மனித உடல் கடவுளின் சாயல் என்ற நம்பிக்கை காரணமாக மனித் உடலைப் பிரேத பரிசோதனை செய்யும் வாய்ப்பு கெலனுக்குக் கிட்டவில்லை. மத்திய கால ஐரோப்பாவில் வெசாலியஸ் (Vesalius) என்ற மருத்துவர், ஒரு மரண தண்டனை பெற்ற கைதியின் உடலை அரச அனுமதியுடன் பெற்று பிரேத பரிசோதனை செய்த போது தான் மனிதனின் உள்ளுறுப்புகளின் அமைப்பு மருத்துவர்களுக்குத் தெரியவந்தது. புகைப் படக் கருவிகள் இல்லாத அந்தப் புராதன காலத்தில், மனிதனின் உடல் அமைப்பை ஓவியர்களின் துணையோடு ஆவணப்படுத்திய வெசாலியஸ் தனது முதல் உடலமைப்பியல் (Anatomy) நூலை வெளியிட்ட போது அவருக்கு வயது 28. தொடர்ந்து ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகளும் மருத்துவர்களும்  ஐரோப்பாவுக்கு வெளியேயும் உள்ளேயும் இருந்து நவீன மருத்துவத்தைத் தற்போதைய நிலைக்குக் கொண்டு வர மதஸ்தாபனங்களையும் எதிர்ப்புகளையும் தாண்டி உழைத்திருக்கிறார்கள். இன்றைய நிலையில், நவீன மருத்துவம், விஞ்ஞானத்தின் சகல பிரிவுகளுடனும் கைகோர்த்து மேலும் வளர்கிறது. 

மாற்று மருத்துவங்கள் எடுத்த  பாதை முற்றிலும் வேறானது. தமிழ் மருத்துவமான சித்த மருத்துவம் சில தரவுகளின் படி 3000 முதல் 10000 ஆண்டுகள் வரைப் பழமையானது எனச் சொல்லப் படுகிறது. சிவனால், சித்தர்களுக்கு முதலில் அருளப்பட்ட கலையெனக் குறிப்பிடப் படும் சித்த மருத்துவம், முதலில் குரு- சிஷ்ய பாரம்பரியமாகவும், பின்னர் ஓலைச் சுவடிகள் மூலமும் சந்ததிகளுக்குக் கடத்தப் பட்டு வந்தது. அகஸ்தியரே சித்த மருத்துவத்தின்  முதல்வராகக் கருதப் படுகிறார். வாதம், பித்தம், கபம் எனும் மூன்று உபாதைகளே உடலின் சகல நோய்களுக்கும் தோற்றுவாய் என்றும், உடலின் கூறுகளான ஐம்பூதங்களைச் சமநிலையில் வைத்திருப்பதே நோய்களுக்கு மருந்து என்றும் சித்த மருத்துவம் கூறுகிறது. இந்த சமநிலையை உருவாக்கும் மருந்துகளாக மூலிகைகளும் சில கனிமங்களும் சித்த மருத்துவத்தில் பயன் படுகின்றன. இந்த மூலிகைகளை வகைப் படுத்தும் முயற்சியில் சித்த மருத்துவம் தாவரவியலுக்கு பாரிய பங்களிப்பை வழங்கியிருக்கிறது.எனினும் சித்த மருத்துவத்தில் கனிமப் பொருட்களாகப் பயன்படும் பாதரசம் (Mercury) போன்ற பார உலோகங்கள் மனித ஆரோக்கியத்திற்குக் கேடானவை என நவீன விஞ்ஞானம் ஆதாரங்களுடன் நிரூபித்திருக்கிறது. ஆயுர்வேதமும்  சித்த மருத்துவத்தை ஒத்தவாறே வாத, பித்த, கபப் பிரச்சனைகளுக்கு  பிரதானமாக மூலிகைகளையும் எண்ணைகளையும் பாவித்து  தீர்வு காண முயல்கிறது. இந்த இரு பிரதான மாற்று மருத்துவ முறைகளிலும் உள்ள குறைபாடு, இவை பலன் தரும் சிகிச்சைகளா என்பது இன்று வரை நிரூபிக்க இயலாதமையாகும். தனி நபர்களின் அனுபவங்கள் இச்சிகிச்சை முறைகளின் பலன்கள் பற்றி சான்று பகன்றாலும், விஞ்ஞான முறைகள் மூலம் சித்த ஆயுர்வேத மருந்துகள் பரீட்சிக்கப் பட்ட போது கிடைக்கும் பெறுபேறுகள், இந்த அனுபங்களை உறுதி செய்யவில்லை. 

விஞ்ஞான முறையான பரிசோதனை என்பது என்ன? ஏன் மாற்று மருத்துவ முறைகள் இம்முறை மூலம் பரீட்சிக்கப் பட வேண்டும் ? அடுத்த பகுதியில் பார்க்கலாம்!   

 • Like 6

Share this post


Link to post
Share on other sites

நல்ல முயற்சி யஸ்ரின்.

ஆங்கில, தமிழ் மருத்துவம் தொடர்பாக நிறைய விடயங்களில் எனக்கு சந்தேகங்கள் பல. உங்களின் இந்தத்திரியில் உங்கள் பதிவுகள் பல தெளிவை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.

Share this post


Link to post
Share on other sites
22 hours ago, வல்வை சகாறா said:

நல்ல முயற்சி யஸ்ரின்.

ஆங்கில, தமிழ் மருத்துவம் தொடர்பாக நிறைய விடயங்களில் எனக்கு சந்தேகங்கள் பல. உங்களின் இந்தத்திரியில் உங்கள் பதிவுகள் பல தெளிவை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.

நன்றி சஹாரா. ஆயிரக்கணக்கான நோய்கள் மருந்துகள் பற்றி போலியான தகவல்கள் வருவதற்கு சில அடிப்படையான தகவல்கள் தெரியாமல் இருப்பதே காரணம் எனக் கருதுவதால் அப்படியான தகவல்களை ஒரே இடத்தில் பதிவில் வைத்திருப்பதற்காக இதை ஆரம்பித்தேன். உங்கள் சந்தேகங்களுக்கு விடைகள் கிடைத்தால் மகிழ்ச்சி. மேலும், கீழே ஒரு நூலக இணைப்பு இருக்கிறது. கொக்றேன் நூலகம் என்பது உலகம் முழுவதும் உள்ள மருத்துவ ஆய்வாளர்களால் இலாப நோக்கமின்றி நடத்தப்படும் ஒரு மாதாந்த வெளியீடு. சகல விதமான மருத்துவ முறைகள் பற்றியும் கிடைக்கும் ஆய்வு முடிவுகளை எவரும் விளங்கிக் கொள்ளும் வகையில் தருவதே இவர்களின் வேலை. உங்களுக்குக் கேள்விகள் ஏதும் இருந்தாலும் அதை இவர்களுக்குச் சமர்ப்பிக்கலாம். அதை எடுத்துக் கொண்டு சில மாதங்களில் பதிலை ஆய்வு முடிவாகப் பிரசுரிப்பார்கள். 

https://www.cochranelibrary.com/cdsr/about-cdsr

Share this post


Link to post
Share on other sites

விஞ்ஞான வழியில் உண்மை தேடல்: எடுகோளும் கோட்பாடும்

இரண்டு அழகிய தமிழ்ச் சொற்களை இன்று அடிக்கடி கேட்போம்: எடுகோள் (அல்லது கருதுகோள்- hypothesis) , கோட்பாடு (theory). பாலா மாஸ்ரர் எனும் பாலசுப்ரமணியம் ஆசிரியர் யாழ் . மத்தியின் மாணவர்களுக்கும் பல யாழ் மாணவர்களுக்கும் பரிச்சயமான ஒரு விஞ்ஞான ஆசிரியர். சில ஆண்டுகள் முன்பு அமரராகி விட்டார். ஒன்பதாம் ஆண்டோ பத்தாம் ஆண்டோ படிக்கையில் எடுகோள், கோட்பாடு, விஞ்ஞானச் செயல்முறை என்பதை அரை மணிநேரத்தில் மனதில் பதியத் தக்கவாறு படிப்பித்தவர் பாலா மாஸ்ரர். எந்தச் சிக்கலான கருப்பொருளையும் மிக எளிதாக்கிப் படிப்பிப்பது தான் பாலா மாஸ்ரரின் தனித் திறமை- அவருக்கு இந்தப் பகுதி சமர்ப்பணம்! 

எடுகோள் என்பது காற்றில் மிதந்து வரும் சில வதந்திகள், சந்தர்ப்ப வசமாக நீங்கள் காணும் சில தகவல்கள் என்பவற்றால் உங்கள் மனதில் உருவாகும் ஐயம் என்று வைத்துக் கொள்ளலாம். அந்த ஐயத்தை நீங்கள் மேலதிக தகவல் சேகரிப்பதால் உறுதி செய்து கொண்டால் அந்த ஐயம் நிரூபிக்கப் பட்ட உண்மையாக ஏற்றுக் கொள்ளப் படுகிறது - இது கோட்பாடு. இந்த தகவல் சேகரிக்கும் செயல்பாடு தான் விஞ்ஞான முறை (scientific method) என அழைக்கப் படுகிறது. 

உதாரணமாக, "தலை வழுக்கை விழுந்தவர்கள் கணக்கில் புலிகள்" என்பது ஒரு ஐயம் அல்லது எடுகோள். இதை எப்படிப் பரீட்சித்துப் பார்ப்பது? ஒரு நூறு தலைவழுக்கை உடையோரையும், இன்னொரு நூறு தலை நிறைய கரு கருவென்று முடியுடையோரையும் தேடிப் பிடித்து, இரண்டு குழுக்களுக்கும் ஒரே மாதிரியான ஒரு மதி நுட்பப் பரீட்சையை வைத்துப் பார்க்கலாம். இரண்டு குழுக்களிலும் புள்ளிகளைக் கணக்கிட்டுப் பார்த்தால் இந்த ஐயம் உண்மையா என்று உறுதி செய்யலாம். வித்தியாசம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இது தலை வழுக்கையால் மட்டுமே வந்த வித்தியாசம் என எப்படி உறுதியாகச் சொல்வது?. இரண்டு குழுக்களிலும் இருக்கும் நபர்களின் வயது, கல்விப் பின்னணி, சில சமயம் சமூகப் பின்னணி என்பவற்றினால் கூட இது வந்திருக்கலாம் அல்லவா? இப்படி நாம் பரீட்சிக்க விளையும் பிரதான காரணிகளை, மறைந்திருந்து மாற்றும் "மற்றைய காரணிகளை" இடையீடு செய்யும் காரணிகள் (confounders) என்போம்! இடையீடு செய்யும் காரணிகளை நாம் வெல்ல ஒரு வழி அவற்றை இயலுமானவரை அடையாளம் கண்டு, கட்டுப் படுத்துவது. எங்கள் "கட்டுப் படுத்தப் பட்ட" பரிசோதனைக் குழுக்கள் இரண்டிலும் இப்போது ஒரே கல்விப் பின்னணி கொண்ட, ஏறத்தாழ ஒரே வயது மட்டமான, ஒரே சமூகப் பின்னணி கொண்டவர்கள் மட்டுமே இருக்கத் தக்கதாக வைத்துக் கொண்டு கணித ஆற்றலை மீள அளவிட்டால், தலைமுடிக்கும் கணித ஆற்றலுக்கும் உள்ள தொடர்பு புலப் பட வாய்ப்புண்டு. இப்படி நாம் இடையீடு செய்யும் காரணிகளைக் கட்டுப் படுத்திச் செய்யும் ஆய்வு, "கட்டுப் படுத்தப் பட்ட பரிசோதனை" (controlled experiment) எனப்படுகிறது.இவ்வாறு கட்டுப் படுத்தப் பட்ட ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப் படும் கோட்பாடுகளே இன்னொரு ஆய்வினால் மறுதலிக்கப் படும் வரை ஏற்றுக் கொள்ளப் பட்டு நிலைத்து நிற்கின்றன. 

எல்லாச் சந்தேகங்களையும் எடுகோள்களாக மாற்றிப் பரீட்சிக்க இயலுமா? இல்லை, விஞ்ஞான முறையில் பரீட்சிக்க இயலாத ஐயங்களும் இருக்கின்றன. உதாரணமாக, "தலை வழுக்கை உடையோர் இரக்ககுணம் உடையோர்" என்றொரு எடுகோளைப் பரீட்சிப்பதில் சிக்கல் இருக்கிறது. இரக்க குணத்தை எப்படி அளப்பது? ஒவ்வொருவரதும் இரக்க குண வெளிப்பாடு ஒரே மாதிரியில்லாத போது எப்படி அப்பிளையும் ஒறேஞ்சையும் ஒப்பிடுவது போல வெவ்வேறு இரக்க காரியங்களை ஒப்பிடுவது? எனவே, ஆய்வாளரினால் பாரபட்சமின்றி (objective) அளக்கக் கூடிய விளைவுகளைக் கொண்டிருக்கும் வகையில் எடுகோள்கள் அமைக்கப் பட்டால் மட்டுமே, விஞ்ஞான முறைப்படி அவற்றைப் பரிசோதிக்கலாம். ஏறத்தாழ இது எங்கள் அன்றாட வாழ்வில் "சரியான கேள்வியைக் கேட்டாலே பதிலைப் பெற முடியும்" என்ற நிலைக்கு ஒப்பான ஒரு நிலை! 


கொஞ்சம் அபரிமிதமான தியரியை இன்று வழங்க வேண்டியதாகி விட்டது- காரணமில்லாமல் இல்லை! மாற்று மருத்துவத்தின் பலாபலன்களை நிரூபிப்பதில் உள்ள சிக்கல், நவீன மருத்துவம் மருந்துகளையும் நோய்களையும்., ஆரோக்கிய வழிமுறைகளையும் கண்டறிவதற்குப் பயன்படுத்தும் இறுக்கமான நடைமுறைகள், இவை பற்றி அடுத்த பகுதியில் பேசும் போது இந்தத் தத்துவங்களின் அடிப்படை தேவைப்படும். 

-தொடரும். 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

இந்த சப்லிமென்ட் எனும் பெயரில் இருக்கும் வைட்டமின்கள் 
மற்றும் ஊட்ட சத்து சார்ந்த குளிசைகள் போலி என்றும் 
எமது உடலில் ஊறாது என்றும் சொல்கிறார்களே?
அது உண்மையா? 

 • Like 2

Share this post


Link to post
Share on other sites
11 hours ago, Maruthankerny said:

இந்த சப்லிமென்ட் எனும் பெயரில் இருக்கும் வைட்டமின்கள் 
மற்றும் ஊட்ட சத்து சார்ந்த குளிசைகள் போலி என்றும் 
எமது உடலில் ஊறாது என்றும் சொல்கிறார்களே?
அது உண்மையா? 

மருதர், சப்பிலிமென்ற்ஸ் எனப்படும் உபமருந்துப் பொருட்களைப் பொறுத்தவரை, case by case ஆக ஒவ்வொன்றினதும் பலாபலன்கள் உறுதி செய்யப் பட வேண்டும். சப்லிமென்ற்களில் அதிகம் பிரபலமான விற்றமின்களை எடுத்துக் கொண்டால், சில விற்றமின்கள் குறிப்பிட்ட சில நோய்கள் வராமல் தடுக்கும் சக்தியுள்ளவையென விஞ்ஞான முறையில் நிரூபிக்கப் பட்டுள்ளது. விற்றமின் டி, வயதானவர்களில் என்புருக்கி (osteoporosis) நோயைக் குறைக்கும் என்பது உண்மை. கறுப்புத் தோல் உடையோர், முதியோர், பூமியின் வட அரைக்கோளத்தில் வாழ்வோர் விற்றமின் டி யை சூரிய ஒளியினால் பெறுவது குறைவு என்பதால் சப்ப்லிமென்ற் ஆக எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். அதே போல fபோலிக் அமிலம் (folic acid) எனப்படும் விற்றமின் பி, வயிற்றில் வளரும் சிசுவின் மூளை முண்ணான் வளர்ச்சிக்கு அவசியம் என்பதும் நிரூபிக்கப் பட்ட தரவு- இதனால் தான் கர்ப்பிணித் தாய்மாருக்கு இந்த விற்றமின் பி யை மருத்துவர்கள் பரிந்துரைப்பதுண்டு. தானியங்களில் fபோலிக் அமிலம் கலக்கப் பட வேண்டும் என்று 1998 இல் அமெரிக்காவில் சட்டம் கொண்டு வந்த பின்னர், இங்கே spina bifida என்ற மூளை முண்ணான் குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 35% இனால் குறைந்து விட்டது.  

ஆனால், விற்றமின்களோ அல்லது சப்லிமென்ற்களோ பல நோய்களைக் குணப்படுத்தும் என்று விற்பவர் செய்யும் விளம்பரத்தை நாம் சீரியசாக நம்பக் கூடாது. மருத்துவரிடமோ அல்லது மேலே நான் கொடுத்திருக்கும் நூலக இணைப்பிலோ இந்தப் பலாபலன்கள் நிரூபிக்கப் பட்டவையா என்று தேடியறிய முடியும். வெப். எம்டி (www.webmd.com) , மேயோ கிளினிக் (www.mayoclinic.org) போன்ற இணையங்களும் இததகவல்களுக்கு நம்பிக்கையானவை.

உடலில் உள்ளெடுக்கப் படுதல் என்று வரும் போதும், சப்ப்லிமென்ற் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி. அவை நீரில் கரையும் மூலக்கூறக இருந்தால் (விற்றமின் சி  ஒரு உதாரணம்) விரைவாகவே சிறு நீருடன் உடலில் இருந்து அகன்று விடும். ஆனால், கொழுப்பில் கரையும் (உ+ம்: விற்றமின் டி) மூலக்கூறுகள் உடலில் தேங்கக் கூடும், இது நச்சுத் தன்மையை ஏற்படுத்தும் வாய்ப்புகளும் இருக்கின்றன.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

ஜஸ்டின், நேரம் இருந்தால் எனக்குப் பதில் சொல்லுங்கள்...சில பெண்கள் அதிகமாய் சாப்பிட் டாலும் மெல்லிதாய் இருப்பதற்கும்,குறைவாய் சாப்பிடும் பெண்கள் குண்டாய் இருப்பதற்கும் அவர்களது உடல்வாகு/ஜீன்  காரணமா?

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, ரதி said:

ஜஸ்டின், நேரம் இருந்தால் எனக்குப் பதில் சொல்லுங்கள்...சில பெண்கள் அதிகமாய் சாப்பிட் டாலும் மெல்லிதாய் இருப்பதற்கும்,குறைவாய் சாப்பிடும் பெண்கள் குண்டாய் இருப்பதற்கும் அவர்களது உடல்வாகு/ஜீன்  காரணமா?

நிச்சயமாக ரதி. உடம்பு வாசி என்று எங்கள் ஊரில் சொல்லப் படுவது அடிப்படையில் எங்கள் பிறப்புரிமை மூலம் வரும் ஜீன்களின் வெளிப்பாடு தான். உடற்பருமனைக் கட்டுப் படுத்தும் ஜீன்கள் பல உண்டு. அவற்றில் சில  மாற்றமடையும் போது உடற்பருமன் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. ஆனால், இந்த ஜீன்கள் மாறி இருப்பது மட்டுமே உடற்பருமனைக் கூட்டப் போதுமானதல்ல என ஆய்வுகள் சொல்கின்றன. இந்த ஜீன்களில் உள்ள பிரச்சினைக்கு மேலதிகமாக உடற்பருமனைக் கூட்டும் வெளிக்காரணிகளான, ஆரோக்கியமற்ற உணவு முறை, உடற்பயிற்சியின்மை, மனப்பதட்டம், குறைவான தூக்கம் என்பனவும் சேரும் போது, இந்த ஜீன்களில் உள்ள பிரச்சினை வெளிப்பட்டு உடற்பருமனை சாதாரண ஜீன்கள் உடையோரை விடவும் அதிகமாகக் கூட்டி விடுகின்றன. எனவே, ஜீன்களில் இருக்கும் பிரச்சினையை உணவு முறை மாற்றம், உடற்பயிற்சி என்பன மூலம் மாற்றலாம் என்கிறார்கள். மிக அரிதாக வெகு சிலருக்கே கட்டுப் படுத்த முடியாத அளவுக்கு ஜீன்கள் மாற்றமடைந்து வாழ்க்கை முறை மாற்றங்களால் குறைக்க முடியாத உடற்பருமன் ஏற்படுகிறது.  

உங்கள் கேள்விக்குப் பதிலைத் தர நான் தேடிய போது அரிதான ஒரு தகவல் மூலம் தட்டுப் பட்டது. ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தின் பொதுச் சுகாதாரக் கல்லூரி உலகப் புகழ் பெற்ற ஒரு ஆய்வு மையம். உடற்பருமன் பிரச்சினை பற்றி சகல ஆய்வுகளையும் ஒரே இடத்தில் தொகுத்து வைத்திருக்கிறார்கள்.  

https://www.hsph.harvard.edu/obesity-prevention-source/obesity-causes/genes-and-obesity/ 

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this  

 • Similar Content

  • By ilankathir
   வடக்கு அமெரிக்காவுக்கு கிழக்கே, பனாமா கால்வாய்க்கு அருகில் அமைந்துள்ளது பெர்முடா தீவு. அதை ஒட்டி இருக்கும் மர்மமான பிரதேசத்துக்கு சூட்டியுள்ள பெயர் தான் பெர்முடா முக்கோணம். அவை இன்று தான் இப்படியா அல்லது பலநூறு ஆண்டுகளாக இப்படி தானா என ஆராய்ந்தால், அதன் செயல் பல நூறு ஆண்டுகளாக மர்மமாகதான் இருக்கின்றது என தெரிகிறது.

   விமானம் கண்டுபிடிப்பதற்கு முன் கடல்வழி போக்குவரத்துதான் தொலைதூர பயணத்திற்கு உதவியது. இயற்கை சீற்றங்கள் மற்றும் கடற்கொள்ளையர்களால் அவை அழிக்கப்பட்டிருப்பின் அச்செய்தி அக்காலத்தில் யாருக்கே தெரியாமல் அந்த கப்பலுடனே புதைந்தது. ஆனால் பெர்முடாவின் மர்மங்கள் தெரிய வந்த போது……………
   கப்பல்கள் சரியாக பெர்முடா முக்கோண பகுதியில் வரும் போது மர்மமான முறையில் மூழ்குவது பலருக்கு ஆச்சர்யமாக இருந்தது.

   பல வருட ஆராய்ச்சிக்கு பின் கடலுக்கடியில் இருக்கும் எரிமலையின் வெடிப்பின் காரணமாக ஏற்படும் பூகம்பமே அதற்கு காரணம் என அறியப்பட்டது. பூமி அதிர்வால் கடலில் ஏற்படும் அலைகள் சுனாமியை போன்று ராட்சததனமாக இருக்கும். கவனிக்க இது கரை தொடவேண்டும் என்ற அவசியமில்லை. நடுகடலிலேயே அமைதியாகி விடலாம். அதனை “ரோக் வேவ்ஸ் (rock waves)” என்று அழைக்கிறார்கள். ஒரு சிறிய அலைக்கு பின் வரும் பெரிய அலை அதனுடன் சேர்ந்து ராட்சத அலையாக உருவாகி பெரிய கப்பலை கூட கவிழ்ந்துவிடும். கப்பலிலிருந்து தளத்திற்கு எந்த செய்தியும் வராதது அவர்களுக்கு இன்னொரு ஆச்சர்யம்.
   சரி, கடல் மார்க்கமாக செல்லும் கப்பல்கள் காணாமல் போக எரிமலை, பூகம்பம், ராட்சச அலை, கடல் நீரோட்டம் என பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால் வான் மார்க்கமாக செல்லும் விமானங்கள் எப்படி காணாமல் போகின்றன என்ற கேள்விக்கு விடை தேடும் முயற்சியில் இறங்கினர் விஞ்ஞானிகள்.

   1945 ஆம் வருடம் அமெரிக்காவை சேர்ந்த F19 வகை போர் விமானங்கள் ஐந்து பெர்முடா முக்கோணத்தின் மீது பறந்தன. ரோந்து பணிக்காக கிழக்கு நோக்கி 1700 கிலோமீட்டர் வரை செல்லவது அவர்களது இலக்காக இருந்தது.

   கிளம்பிய 2 மணி நேரஅளவில் ஐந்து விமானங்களும் தள கட்டுபாட்டில் இருந்து மறைந்தது. மொத்தமாக ஐந்து விமானங்களும் காணாமல் போயின. நேரடியாக தளத்திற்கு தொடர்பு இல்லையென்றாலும் விமானிகள் தொடர்பு கொள்ள முயற்சித்திருப்பது தெரியவந்தது. அருகில் சென்று கொண்டிருந்த பெரிய கப்பல்கள் அவர்களை சிக்னலை ரிசீவ் செய்திருக்கிறார்கள். அவர்கள் செல்ல வேண்டிய திசையில் இருந்து மாறி ஐந்து விமானங்களும் வேறு திசையில் பறந்திருப்பது தெரியவந்தது. அவர்கள் பெர்முடா முக்கோணத்தில் விழவில்லை. அருகில் இருக்கும் தீவுகளில் எதாவது ஒரு சதுப்பு நிலகாடுகளில் விழந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் சொன்னாலும் இதுவரை விமானத்தின் ஒரு பாகம் கூட கிடைக்கவில்லை என்பது இன்னும் ஆச்சர்யம்.

   சில வருங்கள் கழித்து புரூஸ் ஹெனன் என்ற விமானி சொன்ன தகவல்கள் பெர்முடா பற்றிய ஆச்சர்யத்தை மேலும் அதிகமாக்கியது. புரூஸ் மியாமியிலுருந்து பஹாமா வழியாக பூர்டோ ரிகா சென்று கொண்டு இருந்தார் அப்போது தீடிரென்று அவரை சுற்றி கருமேகங்கள் சூழ்ந்தது. ஒரு பெரும்புயலுக்கான அறிகுறிபோல் அது தோன்றியது. திசைகாட்டும் கருவி விடாமல் சுற்றி கொண்டே இருந்தது. நிச்சயமாக அவரால் சரியான திசையை கண்டறிய முடியாது. இருப்பினும் அவரது 15 வருட விமானம் ஓட்டும் அனுபவம் அவரை விடாமல் தப்பிக்க முயற்சிக்க வைத்தது. தொலைவில் மேகக்கூட்டங்களுக்கு நடுவே ஒரு குகை போன்ற வழியை கண்டார். அதில் தெரிந்த ஒளி தப்பிக்க ஒரு நம்பிக்கையை அவருக்கு அளித்தது.

   வேகமாக அந்த குகைக்குள் நுழைந்த மறுநொடி அவரது விமானத்துக்கு பின் கருமேகங்கள் சூழ்ந்து கொண்டது. அவருக்கு முன் கரிய நிற கோடுகள் வளையமாக நிறைய தோன்றின! கிட்டதட்ட 16 கிலோமீட்டர் தூரம் அந்த குகையை கடக்க அவர் பயணித்தாக கூறிகிறார். ஆனால் அதற்கு அவர் எடுத்து கொண்ட நேரம் வெறும் 20 நொடிகள் தான். அவரது விமானம் அதை கடக்க பொதுவாக எடுத்துக்கொள்ளும் நேரம் குறைந்தது மூன்று நிமிடங்கள். அது மட்டுமல்ல அங்கிருந்து வெளியேறிய பின்னரும் அவருக்கு ஆச்சர்யங்கள் காத்திருந்தது.

   மேகங்கள் சாதாரணமாக இல்லாமல் மஞ்சள் மற்றும் சாம்பல் வண்ணத்தில் காணப்பட்டது. பஹாமா அடைய அவர் கடந்த தூரம் 160 கிலோமீட்டர் ஆனால் அதற்கான நேரம் வெறும் மூன்று நிமிடங்கள். ஏறத்தாழ மணிக்கு 3200 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்திருக்கிறார் ஆனால் அவரது விமானத்தின் அதிகபட்ச வேகமே 300 கீலோமீட்டர்கள் தான் மணிக்கு!

   எவ்வாறு இது சாத்தியமானது?

   கப்பல்கள் காணாமல் போக ராட்சச அலைகள் மற்றும் பனாமா கால்வாயின் நீரோட்டம் காரணமாக இருக்கலாம் என கண்டறிந்த போதும், விமானம் காணாமல் போக என்ன காரணம் என்று வெகுநாட்கள் விஞ்ஞானிகள் குழப்பத்தில் இருந்தார்கள்.

   திசைகாட்டி குழம்பியதின் காரணமாக அது சூரியனின் மின்காந்த அலைகளாக இருக்கலாம் என கருதினாலும் விமானம் காலத்தை குறுக்காக வென்றது எப்படி? அதில் தோன்றியது தான் வார்ம்ஹோல் எனும் சூத்திரம். காலத்தை வெல்ல அதில் எந்தளவு சாத்தியம் உண்டு என தெரியாவிட்டாலும் வார்ம்ஹோலின் உதவியால் தூரத்தில் இருக்கும் கிரகங்களுக்கு செல்வது சாத்தியம் என சமகால விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கின்ஸ் சொல்கிறார்!

   வார்ம்ஹோல் என்றால் என்ன என்று எளிமையாக சொல்ல பூமியில் இருக்கும் ஒரு உதாரணத்துடன் ஆரம்பிக்கிறேன். புவி ஈர்ப்பு விசையை எதிர்த்து பறவைகள் வானில் பறக்க இறக்கைகளை பயன்படுத்துகின்றன. ஆனால் சிலநேரம் அவை இறக்கைகளை அசைக்காமல் வெகு நேரம் பறந்து கொண்டிருக்கும். அது காற்றின் விசையை பயன்படுத்துகிறது என விஞ்ஞானிகள் கண்டறிந்தார்கள். அதே பாணியை பயன்படுத்தி தான் கிளைடர்கள் பறக்கின்றன. அதாவது இயற்கையில் இருக்கும் சக்தியை பயன்படுத்தி பெரிதாக திறன் செலவழிக்காமல் பலனடைவது. அதே போல் வார்ம்ஹோலையும் பயன்படுத்தமுடியும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து.

   இந்த பிரபஞ்சம் வளைந்துள்ளது என பல விஞ்ஞானிகளின் கருத்து. ஒரு வட்டத்தின் விளிம்பில் சுற்றி வருவது சாதாரணமாக நாம் நேராக பயணம் செய்வது. அதன் குறுக்கு வெட்டில் பயணம் செய்வது காலத்தையும், தூரத்தையும் வெல்லும் தந்திரம்.

   பிரபஞ்சத்தில் இருக்கும் டார்க்மேட்டர், டார்க் எனர்ஜியை பொருளின் மீது செலுத்தும் போது பொருள் பயங்கர வேகத்துடன் உந்தப்படுகிறது. ஐன்ஸ்டீன் தியரிப்படி ஒளியைவிட வேகமாக செல்ல எதுவாலும் முடியாது. ஆனால் டார்க் எனர்ஜி அது சாத்தியம் என்கிறது. காரணம் பின்னிருந்து தள்ளும் அதே நேரத்தில் முன்பக்கமாக வேகமாக உறிஞ்சும் வேலையையும் அது செய்கிறது. ஒரே நேரத்தில் இருவிசையின் பயன்பாட்டுடன் பொருள் ஒளியின் வேகத்தை மிஞ்சமுடியும் என்கிறது விஞ்ஞானம். ஆனால் ப்ளாக்ஹோலும், வார்ம்ஹோலும் ஒன்று தானா இல்லை தனிதனியா என்று இன்னும் முடிவுக்கு வரமுடியவில்லை. ஒருவேளை ஒன்றாக இருந்தால் உள்ளே செல்லும் நாம் வெளியேற முடியாது சிறு சிறு துகள்களாகிவிடுவோம்!

   விஞ்ஞானம் இறுதி வரை ஒரு செயலின் சாத்தியகூறூகளை ஆராய்ந்து கொண்டு தான் இருக்கிறது, நமக்கு அதில் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ தெரிந்து கொள்வதும், அதை கேள்விகுள்ளாக்குவதும் அடுத்த கட்ட விஞ்ஞான வளர்ச்சிக்கு வழிவகுக்கும்!

   -டிஸ்கவரியில் பெர்முடா தொடர்பாக வந்த விபரணத்தின் தொகுப்பு

   http://www.ilankathir.com/?p=5308